Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 09

 

(I)

வண்டியொன்று வருவதைக் கண்டு அவள் விரைந்து நகர்ந்து,பையனின் கரத்தைப் பற்றி இழுக்க முயன்றிட,தன் தடங்கை உணர்ந்த ஸ்பரிசத்தில் பையன் திரும்பும் முன்னமே,வண்டி வந்து அவனை மோதிற்று.

 

அதிர்ந்து பயந்து நடுங்கி விட்டாள்,யாழவள்.”சீனியர்” திகைப்பும் நடுக்கமும் சூழ் குரலில் வந்து விழுந்த கூவலுடன்,அவள் நெருங்கும் முன்னமே அவன் கீழே விழுந்து அரை மயக்க நிலைக்குச் சென்றிருக்க,தலையில் இருந்து உதிரம் வழிந்தது.

 

பதறியவாறு நெருங்கியவளின் விரல்களில் நடுக்கம் இழையோடிற்று.வழிந்த குருதியுடன் அவள் பயம் எகிறிப்பாய,அதற்குள் ஆட்கள் கூடிட,மோதிய வண்டியோ திரும்பிப் பாராது உயர் வேகத்துடன் கடந்திருந்தது.

 

அவர்களின் நேரம் போலும்.நோயாளி இல்லா ஆம்பியூலன்ஸ் ஒன்று அங்கு வந்திட,அதில் பையனை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்திருந்தவர்,பெண்கள் இருவரும்.

 

ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்டு இருந்தவனின் விழிகள் மூடியிருக்க,அந்த மூடிய இமை வழியே கருமணிகளின் அங்குமிங்கும் அசைந்திட்டன.

 

இமை பிரிக்க அவன் முயன்றாலும்,ஏனோ இயலாமல் போனது பையனால்.

 

தனக்கு விபத்து என புரிந்தவனுக்கு ஏதேதோ,எண்ணங்கள் வந்து போக,தாயுமானவரின் உருவமே தாழிட்டிருந்த விழிகளுக்குள் வந்து நின்றது.

 

“அப்பா!” அரை மயக்க நிலையில் இருந்தவனின் இதழ்கள் அசைந்திட,அவனின் முகத்தில் வந்து போன மாற்றங்களை கண்டவளுக்கு, அவனின் இதழசைவு புரிய,மனம் கேட்கவில்லை.

 

“ஒன்னுல்ல சீனியர் பயப்டாதீங்க..” மென்மையாய் தன்மையாய்,அவளைத் தேற்றியவளுக்கும் சங்கடம் தான்.அவனின் கரத்தை அழுத்திக் கொடுத்திட,ஏதோ ஒன்று இடம் தரவில்லை.

 

“அவர விட இவ தான் பயந்திருக்கா போல..”பாவையவளை எண்ணி தோழி ஆயாசப்பட்டது தான் மிச்சம்.அழுது விடுவதற்கு ஆயத்தமாக இருப்பது போலவே,இருந்தாள் பாவையவளும்.

 

அந்த குரலில் இருந்த தவிப்பும் பதட்டமும் அவன் சிந்தையை நிறைத்திடாமல் இல்லை.

 

“ஒன்னுல்ல சீனியர்..பயப்டாதீங்க..உங்க அப்பாவ வர சொல்றேன்..”

 

“ஒன்னுல்ல ஒன்னுல்ல இன்னும் கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிடல் வந்துரும்..”

 

“ஒன்னுல்ல சீனியர் சின்ன அடி தான்..பயப்ட வேணாம்..” வழி நெடுகிலும்,அவனின் முகம் பார்த்தும், அவனின் நிலை என்னவோ என தனக்கு தெரிந்த மட்டில் ஊகித்தும்,அவள் மென்மையான வார்த்தைகளுடன் அவனைத் தேற்றிக் கொண்டே வர,அரை மயக்க நிலையில் இருந்தவனின் செவியை அனைத்தும் உரசிற்று.

 

உரசிய உள்ளிறங்கிய போதிலும்,முற்றாய் உணர்ந்திடும் நிலையில் இருக்கவில்லை,அவன் புலன்கள்.

 

என்னவோ,அவன் உணர்ந்திருக்க வேண்டும்.இதழ்கள் பிதற்றிட,விரல்கள் காற்றில் அலைந்து ,அவள் கரத்தை பற்றிக் கொள்ள,அவளுக்குள் அதிர்வலைகள்.

