
*காதலொன்று கண்டேன்!*
*தேடல் 14*
*(I)*
வெறுமனே அவளைக் கடந்து விட்டவனுக்கு,தெரிய வாய்ப்பில்லையே,அவன் தேடுவது அவளை என்று.
அன்று விரிவுரை முடிவடைந்த பின்னர்,தோழர்களுடன் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்தான்,பையன்.
நெற்றியில் கருநிற பேன்ட் அணிந்து,ஆர்ம் கட்டு டீஷர்ட் முக்கால் பேன்ட் சகிதம் பந்தை சுழற்றிக் கொண்டு திரிந்தவனின் மீது யாரின் பார்வை என்றாலும் ஒரு கணம் படிந்து மீளும்.
அதிதியோ,அவனை தூரத்தே நின்று இரசித்துக் கொண்டிருக்க,அது புரிந்தவனுக்கு கோபம் ஏறி நின்றாலும்,கண்டு கொள்ளாதது போல் விளையாட்டிலேயே கவனமாக இருந்தான்.
அதிதியை சந்தித்திட,மைதானதுக்கு வந்த பாவையவளுக்கு காற்பந்துடன் பையனைக் கண்டதும் நெஞ்சம் வெடிக்க,அவளை மீறி ஒற்றைக் கரம் எழுந்து கன்னத்தை பிடித்துக் கொண்டிட,தெறித்து விரிந்தன,விழிகள்.
“நேரங்கெட்ட நேரத்துல வந்துட்டோம் போல..” முணுமுணுத்தவளுக்கு அதிதியின் பார்வை பையனை விட்டு அகலாததில் அப்படியொரு சிரிப்பு.
“இவங்க டார்லிங்ல..” நினைத்தவாறு அதிதியுடன் கதைத்து விட்டு நகர,வந்ததில் இருந்து அவளை கவனித்திருந்தான்,ஆர்யா.
விழிகள் தெறித்திட,அதிர்வில் கன்னத்தில் கை வைத்தது முதற் கொண்டு அனைத்தையும் ஊன்றிக் கண்காணித்திருந்தவனுக்கு,தான் கொடுத்த உதையின் விளைவுகள் என்று புரிய சிறு குற்றவுணர்வும்.
அப்பொழுதெல்லாம்,அவள் மீது கோபம் அடங்காது இருக்க,அது தவறாகத் தோன்றாவிடினும் இப்பொழுது மனதில் கொஞ்சம் நெருடல்.மன்னிப்புக் கேட்டிட வேண்டும் என்று குறித்து வைத்தான்,மனதில்.
அத்துடன் அவள் விளையாட்டில் ஈடுபட,தற்செயலாய் அவன் பந்தை உதைந்திட,அவளுக்கு அண்மையாய் கடந்து சென்றது,பந்து.
நெஞ்சே நின்று விட்டது,யாழவளுக்கு.”ஐயோ சாமி..இவருக்கு நம்ம மேல பர்சனல் வென்ஜன்ஸ் இருக்கு போல..” கதறியவாறு அவ்விடத்தில் இருந்து ஓடி விட,மன்னிப்பு வேண்ட வந்தவனின் இடது புருவம் அவளின் ஓட்டத்தைக் கண்டதும் ஏறி இறங்கிற்று.
சத்யாவிடம் தனது தவறான புரிதலைப் பற்றி பையன் தெரிவித்திருக்க,சத்யாவுக்கு கொஞ்சம் கோபம் தான்.”அவசரப்படாதன்னு சொன்னா நீ கேக்க மாட்டியே..” கடிந்து கொள்ளவும் செய்தான்.
“சரிடா அப்போ யாருடா அடுத்த யாழ்..? எந்த பொண்ணு அது..?” யோசனையுடன் வினவியவனுக்கு பொய்யான காரணமொன்றை உரைத்து சமாளித்திருந்தான்,சிறிதும் சந்தேகம் வராமல்.
