மித்ரா,” அப்போ அத்தைக்கும் ஆசை இருக்கும் அதை பொய்யாக்கிட்டீங்க இல்லையா?” என்று கேள்வி கேட்க.
“ஆமாடி. அம்மா கிட்ட நான் சொல்லலை என்ற எதிர்பார்ப்பு ,வலி இருக்கும் .ஆனா அதுக்கு முன்னவே உன்ன பத்தி நான் அவங்க கிட்ட சொல்லி இருக்கேன். “
“என்ன பத்தி நீங்க மேலோட்டமா சொல்ற விஷயத்துக்கும், என்ன புடிச்சிருக்கு ,என்கிட்ட உங்க விருப்பத்தை சொல்லிட்டீங்கன்னு அத்தை கிட்ட சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா?”
அவள் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டான்.
“தேவ் என்ன பண்றீங்க?” என்றாள் நா குழற லேசாக கூச்சத்தில் நெளிந்த படி..
” என் தங்கம் டி நீ” என்று கன்னம் வழித்து நெற்றி முறிக்க,
“தேவ் உங்களை” என்று புன்னகையுடனே வெட்கத்தில் சிவந்தாள்..
“என்ன? என்னடி?” என்றான் புன் சிரிப்புடன் புருவத்தை உயர்த்தி,
“நீங்க பேச்ச மாத்துறீங்க? தேவ் “
“நான் பேச்சு எல்லாம் மாத்தலடி”
” பின்ன?பொம்பளைங்க பண்ற மாதிரி, பெரியவங்க அத்தை, எங்க அம்மா எல்லாம் பண்ற மாதிரி நெற்றி முறிக்கிறீங்க?” என்று சிரித்தாள் கலகலவென்று ..
அவளது சிரிப்பை ரசித்தான்.
” பேச்ச மாத்தாம பதில் சொல்லுங்க?”
சிரித்தவன்.. தன்னை சரி செய்து கொண்டு, பேச ஆரம்பித்தான் ..
“உன்கிட்ட என்னோட விருப்பத்தை சொல்லிட்டேன் அப்படின்றத எல்லாரையும் வைத்து அண்ணி மடியில படுத்து சொன்னேன். அம்மாக்கு அவங்க மடியில படுக்கவில்லை என்ற மாதிரி வலி இருக்கும் .அவங்களுக்கு அந்த வலியை நான் கொடுக்கவும் செஞ்சிருக்கேன். பெத்த மகனா!ஆனா என்னால, அண்ணி எங்க பழையபடி தனக்கு யாரும் இல்லை என்று நினைத்து விடுவார்களோ ?என்ற பயத்துல அவங்க மடியில படுத்து எல்லாத்தையும் சொன்னேன்.அதை தாண்டி அவங்க கிட்ட நானுமே நெருங்கி விட்டேன் டி. க்ளோசா பழகிட்டேன். எங்களுக்குள்ள ஒரு பாண்டிங் இருக்கு புரியுது தானே?”
“புரியுது! அதை நான் தப்பு சொல்லல ..ஆன அத்தை”..
“நான் எல்லாரையும் பாக்கணும் டி. எனக்கு எல்லாருமே வேணும். இவங்களுக்காக அவங்களை என்று விட முடியாது…அவங்களுக்காக இவங்கள என்றும் விட்டுவிட முடியாதுடி. அந்த இடத்துல அம்மாக்காக என்று யோசிச்சா? அண்ணியை விட்ருவேன்.அண்ணிக்காக யோசிச்சா அம்மாவை விட்டுருவேன். இப்படி ஒவ்வொருத்தவங்களுக்காக யோசிச்சா இன்னொருத்தவங்களை விட்டுருவேண்டி “என்றான் கண்கள் கலங்க ..
அவன் கையில் அழுத்தம் கொடுத்தாள்.” என்ன பண்றீங்க ?”
“என்ன? என்ன தான் பண்ண சொல்ற ?எனக்கு எல்லாருமே வேணும்டி, அண்ணிகிட்ட நான் தனியா போய் ரூம்ல படுத்து எதுவும் சொல்ல முடியாதுடி. அது தப்பா ஆயிடும். அடுத்தவங்க பார்வைக்கு மட்டும் கிடையாது. எனக்கும் உறுத்தும். அவங்களுக்கும் உறுத்தும்.ஏன்னா அவங்களுக்கும் ,எனக்குமான வயசு வித்தியாசம் அப்படிப்பட்டது. நான் ஒன்னும் சின்ன புள்ள இல்லடி ,வளர்ந்த பிள்ளை.
