
காதலொன்று கண்டேன்!
தேடல் 12
(I)
இதழ்களில் புன்னகை வழிய,வாயிலின் அலங்காரங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டதும் சில நொடி உறைநிலையே,பையனுக்கு.
இதயம் உச்ச அதிர்வெண்ணில் துடிக்க,இமைகள் ஒட்டிக் கொள்ளவே இல்லை.
இதயத்தின் துடிப்பும் இமைகளின் அடிப்பும் அவன் இசைவை மறுத்திட,அவன் அசைவு மறந்தவனாய்.
தன் சட்டையின் நிறத்துக்கு முழுதாய்ப் பொருந்திப் போகும் நிறத்தில் சுடிதார் அணிந்து இருந்தவளைக் கண்டதும் மருத்துவரின் வார்த்தைகள் அசரீரி போல் ஒலித்தது,செவியோரம்.
கோளக் கருமணிகள் விரிந்து நிற்க,விழிகளில் வியப்பின் கோலம்.”இவளா..?”அதிர்ந்து நின்றவனுக்கு அனைத்தும் பிறழ்ந்தது போன்ற மாயை.
அவள் தான்,அவன் தேடலுக்கு சொந்தக்காரி என ஆழ்மனம் கூப்பாடு போட்டதை அவனால் மறுக்க இயலாது.அவள் தான் இவள் என்று மனதில் ஊகம் எழ,அந்த ஊகத்தை வெறுமனே புறந்தள்ளிட முடியவில்லை,அவனால்.
விழிகளில் அவள் விம்பம் நிறைந்திட,தன்னை தேட வைத்தவள் இவள் தான் என்கின்ற முடிவுக்கே வந்து விட்டான்,பையன்.
“நீ..” சத்தமின்றி இதழ்கள் அசைந்து ஏதோ கேட்க வரும் முன்னமே,இன்னும் சில பெண் மாணாக்கர் அவ்விடம் வரவும் குழம்பிய பாவனை அவன் வதனத்தில்.
அவளைப் போன்றே அதே நிறச் சுடிதாரில் இன்னும் பத்து பேர் போல் வந்திருக்கவும் தான்,அவளின் டிபார்ட்மன்டைச் சேர்ந்த அனைவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்திருப்பது அவனுக்கு புரிய வந்தது.
நெஞ்சாங்கூட்டின் அடி ஆழத்தில் ஏமாற்றத்தின் துளி அவனின் இயல்புகளை விழுங்கிட,உணர்வலைகளில் ஏமாற்றமும் கலந்து அவனை மென்று தின்றது.
எதிர்ப்பார்ப்பு பொய்த்துப் போனதால் உண்டான தளர்வதை,முகத்தில் படரவிடாமல் அவர்களை கடந்து செல்கையில் அவனின் பார்வை அழுத்தமாய் அவளை ஒரு தடவை தொட்டு மீண்டது.
தனிச்சையாய் நிமிர்ந்தவளும் அவனை அவ்விடம் கண்டதும் பயந்து போய் பார்வையை தழைத்துக் கொண்டிருந்தாள்,பதபதைப்புடன்.
விழா இனிதே துவங்கிட,கடைசி வரியில் அமர்ந்திருந்த பையனின் முகம் வழமை போலவே இருந்தாலும்,அகத்தில் கொஞ்சமாய் தளர்வு.
அவனுக்கே அது புரிந்து போக,அதற்கான காரணத்தையும் கண்டறிந்தே இருந்தான்,அவனும்.
“யாரோ ஒருத்திய பாக்கறதுக்காக நா எதுக்கு இவ்ளோ தவிக்கனும்..?” தனக்குத் தானே உருப்போட்டுக் கொண்டு நிமிரவும் பாவையவள் அவனைக் கடந்து செல்லவும் சரியாய் இருக்க,அவனிருந்த மனநிலைக்கு அவள் மீது கோபமெல்லாம் வரவில்லை.
