Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 19

 

(I)

 

தாயுமானவரினதும் தோழனினதும் வார்த்தைகள் செவியுரசினாலும்,கேளாதது போலவே நடந்து கொண்டான்,பையன்.

 

“என்ன ரொம்ப முக்கியமான டிஸ்கஷன் போல..” அவன் தீவிரமான பாவத்துடன் கேட்டிட,இவர்களுக்குத் தான் வார்த்தை அடைத்துக் கொண்டன.

 

“ஒன்னுல்ல மச்சான்..சும்மா தான்..”

 

“ஆமா ஆமா..சத்யா கூட நா சும்மா பேசுவேன்னு உனக்கு தெர்யும்ல..”

 

இருவரும் சமாளிக்க முயல,அழுத்தமாய் பார்த்து விட்டு மீளவும் அவன் எதுவும் கேட்கவில்லை.

 

இரவு உணவை முடித்துக் கொண்டு சத்யா கிளம்ப முயல,

“காலேஜ்ல நல்ல சீன் ஏதாச்சும் நடந்தா என் கிட்ட சொல்லு..” அவன் காதில் கிசுகிசுத்திட,முறைப்புடன் தலையாட்டி விட்டு கடந்து போனான்,அவன்.

 

மாத்திரைகளை போட்டு விட்டு,வேல்முருகன் கட்டிலில் சரிய,வீங்கியிருந்த அவரின் பாதங்களை கட்டிலில் அமர்ந்தவாறே அழுத்திக் கொடுத்தான்,பையன்.

 

பொதுவாக அவருக்கு வெகு நேரம் நின்றால் கால் வீங்கி விடும்.அந்த சமயங்களில் பையன் காலைப் பிடித்து விடுவது வழக்கம்.

 

அவன் இதமாய் அழுத்திக் கொடுத்ததில்,அவருக்கும் வலி குறைவது போல் இருக்க,பையனிடம் பேச்சுக் கொடுத்தார்.

 

“அங்க நம்ம குணாளன் சொன்ன எடத்த பாத்தியா நீ..? அங்க கட தொறந்துருவோம்..அப்போ உனக்கும் லேசா இருக்கும் அப்பு..”

 

“அதான் பா..அங்க நல்ல எடம் தான்..நா வேலக்கி போற வர தான..அது வர அங்க பாத்துக்கலாம்..நா எல்லாம் பேசிட்டேன்..பாத்து பண்ணிட்டு உன் கிட்ட சொல்றேன்..அப்றமா கடய தெறக்கலாம்..சத்யா வீட்டாளுங்கள மட்டும் கூப்டு சிம்பிளா கடய தெறந்துர்லாம்..”

 

“ம்ம்..”என்றவருக்கு மாத்திரையின் வீரியத்திலும்,பையன் அழுத்திக் கொடுத்ததிலும் உறக்கம் சுழற்றிட,சில நிமிடங்களில் உறங்கிப் போனவரை புன்னகையுடன் பார்த்தவனோ,அவருக்கு போர்வையை போர்த்தி விட்டு அறையை மூடிக் கொண்டு தன்னறைக்குள் நுழைந்தான்.

 

செய்ய வேண்டிய அசைமண்ட் ஒன்று இருக்க,அதை முடித்து விட்டு நிமிர்கையில் இரவு பதினொரு மணியைத் தாண்டி இருக்க,தேகத்தில் அசதி.

 

சோம்பல் முறித்தவாறு,கட்டிலில் சரிந்தவனை மெல்லிய உறக்கம் சூழ்ந்திட,உணர்வுகள் தொய்ந்திட உடல் தளர்ந்திட்டது.

