Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 07

 

(I)

 

நிலைக்கண்ணாடியின் முன்னே நின்று தன் முகத்தை அங்குமிங்கும் திருப்பிப் பார்த்தாள்,யாழவள்.கன்னத்தின் வீக்கம் கொஞ்சமே கொஞ்சம் தான் இறங்கி இருந்தது.

 

“பலகாரம் மாதிரி வீங்கி இருக்கு..” அடிபட்ட கன்னத்தை மெதுவாய் விரல்களால் தடவிக் கொடுத்தவளுக்கு,பையனின் மீது கோபம் துளிர்க்க நிலாவின் எண்ணமும்.

 

பையனின் நடத்தையில் சிறு சந்தேகம் முளைத்திருக்க,நிலாவிடம் கேட்க அவள் சங்கடப்படும் போதே,அவளிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.

 

“சாரி டி..நா இன்னும் ஆர்யா கிட்ட ஒன்னும் சொல்லல..சீக்கிரம் சொல்லிர்ரேன்..” என்கவும் தான்,அவனின் அலட்சியபாவத்துக்கான காரணமே பிடிபட்டது.

 

அவளும் அதைப் பற்றி பெரிதாய் யோசியாது விட்டு விட்டாலும்,இப்பொழுது முகத்தை ஆராய்கையில் பையனின் கோபத்தின் மீது சிறு கோபமும்.

 

“எரிமலக் கெடங்கே தான் அது..” கடுப்படித்தவாறு,தலையை வாரிப் பின்னலிட,அதுவோ வழமை போல் முதுகுடன் முற்றுப் பெற்றது.

 

விழிகளும் நுதலும் மட்டும் வெளித்தெரியும் விதமாய்,முகக் கவசத்தை மாட்டிக் கொண்டவளுக்கு,ஏனோ கல்லூரி செல்ல மனமும் இருக்கவில்லை.

 

தளர்ந்த நடையுடன் பேரூந்து நிறுத்தத்திற்கு வந்தவளுக்கு பசி ஒரு புறம்.வாங்கிய அடியில்,உணவை மெல்லும் போது வலியெடுக்க,உண்ணாமல் தவிர்த்து விட்டு வெறும் ஒரு கப் காஃபியுடன் கிளம்பி இருந்தாள்,வீட்டில் இருந்து.

 

நேற்றிரவும் இதே நிலமை தான்.தாயாரோ,வழமைகைகு மாறாய் கஞ்சி வைத்துக் கொடுக்க,பசிக்காக விழுங்கியவளுக்கு,ஏனோ அது பிடித்தமில்லையும் கூட.இன்றும் தாயார் தயார் செய்து வைத்திருந்தாலும்,அதை குடிக்காமல் வந்து விட்டாள்,அவரின் திட்டுக்களுடன்.

 

பேரூந்து வரவும் ஏறி தோழியின் அருகில் அமர்ந்து கொள்ள,மித்ராவின் பார்வை கேள்வியுடன் அவள் முகத்தில் படிந்தது.தோழி அவள்,மறந்து விட்டிருந்தாள் நேற்றைய நிகழ்வதை.

 

“பான மாதிரி வீக்கம் அப்டியே இருக்கு டி..” அப்பக்கத்தை கரத்தால் பொத்தியவாறு மெதுவாய் கூறினாள்.அதை கூறி முடிக்கையிலேயே வாய் வலித்தது.

 

“ஓஹ்!” என்றவள்,சுற்றும் முற்றும் பார்த்து விட்டு முகக்கவசத்தை கீழிறக்கிட,அவளின் விழிகளும் அதிர்வை ஏற்றன.

 

“கொஞ்சம் கொறஞ்சி தான் இருக்கு..”பாவையவளைத் தேற்றத் தான் உரைத்தது.அவளுக்குமே யாழவளைப் பார்க்கையில் பாவமாகிற்று.

