
காதலொன்று கண்டேன்!
தேடல் 21
(I)
முகத்தை தாங்கியவாறு அமர்ந்திருந்த பையனுள் முகிழ்ந்து கிடந்த,உணர்வுகளின் சிதறல்கள் அடங்க வெகு நேரம் பிடித்தது.
அவள் மீது ஈர்ப்பு இருப்பதை தன் தன் முனைப்பைக் கடந்து ஒப்புக் கொண்டவனுக்கு,தன் நினைப்பு முழுவதும் அவளை ஏதோ ஒரு புள்ளியில் பற்றிப் பிடித்து சுற்றித் திரிவதை அவனால் ஏற்க இயலவில்லை.அதுவும் அதன் காரணம்..?
இதுவாக இருக்குமோ என,அம்மூன்றெழுத்து வார்த்தையை உச்சரித்திடக் கூட விடாமல் முரட்டுப் பிடிவாதம் பிடித்தது,மனம்.
“நோ நோ லவ் இல்ல..இது வெறும் அட்ராக்ஷன் தான்..” தனக்குத் தானே கூறிக் கொண்டு நிமிர்ந்தவனை,இதழ் மடித்து அடக்கிய புன்னகையுடன் பார்த்திருந்தான்,சத்யா.
வெளுப்பில் மிளிரும் வானவில் போல,அவனின் மாற்றங்கள் ஒவ்வொன்றும் வெகு அழகாய் இதயம் நிறைத்திடும் அழகியலுடன் மனம் நிறைத்தது.
“என்ன மச்சி எதுக்கு அடிக்காம விட்டுட்ட..?”
“……………….”
“ஓஹ்..அதுவும் யாரோ ஒரு பொண்ணுல..அதனால பாவம் பாத்தியா..? அன்னிக்கி மாதிரி..?” என்றவனின் வார்த்தைகளில் அத்தனை நக்கல்.
“கண்டவங்களுக்காக எல்லாம் நா பாவம் பாக்க மாட்டேன்..” காய்ந்து விழுந்தவனுக்கு,அவளிடத்தில் தோழன் வேறொருத்தியை ஒப்பிடத்தில் விழிகளில் அனலேறின.
“அப்போ அன்னிக்கும் கண்ட ஒருத்திக்காக எதுக்கு பாவம் பாத்த..?”
“யாரு கண்ட ஒருத்தி..?” அடித்து விடும் வேகத்தில் மொழிந்தவனோ,தோழனின் விழிகளில் மின்னிய குறும்பில் அமைதியாகிட,இடது நெஞ்சத்தின் மீது இருமுறை தாளம் தட்டின,விரல்கள்.
“நா என்ன சொல்றேன்னா..”
“இது லவ் இல்ல மச்சான்..வெறும் அட்ராக்ஷன் தான் புரிஞ்சிக்கோ பைத்தியமே..”
“அட்ராக்ஷன்ல இப்டி கோவம்லாம் நா கண்டதில்லயே டா..” அவன் விழி பார்த்து மொழிந்தான்,பையனுக்கு ஏதோ ஒன்றை உணர்த்தி விட வேண்டிய பாவத்தில்.
“நீ காணாததுக்கு அது இல்லன்னு ஆயிடுமா..?” அமர்த்தலாய் கேட்டான்.நீ என்ன சொன்னாலும் நா ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சாட்சியம் கூறிற்று,விழிகளில் தெரிந்த தீர்க்கம்.
உடனே வழிக்கு வர மாட்டான் என்று தெரிந்த தோழனோ,மௌனம் காத்தாலும் மனதில் சில யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தன.
ஒரு வாரம் காலத்தில் கரைந்தோடியிருந்தது.இப்பொழுதெல்லாம்,அமைகளின் அடிப்பும் இதயத்தின் துடிப்பும் அவள் முன் ரிதம் தப்பி ஸ்வரம் மீட்ட,அவளைப் பாராமல் இருக்கவே சிரமப்பட்டான்,பையன்.
