Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 08

 

(I)

 

மீண்டும் பார்த்தாள்,அவனை.

 

பையனின் விழிகள் அள்ளி வீசிய உஷ்ணத்தில் தன் பார்வையைத் தழைத்துக் கொண்டவளுக்கு,தன் மீதே கோபம்.

 

“அது பத்தி தெரிஞ்சும் பாத்துருக்க பைத்தியம்..” தன்னையே திட்டிக் கொண்டு அவள் நின்றிருக்க,சில நிமிடங்கள் கடந்ததும் பேரூந்து வந்தது.

 

ஓரளவு ஆட்கள் இருக்க,அதில் ஏறிக் கொண்டவளின் பார்வை,அவனுக்கு விடைகொடுத்திட முயன்றாலும் அதை பொருட்படுத்தவே இல்லை,பையன்.

 

அவனின் குணம் தெரிந்து போயிருக்கவே,பேரூந்தில் ஏறி யன்னலோரத்தில் அமர்ந்து கொண்டவளின் பார்வை பையனை மீண்டும் நன்றியுடன் தழுவிற்று.

 

●●●●●●●

“நெஜமாவா..? அந்த டெர்ரர் தானா உனக்கு ஹெல்ப் பண்ணது..?” வியந்தவாறு கேட்டாள்,மித்ரா.யாழவள் கூறியதை அத்தனை எளிதாக நம்பிட முடியவில்லை,அவளால்.

 

“ம்ம் ஆமாடி..நா கூட எதிர்பாக்கல..நல்ல வேள அவரு வந்தது..இல்லன்னா அவனுங்க தப்பு தப்பா பேசியே அழ வச்சிருப்பானுங்க..”

 

“ஆமா நீ தேங்க்ஸ் சொன்னியா அவர் கிட்ட..?”

 

“ம்ம்கும்..தேங்க்ஸ் சொல்ல விட்டுட்டாலும்..மனுஷன் கண்ணால நெருப்ப கக்கி கிட்டு நின்னுட்டு இருந்துச்சு..இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா அந்த பார்வயே என்ன பஸ்பமாக்கி விட்ருக்கும்..என்னா ஃபயருடி அந்த கண்ணுல..கண்ணுக்கு பதிலா ரெண்டு எரிமல கெடங்க தான் வச்சிட்டு சுத்துறாரு போல..” தன்பாட்டில் பிதற்ற,அந்த நேரம் பார்த்து அவர்களை கடந்து சென்றான்,பையன்.

 

“ஆயுசு நூறுடி..” என்ற தோழிக்கு புன்னகையை பதிலாகக் கொடுத்தாள்,யாழவள்.

 

இப்படியே நாட்கள் ஓடின.முதலில் பையன் மீது அவளுக்கு கோபம் இருந்தாலும்,அன்றைய தினத்துக்கு பின் தானாய் ஒரு மரியாதை.

 

அவனின் கண்ணியமும் எந்தப் பெண்ணிடமும் ஒட்டாமல் நடந்து கொள்ளும் விதமும் அவளுக்கு வெகுவாய் பிடித்துப் போயின.அவன் மீது ஈர்ப்பில்லை.ஆனால்,அவனின் குணங்களின் மீது பிடிப்பு.

 

நிலாவும் அடிக்கடி அவனின் புகழ் பாடவே,அவன் மீது அவளுக்கு இருந்த நன்மதிப்பு வானத்தை எட்டும் அளவு வளர்ந்து இருந்தது.அவனுக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளவும் செய்வாள்,பெரும்பாலான சமயங்களில்.

 

மித்ராவுக்கு ஏனோ சிறு சந்தேகம் தோழியின் நடத்தையில்.அவனைத் தழுவும் பார்வையில் மரியாதையும் தூய அக்கறையும் நிறைந்து வழிந்தாலும்,அதை இயல்பாக எடுத்துக் கொள்ள முடியாமல் போனது,தோழியவளால்.

 

இப்படியே ஒரு மாதம் கடந்திருக்க,அன்று யாழவளிடம் கேட்டு விடவே முடிவு செய்தாள்,தோழி.

 

“யாழ்ழ்ழ்ழ்ழ்ழ்..”