 

விலக்கிக் கொள்ள முயன்ற போதிலும்,அவன் முகம் பார்த்தவளுக்கு அது முடியாமல் போக,நெருடியது மனம்.

 

அவனின் நா விரல்கள்,அவளின் இருவிரல்களை அழுந்தப் பற்றிக் கொள்ளவுமே, நுதற் சுருக்கங்கள் விலகி,பையனின் கருமணிகளின் அலைவு கொஞ்சம் மட்டுப்பட,அவனும் அமைதியடைந்தது போலவே தோன்றிற்று,இருவருக்கும்.

 

தாயின் இருவிரலை பிடித்துத் திரியும் குழந்தையை போலவே,அவளின் கரத்தை அவன் பற்றியிருக்க,அவளைக் கேளாமல் சிறு புன்னகை,அவளிதழ்களில்.

 

இதுவரை அவனைக் கண்டு பயந்தாலும்,அவன் குழந்தையாகவே தெரிந்தான்,அந்நொடி.

 

“பயப்ட வேணாம்..நாங்க பக்கத்துல தான் இருக்கோம்..உங்கப்பாவயும் வர சொல்றோம்..”

கனிவாய் அவள் மொழிய,அந்த வார்த்தைகளை விட,அவளின் குரல் அவனுக்குள் பெருத்த ஆசுவாசத்தை தந்திட்ட போதிலும்,விரல்களை விலக்கிடவில்லை.

 

யாரிது..?

அந்த தெளிவற்ற நிலையில்,உள்ளுக்குள் ஒற்றை வினா.

 

இமைகள் சுருங்கி பிரிந்திட பிரயத்தனப்பட்டாலும்,அவனின் நிலைக்கு அது முடியாமல் போயிருக்க,அது புரிந்தாற் போல்,அவளின் கரம் நெருடலை பின் தள்ளி,அவனின் கரத்தை அழுத்திக் கொடுத்தது.

 

உருவம் நிரப்பாத போதும்,அவனுக்குள் உணர்வாய் நிறைகிறாள்,அவள்.

விம்பம் காணாத போதும்,அவளண்மையில் நிறைவாய் உணர்கிறான்,அவன்.

 

நயனங்களை உருவம் நிரப்ப,மூடியிருந்த இமைகள் திரையாய்..

இதமயதை அரவம் நிறைக்க,அவனுக்குள்ளும் பிறழ்வோசகைள் முதன் முறையாய்!

 

இரு வாரங்கள் கடந்திருந்தன.

 

“அப்பு இதக் குடிடா..” கையில் இருந்த மூலிகைச் சாறை நீட்டிய தாயுமானவரை முறைத்து தள்ளினான்,பையன்.

 

ஆயினும்,அவனின் முறைப்புக்கெல்லாம் அசரவில்லை,வேல் முருகன்.

 

“நீ என்ன தான் மொறச்சாலும் அப்பன் அசர மாட்டேன் அப்பு..இதக் குடி..” அவர் கறாராய் கூறிட,பறித்துப் பருகியவனின் பார்வையை சட்டை செய்யாது சமயலறைக்குள் நுழைந்தார்,அவர்.

 

மீளவும் தனக்காக எதையோ தயாரித்திட தான்,அவர் சமயலறைக்குள் நுழைவது புரிந்தவனுக்கு கோபம்.

 

“இந்த அப்பாவோட..” கடுகடுத்தவனுக்கு,அவரின் கவனிப்பில் சிறு கோபம் துளிர்ப்பது உண்மை.

 

அவனை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு காத்துக் கொண்டிருக்கையில்,மித்ராவின் தாயும் அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல் வரவே,யாரின் வரவு வரையும் காத்து இருந்திடாமல் கிளம்பி இருந்தனர்,பெண்கள் இருவரும்.

 

அவர்கள் கிளம்பிய பின்னரே,உள் நுழைந்தனர் சத்யாவும் வேல் முருகனும்.

 

விழி மூடி மயக்க நிலையில் இருந்தவனைக் கண்டு துடித்து விட்டார்,அவனின் தாயுமானவர்.

 

மூலையில் அமர்ந்து அழுதவரின் கன்னத்தில் ஈரம் நில்லாது ஏறியவாறே இருந்திட,சத்யாவுக்கு அவரை அத்தனை எளிதாய் சமப்படுத்தவும் முடியவில்லை.