 

புலன்களில் இருந்து தொலை தூரம் அவன் தேகம் இழுபட்டுப் போயிருக்க,மெல்லமாய் உயிரின் ஓசை மட்டும் இதயத்தை நிரப்புகிறது.இதயத்தை நிறைத்திடும் உயிரின் ஓசையில் அவள் குரலதும் கலர்ந்து ஒலித்திட,”சீனியர்” என்கின்ற அவளின் அழைப்பு அத்தனை தித்திப்பாய் உயிரில் எதிரொலித்திட,மெல்ல அவன் கண்மணிகள் மூடிய இமைகளுக்குள் அங்குமிங்கும் நகர்ந்து ஓடுகின்றன.

 

“சீனியர்..” அத்தனை இரகசியமாய் அழைக்கிறாள்,அவனை.அந்த ஒற்றை வார்த்தையில் அவனை தளர்ந்திட வைக்கின்றாள்;அவன் இறுக்கங்களை தகர்ந்திடச் செய்கின்றாள்.

 

இரகசியத்திலும் இரகசியாமய் அவள் அழைத்திட,அவனையறியாமல் அவன் இதழ்களில் இரசனைப் புன்னகையொன்று விரிந்தோடுகிறது,உணர்வுகளில் தேய்வதில்.

 

இரகசியமான அவளழைப்பு,அவனின் இரகசியங்களில் எல்லாம் ஆர்ப்புடன் ஆர்ப்பரித்திட,அந்த நிசப்தத்தில்,அவன் ஜீவனதின் மௌனத்தின் மொழியாகி,அதுவே அவனின் ஜீவனின் சப்தமென மாறிடுது.

 

அவள் இரகசியம் இம்சையாகி,அவனின் இதயத்துடிப்பின் ஓசையை தவறிட வைத்திட,அது அவளின் காதோரம் இசையென உரசிடுது.

 

உயிரோசையுடன் உயிரும் விழித்துக் கொண்டு,அவளுடன் உறைந்து போகத் தவித்திட,இதயத்தின் ஓரம் மட்டும் இரகசியத்திலும் இரகசியமாய் அவள் பெயர் சொல்லித் துடித்திட,மனதின் ஆழம் அவனைக் கேளாமல் விழித்துக் கொள்கிறது.

 

அரண்டு போகிறாள்;மிரண்டு நிற்கிறாள்.விழிகளை உருட்டுகிறாள்;இதயத்தை புரட்டுகிறாள்.விழிவழி அவனை அசைக்கிறாள்;அவனைக் கேளாமல் அவனிதயத்தை இசைக்கிறாள்.ஏதேதோ செய்கிறாள்,அவனையும் அவனின் உணர்வுகளையும்.

 

அவள் பாவங்கள் அவனைப் பந்தாட,அவனின் திமிரெல்லாம் கரைந்தோட,ஆரி அவனின் ஆன்மாவின் ஆழமதில் அவளின் ஆலோலம்.

 

ஆரி அவனை முழுதாய் அவள் நினைவுகள் வாரிக் கொள்ள,உறக்கம் மட்டும் விழியோரம் தூறி நிற்கிறது.

 

மனதின் ஆழமதோ,மேலீடுகள் எல்லாம் அடங்கி நிற்க,ஆன்மாவின் ஆர்ப்பரிப்பில் பொதிந்திருக்கும் அவள் நினைவுகளை இழுத்து சேர்த்து தன்னை மூழ்கடித்தது போதாதென்று,நெஞ்சாங்கூட்டையும் சிதறடித்திட எஞ்சிய அவள் விம்பங்களை நினைவுகளாக்கி அம்பெய்திட,அவன் இதயச் சுவரெங்கும் அவள் விம்பம் பட்டுத் தெறித்திடுது.

 

உறக்கமும் இல்லை;விழிப்பும் இல்லை.ஜீவன் முழுவதும் அவன் நினைவுகளில் தொல்லை,எல்லையின்றி.

 

அவன் வரித்திருந்த எல்லைகள் எல்லாம் அவளால் மீறப்பட,விதிகள் கூட விலகி நின்று,அவள் வழித்தடத்துக்கு வழிகோலுகின்றன.வகுக்க மறுத்த இதயத்தின் முனைகளில் எல்லாம் அவள் எல்லைக்கோடு கீறிட,அவன் உயிரும் ஒப்புக் கொள்கிறது.