தோழனுக்கு தங்கையின் எண்ணமே வரவில்லை.அண்ணன்காரனுக்கு அவள் மீது அளப்பரிய நம்பிக்கை கிடக்கவே,தோழன் பற்றி அறிந்தவன் என்பதால் பையனும் அதைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை.அவன் அறிந்தது அவனுடன் இருக்கட்டும் என்று நினைத்தான்.
“எனக்கும் அந்த பொண்ண பாத்தா உன்ன லவ் பண்ற மாதிரி தோணவே இல்லடா..அது உன்ன பயத்தோட தான் பாத்து வக்கும்..அதுவும் இல்லாம அதெல்லாம் லவ் பண்றதுக்கு சரியான ஆளு எல்லாம் இல்ல..மொகத்த பாத்தாலே தெரிது அதெல்லாம்..” தோழன் அவளுக்கு வக்காலத்து வாங்கிட,சின்னச் சிரிப்பு பையனின் இதழ்களில்.
மறுநாள்,
ஸ்டடி ஹாலில் படித்துக் கொண்டிருந்தவளுக்கு உறக்கம் கண்ணை சுழற்றிட,கொட்டாவி விட்ட படி எழுந்தவளின் பார்வை வீச்சில் பையன் விழ,நெஞ்சத்தை பயம் சூழந்து கொண்டது.
அவன் திட்டியது வேறு மண்டையைக் குடைந்திட அவன் கண்ணில் படாமல் அங்கிருந்த நகரப் பார்த்திட,அவளின் அசைவுகளை பையன் கவனித்துக் கொண்டிருப்பதை உணரவில்லை,அவள்.
புத்தகக் கட்டை நெஞ்சோடு அணைத்துப் பிடித்தவாறு ஓட்டமும் நடையுமாய் வெளியே வந்தவளோ,விடுவிடுவென சிற்றுண்டிச் சாலையை நோக்கி நடக்கத் துவங்கிட,பின்னிருந்து கேட்ட “யாழ்” என்ற அழைப்பில் திரும்பியவளின், நெஞ்சில் அணுகுண்டே வெடித்து விட்டது.
எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே விழி நிமிர்த்திட,விழிகளில் அப்பட்டமான பயம்.அவள் மிரண்ட தோற்றம் கண்டு அவனில் புன்னகை எழப்பார்த்தாலும்,இதழ்கள் மென்று விழுங்கிட,வளர்ந்த குழந்தையாய்த் தான் தெரிந்தாள்,அவன் விழிகளுக்கு.
சுற்றும் முற்றும் பார்த்திட,பாதை என்பதால் ஓரிரு நபர்கள் கடந்து சென்றனர்.அவ்விடத்தில் வைத்து அவனுடன் தனியாக பேசுவது அவளுக்கு சங்கத்தை விழிகளில் படம் விரித்து நின்ற உணர்வது அவனுக்கும் புரிய,தலையில் அடித்துக் கொள்ளாத குறை தான்.
“ஸ்கூல்னு நெனப்பு..” என்கின்ற முணுமுணுப்புடன் அவள் முன்னே வந்து நின்றான்,பையன்.
“யாழ் தான உன் பேர்..” என்று அவன் சந்தேகம் கேட்க,ஆமோதிப்பாய் மேலும் கீழும் தலையசைத்தவளின் விழிகள் சுற்றத்தை அலசி அலைபாய,”என்ன விட்டு விடேன்” என்கின்ற தவிப்புடன் அவன் விழிகளை சந்தித்தது.
“இது காலேஜ் பாய்ஸ் கேர்ள்ஸ் பேசறது நார்மல்..யாரும் தப்பா நெனக்க மாட்டாங்க..” அழுத்தித் தான் சொன்னான்.அவனுமே,இந்த விடயத்தை பற்றி யோசிப்பவன் என்றாலும் அவளில் அளவுக்கு மீறிய பயமும் பதட்டமும்.
