Loading

காதலொன்று கண்டேன்!

தேடல் 06

(I)

“இன்டர் காலேஜ் ஸ்போர்ட்ஸ் மீட்னு வெயில்ல நம்மள காய வச்சி கருவாடு ஆக்குறானுங்க..” முணுமுணுத்தவாறு,கூந்தலை பின்னினாள்,யாழவள்.

முதுகு வரை மட்டுமே நீண்டிருந்த முடியது,பின்னியதும் கழுத்தோடு நின்று போக,அவள் முகத்தில் வாட்டம்.

“முடிய பாத்து ஃபீல் பண்றத வச்சிட்டு வா நீ..”தோழியவள் அதட்டிட,பெரூமூச்சுடன் கிளம்பி மைதானதுக்கு வந்தனர்,இருவரும்.

காற்பந்தின் இறுதிப் போட்டி நடைபெற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க,மைதானத்தைச் சூழ அவ்வளவு ஆட்கள்.

“என்னடி இது பெவிலியன்ல உக்காராம எல்லாரும் க்ரவுண்ட சுத்தி நிக்கறானுங்க..நமக்கு ஒன்னுமே தெரில..” முகப்பரங்கத்தில் அமர்ந்து எட்டிப் பார்த்தவாறு அவள் உரைத்திட,தோழியின் எண்ணமும் அதுவாகத் தான் இருந்தது.

“நாமளும் பேசாம க்ரவுண்டுக்கு போய் பாக்கலாமா..” என்றதும்,சரியென தலையைசத்து விட்டு வெயிலில் தாக்குப் பிடித்திட,தொப்பியொன்றை அணிந்து கொண்டு கீழிறங்கியவளை பின் தொடர்ந்தாள்,தோழி.

“ஹேட் போடாம எதுக்கு தான் கேப் போட்றியோ..?” பாவையவளை கடிந்து கொண்டே வந்தாள்,அவள்.

இன்னும் பத்து நிமிடங்களில் போட்டி துவங்க இருக்க,முகத்தை நீரால் அடித்துக் கழுவியவாறு நிமிர்ந்தான்,பையன்.

அடர் கேசம் தன் விருப்பத்துக்கேற்ப கலைந்து கிடந்ததோடு,முன் நெற்றியையும் முட்டித் தள்ள,அதை பின்னே ஒதுக்கி விட்டு,நெற்றியில் கறுப்பு நிற பேன்டை நெற்றி வழியே சற்று மேலாய்,மாட்டிக் கொண்டு விழி சுழற்றி சுற்றத்தை அலசினான்,தன் கூர்ப்பார்வையோடு.

அவனைப் போலவே அடங்காத சிகை,கனமான துணியின் தடுப்பிலும் அடங்காமல்,மீளவும் எட்டி அவனின் நுதலை உரசிக் கொண்டிருக்க,அவையோ ஈரத்துளிகளின் தயவில் தமக்குள் கற்றையாய் சேர்ந்து,கொத்தாய் ஆடி அசைந்து தாளம் போட்டன,வீசிச் சென்ற காற்றுக்கேற்ப.

கருமணிகளின் சுழற்சியோ,ஓரிரு நிமிடங்களுக்கு நீள,ஓரிடத்தில் நின்றதும் கண்ணோரங்கள் சுருங்கி,புருவங்கள் கொக்கி போட்டின,தனிச்சையாய்.

யாரேனும் அதை கண்டு கொள்ளும் முன்பே அவை இயல்பாகி இருக்க,”இந்த அரமெண்டல் இங்க என்ன பண்றா..?”சிறுக உருவேறிய கோபத்துடன் மனதால் வைதான்,உச்சி சூரியனை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பவளை.

“கிறுக்கா தான் இருப்பா போல..” அவள் செயலாக்கம் அவனுக்கு அவ்வாறு நினைக்கத் தூண்டியிருக்க,அவன் அனுமதியின்றி பார்வை மூன்று நொடிகளுக்கு அவள் மீது.