 

“என்னடி..?” வாயில் அடைத்திருந்த உணவை விழுங்காமலே கேட்டாள்.இதழோரத்தில் சோற்றுப் பருக்கைகள் ஓரிரண்டு ஒட்டியிருந்தன.

 

“நா ஒன்னு கேப்பேன் நீ தப்பா எடுத்துக்க கூடாது..”

 

“என்ன அறிவிப்பு எல்லாம் ரொம்ப பலமா இருக்கு..? சரி சரி சொல்லு..நீ பேசறத எல்லாம் பெருசா எடுத்துக்க முடியுமா..?”

 

“ப்ச்ச்..யாழ் இது ஒன்னும் வெளயாட்டு கெடயாது..நா கேக்கப் போறது சீரியஸான விஷயம்..”

 

“அதத் தான் சொல்லித் தொலயேன் டி..”

 

“உனக்கு அவரு..அதான் நம்ம சீனியர் ஆர்யா அவரு மேல க்ரஷ் ஏதாச்சும் இருக்கா..?” கோர்வையின்றி வார்த்தைகள் உடைந்திடத் தான் கேட்டாள்,தோழியும்.யாழவள்,எப்படி எடுத்துக் கொள்வாள் என்கின்ற பயமும் மனதில் விரிந்து நின்றது.

 

தோழியின் வினாவின் திகைத்தாலும்,அதன் பின்னர் இயல்பாகியவளுக்கு,அவளின் கேள்விக்கான காரணம் புரிந்தே இருந்தது.

 

“ஏன் உனக்கு அப்டி தோணுதா..?” கண்ணடித்துக் கேட்டவளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் தோழிக்கு வார்த்தைகள் அடைந்து கொண்டன.

 

“இல்லடி அப்டிலாம் இல்ல..அவரு பத்தி எதுவும் தெரியாது..நாம இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ அவர ஃபேஸ் பண்ண வேண்டி வர்லாம்..உன் மனசுல அப்டி ஏதும்..?” இழுத்திட,மென்மையாய் புன்னகைத்தாள்,பாவையவள்.

 

“உனக்கு நம்ம சக்தி சார தெரியும் தான..?”

 

“ம்ம்..அதான் நம்ம கணக்கு வாத்தி..”

 

“ம்ம்..கல்யாணமாகாத மனுஷன்னு நம்ம மொத்த க்ளாஸுக்கும் அவர் மேல க்ரஷ் இருந்ததுல..ப்ளஸ் டூ வந்தாலும் அது மாறலல..”

 

“ம்ம்ம்ம்..ஏன் இப்போ அத சொல்ற..?”

 

“இருடி இரு..எனக்கு சக்தி சார் மேல இருந்தத ஃபீலிங்க க்ரஷ்னு சொல்வியா..? இல்ல அவருக்கு என் மேல இருந்தது அப்டியா..?”

 

“பைத்தியமா டி நீ..நீ நல்லா படிப்ப..நல்ல மரியாதயா அவர் கிட்ட நடந்துக்கவும் செய்வ..அதனால அவருக்கு உன் மேல ஒரு தனி மரியாத ஒரு தனி அக்கற..கள்ளத்தனம் இல்லாத பாசம் டி அது..அவருக்கு நீ நல்ல் இருக்கனும்..உன்னோட குணத்துக்கு நீ நல்லா வரனும்னு ஒரு ஆச அவருக்குள்ள..அத எப்டி தப்பா சொல்லலாம்..?”

 

“ம்ம்..சரி அவர் மேல எனக்கு இருந்த ஃபீலிங்..?”

 

“அதான் எல்லாருக்கும் தெரியுமே..உனக்கு க்ரஷ்ஷு ப்ரஷ்ஷுன்னு எதுவுமே இல்லன்னு..மனிசனுக்கு மேல சாமிக்கு கீழன்னு ஒரு எடத்துல வச்சி அவர பாப்ப..சூப்பர் ஹீரோ மாதிரி பாப்ப..”

 

“அவர் கொழந்த குட்டியோட நல்லா இருக்கனும்..? நல்ல வாழ்க்க அமயனும்..அவரு ஆச எல்லாம் நெறவேறனும்..இப்டிலாம் உன் கண்ணு முன்னாடியே அவருக்காக வேண்டி கிட்டு இருப்பேன்ல..அதெல்லாம் என்ன சொல்லுவ..?”