எதிர்பாரா விதமாய் இப்படியொரு சந்தர்ப்பத்தை எதிர் கொள்ள வேண்டி ஏற்படின் எப்படி சமாளிப்பளோ என்கின்ற ஆயாசமும் எட்டிப் பார்த்தது.
“சாரி!” உணர்வு புலப்படா வெற்றுப் பாவம் சூழ் விழிகளுடன் அவன் கூறிட,அவள் விழிகள் பேராழியென விரிந்து கொண்டன.
“எதுக்கு சொல்லுது..? பாட்டில ஒடச்சதுக்கா..? இல்ல நா அந்த யாழ் இல்லன்னு உண்ம தெரிஞ்சதுக்கா..? ஃபுட்பாலால மூஞ்ச பேத்ததுக்கா..? அன்னிக்கி திட்டிட்டு போனதுக்கா..?” விழிகள் விரிந்திருக்க,சிந்தனையும் தன்பாட்டில் சிறகடிக்க,கண்ணாடி முகத்தில் அது அப்படியே தெரிந்தது.
பயந்து மிரண்டு,பின்னர் அதிர்ந்து,கருமணிகள் விழிகளில் ஒரு முறை சுழன்று வந்து மையத்தில் நிற்க கொஞ்சம் திகைத்து,எதற்கிந்த மன்னிப்பு என்று தெரியாமல் குழம்பி,காரணம் தேடிப் போய் தோற்று விழிகளை நிமிர்த்தினாள்.
இத்தனை நேரம் பதிலேதும் சொல்லாமல் இருந்து விட்டோமோ என்ற நினைப்பில் நொந்து,அவன் பார்வையில் பதறிப் போய் திகைத்து எச்சில் கூட்டி விழுங்கிட,அச்சொட்டாய் அவ்வசைவுகள் உயிருக்குள் உள்ளிறங்கிட,”தான் தேடுவது இவளாக இருந்திட வேண்டும்” என்கின்ற நொடி நேர எண்ணம் அவனுக்குள்.எண்ணமோ,ஏக்கமோ அவனுக்குத் தான் தெரியும்.
எண்ணமதின் மின் வெட்டில்,இதயத்தத் துடிப்பின் ஓசை இடியாய் மாறிட,சட்டென தலையை உலுக்கி தன்னிலை மீண்டவனின் சுவாசம் ஆழம் கேட்டது.
சில நொடிகள் கழித்தே, அவன் இயல்பாகிய பின்னரும்,பேயறைந்த தோற்றத்தில் இன்னும் அவள்.
அந்த பாவனைகளில் வந்த சிரிப்பை தாடிப் புதருக்குள் மறைத்துக் கொண்டான்,பையன்.
அதுவும் அத்தனையையும் அவள் முகம் கண்ணாடியாய் பிரதிபலிப்பது அவனுக்கு புதுமையும் தான்.
“எல்லாத்துக்கும்” அவள் மேலும் கேள்வி கேட்காமலே,பையன் மறுமொழி வரைந்திட,”கண்ணாடி மொகர” தன்னைத் தானே திட்டிக் கொண்டு,தன்னை மீறி அவள் விழிகளை இறுகப் பொத்தி முகம் சுருக்கிட,பையனின் இதழோரம் மெல்லிய புன்னகை.
அவள் விழி திறக்கும் முன் அதை பதுக்கிக் கொண்டான்.
விழி திறந்தவளுக்கு அவன் முகத்தை கொண்டு எந்த முடிவுக்கும் வரவில்லை.எப்போதும் போல் இறுக்கமாகவே அது இருக்க,பயம் அகன்றபாடில்லை.
என்ன பதில் சொல்வதென்று புரியாமல் அவனையே பார்த்து வைத்திட,அடர் மீசை நுனியை கீழ்ப்பற்களால் கடித்து, சிரிப்பை அடக்கிய பையன் இதுவரை இப்படி ஒருவரின் முகபாவத்துக்கு எல்லாம் இதழ் விரித்ததாய் சரித்திரமே இல்லை.