அவனின் எண்ணவலைகளை தான்,அவளறியாமல் அவளே களவாடி இருந்தாளே.
அன்று விழா முழுவதும் பையன் ஒரு மாதிரியாக இருந்தாலும்,விழிகளில் அது புலப்படாத படியால் யாராலும் அதை கண்டு கொள்ள முடியவில்லை.
இரவு ஏழ மணி போல் விழாவும் நிறைவுற்றிட,கடந்து செல்கையில் எதிர்ப்பட்டாள்,யாழவள்.யோசனையில் வந்தவளோ,அவனுடன் தவறுதலாய் மோதப் பார்த்திட,அதற்கு மெதுவான ஓசையில் அவனிடம் வசவுகளை வாங்கிக் கொண்டு தான் நகர முடிந்ததே.
பேரூந்தில் தொற்றிக் கொண்டு வீட்டுக்கு வருகையில் பையனின் விழிகளுக்குள் சிக்குண்டார்,அவர்.
அவன் வரும் அதே பேரூந்தில் தான் இருந்தார்,அவரும்.உடன் பக்கத்தில் வாலிபன் ஒருவனும் அமர்ந்து இருந்தான்.
“பயப்டாத கண்ணா..ஒன்னுல்ல..” மெதுவான குரலில் புன்னகையுடன் அவர் கூறுவது இவன் செவியில் விழத் தவறவில்லை.கசப்பான புன்னகையின் கோடு,இதழ்களில்.
முகம் கோபத்தில் சிவந்திட,மனநிலை தலை கீழாய் பிறழ்ந்து போய் விட,அத்தனை வலி அவன் மனதில்.
●●●●●●●
“அப்பு டேய் என்னடா ஒரு மாதிரியா இருக்க..?” தொலைக்காட்சி தன்பாட்டில் ஓட வேறு சிந்தனையில் இருக்கும் மகனின் நடத்தையின் காரணம் புரியாது கேட்டார்,மனிதர்.
அவரின் வார்த்தைகள் அவனுள் இறங்கினாலும்,அதற்கு எதிர்வினையொன்றை வழங்கிட,சில நொடிகள் அவசியமானது,பையனுக்கு.
“ஒன்னுல்லப்பா..” சட்டென இடை வெட்டினான்,பையன்.தாமதியாது தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டு இயல்பாகியயவனின் செயலில் அவரிதழில்,அர்த்தப்புன்னகை.
“பொய் சொல்லாத அப்பு..என்னயே ஏமாத்த பாக்கலாம்னு நெனக்கிறியா..?” அவர் சிறு புன்னகையுடன் கேட்டிட,தன் முன்னே நின்றிருந்தவரின் இடையோடு கட்டிக் கொண்டான்,உணர்வுகளின் மேலீட்டில்.
அவனின் செயலை ஊகித்து இருப்பார் போலும்.கலக்கமான மனதுடன் அவனின் தலையை வருடிக் கொடுத்தவருக்கு புரியாமல் இல்லை,அவனின் உடைவுக்கான காரணம்.
“என்னடா இது சின்னப்புள்ள மாதிரி..?” தலை கோதியவருக்கும் அவனின் வருத்தம் அத்தனை வருத்தத்தை தந்தது.பையனின் மீது உயிரையே வைத்திருப்பவர் ஆயிற்றே.
“நா இன்னிக்கி அவங்கள பாத்தேன்..” தொய்ந்த குரலில் கூறியவனின் பிடி இறுகிட,மனிதரின் விழிகள் கலங்கி விட்டன.
“நா என்னப்பா தப்பு பண்ணேன்..?” இடையோடு கட்டிக் கொண்டு முகத்தை நிமிர்த்திக் கேட்டவனின் விழிகளில் பெரும் அலைப்புறுதல் கொட்டிக் கிடந்திட,மனிதருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
அவர் அவனை உயிராய் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டாலும்,தாயின் இடம் என்பது அவராலுமே நிரப்ப முடியாத வெற்றிடம் ஆயிற்றே.