 

“பைத்தியமா டி நீ..அது ஒரு பாசம்..தப்பான எந்த இன்டென்ஷனும் இல்லாத ஒரு அன்பு..அவரு நல்லாருக்கும்னு வேண்டிக்கற அளவு ஒரு அக்கற..அத போய் நா எப்டிடி வேற மாதிரி நெனக்கிறது..?” கோபமும் கொஞ்சமாய் எட்டிப் பார்த்தது,அவள் வார்த்தைகளில்.

 

“அதே தான்..அதே தான் இங்கயும்..எனக்கு எரிமலக் கெடங்கு மேல இருக்குறதும் அது மாதிரி ஒரு ஃபீல் தான்..அவரு நல்லா இருக்கனும்னு நெனக்கிற அளவு ஒரு அக்கற..அவரு மேல எனக்கு க்ரஷ் இருந்தா போற வர்ர டைம் எல்லார் அவர ரசிச்சு இருப்பேன்..அவர பாக்கும் போது என் கண்ணுல கள்ளத் தனம் தெர்யும்..அப்டி ஏதாச்சும் தெரிஞ்சுதா உனக்கு..?”

 

“இல்ல..”

 

“இப்போ புரிதா அவரு மேல எனக்கு இருக்குறது ஒரு அக்கற மட்டுந்தான்..ஒரு நல்ல மனுஷன பாத்தா அவங்க மேல தானாவே ஒரு பாசமும் கரிசனமும் வருமே..அது தான் இருக்குறது..நீ க்ரஷ்ஷு அது இதுன்னு தேவயில்லாம யோசிக்காத..புரியுதா..?” அவள் அழுத்திக் கேட்கவுமே,தோழியின் மனதில் பெருத்த ஆசுவாசம்.

 

அவள் ஏதேதோ நினைத்துக் குழம்பியிருக்க,அவை மொத்தத்தையும் தீர்த்து வைத்திருந்தது,பாவையவளின் தெளிவான பேச்சு.

 

தன் மனதை தெளிவாக் கூறி விட்டதில் பாவையவளுக்கு நிம்மதி.ஓரிரு முறை தோழியின் பார்வையில் அவளுக்குமே தவிப்பு உண்டானதுண்டு.

 

அப்படியே நாட்கள் ஓடின.சில வாரங்கள் காலச் சக்கரத்தில் கரைந்திருக்க,அன்று கல்லூரி விடுமுறை தினம்.

 

மித்ரா கடைத்தெருவுக்கு சென்று விட்டு வரலாம் என்றிருக்க,குளித்து தயாராகியவளுக்கு அத்தனை இருமல்.தொண்டை வேறு கட்டியிருக்க சரிவரப் பேசவும் முடியவில்லை.குரல் அநியாயத்திற்கு மாறிப் போயிருந்தது.

 

மித்ராவும் வேண்டாம் என்று மறுத்து பார்த்திட,யாழவள் தான் உடன் வருவதாக அடம் பிடித்து கிளம்பியது.தோழியை தனியே விட மனமில்லை,அவளுக்கு.

 

“தூசா இருக்கும் மாஸ்க போட்டுட்டு போ..” தாயின் வசவோடு முகக் கவசத்தை மாட்டிக் கொண்டவள்,வெளியே வரும் போது முற்பகல் பத்து மணியை தாண்டி இருந்தது.

 

பேரூந்துக்காக அவள் காத்திருக்க,தோழியும் வந்து சேர்ந்தாள்,தொய்ந்த நடையுடன்.வந்தவளுக்கு யாழவளின் விழிகளில் தெரிந்த சோர்வு கோபத்தை கிளப்பியது.

 

திட்டித் தீர்த்தவளுக்கு,பாவையவள் சமாதானம் சொல்ல அதற்கும் காய்ந்தாள்,வழமைக்கு மாற்றமாய்.

 

“தொண்ட கட்டியிருக்கு கொரல் வேற ஆம்பள வாய்ஸ் மாதிரி..அப்போவே தேவலனு சொன்னேன்ல..எதுக்கு தான் அடம் புடிச்சி வந்தியோ..?போ போடி வீட்டுக்கு..” அவள் விரட்டிட,உறுத்து விழித்தாள்.

 

“நா ஒன்னும் நீ கூப்டதுக்காக வர்ல..சும்மா இரு..” அதட்டி சில நொடிகளிலேயே பேரூந்து வந்திட,இருவரும் ஏறிக் கொண்டனர்.