முன்பு போல் குறுஞ்செய்தி எதுவும் வராமல் போனதில்,அவனின் கோபமும் மட்டுப்பட்டிருக்க,அதை மறந்தும் விட்டிருந்தான்.

ஆயினும்,அவளைக் கண்டவுடன் அவ்வெண்ணம் தலைகாட்ட மறக்காது இருக்கவே,இந்தக் கோபம்.

பையனின் பார்வை தன்னில் படிந்து மீண்டதை உணரவில்லை,யாழவள்.அவளின் கவனத்தில் சிக்கவில்லை,பையன் அவனும்.

கண்டிருந்தாலும்,அவளின் நடவடிக்கை இயல்பாகவே இருந்து இருக்கும்.நிலா உண்மையை போட்டுடைத்திடா விடயம் அவளுக்குத் தெரியாது அல்லவா..?

“ஆர்யா..ஆர்யா..ஆர்யா..கம் ஆன் ஆரி..” மைதானத்தை நிறைத்த கத்தல்களும் கரகோஷசச் சத்தமும்,அவனை துளியும் பாதிக்காதது போல் மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தான்,பையன்.

வேகமும் விவேகமும் கலந்தடிக்க,அவனின் கால்களுக்கிடையில் பந்து சுழன்றிட, ஆட்டம் அவனால் தொடரப்பட்டாலும்,அவன் வதனத்தில் அப்படியொரு நிதானம்.அவன் எதற்கும் பதட்டப்படும் ரகம் இல்லையே.

முதலில் அவன் விளையாடுவதை பாவையவள் இருந்த கோபத்தில் கவனிக்க மறுத்த போதிலும்,அவனின் விளையாட்டில் ஈர்க்கப்பட்டவளின் விழிகளில் பிரமிப்பு பரவிக்கிடக்க,விழிகளோ அவன் பாதங்களுடன் பிணைந்து வரும் பந்தைப் போன்று,அவனையே பின் தொடர்ந்தன.

இமைக்கா விழிகளில் பிரமிப்பு,அதீதமாய்.

அத்தனை லாவகமாய் இலகுவாய் அழகாய் அவனின் பாதங்கள் பந்தை பந்தாட,அவளும் சத்தியமாய் லயித்து உறைந்து போனாள்,அவன் விளையாடும் அழகில்.

“செம்மயா வெளயாட்றார்ல..” அதிர்வும் மகிழ்வும் ததும்பி வழிய,அத்தனை வியப்பு அவள் இதழ்கள் உதிர்த்த வார்த்தைகளில்.

அவ்வளவு ஈர்க்கப்பட்டிருந்தாள்,அவனின் விளையாடும் விதத்தில்.

துவங்கியதும் சுமூகமாய் சென்று கொண்டிருந்த ஆட்டம்,இடையில் சூடு பிடிக்க,அதையும் அழகாய் கையாண்டு,பையன் ஆட்டத்தை கொண்டு சேர்ந்தாலும்,ஓரிடத்தில் சறுக்கிற்று.

வெற்றியின் சாத்தியம் அடுத்த அணியின் பக்கம் திரும்ப,அனைவரின் முகத்திலும் வாட்டம்.தொங்கிப் போய் விட்டது,பாவையவளின் வதனம்.

மற்றைய கல்லூரியின் கூச்சல் அதிகரிக்க,இத்தனை ஆராவரமாய் இருந்த இடமே,ஆர்ப்பின்றி அடங்கிப் போனது.

விழிகளை சுருக்கி,முகத்தை மூடிக் கொண்டு விட்டாள்,பாவையவள்.அவள் மட்டுமல்ல,பாதியாட்கள் தலையில் கை வைத்திட,அதற்கும் அசரவில்லை,பையன்.

யாழவளின் மனமோ,மின்னல் வேகத்தில் எக்கச்சக்க வேண்டுதல்களை வைத்திருந்தது,கடவுளிடம்.

