Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 11

 

(I)

 

“உனக்குத் தான் கோவம் வருமே..அதான் நா அப்டி சொன்னேன்..நீ எதுக்குடா ஒரு மாதிரி மொறச்சிகிட்டே இருக்க..” மருத்தவரிடம் விடைபெற்று வந்த கணம் முதல் பையனின் பார்வை தன் மீது அழுத்தமாய் படிவதன் காரணம் புரியாது கேட்டே விட்டான்,தோழன்.

 

“அந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சா அட்வைஸ் பண்ணியே சாவடிச்சிருவான் இவன்..” தெரியும் என்று பொய் கூறியதற்கு,தோழனாகவே ஒரு காரணத்தை கற்பித்து வைத்திருந்தான்,துளியும் பொருந்தாத.

 

பையனுக்கு அவன் கேள்வியில் திக்கென்றது.இத்தனை நாள் இல்லாமல்,அவனுக்குள் ஏன் இந்த ஆசை என்று புரியாது போக,ஏததோ சஞ்சலங்கள் மனதில்.தலை சரித்து கழுத்தை வருடியவாறு தன்னை இயல்பாக்கிக் கொண்டான்.

 

“நா எதுக்கு அந்த பொண்ண பாக்கனும்னு நெனக்கனும்..? ஈஸி ஈஸி ஆர்யா..” இடது நெஞ்சில் இரு தடவை மெதுவாய் தாளம் தட்டி தனக்குத் தானே கூறிக் கொண்டவனின் பாதங்கள் முன்னேறின.

 

ஆனாலும்,மருத்துவர் கூறியது அவனின் மனதில் தோன்றி மறைந்து கொண்டே இருந்தது.”இங்க பக்கத்துல இருக்குற இஞ்சினியரிங் காலேஜ்ல தான் அதுங்க படிக்குது போல..அப்டி தான் சொல்லுச்சு..மே பி உங்க காலேஜா கூட இருக்கலாம்..” அவர் ஊகத்தில் கூறியதை கேட்டவனின் இதயம் தாளம் தப்பியது மறுக்க முடியாத உண்மை.

 

மனதில் ஏதேதோ உணர்வுகள் தலை விரித்தாட,அனைதைத்யும் பின் தள்ளி விட்டு இயல்பானான்,பையன்.

அப்போதைக்கு அது அவனுக்கு அவசியப்பட்டது.

 

ஒரு மாதம் உருண்டோடிடய வேகம் தெரியவில்லை.நாட்களின் நகர்வில் வாழ்வியலில் மாற்றங்கள் துளிர்த்து இருந்தன.

 

அன்று மருத்துவரை சந்தித்த பொழுதைத் தவிர,அந்தப் பெண்ணைப் பற்றி வேறெந்த செய்தியும் பையனை அண்டாது இருக்க,அதுவே அவனுக்கு பெருத்த நிம்மதி.

 

அவளைப் பற்றிய சிந்தனைகள் அவனை அடிக்கடி தொட்டுத் தொடர வழியின்றிப் போனாலும்,அவனை மீறி சில சமயங்களில் அவள் நினைவுகளுடன் அவனின் எண்ணவலைகள் கரம் கோர்ப்பதுண்டு.அந்த நிமிடங்களில் தளர்ந்து தகர்ந்து துவண்டு போவான்,தன்னை மீறி.

 

ஏனோ அடிக்கடி தலையை காட்டிடா உணர்வுகளை கொண்டு,அவன் அவை மரித்துப் போய் விட்டதாய் நினைத்திருக்க,அது மறைந்திருந்து அவனுக்கு ஆட்டம் காட்டப் போவதை உணரவில்லை,பையன்.

 

அன்று கல்லூரியில் விழாவொன்று இருக்க,பதினொரு மணி போலவே வர வேண்டிய தேவை இருந்தது,அனைவருக்கும்.

 

“அப்பு சாப்டு போப்பா..” வேல் முருகன் கொண்டு வந்த உணவை அவன் மறுத்து விட,அவனுக்கு ஊட்டி விட்ட பின்பே அவனை கல்லூரி செல்ல வழி விட்டார்,தாயுமானவர்.