காதலில்லை என பந்தி பந்தியாய் வசனம் பேசினாலும்,அவனுக்குள் ஜனித்திருக்கும் வித்தியாசமது,அவனை கொன்று தின்று மென்று முழுங்கிட,அவளிருக்கும் பக்கம் அவன் செல்வதேயில்லை.
அடிக்கடி அவளைக் காணும் மரத்தடியே,இதற்கு முன் அவனின் வாசஸ்தலமாக இருந்தாலும்,இப்பொழுதெல்லாம் அவனை அவ்விடத்தில் காண்பதே அரிது.
“ஏன்ட அங்க வர மாட்டேங்குற..?” சத்யா கேள்வி கேட்டாலும்,சம்பந்தமே இல்லாத பதில்களுடன் அவனை சமாளித்து விடுவான்.
அவளுக்கு விரிவுரை நடந்திடும் மண்டபங்களை கடந்து செல்கையில் அவன் விழிகள் தாழ்ந்தே இருக்கும்.நிமிர்த்தினால்,விழிகள் சுழன்று விம்பம் வேண்டும் என்று முரண்டு பிடிக்கும் என்று பயந்து போயிருந்தான்.
யாழவளுக்கான விரிவுரை முடிய,அதன் பின் அதே மண்பத்தில் இவர்களுக்கான விரிவுரை ஒழுங்கு செய்யப்பட்டிருப்பின்,இளையவர்களின் கூட்டம் கலைந்து சென்ற பின்னரே அவன் அவ்விடம் வருவது.
ஒரு முறை தற்செயலாய் அவள் விழிகளை நிரப்பி,இதயதத்தை நிறைத்து இசையுடன் இம்சை மீட்டிட,அதன் பின் எப்போதும் தாமதமே அவனின் ஆயுதம்.
அவள் அடிக்கடி உலாத்தும் பாதைகளை பயன்படுத்துவதே இல்லை,பையன்.அப்படியே அவள் வருவது தெரிந்தால்,வந்த வழியில் திரும்பிச் செல்வான்.
“எதுக்குடா இந்த சுத்தல்ல கூட்டிட்டு வர்ர..? ஏ ப்ளாக க்ராஸ் பண்ணி போயிருக்கலாம்ல..?”சத்யா ஒரு முறை கடிந்து கொள்ள,அலட்சிய பாவம் காட்டி,அவனின் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தது எல்லாம் குறித்துக் கொள்ள வேண்டியது.
இமை மூடும் தருணங்களில் அவன் நினைவுகள் சுவாசத்துடன் கலந்து ஆசுவாசம் கேட்டிட,அதற்கு பயந்தே உறக்கம் விழித்திடும் வரை வேலை செய்து விட்டு கட்டிலில் சரியப் பழகியிருந்தான்,அவன்.
என்ன முயன்றாலும் இமை மூடிடும் ஒற்றை நொடியில் அவள் முழுதாய் அவன் நெஞ்சத்தில் வியாபித்து நிற்க மறப்பதில்லை;அவன் காதல் அதை மறுப்பதுமில்லை.
அவளைக் காணாதிருந்தால் அவள் மீதிருக்கும் ஈர்ப்பு வற்றிப் போகும் என நினைத்திருந்தான்,அது அவனின் உயிரின் வேரை பற்றிப் பிடித்திருக்கும் காதல் என்பதை முழுதாய் உணராமல்.
தவிர்த்திட அவன் நினைத்திருக்க,இன்னும் ஆழமாய் கோர்த்து விட கடவுள் காத்திருந்தாரே.
●●●●●●●●●
“இந்த அவயார்னெஸ் ப்ரோக்ரம்கு எதுக்கு தான் ஃபோர்ஸ் பண்ணி அனுப்பி வக்கிறாங்களோ..? அதுவும் ஏழு மணிக்கு..நைட் டைம் வேற..எரிச்சலா இருக்கு எனக்கு..”