அது எங்க ரெண்டு பேருக்கும் தெரியுமே!என்ன தான் அவங்க இழந்த இல்லாத ரத்த உறவாக என்ன பார்த்தாலும், அவங்க என்கிட்ட எல்லா விஷயத்தையும் எதிர்பார்க்க மாட்டாங்க.. உறுத்தும்.. அது அவங்க வேலுக்கு பண்ற துரோகமா நினைப்பாங்க ,துரோகம் னா தப்பான அர்த்தம் இல்ல தான்..ஆன மனசுல ஏதோ ஒரு இடத்தில் உறுத்தும் அது எல்லாத்தையும் தாண்டி ஒரு பொண்ணா அவங்க வளர்ந்த ஒரு பையன் கிட்ட எந்த அளவுக்கு நடந்துக்கணுமோ அந்த அளவுக்கு மட்டும் தான் நடந்துக்க முடியும்.
நான் வளர்ந்த பையனா யார்கிட்ட எந்த உரிமையை எந்த அளவிற்கு எடுத்துக்கணுமோ அவங்க கிட்ட அந்த அளவுக்கு மட்டும் தான் உரிமை எடுத்துக்கணும். அண்ணிகிட்ட கொஞ்சம் அதிகமாகவே உரிமை எடுத்துக்கிட்டேன்.
என் சம்பந்த பட்ட ஒரு சில உரிமையையும், அம்மாவோட உரிமையையும் புடுங்கி அவங்ககிட்ட கொடுத்துட்டு இருந்தேன்.. ஆனால் ,அது எல்லாமே சூழ்நிலையில் பண்ணுது .தப்பு தான் சரின்னு சொல்ல மாட்டேன்.
அந்த சூழ்நிலையில ஒவ்வொருத்தவங்களையும் எப்படி சரி பண்ண தெரியாம நான் பண்ண ஒரு விஷயம் தப்புதான். அதை கொஞ்சம் கொஞ்சமா மாத்திட்டு தான் டி வரேன். வேற என்ன பண்ண? ஆனா, நான் அம்மாகிட்ட ரூம்லயோ வெளியவோ எங்க வேணாலும் அவங்க மடியில படுக்கலாம். அவங்க கிட்ட நான் சொல்ல வர விஷயத்தை சொல்லலாம்.
ஆனா, அண்ணி கிட்ட தனியா நான் மட்டும் போய் அண்ணி கூட உட்கார்ந்து ரொம்ப நேரம் எந்த ஒரு விஷயத்தையும் பேச முடியாது. அது எங்களுக்கே கஷ்டமா தான் இருக்கும். அடுத்தவங்க என்ன நினைப்பாங்கன்றது அடுத்த விஷயம். ஆனால் ,எங்களுக்கான உறவு என்று ஒன்னு இருக்குல்ல.. அதை தாண்டி ரொம்ப நாங்க கொண்டுட்டு போன தப்பா ஆகிடும். அது அவங்களையும் வருத்தம் .என்னையும் வருத்தம்”
அவனை கட்டி அணைத்து இருந்தாள். கண்கள் கலங்க கூறி முடித்தான்.
அவன் முதுகை நீவி விட்டாள். “உணர்ச்சி வச படாதீங்க ?” என்றாள்.
“உனக்கு என் மேல கோவம் வருது இல்ல?”
அவனை அமைதியாக பார்த்தாள்.
” சொல்லுடி?”
” கோபம் இருந்துச்சு இல்லன்னு சொல்ல மாட்டேன். அண்ணிக்காக, குகனுக்காக யோசிச்சு அத்தையையும், மாமாவையும், ஏன் வேலு மாமாவை கூட ஏதோ ஒரு சில இடத்துல தவிக்க விட்டு இருக்கீங்கன்னு யோசிச்சேன்.அக்கா சொன்னது மட்டும் வச்சு. ஆனா, உங்க பக்கம் இருந்து நீங்க சொல்லும்போது அதுவும் தப்புன்னு தெரிஞ்சி ஒரு சில விஷயம் நீங்க செஞ்சு இருக்கீங்க? அது தப்பு இல்லன்னு ஆகிடாது தான். சூழ்நிலை புரியுது.இருந்தாலும்” என்று நிறுத்த .
” உனக்கு பிடிக்கலையா டி அப்போ என்ன?” என்றான்.. தொண்டை அடைக்க கரகரத்த குரலில்..
அவன் வாய் மீது ஒற்றை விரல் வைத்தாள்.
“உஷ்! லூசு மாதிரி பேசாதீங்க, உங்களை பிடிக்கலைன்னு நான் சொல்லவே இல்லையே” என்றாள் முறைப்புடன்..