“அவரு வெளயாட்றது மேல கண்ணு வச்சிட்டாங்க போலடி..” சோகம் இழையோடிய குரலில்,தோழியிடம் உரைத்தது எல்லாம் வேறு கதை.

இன்னும் இருபது நிமிடங்கள் மீதிமிருக்க,அடுத்த பத்தாவது நிமிடத்தில்,வலைக்குள் பந்தை உதைத்து,எதிரணியினரின் கோல் எண்ணிக்கையை சமப்படுத்திய பையனின் செயலில் மீண்டும் ஆர்ப்பரிப்புக்கள் பொங்கியெழ,இரு கல்லூரியின் மாணாக்கரும்,படபடவென்ற இதயத்துடன் தான்,மைதானத்தில் பார்வையை பதித்து இருந்தது.

“கடவுளே தயவு செஞ்சு எங்க காலேஜ வின் பண்ண வை ப்ளீஸ்..” அடிக்கடி மௌனமாக வேண்டினாலும்,சில நேரங்களில் வாய்விட்டே அவள் பேசி விட,விழிகளில் கலக்கமும் வதனத்தின் கலவரமும்.

இன்னும் ஐந்து நிமிடங்கள் மீதிமிருக்க,பையனின் பாதங்களிடம் பந்தானது வந்து சேர,ஆர்ப்பரித்து எழுந்தது,ஆர்ப்பின் பேரலை.

“ஆரி..ஆரி..ஆரி..” என மைதானமெங்கும் கூச்சல் எழ,ஆட்காட்டி விரலை பற்களிடையே வைத்து கடித்தவாறு இருந்தவளின் பார்வை விலகவில்லை,பையனிடம் இருந்து.

“ஆரி அண்ணா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” தன்னை மீறி அவள் கத்தியே விட,நறுக்கென கிள்ளி விட்டிருந்தாள்,தோழி.

“கடவுளே..கடவுளே..ஜெய்க்கனும் கடவுளே..” அழாக குறையாய் புலம்பியவளுக்கு இதயம் தடதடவென்று அடித்துக் கொள்ள,ஒரு நிமிடம் விழிகளை மூடியே விட்டாள்,பதட்டத்தில்.

அதை அவன் விழிகள் கவனிக்க மறந்திடாது இருக்க,அடுத்து வந்த நொடிகளில்,பையனின் பாதமது பந்தினை எத்தி வைத்திட,முனைக்கம்பிகளில் பட்டுத் தெறித்த பந்தானது வலைக்குள் புகுந்து விட அதிர்ந்தது,அரங்கம்.

விழி மூடி இருந்த யாழவளுக்கோ,ஒரு கணம் ஒன்றும் புரியாது போனாலும்,பையனை சூழவிருந்த குழுவினரும் காதைப் பிளந்த கரகோஷ சத்தமும் நடந்ததை ஊகிக்க வைத்திருந்தது.

“கோலா டி..?” தெரிந்தும் உறுதிப் படுத்திக் கொள்ள கேட்டாள்,தோழியிடம்.ஆமோதிப்பாய் அவள் தலையசைத்திட,அத்தனை சந்தோஷம் அவளில்.

மீண்டும் பையனின் சாகசத்தால் வலைக்குள் பந்து சிக்கிக் கொள்ளவும் போட்டி நேரம் முடிவடையவும் சரியாய் இருக்க,கேட்கவும் வேண்டுமா..?

அவன் முகத்தில் எந்த வித உணர்வும் இல்லை.வென்றது தெரிந்தும் இயல்பாகத் தான் இருந்தான்,அவன்.

வதனத்தில் மகிழ்ச்சி ததும்பி வழிந்திட,கை தட்டியவளை மீளவும் உரசி வந்த பார்வை.

அவளை தொட்டு மீண்ட,விழியுரசலில் வித்தியாசம் இருக்கவில்லை.இதற்கு முன்,அவன் அகராதியில் பார்வைத் தழுவல்கள் எனும் வித்தியாசமும் இருந்ததில்லை.