 

“அம்சமா இருக்க அப்பு..” அவனுக்கு திருஷ்டி கழித்து விபூதியை பூசி விட,பையனின் விழிகள் அவரை உறுத்து விழித்தன.

 

“ஓவரா பண்றப்பா நீயி..” அதட்டலுடன் கூறியவனோ,பைக் சாவியை சுழற்றியவாறு வந்து வண்டியைக் கிளப்பப் பார்த்திட,அதற்கு வண்டி ஒத்துழைத்திட வேண்டுமே.

 

என்றுமில்லாமல் வண்டி ஸ்டார்ட் ஆகிடாமல் சதி செய்திட,சபித்தாவறு தோழனுக்கு அழைத்துச் சொல்லி விட்டு பேரூந்து நிறுத்தத்துக்கு வந்தான்,தன் வேக நடையுடன்.

 

சத்யாவின் வண்டியை அவனின் அண்ணன் எடுத்து சென்றிருக்க,இன்று இருவருக்கும் பேரூந்துப் பயணம் என்று எண்ணுகையிலேயே அவனின் புருவங்கள் இடுங்கிட,சலிப்புத் தட்டியது.

 

நெரிசல் மிகுந்த பேரூந்துகளில் தொற்றிக் கொண்டு செல்வதில் அவ்வளவு பிடித்தம் இல்லை,பையனுக்கு.அதனால் தான்,பகுதி நேர வேலைக்குச் சென்று தனக்கென வண்டியொன்று அவன் வாங்கியதே.

 

“என்னடா இன்னும் பஸ் வர்லியா..?” அலுப்பான பார்வையுடன் வினவியவாறு தோழனும் வந்திட,மறுப்பாய் தலையசைத்தவனின் பார்வை பாதையை துழாவிக் கொண்டிருந்தது.

 

சத்யாவுக்குத் தான் ஏக பதட்டம்,நேரமாவதைக் கொண்டு.பையனின் விழிகளில் பதட்டத்தின் சிறு துளியைக் கூட காணக் கிடைக்கவில்லை.அவனின் இயல்பே அது ஆயிற்றே.

 

“இவன் மட்டும் எப்டி தான் இவ்ளோ கூலா இருக்கானோ தெரில..” யோசிக்கும் பொழுதே பேரூந்தொன்று வர,அதைக் கண்டதும் அதில் ஏறிடும் எண்ணத்தை கை விட்டு பின்னடைந்தான்,பையன்.

 

“ரொம்ப க்ரவுடா இருக்கு..நம்ம காலேஜ் தான் ஃபுல்லா..அடுத்த பஸ்ல போலாம்” என்று விட்டு அலைபேசியை ஆராய்ந்திட,யன்னலோரத்தில் அமர்ந்து இருந்தவளோ,சட்டென தன் தேகத்தை சரித்து குனிந்து கொண்டாள்.

 

“என்னாச்சு யாழ்..?”

 

“எரிமல கெடங்கு இருக்குடி.பாத்தா மொறச்சு தள்ளும்..”அவள் கூறுகையிலேயே,ஆமை வேகத்தில் நகரத்துவங்கி இருந்தது,பேரூந்து.

 

பொதுவாகவே அந்த பாதையில் பேரூந்து ஊர்ந்து தான் செல்லும்.அவ்வளவு மெதுவான வேகம்.அவசர தேவைகளில் இருப்பவர்கள் யாரும் பேரூந்துகளில் பயணிப்பதே இல்லை.

 

வேல்முருகனிடம் இருந்து அழைப்பு வந்த படியால்,யாழவளை கவனிக்க மறந்து போயிருந்தான்,பையன்.ஏன் சத்யாவும் கூட கவனித்திடவில்லை.

 

பேரூந்து அவர்களின் கண்ணுக்கெட்டும் தூரத்தில்,மீளவும் ஆட்களை ஏற்ற தரித்திருக்க,அலட்சிய பார்வையொன்றுடன் மார்புக்கு குறுக்கே கையை கட்டியவாறு பையன் இருக்க,அவர்களின் முன்னே சரேலென நின்றது,வண்டியொன்று.