 

மருத்துவர் வந்து அவனுக்கு பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறிய பின்னர் தான்,அவரின் முகமே தெளிந்தது.அதுவும் அவன் விழிக்கும் வரை விழிகளில் கொட்டிக் கிடந்தன,கலக்கத்தின் துளிகள்.

 

பையன் கண் விழித்ததும் முதலில் சென்று பார்த்து உடைந்து அழுதே விட்டார்,அவர்.

 

“ப்ளீட் ஆகி இருந்தாலும் பெரிய அடிலாம் இல்ல..பயப்ட வேணாம்..சரியான டைம்கு ப்ளட்டும் கெடச்சுதுல்ல..” அவனை பரிசோதித்த மருத்தவரே,அவரின் நிலை புரிந்து தேற்றி விட்டுப் போயிருந்தார்.

 

பலமான அடி இல்லை என்பதால் நான்கு நாட்கள் மருத்துவமனை வாசம்.சத்யாவும் மனிதரும் மாறி மாறித் தங்கிக் கொண்டனர்,எத்தனை மறுத்தும்.

 

இடையில் பையனின் கல்லூரித் தோழர்கள் வந்து பார்த்து விட்டுப் போகவே,அவர்களுக்கும் வேல் முருகனின் தவிப்பில் மனதில் நெகிழ்வு.

 

பாவையவளுக்கும் அவன் நலம் என்கின்ற செய்தி,கேள்விப்படும் வரை மனதின் அலைப்புறுதல் அடங்கிப் போய்விடவில்லை.

 

அவன் மீது இருக்கும்,களங்கமில்லா தூய அக்கறையின் வெளிப்பாடு அது.

 

அடிக்கடி கோயிலுக்குச் சென்று அவனுக்காக வேண்டிக் கொள்வதை வழக்கமாகி இருந்தாள்,அவன் மருத்துமனையில் இருந்து வீடு சென்ற செய்தி செவியை எட்டும் வரை.

 

இதோ,பையன் வீட்டுக்கு வந்து ஐந்து நாட்களுக்கு மேல் ஆகியிருந்தாலும்,இன்னும் அவனை நோயாளி போலவே கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்,மனிதர்.

 

அவனும் பலமுறை சொல்லிப் பார்த்தாலும்,அவரும் ஓய்வது போல் தெரியவில்லை.சரி என்பதாய் விட்டு விட்டாலும் சில நேரங்களில் கோபம் துளிர்க்கத் தான் செய்கிறது,இப்போது போல்.

 

“இப்போ எதுக்கு திரும்ப கிச்சன்கு வர்ரீங்க..? என்ன சமக்கப் போறீங்க..?”

 

“காய்கிற சூப் வக்கப் பாத்தேன்டா..குடிச்சா ஒடம்புக்கு நல்ல தெம்பா இருக்கும்..”

 

“அப்பா..உனக்கு சொன்னா புரியலயா..? நா நார்மலா தான் இருக்கேன்..இப்டி நோயாளி மாதிரி என்னப் பாத்துக்காதப்பா..” கோபத்தில் துவங்கி இறைஞ்சலில் முடித்திட,அவரோ அவனை வெற்றுப் பார்வை பார்த்து விட்டு,காய்கறிகளை சீவத் தொடங்கிட,தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய் இருந்தது,பையனின் மனநிலை.

 

வம்படியாய் அவனை சூப் அருந்த வைத்து விட்டு மாத்திரைகளை விழுங்கியவரோ,உறக்கத்தில் விழ அவரின் அறைக் கதவை பூட்டி விட்டு தன்னறைக்குள் வந்தவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை.

 

அரிதாய் அவன் இதழ்கள் தளர்ந்து புன்னகை சிந்திடும்,அவர் பாசம் உள்ளுக்குள் உயிர்ப்பெறச் செய்யும் நெகிழ்வால்.

 

ஆங்காங்கே இன்னும் சிராய்ப்புக்கள் இருக்க,அதற்கான களிம்புகளை பூசிக் கொண்டு கட்டிலில் சரிந்தான்,பையன்.

 

மாத்திரைகளை போட்டுக் கொள்ள வேண்டி இருப்பதால் முன்பு சில நாட்களாய் அடித்துப் போட்டாற் போல் உறங்குவான்.விழிகளில் உறக்கம் சொக்கிட,கட்டிலில் விழுபவனை ஆழ்ந்த உறக்கம் தழுவிட கனவுகள் கூட வரவில்லை.