அணியினர் வந்து அவனைத் தோளில் வைத்துத் தூக்கிட,அதை மறுத்தவனோ அனைவரையும் அடக்கி வைத்து ,எதிரணியிரிடம் கை குலுக்கி விட்டு மைதானத்தின் ஓரத்தில் வந்து நின்றிட,சத்யாவின் பார்வை தோழனை நெகிழ்ச்சியுடன் தழுவிற்று.

பையனில் இருந்து சற்றுத் தள்ளி இருந்த யாழவளின் பார்வையும் அவன் மீதே.

அவனின் நடவடிக்கை அவளுக்குள் சிறு மரியாதையை அவன் மீது விதைத்திருக்க,அது அப்படியே படம் விரித்து நின்றது,கோலவிழிகளில்.

ஒவ்வொருவராய் ஆட்கள் கலைந்து போக,நெற்றியில் இருந்த பேன்டைக் கழற்றி,தலை சரித்து கழுத்தை தேய்த்து கேசத்தை கோதியவனோ,சுற்றும் முற்றும் பார்த்திட,ஆட்கள் இல்லை அவனின் முன்னே.

மிதமான வேகத்துடன் எல்லைக் கோட்டில் வைக்கப்பட்டிருந்த பந்தை பாத நுனியால் உதைத்திடவும் பாவையவளும் தோழியும் கடந்து செல்லவும் சரியாய் இருக்க,பந்து வந்து மோதியது,அவளின் கன்னத்தில்.

“ஆஆஆஆஆ” அலறியே விட்டாள்.

மோதிய வேகத்தில் வலித்துத் தள்ள,கன்னத்தை பொத்தியவாறு நிமிர்ந்தவளின் விழிகள் கலங்கிப் போயின,வலியின் வீரியத்தில்.

பையனுமே,குறுக்கே இருவர் வந்திடுவர் என்று எதிர்ப்பார்த்து இல்லாதிருக்க,முதலில் அவனுக்குமே சங்கடமும் குற்றவுணர்வும்.

அதுவெல்லாம் அவள் யாரென்று கண்டறியும் வரை தான்.யாழவள்,என்றதும் அவனின் மனமும் இயல்பாக,அவளின் முன்னே வந்து நின்றான்,அமர்த்தலான நடையுடன்.

“பைத்தியக்காரன்..எந்த கண்ணு தெரியாத கபோதிடா என் மூஞ்சுல பால அடிச்சது…?பக்கிப் பய..மெண்டல்..கைல கெடச்சா கொன்றுவேன்”

கன்னத்தை தேய்த்தவாறு சற்று சத்தமாக திட்டி விட்டு நிமிர்ந்தவளின் விழிகளை பையனின் விம்பம் நிறைத்திட,அதிர்ந்த பாவம் அவள் வதனத்தில்.

“இந்த எரிமலயா ஒதஞ்சது..?” மனதில் உருப்பெற்ற வினாவது விழிகளில் விலாசம் கேட்டிட,அதை உணர்ந்தாற் போல் ஆமோதிப்பாய் தலையசைத்தான் பையன்,அடங்காத கேசம் அசைந்தாட.

“நா தான் கிக் பண்ணேன்..கொன்றுவியா என்ன..?” தோள் குலுக்கி கேட்டவனுக்கு பதில் சொல்லத் தெரியாமல் பேய் முழி முழித்தாள்,அவள்.

வலி ஒரு புறம் என்றால்,அவன் மீது துளிர்த்திருக்கும் மரியாதை இன்னொரு புறம் இருந்து கூக்குரலிட்டு,அவளை மௌனம் காக்கச் சொன்னது.

“என்ன உன்னத் தான் கேக்கறேன்..?” மார்புக்கு குறுக்கே கரத்தை கட்டியவாறு,விழிகளோடு இடது புருவமும் உயர்ந்திட,அவன் கேட்ட கேள்வியில் அவளுக்கு கோபமும் வராமல் இல்லை.