“சாரி சொன்னேன்..” என்றான்,மீண்டும் அழுத்தி.
“நா நா..அதெல்லாம் மறந்துட்டேன் சீனியர்..”திக்கித் திணறி உரைத்தவளுக்கு,அவன் விட்டு விட்டால் போதும் என்கின்ற எண்ணம் மட்டுமே.
“சீனியர்” அவளின் குரலோசை அவன் செவிமோதி,உயிர் உரசிட,பாதாதிகேசம் வரை சிலிர்ப்பிழைகள் ஒட்டிக் கொள்ள,அவன் இயல்புகள் கொஞ்சமாய் இடறின.
“எ..என்ன சொன்ன இப்போ..?” கேட்டவனின் ஆழ் மனம் போட்ட கூப்பாடை அவன் உணரவில்லை.
“எல்லாம் மறந்துட்டேன்னு சொன்னேன்..” இழுத்தவளுக்கு எதுவும் புரியவில்லை.
“ப்ச்ச்ச்..அதக் கேக்கல..நீ என்ன என்னன்னு பேசுன..?” இன்னுமே,மிச்சமிருந்த சிலிர்ப்புடன் மொழிந்தான்,பையன்.
“சீனியர்னு சொன்னேன் சீனியர்..” பம்மியவளின் வார்த்தைகளில் அவன் அறியாமல் உள்ளுக்குள் சிலிர்த்திட,தன் மனதின் எண்ணம் கண்டு உறைந்தான்,அவன்.
“இடியட் ஆரி..” தன்னைத் தானே,திட்டியும் கொண்டாலும்,மனம் கேட்கவே விழைந்தது.
“நீ அன்னிக்கி..” கேட்க வந்தவனுக்கும் ஏதோ தோன்ற,அமைதியாகி விட்டான்.இயல்பான திமிர் வார்த்தைகளை அடக்கி விட்டது போலும்.
“இவ்ளோ பயந்தவ நம்மள காப்பாத்தி எல்லாம் இருக்க மாட்டா..” மழுப்பலான காரணம் வேறு,சிந்தையில்.
அவளோ,அகன்ற விழிகளுடன் அவனை பார்த்திருக்க,
தன் மீதான அவளின் பயத்தை உணர்ந்தவனின் உள்ளுக்குள் என்னென்னவோ,ஆனது.
அவனுக்கும் அதற்கு மேல் பேச ஒன்றும் இருக்கவில்லை.கேட்க வந்ததை கேட்கவும் முடியவில்லை.
போ என்பதாய் விழியசைத்திட,பெரூமுச்சுடன் அகன்றவளின் நடையில் அத்தனை வேகம்.
●●●●●●●●
“அப்பு சாப்பாடு எடுத்துட்டு வாடா..பசிக்குது..” கூடத்தில் இருந்து வேல் முருகன் குரல் கொடுத்திட,இங்கிருந்த கத்தினான்,பையன்.
“இருப்பா வர்ரேன்..ரெண்டு நிமிஷம் இரு..” சொன்னது போல் அடுத்த இரண்டு நிமிடத்தில் தோசைத் தட்டுடன் வந்து,அவருக்கு ஊட்டி விட மறுக்காமல் வாங்கியவரோ,உடல் அசதியில் சோபாவில் சரிந்து இருந்தார்.
இன்று அளவுக்கு அதிகமாகவே வேலை பார்த்ததன் விளைவு.கல்வி மறுக்கப்பட்டதன் விளைவு பையனுக்கும் வந்திடக் கூடாது என்று தான்,அவனை சிரமம் பாராமல் உழைத்து அவனை படிக்க வைப்பதும்.
“அப்பா!”
“என்னடா..?”