 

பத்து நிமிடங்களில் கடைத்தருவை வந்தடைய,அங்கு திரள் திரளாய் சனம்.நகர்ப்புறத்தில் அமைந்திருக்கும், பெரிய கடைத்தெரு அது.கிட்டத்தட்ட மூன்று கடைத்தெருக்களின் கூட்டு.ஒரு தெருவில் இருந்து இன்னொரு நடந்து செல்ல முடியாத அளவு பெரிய பரப்பு.

 

பிரதான வீதிகளும் அவை ஊடாகச் செல்ல,கடந்து செல்லும் வாகனங்களின் சத்தங்கள் எரிச்சலை கிளப்புவதும் உண்டு.

 

அலைந்து திரிந்து தேவையானவற்றை வாங்கிக் கொண்டு இருவரும் கிளை வீதியொன்றிற்கு அருகில் நிற்க,அவ்விடம் மட்டும் அவ்வளவாய் ஆட்கள் இல்லை.நிம்மதியாய் பெருமூச்சு விட்டவர்கள்,சுற்றத்தை ஆராய அவ்விடம் தான் தன் இரு சக்கர வண்டியில் அமர்ந்து இருந்தான் பையன்,அவர்களில் நின்றிருந்த அதே பக்கத்தில் கொஞ்சம் தள்ளி.

 

தலை சரித்து கழுத்த வருடியவாறு சிகை கோதியவனைக் காண்கையில் அவளுக்கு மெல்லிய சிரிப்பு.

 

“இந்த மேனரிசத்த மாத்தவே மாட்டாரு போல..” மித்ரா வேறு காதருகே கிசுகிசுத்திட,ஆமோதிப்பாய் தலையசைத்தவனின் மன எண்ணமும் அதுவாகத் தான் இருந்தது.

 

அவளின் பார்வை அவனில் படிந்து மீளும் பொழுதுகளில் அவன் ஒரு தடவை கூட அந்த மேனரிசங்களை செய்யாமல் விட்டதில்லை.வெகுநாள் பழக்கம் என்று அவள் பலமுறை நினைத்ததும் உண்டு.

 

அதே எண்ணத்துடன் அவனைப் பார்த்திருக்க ,அவனோ அலைபேசியில் தீவிரமாக கதைத்துக் கொண்டிருந்தவனோ,இருவரையும் கவனிக்கவில்லை.அது தான் விதி போலும்.

 

அவள் அவனின் முகபாவங்களை பார்த்திருந்தாள்.இத்தனை நேரம் நிலவிய அமைதி குழைந்து முகமோ சடுதியான பதட்டத்தை தத்தெடுத்திட,விருட்டென்று வண்டியில் இருந்து இறங்கியவனோ பார்வையோ எதிர்ப்புறம் இருந்த மருந்தகத்தை தழுவியது.

 

விழிகளில் மெல்லிய அலைப்புறுதல் மின்ன,மனதுக்குள் முகிழ்ந்த சிந்தனையுடன் பாதையை மாறப் பார்த்தவனோ,கவனிக்க மறந்து போயிருந்தான்,அதிவேகமாக வந்த வாகனத்தை.

 

யாழவள் கவனித்திட,உள்ளுக்குள் பெரும் பதட்டம்.”சீனியர்..” என அவள் அழைத்தது அவன் செவியில் நுழைந்திடாது போக,பாதங்களோ அவனை நோக்கி நீண்டிருந்தது.

 

நான்கடி எடுத்து வைக்கும் முன்னமே விரைந்து வந்தவளோ, அழுந்தப் பற்றியிருந்தாள்,பையனின் கரத்தை.

 

●●●●●●●●

 

(II)

 

யோசனை தேங்கிய முகத்துடன் டாக்டரைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்,மூவரும்.அகல்யாவின் விழிகளில் ஏராளமான கேள்விகள்.

 

அவசரமாக தன்னை வரச் சொன்னவனின் செயலுக்கான காரணத்தை இன்னும் அவளால் ஊகித்திட முடியவில்லை.

 

“வா வான்னு அவசரமா அழச்சிட்டு எதுக்கு அமைதியா இருக்க..? என்ன விஷயம்னு எங்க மூணு பேரயும் கூப்டு உக்கார வச்சிகிட்டு இருக்கடா..?”