“வலில துடிச்சிகிட்டு இருக்கேன்..கேள்வி கேக்கறத பாரு எரிமல..” மனதால் அர்ச்சித்திட,மறுப்பாய் தலையசைத்தவளுக்கு வழி விட்டான்,நக்கல் தொக்கிய புன்னகையுடன்.

விட்டால் போதுமென ஓடி வந்து விட்டாள்,யாழவள்.மித்ராவும் அவளின் இழுப்புக்கேற்ப உடன் வந்திட,இருவரையும் பார்த்து தோளைக் குலுக்கி விட்டு கடந்து சென்றான்,ஆர்யா.

“சின்னப்புள்ள மாதிரி என்னடி இது கன்னம் வீங்கி இருக்கு..அறிவில்ல பாத்து இருந்துக்க மாட்ட..” கடிந்தவாறு காஃபி கலக்கிக் கொண்டு வந்து கொடுத்த தாயாரை முறைத்து விட்டு வாங்கியவளுக்கு சத்தியமாய் கன்னத்தில் அப்படியொரு வலி.

முதலில் பெரிதாக இல்லாவிடினும் நிமிடங்கள் கழிய வீக்கம் உண்டாகத் துவங்கி இருக்க,பேரூந்தில் வரும் போதே நன்றாக வீங்கி இருந்தது.அதற்கு பயந்து தான்,மித்ராவும் யாழவளுடன் அவளது வீட்டுக்கு வந்ததே.

வெந்நீரை கொண்டு வந்த அவளின் தாயாரிடம் கேட்டு,மித்ராவே ஒத்தடம் இடுகையில் தான் நடந்தேறியிருந்தது,அவர்களுக்கு இடையிலான சம்பாஷணை.

பையனின் மீது அவளுக்கு கோபமாகவும் வந்து சேர,அவனுக்கு திட்டியவளுக்குத் தெரிந்திட வாய்ப்பில்லை,நாளை நடந்தேறப் போவது.

●●●●●●●●●

(II)

மருத்துவமனைக்கு வந்த பின்பும் சரிவர வேலையில் ஒன்ற முடியாது போக,பாதியில் வீட்டுக்கு கிளம்பிடும் எண்ணத்துடன் வெளியே வந்தான்,சித்தார்த்.

பிரதீப்பும் சிறு வேலையொன்றுக்காக வீடு செல்ல வேண்டியிருக்க,அவனும் டாக்டருடன் வண்டியில் செல்வதாக உத்தேசம்.

மிதமான வேகத்தில் வண்டி நகர்ந்திட,டாக்டரின் முகத்தில் இருந்த தெளிவின்மை நண்பனையும் ஆராய வைத்து,கேள்வி கேட்டிடச் செய்தது.

“சித்து ஆர் யூ ஓகே..?ஏதாச்சும் ப்ராப்ளமா..? மொகமெல்லாம் ரொம்ப டல்லா இருக்கு..?”

தன்மையாய் கனிவுடன் தோழன் வினவிட,டாக்டருக்குமே தன் மனதின் சந்தேகங்களை அவனிடம் கேட்டுத் தீர்த்துக் கொண்டால் என்னவென்று தோன்றிற்று.

“உன்னால ஒரு ஹாஃப் அன் அவர் என் கூட பேச முடியுமா..?”

“டேய் என்னடா இதுக்கெல்லாம் பர்மிஷன் கேக்கற..இருன்னு சொன்னா இருந்துருவேன்..” பிரதீப் கடிந்திட,ஓரம் கட்டினான்,வண்டியை.

எப்படி ஆரம்பிப்பது என்கின்ற தயக்கம் டாக்டருக்கு.அவனால் தன் மனதை வெளிப்படையாக நண்பனிடம் கூறிடவும் முடியாது.அவன் தன் காதல் விவகாரத்தை போட்டு உடைத்தால்,அதில் அவளின் வாழ்க்கையும் சிக்கலாகி விடக் கூடும் என்று பயந்ததான்,வெகுவாய்.

