Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 02

 

(I)

 

அரசு மேல்நிலைப் பள்ளி.

 

“இந்த பிஸிக்ஸ் வாத்தி இன்னிக்கி வந்து சாகடிக்கப் போகுது..” நொந்தவாறு மேசையில் தலைவைத்துப் படுத்தான்,சத்யா.

 

இரவு உறக்கம் தவிர்த்து இருக்க,இப்போது தூக்கத்தில் கண்கள் சொக்கின.பக்கத்தில் அமர்ந்து இருந்தவனின் முறைப்புப் பார்வை தன் மேல் படிவது தெரிந்தாலும் கண்டு கொள்ளாமல் படுத்திருக்க,அவனின் விரல்களோ மேசையில் மெதுவான சப்தத்துடன் தாளம் தட்டின.

 

இதழ்கள் ஏதோ பாடலொன்றை மெல்லிய அசைவுடன் உச்சரித்திட,கடைசி வரியில் தான் அமர்ந்து இருந்தான்,அவன்.

 

“அதிதி..அவனப் பாருடி..அவன் உன்ன பாக்கறான்டி..” தனிச்சையாய் திரும்பிய அவனின் பார்வை,அவர்களின் புறம் தாவிட,அதற்கும் ஓர் அர்த்தம் கற்பித்து கிசுகிசுத்தது,உடன் படிக்கும் மாணவியர் கூட்டம்.

 

அவன் செவிதனில் அது விழுந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் தன்பாட்டில் அமர்ந்து இருந்தான்.அவர்கள் ஏதேனும் நினைத்துக் கொள்வது அவனைப் பாதித்திடப் போவதில்லை என்கின்ற தீர்க்கம்,அகத்தில்.

 

அவனுக்கு நேரேதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த அதிதியின் பார்வை அடிக்கடி அவனை வட்டமடித்தது.அவளுக்கு அவன் மீது ஒரு பிடித்தம்.

 

பருவக் கோளாறினால் வந்த ஈர்ப்பை விட அவனின் ஆளுமையினாலும் திமிரினாலும் வந்த ஈர்ப்பு என்பதே பொருத்தம்.

 

யாருடனும் ஒட்டாமல் பெண் தோழியர் என்றாலே முகத்தை வெட்டிக் கொண்டு கடப்பவனின் மீது முன்பெல்லாம் கோபம் வந்தாலும்,காலப் போக்கில் அதுவே அவனின் மீது பிடித்தத்தை உண்டு பண்ணியிருந்தது.

 

சிறிதாய் உருவெடுத்த சலனத்தை தோழியரும் குழப்பி காதல் என்றே நம்ப வைத்திருக்க,அவளும் காதல் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்,இது நாள் வரை.

 

“ஏய் இன்னிக்காச்சும் அவன் கூட பேசிருடி..” தோழியொருத்தி அவளின் காதுகளில் கிசுகிசுத்திட,சம்மதமாய் தலையசைத்து வைத்தவளுக்கு பயமும் எக்கச்சக்கமாய்.

 

அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,அவர்களின் இயற்பியல் ஆசிரியர் உள்ளே நுழைந்திட,மொத்த வகுப்பும் அமைதியாகிப் போனது.

 

வகுப்பை ஒரு முறை நோட்டமிட்டு விட்டு அவர் பாடமெடுத்திட துவங்கிட,அதிதியின் பார்வை அவன் மீது அடிக்கடி தாவினாலும்,அவன் கவனமும் கொஞ்சமும் சிதறவில்லை.அவனின் பலமும் அது தான்.

 

ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறான்,எண்ணங்களில் சிதறலின் துளியுமின்றி.அவனின் ஆழ்ந்த கவனிப்பு அனைத்து கோட்பாடுகளையும் இலகுவாக புரிய வைத்திட,கணக்குகளை அவன் செய்து காட்டியே வேகத்தில் ஆசானின் பார்வையும் அவன் மீது மெச்சுதலுடன் தழுவியது.

