தேவ் மித்ராவிற்கு போன் செய்து,” நீ வேலு கிட்ட பேசினியாடி?”
“அதுக்குள்ள வந்து குகன் போட்டு கொடுத்துட்டானா?”
“போட்டு கொடுத்தது மட்டுமில்ல. உன்னை வார்த்தைக்கு வார்த்தை மிதுனு சொல்றான்டி”என்று புன்னகைத்தான்.
“அதான் எனக்கே, ஒரு மாதிரி ஆயிடுச்சு தேவ். அன்னைக்கு அம்மா சித்தினு கூப்பிட சொன்னப்ப கூட மிதுனு சொல்றேன் சொன்னான்.ஆன இப்போ வரை மிஸ்னு கூப்பிடுறான்.ஏண்டா கேட்டதுக்கு கூட தோணும் போது கூப்பிடுறேன் சொன்னான்.ஆனா இப்போ அவனா கூப்பிடவும் “என்று சொல்ல,
இருவரும் பேசிக் கொண்டிருக்க .குகன் தேவின் கன்னத்தில் இதழ் பதித்தவன்..” குட் நைட் தேவ்! நான் அப்பா,அம்மா கூட தூங்க போறேன். பாய்!” என்று விட்டு எகிறி குதித்து ஓடி இருந்தான்
” டேய்! டேய்!”என்று கத்த கத்த அவன் சென்று இருக்க.
” அவன் போயிட்டான் டி”என்றான்.
“கோவிச்சுட்டா ?”
“இல்ல. அவன் சந்தோஷமா தான் போறான்.நீ பேசின விஷயத்தை சொல்றதுக்காக தான் வந்திருக்கான். மற்றபடி தூங்க வரல, அவன் எப்பவும் போல இருக்கான்டி அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம் “என்று சிரித்தான்.
“ஆனா அவனுக்கு ஏன் இப்போ என்ன மிதுனு கூப்பிட தோணுச்சு. இவ்ளோ நாள் இல்லாம, இப்ப ஏன் கூப்பிட தோணுச்சு ?”
“ஏதோ ஒரு இடத்துல வேலுவும் ,அண்ணியும் ஏதாவது பேசி இருக்கணும் .அதை அவன் கேட்டிருக்கலாம்.இல்லனா அவன் மனசுல இப்படி தோணி இருக்காது இல்ல.அவன் இவ்ளோ நாள் ஏதோ நினைத்து ,அப்படி இல்லன்றத இன்னைக்கு நீ ப்ரூப் பண்ண போய் அவன் உன்னை கூப்பிட்டு இருக்கணும்” என்று தனக்கு தெரிந்தவரை புரிய வைத்தான்.
” சரி.ஆன அம்மா சித்தி கூப்பிட சொன்னதுக்கு அவன் உடனே நான் மிதுனு கூப்பிடுறதா சொன்னானே அது எப்படி ?”என்று சந்தேகத்தை கேட்க.
தேவ் புன்னகைத்தான்.
“நான் என்ன கேட்டேன்.நீங்க சிரிக்கிறீங்க தேவ்?”
“வீடியோ கால் வரியா ?”
“என்ன விளையாடுறீங்களா?”
ரியா,” நான் எதையும் பாக்கல” என்றபடி எழுந்து வெளியே செல்ல.
” இந்த நேரத்தில் எங்கடி போற?”
“கொஞ்ச நேரம் தான். ரொம்ப நேரம் எல்லாம் உனக்கு யாரும் டைம் தரல” என்று தன் போனையும் , புக்கையும் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றாள்.
அடுத்த நொடி, அவன் வீடியோ கால் செய்து இருக்க.
அட்டென்ட் செய்தாள்.
அவன் புன்னகையுடன் இருக்க.
“நான் என்ன கேட்டேன்.நீங்க வீடியோ கால் வந்தது மட்டும் இல்லாம ,சிரிச்சிட்டு இருக்கீங்க?”
