Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 17

 

(I)

 

ஈர்ப்பின் கடைநிலையின் உருப்பெறும் இம்சையை காதல் கூட தந்து விட வல்லதல்ல.

 

காதல் என்றால் கூட புரிந்து விடும்.அடுத்து என்னவென்ன மாற்றங்கள், ஜீவனிலும் அகத்திலும் ஜனித்திடக் கூடும் என்று கொஞ்சமேனும் ஊகித்துக் கொண்டிட முடியும்.

 

சித்தமும் மனமும் புரிந்து ஒன்றாய் இயைந்து இயங்கக் கூடும்.எதுவென்றாலும்,மனதின் நிலைப்பாடு என்பது புரிந்து போயிருக்கும்,உணர்ந்திருந்தால்.உணராத பட்சத்தில் அது சாத்தியம் குறைவு தான்.

 

ஈர்ப்பின் கடைநிலை என்பது அப்படியல்ல.ஒரு வித தவிப்பான கட்டம் அது.கொஞ்சம் தடுமாற்றமான படிநிலை அது.

 

கொஞ்சமும் இல்லை,வெறுமேன சலனமென்று கடந்திடவும் முடியாது.

முதலான காதல் என்று புரிந்து முற்றாய் மூழ்கிடவும் முடியாது.

 

பின்னெட்டு வைத்தால்,சலனம்!

முன்னகர்ந்து போனால்,காதல்!

 

ஈர்ப்புகள் சலனமென மடிவதும்,காதலென விடிவதும் ஈர்ப்பின் கடைநிலையில் இருக்கும் புரிந்துணர்வை கொண்டே.

 

பையனும் அந்த நிலையில் தான் இருந்தான்.அவனில் இன்னும் காதல் துளிர்த்திடவில்லை.ஒரு சில நாள் சந்தித்திருக்க,அவள் குண நலன்கள் எதுவும் தெரியாமல் அவனுக்குள் காதல் பூத்திருக்கிறது என்று கூறின் அது பொருந்திடாது.அதுவும் பையனின் குணத்துக்கு,அது சாத்தியமும் இல்லை.

 

அவள் மீது அவனுக்கு யாரிடமும் இல்லா சிறு ஈர்ப்பு.ஈர்ப்பின் கடைநிலையில் அவன் திணறிக் கொண்டு இருப்பது நிஜம்.அது மறுக்க முடியாத சத்தியமான உண்மை.ஆனால்,காதல் என்றால்..?

 

அது இதுவரை துளிர்த்திருக்க சாத்தியம் இல்லை என்பதே சாலப் பொருந்தும்.

 

நூலகத்தில் அமர்ந்து புத்தகத்தில் ஆழ்ந்து இருந்தான்,பையன்.இதழ்களோ,அவனுக்கு பிடித்த பாடலை இரகசியமாய் முணுமுணுத்துவாறு இருந்தன.

 

“காலங்கள் ஓடும்..

இது கதையாகிப் போகும்..

என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்..”அழகாய் சுருதி தப்பாது பாடின,அவன் இதழ்கள்.

 

இதழ்கள் பாடலை உச்சரித்திட,நீட்டிய பாதங்களை நிறைத்த நிழலில்,நிமிர்ந்தவனின் இதழ்களுடன் இமைகளும் சில நொடிகளுக்கு இயைந்திட மறந்து போக,ஆழமான சுவாசத்துடன் சுவாசக்குழல் நிரம்பியது.

 

பட்டென தன்னை மீட்டவனோ,பார்வையைத் தாழ்த்திட,மனமோ அவளுக்கு அர்ச்சித்துத் தள்ளியது.

 

“இவ எதுக்கு தான் வேணும்னே நம்ம கண்ணு முன்னாடி வர்ராலோ தெரில..” அவளைத் திட்டியவனுக்கு,அவள் அவ்விடத்தில் உலாத்திக் கொண்டிருப்பது இயல்பை குழைப்பது போல்.

 

அவன் அமர்ந்திருந்த மேசையின் பக்கமாய் போடப்பட்டிருந்த அலுமாரியில் தான் அவள் புத்தகமொன்றை தேடியது.