“யோசிக்காத அப்பு..” மெதுவாய் அவனின் தலைவருடி ஆதுரமாய் உரைத்தார்,அவர்.
“அவன் மட்டுமாப்பா அவங்களுக்கு பையன்..?” அத்தனை ஆதங்கம் அவனின் வார்த்தைகளில்.அவன் படிக்கும் பள்ளியில் தான் படித்தான்,அவன் தாயின் இரண்டாவது கணவரின் மகன்.கல்லூரியும் பக்கத்து கல்லூரி தான்.
அவனின் கேள்வியில் மனிதருக்கு தொண்டை அடைத்திற்று.அவனின் தலையைக் கோதிக் கொடுத்தாறே தவிர ஒற்றை வார்த்தை அவரிடம் இருந்து வரவில்லை.
“இன்னிக்கி ரெண்டு பேரயும் பாத்தேன் பா..ஒரு மாதிரி இருக்கு மனசுக்கு..” வலது நெஞ்சை தடவிக் கொண்டே உரைத்தான்,பையன்.
அதீத பதட்டத்திலும் அழுத்தத்திலும் அவனுக்கு இப்படி நேர்வதுண்டு.வலது நெஞ்சில் இறுக்கிப் பிடிக்கும் வலி உருப்பெற்று சில நேரங்களில் ஆழமான சுவாசம் தேவைப்படுவதுண்டு.அதீதங்களில் அதீதத்தில் பேச்சுத் தடைப்பட்டு போகும்,சில நிமிடங்களுக்கு.
“அப்பு யோசிக்காதப்பு..இப்போ பாரு..அப்றம் நெஞ்சு வலின்னு சொல்லுவ..” என்றவரோ,அவனின் உச்சியில் முத்தமிட,மெல்ல மெல்ல இயல்பானான்,அவன்.
அன்று இயல்பாகினும் அவன் வழமை போல் இல்லை.என்றும் போல் மனிதர் தான் உணவூட்டி விட, அவனை தட்டிக் கொடுத்து தூங்கவும் வைத்திருந்தார்,அன்று.
பையன் அவ்வளவாய் பேசவும் இல்லை,அதன் பிறகு.தற்செயலாய் அவர்களை காண நேர்கையில் அவனுள் இப்படியான மாற்றங்கள் உண்டாகிடும்.
அவன் ஆழ்ந்து உறங்கியதும் வெளியே வந்தவரின் மனதில் அத்தனை ஆதங்கமும் ஆற்றாமையும்.மனமோ தன்னை மீறி,அவனின் தாயாரை திட்டவும் செய்தது.
இரவு பதினொரு மணியைக் கடந்திருந்த சமயம் அது.ஏதேதோ கனவுகள் வந்து விழிகளில் படர்ந்திட,நிமிடங்கள் கரைந்தோட திடுக்கிட்டு விழித்தான்,பையன்.
வேறு யார் அந்த கனவில் வந்திருக்கக் கூடும்..? அவனின் தாயும் அவர் கொஞ்சிக் கொண்டிருந்த பையனும் கனவில் வந்து அவனை வருந்தச் செய்திட,எழுந்தமர்ந்தவனின் தொண்டைக்குழி ஏறி இறங்கிற்று.
நினைக்கக் கூடாது என்று இலட்சமாவது முறை சபதம் எடுத்தாலும்,அது நிறைவேறுவதில்லை;நிறைவேறிட அவன் மனதில் இருக்கும் வெற்றிடம் இடம் கொடுப்பதுமில்லை.
விட்டத்தை வெறித்தவாறு விழித்துக் கிடந்தவனின் செவிகளில் அவன் தாய் கூறக் கேட்ட வார்த்தைகள் அலை மோதியது.