” அவன் நான் யாரை எப்படி கூப்பிடுறனோ அப்படியே கூப்பிட்டு பழகிட்டான் டி”
“புரியல”
“அத்தையை நீங்க பேர் சொல்லி கூப்பிட்டதால அவனும் அப்படியே பழகினான்.மாமாவையும் கூட அவன் ஆரம்பத்துல பேர் சொல்லி கூப்பிட்டதா சொன்னீங்க.. அதுக்கப்புறம் நீங்க திருத்தம் பண்ணி மரியாதை கொடுத்து பேச சொல்லி சொன்னீங்க. ஆனா, இப்போ என்ன மிதுனு எப்படி கூப்பிட்டான்? நீங்க என்ன மிதுனா கூப்பிடுறீங்க ? ராங்கினு தானே கூப்பிடுறீங்க?” என்றவள் நாக்கை கடிக்க..
“அப்படி மட்டும் தான் கூப்பிடுறேனா?”என்றான் வசிய குரலில்,
“ஏதோ பேசுறீங்க ?”என்றாள் முகத்தை வேறெங்கோ அலை பாய விட்டபடி..
“என்ன பாரு டி “என்றான் புன்னகை மாறாமல்,
அவளும் பார்க்க.” சரி நீங்க சொல்ற போல பார்த்தாலும், அவன் என்னை நீங்க உங்க போன்ல சேவ் பண்ணி வச்சிருக்க மாதிரி தானே கூப்பிடனும். ஆனா, அவன் அப்படி கூப்பிடலையே ?”என்றவள் அவன் முகத்தை பார்ப்பதை முடிந்த அளவிற்கு தவிர்த்தபடி பேசினாள்.
அவள் பார்வையை தவிர்ப்பது எண்ணி புன்னகைத்துக் கொண்டவன்.இதழ்களில் புன்னகை தவழ,” உன்னை நான் இப்படியும் கூப்பிட்டு இருக்கேன் டி. அவன் நோட் பண்ணி இருக்கான். அதுவே அன்னைக்கு நிச்சயம் பண்றப்ப மிதுனு கூப்பிடுறேன்னு சொன்னப்ப தான் நானே உணர்ந்தேன்”
” புரியல தேவ் ?”என்றாள் கண்கள் மின்ன..இப்பொழுது அவன் கண்களை நேராக பார்த்தபடி,
அவன் கண் சிமிட்டி சிரிக்க.
“தேவ் புரியிற மாதிரி பேசுங்க!”
” பல நாள் வாட்ஸ்அப் டிபில இருக்கு இல்ல உன் போட்டோ “என்றான்.
அவள் முறைக்க,
” அது மட்டும் தாண்டி என்கிட்ட இருக்கு. இப்போ எங்கேஜ்மென்ட் க்கு எடுத்த போட்டோஸ் என்கிட்ட இருக்கு.அதுக்கு முன்னாடி உன் போட்டோ எதும் என்கிட்ட இல்ல.. உன் டிபில இருக்க போட்டோவ வச்சு உன்ன நினைச்சு பேசி,சிரிக்க செஞ்சி இருக்கேன். அப்போ ராங்கினு சொன்னாலும், மிதுவும் சொல்லி பேசி இருக்கேன்.
மேக்ஸிமம் இதெல்லாம் அந்த படவா தூங்குனதுக்கப்புறம்தான் நான் பண்ணி இருந்திருப்பேன். சப்போஸ் ஏதோ ஒரு இடத்துல நான் சரிக்கி, அவன் பாக்குற மாதிரி பண்ணி இருக்கேன்னு நினைக்கிறேன்.
அத அவன் நோட் பண்ணி இருக்கான்.நான் உன்ன மிதுனு கூப்பிடுறத உன்னிப்பா கவனிக்கப் போய் தான், அன்னைக்கு சொல்லி இருக்கான். அன்னைக்கு நைட்டே வந்து நான் அவன்கிட்ட கேட்டேன்.
அவன் சிரிச்சிட்டே எனக்கு தோணுச்சுனு சொல்லிட்டு போயிட்டான். அப்பவே தெரிஞ்சிருச்சு அவன் என்னை கவனிக்க போய் தான் அப்படி கூப்பிடுறான்.அப்ப நீயும் போன் பேசலையா, அதனால அவனை பெருசா இந்த விஷயத்தில் நோண்டாம விட்டுட்டேன்” என்று சிரித்தான்.