 

“எனக்கு தென்றல கல்யாணம் பண்ணிக்க சம்மதம்..” அவன் நேரடியாய் போட்டுடைத்திட,மூவரின் முகத்திலும் அதிர்வு.அவன் கூறியதை கிரகித்து உள்வாங்கிடவே சில நொடிகள் தேவைப்பட,விடயம் புரிந்ததும் அவர்களில் உண்டாகிய மகிழ்வுக்கு அளவே இல்லை.

 

“நெஜமாவா டா சொல்ற..?” விழிகளில் நீர் ததும்பிட கேட்ட பரிமளாவின் மனதில் பரந்து விரிந்த நிம்மதியை உரைத்திட,சத்தியமாய் வார்த்தைகள் போதாது.

 

அவரின் ஏக்கம் அவனுக்கு சுருக்கென்றிருக்க,எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாத பாவத்துடன் தலையசைத்தான்,ஆமோதிப்பாய்.

 

விழிகள் கலங்க இதழ் நிறைய புன்னகைத்தவரின் பார்வை,கணவரைத் தழுவிட அவரின் முகத்திலும் நிறைவின் சாயல்.

 

“சித்து யோசிச்சு தான சொல்ற..? வெளயாடலயே..?” கறாராகத் தான் கேட்டாள்,அகல்யா.இத்தனை நாள் இழுத்தவன்,திடீரென்று சம்மதம் சொன்னது அவளுக்குள் சில சந்தேகங்களை கிளப்பி விட்டது.

 

“அவனே நல்ல மனசு வந்து ஒத்துகிட்டு இருக்கான்..நீ எதுக்குடி தோண்டித் துருவுற..?” தாயார் கடிந்திட,தமக்கையின் விழிகளில் தீர்க்கம்.பதில் சொல்ல வேண்டும் என்கின்ற தோரணை அவளில்.

 

“ஆமா அகல்..” அத்துடன் நிறுத்தினான்,டாக்டர்.அவனுக்கு அனைவரின் மனநிலையும் புரிந்து தான் இருந்தது.

 

“அப்டின்னா இன்னிக்கே போய் அண்ணன் வீட்ல பேசலாங்க..” நெகிழ்வுடன் தாயார் கூறிட,மறுப்பு சொல்லவில்லை மகனானவன்.

 

“பெரியவங்க நீங்க போய் ஃபர்ஸ்டு பேசுங்க..அப்றம் சரின்னா நா வர்ரேன்..” தோள் குலுக்கலுடன் அவன் நகர்ந்து விட,ஒத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்,பெற்றவர்களுக்கும் உடன் பிறந்தவளுக்கும்.அவன் இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே,அவர்களுக்கு போதுமாய் இருந்தது.

 

இரவு எட்டரை மணிக்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருக்க,சமயலைறையை ஒழுங்கு படுத்துக் கொண்டிருந்தாள்,தென்றல்.

 

பணி முடிந்து வந்து களைப்பாக இருந்தாலும்,இழுத்துப் போட்டுக் கொண்டு வீட்டு வேலைகளையும் செய்வாள்.

 

அகத்தின் கனம் உறக்கத்தை மறுக்க,தேகத்தின் களைப்பது அதை ஈடுகட்டும் விதமாய் நித்திரையை இழுத்துக் கொள்ளவே,இத்தனை வேலைகளையும் செய்வதே.தேக அசதி மட்டும் இல்லையென்றால்,அவளுக்கும் உறக்கத்துக்கும் பலமைல் தூரங்கள் இருந்திருக்கும்.

 

பாத்திரங்களை கழுவி ஒதுக்கிக் கொண்டிருக்கையில் ஆட்களின் பேச்சுக்குரல் செவயில் விழ,அகல்யாவின் சத்தமே போதும் வந்திருப்பது யாரென்பதைக் கூறிட.

 

அவளில் எந்த மாற்றமும் இல்லை.காஃபி போட வெந்நீரை கொதிக்க வைத்தவளோ,கைகளை துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள்,மரியாதை நிமித்தமாக.