 

“என்ன யாழ் திடீர்னு மாஸ்க் எல்லாம்..? ஃபீவரா நல்லா தான இருந்த நேத்தெல்லாம்..”வகுப்பறைக்குள் நுழையும் போதே,எதிர்ப்பட்ட தோழி ஒருத்தி கேட்டிட,மழுப்பி சமாளித்தவளுக்கு சரியாக பேசிக் கொள்ளவும் ஒத்துழைக்கவில்லை,கன்னம்.

 

காண்போர் எல்லாம் கேள்வியாய் கேட்டு படுத்தி எடுத்திட,பதில் சொல்லி முடிக்கையில் போதுமென்றாகி விட்டிருக்க,மித்ரா இருந்ததால் தான் ஓரளவு சமாளிக்க முடிந்ததே.

 

அனைவரின் முன்னும் முகக்கவசம் சகிதம் சுற்றித் திரிந்தவளுக்கு,அதை அகற்றி விட்டு உண்ணக் கூட முடியவில்லை.கேலிப் பொருளாகி மாறுவதற்கும் கேள்விக்கணைகளுக்குள் விழுவதற்கும் பயந்தாள்,யாழவள்.

 

இடைவேளை நேரம் யாருக்கும் தெரியாமல் மரத்தடியில் வந்தமர்ந்தாள்,தோழியுடன்.அதே மரத்தடி,பையன் வழமையாய் வருமிடம்.

 

“இந்தாடி நீ கேட்ட ஜூஸ் பாக்கெட்..” என்றவாறு மித்ரா நீட்டியதை வாங்கியவளின் விழிகளோ,சுற்றத்தை அலசின.வகுப்பறைக்கு செல்ல பயந்து தான் இங்கு வந்ததே.அவளின் நேரம் போலும்,யாரும் இருக்கவில்லை சுற்று வட்டாரத்தில்.

 

பெருமூச்சுடன் முகக் கவசத்தை கீழிறக்கியவளோ,ஜூஸ் பாக்கெட்டை பிய்த்து மடமடவென வாய்க்குள் சரித்தாள்.சில நொடிகளில் காலியாகிய ஜூஸ் பாக்கெட் அவள் பசியின் வீரியத்தை.

 

“ரொம்ப பசிக்கிதா..?”கேட்டவாறு தனது கையில் இருந்த ஜுஸ் பாக்கெட்டையும் தோழி நீட்ட,மறுக்காமல் வாங்கி பருகியவளுக்கு அவ்வளவு பசி.

 

“வா வேணும்னா போய் இன்னும் ஏதாச்சும் வாங்கிட்டு வர்லாம்..”கேட்ட தோழிக்கு புரிந்ததே,பாவையவளின் விழிகளில் அப்பட்டமாக தெரிந்த சோர்வு.

 

“போதும் ப்ரேக் டைமும் முடியப் போகுதுல..” என்றவாறு அவள் மறுத்திட,இருவரும் எழுந்து கொண்டனர்,விரிவுரை மண்டபத்துக்குள் செல்ல.

 

முகக் கவசத்தை சரி செய்தவாறு பாவையவள் எழவும்,தலை கோதியவாறு பையன் வரவும் சரியாய் இருக்க,சடுதியான அதிர்வை தத்தெடுத்துக் கொண்டன,அவள் விழிகள்.

 

“எரிமல எதுக்கு என்ட்ரீ கொடுக்குதுன்னு தெரிலியே..” உள்ளுக்குள் மருகியவாறு, பதபதைப்புடன் கடந்து செல்ல முனைய,சரியாகக் கண்டு கொண்டான்,பையன்.

 

“இந்த அரமெண்டல் எதுக்கு மாஸ்க் போட்டுட்டு சுத்துது..?” யோசித்தவனோ,அவளை கடந்து சென்றாலும்,விழிகளில் அவளில் படிந்து மீண்டன,அழுத்தமாய்.

 

அன்றே,அவளை மறுமுறை காண்கையில் அவளின் முகக்கவச மறைப்புக்கான காரணமே புரிந்தது,பையனுக்கு.