 

விதிகள் வெருண்டோட,அவனின் எல்லைகளில் எல்லாம் அவன் விம்பம்.இடைவெளிகள் தேடும் அளவு அண்மிக்கிறாள்,அவனின் இதயத்துடன்.

 

இமையோரத்தாழ்வு அவளுக்கென இறுகியிருக்க,இதரழரோப் பள்ளமது அவளுக்கெனவே விரிந்து கிடக்கிறது.

 

ஆரி அவனின் அகராதியில் இந்தப் புன்னகை எல்லாம் புதிதோடு புதுமையும் கூட.

 

காதோரம் இரகசியம் பேசும் அவள் வார்த்தைகளில் உயிர் உறைந்து போக,வியாபித்திருக்கும் விம்பங்களில் உள்ளம் நிறைந்து போனது.

 

மை வெளிச்சமும் இல்லா அவ்விருட்டில்,அவள் மட்டும் மின்னல் கீற்றாய் வந்து வெளிச்சம் பரப்பிட,ஆன்மாவை ஆட்படுத்திய அந்த வெளிச்சம் அவனுக்குள் வெகு இம்சையாய்.

 

கருமணிகள் உருண்டு திரள,மறுபுறம் திரும்பி படுத்தாலும்,விழி திறவாது இருக்கிறான்,பையனும்.

 

மூடிய விழிகளுக்குள் வந்து போன அவள் விம்பம்,அவனை ஏதோ செய்ய என்னென்னவே பிதற்றி நகர்கின்றன,பையனின் இதழ்கள்.

 

●●●●●●●

 

தலை சரித்து கழுத்தை வருடி அவன் பார்த்திட,அவன் பார்வையில் அர்த்தம் புரியாமல் பேயறைந்த பாவத்துடன் அசடு வழிய சிரித்து வைக்கிறாள்,அவள்.

 

அவளின் பாவனையில் அவனின் இதயம் நழுவி,அவளுயிருடன் தழுவிட முயல,அவனின் இதழ்களில் இருத்திக் கொண்ட புன்னகை விழிகளில் ஒளிர்கிறது.

 

அவனுக்கு சட்டென பேசிட முடியவில்லை.வார்த்தைகள் எல்லாம் எழாமல் நா ஒட்டிக் கொள்ள,அந்த இம்சை அவனை கொன்று தீர்க்கிறது.

 

“நா ஒன்னு சொல்லனும்..”அழுத்தமாய் உரைத்திடும் போதே,அவன் இதயம் நின்று துடிக்கிறது.

 

அதீதங்களின் அதீத பதட்டத்தில் அவனுக்கு வியர்த்து ஊற்ற,வலது நெஞ்மதில் இயல்பு போல் வலி பிடித்திட,அவனுக்கே அது அதிர்வு தான்.

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே,அவளைப் பார்த்திட,அவனுக்கு அவள் விழிகளைக் கண்டதும் பேச்சே வரவில்லை.

 

அவனை மீறி அவன் நினைத்திராத அளவு பதட்டம்.ஆள் கொல்லும் தவிப்பு.அவனை சரித்து விடும் அளவு தடுமாற்றம்.

 

செவி அதிரும் அளவு இதயவோசை ஒரு புறம் என்றால்,பதட்டத்தின் மிகுதியில் உண்டாகிடும் இறுக்கம் வேறு வார்த்தைகளை வர விடாது பாடாய்ப் படுத்துகிறது.

 

கைகளால் பொறு என்று சைகை செய்து விட்டு,மறு புறம் திரும்பி இதழ் பிளந்து ஆழமாய் சுவாசித்தவனோ,முயன்று தன்னை ஈடு கட்டியவாறு அவள் புறம் திரும்பினாலும்,சுவாசமதின் ஆழம் கிஞ்சிற்றும் குறையவில்லை.