அவள் விரலில் முத்தமிட்டான். அவள் கூச்சத்தில் வேகமாக கையை விளக்கிக் கொள்ள,
அவள் கையை பிடித்துக் கொண்டான். அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்க,
” இத முடிஞ்ச அளவுக்கு சரி பண்ணலாம். எப்படியும் இப்பவும் எதுவும் அந்த அளவுக்கு பழையபடி இருக்காதுன்னு நினைக்கிறேன்” என்றாள் மேலோட்டமாக..
சிரித்தான்.”ஏற்கனவே, அண்ணி என்கிட்ட இருந்து வேலுகாக விலகி தான் இருக்காங்க டி. இப்போ எனக்கு உன் மேல விருப்பம்னு தெரிய ஆரம்பிச்சதுக்கு அப்புறம் இன்னுமுமே விலகிட்டாங்க. அதிகமா மடியில கூட நானுமே படுத்ததில்லை. ஒரு ரெண்டு, மூணு டைம் படுத்திருப்பேன். ஆனா, என்னால குகனை மட்டும் விட்டுத் தர முடியலடி,அண்ணிக்கு முழுசா வேலு இருக்கான் என்று நினைத்து, நான் குகனை “…
“அவனுக்கும் அவங்க அப்பா, அம்மா இருக்காங்க தேவ்”
“அப்போ, அவன் என்கிட்ட க்ளோசா இருக்குறது உனக்கு பிடிக்கலையா ?”
சிரித்தாள்.. குழந்தை போல் கேட்பவனிடம் என்ன பேசுவது ?
“நான் அவங்க பாசத்தையும் , உரிமையையும் தட்டி பறிக்கிறேன்னு தான நினைக்கிற?”
“அதுவும் இருக்கு”.
” அதுவும் இருக்குன்னா ?”
“அவனுக்கு வீசிங் வந்ததாக கூட இருக்கட்டும். ரொம்ப முடியாமல் இருந்தாக கூட இருக்கட்டும். இன்னொரு முறை நீங்க இதை ட்ரை பண்ணி இருக்கலாம் இல்ல ?அதாவது அவனை அக்கா ,மாமா கிட்ட விட்டு இருக்கலாம் இல்ல?”
” அவன் இப்பவும் அவங்க கிட்ட போறான் டி சரியா? எந்த அளவுக்கு உனக்கு அண்ணியும் ,அம்மாவும் சொன்னாங்கன்னு எனக்கு தெரியாது. அவன் என் கூட இருக்கான், அவங்க கூடவும் இருக்கான். ஆனா, என் கூட ரொம்ப நாள் தூங்குறான்.ரொம்ப நேரம் இருக்கான்.
அதுக்காக அவன் வேலு, அண்ணி கிட்ட அப்பா ,அம்மா என்ற பாசத்தையோ ? இல்ல ,அப்பா அம்மாவுக்கு தரவேண்டிய எந்த ஒரு இடத்தையும் விட்டுக் கொடுக்கல!. அவன் வேலு மாதிரி டி ஃபர்ஸ்ட் .அவன் வளர்ந்தது வேணா என்கிட்ட இருக்கலாம். ஸ்கூல்ல நடக்கிற எல்லா விஷயத்தையும் அவங்க கிட்ட சொல்லுவான்.
தூங்கும்போது என்கிட்ட வருவான். மத்த நேரம் அவங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அவங்க கூட தான் இருப்பான்.அவங்களை தான் சுத்தி வருவான்.வெளியே போகணும் என்றால் மட்டும் தான் என்கிட்ட வந்து கேட்பான்.
அதுவே ஃபர்ஸ்ட் வேலு கிட்ட கேட்பான். அவன் கூட்டிட்டு போகல என்ற பச்சத்தில் என்கிட்ட வருவான்.வேலுவே என் கூட ஒரு சில நாள் அனுப்பி விடுவான்..
அதுக்காக நான் அவங்ககிட்ட இருந்து அவனை பிரிக்கல டி. அதே சமயம் அவனை முழுசா விட்டுக் கொடுக்கவும் என் மனசு இடம் கொடுக்கல “கண் கலங்கினான்.
“சரி விடுங்க! இது எதையும் யோசிக்காதீங்க!”..அவனை தேற்றினாள்.
” உனக்கு இன்னும் ஏதாவது குழப்பம் இருக்கா டி?”
புன்னகைத்தாள்.
” எதுக்குடி சிரிக்கிற?”
” நான் கேட்டதுல உங்களுக்கு எதுவுமே கஷ்டமாவோ இல்ல ,தப்பாவோ தெரியலையா?”