புன் சிரிப்புடன்,”அப்போ நீங்க என்ன மிதுனு கூப்பிட்டு இருக்கீங்க? ஆனா, என்ன ஒரு நாள் கூட கூப்பிட்டதில்லையே?” என்று அவள் புருவத்தை ஏற்றி இறக்க..
சிரித்தவன்.” தூங்கும்போது மட்டும் கூப்பிடுவேன்” என்றான் தலையை சாய்த்து ..
“என்ன சின்ன புள்ள நினைப்பா? குகன் மாதிரியே சொல்றீங்க?”
” நானும் வளர்ந்த குழந்தை தாண்டி”என்று முத்து பற்கள் தெரிய சிரிக்க ..
அவன் சிரிப்பில் மயங்கியவள். “அது சரி!”என்று தானும் புன்னகைத்தாள்
அதன் பிறகு, சிறிது நேரம் பேச்சு வேறு எங்கோ ,எப்படி எப்படியோ செல்ல.
ரியா ரொம்ப நேரமா வெளியே இருப்பதை உணர்ந்து , “சரிடி ரியா ரொம்ப நேரமா வெளிய இருக்கா. தூங்கு பாய் !”என்று வைத்து விட்டான்.
மித்ரா கதவை திறந்து விட, ரியா உள்ளே வந்தவள். “நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் மித்து” என்றாள்.
“இப்ப வாடி “
“ஆமா”
” என்ன?” என்று கேட்க. இருவரும் கட்டிலில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு, மடியில் தலையணையை வைத்துக் கொள்ள .
“சொல்லு ரியா?”.
“வேலு மாமா பேசும்போது நானும் இங்க தான் இருந்தேன்.அதனால அவங்க பேசுனத நானும் கேட்டேன்”
“என்ன ரியா சொல்ல வர”
“சொல்றேன். பொறுமையா கேளு. வேலு மாமா சொன்னதுல எனக்கு எந்த இடத்திலும் தப்பா தெரியல”
மித்ரா ரியாவை முறைக்க.
” அவர் சொல்ல முடியாமல் கொஞ்சம் சங்கடப்பட்டாரு. வித்யாக்கா சொல்லி இருந்திருக்கலாம். அவங்க ஏதோ ஒரு உணர்வுல பீல் பண்ணிட்டு இருந்திருக்கலாம். நான் வெளிப்படையா சொல்றனே!அவங்க கூட அவன் தூங்குறதுக்கும், உங்க கூட குகன் தூங்குறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா? பேசி முடிச்சிடுறேன் முறைக்காத.
அவங்க பையன், உன் பையன் இந்த மாதிரி எல்லாம் பிரிச்சு பேசல ஓகேவா,தேவுக்கு பையனா உனக்கும் அவன் பையன்தான்.அதை எந்த இடத்திலும் நான் தப்பு சொல்ல மாட்டேன்.ஆனா கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் கழிச்சு குகன் அவங்க கூட தூங்கும்போது அவங்களுக்குள்ள ஏற்படுற உணர்வுக்கும்,புதுசா கல்யாணம் ஆகி முதல் முறையா ஒரே ரூம்ல ஒன்னா இருக்க போற உங்க கூட குகன் இருக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.
ஃபீலிங்ஸ் அவங்க கட்டுப்படுத்துவதற்கும், நீங்க கட்டுப்படுத்துறதுக்கும் வித்தியாசம் இருக்கு.ஏன்னா முதல்முறையா அன்னைக்கு தான் நீங்க ரெண்டு பேரும் ஒரே இடத்தில் இருக்க போறீங்க, அது உங்களுக்கான நேரம்.
உங்களுக்கான இடம்.அந்த இடத்துல குகன் இருக்கான் அப்படின்றதுக்காக நீங்க பீலிங்க்ஸை கட்டுப்படுத்த முடியாது. சரின்னு நினைச்சு கட்டுப்படுத்தினாலும், அது பின்னாடி உங்க ரெண்டு பேத்துக்குள்ள தான் விரிசல் ஏற்படும்.
பிரச்சனை ஏற்பட நிறைய விஷயத்துக்கு வழிவகுக்கும். இல்லன்னு சொல்லாத. இதெல்லாம் நான் பேசலாமா? வேணாமான்னு இவ்ளோ நேரம் வெளியே உட்கார்ந்து யோசித்தேன். ஆனா ,சப்போஸ் ரெண்டு பேரும் புரிஞ்சுக்காம, விட்டுடீங்கன்னா அது உங்களைப் தான் பாதிக்கும்.