“ஒவ்வொரு பேட்ச்ல இருந்து பதினஞ்சு பேர்னு சொல்றாங்கல..அந்த பதினஞ்சுல நாம தான் சிக்கனுமா..?” சலிப்பாய் கூறியவளுக்கு,சத்தியமாய் அந்தப் பயணத்தில் விருப்பம் இல்லை.
பேசிய படி இருவரும் சிற்றுண்டிச்சாலையில் அமர்ந்திருக்க,பேரூந்து வந்திருப்பதாய் கூறி விட்டுச் சென்றான்,சக மாணவன் ஒருத்தன்.
வேக நடையுடன் சென்று பேரூந்தில் ஏறிக் கொள்ள,யன்னலோரத்தில் அமர்ந்து கொண்டாள்,பாவையவள்.
மித்ராவை அவர்களின் இன்னொரு தோழி அழைத்திட,அதற்கு மறுப்பு சொல்ல சங்கடப்பட்டு அவள் அங்கேயே அமர்ந்திட,பாவையவளுக்கு பக்கத்து இருக்கை வெற்றிடமாய்.
ஆட்கள் ஏறிக் கொள்ள,காலி இருக்கைகள் முழுதாய் நிரம்பியது,அவள் பக்கத்து இருக்கையைத் தவிர.
பாவையவளுக்கோ,எங்கு தன் முன்னே நின்று இருந்தவன் தன்னருகில் அமர்ந்து விடுவானோ என்கின்ற பயம்.அவனின் பார்வையும் நடவடிக்கையும் அவளுக்கு பிடிப்பதேயில்லை.
“சஞ்சய்..” தோழனின் பேச்சையும் கேளாது,பார்வை என்னவோ பாவையவளின் மீது தான்.அன்று பையனிடம் அடி வாங்கியதும் இவனே தான்.
சுற்றும் முற்றும் பார்த்தவனோ,அவளருகே அமர்ந்து கொள்ளலாம் என்று முன்னேறி வந்த சமயம்,சட்டென அவனின் கரம் பற்றப்பட்டது.
பின்னே திரும்பியவனுக்கு,அங்கு விழிகளில் செந்தணல் நிரம்ப,அமர்த்தலான புன்னகையுடன் தன்னை பார்த்திருந்த பையனைக் கண்டதும் தூக்கி வாரிப் போட,பையனின் விழிகள் இட்ட கட்டளையில் தன்னாலே நகர்ந்து இடம் கொடுத்தன,அவன் பாதங்கள்.
அவனிடம் தீ வீசியவனோ,சட்டைக் கையை முட்டி வரை மடித்தவாறு அவளருகே அமர்ந்திட,அவளுக்குள் சொல்லொண்ணா நிம்மதி.
அதுவும் அவளுக்கு சங்கடம் வந்திடக் கூடாதென,இடைவெளி கொடுத்து இருக்கையின் நுனியில் அமர்ந்து இருந்தவனின் செயலில் அவளிதழ்களில் அழகான புன்னகை.அவனின் புரிதல்,அவன் மீதிருக்கும் மரியாதையை இன்னுமே ஏற்றி விட்டது.
பக்கமாய் சுழன்ற விழிகள் அவனை நன்றியுடன் உரசிட,அது புரிந்தாலும் அவள் புறம் விழிகளை திருப்பவேயில்லை,அவன்.அவனுக்கல்லவா தெரியும் அவ்விழிகள் அவனை ஆட்டுவித்திடும் ஆழம்..?
பேரூந்தில் ஏறிக் கொள்ள வரும் வழியில்,அவளின் தோழியர் கூட்டமாய் அங்கிருக்க,அவளும் இருப்பாளா என்கின்ற சிறு எதிர்ப்பார்ப்பு துளிர்த்தது,மனதோரம்.
அவனின் விருப்பம் கேளாமலே,விழிகள் அலைந்து சுழன்று அவள் விம்பம் தேட,அப்போது புன்னகை முகமாய் எதிர்ப்பட்டவளைக் கண்டதும் சத்தியமாய் அவனிதயம் நின்று துடித்தது.