“பேசாம உன் வேலய விட்ரு பா..” கிட்டத்தட்ட கெஞ்சினான்,மகன்.இதற்கு முன்பே,பலமுறை கெஞ்சியதும் உண்டு.மனிதர் தான் வழிக்கு வருவதில்லை.
“இல்லடா..”
“என்ன இல்லடா நொல்லடா..? பேசாம விட்ருப்பா..சேத்து வச்ச காச வச்சு ஏதாச்சும் கடயாச்சும் வச்சு பொழப்ப நடத்தாலும் இன்னும் ஏழெட்டு மாசத்துல எனக்கு காலேஜ் முடிஞ்சிரும்..அப்றம் நா வேலக்கி போய்ரலாம்..”
“எனக்கு அந்த மேல புடிச்சி இருக்கு அப்பு..”
“அப்பா புடிச்சி இருக்குன்னா இவ்ளோ கஷ்டப்பட்டு வேல பாக்கனுமா..?லூஸாப்பா உனக்கு..? இப்போ நீ வேலய விடப் போறியா இல்லியா..?”
“டேய் ஏன்டா..?” அவர் இறங்கி வர,பையன் கோபம் காட்டினான்.உடல் வருத்தி வேலை செய்து அவர் சிரமப்படுவதில் அவனுக்கு கொஞ்சமும் பிடித்தம் இல்லையே.
அவன் அவரிடம் பேசுவதை தவிர்த்திட,தாயுமானவருக்கு இரண்டும் கெட்டான் நிலை.
மறுநாள்,
அவ்வளவு சொல்லியும் கேளாமல்,தான் எழுந்து கொள்ள முன் வேலைக்கு கிளம்பி இருக்கும் தாயுமானவரை நினைத்து கடுப்பு கிளம்ப,அதை ஒதுக்கி வைத்து விட்டு குளித்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினான்,பையன்.
மனதோரம் சின்னதாய் ஒரு இதம்.அடி நெஞ்சில் அவனை மீறிய சிறு எதிர்ப்பார்ப்பு.அவன் இயல்பில் துளியளவு மாற்றம்.
தனக்குள் உருப்பெற்று இருக்கும் மெல்லிய மாற்றம் புரிந்தாலும்,அதை ஏற்றுக் கொள்ளவில்லை,அவன்.ஏதேதோ காரணங்கள் கூறி தன்னையே மழுப்பி தேற்றிக் கொண்டான்.
வழமை போல மரத்தடியில் அமர்ந்து இருந்திட,இதயத்தில் கீற்றளவு படபடப்பு ஒட்டியிருக்க,அதை வெளிப்படுத்தாது அவனிருந்தாலும்,அவனால் உணராமல் இருந்திட முடியாதே;அப்படியிருக்க உணர்வலைகள் உறைந்திடாதே.
அவள் யாரெனக் கண்டறிய,அவனுக்குள் துளிர்த்திருக்கும் தேடலின் பிண்ணனியை அறியவில்லை;தன்னுணர்வலையின் முன்னனியும் புரியவில்லை.
“இன்னிக்கி தான டாக்டர் வர்ராரு..?” கேட்டவாறு வந்தமர்ந்த தோழனின் பார்வை குறுகுறுப்புடன் பையனைத் தழுவினாலும்,அவன் முகத்தில் எப்போதும் அதே அழுத்தம் தான்.
“ம்ம்..”
“அப்போ இன்னிக்கி அந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சுரும் இல்ல..?”
“ம்ம்..”
“ஹாஸ்பிடல் சீசிடீவிய தான் செக் பண்ண முடியாது..உனக்கு ஆக்சிடன்ட் ஆன எடத்துக்கு முன்னாடி இருக்குற கடையோட சிசீடிவிய செக் பண்ணி பாத்துருக்கலாம்ல..”
“அன்னிக்கின்னு பாத்து அங்க சிசீடிவி வர்ட் பண்ணல..”
“அப்போ நீ போய் கேட்டியா அங்க..?”