“உனக்கு பாஸ்ட் லவ் ஒன்னு இருந்துச்சு தான..?”

“ம்ம் ஆமா..நா உன் கிட்ட அதப் பத்தி சொல்லியிருக்கேன் தான சித்து..அன்னிக்கி பொண்ணு யாருன்னு கூட காட்டித் தந்தேனே..”

“எப்டிடா உன்னால இன்னொரு கல்யாணத்துக்கு ஒத்துக்க முடிஞ்சிது..? மியூச்சால் அன்டர்ஸ்டான்டிங்க் ஓட தான் பிரிஞ்சன்னு தான சொன்ன..அப்றம் எப்டி..?” அவன் மனதில் இது நாள் வரை அரித்துக் கொண்டிருந்த கேள்வி இது.

“அப்போ ரொம்ப வலிச்சிது தான்..ஏன்னு இல்லாம நாம ரெண்டு பேரும் பிரிஞ்சோம்..என்னால தாங்கிக்கவே முடில..அது எல்லாம் எப்டி தாங்கி கிட்டேன்னு இப்போ கூட என்னால நெனச்சு பாக்க முடில..”

“…………………..”

“நா இல்லன்னா அவ நெனச்சு இருந்தா..எங்க லவ் தான் முக்கியம்னு ஒத்தக்கால்ல நின்னு இருந்தா எங்க லவ்வ காப்பாத்தி இருக்கலாம்..ஆனா நாங்க அப்டி பண்ணல..பண்ற அளவு எங்க சூழ்நில இல்ல..”

கூறும் போதே,டாக்டரின் மனம் தளர்ந்தது.அவர்களின் காதலுக்கும் இத்தகைய பின்கதை உண்டே.

“அப்றம் தான் நா துளசிய கல்யாணம் பண்ணி கிட்டேன்..” என்கையில் நண்பனின் குரலில் பெரும் ஆசுவாசமும் நிறைவும்.விழிகளில் மனைவியாவளுக்காக ப்ரியம் விரிந்து கிடக்க,வதனத்தில் பெரும் நிறைவு.

“எல்லாருக்கும் ஃபர்ஸ்ட் லவ் சக்ஸஸ் ஆகறது இல்ல..ஆனா அதுக்குன்னு வாழ்க்கய வீணடிச்சிக்க முடியாதுன்னு எனக்கு அழகா புரிய வச்சா..அவ்ளோ புரிஞ்சி கிட்டா என்ன..ஏன்டா இவ்ளோ என்ன புரிஞ்சிக்கிறா எனக்கு தோணி இருக்கு ரொம்பத் தடவ..”

“அப்டி புரிஞ்சிப்பா என்ன..இத்தனக்கு அவளுக்கு இருந்த பக்குவம் கூட எனக்கு இல்ல..அவள முழுசா ஏத்துக்கவும் முடியாம வெலகி நிக்கவும் முடியாம நா தவிச்சப்போ நா சொல்லாமயே அத புரிஞ்சி கிட்டு.. எனக்கான ஸ்பேற தந்து ஒதுங்கி நின்னா பாரு..அங்க தான் நா விழுந்துட்டேன்னு நெனக்கிறேன்..” இறுதியில் வார்த்தைகளில் சின்னச் சிரிப்பும் கலந்து இருந்தது.

“ரெண்டு வாட்டி லவ் வருமான்னு எத்தனயோ தடவ செகண்ட் லவ்வ கலாய்ச்சி பேசுனவன் தான் நானு..ஆனா அத எல்லாத்தயும் மொத்தமா மாத்துனா பாரு சத்தமில்லாம இருந்து..நா அவ எடத்துல இருந்தா கண்டிப்பா எதுவும் வேணாம்னு விட்டுட்டு போயிருப்பேன்..”