 

அவளுமே அவன் இருப்பதைக் கண்டு பயந்து நடுங்கி,வேறு வழியில்லை என்று ஆகிய பின்னர் தான்,அவ்விடம் வந்தது.புத்தகத்தை எடுத்தாக வேண்டிய கட்டாயம்.

 

இல்லையென்றால்,அவனிருக்கும் பக்கத்தை நோக்கி அவள் பாதங்கள் கூட திரும்பாது.அவன் மன்னிப்புக் கேட்டு இருந்தாலும்,அவனின் மீது அவளுக்கு விண்ணளவு நன்மதிப்பே இருந்தாலும் அவன் மீதான பயமும் அப்படியே இருக்கத் தான் செய்தது.

 

தேவையான புத்தங்களை அவள் தேடியவாறு இருக்க,அவனுக்கு அவ்விடத்தில் இருந்து எழுந்து சென்றால் தேவலை என்கின்ற எண்ணம்.

 

“அவ வந்தான்னா நா எதுக்கு எந்திரிச்சு போகனும்..?” அவன் மனசாட்சி கேட்ட குறுக்கு கேள்வியில் அவன் திமிர் விழித்திட,அவ்விடத்திலேயே அமர்ந்து இருந்தாலும்,கவனம் அவளில்;எண்ணம் தன் முன்னே விழுந்த நிழலில்.

 

தேடியெடுத்த புத்தகங்களை அனைத்தையும் மேசையில் வைத்து ஒழுங்கு படுத்தி நெஞ்சோடு அணைத்தவாறு தூக்கிக் கொண்டாள்,யாழவள்.

 

கிட்டத்தட்ட பத்து புத்தகங்கள்.ஓரளவு தடினாமனவையும் கூட.அனைத்தையும் ஒற்றை ஆளாய் தூக்கி செல்வதா என யோசித்து தோழியைப் பார்த்திட,மித்ராவின் கையில் அதேயளவு புத்தகக் கட்டு.

 

இரண்டு தடவை கொண்டு செல்ல சோம்பல் இடம் தராதிருக்கவே,நன்றாக அணைத்துப் பிடித்து அள்ளிக் கொண்டு நகரத் துவங்கினாள்.

 

ஐந்தடிகள் வேண்டுமென்றால் எடுத்து வைத்திருப்பாள்.அவளின் நேரம் போலும்.அவள் அகன்று போவதை உணர்ந்த பையனோ,இம்சை அடங்கிடப் போகும்,நிம்மதிப் பெருமூச்சுடன் தொண்டையைச் செருமிட,அது ஒன்று போதுமே அவளை தடுமாற வைத்திட.

 

அவன் தன்னிடம் ஏதோ பேசத் தான் தொண்டையைச் செருமியதாய் நினைத்து பயந்து தடுமாறி கவனம் சிதறி,புத்தகக் கட்டை தவற விட பெரிய சத்தத்துடன் அனைத்தும் கீழே விழுந்தன.

 

“டொம்” என்ற சத்தத்தில் அனைவரின் பார்வையும் அவள் மீது திரும்பிட,பத்து பேர் போல் இருந்ததால் அவள் அவ்வளவு அசௌகரியத்தை உணரவில்லை.

 

விழி நிமிர்த்திட்ட பையனுக்கு,அவள் ஏன் புத்தகக் கட்டை தவற விட்டாள்,என்று முதலில் புரியாமல் போய் விடினும்,மறுமுறை அவன் தொண்டையைச் செருமியதில் அவள் கரம் தடுமாறியதை கவனித்தவனுக்கு ஆயாசமாய் இருந்தது.

 

“தொண்ட செருமுனேன்னு புக்கெல்லாத்தயும் கீழ போட்றா..அவ்ளோ மெரட்டியா வச்சிருக்கேன்..” மனதுக்குள் வந்து போன எண்ணமது,இதழோரம் புன்னகையையும் ஏற்றி விட முயல,அழுத்தமாய் இதழ்களை ஒட்ட வைத்துக் கொண்டான்,அழுத்தக்காரன்.