 

இன்றுடன் மாத்திரைகர் தீர்ந்திருக்கவே,உறக்கம் வரத் தாமதம் ஆனது.சில நாழிகைகள் கழிய பையனையும் உறக்கம் தனக்குள் இழுத்துக் கொள்ள,நித்திரையின் முதன்மைப் படிநிலை.

 

இமைகள் இழுத்து மூடியிருக்க,கருமணிகள் அங்குமிங்கும் அசைந்தன.கண்மணிகள் உருளும் கோலம்,இமைகளுக்கு வெளியே அழகாய்த் தெரிந்தது.

 

சில நிமிடங்கள் பின்,உணர்வுகள் தளர்ந்து போக,கருமணிகளில் அசைவுகள் மெது மெதுவாய் ஓய்ந்து போயின.

 

இதயத் துடிப்பின் வேகம் தாழ்ந்திட,சிந்தையில் பிரசவமான எண்ணவலைகளும் மெதுவாகின.

 

புலன்கள் நிகழை விட்டு வெகு தொலைவுக்கு வந்திருக்க,செவியில் நுழைந்த சத்தங்கள் சிந்தையை அடையவில்லை.

 

சுவாசமதின் ஆழமும் தொய்ந்திட,ஆழ்ந்த உறக்கத்தில் அவன் விழ முற்படும் விதமாய் இமைகள் தமக்குள் அழுத்தமாய் பொத்தியிருந்தது.

 

கருமணிகளின் அசைவது முற்றுப் புள்ளி வைக்க முனையும் வேளைதனில்…

நிகழின் ஆர்ப்புக்கள் அது,அமைதியாகி அடங்கிப் போயிருந்த தருணமதில்..

எண்ணங்களுடன் உணர்வுகளும் முன்னிருப்பாய் முடிந்து கொள்ள முயன்ற சமயமதில்..

அவன் செவியோரம் அவள் குரல்!

அதே உணர்வுகளை சுமந்த அவள் குரலின் நகல்!

 

“ஒன்னுல்ல சீனியர் பயப்டாதீங்க..” அச்சுப் பிசகாமல் அவளின் வார்த்தைகள் காதோரம் கதை பேசி, செவிப்பறையை நிரப்பிட,திடுக்கிட்டு விழித்தான்,ஆர்யா.

 

இமைகள் விலகி விழிகள் முழுதாய் விரிந்திட,இதழ்களோ பிளந்து ஆழமான மூச்சிழுப்புடன் சுவாசக் குழலை நிரப்பிக் கொண்டன.படபடத்துப் போனான்,ஒரு கணம்.

 

என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து திணறி,எழுந்தமர்ந்தே விட்டான்,பையன்.மூச்சு வேறு வாங்கி அவனை படுத்தி எடுத்திட,அருகே இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து மடமடவென அவன் நீரை சரித்த வேகத்தில் திவலைகள் ஆங்காங்கே தெறித்து சிதறின.

 

சமீப நாட்களில் இப்படி நடந்தேறுவது மூன்றாவது முறை.முதலிரு முறையும் தோன்றிய பதட்டம் இம்முறையும் துளியும் குறையாமல் மிளிர,தன்னிலை புரியவில்லை,அவனுக்கு.

 

அதுவும் அந்த தவிப்பும் பதட்டமும் நினைக்கையிலேயே,அவனுள் இறங்கி அகத்தை ஏதோ செய்வது போல் தோன்றிட,பெரும் இம்சை ஜீவனுக்குள்.

 

அந்தக் குரல்!

ஆணா பெண்ணா என்று கூற முடியாவிடின் பெண்ணென்று தான் கூப்பாடு போட்டது,ஆழ்மனம்.அறுதியிட்டு உறுதியாய் கூறவும் செய்திட,அவனுக்கும் மறுக்கத் தோன்றவில்லை.

 

ஏனோ,அது யாரென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆவல் துளியாய் உருப்பெற்றாலும்,”எனக்கு எதற்கு..?” என்று கேள்வி மனதின் பெரும் வெற்றிடத்தில் வியாபித்து நிற்க,அவனின் திமிரே முதலிடம் கேட்டது.

