
காதலொன்று கண்டேன்!
தேடல் 13
(I)
முகம் கொள்ளா நிறைவுடன் ஆர்ப்பாட்டமான சிரிப்பு,மருத்துவரிடம் இருந்து.
அவருக்கு ஏனோ பையனை பார்த்தும் பிடித்துப் போயிருந்தது,காரணமின்றியே.அதனால் அவனுடன் இயல்பாகவே பழகினார்.அதுவும் அவரின் தோழன் தான்,பையனின் தாயுமானவர்.
இருவரும் பள்ளிக்காலத் தோழர்கள்.சிறு வயதில் இருந்த நட்பு,சிவபிரசாத் வேறு ஊர் சென்றதும் தடைப்பட்டிருக்க,மீண்டும் அவர்கள் சந்தித்துக் கொண்டது,சமீபமாகத் தான்.
அதுவும் வேல்முருகனுக்கும் பையனுக்குமான உறவு என்னவென்று மருத்துவருக்கு தெரிய வந்ததே,அவனுக்கு விபத்து நேர்ந்ததன் பின்னர் தான்.
அதன் பின்னரே,இருவருக்கும் சாவகாசமாய் பேசிக் கொள்ளும் வாய்ப்பு அமைந்திட,பையனைப் பற்றி ஒன்று விடாமல் கூறியிருந்தார்,வேல்முருகன்.அதை கணக்கில் வைத்துக் கொண்டு தான்,பையனை அன்று வேண்டுமென்று மருத்துவர் சீண்டியதும்.
பையனுக்கு இன்னும் தெரியாது,மருத்துவருக்கும் அவனின் தாயுமானவருக்கும் இடையில் நல்ல நட்பு இருப்பது.வேல்முருகனுக்கு நிறைய தோழர்கள் இருந்திடவே,அன்று அவர் கூறுகையில் யாரோ என நினைத்தவனுக்கு தெரியாது,மருத்துவர் அவரின் தோழன் என்பது.
“வாங்க ஆர்யா..வாங்க தம்பி..” என்று இருவரையும் வரவேற்றிட பையனுக்கு தயக்கமும் கூட.அவரின் வேலை நேரத்தில் தொந்தரவு செய்து விட்டோமோ என்கின்ற சங்கடம் அவன் மனதில் எழ,மறைத்திடாமல் அதை கேட்டும் விட்டான்.
“நோ..நோ எனக்கு நேத்து நைட் டியூட்டி..இப்போ வீட்டுக்கு கெளம்பற டைம் தான்..” அவர் கூறிடவும் தான்,அவனுக்கு மனம் தெளிந்தது.
“அப்போ நீங்க பேஷண்டா என்ன மீட் பண்ண வர்ல..? ஃபைன் வாங்களேன் போய் கேன்டீன்ல ஏதாச்சும் சாப்டுகிட்டே பேசலாம்..” என்றவாறு முன்னே நடந்திட,”இவரு நெஜமாலுமே டாக்டர் தானா..?” என்கின்ற கேள்வியுடன் பின்னே வந்தான் சத்யா,பையனுடன்.
மருத்துவரோ,காஃபியை ஓரமாய் வைத்து விட்டு,வடையை சாப்பிட,இருவருக்கும் புதுமை தான்.
“பொதுவா டாக்டர்ஸ் தான் இப்டி எண்ண சாப்பாடு எல்லாம் சாப்ட மாட்டாங்க தான..?” ஆர்வத்தில் தோழன் உளற,மிதமான புன்னகை அவரின் இதழ்களில்.
“நாங்களும் மனுஷன் தான..அடிக்கடி இல்ல..அப்பப்போ சாப்பட்றது..ஓவரா யோசிச்சோம்னா தான் அந்த இந்த வியாதி எல்லாம் வரும்..எல்லாம் டேக் இட் ஈஸியா இருக்கனும்..” என்றவாறு,இன்னொரு வடையையும் உள்ளே தள்ளினார்.
“சரி சொல்லுங்க ஆர்யா என்ன விஷயமா என்ன மீட் பண்ண வந்தீங்க..?” காபியை சுவைத்தவாறு வினவிட,இங்கு பையனுக்கோ தடுமாற்றம்.என்னவென்று தான் அவனும் கேட்பதாம்..?