 

“வெல் டன்..” புன்னகையுடன் அவர் சொல்ல,அவனோ அதே முகபாவம் காட்டி நின்றிருக்க,வாடிக்கை என்பதால் சிறு புன்னகையுடன் கடந்து விட்டார்.

 

பாட நேரம் முடிவுற,அடுத்த பாடம் துவங்கும் முன் சிற்றுண்டிச்சாலைக்கு கிளம்பினான்,தோழனையும் அழைத்துக் கொண்டு.

 

“என்ன டேலன்ட் நம்ம டார்லிங்..என்ன தான் கெத்தா திரிஞ்சாலும் அவன் டேலன்டுக்கு இந்த கெத்தெல்லாம் செம தான் போ..” தோழி ஒருத்தி உரைத்திட,அவள் தலையில் ஓங்கிக் குத்தினாள்,அதிதி.

 

“அவன டார்லிங்னு சொல்லாத..அவன் எனக்கு மட்டுந்தான் டார்லிங்..” பற்களை கடித்தவாறு அவள் கடுகடுக்க,மற்றையவர்களுக்கு அப்படியொரு சிரிப்பு.

 

“இங்க பாரு..நீ அவன லவ் பண்ற..ஆனா அவன் மேல நம்ம எல்லாருக்கும் க்ரஷ் இருக்கு..அதுக்காக அத விட்டுர முடியாது..” அவளும் விடாது பேச,அதிதியின் முகம் மாறிப் போயிற்று.

 

“சும்மா என்னய சீண்டாத சொல்லிட்டேன்..” அவள் எகிறும் போதே,தலை சரித்து பின்னங்கழுத்தை தேய்த்த வண்ணம்,உள்ளே வந்தான்,அவன்.

 

பார்வை அவனை தொட,இதழ்கள் பூட்டுப் போட,அவள் மொழிகளும் மௌனித்துக் கொண்டன.

 

அவன் கடந்து செல்லும் வரை அவள் பார்வை,அவனைத் தழுவிட,அதை உணர்ந்தவனுக்கு கோபம் கொழுந்து விட்டெறிந்தது.அதை காட்டாமல் அவன் நகர்ந்திருக்க,அவன் பார்வை தன் மீது படியாத சுணக்கத்துடன் சிணுங்கினாள்,அதிதி.

 

“இங்க பாரு..அவன் பாக்கலன்னு நீ சும்மா சிணுங்கி கிட்டு இருக்காம..போய் அவன் கிட்ட தைரியமா லவ்வ சொல்லு..” தோழியொருத்தி,அவள் காதுகளில் இரகசியம் பேச அவளுக்கும் அது சரியனவே தோன்றிற்று.

 

பள்ளி நேரம் முடிவடைய அருகே இருக்கும் பெட்டிக்கடையின் பக்கத்தில் தோழனின் தோளில் கை போட்டவாறு நின்றிருந்தான்,அவன்.

 

“மச்சீ அந்த அதிதி இருக்குல அவ உன்னத் தான் டா பாக்கறா..நீ ஏன்டா கண்டுக்காம இருக்க..” தோளைச் சுரண்டிய சத்யாவை விழிகளால் எரித்தான்,அவன்.

 

“எதுக்குடா கண்ணால என்ன எரிக்கிற..?”

 

“வாய மூடிட்டு சும்மா இரு..அந்த கிறுக்கச்சி வேற பைத்தியம் மாதிரி ஏதாச்சும் பண்ணி கிட்டு இருக்குன்னு நீயும் அதுக்கு ஒத்து ஊதாத..பைத்தியக்காரி..” அடக்கிய கோபத்தை வார்த்தைகளில் காட்டிட,தோழனுக்குத் தான் அவளை நினைத்துப் பாவமாகப் போயிற்று.

 

“பாவம் இந்தப் பொண்ணு..” மனதுக்குள் நினைத்துக் கொண்டவனோ,வேடிக்கைப் பார்க்கத் துவங்கிட,தயங்கி தயங்கி மென்னடையுடன் அவர்களின் அருகே வந்தனர்,அதிதியும் அவளின் தோழியினரும்.