 

சுவாசம் அடைத்தவன் போல்,பெரிய பெரிர மூச்சுக்களை இழுத்து விட்டு,அவள் முகம் பார்த்திட,அந்த விழிகளில் வேறு அவனின் தைரியத்தை மென்று தின்கிறது.அது தெரியாமல்,விழித்துப் பார்க்கிறாள்,பாவி மகள்.

 

ஒருவாறு தன்னை மீட்டு,நெஞ்சில் உண்டான இறுக்கத்தை பின் தள்ளி விட்டு,அவளிடம் பேச,அதோ!

 

இதோ அதோவென இழுத்துப் பிடித்த தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டி அவன் பேசிட,இதழ்கள் ஒத்துழைத்திட மறுக்க, வெறும் காற்று மட்டும் தான் வருகிறது.

 

“லவ்வ சொல்லிரு ஆரி..லவ்வ சொல்லிரு ஆரி..” மனமோ கூச்சல் போட,வெகு பிரயத்தனப்பட்டு பேசிடத் தான் பார்க்கிறான்.

 

ம்ஹும்..இதழசைவும் இயல்பாய் இல்லை.நாவும் நகர்கிறது.குரல் மட்டும் வராமல் வேடிக்கை காட்டிட,விழி பிதுங்கி அவனைப் பார்த்திட,அவளும் அப்படித் தான் பார்த்து வைக்கிறாள்,அவனை.

 

“சீனியர்..” அவள் புரியாது அழைத்திட அப்போதும்,அவனுக்கு குரலே வரவில்லை.இதழ்களொ மனதுடன் இயைந்து போக,மறுப்பு சொல்ல அவனுக்குள் பூகம்பம்.

 

“ஓவரா டென்ஷன் ஆனா உங்களுக்கு இப்டி ஆய்டும் ஆர்யா..” மென்சிரிப்புடன் மருத்துவர் கூறியது வேறு,அசரீரி போல் எதிரொலிக்கிறது.

 

பின்னர் கோர்வையின்றி அடுத்த காட்சி.

 

“புள்ளய பாத்துக்க சொன்னா என்ன பண்றீங்க..?” குண்டுக்கட்டாய் கையில் இருந்த மகனை,பையனின் மடியின் மீது அமர யாழவள் வைக்கிறாள்,முறைப்பொன்றை தெளித்து விட்டு.

 

அவனுக்கு அவளின் முறைப்பிலும் இரசனை பூத்திட,அதை ஆழமாய் பொதிந்து கொண்டு ஒற்றைக் கண் அடிக்கிறான்,அவளைப் பார்த்து.

 

அவளோ அசராமல்,அவனை உறுத்து விழித்து விட்டு நகர்ந்து போகிறாள்.

 

பையனோ,மடியில் இருந்த மகனைப் பார்த்திட,அதுவே பையனேயே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.

 

“அது ஒன்னுல்லடா செல்லம்..உங்கம்மா அப்டி தான் சரியாய்டுவா..” குழந்தையின் கன்னத்தை கிள்ளி முத்தமிட,அதுவும் விழிகளை உருட்டி பார்த்து வைக்கிறது.

 

“அப்டியே அம்மாவ போல பண்றடா செல்லம் நீ..” மறுமுறை மகனின் கன்னத்தில் இதழ் பதித்து மீள்கிறான்,பையன்.

 

அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தான்,பையன்.விழிகளை சுழற்றி தான் இருக்கும் இடத்தை உறுதி செய்ததும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.

 

கண்ட கனவின் தாக்கம் மீதமிருக்க,பேசிப் பார்த்தவனின் வார்த்தைகள் அவன் செவிக்கும் நுழைந்ததும் பெருத்த ஆசுவாசம்.

 

கனவைப் போலவே,இதயத் துடிப்பும் எகிறியிருக்க,முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் காதோரமும் கழுத்தோரமும் அரும்பி இருக்க,எழுந்த வேகத்தில் அருகே இருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்து வாய்க்குள் சரித்துக் கொண்டான்,வேக வேகமாய்.