பாதி காலியாகியிருந்த காஃபி டம்ளரின் மேல் விளிம்பை பெருவிரல் அழுத்தமாக தடவிக் கொடுத்திட,மறுகரத்தின் விரல்களோ தானாய் கழுத்தை வருடிக் கொடுத்தது,வழமைக்கு மாற்றமின்றி சிரசு இலேசாக சரிந்து இருக்கவே.
விழிகளோ,அவரைப் பார்த்து விட்டு மீண்டும் தாழ்ந்து போக,சட்டென வார்த்தைகள் வராமல் தொண்டைக்குழியில் இடைநிறுத்தம் செய்திட ,எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே மீண்டும் விழிகளை நிமிர்த்தினான்,பையன்.
“எனக்கு..” என்றதும்,அடுத்த வார்த்தைகளை இதழ்கள் உதிர்த்திடாமல் அழுத்தமாய் ஒட்டிக் கொள்ள,தோழனின் புருவங்கள் இடுங்கின.
“காலேஜ் மீட்டிங்ல எல்லாம் அரசியல் கட்சி ஆளுங்க மாதிரி பேசுவான்..இன்னிக்கி என்னான்னா பேச்சு தெணறுது..” தோழனின் எண்ணம் இதுவே.
“என்ன ஆர்யா..?” விழிகளில் எதுவும் தெரியாவிடினும்,அவனில் ஏதோ மாற்றம் தென்பட்டது,மருத்துவருக்கு.
“வாட் ஹேப்பன்ட்..?” சின்னப் புன்னகையுடன் மறுபடியும் கேட்டார்,அவர்.
“எனக்கு அந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சிக்கனும் டாக்டர்..” தவிப்பு மோலோங்கி,உணர்வலைகள் அடித்துக் கிளம்பி,குரல் ஒன்றும் குழைந்து தழைந்நு தளர்ந்து எல்லாம் வரவில்லை.
இயல்புடன் கூடிய,அதே அழுத்தமான தொனியென்றாலும்,அதை எடுத்தியம்பியவன் சத்தியமாய் இயல்பாக இல்லை.உதிர்த்துத் தொலைத்திட முன் ஏதோ ஒரு தடுமாற்றம் இழையோடியது என்றால்,அதன் பின்னர் ஏதோ தவிப்பு அவனை மெதுவாய் சூழ்ந்து கொண்டது.
மனதின் நினைவதை இதழை வழித்தடமாக்கி கொட்டி விட்டாலும்,அவனால் சட்டென்று மருத்துவரை ஏறிட்டுப் பார்த்திடவும் முடியவில்லை.அவனுக்கே தெரியும்,தான் கேட்டதற்கு எத்தனை எத்தனை அர்த்தங்களை திரித்துக் கொள்ள முடியும் என்று.
அது தெரியும்.தெரிந்து தான் கேட்டான்.அவள் யாரென தெரிந்து கொள்ள கேட்டான்.
கேட்காமல் இருந்திட,மனம் வந்திடாது;இயல்பாய் இருக்க இடம் தந்திடாது.
“எந்த பொண்ணு..?” உணர்வு புலப்படா தொனியில் மருத்துவர் வினவ,அவனை மீறி விழுக்கென நிமிர முயன்ற விழிகளை அடக்கியவனோ,மெதுவாக இமைகளை உயர்த்தினான்.இமைகள் உயர்ந்த பின்,வரவழைத்துக் கொண்ட தேய்வான வேகத்துடன் விழிப் பார்வையும் மேலெழும்பியது.
வார்த்தைகளில் இல்லாத குறும்பு மருத்துவரின் விழிகளில் கலந்து தெறித்திட,அதுவே கூறிற்று அவர் கற்பித்துக் கொண்ட அர்த்தத்தை.
“அதான் அந்த பொண்ணு..” அழுத்ததமாய் கதைத்திட்டாலும்,அவனுக்கும் நெஞ்சமதின் ஓரத்தில் துளியாய் நிகழ்ந்த தளர்வு புரிந்தே இருந்தது.
“அதான் ஆர்யா யாரு..?” அட்டகாசமான சிரிப்பு,மருத்துவரிடத்தில்.தோழன் தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாய் அமர்ந்து இருந்தான்.
“அன்னிக்கி என்ன காப்பாத்துன பொண்ணு டாக்டர்..”திமிறாத பார்வையுடன் பையன் பதிலளித்திட,மருத்துவரின் சிரிப்பு மட்டும் கொஞ்சமும் குறைந்திடவில்லை.