எனக்கு தெரிஞ்சி உண்மையா குகன் ஸ்மார்ட்.இதுவரைக்கும் உன்னை மிதுனு கூப்பிடாம இருந்தவன்.நீ எந்த இடத்திலும் அவனை யாருக்காகவும் விட்டு விட மாட்ட என்று ஏதோ ஒரு வகையில அவன் உணர போய் தான் உன்ன அப்படி கூப்பிட்டு இருக்கான்.அதே மாதிரி இப்ப தேவுக்கும் ,உனக்கும் போன் பேசும்போது குறுக்க வரக்கூடாதுன்னு அவங்க ,அப்பா அம்மா கிட்ட போய்ட்டான்.
இந்த வயசுல அவனுக்கு இருக்க ஒரு இது கூட உங்க ரெண்டு பேருக்கும் இல்லைன்னு எனக்கு தோணுது.பாசம் உங்க கண்ணை மறைச்சிருச்சு அப்படி கூட வச்சுக்கலாம்.கொஞ்சம் நிதானமா யோசிச்சீங்கன்னா இதுல இருக்க நல்லது கெட்டது உங்களுக்கு புரியும்.
வேலு மாமா தப்பான அர்த்தத்துல சொல்லல. அவர் சொன்னது கூட இப்ப இருந்தே பழகினால் தான். குகனை அதுல இருந்து கொஞ்சம் வெளியே கொண்டு வர முடியும் என்ற எண்ணம் ஓகேவா.
அவன் சின்ன புள்ளையா இருக்கும் போது, அவனை வித்யா அக்கா கிட்ட இருந்து வெளியே கொண்டு வருவதற்கு பட்ட கஷ்டம். இப்போ வீட்ல இருக்க எல்லார்கிட்டயும் அட்டாச் ஆக அவன் பட்ட கஷ்டம்.இப்படி நிறைய இருக்க. உடனே அவனை எதுலையும் நம்ம திணிக்க முடியாது. புரியும்னு நினைக்கிறேன் என்றவள் அமைதியாக படுத்து விட்டாள்.
மித்ரா சிறிது நேரம் யோசித்தாள். நிறைய விஷயங்கள் புரியப்பட, சிரித்துக் கொண்டே படுத்துவிட்டாள்.
இங்கு தேவ் மித்ராவிடம் பேசிய மகிழ்ச்சியில் தூங்கிவிட்டான்.
மறுநாள் காலையில் அவன் எழுந்து வர,வேலு வேகமாக அவன் கையை பிடித்துக் இழுத்துக் கொண்டு தன் ரூமுக்கு சென்றான்.
“எதுக்குடா கைய புடிச்சிட்டு இழுத்துட்டு வர “என்று முறைக்க.
“முறைக்காம நான் பேசறதை அமைதியா கேளு! இல்லன்னு வை கன்னம் பழுத்துக்கும்”என்றான் வேலு.
கோவமாக தன் அண்ணனை தேவ் முறைத்து பார்க்க.
நேற்றிரவு ரியா மித்ராவிற்கு வெளிப்படையாக கூறியது போல், வேலு அனைத்தையும் தன் தம்பியிடம் கூறி முடித்தான்.
” கொஞ்சமாச்சு வயசுக்கு ஏத்த மாதிரி யோசிக்க பழகுங்க! டா. பாசம் உங்க கண்ணை மறைக்குது. ஆனா, அதை தாண்டி ரியாலிட்டின்னு ஒன்னு இருக்கு. இப்படியெல்லாம் இல்ல, அப்படி எல்லாம் இல்லைன்னு சொல்லிட்டு இருக்காத! என்னால அவ்ளோ தான் சொல்ல முடியும்!”என்றான் கறாராக..
வித்யா அங்கு சிரித்துக் கொண்டே வர.. இவன் தலையை சொரிந்த படி நகர..
“என்ன டி சிரிச்சிட்டே வர.. என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கா” என்று முறைத்தான் வேலு.
“இல்ல வேலு. ரியா போன் பண்ணா”
“என்னவாம்?”