 

“என்ன தென்றல் ரொம்ப வேலயோ..?” அகல்யா சிறு புன்னகையுடன் வினவினாலும்,அவள் பார்வையில் வேறேதோ தெரிந்தது.பரிமளாவின் பார்வை அவளை நெகிழ்வும் மகிழ்வுமாய் வருடிச் செல்ல,காரணம் புரியாமல் குழம்பி நின்றாள்,அவள்.

 

“கொஞ்சம் வேலதான் கா..” அவள் இதழ் விரித்திடா புன்னகையுடன் உரைத்திட,நீர் அருந்திக் கொண்டிருந்தவளுக்கு புரையேறிற்று.

 

“நா அக்கான்னா சித்து அண்ணாவா..ஓஹ் நோஓஓஓஓஓ” மனதால் அலறியவளோ,விழிகள் விரிய தாயாரைப் பார்த்திட,அவரோ பார்வையால் அடக்கினார்,மகளை.

 

“சரி நா காஃபி போட்டு கொண்டு வர்ரேன்..” என்று அவள் உள்ளே நகர்ந்திட,முன் கூடத்தில் இருந்த அன்பரசனோ மெதுவாய் பேச்சைத் துவங்கினார்,மருதநாயகத்திடம்.

 

“மச்சான்..சங்கவியோட கல்யாண விஷயம் என்னாச்சு..?” என்கவும்,சட்டென மாறிப் போனது,முன்னிலையில் இருந்தவரின் முகபாவம்.

 

“என்னன்னு சொல்ல..? பாத்து விசாரிச்சப்போ ரொம்ப நல்ல பையன்னு தெரிய வந்துச்சு..சங்கவிக்கும் ரொம்ப புடிச்சி இருக்கு..ஆனா அவங்க வீட்ல அக்கா இருக்குறப்போ தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வக்க தயங்குறாங்க..”

 

“…………………..”

 

“அந்த பையனுக்கு ஏதோ தோஷம் இருக்காம்..ரெண்டு மூனோ நாலு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணி வச்சே ஆகனுமாம்..அக்காவுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியாவது வச்சு இருந்தா இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சு இருக்கலாம்னு இழுத்து கிட்டே இருக்காங்க..நல்ல எடம் மச்சான்..விட்டுடவும் முடில..”

 

“தென்றல் கல்யாணம் நடந்தா தான் சங்கவி கல்யாணத்துக்கு ஒரு வழி வரும்ல..”

 

“ம்ம்..” என்றவரில் இருந்து தன்னாலே பெருமூச்சொன்று.

 

“மச்சான் உங்கள சந்தர்ப்ப வசத்துல கட்டாயப்படுத்தி கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க..சித்து இவ்ளோ நாள் கல்யாணம் வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தான்ல..அவன் இப்போ கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான்..”

 

“அப்டியா..?” என்று கேட்டவரின் விழிகளில் மகிழ்வு தெரிந்தது.

 

“ம்ம் இது வர பல பேர பாத்தும் வேணான்னு சொன்னவன் தென்றல் தான் பொண்ணுன்னதும் சரின்னு சொல்லிட்டான்..” அவர் கூறியதை கேட்டவரின் விழிகளில் அதிர்வலைகள்.

 

“ஏன்னு தெரில..சரின்னு சொல்லிட்டான்..அக்லாயா தான் சித்துவுக்கு தென்றல் பொண்ணு கேப்போம்னே சொன்னா..நா கூட பயந்தேன்..ஆனா அவனே ஒத்துகிட்டான்..உங்களுக்கு சம்மதமா..?”

 

“எ..எனக்கு சம்மதம் தான்..ஆனா அ..அவ மனசுல வேற ஒருத்தன்..” அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை,அவருக்கு.

 

“இத்தன நாள் வர தென்றல நாம யாரும் கல்யாணம் பண்ணிக்கோன்னு ஃபோர்ஸ் பண்ணதில்ல..ஆனா இப்போ அது நடந்தாக வேண்டிய கட்டாயம்..அவள கட்டாயப்படுத்துறது சரியில்ல தான்..ஆனா அதுக்குன்னு சேரவே முடியாது பிடிக்கவே இல்லன்னு விட்டுட்டு போனவன நெனச்சு எவ்ளோ நாள் தான் அவளயும் விட்டு வக்க முடியும்..?”