 

இருவரும் யாரென்று நிமிர்ந்து பார்க்கும் முன்னமே,கார்க் கண்ணாடியை கீழிறக்கி விட்டு ஆர்ப்பாட்டமாய் சிரித்தார்,அதே மருத்துவர்.

 

பொதுவான சுகநல விசாரிப்புக்கள் நடந்தேறிய பின்னர் பையனிடம் அவர் கேட்ட கேள்வியில் அவனிதயம் நின்று துடித்தது.

 

“என்ன ஆர்யா உங்க ஆளுக்கு மேட்சான கலர்ல ஷர்ட் போட்டுட்டு வந்துட்டு அவங்க கூட பஸ்ல போகாம இங்க நிக்கறீங்க..?”ஆர்ப்பரிப்பான சிரிப்புடன் அவர் கேட்டு விட்டு வண்டியைக் கிளப்பிட,ஒரு கணம் உறைந்து போனான்,ஆர்யா.

 

“இந்த மனுஷன் வேற ஐயோ ஐயோ..மிடில சாமி..” தோழன் தலையில் அடித்துக் கொள்ளும் போது,சட்டென தாழ்ந்து தன் மேற்சட்டையின் நிறத்தை ஆராய்ந்தன,பையனின் விழிகள்.

 

“இவரு வேற பைத்தியம் மாதிரி..” தோழன்,புலம்பிக் கொண்டே திரும்ப,பையனோ வேக எட்டுக்களுடன் நெருங்கத் துவங்கி இருந்தான்,கொஞ்சம் தள்ளி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரூந்தை.

 

“டேய் ஆரி..அடேய் எங்கடா போற..? அப்புப் பயலே நில்லுடா..” தோழன் கத்தியதெல்லாம் காற்றில் கலந்து கரைந்தது தான் மிச்சம்.

 

பையன் நெருங்கி வரவும் பேரூந்து அங்கிருந்த நகரவும் சரியாய் இருக்க,பாதங்களோ வேகமெடுத்து ஓடத் துவங்கின.

 

முட்டி வரை ஷர்ட் கையை மடித்து விட்டவாறே ஓடி வந்தவனை கண்டவர்களோ,பேரூந்து நிறுத்தச் சொல்லி அதன் வெளிமுகப்பில் தட்ட பையன் ஏறிக் கொள்வதற்கு ஏற்றாற் போல் பேரூந்தின் வேகமும் தேய்ந்தது.மிதிபலகையில் பையன் ஏறிக் கொள்ள,அவனுக்கு பின்னே எப்படியோ ஓடி வந்து ஏறி இருந்தான்,சத்யாவும்.

 

“இவனோட..” தலையில் அடித்துக் கொள்ள,இங்கு அதி கீழான மிதி பலகையில் நின்று இருந்தவனின் விழிகள் பேரூந்தை அலச முயன்றது.

 

கருமணிகள் அலைந்தோடி உணர்வுகளும் இழைந்தோய,இரு விழிகளிலும் அவ்வளவு தவிப்பு.அவள் யாரெனக் கண்டறிய, கடலளவு தேடல் நீள விழிகளில்.

 

அதீத நெரிசல்.நடத்துனருக்கு நகரந்து வரக் கூட முடியாத அளவு ஆட்கள் நிரம்பியிருக்க,அதில் எப்படி ஆட்களை அவன் ஆராய்வதாம்..?

 

அதுவும் பாவையவள்,அருகே நின்றிருந்தவனின் பார்வையில் அசூசையாக உணர்ந்து,நீல நிறச் சுடிதாரை முற்றாய் மறைக்கும் விதமாக செம்மஞ்சள் நிற துப்பட்டாவை முழுதாகப் போர்த்திக் கொண்டிருக்க எங்கனம் பையன் கண்டறிவதாம்..?