“இப்போ நீங்க இவனுக்கு புரிய வச்சது போல, நேத்து நைட் அவ மித்ராவுக்கு புரிய வச்சாலாம்.
” பாருடா! என் ரியா தங்கத்துக்கு இருக்க அறிவு கூட இவங்க ரெண்டுத்துக்கும் இல்லை.ஆளு தான் வளர்ந்து இருக்குங்க,அறிவு வளரல..”என்று சிரித்தான்.
” என்னது ரியா தங்கமா?” என்று அவன் காதை திரிகினாள்.
“பின்ன அவ என் மச்சினிச்சி இல்லையா?”
” அது சரி.மச்சினிச்சி தான். பொண்டாட்டியிருக்கும் போதே சாருக்கு மச்சினிச்சி கேக்குதோ?”
“அப்படி இல்லடி.நீ பக்கத்துல இருந்து என்ன புரிஞ்சிகிறதுக்கும் , தூரத்தில் இருந்து அவ என் மனச புரிஞ்சிகிறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா? அதான்” என்று அவளை சீண்ட..
“எது அவ உங்க மனச புரிஞ்சுக்கணுமா? உங்கள” என்று அவன் தொடையில் கிள்ளினாள்
அவன் துள்ளிக் குதிக்க,
அவன் தோளில் சாய்ந்து கொண்டு,”வேலு “என்று அவள் ஹஸ்கி வாய்சில் அழைக்க..
“என் விது குட்டிக்கு பொசசிவா?”என்றான் ஏற்ற இறக்கமாக, புருவத்தை உயர்த்தி,அவனது கண்களும் சேர்த்து சிரித்தது..
” உங்கள”என்றவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு வேகமாக வெளியேறி இருந்தாள்.
சிரித்துவிட்டு, தன் வேலையில் கவனத்தை செலுத்தினான்.
சாப்பிட்டுவிட்டு எழுந்து கொள்ளும் பொழுது, “வேலு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ குகனை ஸ்கூலுக்கு அழைச்சிட்டு போ” என்றான் தேவ்.
வேலு அவனை குறுகுறுவென பார்க்க. சிரித்துக் கொண்டே , அவன் அருகில் வந்து குனிந்தவன்.” உண்மையா வேலை தாண்டா இருக்கு. நம்பு!”
“அப்போ ஈவினிங்”
தேவ் பதில் சொல்வதற்கு முன்பாகவே, “ஈவினிங் நான் அப்பா கூடவே வந்துடுறேன் தேவ்!”என்று சிரித்தான்.
அவன் தலையை கலைத்துவிட்டு அவன் கன்னத்திலும் இதழ் பதித்துவிட்டு “பாய் டா “என்று வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி கொண்டு, கிளம்பி விட்டான் .
காலையில் எழுந்தவுடன் வேலு தனது அப்பா ,அம்மாவிடம் எதுவும் பிரச்சனை இல்லை என்று கூறியிருந்தால் ,அவர்களும் அமைதியாகி விட்டார்கள்.
காலையில் உண்மையாகவே தேவுக்கு வேலை இருந்ததால், அவன் நேராக ஆபீசுக்கு சென்று விட்டான்.
மாலைப்பொழுது அரை மணி நேரம் முன்பாகவே பர்மிஷன் கேட்டுக்கொண்டு சீக்கிரமாகவே கிளம்பி இருந்தான் வேலு. அவன் ஆபீஸ் ஒரு பக்கமும் ,குகன் ஸ்கூல் ஒரு பக்கமும் இருப்பதால் நேரத்திற்கு செல்வது கடினமாக இருக்கும் என்பதால் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே கிளம்பி இங்கு ஸ்கூல் விடும் நேரத்திற்கு வந்து குகனை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றிருந்தான்.
அதன் பிறகு, தேவ் வந்து ஸ்கூல் வாசலில் நிற்க .
மித்ரா எப்பொழுதும் போல் வெளியே வந்தாள்.
அவனை யோசனை உடன் பார்த்துக் கொண்டே அவள் வர ,
“குகன் எங்க? நீங்க மட்டும் இருக்கீங்க?”
“அவன் வேலு கூட போய்ட்டான்”
” மாமா வந்து கூட்டிட்டு போனாரா? அப்ப நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க?”