 

வெறுமனே நன்றியுணர்வுக்காகத் தான் மனம் தேடித் தொலைக்கச் சொல்லியிருந்தால்,அது அவனுக்கு பெரிய வேலையாக இருந்திருக்காது.மருத்துவமனையில் இருக்கும் பொழுதே யாரென்று கண்டு பிடித்து இருப்பான்.

 

இங்கோ,அப்படியல்ல.

நன்றியைத் தாண்டிதோர் ஆர்வம்.அவள் யாரென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று அகத்தில் சிறு அவா.

 

அது அவனுக்கு உசிதமாய்த் தோன்றாதிருக்கவே,அவனும் அறியும் ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போட்டு இருப்பது.

 

ஆனாலும்,அடிக்கடி அவளின் குரல் அவன் செவியை உரசி இம்சித்துத் தொலைத்திட,அதில் இருந்து விடுபடத் தெரியவில்லை,பையனுக்கு.

 

“ச்சே என்ன கருமமோ..” ஆழ்ந்த மூச்சுடன் தனக்குத் திட்டியவனோ,மீண்டும் உறக்கத்தை நாட அத்தனை இலகுவாய் அது எப்படி அவனை வாரியணைத்திடுமாம்..?

 

உணர்வுகள் தொய்ந்து போனாலும்,அன்றைய விபத்தின் பொழுது அவனுக்குள் உறைந்திருந்த தருணங்களும் உணர்வுக் கோலங்களும் அவன் மனதில் அடிக்கடி மின்னி மறைய உறங்க நாழியானது,பையனுக்கு.

 

மறுநாள்,

 

“நா சொல்றத எப்போ கேட்டு இருக்க..கவனமா பொய்ட்டு வா..சத்யா கூட பைக்ல தான போற..?” அவன் நெற்றியில் விபூதியை பூசி விட்ட மனிதரின் கேள்விக்கு ஆமென்பதாய் தலையசைத்தான்,பையன்.

 

இன்று கல்லூரிக்குச் செல்ல அவன் கிளம்பியிருக்க,வேண்டாம் என்று முரண்டு பிடித்தவரை எப்படியோ சரி கட்டி இருந்தான்.ஆனாலும்,அவரின் புலம்பல் ஓயவில்லை.

 

அதற்குள் சத்யாவும் வண்டியில் வந்திட,மனிதரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்,இருவரும்.

 

வழமை போல் அவன் அமரும் அதே மரத்தடி.கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனின் பார்வை,பாவையவளின் படிய கண்ணோரங்கள் சுருங்கிட,விழிகளில் அனலேறின.

 

●●●●●●●●

 

(II)

 

டாக்டரைக் கண்டதும் அவளுக்கும் அதிர்வு தான்.அவன் அவர்களின் வீட்டுப்பக்கம் வந்து சில வருடங்கள் ஆகியிருக்க,திடுதிப்பென்று அவன் வந்திறங்கியதும்,அவள் திகைத்து போனாள்.

 

“இவ என்ன கொழந்தயோட வாசல்ல நிக்கறா..?” எண்ணியவனின் பார்வை அவளுக்குத் தெரியாமல் அவள் மீதும் குழந்தை மீதும் படிந்து மீண்டது.

 

“பேசாம இவன இவ கிட்டவே வளக்க கொடுத்துர்லாம்..” இம்முறையும் நினைத்துக் கொண்டான்,சித்தார்த்.

 

அவர்களின் வீட்டுக்கு வந்த பொழுதுகளில் அவளுக்கும் அக்காளின் மகனுக்குமான பிணைப்பை பார்க்கையில் இவ்வாறு எண்ணிக் கொள்வதுண்டு.

 

திகைப்பில் இருந்து மீண்டவளோ,குழந்தையை தூக்கிக் கொண்டு பின்வாசல் வழியே உள்ளே செல்ல,அவனுக்கு சட்டென கோபமும் வந்தது.

 

“வந்தவன வான்னு கூப்பாம உள்ள போறா..மேனர்ஸ் இல்லாதவ..” கடுப்படித்தவனுக்கு தெரியும்,அவர்களிடையே சாதாரண பேச்சு வார்த்தை கூட நிகழ்வது இல்லை என்பது.

 

கதவு தட்டப்பட எழுந்து சென்ற மருதநாயகமும் அந்நேரம்,டாக்டரை அவ்விடம் எதிர்ப்பார்த்து இருக்கவில்லை.