அவளால் மீட்டப்படும் இதயம்,அவளுக்கென மீட்டப்படாமலா போய் விடும்..?
அடர் சாம்பல் நிறச் சுடிதாரில்,துப்பட்டாவை திருகிய வண்ணம் நின்றிருந்தவளில் விழிகள் உறைந்து கருமணிகள் மையம் கொண்ட,மையலை மீறிய காதல் அவன் விழிகளில் கரைபுரண்டோடியது.
மையம் கொண்ட கருமணிகள்,அவளின் புன்னகையில் இன்னும் விரிந்து கொள்ள அத்தனை இரசனை மின்னும் உணர்வுகள் காதலுடன் தோய்ந்து படர்ந்து விரிந்தன,விழிகளில்.
சத்யாவின் தொண்டைச் செருமலில் சுற்றம் உரைத்திட,தன்னிலை மீண்டு முன்பு நிலை தவறிய தன்னை எண்ணி நொந்து,விழிகளை அழுந்த மூடிச் சுருக்கி அவனின் நின்றிருந்த தோரணை ஏனோ அத்தனை அழகு.
விழிகளை அழுந்த மூடித் திறந்தவனோ,தடுமாறித் தீர்த்த இதயத்தை அடக்க வழி தெரியாமல் பேரூந்தில் ஏறிட,அதிலும் அவளின் அண்மையில் தவிக்க வேண்டிய கட்டாயம்.
அதுவும் அவளின் பார்வை அவனை நன்றியுடன் அடிக்கடி தழுவி மீள,ஐயோவென்றிருந்தது,பையனுக்கு.
இடைவெளி இருந்தும் அவள் அண்மையின் அவன் இதயம் தடதடத்து ஓடத் துவங்கிட,அவ்வளவு பதட்டம் அவனுக்கு.
பாவையவளின் அண்மையா..?
பாவியவளின் பார்வையா..?
ஏதோ ஒன்றோ இல்லை இரண்டும் கூட்டு சேர்ந்தோ,அவனின் நிதானத்தை கொத்தித் தின்றிட,எச்சில் கூட்டு விழுங்கிக் கொண்டவனின் சுவாசக் குழல் மூச்சுக் காற்று கேட்டது.
ஏனென்றில்லாமல் அவ்வளவு பதட்டம்.அவள் அருகாமையில் மூச்சு மூட்டுவது போல்.அழுத்தமாய் முகத்தை தேய்த்துக் கொண்டாலும்,இதயத் துடிப்பு இயல்பாகியபாடில்லை.
“ஈஸி ஈஸி ஆர்யா..” இதழ்கள் தனக்குத் தானே ஆறுதல் கூறினாலும்,இதழ்கள் ஒத்துழைத்திடவில்லை.அதீத பதட்டத்தில் கழுத்தோரத்தில் சூடு பரவி வியர்க்கத் துவங்கிட,இதழ் குவித்து ஊதிக் கொண்டாலும்,அவனால் நிலை கொள்ள முடியவில்லை.
அவள் புறம் சுழன்று, விம்பம் ஏற்று மோட்சம் பெற முயன்ற, விழிகளை பொத்திக் கொண்டு,இருக்கையில் சாய்ந்தவனுக்கு நிஜமான உறக்கம் என்று நினைத்து விட்டாள்,அவள்.
சத்யாவுக்கு பையனின் நடவடிக்கைகளில் அத்தனை சிரிப்பு.அவளுக்காக அவன் செய்ததன் காரணத்தை தோழனவன் சரிவரப் புரிந்து வைத்திருந்தானே.
“என்ன மச்சீ அந்த பொண்ணு பக்கத்துல ரொம்ப பதறிட்ட போல..” நமுட்டுச் சிரிப்புடன் வினவிட,உறுத்து விழித்தான்,அவன்.
“எனக்கா டென்ஷனா போடா டேய்..” கெத்தை விடாது திரிந்தாலும்,அவனுக்கு புரிந்தது,கொத்தாய் அவள் வசம் சிக்கயிருப்பது.