“ஓஹ்! அந்த பொண்ணா..? அவங்கள எதுக்கு ஆர்யா..?” கொக்கி போட்டார்,அவர்.
என்னவென்று அவன் சொல்லிட..?
இரவுகளின் இதமான சயனத்தில் அவளினால் ஏற்பட்ட இடையூறுகளை இனிமேலும் நடந்திடாமல் செய்வதற்கு என்றா..?
இயல்பான இயல்புகளில் தோற்றமாகியிருக்கும் பிறழ்வுகளின் தொற்றுகைகளை முற்றாய் தொலைய வைத்திடுவதற்கு என்றா..?
“தேங்க்ஸ் சொல்லனும் டாக்டர்..” சில நொடி தாமதித்து அவன் மறுமொழி உரைத்திருக்க,மருத்துவருக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
“அப்டியா ஓகே..அப்போ நா அவங்க கிட்ட சொல்லிர்ரேன்..”இதழ்களுக்குள் அடங்கிய புன்னகையுடன் அவர் கூறவும்,உள்ளுக்குள் எழுந்து அலையாகிய ஏமாற்றத்தை அடக்கி,விழிகளை காட்டாதிருக்க சிறிதளவு சிரமமாக இருந்தது,பையனுக்கு.
அவனால் மீண்டும் அவரிடம் கேட்க முடியவில்லை.அவரின் குறும்பு எதற்கென்று புரிந்திருந்தது.
“ஓகே டாக்டர்!” என்று பையன் எழுந்து கொள்ள,”அழுத்தம் தான்” என அவனறியாமல் தமக்குள் உச்சரித்துக் கொண்டன,டாக்டரின் இதழ்கள்.
வாயில் வரை பையன் சென்றதும் மருத்துவரின் வார்த்தைகள் அவனை ஒரு கணம் தரிக்க வைத்தது.
“இன்னும் மூனு நாள்ல உங்க காலேஜ்ல ஹெல்த் அவர்யார்னஸ் ப்ரோக்ராம் ஒன்னுக்கு என்ன தான் கூப்டு இருக்காங்க..அங்க வந்ததும் காட்டித் தர்ரேன்..” என்றவர் வாக்குத் தந்திட,வாயில்லி நின்று தலையை மட்டும் திருப்பி,சரியென்று ஒப்புக் கொண்டவனின் வதனம் உணர்வற்று இருந்தாலும்,அடிநெஞ்சில் இனம் புரியா மகழ்வின் தூறல்.
கல்லூரிக்கு வந்தவனோ,சிற்றுண்டிச்சாலையில் அமர்ந்து இருக்க,அவர்களுக்கு முன்னே இருந்த மேசையில் தான் அமர்ந்து இருந்தாள்,யாழவள்.
இடைவேளை நேரம் இல்லையென்பதால்,ஆட்களும் அவ்வளவு இல்லாதிருக்க அமைதியாகத் தான் இருந்தது,அவ்விடம்.அவனுக்கு முதுகு காட்டி அவள் அமர்ந்து இருக்க,பையன் அவளுக்கு பின்னிருக்கும் வழியால் சில்லுண்டிச் சாலைக்குள் நுழைந்ததால் அவனை கவனிக்கவும் இல்லை.
உணவை பிசைந்து கையில் எடுத்தவனின் முகம் கடுகடுவென மாறிற்று,அவளின் கட்டைக்குரலில் அவன் செவிகளில் நுழைந்திட்ட பாடலில்.
“என்றோ யாரோ
உன் கையை தொடுவார்..
இன்பம் துன்பம் எல்லாமே
அறிவார்..அன்பே அது
நானாக கூடாதா..?” அலைபேசியில் ஓடிய ரீல்ஸுடன் அதில் லயித்து சுற்றம் மறந்து கொஞ்சம் சத்தமாகவே,அவள் பாடிட,சுர்ரென்று எகிறிற்று.
“பாட்ட பாரு..” கடுப்புடன் அவன் திட்ட வரும் முன்னமே,அவள் எழுந்து சென்றதால் தப்பித்தாள்,அவனின் வசவுகளில் இருந்து.
அப்படியே அன்றிரவும் வந்து சேர்ந்திட,வேல் முருகனின் முகத்தில் எக்கச்சக்க குஷி.