 

“வாங்க தம்பி வாங்க..” அவர் வரவேற்றிட,மகனைக் கண்டதும் அன்பரசனின் முகத்தில் திகைப்பின் ரேகைகள் பரவினாலும் மனதை நிம்மதியும் ஆட்படுத்தியது.

 

கூடத்தில் கேட்ட பேச்சுக் குரலில் வந்திருப்பது யாரென்று ஊகித்து விட்ட அகல்யாவும் தாயின் காதைக் கடித்திட,பார்வதியின் முகத்தில் இன்னும் தெளிவு வந்தபாடில்லை.

 

அன்பரசன் மருதநாயகத்திடம் விடயத்தை கூறுகையில்,தாயும் மகளும் அவரிடம் தமது விருப்பத்தை எத்தி வைத்திருந்தனர்.அவருக்கு சம்மதம் ஆயினும்,கணவரின் பதில் என்னவாக இருக்குமோ என்கின்ற யோசனை.மகள் ஒத்துக் கொள்வாளோ என்கின்ற பதபதைப்பு.அவையனைத்தும் மனதை போட்டு அலைக்கழித்தது.

 

“சித்து வந்துருக்கான் போல..” பரிமளா புன்னகையுடன் கூறிட,”தென்றல்” என்று குரல் கொடுத்தார்,பார்வதி.

 

காஃபி கலக்கச் சொல்கிறார் என்பதை புரிந்து கொண்டு அவளும் கலக்கிட,அதுவரை அவளின் காலைப் பிடித்து சுற்றிக் கொண்டிருந்தது,அந்த வாண்டு.

 

“தங்கம் கொஞ்சம் இருங்க காஃபி போட்டுட்டு தூக்கறேன்..” அவள் மென்மையாய் எடுத்துரைத்தும் அவளின் காலைக் கட்டிக் கொண்டு அது இருக்க,அவளிதழ்களில் புன்னகையும்.

 

கையில் காஃபி ட்ரேயுடன் அவள் வர அவளின் சுடிதாரின் நுனியைப் பிடித்துக் கொண்ட மகனைக் கண்டதும் அகல்யாவுக்கு கோபமும் வேறு.

 

மகனை பலமுறை அதட்டி அழைத்தும் அவன் வராது போக,கசங்கிய முகத்துடன் தென்றலின் பின்னே ஒதுங்கிக் கொண்டவனைக் காண்கையில் மெல்லிய சிரிப்பு மூவருக்கும்.

 

“என் பையனையே முந்தானைல முடிஞ்சு வச்சிருக்கா..கண்டிப்பா உங்க பையனையும் முந்தானலை இல்லன்னா துப்பட்டாலயாச்சும் முடிஞ்சுக்குவா..டோன்ட் வொரி..” தாயாரின் காதில் இரகசியம் பேச,அவருக்கு முறைக்கக் கூட முடியாத நிலை.

 

தாயிடம் கொண்டு கொடுக்கும் படி காஃபி ட்ரேயை நீட்டிட,அதற்குள் இடை வெட்டினாள்,அகல்யா.

 

“நீயே கொண்டு போய் கொடு தென்றல்..அத்த பாவம் தான..” அவள் வக்காலத்து வாங்க,அவள் முகம் அதிர்ந்தாலும் பின் இயல்பாகிட கூடத்துக்கு ள் சென்றாள்,அவனுக்கான காஃபியை சுமந்தவாறு.

 

அலைபேசியில் ஆழ்ந்திருந்த டாக்டரும் பாதச் சத்தங்களில் நிமிர,அவளைக் கண்டதும் அவனின் இரு புருவங்களும் ஏறி நின்றன.மகளின் திருகுதாளம் என்று புரிந்து அன்பரசனின் இதழ்களில் மெல்லிய புன்னகை பூத்தது.

 

அவளோ,அவனிடம் எவ்வித சலனமுமின்றி அவனைப் பாராது காஃபியை நீட்டிட,வெற்றுப் பார்வையுடன் அவள் வதனத்தை உரசி விட்டு அதை வாங்கிக் கொண்டான்,டாக்டர்.

 

அவள் முகத்தில் இருந்த நிர்மலம் அவனைப் போட்டுக் குழப்பியது.திருமண விடயத்துக்கான விருப்பமின்மையையாவது அவன் எதிர்ப்பார்த்திருக்க,அது எதுவும் இல்லாதது அவனுக்கு யோசனையே.