விழிப்புணர்வு நிகழ்வு முடிவடைய ஒன்பதரை மணியை கடந்திருக்க,பேரூந்தில் ஏறியிருந்தனர்,அனைவரும்.
மித்ராவுக்கு அவ்வளவு உறக்கம்.எங்கே தாமதமாகினும்,பேரூந்தில் இருக்கை கிடைக்காது போகுமென முன்பே வந்து ஏறியவளோ,தன்னை மீறி கண்ணயர்ந்து போயிருந்தாள்,மாத்திரையின் வீரியத்தில்.
“எல்லாரும் இருக்காங்களா..? கவுண்ட் சரி தான..?” கேட்டவாறு சுழன்ற பையனுக்கு நொடியில் புரிந்து போனது,பாவையவள் அவ்விடத்தில் இல்லையென்பது.
மனம் தவித்தடங்க,வண்டியை கிளப்ப முயன்ற ஓட்டுனரிடம் தரித்திருக்கச் சொன்னவனோ,மித்ராவை நெருங்கிட அவளோ ஆழ்ந்த உறக்கத்தில்.
அருகே இருந்த பெண்ணிடம் அவளை எழுப்பச் சொன்னவனின் விழிகளோ சுழன்று தீர்த்தது.
மித்ரா கண்ணைக் கசக்கிக் கொண்டு நிமிர்ந்திட,”யாழ் எங்க..?” என்று அவன் கேட்ட கேள்வியில் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.
அவன் குரலில் அதே அழுத்தம் என்றாலும்,மனமதில் அளவுக்கு மீறிய பயமும் பதட்டமும்.
“யாழ் சக்தி கூட தான வந்தா..” என்று எழுந்தவாறு பின்னிருந்த தோழியிடம் கேட்க,குரல் தடுமாறிற்று.
“அவ வர்ரேன்னு என்ன போக சொல்லிட்டு ஹால் கிட்டவே நின்னா..” சக்தியும் தெரியாதென்பது போல் கூறிட,இங்கு பையனுக்கு தான் நடுக்கம்.
நிகழ்வு நடந்த மண்டபமும் பேரூந்து நிறுத்தப்பட்டிருக்கும் இடமும் நடந்து செல்லும் தூரத்தில் இருந்தாலும்,அந்த பாதை பெரிதாய் ஆட்கள் நடமாடும் பாதை இல்லை.
சுற்றி வர மரங்கள் நிறைந்திருக்க,இருண்ட பின் தனியாக யாரும் பயணிப்பதில்லை,அந்த பாதை வழியே.
அதை நினைக்கையில் தான்,பையனுக்கு பயமே.
சத்யாவுக்கு கண்ணைக் காட்ட அது புரிந்தாற் போல்,அவனும் இறங்கிக் கொள்ள மித்ராவும் அவர்களுடன் வந்தாள்.பையனும் அவளைத் தடுக்கவில்லை.
இன்னும் ஒரு சிலரும் அவனுடன் சேர்ந்து கொள்ள,மற்றைய பெண்களின் பாதுகாப்பை கருதி சில ஆண் மாணவர்களை பேரூந்திலேயே தரிக்கச் சொல்லியிருந்தான்,பையன்.அம் மண்டபத்தை முதலில் அவர்கள் சென்று பார்த்த அவளின் இருப்பை உறுதி செய்து கொண்டு மற்றையவர்களை அழைப்பதாக கூறியிருந்தான்.
“எங்க இவ..?” நெற்றியை நீவியவாறு தேடியவனுக்கு,மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.
இது வரை இப்படி அவன் உணர்ந்திராது இருக்க,அதன் தாக்கம் அவனில் மேலிட்டு அவனை அமிழ்த்தியது.
பயத்தில் படபடத்த இதயத்தின் துடிப்பு அவனுக்கு ஏதோ கூற முயன்று தோற்றது.