 

இமைகள் ஒட்டிக் கொள்ளத் தவறிட,இதயத்தில் முட்டித் தள்ளிய தேடலால்,முனைக்கு முனை அசைந்த கருமணிகள் அவள் விம்பம் வேண்டி ஏமாந்து போக,ஆட்கள் இறங்கிச் செல்கையில் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற எண்ணம் வந்தாலும், இரு விழிகளின் சுழற்சி நிற்கவேயில்லை.

 

பேரூந்து நிறுத்தங்களில் எல்லாம் இறங்கிச் செல்வோரை கவனிக்கத் தான் செய்தான்,பையனும்.

 

கல்லூரி வாயிலை வந்தடைந்தாயிற்று.முதலில் பையன் இறங்கிப் போய் ஓரமாய் நின்றிட,பின்னூடு வந்த தோழனோ வெகுவாய் குழம்பிப் போயிருந்தான்.

 

இறங்கிச் செல்லும் ஒவ்வொருவராய் கவனித்தாலும் அவன் விழிகளுக்கு நீல நிறச் சுடிதாருடன் யாரும் சிக்கிடவில்லை.சலிப்போடு ஒரு வித ஏமாற்றம் மனதை சூழ பேரூந்தும் கிளம்பியது.

 

யன்னலின் கீழ்ப்பகுதியை பிடித்து, ஒரு தாவலுடன் அவன் உள்ளே அலசி விட்டு கீழே வரவும்,அவன் சிரசு நுழைத்த யன்னலில் இருந்து சில இருக்கைகள் முன்னமர்ந்து இருந்தவளோ,தன் பேனாவை பொறுக்கி எடுத்துக் கொண்டு நிமிரவும் சரியாய் இருந்தது.

 

அவன் விழிகளில் அவள் விம்பம் விழவில்லை.பையனோ பாவையவளுக்கு முதுகு காட்டி நின்று,தளர்ந்து போயிருக்க,அவனின் முதுகை புருவம் சுருக்கி பார்த்தவளின் இதழ்களில் ஏனென்று இல்லாமல் சிறு புன்னகை ஓடியது.

 

பேரூந்து கடந்து செல்வதும் பையன் திரும்பிப் பார்த்திடுவதும் ஒரே கணத்தில் நடைபெற,அப்பொழுதும் விழிவீச்சில் அகப்படவில்லை,அவள்.

 

நிகழ்வுக்கென சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால்,சற்று முன்னே இருக்கும் கடைத்தெருவுக்கு சென்று மீள கல்லூரி திரும்பும் எண்ணத்தில் தான் கிளம்பி வந்தது,பாவையவளும் அவளின் தோழியும்.அது தான் அவர்கள் கல்லூரி வாயிலில் இறங்கிட மறுத்திருந்தனர்.

 

●●●●●●●●

 

“ஏன்டா இன்னிக்கி வித்தியாசமா நடந்துக்குற..?” பையனின் நடத்தைகள் போட்டுக் குழப்பி விட்டதில் கேட்டிட,பதலிலில்லை பையனிடம்.

 

அவனுக்கு தெளிவாக புரியாதவற்றை அவனும் என்னவென்று உரைத்திட..?

 

“அது சரி இன்னிக்கி என்னடா திடீர்னு பஸ்ஸ ரன்னிங்க்ல போய் புடிச்சு ஏறுன..?அதுவும் புஃட் போட்ல தொங்கிட்டு வந்த..?”

 

“………………….”

 

“டேய் உன்னத்தான்டா கேக்கறேன்..அந்த மனுஷன் உன் லவ்வர்னு சொன்னதும் கன்னத்துல நாலு அப்பாம போய் பஸ்ஸ தொரத்துற..? என்ன தான்டா ஆச்சு உனக்கு..? எனக்கு மண்ட காயுது..”

 

“எனக்கு அந்த பொண்ணு யாருன்னு பாக்கனும் போல இருந்துச்சு..” அதிரடியாய் அவன் உரைத்திட,வார்த்தைகளை கிரகித்து நெஞ்சில் கை வைத்து விட்டான்,தோழன்.

 

“எதே?! என்னடா சொல்ற..?” குரலில் மிஞ்சி விடும் அளவு திகைப்பு.பையனின் வார்த்தைகள் தானா என மனம் யோசித்திடவும் செய்தது.