“ம்ம்..”
“ரொம்ப ஆர்வமா இருக்க போல..” குறும்பு கொப்பளித்த அவன் வார்த்தைகளில் திரும்பி பார்வையால் எரித்தான்,தோழனை.
“சும்மா சொன்னேன்டா..” என்றவனுக்கு பையனின் செயலாக்கங்கள் சந்தேகத்தை தந்தாலும்,போட்டுக் குழப்பவும் செய்தது.
மூன்றரை மணி நேரக் கருத்தரங்கு.முதலாம் வருட மாணவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டி கட்டளையிடப்பட்டிருக்க,மற்றைய வருடத்தில் பயில்பவர்கள் விரும்பினால் கலந்து கொள்ள முடியும்.
பையனுக்கு இப்படி நிகழ்வுகளுக்கு வர பிடித்தம் இல்லை தான்,அறவே.இன்று வந்தாக வேண்டும்.வந்து இறுதி வரிசையில் உட்கார்ந்து இருந்தவனுக்கு முன் வரியில் அமர்ந்து இருந்தாள்,யாழவள்.
அவள் அவன் பார்வையில் விழ,”இவளுக்கு அடிக்கடி நம்ம முன்னாடி வர்ரதே வேலயா போச்சு..” என நினைத்துக் கொண்டான்,மனதுக்குள்.
இரவு வெகுநேரம் கழித்து உறங்கியதால்,உச்ச கட்ட தூக்கம் பாவையவளுக்கு.விழிகள் சிவந்திருக்க,அடிக்கடி தூங்கி வழிந்தவளை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள்,மித்ரா.
அவளும் கண்ணைக் கசக்கி விட்டு விழித்திருக்க முயன்றாலும் சிரமமாய் இருக்க,அடிக்கடி கொட்டாவி வேறு.
ஓரிரு முறை பையனின் பார்வை அவளைத் தீண்டி மீண்டிட,அதன் பின் அவனின் கவனம் முழுவதும் மருத்துவரின் உரையில் இருந்தது.
நிகழ்வு முடிவடைய அனைவரையும் கலைந்து செல்ல,பையனுக்கோ மருத்துவரை எப்படி அணுக என்கின்ற தயக்கம்.அணுகினாலும்,அவரிடம் எப்படிக் கேட்பது என்பது அதை விட பெரும் கேள்விக்குறியாய்.
அவரிடம் உடைத்துக் கேட்கவும் அவனின் மனம் வழி விடாது என்பதும் மறுக்க முடியாத உண்மை ஆயிற்றே.கல்லூரி பேராசியர்கள் உட்பட நிர்வாகக் குழுவினர் மருத்துவரை சூழ்ந்து நின்று பேசிக் கொண்டிருக்க,அவ்விடம் செல்வதும் உவப்பாய் தோன்றவில்லை,பையனுக்கு.
ஒரு மாதிரி தவித்துப் போனான்.அவன் தேடலுக்கு பதில் கிடைத்திடக் கூடும் என்கின்ற நம்பிக்கை கரைந்து போயிருக்க,மெதுவாய் வெளியேறியவனின் உள்ளத்தில் தளர்வு.
நிகழ்வு நடந்த அரங்கத்தின் முன்னே,சக தோழர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் வெளியே வந்த மருத்துவரின் பார்வை அவனை இரகசிய சிரிப்புடன் தொட்டது.
அவரோ,அவனொருத்தன் இருப்பதை பொருட்படுத்தாதவர் போல் அகல,அவரின் முதுகை வெறித்தது,பையனின் பார்வை.
●●●●●●●●
(II)
உச்ச சினத்துடன் காரமாய் டாக்டர் சீறிட,இதுவரை கண்டில்லா அவனின் கோபத்தில் அவள் பயந்து போனாள்,விழிகள் விரிய.அவளின் முகபாவத்தில் அவனின் கோபம் வெடித்துச் சிதற,நா அவனின் கட்டுப்பாட்டில் இல்லை.