 

“அவ்ளோ ஃபோர்ஸாவா நாம எட்டி ஒதச்சோம்..?” தனக்குள் சிந்தித்தவனுக்குள் மெல்லிய குற்றவுணர்வு எட்டிப் பார்த்தாலும்,அவளென்பதால் அது மேலெழும்பாலே அடங்கிப் போயிற்று.

 

கல்லூரி விட்டு வரும் வழியில் பேரூந்துக்காக பாவையவள் காத்திருக்க,அடித்துப் பெய்து கொண்டிருந்தது,மழை.

 

மரத்தடியில் ஒதுங்கி நின்றவளோ,குடையை அரணாக்கி இருக்க,ஏனோ தனிமை கொஞ்சம் பயத்தை தந்தது.

 

செய்யவிருந்த அசைமண்டை முழுதாய் முடித்து விட்டுக் கிளம்புகையில் ஆறு மணியை எட்டியிருக்க,கொட்டிய மழையின் விளைவால் இருளின் மெல்லிய போர்வையும்.

 

குடையை இறுகப் பிடித்தவாறு அவளிருக்க,உதவிக்கேனும் யாரும் இல்லை,அங்கு.கல்லூரி முடியவே,பலரும் கிளம்பி இருந்தனர்.

 

ஏனோ சிறியதோர் பயம்,அவளுக்குள்.அதுவும் தமக்குள் கலாய்த்தவாறு ஆடவர் கூட்டமொன்று நிற்க,நெஞ்சே அடைத்து விட்டது.

 

கற்பனை வேறு பல திக்கில் திரிய,இதழ்களுக்குள்ள்ல் கடவுளிடம் வேண்டியவாறு நின்றிருந்தவளுக்கு புரியாமல் இல்லை,அவர்களும் அவள் கல்லூரியில் படிப்பவர்கள் என்று.

 

முதலில் விளையாட்டாய் அவள் மீது படிந்த பார்வை,அவளைப் பற்றிய பேச்சுக்களை கொண்டு சேர்ப்பிக்க பாவையவளுக்கு அத்தனை பயம்.

 

நெஞ்சத்தில் படையெடுத்த அச்சத்துடன் அவள் சில அடிகள் தள்ளிப் போக,அது புரிந்தவர்களும் கலாய்த்து சிரித்து கோணல் வார்த்தைகளை உதிர்த்திட,சட்டென விழிகளில் நீர் கட்டிக் கொண்டது.

 

எல்லோரும் ஒன்று போல் இருப்பதில்லை என்று அவளுக்கு தெரிந்தாலும்,அப்படியானவர்களை முதன் முறை எதிர் கொள்ளத் தெரியாது தவித்தவளுக்கு,தொண்டையில் வந்து நின்றது,அழுகை.

 

பேரூந்தும் வந்தபாடில்லை.அவ்விடத்தை விட்டு வேறிடம் செல்லவும் முடியாது.தந்தையும் வீட்டில் இல்லாதிருந்தது ஒரு புறம் என்றாலும்,அலைபேசி வேறு சார்ஜ் தீர்ந்து அணைந்தும் போயிருந்தது.

 

என்ன செய்வதென்று புரியாமல் விழித்தவளுக்கு,எதுவும் பிடிபடவில்லை.அதுவும் அவர்களின் பார்வையும் பேச்சுக்களும் கோணலாய் மாறிட,அழுகையை அடக்கிக் கொண்டு நின்றவளின் விழிகளில் சட்டென நிம்மதியின் சாயல்.

 

உள்ளமது ஆசுவாசத்தில் விழ,கட்டியிருந்த கண்ணீர் கன்னம் தீண்டி கரை கடந்திட,அதை துடைக்கக் கூட மறந்தவளின் நீள விழிகளின் கோளக் கருமணிகளை ஆட்படுத்தியது,பையனின் நெடிய உருவம்.