 

குரல் கொடுத்து அவன் அகல்யாவை அழைத்து விடயத்தைக் கேட்டிட,அவள் சொல்லவுமே தென்றலுக்கு இன்னும் எதுவும் தெரியாது என்கின்ற விடயமே புரிந்தது.

 

அவனோ,இந்த விடயத்தைப் பற்றி தென்றலிடம் தெளிவாய் கதைத்திட வந்திருக்க,இனி எங்கனம் அது சாத்தியமாகும்..?

 

அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பி விட முனையும் கணம்,குழந்தையும் வெளியே வந்தாள்,அவள்.

 

அனைவரும் கூடத்தில் குழுமியிருக்க,யோசனையுடன் பார்த்தவளின் கவனத்தை தன் புறம் திருப்பியிருந்தது,அவனின் அழைப்பு.

 

“தென்றல்!” உணர்வு காட்டா அவன் வார்த்தையில் அவள் விழுக்கென்று நிமிர,நேருக்கு நேரே அவள் விழிகளை வெட்டிச் சென்றது,டாக்டரின் பார்வை.

 

“உனக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா..?” சுற்றி வளைத்திடாமல் சட்டென்று உடைத்துப் பேச,மூச்சு விடக் கூட மறந்து உறைந்து போய் நின்றிருந்தாள்,அவள்.

 

மறுநாள்,

 

தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து இருந்தவளின் நினைவில் டாக்டரின் வார்த்தைகள் தான் அடிக்கடி வந்து போயின.

 

தடாலடியாய் அவன் கேட்டதும் அவள் திகைத்து விழிக்க,மற்றையவர்களும் இப்படி பட்டென்று போட்டுடைப்பான் என்று ஊகிக்காததால் சமைந்து விட்டிருந்தனர்.

 

பார்வதிக்கு மட்டும் மனதில் நிறைவு.மகளிடம் எப்படி விடயத்தைக் கூறப் போகிறோம் என்ற பதபதைப்பில் இருந்தவருக்கு டாக்டரே விடயத்தை கூறியது அத்தனை நிம்மதி.

 

“உன் முடிவு என்னன்னு யோசிச்சு சொல்லு..ரெண்டு நாள்ல..” கட்டளை போல் மொழிந்தவனோ,வீட்டினருக்கு கண்ணைக் காட்டிட,அனைவரும் தலையசைப்புடன் கிளம்பி இருந்தனர்.

 

மயக்கம் வராத குறை தான்,அவளுக்கு.அவனுடன் பேசியே பல வருடங்கள ஆகியிருக்க,அதன் பின் அவன் பேசியதே இதுவென்பது அவளை வியப்பிலும் திகைப்பிலும் குளிக்க வைத்திடாது போகாதே.

 

அனைவரும் தன் வீடு வந்ததன் காரணம் புரிந்தவளுக்கு தலை சுற்றிப் போக,இரவு முழுவதும் உறக்கம் இல்லை,அவளுக்கு.

 

அவன் கேட்டதைப் பற்றி யோசிக்கவேயில்லை,அவள்.முடியாது என்று முடிவது,மனதில் வேரூன்றி இருக்க,அதை செயல்படுத்துவதே அவளின் எண்ணம்.

 

ஆனால்,இதற்கிடையில் தாயும் தந்தையும் வந்து பேசி அவளின் மனதை கரைத்திட முயல அசையவில்லை,அவள்.

இல்லை என்றே கூறிக் கொண்டிருந்தவளின் முன்னே தங்கையின் திருமணம் இடியாய் இறங்கிட,முதன் முதலாய் அவள் உறுதி கொஞ்சம் தகர்வது போல்.

 

“சித்துவே சம்மதிச்சிட்டான்..உனக்கென்னடி..?” தாயார் கடிந்து கொள்ள,அலட்சியம் காட்டியவளின் மறுப்புக்கு,மறுப்புத் தெரிவித்தது,தந்தையின் நடவடிக்கை.

 

காதல் தேடும்.

 

2025.04.12

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. எப்படியோ தென்றலை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க போறாங்க …

    இந்த ஆர்யா கதை எங்க போய் முடியுமோ … அவ காப்பாத்துனது தெரியாம திட்ட போறான் …