அவர் விழிகளில் தெரிந்த பாசமும் குரலில் வெளிப்பட்ட அக்கறையும் தனக்கு கிடைத்திடவில்லையே என்கின்ற ஏக்கத்தை அவனுள் விதைத்து ஏனனோ ஆழமாய் கீறிச் சென்றது.
பழகிப்போனது என்றாலும்,அவனுக்கு வலிக்காமல் இருப்பதில்லை.
பழகிப் போனவை எல்லாம் வலிக்காமல் இருப்பவையும் அல்லை.வலிக்காமல் இருப்பதெல்லாம் பழகிப் போனவையும் அல்லவே.
இப்பொழுது பரவாயில்லை.முன்பெல்லாம் அவ்வளவு வலிக்கும் பையனுக்கு.விவரமி தெரியாத வயதில் பள்ளியில் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுவதும் உண்டு.என்ன ஒன்று வேல் முருகனைத் தவிர யாரிடமும் அவன் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை.
அவரிடமும் அரிதாய்த் தானே,தாள முடியாமல் உரைத்திடுவானே தவிர,மற்றையை பொழுதுகளில் தனக்குள் வைத்து மருகுவதே வாடிக்கை.
சொல்லொண்ணா கனம் மனதை அடைத்திட,அவரின் கனிவும் அக்கறையும் அவனை கீறிக் கொண்டேயிருக்க,சடுதியாய் அவளின் வார்த்தைகள்.
அவள் வார்த்தைகள் மாறாமல் அதே உணர்வுகள் அவன் செவியில் கதை பேசிட,இனம் புரியா இதம் உள்ளுக்குள்.
நெஞ்சை அழுத்தி வைத்திருந்த கனம் முழுதாய் கலைந்திடாவிடினும்,அதன் தாக்கம் கொஞ்சம் குறைவது போல்.
நினைவுகளை அவள் வாரி சுருட்டிக்கொள்ள கனமான மனதில்,கொஞ்சமாய் சேர்ந்து கொண்ட இதம் அவனிடன் நித்திரையையும் இழுத்து சேர்த்து விட்டிருந்தது.
மூன்று நாட்கள் கடந்திருந்த பொழுது அது.
இப்பொழுதெல்லாம் அவனுக்குள் அடிக்கடி அவளின் நினைவுகள் கிளர்ந்தெழ,அன்று வலியில் தன்னிலை தவறி அவள் நினைவுகளுடன் ஒன்றிப் போனது பையனுக்கே அதிர்வு தான்.
ஏனென்று இல்லாமல்,அவள் வார்த்தைகள் அவனுக்குள் சிறு இதத்தை பரப்பிட,அதனுள் அவன் மூழ்கிப் போனது அவனாலுமே மறுக்க முடியாத நிஜம் ஆயிற்றே..?
மறைந்திருந்த தவிப்பு அழகாய் மனதை ஆட்படுத்த,அவளைக் காண வேண்டும் என்று உறுதியான தீர்மானத்துக்கு வந்து விட்டான்,பையன்.
அவளைக் கண்ட பின்னர் இந்த தவிப்பு காணமால் போய் விடக் கூடும் என்று தவறாய் கணித்திருக்க,அதன் பின்னர் தான் தவிப்பின் மென்னலை காதலின் பேரலையாய் எழுந்து நிற்கப் போகிறது என்று அவனுக்கு யார் தான் உரைத்திட..?
விடிந்தும் விடியாத வேளையில் வந்து பையனின் வீட்டுக் கதவை தட்டினான்,தோழன்.பையன் தான் நேற்றிரவே அவனை கிளம்பி வரச் சொல்லி இருந்தானே..?
சமயலறையில் இருந்த பையனுக்கோ அழைப்பு மணியின் ஓசை கேட்டிட,கைகளை துடைத்துக் கொண்டு வந்து கதவைத் திறந்தான்.
“என்னடா இது காலங்காத்தால வர சொல்லி இருக்க..?” உறக்கக் கலக்கம் விழிகளில் மீதிமிருக்க,கொட்டாவி விட்டவாறே கேட்டான்,சத்யா.