 

தொண்டைக்குழி ஏறியிறங்கிட,நீரை அருந்தியவனுக்கு சட்டென இயல்புக்கு வர முடியவில்லை.கண்ட கனவின் தாக்கம் அப்படியே.

 

“லவ்..நா கல்யாணம் அவ கொழந்த..” கோர்வையின்றி வார்த்தைகள் வந்திட, தலையில் கை வைத்துக் கொண்டவனோ,இயல்பு மீள சில நிமிடங்கள் எடுத்திட,தற் செயலாய் கடிகாரத்தை பார்த்தவனுக்கு மீண்டும் படபடப்பு.

 

விருட்டென்று எழுந்து வேக நடையுடன் தந்தையின் அறையை அணுகி,கதவைத் தட்டிட,உறக்கக் கலக்கத்துடன் வந்து கதவைத் திறந்தார்,வேல் முருகன்.

 

“அப்பு என்னடா நாலு மணிக்கே எந்திரிச்சிட்ட..?”

 

“அப்பா இந்த டைம்ல கனவு கண்டா பலிக்குமா..?” நகத்தை கடித்தவாறு கேட்டான்,பையன்.

 

“விடியக்காலைல கனவு கண்டா பழிக்குமாம் டா..கெட்ட கனவு கண்டா வெளில யார் கிட்டவும் சொல்லிராத..” சிறு வயதில் அடிக்கடி எச்சரித்திடும் தாயுமானவரின் வார்த்தைகள் மனதோரம் முகிழ்த்து தொலைத்தது.

 

முதிர்வின் வழியில் அவற்றின் மீது அவன் நம்பிக்கை வைத்திடாத போதிலும்,ஒரு சில சமயங்களில் தன்னை மீறி அவன் யோசிப்பதுண்டு.முதிர்நிலைக்கு முன் மனதில் பதிந்தது ஆயிற்றே.

 

“ஏன் அப்பு..? கெட்ட கனவு ஏதாச்சும் கண்டியாடா..? வெளில சொல்லாம போய் சாமி கிட்ட வேண்டிக்க..” என்று அவனை விட பீதியுடன் அவர் சொல்ல,பையனுக்கு அவரைப் பார்க்க பாவமாகிற்று.

 

“கெட்ட கனவு இல்ல பா..” தன்மையாய் உரைத்தான்,அவன்.

 

“அப்போ நல்ல கனவா..? நல்ல கனவுன்னா எதுக்கு அடிச்சு புடிச்சு வந்த கதவ தட்டுன..?” யோசனையாய் அவர் கேட்டிட,பையனிடம் அமைதி.அவனும் என்ன பதிலை தான் இயம்பிட..?

 

எந்த உணர்வும் காட்டாத விழிகளுடன் திரும்பி காட்டமாய் முறைத்தவனோ,பதில் சொல்லாது சென்று கூடத்து சோஃபாவில் அமர்ந்து கொண்டு,விழி மூடி சாய்ந்து கொண்டாலும்,கண்களுக்குள் கனவின் சுவடுகளே வந்து போயின.

 

கைலியும் பனியனுமாய் குழந்தையை அள்ளிக் கொண்டு,அவன் அமர்ந்திருந்த தோற்றம் அவனுக்கு பிடிக்கவில்லை.

 

“தொப்ப கண்ணாடின்னு கனவு வேற கேவலமாவா வரனும்..” நொந்து கொண்டவனின் தேகத்தை சிலிர்க்க வைத்தது,நினைவில் வந்து மோதிய அவள் விழிகள்.

 

“இனிமே அவ கண்ண பாக்க கூடாதுடா சாமி..அந்தக் கண்ண பாத்ததுல இருந்து தான் இப்டி ஏடாகூடமான கனவெல்லாம் வருது..” சலிப்பாய் எண்ணி அவன் விழி மூட,அவன் நாசியைத் துளைத்தது,காஃபி மணம்.