 

அவனுக்கும் அமர்ந்திருப்பது உசிதமாகத் தோன்றவில்லை.மனிதாபிமானம்,அதற்காகவேனும் அவளுக்கு உதவிடும் எண்ணத்தில் அவளை நோக்கி பாதங்கள் நீள,பாதச்சத்தத்தில் பார்வையை உயர்த்தியவளுக்கு,அவன் தன்னிடம் வருவதைக் கண்டு தான் உதறல் எடுக்கவே துவங்கிற்று.

 

விழிகள் முழுவதும் மிரட்சி பரவ,பதறிப் போய் தவித்து,வராதே எனும் இறைஞ்தலுடன் அவள் விழிகளை உருட்ட,உருண்ட கருமணிகளுடன் அவன் நெஞ்சமும் கொஞ்சமாய்,தடம் புரண்டது.

 

நீளமான இமைகள் முடிகள் கன்னத்தை உரசிட,இறுக விழி மூடித் திறந்தவனின் நடையும் திரும்பிற்று.

 

தலை சரித்து அழுத்தமாய் கழுத்தை வருடி கேசத்தை கோதினாலும்,அவள் மிரட்சி அவனுக்கு சிறு கோபத்தை தந்து விட்டிருந்தது,என்றுமில்லாத அதிசயமாய்.

 

●●●●●●●

 

“ஆமா இன்னிக்கி எதுக்கு லைப்ரரில ஆரி அண்ணாவுக்கு அவ்ளோ பயந்த..? நீ தான் அதிதி அக்காவோட லவ்வுக்கு தூது போன..அப்றம் ஏன் திடீர் பயம்..?”

 

“நீ வேற வாயக் கெளறாத மித்து..அதிதி அக்கா தான் அவர ரொம்ப திட்டுனதா சொல்லி பயமுறுத்திச்சி..அதான் லைட்டா பயந்துட்டேன்..என்ன தான் இருந்தாலும் அவர பாத்தாலே எனக்கு நடுங்குது..அன்னிக்கி அந்த குடய கொடுக்கும் போதும் காலெல்லாம் ஒரே ஆட்டம்..”

 

“…………….”

 

“எந்த தைரியத்துல குடய வாங்கிக்கன்னு அவர் கிட்ட கெஞ்சுனேன்னு எனக்கே ஷாக் தான்..பதட்டத்துல தான் அப்டி ஓவரா தைரியமாகி நடந்து கிட்டு இருப்பேன் போல..”

 

“தைரியம் ஓவராகி..இது உனக்கே ஓவரா தெரிலயா..?” என்று கேட்டிட,அசடு விழிய சிரித்தவாறு உணவை அடைத்திட,அவளை கடந்து சென்ற பையனைக் கண்டதும் புரையேறப் பார்த்தது.

 

புரையேறும் அளவு,வேறு யார் தான் அவளுக்கு திட்டிட..?

“இவள எத்தன தடவ தான் என்னோட கண்ல காட்டுவ கடவுளே..இம்ச புடிச்சவ..” அகத்தில் வசைபாடியவாறே,அவளைக் கடந்து சென்றிருந்தான்,பையன்.

 

“சும்மா இருந்தா கூட அவர கண்டா உனக்கு சாப்பாடு விக்கி பொறயேரிடும் ல..அவ்ளோ பயமாடி நீ..” அங்கலாய்த்து சிரித்த தோழியை முறைக்க முயன்று தோற்றாள்,பாவையவள்.

 

“சரி அவர் தான் அன்னிக்கி நீ மெஸேஜ் பண்ணனுன்னு நெனச்சு திட்டினாருன்னு சொன்ன..அப்றம் வந்து அவரே சாரி கேட்டாருன்ன தான..?”

 

“ஆமா..”

 

“அப்போ அவருக்கு மெஸேஜ் பண்ணது நிலான்னு தெரிஞ்சிருச்சா என்ன..?”

 

“ஃபர்ஸ்டு அவரு என் கிட்ட சாரி கேட்டதும் எனக்கும் அவரு தப்பா புரிஞ்சிகிட்டதுக்கும் சேத்து தான் மன்னிப்பு கேக்கறேன்னு நெனச்சேன்..”

 

“ம்ம்ம்ம்..”