அவன் கைகளை கட்டிக்கொண்டு அவளை ஒரு மார்க்கமாக பார்க்க. வேறு புறம் பார்வையை பதித்த படி, நின்றாள்
“கொஞ்சம் வெளியே போகலாமா?”என்றான்.
ஒரு சில நொடிகளுக்கு பிறகு,” சரி “என்று தலையாட்டினாள் அவளும்.
அவளுடைய வண்டியை எடுத்துக்கொண்டு எப்பொழுதும் செல்லும் ஐஸ்கிரீம் பார்லர் பக்கம் வண்டியை திருப்ப,” அங்க வேணாம். வேற எங்காவது போலாம்”
” வேற எங்காவதுனா ?”
“இந்த பக்கம் பக்கத்துல பார்க் இருக்குல்ல அங்க போகலாம்” அவனை ஒரு மார்க்கமாக பார்த்தவள். வண்டியை எடுத்துக்கொண்டு பார்க் இருக்கும் பக்கம் கிளம்ப..
தேவ் அவளையே ரசனையாக , வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு வந்தான்.
“தேவ் இது ரோடு. என்னயவே பார்த்துட்டு வந்து வண்டியை எங்கயாச்சு விட்டுறாதீங்க! சீக்கிரம் வாங்க!” என்றவள் சிரிப்புடன் நகர்ந்தாள்.
இவனும் அவளை எண்ணி சிரித்துக் கொண்டே, தலையை கோதிய படி வந்து இறங்க.
இருவரும் பார்க்கிற்குள் நுழைந்தார்கள்.
” ஒரு முக்கியமான விஷயம் பேசணும் !”என்று இருவரும் ஒரே போல் சொல்லிக் கொள்ள ..சிரித்துக் கொண்டார்கள்.
“நீ முதல்ல சொல்லு,நீங்க முதல்ல சொல்லுங்க” என்று இருவரும் சொல்ல..
ஒரே நேரத்தில், வேலு சொன்னதில் உள்ள அர்த்தம் புரிந்து விட்டது என்று சொல்லிவிட்டு இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.
இருவருக்கும் முகத்தில் நாணம் கூடிக்கொண்டது. இருவரும் சிரித்துக் கொண்டார்கள். ரியா பேசியதை மித்ரவும், வேலு பேசியதை தேவும் சொல்லி முடித்தார்கள்.
“அப்போ குகன் இனி உங்க கூட தூங்க மாட்டானா?”
“அப்படிலாம் இல்லடி! அவனுக்கு எப்படி விருப்பம் இருக்கோ, அதுபோல தூங்கிக் கொள்ளட்டும்! ஒன்னும் பிரச்சினை இல்லை”
சிறிது நேரம் அவர்களுக்கான நேரமாக செல்ல.. நேரத்தை உணர்ந்து இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
அதன் பிறகு, தினமும் காதல் மழையில் நனைந்தார்கள். அதுவும் வேலு பேசிய பிறகு, அதுவரை காதலியாக மட்டுமே, சுற்றி வந்தவன்.. அதன் பிறகு, மித்ராவை பார்க்கும் பார்வையில் மாற்றம் இருந்தது..
குகன் தேவுடனும் ஒரு சில நாள் படுத்துக் கொண்டான். ஒரு சில நாள் வித்யா &வேலு, எழில்& தனமுடனும் படுத்துக் கொண்டான். நாட்கள் வேகமாக சென்று திருமண நாள் நெருங்கியது..
தனம் ஒரே வார்த்தையாக திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே, “இனி குகனை நீ ஸ்கூலுக்கு அழைத்துக் கொண்டு செல்ல வேண்டாம். உன் அண்ணனோ, அண்ணியோ, இல்லை அப்பாவோ, மூவரில் யாரோ ஒருவர் அவனை ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வார்கள். அப்படி இல்லை என்றால் நானே கூட போய்க் கொள்வேன். இனி அவன் ஸ்கூல் பக்கம் நீ போன உன் காலை உடச்சி வீட்ல உட்கார வைத்து விடுவேன்” என்று மிரட்டி விட்டார்.
வித்யா,வேலு ,குகன் மூவரும் சிரிக்க, தேவ் முறைத்தவன் தனத்தை பாவமாக பார்த்தான்.