 

“…………………”

 

“ஒரு வேள அந்த பையன் கூட சேத்து வக்க முடியும்னா ஏதாச்சும் பண்ணி இருக்கலாம்..அவளோ நெனப்பு இல்லாத ஒருத்தனுக்காக இவ எவ்ளோ நாள் தான் தன்னோட வாழ்க்கைய அழிச்சிக்கிறது..? நா முன்னாடியே உங்க கிட்ட இந்த விஷயத்த பேசி இருக்கேன்ல..அப்போ அவ வாழ்க்க நல்லாருக்கனும்னு மட்டுந்தான் யோசிச்சேன்..இப்போ என் பையன் வாழ்க்கயும் இருக்கு..அவள கட்டாயப்படுத்துங்கன்னு சொல்லல..சுயநலமா தெரிஞ்சாலும் பரவால..அவள ஒரே ஒரு தடவ கன்வின்ஸ் பண்ணி பாக்கலாம்..அப்றம் அவ இஷ்டம்..” பேசி முடித்தவருக்கு,எல்லாம் சரியாக நடந்து விட வேண்டும் என்கின்றே வேண்டுதல்.

 

“சித்துவுக்கு அவ ஒரு பையன விரும்புறதுஉஉஉஉ”

 

“எல்லாம் அவனுக்கு தெர்யும்..அதுவும் இல்லாம தென்றல் கல்யாணத்துக்கு ஒத்து கிட்டா அவ மனசுல எப்டி எடம் புடிக்கிறதுன்னும் என் பையனுக்குத் தெர்யும்..நா மொதல்ல தென்றல கன்வின்ஸ் பண்ற வழிய பாப்போம்..”

 

கூடத்தின் பேச்சுச் சத்தம் கேட்டிட,அகல்யாவின் மகனைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்திருந்தாள்,தென்றல்.

 

“நம்ம சொந்தத்துல எத்தன குட்டிப் பசங்க இருக்காங்க..என் புள்ள மேல மட்டும் யார் மேலயும் இல்லாத பாசம்டி உனக்கு..” அகல்யா அங்கலாய்த்தவாறு தான்,மகனை நீட்டியிருந்தது.

 

குழந்தையை அணைத்தவாறு தூக்கி இருந்தவளோ,வாண்டின் கன்னத்தில் மென்மையாய் முத்தம் பதிக்க அதுவும் கிளுக்கிச் சிரித்தது.

 

ஏனோ அகல்யாவின் வார்த்தைகள் நினைவில் வர,மெல்லிய புன்னகை தவழ்ந்தது இதழரோம்.அவள் கூறியது உண்மை தான்.அவளின் மகன் மீது அவளுக்கு இனம் புரியா பிடித்தம்;கொள்ளை விருப்பம்.

 

அவள் மகனுடன் அவர்கள் வீடு வரும் போதெல்லாம்,அந்த வாண்டுடன் தான் இவளின் பொழுதுகள் கழியும்.அவ்வளவு ஒட்டுதல்.

 

அவனின் பெயரை சுமந்து நிற்கும் அந்தக் குழந்தையின் மீது எங்கனம் ஒட்டுதல் வராமல் போவதாம்..?

 

மெல்ல குழந்தையின் கேசத்தை கோதி உச்சியில் முத்தமிட்டு நிமிர்கையில்,சரேலென வந்து நின்றது வண்டியொன்று.

 

யாரென்று அவள் அதிர்ந்து பார்த்திட,கார்க்கதவை திறந்து கொண்டு ஷர்ட் காலரை சரி செய்தவாறு கீழிறங்கினான்,டாக்டர்.

 

காதல் தேடும்.

 

2025.04.10

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. வணக்கம் சகி … உங்க நாவலை சீரிஸ் மாதிரி பதிவு பண்ணுங்க … அந்த சீரிஸ் ல இதோட எல்லா அத்தியாயங்களும் பதிவு பண்ணுங்க … அப்போதான் படிக்க வர்றவங்க எல்லா அத்தியாயங்களும் படிக்க வசதியா இருக்கும் … அது பத்தி ஏற்கனவே சொல்லி தந்திருப்பாங்களே …

  2. அந்த பையன் பெயர் ஆர்யாவா ?! சோ யாழ் அவனை காப்பாத்திட்டா … லவ் வந்திடுமோ …

    இங்க தென்றல் டாக்டருக்கு ஓகே சொல்வாளா ?? யாழ் தான் தென்றலா ??