“உண்மயத் தான் கேக்கறேன்..வீட்டால சம்மதம் வாங்க முடியலன்னா என்ன ***** நீங்கெல்லாம் லவ் பண்றீங்க..? பொத்திகிட்டு இருக்க வேண்டியது தான..? எதுக்கு இந்த லவ் எல்லாம்..?”
“இவங்களா வருவாங்களாம்..இவங்களா சிரிப்பாங்களாம்..இவங்களா சும்மா செவனேன்னு இருக்குற பையன் மனச கலப்பாங்களாம்..ப்ரெண்டா பழகுவாங்களாம்..அவன் லவ் சொன்னா ஃபன்னுக்கு அலய விடுவாங்களாம்..”
“அப்றம் லவ்வ ஒத்துகிட்டு அவன் மனசுல ஆசய வளத்து விட்டு அவ தான் அவனுக்குன்னு எல்லாமுங்குற நெலமக்கி வந்தப்றம்..அப்பாவுக்கு பிடிக்கல..அண்ணனுக்கு சம்மதம் இல்ல..நமக்கு செட் ஆகாது..வீட்ல சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு இவங்களே ப்ரேக் அப் பண்ணுவாங்களாம்..”
“லவ் பண்ணும் போது வீட்ல சம்மதிக்க மாட்டாங்கன்னு தெரியாதா என்ன..? இல்ல லவ் பண்றப்போ மட்டும் எல்லாம் கண்ண மறச்சிருமா..?”
“ஹான்..உன்னத் தான் கேக்கறேன்..அவன் கூட சேர முடியாதுன்னு தெரிஞ்சா என்ன கிழிக்கிறதுக்கு அவன லவ் பண்ணனும்..? அவன் மனச மாத்தனும்..? நீங்கெல்லாம் அது செட் ஆகாது இது செட் ஆகாதுன்னு விட்டுட்டு போனா அவன் மட்டும் லைஃப் லாங் உங்கள நெனச்சிகிட்டு சுத்தனும் அதான..?”
“ஒருத்தன் மனச ஒடக்கிறது அவ்ளோ ஈசியான விஷயமா போச்சா உங்களுக்கு எல்லாம்..சரி உன் விஷயத்துக்கு வர்லாம்..நீ எதுக்கு பேய் புடிச்ச மாதிரி வந்து என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொன்ன..? அந்த டைம் மட்டும் நடுமண்டைல சாத்தான் எறங்கிருச்சா..?இல்லல சும்மா மனுஷனா தான இருந்த..சரி சம்மதம் சொன்ன அத விட்ரலாம்..”
“இப்போ எதுக்கு வந்து என் கிட்ட முடியாதுன்னு சொல்ற..? மாத்திப் மாத்திப் பேசி பைத்தியமா புடிச்சி இருக்கு உங்களுக்கெல்லாம்..ஒரு முடிவு எடுத்தா அதுல நெலச்சு நிக்கத் தெரியாதா..?ஹான் உன்னத் தான் கேக்கறேன்..” அவன் மேசையில் தட்ட அவளுக்கு பயத்தில் கண்கள் எல்லாம் கலங்கி விட்டன.
“கேள்வி கேட்டா பதில் சொல்லு தென்றல்..உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா..?”
“………………….”
“என்னத் தேடி வந்து சம்மதம் இல்லன்னு தான வாய் கிழியப் பேசுன..?இப்போ என்ன வாய் புட்டுகிச்சா..? உன்ன தான் கேக்கறேன் உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா..?”
அவன் அதட்டிய அதட்டலில்,கலங்கிய விழிகளுடன் மறுப்பாய் தலையசைத்தவளுக்கு பயத்தில் தொண்டைக்குழியை தாண்டி வார்த்தைகள் வரவில்லை.