 

“அப்றமா எப்டி தெரிய வரும்னு ஒரு டவுட்..கொழப்பமா இருந்துச்சு..அப்றம் தான் நிலா வந்து சொன்னா..அவருக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சு இருக்குன்னு..அவள கூப்டு தன்மயா அட்வைஸ் பண்ணாராம்..அத வச்சி தான் நா கன்ஃபார்ம் பண்ணேன்..”

 

“ம்ம்..”

 

“அப்றம் தான் அவருக்கு உண்ம தெரிஞ்சிருச்சு திட்ட மாட்டார்ங்குற நம்பிக்கைல அதிதி அக்காவோட டார்ச்சர் தாங்க முடியாம அன்னிக்கி அவங்களுக்கு ஹெல்ப் பண்ண போனேன்..” என்றவளின் குரலில் அப்பட்டமான சலிப்பு.

 

பத்து நாட்கள் மின்னல் வேகத்தில் ஓடியிருந்தன.

 

மீசை நுனியை திருகி விட்ட,வாஷ்பேசினில் கையை ஊன்றி கண்ணாடியில் தெரிந்த தன் விம்பத்தை ஆராய்ந்தான்,பையன்.

 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றாலும்,அவனின் உள்ளக மாற்றங்கள் எதுவும் விழிகளில் தெரியவில்லை.கண்ண்ணாடியில் பிரதிபலிக்கப்படவில்லை என்பதற்காக,அவன் உள்ளத்தில் மாற்றங்கள் இல்லையென்று ஆகி விடாதே.

 

அவனும் உணர்ந்தே இருந்தான்,அவனுள் எழும் மாற்றங்களை;அவளால் கிளை விரித்திடும் மாறுதல்களை.

 

அவ்வப்போது அவளைக் காண நேர்ந்திட்டால்;தவறுதாலகவேனும் அவள் விம்பம் பார்வைக்கு வந்து விட்டால்,அவனிதயத் துடிப்பில் மெல்லிய மாற்றம் உண்டாகாது இருப்பதில்லை.

 

அவளைக் காண சாத்தியமான இடங்களுக்கு அவன் சென்றால்,வேடிக்கை பார்ப்பது போன்ற எண்ணத்துடன் விழிகள் சுழல மறுப்பதில்லை.

 

யாரேனும் அவளின் பெயரை சொல்வது செவிப்பறையில் வந்து மோதிச் சென்றால்,அவனை மீறி மனம் அவளைத் தேடாமல் அடங்கியதில்லை.

 

தினம் ஒரு பொழுதென நகரும் நாட்களில்,எங்காவது அவளைக் காண முடிந்திடாதா என்கின்ற சிறு தேடல் அவனுக்குள் சிறகு விரிக்க தவறுவதில்லை.

 

படுத்தி எடுத்தாள்,அவனை.எதுவுமில்லை என அவன் தனக்குத் தானே கூறிக் கொண்டாலும் மனம் உணர்ந்திருக்க அதை மறுத்திட முடியாது;மறுத்தாலும் அதை அவன் மனமே ஏற்காது.

 

தன் மாற்றங்கள் அவனை வெகுவாய் சோதிக்க,ஒரு முறை தன் முன்னே தற் செயலாய் வந்தவளிடம் கத்தித் தீர்த்து விட்டான்,அவன்.

 

வழமை போல் மரத்தடியில் அமர்ந்து இருந்தான்,பையன்.அது அவர்களின் சந்திப்புக்கென எழுதி வைக்கப்பட்ட இடம் போலும்.

 

உள்ளங்கையால் முகத்தை தாங்கி அமர்ந்து இருந்தவனின் விழிகள் மூடியிருக்க,கருமணிகள் முனைக்கு முனை ஓடி இமைத்திரையை அசைத்து,அவன் சிந்தனைக்கு சான்று பகன்றன.

 

அவனே குழம்பி இருக்க,சத்யா வேறு கேள்வி கேட்டு திணறடித்து விட்டான்.அந்த கேள்விகளிள் பிண்ணனியில் இருப்பவர் தன் தாயுமானவரென்று இன்னும் பையனுக்கு புரியவில்லை.