 

கூட்டமாய் அவர்களின் அருகில் வந்ததால் யாருக்கும் எந்த வித சந்தேகமும் வராமல் போயிற்று.அவனில் கொஞ்சம் தள்ளி நின்றிருந்த அதிதியின் பார்வை தவிப்புடன் அவன் மீது பதிய,அவனின் கோபம் விலையேற்றம் போல் ஏறிக் கொண்டு சென்றதை யாரும் அறியவில்லை.

 

“கிறுக்கு பைத்தியக்காரி..” அவன் மௌனமாய் அவளுக்கு அர்ச்சித்திட,மழை தூறத் துவங்கியது,அவனின் கோபத்தை அணைத்திட முயன்றதோ என்னவோ..?

 

அவனின் நேரமோ என்னவோ..ம்ஹும்..ம்ஹும்..அவளின் நேரமோ என்னவோ,அவனும் சரி தோழனும் சரி குடை கொண்டு வர மறந்திருக்க நனைந்து கொண்டே ஒதுங்கப் பார்த்தாலும் இடமில்லை,அங்கு.

 

ஆட்கள் மழைக்கு ஒதுங்கி இருக்க,அந்த நெருக்கத்தில் புகுந்து தள்ளியிருக்க முடியாததால்,வெறும் தூறல் என்பதால் மழைக்கு தன்னை ஒப்புக் கொடுத்தவாறு நின்றிருந்தனர்,இருவரும்.

 

“மழைல நனைறான்டி..பேசாம குடய கொடு..அப்டியே கரெக்ட் பண்ணிக்கலாம்..” செவியில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்பி,தன் குடையை எடுத்துக் கொண்டு மெல்ல அவனருகே நடந்து வந்தாள்.

 

அவனுக்கோ,அவளை அறவே பிடிக்காதென்றிருக்க,இப்போது அருகில் வருவது இன்னும் சினத்தை தூண்டி விட,கட்டுப்படுத்திக் கொண்டான்,வெகுவாய் பிரயத்தனப்பட்டு.

 

அவளோ நாணமும் தவிப்பும் ஒட்டிக் கொள்ள,அவனிடம் குடையை நீட்டிட,”ப்ச்” என்ற சுளிப்புடன் முகத்தை திருப்பி வெட்டினான்,அவன்.

 

அவளுக்கு முகம் சுருங்கினாலும்,மீண்டும் அவனிடம் நீட்டிட,சத்யாவுக்கு பாவமாய்ப் போனது.எடுத்துக் கொள்ளப் பார்த்த,அவன் மீதும் அனல் வீசியது,அவனின் பார்வை.

 

அவளோ அவ்விடத்தில் இருக்க,அவனுக்கு வெகுவான கோபம்.அவ்விடத்தில் இருந்தால் தன் பொறுமை பறிபோகும் என உணர்ந்தவனோ,கடந்து செல்லப் பார்த்திட,குடையால் வழி மறித்தாள்,அவள்.

 

சூழவிருந்த ஆட்களின் பார்வை தம்மில் விழுவது வேறு அவனுக்கு அப்பட்டமான எரிச்சலை உண்டு பண்ணிட,இதழ் குவித்து ஊதியவனோ,சட்டென பற்றினான்,அவள் கையில் இருந்த குடையை.

 

சத்யாவாக இருக்கட்டும்..அவளின் தோழியராக இருக்கட்டும்,யாருமே அவனிடம் இருந்து இத்தகைய செயலை எதிர்ப்பார்த்து இருக்கவில்லை.

 

அதிதியின் இதழ்கள் மலர்ந்து சிரித்திட,முகமோ விகசிப்பில் மினுமினுத்து பூத்தது.இதழ் நிறைந்த புன்னகையுடன் அவனைப் பார்த்திருக்க,அவனும் புன்னகைத்தான்,இதழ் பிரித்திடாமல்.