 

“ஆமா..ஒரு தேங்க்ஸ் சொல்லனும்..அதுக்காக பாக்கனும்னு தோணுச்சு..நீ எதுக்கு இவ்ளோ ஷாக் ஆகற..?” அலட்டலின்றி உரைத்தவனின் வார்த்தைகளில் கொஞ்சம் பொய்யும் கலந்து இருந்தது.

 

ஏதோ கேட்கப் பார்த்த சத்யாவும் பையனின் விழிகளின் அதட்டலில் வாயை மூடிக் கொண்டான்,மனம் முரண்டினாலும்.

 

“ராகேஷ்..இன்னிக்கி பதினொரு மணி பஸ்ல நம்ம காலேஜ் பொண்ணுங்க மட்டுமா வந்தாங்க..?” முதலாம் வருடம் படிக்கும் மாணவொருவன் அதே பேரூந்தில் வந்திருக்க,போகும் வழியில் அவனைக் கண்டதும் அவனிடம் கேட்டிருந்தான்.

 

“ஆமாண்ணா எங்க பேட்ச் தான்..பஸ்ஸு ஃபுல்லா இன்னிக்கி எங்க பேட்ச் தான்..”

 

“எந்த டிபார்ட்மண்ட் கேர்ள்ஸ்னு தெரியுமா..?” கேட்கையில் அவனுக்குள் சிறு தடுமாற்றம்.வார்த்தைகள் சட்டென்று எட்டிப் பார்க்கவுமில்லை.

 

“எங்க கூட கொம் டிபார்ட்மண்ட் கேர்ள்ஸ் தான் வந்தாங்கண்ணா..மத்த டிபார்ட்மண்ட் பொண்ணுங்க அதுக்கு முன்னாடியே வந்துட்டாங்கன்னு நெனக்கிறேன்..” அவன் நகர்ந்து விட,அதர்வேறிய விழிகளுடன் தோழனைப் பார்த்தான்,தோழன்.

 

“டேய் பஸ்ஸுல அவ்ளோ பொண்ணுங்க வந்தாங்க..இவன் என்னான்னா இப்டி சொல்லிட்டுப் போறான்..” அவன் கடுகடுக்க,பையனுக்கும் அது புரிந்தது.

 

அவன் சொல்வதை வைத்து அவளைக் கண்டறிய எந்த முடிவுக்கும் வர முடியாது என்று புத்தி தடுத்தாலும்,ஆழ் மனமோ அதை நம்பித் தொலைத்திடாமல் இல்லை.

 

யோசனையுன் விழா அரங்கத்தினுள் அவன் நுழைய,வாசலில் எதிர்ப்பட்டாள்,யாழவள்.

 

அடர் நீல நிறச் சுடிதார் அணிந்து தோழியருடன் பேசியவாறு,வாயிலின் அலங்காரங்களை சரி பார்த்திட,தன் சட்டையை ஆராய்ந்த பையன் உறைந்து நின்று விட்டான்,ஒரு கணம்.

 

●●●●●●●●

 

(II)

 

கலங்கிச் சிவந்த விழிகளில் ஜீவன் வற்றியிருக்க,வீங்கிய முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தவளின் நடையில் பெரும் தொய்வு.

 

சோக சித்திரமாய் நடந்து வந்தவளைக் கண்ட டாக்டருக்கும் அவளைப் பார்க்கையில் பாவமானது.இதே அழுத்தத்தில் சிறுவளவேனும் தான் நேசித்தவளுக்கு இருந்து இருந்தால் தங்கள் காதல் சேர்ந்திருக்கக் கூடும் என்கின்ற எண்ணம் மனதை நிறைத்திட,கனம் நெஞ்சை அடைத்தது.

 

அழுகையை அடக்கிக் கொண்டு வெளியே வந்தவளோ,பார்வதியின் பார்வை வீச்சில் விழாமல் ஓரமாய் நின்று கொண்டாள்,மனம் வலித்திட.தந்தையின் உடல் நிலை பற்றி அடிக்கடி மருத்துவரிடம் விசாரித்திட முயன்றாலும் முடியாமல் போயிருந்தது.