 

வழமை போல் அதே மேனரிசம்.மழையில் நனைந்து கொண்டே,ஈரம் சொட்டும் சிகையுடன்,தலையை கொஞ்சம் சரித்து கழுத்தை வருடியவாறு அவளை நோக்கியே நீண்ட வண்ணம் இருந்தன,அவன் பாதங்கள்.

 

பையனுக்குமே,இன்று வேலையொன்று வந்திருக்க,அது முடிவடைய நேரம் கடந்திருக்க,வெளியில் வரும் போது தான் கவனித்தான்,அவளை.

 

அந்த ஆடவர் கூட்டத்தையும் அவளையும் பார்த்தவனுக்கு நொடியில் நிலமை புரிந்து போகவே வந்திருந்தான்.

 

அவனுக்கு பெண்களை பிடிக்காது தான்;யார் மீதும் நம்பிக்கை இல்லை தான்.அதற்கென்று அவளை ஆடவர் கூட்டத்தின் மத்தியில் தனியாக விட்டுச் செல்லும் அளவு இறுகியவன் இல்லை,அவன்.

 

அவன் அவளருகில் வந்து நின்றதும் அவள் அகத்தில் அடைந்து கொண்ட நிம்மதிக்கு அளவே இல்லை.அப்படியொரு பாதுகாப்புணர்வு.

 

மனதுக்குள் குமிழிட்ட நிம்மதியும் ஆசுவாசமும் அவளின் முகத்தில் கோடு கீறிட,அதை அவளே உணரவில்லை.

 

நிலா,சொல்ல அவனின் குணம் பற்றி ஓரளவு தெரிந்தவளுக்கு,அவனை மற்றையவர்களைப் போல நினைக்கத் தோன்றவும் இல்லை.நினைக்கும் படி அவன் நடந்து கொள்வதும் இல்லையே.

 

முகக் கவசம் தாண்டி வெளியே தெரிந்த விழிகளோ,அவனுக்கான நன்றியுணர்வை நவிழ்ந்திட,அதற்கும் அலட்சிய பாவம் தான் காட்டினான்,அந்த அடங்காதவன்.

 

உட்கன்னத்தை நாவால் அதக்கி,விழிகள் நிமிர இடப் புருவத்தை ஏற்றி இறக்கியவனின் இமைக்கதவுகளும் நக்கலாய் மூடித் திறக்க,கருமணிகள் முனைக்கு ஓடிட,அவன் பார்வை அவளைத் தொடவே இல்லை,கிஞ்சிற்றும்.

 

பையன் வந்து பாவையவளின் பக்கத்தில் வந்து நின்றதும்,அந்த ஆடவர் கூட்டம் பம்மிக் கொண்டே போக,அதை கவனித்தவளுக்கு வியப்பு வேறு.

 

“சீனியர் டா..ஓடுங்கடா..” அவர்களை தமக்குள் கூறிக் கொண்டு அகன்றிட,அதுவும் அவள் செவிகளில் தெளிவாகவே விழுந்தது.

 

அடிக்கடி ஈரம் தோய்ந்த சிகையை கோதிக் கொண்டு,பார்வையை தூரத்தில் நிலைக்க விட்டு நின்றிருந்தவனின் விழிகளில் மறந்தும் அவள் புறம் திரும்பவில்லை.திரும்பலுக்கான துலங்கலும் அக்கணம் அவன் மனதில் இல்லையே.

 

“எரிமல கெடங்கு டெரர் பீஸு தான் போல..” இதழ் பிதுக்கலுடன் எண்ணியவளின் விழிகளது,தற்செயலாய் அவனை நன்றியுடன் தழுவிட,அதைக் கண்டு திரும்பி முறைத்தவனின் விழிகளில் உஷ்ணம்.

 

அவ்வுஷ்ணத்தில் அவளை விழிகளை நிலத்தில் படரவிட, அவன் ஓரவிழிகளில் முறைப்பு மீதமிருந்தது.அவள் நன்றிக்கு அவன் வேறு அர்த்தம் கற்பித்துக் கொண்டு இருப்பான்,போலும்.