 

“எனக்கு என்னமோ உன்னோட நடவடிக்க எல்லாம் டிஃபரன்டா இருக்கு மச்சான்..சம்திங் ராங்..அப்டி உனக்குள்ள ஏதாச்சும் சேஞ்சஸ் வந்திருக்கா..?” கண்ணடித்து கேட்ட தோழனை உறுத்து விழித்தாலும்,அவன் கேள்வியில் பையனுக்குள் திக்கென்றிருந்தது.

 

“சும்மா சும்மா நீயா ஒன்ன யோசிச்சு கொழம்பிக்காம படிக்கிற வேலய பாரு..” அசலாட்டாய் சொன்னாலும்,அதில் உண்மையில்லை.

 

சத்யா நமுட்டுச்சிரிப்புடன் அவ்விடத்தை விட்டு நகர,அவனுக்குள் அலைக்கழிப்பு.உண்மையைத் தானே கேட்டிருந்தான்,தோழனும்.

 

அந்த நேரம் பார்த்து தான் வந்தாள்,யாழவள்.அவள் மட்டும் தான் வந்தது.அவளின் நேரமாக இருக்கும்,அது.

 

சத்தியமாய் ஒன்றும் அவனைப் பார்த்திட வரவில்லை.நூலகத்துக்கு செல்ல அவ்வழியே போக,புன்னகை முகத்துடன் தன்னை சிதறடித்துச் செல்பவளைக் கண்டதும் அவனுக்கு ஏனோ கோபம்.

 

“யாழ்..” என்றான்,கடினக்குரலில்.

 

அவன் அழைப்பிலேயே அவள் அதிர,அவனின் இறுகிய முகத்தில் பயந்து விட்டாள்,நன்றாகவே.

 

“இவ ஒருத்தி கண்ண உருட்டி நம்மள பாத்தே சாகடிப்பா..” கடுகடுப்பை தாங்கிய முகத்துடன் அவளருகே அவன் வந்தாலும்,அவளின் பயத்தில் அவனுள் எழுந்திருந்த கோபவலை சற்றே அடங்கியது போல்.

 

விறைப்பாய் வெளியில் உறுத்து விழித்தவனை நெஞ்சம் முழுவதும் வியாபித்து பயத்துடன் அவள் பார்த்திட,நழுவ தவித்த இதயத்தை இறுகப் பற்றி நின்று பயமூட்டினான்,கடன்காரன்.

 

“உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா..?”

 

“என்னடா சொல்ற நீ..?” அவன் அதட்டலின் காரணம் புரியாது தலையை சொறிந்தாள்,பாவையவள்;அவனை திணறடிக்கும் பாவியவள்.

 

“இது என்ன நீ கட்டுன காலேஜா..? எப்ப பாரு வெளிய சுத்திட்டு இருக்க..? அடிக்கடி எதுக்கு வெளிய சுத்தற நீ..? அறிவில்ல க்ளாஸ்ல இருக்க மாட்ட..? ஜூனியர் தான நீ..?”

 

“என் கண்ணு முன்ன வராத தட்ஸ் இட் இடியட்..” என்று வார்த்தைகளை கோர்த்துக் கொண்டு வந்தவன் தான்.

 

அவளைக் கண்டதும் குறிப்பாய் அவள் விழிகளைக் உரசியதும்,வார்த்தைகளின் போக்கு மாறிற்று,அவனின் எண்ணப் போக்கை போலவே.

 

“ரேகிங் பீரியட் முடிஞ்சுது தாராளமா வெளிய சுத்தலாம்னு சொன்னாங்க சீனியர்..அதான் வெளிய திரிறேன்..அப்போ இன்னும் ரேகிங் நடக்குமா..?” அதையும் பேயறைந்த தோற்றத்துடன் அவனிடம் கேட்டு வைத்திட,ஐயோவென்றானது பையனுக்கு.

 

“இவ ஒருத்தி படுத்துறா..” உள்ளுக்குள் அங்கலாய்த்து நிமிர்ந்தவனின் விழிகள் கோபத்தை வெளிப்படுத்தின.