“கொஞ்சம் இரு பத்து நிமிஷத்துல வர்ரேன்..” மொழிந்தவனோ,கடகடவென சமையல் வேலையை முடித்திட,அதன் மணத்தில் தோழனுமே சமயலறைக்குள் நுழைந்து கொண்டான்,மூச்சிழுத்து அதன் வாசத்தை சுவாசவறைகளுக்குள் ஏற்றியவாறு.
“எங்கடா அப்பாவ காணோம்..?” சூட்டோடு இருந்த இட்லியை பிய்த்து வாயில் போட்டவாறு கேட்டான்,விழிகள் சுற்றத்தை அலசிட.
“அப்பாவுக்கு இன்னிக்கி ஃபேக்டரில ஃபங்க்ஷன் இருக்குன்னு சீக்கிரமே பொய்ட்டாரு..இட்லி இருக்கு..சட்டில எல்லாம் சூடு பண்ணி வச்சிருக்கேன்..நா மட்டுந்தான் சாப்டனும்..தேவயான அளவு சாப்டுக்க..நா ரெடியாகிட்டு வந்துர்ரேன்..வெளிய கெளம்பனும்..” அறிவிப்பாய் எடுத்தியம்பி விட்டு அவன் தன்னறைக்குள் நுழைய,தலையை சொறிந்து கொண்டு காரணம் தெரியாது விழித்தான்,தோழன்.
அடுத்த இருபது நிமிடங்களில் கிளம்பிட,வண்டி வந்து மருத்துவமனையின் முன்னே நிற்க,புரியாது பார்த்தான்,தோழன்.
“என்னடா ஹாஸ்பிடல்..? திரும்ப ஏதாச்சும் ஒடம்புக்கு..?”
“இல்லடா..”
“அப்போ தெரிஞ்சவங்க யாராலும் அட்மிட் ஆகி இருக்காங்களா..? அப்டின்னாலும் இது விசிட்டிங் டைம் இல்லியே..” கேள்விகளால் துளைத்தவாறு தோழன் நடந்திட,மறுப்பான தலையசைப்பே பையனின் பதிலாய் இருந்தது.
“அப்போ என்னடா..?” தோழன் நெற்றியை நீவிக் கொண்டு கேட்கையில்,மருத்துவர்களுக்கான அறையொன்றின் முன்னே வந்து பையன் நிற்க,அந்த கதவில் பொறிக்கப்பட்டிருந்த பெயர் சத்தமாகவே வாசித்தான்,சத்யா.
“டாக்டர் சிவ பிரசாத்..” என்றவனோ,”அட நம்ம லூஸு டாக்டர் அவர் தான..?” என கேட்டும் வைத்திட,பையனின் பார்வை அவன் மீது அழுத்தத்துடன் தொட்டது.
“சரி எதுக்கு அவர..?”
“நா அந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சிக்கனும்..” பையன் எடுத்துரைத்திட,அதிர்ந்தாலும் அதை வெளிப்படுத்தி நிற்கவில்லை,தோழன்.
ஆர்யாவை அறிந்தவனுக்கு,இந்த நடவடிக்கை எல்லாம் பெரும் வித்தியாசமாகத் தோன்றிடாமல் இல்லை.எந்த பெண்ணையும் விழி நிமிர்த்தி பார்க்காதவன்,யாரென்று தெரியாத ஒருத்தியை பார்த்திட முயல்வதை எப்படி எடுத்துக் கொள்ள என்றும் அவனுக்கு புரியவில்லை.
அதன் பின்,இருவரும் உள்ளே நுழைய,வழமையான பெரிய சிரிப்புடன் அவர்களை வரவேற்றார்,சிவபிரசாத்.
●●●●●●●●●
(II)
தந்தையையும் மாமனாரையும் உறுத்து விழித்து விட்டு டாக்டர் வெளியே போக,அன்பரசனின் இதழ்களில் நமுட்டுச் சிரிப்பு.