 

தலை சுற்றிப் போனது,அவனின் புன்னகையை கண்டதும்.உள்ளுக்குள் அவனின் புன்னகை அதிர்வலைகளையும் கிளப்பி விட,அவளின் புன்னகை இன்னும் விரிந்தது என்றால் மிகையாகா.

 

இத்தனைக்கும் இன்னுமே அவன் குடையைப் பற்றிக் கொண்டு நின்றிருந்தானே ஒழிய,தன் வசம் இழுத்துக் கொள்ளவில்லை.

 

அவளோ அவனைப் பார்த்து புன்னகையுடன் தரித்திருக்க,அவனோ வெடுக்கென குடையை தன் வசம் இழுத்திட,விழப்பார்த்து சமப்படுத்தி நின்றவளின் முன்னமே,குடையை தூக்கி ஓங்கி அடித்தான்,நிலத்தில்.

 

அவன் அடித்த வேகத்தில் குடை இரண்டாய் சிதறிப் போயிற்று.

 

●●●●●●●

 

(II)

 

அலைபேசியின் திரையில் மிளிர்ந்த எண்ணைக் கண்டதும்,புருவங்கள் இடுங்கின.அவனின் தந்தை இப்படி அழைத்துப் பேசும் ரகமில்லாதிருக்க,ஏதேதோ யோசனைகள் ஒருமிக்க கிளர்ந்தெழுந்தன.

 

நெற்றியை அழுந்தத் தேய்த்துக் கொண்டே அழைப்பை ஏற்றவன்,அடுத்த பத்து நிமிடங்களில் இருந்தான்,தந்தையின் முன்.

 

“எதுக்குப்பா சீக்கிரமா வர சொன்னீங்க..?” கொஞ்சம் பதட்டமாகவே வினவினான்,சித்தார்த்.தந்தையின் வார்த்தைகளில் தெறித்த பதட்டம் அவனையும் கலவரப் படுத்தி விட்டு இருந்தது.

 

“எதுக்கு சித்து இவ்ளோ டென்ஷன்..கூல் கூல்..அப்றமா நா சொல்றத கேட்டு இன்னும் டென்ஷன் ஆகப் போற..” நமுட்டுச் சிரிப்புடன் அவர் மொழிந்திட,அவனுக்கு கோபம் தான் வந்தது.

 

“என்னன்னு வெளயாடாம சொல்லுங்கப்பா..” நிதானமாகி விட்டு அவன் வினவிட,சில நொடி அவகாசம் கேட்டார்,அவனின் தந்தையானவர்.

 

அவனுக்கு அவர் எடுத்துக் கொண்ட மௌன நொடிகள் வில்லங்கத்தை உணர்த்தி விட,அமைதி காத்தான் அவரே பேசும் வரை.

 

“தீப்தி ஃபாரின் ட்ரிப்ப முடிச்சிட்டு வந்து இருக்காளாம்..உன்னோட தாட் என்னன்னு என் கிட்ட கேட்டா..” என்கவும் ஐயோவென்றானது,டாக்டருக்கு.

 

தந்தையின் அமைதியைக் கொண்டு அவன் ஊகித்த விடயம் சரியாய் இருக்க,தலையில் அடித்துக் கொள்ளவே விழைந்தது,மனம்.

 

“எப்போ வந்தா..?” தன் எரிச்சலை காட்டாமல் அவன் வினவிட,மகனின் மனதின் மொழி அறியாமல் போவாரா தந்தையானவர்..?

 

“நீ வேணும்னே கேக்கறேன்னு எனக்கு தெரிது டா படவா..நடிக்காத..இதுக்கப்றம் உனக்கு நோ சாய்ஸ்..ஒன்னு அவள கட்டிக்க..இல்லன்னா நீயா ஒரு பொண்ண சொன்னாலும் நாங்க நோ அப்ஜக்ஷன்..இதுக்கு அப்றமும் நீ கைகாட்டி ஏமாத்தலாம்னு மட்டும் நெனச்சிக்காத..எனக்கும் உங்கம்மாவுக்கும் உன் கல்யாணத்த பாக்கனும்னு இதுக்கு அப்றமும் வெயிட் பண்ண முடியாது..”