 

“அத எப்டி எனக்கு தெர்யும்..? எங்க பேட்சா உங்கள ரேக் பண்ணிச்சு..போ போய் அவனுங்க கிட்ட கேளு..” என்று எகிறவும்,விழியுருட்டி தலையாட்டி அவனை ஒரு வழி செய்து விட்டாள்,பாவி.

 

“இனிமே இப்டி திரியாத..காட் இட்..” அழுத்தமாய் சீறியவனின் விழிகள் தம்மை யாரேனும் கவனிக்கிறார்களா என ஆராயவும் மறந்திடவில்லை.

 

“முக்கியமா உன் ப்ரெண்ட கூட்டிட்டு போ எங்கனாலும்..அதுவும் என் கூட பேச வர்ரன்னா ஃப்ரெண்டோடவே வா..” அழுத்தி கூறிட,”நா எதுக்கு உங்க கூட பேச வரனும்..” என்கின்ற கேள்வி அவள் விழிகளில்.

 

“தவறி சொல்லிட்டேன்..என் கூட என்னன்னாலும் பேச வராத..” அவளின் எண்ணம் புரிந்தாற் போல் எச்சரித்திட,சரியென தலையுருட்டி விட்டு அவள் அகல தொய்ந்து அமர்ந்து விட்டான்,பையன்.

 

அவளறியாமல் அவனை ஆட்டுவிப்பதில் பையன் தளர்ந்தும் போய் விட்டான்.

 

ஏதோ இதம் பரவி,இதழ் விரிய,சட்டென மீசை நுனியை பற்களால் கடித்து,புன்னகையை விழுங்கிக் கொன்றான்,ஆர்யா.

 

●●●●●●●

 

“ஆரி..”யாழவளின்,சத்தமான அழைப்பில் அவன் கரம் ஒரு கணம் தடுமாறிட,அகமும் தேகமும் சிலிர்த்தடங்கிற்று.

 

பையனின் இதயம் வேகமெடுக்கத் துவங்கிட,அனைவரின் பார்வையும் அவள் மீதே.

 

●●●●●●●

 

(II)

 

பார்வதியின் இதழ்களில் மெல்லிய வெட்கச் சிரிப்பு.அவன் மனதில் இருந்த சஞ்சலங்கள் மெல்ல மெல்ல குறைவது போல்.

 

“என்னடி மாப்ளய வர சொல்லிட்டு வெளில நிக்க வக்கிற..? வந்து காஃபி ஒன்னு குடிச்சிட்டு போக சொல்லு..” என்று அவர் மகளைக் கடிந்து கொள்ள,அவளுக்கு தான் எங்கே அவனை அழைத்தோம் என்கின்ற யோசனை.

 

“என்னடி யோசிச்சி கிட்டு இருக்க நீ..? உள்ள கூப்டு மாப்ள எவ்ளோ நேரம் தான் வெளில நிப்பாரு..”

 

“அத்தான் உள்ள வாங்க..” என்றழைத்திடவுமே உள்ளே வந்தான்,டாக்டர்.

 

“மாப்ள காஃபி போடவா டீ போடவா..?” முகம் கொள்ளாப் புன்னகையுடன் தாயார் வினவிட,தென்றலுக்கு கோபமும் வந்தது.

 

அவரின் அழைப்பே அவள் மனதை நெருடிட,இனம் புரியா வலி மனதோரம்.தாயின் வார்த்தைக்கு உரிமமாம் அவள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருப்பது,அவளின் அவன் ஆயிற்றே.

 

“எனக்கு அவர பாத்தா எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மகனா மாறிடுவார்னு தான் தோணும்..”என்றோ, அவள் கூறிய வார்த்தைகள் மனதோரத்தை முட்டிச் செல்ல எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டாள்.

 

அவளின் முகமாற்றத்தை கவனித்த டாக்டரும்,”டீ” எனக் கூறி பார்வதியை உள்ளே அனுப்பி விட்டு அவளை ஆழம் பார்த்தான்.

 

அவன் பார்வை அவள் மீதென்பது கூட,அவளின் கருத்தில் இல்லை.சிந்தனை முழுவதும் வேறிடத்தில்.

 

“தென்றல்..”

 

“………………..”