“சித்துக்கு ரொம்ப கோவம் வருமா மச்சான்..?”
“அவன் அவ்ளோ சீக்ரம் கோவம் வராது செல விஷயங்கள தவிர..அப்டி கோவம் வந்தா வாய் அவன் கன்ட்ரோல்ல இருக்காது..”
“அப்டியா..?”
“ம்ம் ரொம்ப திட்டுவான்..அவ்ளோ திட்டு விழும்..நானே வாங்கி இருக்கேன்..” புன்னகை முகமாகவே கூறினார்,அவரும்.
நேற்றைய தினத்துடன் அன்று இரவும் அன்பரசன் குடும்பம் சகிதம்,அங்கே தங்கிக் கொள்ள,அகல்யாவின் மகனுக்குத் தான் ஒரே கொண்டாட்டம்.
“அவங்களே செரமத்துல இருப்பாங்க..இதுல நாங்களும் இருக்கனுமா..?” காதைக்கடித்த மனைவியை அடக்கி எப்படியோ சம்மதிக்க வைத்திருந்தார்.எந்த வித சிரமமும் நிஜமாக இல்லை என்பது தந்தைமார் இருவருக்கும் மட்டும் தெரிந்த உண்மை ஆயிற்றே.
தென்றலின் பின்னே அவன் சுற்றித் திரிய,அவளின் மனநிலைக்கு அந்த வாண்டு உடன் இருப்பது அவளுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.
அகல்யாவின் கணவன்,ஸ்ரீநிவாஸும் வெளியூர் சென்றிருக்கவே,அவளும் இன்று இங்கு தங்க வந்திருந்தாள்.அவர்கள் இருவரும் தனிக்குடித்தனம் இருக்க,பொதுவாக தனியாக அவ்வீட்டில் இருப்பதில்லை,அவள்.
பார்வதியோ,பரிமளாவின் அதட்டலுக்கு அடங்கி தென்றலவளை,வார்த்தையால் சாடுவதை விட்டிருக்க,அதுவே போதுமாக இருந்தது,சங்கவிக்கு.
இன்னும் உண்மை தெரியாத பார்வதி,கணவருக்கு பத்திய உணவைத் தயார் செய்திட,மற்றையவர்களுக்கானதை சமைத்து முடித்திருந்தனர்,பரிமள்வும் அகல்யாவும்.சங்கவி அவர்களுக்கு உதவிட,தென்றல் சமயலறை பக்கத்தை கூட எட்டிப் பார்த்திடவில்லை.
டாக்டரும் இங்கு தங்க மறுத்திட,அவனை இரவுணவுக்கு இங்கு அழைத்ததாயிற்று.பார்வதி அழைத்ததால் அவனுக்கு மறுத்திடும் வழியும் இருக்கவில்லை.
அனைவரும் அமர்ந்து இரவுணவை முடித்து விட்டு,கூடத்தில் அமர்ந்து இருந்த சமயம் அது.அன்பரசன் தலையணை கொண்டு வந்து கொடுத்திட,அதை முதுகுக்கு பின்னே வைத்து சரிந்து இருந்தார்,மருதநாயகம்.
கூடத்தில் கதையலைகள் அடிக்க,டாக்டரோ நேரத்தைப் பார்த்து விட்டு வீட்டுக்கு செல்ல எழுந்து கொண்டிட,தென்றலின் வருகை அனைவரையும் கவனிக்க வைத்திட,டாக்டரும் விழிகளை நிமிர்த்தினான்.
பார்வதி பாராமுகத்துடன் எழுந்து செல்லப் பார்த்திட,அவரை அமர வைத்தது,அவளின் குரல்.
“நா ஒன்னு சொல்லனும்..” என்றிட,அனைவரின் பார்வையிலும் கேள்வி.