 

பிடிவாதம் பிடித்தார்,அன்பரசன்.அவர் விழிகளில் குமிழிட்ட ஏக்கமும் எதிர்பார்ப்பும் மகனாய் அவனை நிலை குழைய வைத்திட்டாலும்,உடனே ஒப்புக் கொள்ள முடியவில்லை.

 

“யோசிச்சு சொல்றேன்பா..” அவ்விடத்தில் இருந்து நகர்ந்து வந்தாலும் மனம் பூராகவும் அலைக்கழிப்புடன் தான் சுற்றித் திரிந்தான்,டாக்டர்.

 

பனிபொழியும் இரவு நேரம்.பால்கனி ஹேன்ட் ட்ரில் கம்பியில் கரம் பதித்து நின்றிருந்தான்,சித்தார்த்.எண்ணம் முழுவதும் தந்தையின் வார்த்தைகளில் இழுபட்டிருக்க,பெருமூச்சு மட்டும் தான்,அவனில் இருந்து.

 

திருமணம்!

அதை நினைக்கையிலேயே மனம் ஏதோ ஆவது போல்.

 

அவனுக்கு திருமணத்தில் பிடித்தமில்லை.பெண்களின் மீது விருப்பமில்லை என்றெல்லாம் இல்லை.ஆனால்,சத்தியமாய் திருமணம் செய்து கொள்ள தற்சமயம் அவன் தயாராகவும் இல்லை.

 

அகமதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்கின்ற எண்ணம் துளிர்த்திடுமா என்பது கூட,அவனைப் பொறுத்த வரை சந்தேகமான விடயம் தான்.

 

ஏனென்றால்,அவனுக்குள்ளும் இருக்கிறதே,கடந்து போன ஒரு காதல் அத்தியாயம்;அகன்று சென்ற முதல் காதல் அதிகாரம்.

 

உள்ளுக்குள் பூட்டி வைத்து,ஆராதித்து,ஆகர்ஷித்து,அவனும் தொலைந்து போன வருடங்களுடனான காதல் கதை.

 

இதுவரை யாருக்கும் தெரியாது.தெரிந்தாலும்,அவனுணர்வுகள் யாருக்கும் புரியவும் செய்யது.

 

பெற்றவரிடம் கூட ஒற்றை வார்த்தை உதிர்த்திடவில்லை,அதைப் பற்றி.உற்ற தோழனிடம் கூட பகிராமல் அவன் உள்ளுக்குள் புதைத்து வைத்திருக்கும் மௌனமான இரகசியம் அது.

 

அவளுக்கும் அவன் மீது காதல் இருந்தது.வீட்டினருக்காக ஒத்துக் கொண்டிருப்பாள் என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்வான்,இப்போது போல்.அவளை நினைக்கையில் தன்னாலே பெருமூச்சொன்று.

 

அன்று அவனின் மூச்சுக்காற்றாய் இருந்தவளின் முகவரி கூட இன்று அவனுக்குத் தெரியாது.எங்கே இருக்கிறாள் என்ன செய்கிறாள் எதுவுமே அவன் அறிந்திருக்கவில்லை.அறிந்திருக்க விரும்பவில்லை,என்பதே பொருத்தம்.மணமாகியிருக்கக் கூடும் என்பதும் அவனின் ஊகம் தான்.

 

அவள் நினைத்திருந்தால் அவர்களின் காதலையும் திருமணத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கலாம் என்று அவனுக்குத் தெரியும்.ஆயினும் இப்போது எதையும் யோசித்திட பயனில் இல்லையே.

 

கடந்து வந்திருந்தான்,வெகு தூரம்.அவளின் எதேச்சையான தரிசனம் கூட,அவனை கிஞ்சிற்றும் பாதிக்காதளவு தொலைவுக்கு சென்றிருந்தான்,அவளையும் அவனின் காதலையும் விட்டும்.