 

“தென்றல்..என்ன யோசிச்சி கிட்டு இருக்க..? நா பேசறது கூட கேக்காத அளவு..?”

 

“ஹான் சாரி சாரி அத்தான் கவனிக்கல..” முகத்தை அழுந்தத் துடைத்தவாறு நிமிர்ந்தவளுக்கு,அவனின் பார்வையில் பயம் தான் வந்தது.

 

கண்களால் சைகை செய்து அவளை அருகே அழைத்திட,அவனருகே வந்து நின்றாள்,அவள்.

 

சோபாவைக் காட்டி,”உட்கார்” எனக் கூறப் பார்த்தவனும்,அவளின் நிலை கண்டு அதைச் செய்திடவில்லை.

 

“இங்க பாரு தென்றல்..நாம வேற ஏதோ கிறுக்குத்தனம் பண்ணி கிட்டு இருக்கோம்னு யாருக்கும் டவுட் வர்லன்னு நெனச்சிகிட்டு இருக்காத..எல்லார் கண்ணும் நம்ம மேல தான்..”

 

“உனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு நெத்தில ஒட்டி வச்சி கிட்டு திரிய வேண்டிய அவசியம் இல்ல..கொஞ்சம் நார்மலா இருக்குற மாதிரி நடி..” என்க,ஆமோதிப்பாய் தலையசைத்தாள்,அவள்.

 

“நீ கேட்டல எனக்கு அது ஓகே..” அவன் மெதுவாய் உரைத்திட,அவள் விழிகளில் ஆயிரம் மின்னல்.ஜீவனற்று ஒளியிழந்து இருந்த விழிகளில்,வந்து சேர்ந்த ஜொலிப்பு அவனுக்கு புன்னகையை பரிசளித்தன.

 

“அதே மாதிரி உன் வார்த்தயயும் நீ நெறவேத்தனும்..” கட்டளை தான்,அவனின் வார்த்தைகள்.

 

அவளின் அவன் மீதிருந்த அலாதி நம்பிக்கையது,ஆழமான புரிதலது அவளை தலையாட்ட வைத்தது.

 

●●●●●●●●

 

“இப்போ எதுக்கு தீடிர்னு ரெண்டு மூனு நாள் வெளியூர் போகனும்னு வந்து நிக்கற..? ஆஃபீஸ்ல கேட்டாங்கன்னா முடியாதுன்னு சொல்ல வேண்டியது தான..?” மகளிடம் காய்ந்து விழுந்தார்,பார்வதி.

 

திருமணத்துக்கு குறுகிய காலமே இருக்கையில்,மகள் வெளியூருக்குச் செல்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை.

 

“அத்த அவ மட்டுமா போறா..? நீங்க தான் தனியா அனுப்ப முடியாதுன்னு சொல்றீங்க..நானும் போறேன் தான..”

 

“மாப்ள கல்யாணத்துக்கு முன்னாடி எப்டி மாப்ள உங்க ரெண்டு பேரயும் அனுப்புறது..?”

 

“அகலும் எங்க கூட வர்ரேன்னு சொன்னால்ல..அதுவும் இல்லாம தென்றலோட ஃப்ரெண்ட ஸ்ரீயும் வர்ரா..அப்றம் என்னத்த..? அப்டி இன்னும் ஆள் வேணும்னா சொல்லுங்க..வாசுவயும் நா வர சொல்றேன்..”

 

அகல்வாயுக்கு டாக்டர் கூறிய பாவனையில் அப்படியொரு சிரிப்பு.சிரித்தால் அவன் திட்டுவான் என அடக்கிக் கொள்ள,பார்வையை தன் மகனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருந்த தென்றலின் மீது படிந்தது.

 

குழந்தையை அணைத்தவாறு நின்றிருந்த தென்றலுக்கும்,அனைவரையும் அவன் சமாளிக்க படும் பாட்டை பார்க்கையில் பாவமாகத் தான் இருந்தது.

 

காதல் தேடும்.

 

2025.04.19

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. தென்றலோட காதலனை பார்க்க போறாங்க … ஆரியோட காதல் அவஸ்தை அதிகமாகிட்டே போகுது போல