 

தாயுமானவர் நீட்டிய காஃபியை வாங்கிக் கொண்டவனுக்கு,அவரின் குறுகுறுவென்ற பார்வை சிறு கோபத்தை தந்தது.

 

“எதுக்குப்பா இப்டி குறுகுறுன்னு பாத்துகிட்டு இருக்க..?”

 

“இல்லடா நல்ல கனவுன்னு சொல்லிட்டு இப்டி ஒரு மாதிரி ஆன மாதிரி உக்காந்து இருக்கியே..அதான் யோசனயா இருக்கு..”

 

“நா எங்க ஒரு மாதிரி இருக்கேன்..” எகிறியவனுக்கு,தன்னுள் எந்த மாற்றமும் நிகழவில்லை என தனக்கே நிரூபித்து விடும் வேகம்.

 

“சரி சரி ஒன்னுல்ல விடு..” பையனைப் பார்த்து அவர் சொன்னாலும்,அவரின் விழிகளில் வேறு அர்த்தங்கள்.

 

●●●●●●●

 

“ஏன் டா இப்டி ஒரு மாதிரி இருக்க..?” பையனின் முகத்தில் அவனை மீறி சில நொடிகள் வெளிப்பட்ட மாற்றத்தை கண்டறிந்து தோழன் கேட்டிட,பையனின் பார்வையோ அவனை எரித்தது.

 

“என்ன மாதிரி இருக்கேன்..?”

 

“எதுக்குடா எறியுற..?”

 

“நா எங்க எறிஞ்சு விழுந்தேன்..” அதற்கும் காய்ந்து விழ,சுவற்றில் தலையை முட்டிக் கொள்ளும் நிலமை தான்,தோழனுக்கு.

 

“என்னன்னு கேட்டாலும் சொல்ல மாட்டான்..ஒரு மாதிரி கடுகடுன்னே இருக்கான்..” உள்ளுக்குள் பொருமியவனுக்கு தோழனைப் பார்த்திட,வித்தியாசமாகத் தான் தோன்றிற்று.

 

வழமைக்கு மாற்றமாய் நடந்து கொள்ளும் தோழனை புருவம் சுருக்கி பார்த்தவாறு அருகே நின்ற தலைக்குள் ஆயிரம் குழப்பங்கள்.

 

“என்னக்கும் இல்லாம திட்டி கிட்டு திரியுறான்..என்னன்னு கேட்டாலும் சொல்ல மாட்டான்..” தனக்குள் முணகியவனின் பார்வை பையனில் படிய,சட்டென அவன் விழிகளில் மின்னல்.

 

அவள் தான்.

அவள் தான்,அவர்களை கடந்தது.

 

மினுமினுத்த விழிகளின் பார்வை மின்னல் போல் அவளைத் தழுவிட,இமைகளின் அசைவு சில நொடிகளுக்கு ஓய்ந்து போயிருந்தது.மின்சாரமென அவன் விழிகளில் பரவிய அவள் விம்பத்தில், களவாட முயன்ற கருவிழிகள் உறைந்து போகாதது,புதுமை தான்.

 

“என்ன இது இவன் கண்ணெல்லாம் மின்னுது..” ஆராய்ச்சிப் பார்வையுடன் எதிர்ப்பக்கம் பார்த்தவனுக்கு இலேசாக நெஞ்சு வலிக்க ஆரம்பித்தது.

 

கண்ணைக் கசக்கி விட்டு மீண்டும் பார்த்தான்,தான் காண்பது உண்மையா என்று.மீண்டும் அதே காட்சி நிகழ,அவனுக்கு காட்சிப்பிழையோ என்கின்ற எண்ணமே,உள்ளுக்குள்.