 

பாரிய இடி முழக்கம்.

திடுமெனே செவியை அதிர வைத்த ஓசையில்,அவள் சற்று சத்தமாகவே அலறி விட்ட,அவன் பார்வை திரும்பி அவளைத் தீண்டிட,விழிகளை இறுக மூடி இருந்த அவளின் தோற்றத்தைக் கண்டு இதழ் வளைத்தான்,எள்ளலாய்.

 

“இரிட்டேட்டிங்..” கடுப்பூற எண்ணியவனுக்கு தெரிந்திட வாய்ப்பில்லை,மறுமுறை அவளை இப்படிக் காணும் தருணம்,அவனிதழ்கள் உச்சரிக்க வார்த்தை தேடி தவிக்கப் போவதை.

 

 

●●●●●●●

(II)

 

தங்கையின் வார்த்தைகளை கிரகித்துக் கொள்ளவே,சில நொடிகள் தேவைப்பட்டது,தென்றலுக்கு.

 

“நானும் சஞ்சீவும் லவ் பண்றோம்..” அவள் சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாகக் கூறிட,முதலில் அதிர்ந்தவளுக்கு அவ்வளவு எளிதாய் நம்பிட முடியவில்லை.விழிகளில் சந்தேகத்துடன் பார்த்து வைத்திட,தங்கையானவளுக்கு மனம் பிசைந்தது.

 

“நெஜமா தான் கா..காலேஜ் இருக்குறப்போவே அவனுக்கு என் மேல சின்ன விருப்பம் இருந்தது..எங்க ஆஃபீஸ் பக்கத்துல தான் அவனோட மால் இருக்கு..அடிக்கடி வந்து போவான்..”

 

“…………………”

 

“அப்றம் எனக்கு ப்ரபோஸ் பண்ணான்..ஃபர்ஸ்டு வேணான்னு தான் சொன்னேன்..அப்றம் எனக்கும் புடிச்சிது..லவ் பண்ணோம்..எப்டியும் வீட்ல தெரிஞ்சா ஒத்துக்க மாட்டீங்கன்னு தான் அர்ரேன்ஜ் மேரேஜ் மாதிரி ப்ரபோஸல் கொண்டு வந்தோம்..” அவள் அக்காவை பாராமலே கூறி முடித்திட,தென்றலிடம் இருந்து பெருமூச்சொன்று.

 

அவள் வாழ்க்கையில் தீர்மானம் எடுத்து விட்டு தங்கை கூறுகையில் பதிலேதும் பேசவில்லை.மௌனத்தை அவள் தனக்குள் சேர்த்திட,தங்கைக்கு தான் மனம் அடங்க மறுத்தது.

 

ஏதாவது பேசேன் என்கின்ற பாவனையுடன் தவிப்பாய் தமக்கையிடம் பார்வை தாவிட,மெல்ல தன்னை மீட்டுக் கொண்டு இயல்பானாள்,தென்றல்.

 

அவள் காதலைப் பற்றி கருத்து எதுவும் கூறும் நிலை இல்லை,தற்சமயம்.திருமணமும் கை கூடி வந்திருக்க,அவளும் அதைப் பற்றி என்ன தான் சொல்வதாம்..?

 

“சரி இப்போ எல்லாம் ஓகே தான..நீ எதுக்கு அழுதுகிட்டு இருக்க..?” என்ன பிரச்சினை என்று பிடிபவில்லை,அவளுக்கு.

 

“சஞ்சீவ் வீட்ல உனக்கு கல்யாணம் நடக்காம என்ன கட்டிக்க விடமாட்டாங்கன்னு சொல்றான்..” என்கவும் அவள் விழிகள் தெறித்து விரிந்தன.

 

திருமணம் என்றதுமே மூச்சடைப்பது போல் இருந்தது,தென்றலுக்கு.மூச்சுக்காற்றாய் கலந்து ஒருவன் அவள் உயிரில் உறைந்து கிடக்கையில் வேறொருவனை நினைப்பது கூட அவளால் இயலாத காரியம்.