மருத்துவரோ,இன்று நடந்ததை அவரிடம் ஒப்புவித்து இருக்க,அவருக்குள் பெருத்த ஆசுவாசம்.பையன், எங்கே திருமணம் செய்து கொள்ளாமலே இருந்திடுவானே என எப்போதும் மனதை அரித்திடும் பயம் இன்று காணாமல் போயிருந்தது.
என்னவொன்று எதையும் அவனிடம் கேட்கவில்லை.அவனாக வந்து சொல்லட்டும் என்று அமைதியாக இருந்து விட்டார்.
பையனுக்கு தந்தையின் முகத்தில் தெரிந்த நிறைவும் விழிகளில் படர்ந்திருந்த ஒளிர்வும் கண்ணோரங்களை சுருங்க வைத்தது.
“என்னப்பா..? மொகத்துல ஆயிரம் பல்ப்..?”
“அதெல்லாம் நேரம் வரும் போது தெரிய வரும்..நீ பேசாம சாப்டு..” அதட்டலுடனே,அவனுக்கு உணவை ஊட்டி விட்டார்,மனிதர்.
மனிதருக்கு தேவையான மாத்திரைகளை எடுத்துக் கொடுத்து,அவருக்கான படுக்கயை ஒழுங்கு படுத்திக் கொடுக்கவும் அப்படியே வந்து கட்டிலில் படுத்துக் கொண்டார்,அவர்.அறையின் விளக்கை அணைத்து விட்டு தன்னறைக்கு வந்த பையனுக்கு புதிய எண்ணில் இருந்து வந்த அழைப்பு புருவங்களை உயர வைத்திட,அந்த எண்ணைக் கண்டதும் கடுகடுவென ஆகிற்று,முகம்.
இந்த எண் அவனுக்கு மனப்பாடம்.அன்று காதல் தெரிவித்து குறுஞ்செய்தி வந்த எண்ணை பதிந்தும் வைத்திருந்தான்,அலைபேசியில் மீண்டும் குறுஞ்செய்தி வந்தால் திட்டுவதற்கென்று.
“இந்த பைத்தியக்காரி கன்னத்துல நாலு அற விட்டா தான் சரி..நாளக்கி இருக்கு அவளுக்கு..” கருவியவனோ,அலைபேசியை கட்டிலில் போட,மீண்டும் வந்தது அழைப்பு.
ஆட்டுவிக்கும் கோபம் உச்சானிக் கொம்பில் ஏறிக் கொள்ள,வசவு வார்த்தைகள் நாவின் ஓரம் வந்து அடுக்கடுக்காய் தரித்து நிற்க,அழைப்பை ஏற்று காதில் வைத்தவனோ சரமாறியாய் திட்ட எண்ணியிருந்தான்,மறுமுனையில் இருந்த நபரை.
“அறிவில்ல..” என்று ஆரம்பிக்கும் முன்னமே,எதிர்முனையில் இருந்து வந்து செவியுரசிய தோழனின் குரல் அவனை நிதானிக்க வைத்தது.
“என்னடா சூடா இருக்க..?” புரியாமல் விழித்தான்,சத்யா.
“இது உன் நம்பர்..? எப்டி..?” ஏதேதோ யோசனைகள் ஓட வார்த்தைகள் கோர்வையாய் வரவில்லை.தோழன் எப்படி அவளின் எண்ணில் இருந்து தனக்கு அழைப்பது என்பது மண்டயைக் குழப்பியது.
“புது நம்பர்னு யோசிக்கிறியா..? இது எங்க தாத்தாவோட பழய சிம்..நிலா தான் தேடி எடுத்து யூஸ் பண்ணா..அப்றம் தூக்கி போட்டு இருந்தா..நா தான் அன்னிக்கி எதுக்கும்னு எடுத்து வச்சேன்..இன்னிக்கி போட வேண்டிய வந்துது..அதான் சிம்ம போட்டு உனக்கு ஃபோன் பண்ணேன்..” பையனின் மனதில் இருந்த குழப்பம் தெரியாவிடினும்,அதற்கு ஏற்றாற் போல் பதிலளித்திட,பையனிடம் ஆழ்ந்த மௌனம்.
எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துப் பார்த்தவனுக்கு,அத்தனை சீக்கிரமாய் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
தோழனுடனும் சரிவரப் பேச முடியாது போக,உறக்கம் வருவதாகக் கூறி அழைப்பை துண்டித்தவனுக்கு,சிலவற்றை ஊகிக்க முடிந்தாலும் அவன் எந்த தீர்மானத்துக்கும் வரவில்லை.