அந்த வழி நெடுகிலும் தேடிப் பாத்ததாயிற்று.”யாழ்..” என அவன் அவ்விடம் அதிரும் வண்ணம் கத்தியழைத்திருக்க,அந்த வார்த்தைகளில் மெல்லிய நடுக்கம் இழையோடியதை அவனைத் தவிர வேறு யாரும் அறிந்திட வாய்ப்பில்லை.
அவள் அலைபேசி வேறு அணைத்து வைக்கப்பட்டிருக்க,அதுவே மித்ராவின் கண்களில் நீர் கட்ட வைத்திட,பையனின் நிலையை சொல்லிட வார்த்தைகள் போதாது.
பதட்டம் பயம் என ஏராளமான தவிப்புக்கள் அகத்தை சூழந்து கிடக்க,இருளில் அவளைத் தேடி திரிந்த விழிகளில் மெல்லிய பயம்.
“எங்க போனாளோ..?” திட்டியவனுக்கு அவள் மீது எக்கச்சக்கமாய் கோபமும்.அவளுக்கு எதுவும் ஆகி இருக்காது என தனக்குத் தானே கூறிக் கொள்ளவும் செய்தான்.
“பயப்ட வேணா மித்ரா..” அடிக்கொருதரம் தோழியவளிடம் உதிர்த்த ஆறுதலில் அவனும் ஆறுதல் தேடிக் கொண்டதெல்லாம் வேறு கதை.
மண்டத்தினுள் நுழைந்து அவளைத் தேட,அவ்விடமும் அவள் இல்லாது போக பையனின் இதயம் கிடுகிடுத்தது.இனம் புரியா பயம் மனதைக் கவ்வ,அவனுக்குள் என்னென்னவோ எண்ணவலைகள் வந்து போக,உயிர் வரை நடுக்கம்.
“கடவுளே இந்த பைத்தியத்த என் கண்ணுல காட்டு..”நொடி நேர வேண்டுதல் மானசீகமாய்.
அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தன்னிலை தவறி அவன் நின்றிருக்க,சத்யாவின் கரம் அவனின் தோள் மீது படிந்தது.
தொய்ந்து போய் தலையைத் தாழ்த்தியவாறு இருக்கையில் அமர்ந்தே விட்டான்,அவன்.
“ஸேஃபா இருப்பா தான..?” விழிகளில் நழுவும் ஜீவனைத் தேக்கி,அவன் கேட்ட கேள்வியில் கொஞ்சமாய் கடத்தப்பட்டு இருந்தது,அவள் மீதான அவனின் காதல்.
“பயப்டாத மச்சி..” ஆயிரம் முறை தோழன் கூறியும் அந்த வார்த்தைகள் ஒன்றும் பயனளித்திடவில்லை.
அவளால் உண்டாகிய தவிப்பு,அவளாலே தணிக்கப்பட வேண்டும் என அவன் மனம் அவனுக்குள்ளே விதியொன்றை விதைத்து வைத்திருந்தது,போலும்.
“ஹால்ல காணோம் மச்சி..எங்கயும் காணோம்..எதுக்கு போலீஸ்ல கன்ஃபார்ம் பண்ணலாம்..” என்க,அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“சரி இரு எதுக்கும் அங்க போய் பாத்துட்டு வர்ரேன்..” என்று தோழன் நகர்ந்து போக,வேல் முருகனிடம் இருந்து அழைப்பு வந்தது.
துண்டித்திடவில்லை,அவன்.அவனுக்கு அவரின் வார்த்தைகள் அந்த நொடி அவசியப்பட்டது.
“அப்பா..” என்றான்,தவித்துப் போய் தழுதழுத்த குரலில்.எண்ணமெல்லாம் அவளில் இருக்க,அவனுக்கு எதுவும் நினைவில் இல்லை.
“என்ன அப்பு என்னடா..? கொரல் எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு..?”
“யாழ காணோம்பா..” சிறு குழந்தையாய் அவரிடம் புகார் சொல்ல,அவனின் அழுத்தம் எல்லாம் கரைந்து போனதை அவன் உணரவில்லை.