“அத்தான்!” என்றவளின் பார்வை டாக்டரைத் தொட,அவளின் அழைப்பில் அவனுக்கு புரையேறிட,இருமலை அடக்கிக் கொண்டான்,அதிர்வு மீளாத விழிகளுடன்.அப்படி அழைப்பது இதுவே முதல் தடவை.
அவனோ விழிகளை நிமிர்த்தி,அவளை ஏறிட நேருக்கு நேராய் கத்திமுனையில் வெட்டியது,அவள் பார்வை.
“எனக்கு உங்கள கல்யாணம் பண்ணிக்க சம்மதம்..” உணர்வே இல்லாத வார்த்தைகளை அவள் உதிர்த்திட,விழிகளில் அப்படியொரு வலி.
அவனுக்கு சமர்ப்பித்திட பத்திரப்படுத்திய வார்த்தைகள் யாரோ ஒருவனுக்காக அவள் உதிர்த்ததை அவளாலே ஏற்றுக் கொள்ள முடியவில்லை,போலும்.விழிகள் கலங்கிச் சிவக்க,மெல்லிய நீர்த்திரள் தோன்றிற்று.
அவ்வளவு தான் என்பது போல் அவள் நகர்ந்து விட,அவள் கொடுத்த அதிர்வில் இருந்து மீள அனைவருக்கும் நேரம் தேவைப்பட்டது என்னவோ மறுக்க முடியாத உண்மை.
இரு நாட்கள் ஓடியிருந்தன.
தென்றல்,திருமணத்துக்கு சம்மதித்த பின்னர் யாருமே உடனடியாக அதைப் பற்றிய பேச்சை யாரும் எடுத்திடவில்லை.டாக்டர் தான்,ஆறட்டும் என்று முட்டுக் கட்டை போட்டிருந்தான்.
அவள் சரியென்றாலும்,அது சூழ்நிலைக்கைதி ஆனதால் என்பது அவனை ஒரு புறம் உறுத்திக் கொண்டிருக்க,அவள் ஒப்புக் கொண்டது மனதை நெருடச் செய்தது.
காதல் கொண்டவன்,இதே போன்ற நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிய ஒருத்தியை கடந்து வந்து இருந்தாலும்,ஏனோ மனதில் பெரும் பாரமும் ஏகப்பட்ட சஞ்சலங்களும்.
அவன் நேசித்தவள்,அவனை விட்டுக் கொடுத்தப் போது அவன் உணர்ந்த ஏமாற்றம் கொடியது என்றாலும்,தென்றலின் சம்மதமும் அவனுக்குள் சிறு ஏமாற்றத்தை தராமல் இல்லை.அவள் ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது என்றும் ஒரு மனம் சொன்னது.
அவன் கண்ட காதல்களை விட,அவள் காதல் வித்தியாசம் என்கின்ற எண்ணம் முதலில் இருந்தே அவன் மனதுக்குள் உண்டு.அது பொய்த்துப் போனதால் வந்த ஏமாற்றம் போலும்.
“எல்லாப் பொண்ணுங்களும் ஒன்னு தான..?வீட்டாளுங்க தான முக்கியம்..”சலிப்புடன் நினைத்தவனை தாதியர் வந்து கலைத்தனர்.
“டாக்டர் உங்கள பாக்க யாரோ வந்திருக்காங்க..”
“உள்ள வர சொல்லுங்க..” அவன் கோப்பொன்றை கையில் எடுத்தவாறே உரைத்தவன் நிமிர்ந்து பார்த்திட,இறுகிய முகத்துடன் உள்ளே வந்தாள்,தென்றல்.
காதல் தேடும்.
2025.04.14
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஆர்யா பாவம் தான் … ஆனா எல்லா வலிகளுக்கும் காதல் தான் மருந்து … ஆர்யா யாழ் தான் அதுன்னு கண்டுபிடிக்கிறதுக்குள்ள நமக்கு டென்ஷன் ஆகுது …
டாக்டர் என்ன அப்படியும் யோசிக்கிறார் … இப்படியும் யோசிக்கிறார் …
🤩