அவனுக்கு கொஞ்சமும் சந்தேகம் யாழ்நிலாவின் மீது வரவில்லை,அன்று.இப்போது கூட நம்பக் கடினமாகத் தான் இருந்தது.தோழனின் தங்கை அவளை சத்தியமாய் அவனும் தங்கை எனும் கண்ணோட்டத்தில் தான் பார்த்தான்,இத்தனை நாள் வரை.
அவள் தன்னைக் காணும் பரிமாணம் வேறொன்றாக இருக்கக் கூடும் என்று அவன் நினைத்திடவும் இல்லை.அப்படி நினைத்திடும் அளவு அவர்களின் இடையே சந்திப்புக்களும் நேர்ந்தது இல்லையே.
அவளை தற்செயலாகக் காணும் போது கூட,அவன் புன்னகைப்பதே அரிது.இப்படி இருக்கையில் அவன் எங்கனம்,அவளுக்கு தன் மேல் விருப்பம் இருக்கக் கூடும் என்று யோசித்திட..?
குழப்பம் மனதை நிரப்பிட,அப்படியே உறங்கிப் போனவன் கல்லூரி சென்றவன் முதலில் சென்று சந்தித்து நிலாவின் உயிர்த்தோழி அர்ச்சனாவைத் தான்.
அர்ச்சனாவுக்கு பையன் என்றாலே நடுக்கும் பிறக்கும்.நிலாவுக்கு அவன் மீது விருப்பம் இருப்பதைக் கூறிய போதே,அவளுக்கு பயம் தான் உண்டானது.”இப்டி டஃப்பான ஆளு உனக்கு சரிவருமா டி..” என்று கேட்கவும் செய்திருந்தாள்.
அவளை தனியாக சந்தித்தால் அது வேறு விதமாக சென்று முடிவடையும் என்று பயந்தவனோ,அவனின் நம்பிக்கைகுரிய சகமாணவி இருவரையும் சற்றுத் தள்ளி நிற்க வைத்து விட்டு அவளிடம் அனைத்தையும் கேட்டறிந்து இருந்தான்,அதே அழுத்தத்துடன்.
அர்ச்சனாவே,பயந்து போய் அனைத்தையும் ஒப்புவித்திட,குறுஞ்செய்தி விடயமும் சரிவரத் தெரிய வந்திட,கடும் சினம் பையனுக்கு.நிலாவும் அன்று நடந்த தவறான புரிதலைப் பற்றி தோழியிடம் கூறியிருந்தாள்.
“சரி இந்த விஷயம்..நா கூப்டு கேட்டது நிலாவுக்கு தெரிய வரக் கூடாது..” என அழுத்தமாய் மிரட்டிட,அவளும் ஆமோதிப்பான தலயசைப்புடன் கிளம்பிச் சென்றாள்.எப்படியும் பையனின் மீது இருக்கும் பயத்தில் நிச்சயம் ஒப்புவிக்கவும் மாட்டாள்.
“தவறுதலா அந்த அரக் கிறுக்க திட்டிட்டோம் போல..” சலிப்பாய் நினைத்தவனுக்கு அவளிடம் தன் தரப்பை நிரூபித்து மன்னிப்புக் கேட்டிடும் எண்ணமும் இல்லை.
தலையை சரித்து கழுத்தை வருடியவாற நிமிர்ந்தவனோ,சிற்றுண்டிச் சாலைக்குள் நுழைகையில்,எதிர்ப்பட்டாள் அவள்.
“என்றோ யாரோ..” என அவள் இதழசைத்தது,அவன் கவனத்தில் விழ,”புடிச்ச பாட்டு போல..” என்கின்ற எண்ணத்துடன் கடந்திருந்தான்,அவளை!
அவனறியா அவனின் அவளை!
●●●●●●●●
(II)
புன்னகைத்திடா இதழ்களுடன் முகத்தில் தவழும் அழுத்தத்துடன் தன் முன்னே வந்தவளுக்கு இருக்கையை காட்டி அமரச் சொன்னான்,டாக்டர்.
அவளின் அழுத்தம் அவனுக்கு அலட்சியமாகத் தோன்றிட,நிதானம் மிகுந்த டாக்டருக்கும் அது கடுப்பின் சில துளிகளை தந்து விட்டிருந்தது.