 

“லவ்வா..? செருப்பால அடிப்பேன்..யாரோ ஒருத்தி பின்னால என் கெத்தெல்லாம் விட்டுட்டு திரிவேன்னு நெனக்கிறியா..?” சட்டைக் காலரை தூக்கி விட்டு,முட்டி வரை சட்டைக் கையை மடித்துக் கொண்டு வம்புக்கு வந்தவனின் நிழலுருவமே நிறைத்தது,சிந்தையை.

 

“என்ன காப்பாத்து சாமி..” நெஞ்சில் கையை வைத்தவாறு ஓரடி பின்னே நகர்ந்து மரத்தில் சாய்ந்து விட்டவனுக்கு,அதிர்ச்சியில் மயக்கம் வரும் போல் இருந்தது.அதில் புதுமை இல்லை,தான்.பையனின் இதற்கு முன்னைய அவதாரம் அப்படியே.

 

வேல்முருகன் கூறுகையில் நம்பாவிடினும்,ஏனோ சிறு சந்தேகம் வந்திருக்க,உண்மையென கண்டதும் அவனுக்கு பெருத்த அதிர்வே.

 

●●●●●●●

 

(II)

 

கிட்டத்தட்ட பத்து மணி நேரம் பயணித்திட வேண்டும்,அவனின் ஊருக்கு.பேரூந்தில் என்றால்,சொல்லவும் வேண்டாம்.

 

முற்பகல் ஒன்பது போல் இவர்கள் கிளம்பியிருக்க,இப்போது தான் பத்தரை மணி ஆகி இருந்தது.

 

காரில் பரவிய பாடலின் தாலாட்டில் அகல்யாவின் மகன் தென்றலின் மடியிலேயே உறங்கியிருக்க,அவனின் கேசத்தை கோதி விட்டுக் கொண்டிருந்தவளின் விழிகள் யன்னலுக்கு வெளியே அலசிக் கொண்டிருந்தன.

 

ஸ்ரீயின் மனமோ,பலவித சிந்தனைகள் சுமந்து வந்தது.நண்பி விடயத்தை கூறி இருந்தாலும்,வாசுவுக்கு இன்னும் இதைப் பற்றி எதுவும் தெரியாது.அவர்களின் பயணம் எதற்காகவென்று தெரிய வந்தால்,நிச்சயம் தன்னை கத்தித் தீர்ப்பான் என நினைக்கையில் அத்தனை ஆயாசம்.

 

பத்து நிமிடங்களுக்கு பின்னர்,வண்டியை ஓரிடத்தில் நிறுத்தினான் டாக்டர்,காலையுணவுக்காக.

 

அனைவரும் வெளியிறங்க,வாண்டின் உறக்கம் கலையாமல் தோளில் தட்டிக் கொடுத்தவாறு மெதுவாய் இறங்கியவளின் செயலில் ஒரு கணம் பிரமித்தான்,டாக்டர்.ஏன் அக்காளின் மகன் மீது இவளுக்கு இத்தனை பாசம் என்று அவனுக்குத் தோன்றாமல் இல்லை.

 

மடியில் வைத்து கேசம் கோதி,அவன் உறக்கம் கலையாத விதமாய் அவனை அழகான மென்மையுடன் கையாண்டவளில் தாய்மையைக் கண்டான்,அவன்.

 

உணவகத்தினுள் நுழைந்து அமர்ந்து கொள்ள,அகல்யாவின் மகனுக்கு தென்றல் தான் உணவை ஊட்டி விட்டது.

 

“பேசாம இவளுக்கு உன் கொழந்த தத்து கொடுத்துரு..உன்ன விட நல்லா பாத்துக்குரா..” தமக்கையின் காதில் இரகசியம் பேசி விட்டு,டாக்டர் நிமிர்ந்தெழுந்து கை கழுவப் போக,அங்கு எதிர்ப்பட்டாள்,அவள்.

 

காதல் தேடும்.

 

2025.04.20

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஆர்யா கனவு சூப்பர் … ஆமா நிஜமாகுமா … வேகமா போங்க சித்து டாக்டர் .. எங்களுக்கு பீபி எகிருது