 

வேறொருவனை நினைத்திடுவதாய்,நினைத்திடுவதற்கு கூட அவன் நினைவுகள் இடம் தராது;அப்படித் தரவும் அவள் மனம் இடம் கொடுத்திடாது.

 

அவன் நினைவுகள், அவள் சுவாசக்காற்றாகி ஜீவனில் நிறைந்திட,நிகழுடன் நிஜம் மட்டுமல்ல,அவளின் நிழலும் அவனெனவே ஆகியிருந்தான்.

 

இதில் திருமணம்..?!

விழிகள் இடுங்க தங்கையைப் பார்த்திட,அவளின் பார்வையில் அத்தனை இறைஞ்சல்.

 

“சஞ்சீவோட அப்பாவுக்கு ஜோசியத்து மேல அவ்ளோ நம்பிக்க..அவங்க ஜோசியர் அவனுக்கு இன்னும் நாலு மாசத்துல கல்யாணம் நடக்கலனா கல்யாணமே நடக்காதுன்னு சொல்லி இருக்காரு..”

 

“…………………..”

 

“அது தான் சீக்கிரமா வரன் பாக்கறாங்க..இப்போ கூட என்ன விட்டுட்டு வேற பொண்ண பாக்க போறதா அவங்க வீட்ல பேசறாங்களாம் ஒத்து வர்லன்னா..” கூறும் பொழுது அவளுக்கு கண்ணீர் வழிந்து விட,அவளுக்கும் மனதில் அவ்வளவு அழுத்தம்.

 

உடன் பிறப்புக்களில் வாழ்வுக்கு தான் குறுக்கே நிற்பதாய் எப்போதும் இருக்கும் எண்ணம் இந்தக் கணம் வலுப்பெற,முகமே மாறிப் போனது.எச்சில் கூட்டி விழுங்கியவளின் செயலில் தங்கையின் மனமும் காயப்பட்டது.

 

தமக்கையின் காதல் தெரிந்தும்,அவள் வந்து பேசியிருக்கக் கூடாது என தன்னை நொந்து கொண்டு அறையில் இருந்து வெளியேறிட,அவளின் முதுகை வெறித்த தென்றலின் விழிகளில் மெல்லிய ஈரம்.

 

ஓரிரு நாட்கள் கடந்திருந்த சமயம் அது.

 

தோழனின் வார்த்தைகளை அடிக்கடி அசைபோடும் டாக்டரின் மன எண்ணத்தில் சிறு மாற்றம்.

 

வாழ்வில் காதல் ஒரு முறை என நினைத்துக் கொண்டிருந்தவனின் எண்ணப் போக்கை அலசி ஆராய வைத்திருந்தன,தோழனின் வார்த்தைகள்.

 

நிதானமாய் யோசித்துப் பார்த்தான்.இது நாள் வரை திருமணம் செய்ய அவன் எண்ணியிராதிருக்க,முதன் முதலில் ஒப்புக் கொள்ளத் தோன்றிற்று.

 

நேற்று அவன் நேசித்தவளை வேறொருவருடன் புன்னகை முகமாகக் கண்டதும் இன்னொரு காரணம்.அவளே இன்னொரு வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைக்கையில் தான் மட்டும் எத்தனை நாள் தேங்கி நிற்பது என்கின்ற எண்ணமும் மனதில் மிளிராமல் இல்லை.

 

முதல் காதல்!

அழகானது தான்.சில்லென்ற உணர்வை மனதில் தந்துவிடுவது தான்.கரம் சேர்ந்தால் இன்னும் அழகு தான்.ஆனால்,அது மட்டுமல்லவே,வாழ்க்கை.

 

அந்த காதலைத் தாண்டி எவ்வளவோ இருக்கிறது.வாழ்வியலின் பாதையில் இன்னும் காதலும் கொட்டிக் கிடக்கிறதே.