“என்ன விஷயம் தென்றல்..?” டாக்டர் ஆயிற்றே.அவனின் மென்மையுடன் கேட்டிட,”கொஞ்சம் பேசனும் அத்தான்!” அழுத்தமாகவே வந்தது,அவள் பதில்.
மற்றைய ஆடவருடன் அவள் பேசுவது இப்படித் தான்.பட்டுக் கத்தரித்தாற் போலத் தான் அவள் பேச்சே வரும்.
அவளின் தொனியில் அவனுக்கு கோபம் கிளர்ந்தெழப் பார்த்திட,முயன்று தன்னை அடக்கிக் கொண்டான்,பெருமூச்சொன்றுடன்.
“ம்ம்..சொல்லு..”சங்கவியை அழைப்பது போன்று,அவன் ஒருமையில் பேசிட,மாறிப் போன அவள் முகபாவம் அவளுக்கு அவனின் ஒருமைப் பேச்சு பிடிக்கவில்லை என்று தெளிவாய் உணர்த்திற்று.
கண்ணாடியாய் உள்ளத்து உணர்வுகளை விழிகள் பிரதிபலித்திட, அது படர்ந்து விரிந்தாலும்,டாக்டர் அவனுக்கு அது புரிந்தாலும் அவன் இறங்கி வரவில்லை.
அவள் சம்மதம் சொன்னதுடன் சேர்த்து,இப்போதைய அழுத்தமான தொனியும் காரணம் போலும்.
“நா சொல்றது எனக்கே சரியா தோணல..ஆனாலும் சொல்றத தவிர எனக்கு வேற வழியில்ல..” குரலில் தொய்வு.அவள் முகத்தில் குற்றவுணர்வு வியாபிக்கத் துவங்கி இருந்தது.
“எனக்கு சத்தியமா இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல..அன்னிக்கி கூட அவசரப்பட்டு முடிவ எடுத்துட்டேன்னு தான் மனசு அரிச்சிகிட்டே இருக்கு..”
“………………….”
“அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது…அம்மாவோட கோவம்..சங்கவியோட வாழ்க்க இதெல்லாம் போட்டு அழுத்த அதனால தான் நா அப்டி பேசுனேன்..ஆனா என்னால முழுமனசா என்னால கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு காலம் பூரா வாழ முடியும்னு தோணல..”
“ஸோ நா இப்போ என்ன பண்ணனும்..?”பேபர் வெயிட்டை உருட்டியவாறு கேட்டான்,டாக்டர்.கோபம் வந்தாலும்,அவள் காதலுக்காக அவள் வாதாடுவதில் அவனுக்கும் சிறு நிம்மதி.அவனின் கணிப்பு பொய்யாகிடவில்லை என்கின்ற திருப்தி எழுந்தது.
“எங்க வீட்ல உங்களுக்கு விருப்பம்னு தெரிஞ்தால தான் ரொம்ப ஃபோர்ஸ் பண்றாங்க கல்யாணத்துக்கு..அதனால நீங்களே வேணாம்னு சொல்லிட்டா..”என்றதும் அவனுக்கு சட்டென கோபம் வந்தது.
அவன் நேசித்தவளும் இதே வேண்டுகோளைத் தான் அவனிடம் வைத்திருந்தது.மொத்தப் பழியையும் அவன் அன்று ஒற்றை ஆளாய் சுமக்க,இவளும் அப்படிக் கேட்டது அவனின் பொறுமையை அடியோடு நொருக்கிற்று.
“என்ன மாத்தி மாத்தி பேசற..? சரியா ஒரு டிஸிஷன்கு வரத் தெரியாதா என்ன..? யூஸ்ஸல் ஃபெல்லோஸ்..அப்போ எதுக்கு எல்லார் முன்னாடியும் வந்து வசனம் பேசுன..?பொத்திகிட்டு இருக்க வேண்டியது தான..சைக்கோ மாதிரி மாதிரி மாத்தி மாத்தி பேசறது தான் உங்க பொண்ணுங்க எல்லாரோடயும் பழக்கமா..?” சீறினான்,டாக்டர்.
காதல் தேடும்.
2025.04.15
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சித்து டாக்டருக்கு கோபம் வந்திடுச்சு …
ஆர்யா அந்த பொண்ணை பார்க்கும் போது டைரக்ட்டா காதலை சொல்லிடுவான் போல …