“இஷ்டம் இல்லல..அப்றம் எதுக்கு சம்மதம் சொன்ன..?” அவன் எகிறிட,விழி பிதுங்கி பேய் முழி முழித்தாள்,அவள்.
அவள் காரணத்தை எடுத்துரைத்தும் மறுபடி அவன் கேட்டால் அவளும் எதைச் சொல்வதாம்..?
“ஸோ இப்போ நா போய் கல்யாணத்துக்கு சம்மதம் இல்லன்னு உங்க வீட்டாளுங்க கிட்ட சொல்லனும்..எங்க வீட்டாளுங்களயும் சமாளிக்கனும்..அப்டி தான..?”
“………………….”
“உன்னத் தான் கேக்கறேன்..பதில் சொல்லாம முழிச்சு முழிச்சு என் மொகரய பாத்து கிட்டு இருந்தா என்ன அர்த்தம்..?”
அவளுக்கு என்னசெய்வதென்று புரியவில்லை.மேலும் கீழும் அப்படித் தான் என்பது போல் சிரசசைத்திட,அதற்கும் கோபம் வந்து தொலைத்தது,டாக்டருக்கு.
“வாய்ல என்ன கொழுக்கட்டயா வச்சிருக்க..? வாயத் தொறந்து பேச முடியாதா உன்னால..?ஊமயா பொறந்தியா..?இல்ல என்ன பாக்க வந்ததுக்கு அப்றம் ஊமயாகிட்டியா..?” அதற்கும் எறிந்து விழ,அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஆமா..”
“வீட்டாளுங்க முன்னாடி வாய் கிழிய சம்மதம் சொல்லிட்டு இங்க என் கிட்ட வந்து அழுது நடி..இடியட்..போய்த்தொல நா பேசி இந்த கல்யாணத்த நிப்பாட்றேன்..நீயே வந்து கெஞ்சுனாலும் இந்த ஜென்மத்துல உன்ன கட்டிக்க மாட்டேன்..போ..”
அன்று அவளிடம் காட்ட முடியா கோபங்கள் எல்லாம் இவளிடம் வெடிக்க,கலங்கிய கண்களை சிமிட்டியவாறு கிளம்பினாள்,அவள்.
டாக்டரின் திட்டுக்களில் மனம் வெறுத்தாலும்,அவன் ஒப்புக் கொண்டதே அவளுக்கு போதுமாகவிருக்க,நிம்மதியாய் கிளம்பி வந்தவளுக்கு உற்சாகத்துடன் வீட்டினர் நடமாடிக் கொண்டிருந்தது,குற்றவுணர்வை தராமல் இல்லை.
அன்றிரவு மகளை அழைத்தார்,மருதநாயகம்.
“தென்றல் உனக்கு கல்யாணத்துல சம்மதம் தான..?” அவர் கேட்டிட,டாக்டர் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் சரியென்று தலையசைத்தாள்,தென்றல்.
“சரி அப்போ அடுத்த மாசம் கல்யாணம்..” என்க,அதிர்ந்தாலும் டாக்டரின் மீதிருந்த நம்பிக்கை நிதானிக்க வைத்தது.
“இவ்ளோ அவசரமா ஏன் பா..? மாமா வீட்ல என்ன சொன்னாங்க..”
“மச்சானும் இதே கேள்விய தான் கேட்டாரு..சித்து தான் அடுத்த மாசமே கல்யாணத்த வச்சிக்கனும்னு ஒத்தக்கலால்ல நிக்கறானாம்..” என்று அவள் தலையில் இடியை இறக்க,உறைந்து போனாள்,அவள்.
காதல் தேடும்.
2025.04.16
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


டாக்டர் சித்து அடுத்த மாசம் கல்யாணமா ?? என்ன இது ?? தென்றலுக்கு ஷாக் குடுக்குறீங்க …
யாழ் யாருன்னு ஆர்யாவுக்கு தெரியறதுக்குள்ள நமக்கு மூச்சு வாங்குது