“அங்க தான் பா எங்கயாச்சும் பொண்ணு இருப்பா பய்படாத..” சத்யா முன்பே அழைப்பெடுத்து விடயத்தை கூறியிருக்கவே,பதில் மொழிந்தார்,அவனிடம்.
“நா வேணுன்னா வெரதம் இருக்குறதா வேண்டிக்கறேன்..நீ போய் நல்லா தேடிப்பாரு..” அவர் ஆறுதல் மொழிய,அழைப்பை துண்டித்தவனும் அதே போல் வேண்டுதல் வைத்திருந்தான்,மனம் தவித்துத் தீர்த்திட.
●●●●●●●
(II)
யோசனை படிந்த முகத்துடன் அகல்யா ஓரத்தில் அமர்ந்திருக்க,நடுவில் அமர்ந்திருந்த தோழியோ,தென்றலின் காதில் ஏதோ கூறிட,இருவரின் பார்வையும் அர்த்தத்துடன் தம்மை தழுவிக் கொண்டது.
“தென்றலோட ஃப்ரெண்ட பாக்க டூர் மாதிரி போறோம்..நீயும் வாக்கா..” தம்பி அழைத்ததை நம்பி வந்தவளுக்கு,அதில் உண்மை இருப்பதாய்த் தோன்றிடவில்லை.
அதிலும்,இருவருக்குமிடையில் தவழும் விலகல்,அவளை பெரும் யோசனைக்குள் தள்ளின.
அடுத்தடுத்த அவள் கவனித்ததும் அதே போல் இருக்க,யாரிடமும் இதைக் கூறுவெதன்று கூட தெரியவில்லை.
மதிய உணவுக்காக வண்டியை நிறுத்தும் வரை ஒரு வார்த்தை கூட இருவரும் பேசிக் கொள்ளாதது,இருவருக்குமிடையில் ஏதேனும் பிணக்கோ என்று கூட யோசிக்க வைத்திட்டது.
அதுவும் அவளின் விழிகளில் இருந்த உயிர்ப்பின்மையும் இவனின் விழிகளில் தெரிந்த வெற்றுப் பாவமும் மண்டையைக் காய வைத்தது.
கணவனிடம் பேசுவதாக தனியே வந்தவளோ,அவனிடம் மொத்தத்தையும் கொட்டித் தீர்த்திட,மறுமுனையில் இருந்த அவளின் கணவன் ஸ்ரீநிவாஸுக்கும் அதிர்வே.
“எடுத்தோம் கவுத்தோம்னு நீயா ஒரு முடிவுக்கு வந்து உங்கப்பாம்மா கிட்ட சொல்லிடாத அகல்..” அவனின் அறிவுரையில் அமைதியானாலும்,மனமோ இருவரிடம் கேள்வி கேட்கவே தவித்துக் கொண்டிருந்தது.
மதிய உணவை உண்ட பின்னர் மீளவும் பயணம் துவங்கிட,இம்முறை வண்டியோட்டது வாசு தான்.
டாக்டரோ,அஞ்சலியைக் கண்டதால் உண்டாகிய நினைவலைகளில் மூழ்கியிருக்க,மனம் கசந்தது.
அவள் கொடுத்த காயம் மனதைக் கீறிட,அப்படியே இருக்கையில் சாய்ந்தவனைப் பார்த்திருந்தாள்,தென்றல்.
அவனைக் காண்கையில் அவளுக்கு தன்னை மீறிய பரிதாபமொன்று எழுந்திட,அவனின் நல்வாழ்வுக்கென கடவுளிடம் வேண்டுதல் வைத்தாள்,அவள்.
இங்கோ,
தழுவி நழுவும் அலைகளிடம் பாதங்களை சமர்ப்பித்தவாறு நின்று இருந்தவனை தென்றல் தீண்டிச் செல்ல,அவனிதழ்களில் மெல்லிய புன்னகை.
காதல் தேடும்.
2025.04.23
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


யாழ் எங்க போயிருப்பா ??