 

அடுத்த நாள் மருதநாயகத்தை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு செல்ல கட்டளையிட்டிருக்க,அது வரை தொடந்தது பார்வதியின் பாராமுகம்.

 

அழுகை வந்தாலும் அவள் அதை வெளிக்காட்டிடவில்லை.அழுவதற்கு அவளிடம் தெம்பும் இருந்திடவில்லை.

 

இரு நாட்கள் கூட சிகிச்சை தராது தந்தையை வீட்டுக்கு அனுப்பியதில் அவள் மனம் தவித்தாலும்,யாரிடம் கேள்வி கேட்டிட முடியும்.

 

டாக்டர் அவனே முன்னின்று அவரை வீட்டுக்கு அழைத்து வந்திட,அந்த ஒரு காரணமே அவளை கேள்வி கேட்க விடாமல் செய்து இருந்தது.

 

வீட்டுக்கு வந்த பின்னும் தந்தைக்கு தேவையான எந்தவொன்றையும் செய்திட பார்வதி அவளுக்கு இடம் தரவில்லை.

 

அவர் உறக்கத்தில் இருந்த சமயம் அவரைப் பார்த்து விட்டு வந்தவளின் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சின,தாயின் வார்த்தைகள்.

 

“சங்கவி உங்க அக்காவ பேசாம அவ ரூம்குள்ளவே கெடக்க சொல்லு..அப்பாவப் பாக்கறேன்னு போய் திரும்பவும் அந்த மனுஷனுக்கு ஏதாவது ஆக வச்சுடாம..” பாரபட்சமின்றி அவர் பேசிட,அவளுக்கு கண்கள் கலங்கி விட்டன.

 

“அம்மா!” சங்கவி அதட்டிட,இதழ் சுளிப்புடன் கடந்து விட்டார்,அவர்.சங்கவியின் விழிகள் அப்பட்மான தவிப்பு.அவளுக்குமே தாயின் வார்த்தைகள் அதிகப்படியாய் தோன்றிடினும் மறுத்துப் பேசிட முடியவில்லை.

 

அதன் பின் தந்தையைப் பார்க்க வரவே இல்லை,அவள்.அழுதழுது அறைக்குள் கிடந்தவளின் செவியை வார்த்தைகள் நிரப்பிய வண்ணம் இருந்தன.

 

இங்கோ,

 

வெளியில் யாரும் இருக்கிறார்களா எனப் பார்த்து அறைக் கதவை அடைத்து விட்டு,கட்டிலில் படுத்திருந்த மருதநாயகத்தின் அருகில் வந்து அமர்ந்தார்,அன்பரசன்.

 

“வெளில யாரும் இல்ல மச்சான்..” என்கவும் நன்றாக எழுந்து அமர்ந்தார்,மருதநாயகம்.

 

“நா கூட எப்டிடா வீட்டாளுங்கள சமாளிக்கிறதுன்னு யோசிச்சு பயந்துட்டேன்..நல்ல வேள சித்து இருந்ததால தப்பிச்சேன்..” ஆசுவாசப் பெருமூச்சு விட்டவாறு மொழிந்தவரின் விழிகளில் நிம்மதி.

 

“ஏதோ எனக்கு கண்டிப்பா தோணுது தென்றல் கல்யாணத்துக்கு ஒதுப்பான்னு தோணுது மச்சான்..”

 

“அதான் மச்சான்..கண்டிப்பா அவ ஒத்துப்பா..பார்வதி தான் நெஞ்சு வலின்னு சொன்னதும் அவள ரொம்ப பேசிட்டா போல..சரி அதுவும் நல்லதுக்கு தான்..கேஸ்ட்ரைட்டீஸால வந்த நெஞ்சு வலின்னு அவளுக்கு அப்றம் சொல்லிக்கலாம்..” என்றிடவும் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் சரியாய் இருந்தது.

 

அன்பரசன் எழுந்து சென்று கதவைத் திறந்திட,அங்கு முகத்தில் அழுத்தம் வழிய நின்றிருந்தான்,டாக்டர்.