“என் ஃபர்ஸ்ட் லவ்வர நா முழுசா மறந்துட்டேன்னா அது இல்ல..அது பொய்..இன்னுமும் அவ நெனப்பு என் மனசுல இருக்கு..ஒரு காலத்துல எனக்கு புடிச்சி இருந்த ஒருத்தரா மட்டும் தான் என் மனசுல இருக்கா அவ..ஒரு தடவ அவளே வந்து என் கிட்ட சொன்னா..துளசிய மாதிரி அவளால கூட என்ன பாத்துக்க முடியாதுன்னு..”

“எல்லாம் அப்டி தான் டா..ஃபர்ஸ்ட் லவ் ஃபெயிலியர்னு யாரும் அத புடிச்சி கிட்டு நிக்கறதில்ல..நமக்கானது அது இல்ல..அத தள்ளி வச்சிட்டு மூவ் ஆன் பண்ணா வாழ்க்க நம்மளுக்கு சரியானத கொண்டு வந்து சேத்துரும்..”

தோழனின் வார்த்தைகள் மருத்துவனின் மனதை ஆட்டிப் பார்த்திட,ஏனோ சிறு தளர்வு இத்தனை நாளிருந்த அவனின் உறுதியில்.

இங்கோ,

நாட்குறிப்பின் பக்கங்களை வருடி விட்டவாறு இருந்தவளின் விழிகளில் நீர் கோர்த்திருக்க,ஓரிரு துளிகள் வழிந்து தாளோடு ஒட்டி,அவனின் நினைவுகளுடன் கலந்திட முயன்றன.

“*அதிகாரத்தின் அர்த்தங்கள் எல்லாம் அவனை அகராதியாக்க..*
*ஜீவனின் தேடல் முழுவதும் அவனில் மோட்சம் கேட்க…அவனில் நானும் காதல் கொண்டேன்!*”

முத்து முத்தான கையெழுத்துக்களில்,நேர்த்தியாய் எழுதி இருந்தாள்,அவள்.ஆயினும்,அடிக்கடி ஈரம் ஏறும் வரிகளின் மைத்துளிகள் ஆங்காங்கே கசிந்து போயிருந்தன.

எங்கோ படித்து வரிகள்.ஒரு முறை அவனின் நினைவு எட்டிப் பார்க்கும் பொழுதினில் கிறுக்கி வைத்திருந்தாள்.வரிகள் அவளது இல்லை.ஆனால்,அது தனக்குள் சுமந்து கொள்ளு(ல்லு)ம் ஒட்டு மொத்த உணர்வுகளும் அவளது.அவளின் அவனுக்கானதே.

மெல்லிய புன்னகையுடன் அவள் தடவிக் கொடுக்கும் போதே,கதவு தட்டும் சத்தம்.சங்கவியின் குரலை கேட்டு உள்ளை அழைத்திட,கலங்கிய விழிகளுடன் உள்ளே வந்தாள்,அவளின் தங்கை.அதற்குள் நாட்குறிப்பை மூடி தலையணைக்கு அடியில் வைத்து விட்டாள்,தென்றல்.

கசங்கிய முகபாவமும் கலங்கிய விழிகளும் உடல் மொழியில் தெரிந்த பதட்டமும் ஏதோ பிரச்சினை என்பதை வார்த்தையின்றி உணர்த்தி விட்டிருக்க,அவளுக்கும் பல சிந்தனைகள் எழுந்தன.

“என்ன சங்கவி..? எதுக்காக இப்டி இருக்க..? என்னாச்சு..?” பரிவாய் அவள் விசாரித்திட,அதற்கு அவள் தந்த பதிலில் தமக்கையின் விழிகள் அதிர்ந்து விரிந்தன.

காதல் தேடும்.

2025.04.06

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. சங்கவிக்காக டாக்டரை கல்யாணம் பண்ணிக்கும் போல தென்றல் … ஆனா அந்த யாழ் பையன் லவ் தான் இடிக்குது … ரெண்டு கதையும் எப்போ ஒண்ணா மாறுமோ