 

அப்படி தொலைவாகி தொலைந்து போயிருப்பதால் தான்,இத்தனை இயல்பாக இருக்க முடிகிறது டாக்டரால்.

 

ஓரிரு நாழிகைகள் தனக்குள் உழன்றாலும்,அவன் மனமோ திருமண விடயத்தை தள்ளிப் போடச் சொல்லித் தான் கட்டளையிட்டது.அவன் இருக்கும் தளம்பலான மனநிலையில் அவன் வாழ்வில் இன்னொருத்தியையும் இழுத்துக் கொண்டு அல்லாடச் செய்யும் சிந்தையில் இல்லை,அவன்.

 

தீப்தி,அன்பரசனின் நண்பனின் மகள்.பார்த்த முதல் பார்வையிலேயே அவளுக்கு டாக்டரை பிடித்து விட்டது போலும்.அவனும் அவ்வண்ணமே கணித்திருந்தான்.முதல் பார்வையில் இருந்து அவள் விழிகளில் கசியும் இரசனையும் ஈர்ப்பும் புரியாமல் இல்லை,டாக்டருக்கும்.

 

அவனுக்கு அவள் மீது எந்த வித ஈர்ப்பும் தட்டாது போக,நாசூக்காய் ஒதுங்கப் பழகியிருந்தான்,அவளில் இருந்து.அவர்கள் வீட்டில் என்ன நிகழ்வு நடந்தாலும்,மருத்துவமனையை காரணம் காட்டி,தீப்தியின் வீட்டுக்குச் செல்வதை தவிர்த்து விடுவான்.

 

முதலில் அவளுக்குப் புரியாவிடினும்,பின்னொரு நாளில் அவனின் விலகலை உணர்ந்தவளோ,தன் விருப்பத்தை அவனிடம் தெரிவித்திட,முகத்தில் அடித்தாற் போல் தெரிவித்த மறுப்பை அவனாலும் மறக்க இயலாது.

 

எதையுமே நிதானமாய் சாந்தமாய் கையாள்பவன்,அவளிடம் காயந்து விழுந்தது,அவனுக்கே புதுமை தான்.

 

அதற்கும் அவள் தொய்ந்து போகவில்லை.அவளின் தந்தையிடம் விடயத்தை தெரிவித்து அன்பரசனிடம் பேச,அது தான் இது நாள் வரை டாக்டரை தொந்தரவு செய்து வருகிறது.

 

டாக்டருக்கு தீப்தியை மணந்திட துளியும் எண்ணமில்லை.அவளுக்கும் அவனுக்கும் ஒத்துப் போகாது என அவள் ஆழ் மனதில் ஆழமான ஒரு எண்ணம்.தந்தையிடம் மறுப்பு சொல்லவும் பாதையில்லாது போக,மாற்று வழி தேடி அலைந்தது,மனம்.

 

மனதை ஆக்கிரமித்திருந்த எண்ணங்களால்,அன்றிரவு முழுக்க விழித்து விடிய விடிய விட்டத்தை வெறித்திருந்தான்,டாக்டர்.

 

அதிகாலை நான்கு மணி போல் உறக்கம் தழுவிட,அதுவும் வெகுநேரம் நீடிக்கவில்லை.ஏழரை மணிக்கு மருத்துவமனை செல்ல வேண்டி இருப்பதால் ஏழு மணிக்கு எழுந்து குளித்து தயாராகி உணவை தவிர்த்து விட்டு கிளம்பியிருந்தான்.

 

தந்தையிடம் இருந்து தப்பிக்கத் தான் இந்த ஏற்பாடே.அவன் அறியவில்லை,அவர் மருத்துவமனையில் அணுகுண்டுடன் அவனுக்காக காத்திருக்கப் போவதை.

 

காதல் தேடும்.

 

2025.03.31

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. என்ன அணுகுண்டா இருக்கும் … எதுக்கு அவன் குடையை கீழ போட்டான் …