 

அவனை உள்ளே இழுத்து கதவை சாற்றிட,இருவரின் மீது கோபத்துடன் படிந்தது,அவன் பார்வை.

 

“நீங்க பண்ண வேலயால உங்க பொண்ண ரொம்ப பேசறாங்க அத்த..” கடிந்து கொண்டவனின் செவிகளையும் சேர்ந்திருந்தது,பார்வதியின் வார்த்தைகள்.ஏத ஒரு ஆதங்கத்தில் சங்கவி சொல்லியிருக்க அதைக் கேட்டதும் பையனுக்கு அப்படியொரு கோபம்.

 

“எல்லாம் நல்லதுக்கு தான மாப்ள..” உற்சாகமாய் வந்த அழைப்பில் டாக்டருக்கு பற்றிக் கொண்டு வந்தது.அவர்களின் திட்டத்திற்கு ஒத்துழைத்ததை எண்ணி அவன் மீதே அவனுக்கு கோபம்.

 

அன்று அவசரமாக அழைப்பு வரவும் கிளம்பி வந்தவனோ,முதல் வேலையாகச் சென்று மருதநாயகத்தைப் பரிசோதித்திட,அவருக்கு மாரடைப்பால் வந்த நெஞ்சு வலி அல்ல என்று தெரிய வந்தது.

 

அதை தெரிந்து கொண்டு வெளியே வரும் போது,முன்பு அவரைப் பரிசோதித்த மருத்துவர் வீட்டினரிடம் “மைனர் அட்டாக்” என்று கூறியது அவனுக்கும் அதிர்வு தான்.

 

என்னவென்று அவரிடம் அழைத்துக் கேட்டிட்டவனின் மனதில் பல கேள்விகள்.அவரோ விழி பிதுங்கி கையைக் காட்டியது என்னவோ,அன்பரசனைத் தான்.

 

தந்தையிடம் வந்து அவன் எகிறிப் பாய,தமது திட்டத்தைக் கூறி அவனிடம் உதவி கேட்டிருந்தனர்,இருவரும்.

 

கோபம் கொப்பளிக்க அவன் மறுத்திட,அதற்கெல்லாம் அசருபவர்களா இருவரும்..? கெஞ்சி எப்படியோ அவனை ஒப்புக் கொள்ள வைத்திட,அவர்களின் செயலுக்கு ஒத்து ஊதினான்,டாக்டரும்.

 

டாக்டரின் பேச்சுக்கு மறுபேச்சு அவ்விடம் இல்லாதிருக்கவே,அனைத்துக்கும் அது வசதியாகிப் போனது.என்னவொன்று தென்றலுக்கு வந்து விழுந்த வசவுகள் தான் அவனைக் கொஞ்சம் நெருட வைத்தது.அதுவும் இன்று பொங்கியே விட்டான்,டாக்டர்.

 

“மாமா!” அதட்டியவனுக்கு திட்ட நா துறுதுறுத்தது.பெரியவர்கள் என்பதால் கட்டுப்படுத்திக் கொண்டான்.

 

“சித்து எல்லாம் சரியா வர்ர நேரம் நீ பொங்கி எல்லாத்தயும் அணச்சுடாத..கண்டிப்பா இன்னிக்கி ராத்திரிக்குள்ள தென்றல் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவா..” உறுதியாக உரைத்த அன்பரசனை அலட்சியமாய் பார்த்தான்,அவன்.

 

அன்றிரவு தென்றல் வந்து அனைவரின் முன்னிலையிலும் திருமணத்துக்கு ஒத்துக் கொள்ளும் வரை அவனுக்குமே நம்பிக்கை இருக்கவில்லை,அவள் சம்மதம் சொல்வாள் என்று.

 

காதல் தேடும்.

 

2025.04.13

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. தென்றல் நல்லதுக்காக தான் இப்படிலாம் பண்றாங்க … அப்போ தென்றல் ஓகே சொல்லிடுவாளா …

    ஆர்யா யாழை பார்த்தாச்சு … போய் என்ன சொல்லுவான் …