 

பிடித்ததை கையில் தாரத கடவுள்,கையில் சேர்ப்பிப்பது நிச்சயம் அதை விடப் பிடித்ததாகக் கூடிய ஒன்றைத் தானே.

 

என்றோ தொலைந்து போன ஒன்றை நினைத்து மருகி தவித்து தகித்து உடைந்து போய்,தொலைக்காதவற்றை இழப்பது உசிதம் இல்லையே.அதைத் தான் யோசித்தான்,டாக்டர்.

 

மாற்றத்தின் மென்னலை உள்ளுக்குள் அடித்து ஓய்ந்தாலும் முடிவுக்கு வர இன்னும் மூன்று நாட்கள் அவனுக்கு அவசியப்பட்டது.

 

தென்றலின் காதல் விவகாரம் தெரிந்து இருப்பதால் அவளும் தன்னை புரிந்து கொள்வாள் என்கின்ற நம்பிக்கையில் அவளை மணக்க சம்மதிக்கும் முடிவுக்கு வந்தான்,சித்தார்த்.

 

அதுவும் தென்றலுடன் பேசி விட வேண்டும் என்கின்ற எண்ணத்துடன்.அகல்யா கூறியதை வைத்து அவளுக்கு இந்த விடயம் தெரியும் என்று தான் அவனின் எண்ணம்.

 

அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை,அவளுக்கு இவ்வேற்பாடை பற்றி கொஞ்சமும் தெரியாது என்பது.

 

வழமைக்கு மாறாய் மூன்று மணி போல் வீட்டுக்கு வந்த மகனை யோசனையுடன் பார்த்தார்,பரிமளா.

 

“என்ன சித்து ஏதாச்சும் ஒடம்பு சரிலியா..? சீக்ரமா வந்துருக்க..?” விழிகளால் அவனை ஆராய்ந்தவாறு கேட்டவரின் குரலில் பதட்டம்.

 

“ஒன்னுல்லமா..சும்மா தான் வந்தேன்..குளிச்சிட்டு வர்ரேன் சாப்பாடு எடுத்து வைங்க..” என்றவன் கடகடவென மாடிப் படிகளில் ஏறிட,கூடத்து சோபாவில் அமர்ந்திருந்த அன்பரசனின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

 

ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.குழந்தையைத் தூக்கிக் கொண்டு அரக்கப் பறக்க நடந்து வந்தாள்,அகல்யா.

 

“அம்மா..அம்மா..” கூவிக் கொண்டு வந்தவளின் அழைப்பில் ஒரு கணம் பயந்து விட்ட தாயாரும் வாயிலுக்கு வர,அவளோ அவரை சட்டை செய்யாது உள் நுழைந்து விழிகளை சுழற்றி தேடினாள்,தம்பியை.

 

“என்னடி இது கூவிக் கிட்டு வர்ர..? என்ன விஷயம் மாப்ள கூட வராம தனிய வந்துருக்க..?” அவர் பதபதைப்பாய் வினவிட,அதற்கு பதில் சொல்வவில்லை,அவள்.

 

“சித்து எங்க..?” மாடியில் பார்வையை பதித்தவாறு கேட்டு வைத்திட,அவளை முறைத்தவாறு பேரப்பிள்ளையை தன் கையில் வாங்கிக் கொண்டார்,பரிமளா.

 

“என்னடி வந்ததும் வராததுமா சித்துவ கேட்டுட்டு இருக்க..? என்ன தான் ஆச்சு உனக்கு..?” அவர் நெற்றியில் அறைந்து கொள்ளும் போதே பாதச்சத்தங்கள் கேட்டது.

 

டீஷர்ட்டின் காலரை சரி செய்தவாறு கீழிறங்கி வந்தவனிடம் மட்டுமே நிலைத்திருந்தது,தமக்கையின் பார்வை.

 

காதல் தேடும்.

 

2025.04.08

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. எதுக்கு அகல்யா வேகமா வர்றா … தென்றல் மனசு மாறாதா