” அது உன் இடத்துல வேற யாராவது இருந்தா எப்படி இருப்பாங்கன்னு எனக்கு தெரியாதுடி .ஆனா, ஏற்கனவே நான் யோசிச்ச விஷயம் தானே! ஒரு பொண்ணா, என்னோட மனைவியா, என் கைய புடிச்சிட்டு, என்னை மட்டும் நம்பி, என் வீட்டில் அடி எடுத்து வைக்க, போறவ பல கனவோட ,ஆசையோடு வருவா, நான் அவளுக்கு மட்டும் தான் எல்லா உரிமையும் தரணும்னு…
இங்க நிறைய பொண்ணுங்களுக்கு ஒரு சில விஷயத்தை நமக்கானவன் அவனைப் பெற்ற தாயிடமே சில விஷயங்களை பங்கு போட்டுக் கொள்ளும் போதே, கஷ்டமா இருக்கும் டி, அம்மாவையே ஏத்துக்க முடியாத விஷயம். அண்ணி.. அதுவும் அவ்வளவா வயசு வித்தியாசம் இல்ல ..வயசு வித்தியாசமே இருந்தாலும் கூட ,அண்ணிக்கு முக்கியத்துவம் கொடுத்தா? அந்த பொண்ணுக்கு கஷ்டமா இருக்கும்.அப்படி இருக்கப்ப இவ்வளவையும் நீ ஏத்துக்கிட்ட அப்படின்றப்ப, நான் தாண்டி உனக்கு கோயில் கட்டி கும்பிடணும்”
மித்ரா பதறியவளாக,”தேவ்! என்ன பெரிய பேச்செல்லாம் பேசுறீங்க?”
” இல்லடி நிஜத்தை , நிதர்சனத்தை சொல்றேன். எல்லாத்தையும் இப்ப நீ எனக்காகவோ? அண்ணிக்காகவோ ?குகனுக்காகவோ ? ஏன் மொத்த குடும்பத்தையும் யோசிச்சு சரின்னு எடுத்துக்கலாம். ஆனா,ஏதோ ஒரு மூலையில வேலுக்கு இருக்கிற மாதிரி வலி உனக்கும் வராத அளவுக்கு நடந்துக்கணும் இல்லையா?”
” அப்போ இன்னமும் மாமாவுக்கு ?”என்றவள் நிறுத்த..
” அவன் எங்க உறவை சந்தேகப்படல .ஆனா, ஒரு புருஷனா ? மனுஷனா அவனுக்கும் எல்லா உணர்வுகளும் இருக்குடி! சரியா ?தன்னோட தம்பி ,தன்னோட பொண்டாட்டி , தன்னோட புள்ள இவங்க எல்லாம் தனக்கு தரவேண்டிய ஏதோ ஒரு இடத்தை முக்கியத்துவத்தை, தன் வீட்ல இருக்க வேற ஒருத்தவங்களுக்கு தராங்க எண்ணும் போது,லேசா கஷ்டமாவும் ,வலிக்கவும் தான் செய்யும். இதை எனக்கு எப்படி சரி பண்ணனும்னு தெரியல? சரி பண்ண முடியுமா ? அதும் தெரியல ? காலப்போக்குல இதுல மாற்றம் வந்தா உண்டு. சரி பண்ண முடிஞ்சா பண்ணலாம்” என்று கவலையாக உதட்டை பிதுக்க..
“எல்லாமே சரி ஆகும் தேவ்..சரி பண்ண முடியாதது என்று எதுவுமே கிடையாது. பாசிட்டிவா நினைச்சா எல்லாத்தையும் சரி பண்ணலாம். அக்காவை, குகனை உங்களால சரி பண்ண முடியும்னு நினைத்து ஒரு ஸ்டெப் எடுத்து வச்சிங்க இல்ல? அதே அளவுக்கு இம்பார்ட்டண்ட் கொடுத்து இப்ப இருக்க சூழ்நிலையையும் ,சரி பண்ணணும்னு நினைச்சா ,சரி பண்ண முடியும். என்ன அதுக்கு கொஞ்சம் காலமும் ,அவகாசமும் ,அதைவிட முக்கியமா நம்ம எல்லோருக்கும் பொறுமையும் ரொம்ப ரொம்ப முக்கியம். அத சரி பண்ண முடிஞ்சு உங்களால இதை சரி பண்ண முடியாமல போயிடும்?சரி நேரம் ஆயிடுச்சு போலாமா ?”என்றாள் தலை சாய்த்து.
” அவ்வளவு தானா!”என்றான் பாவமாக..
“வேற என்ன? தேவ்”
“இல்ல. எதுவும் இல்லை. நீ கேட்ட கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சா .இல்ல,உன் மனசுல இருந்த எல்லாத்துக்கும் என்று அவள் கையை பிடித்து , கண்களை உற்று நோக்க..
அவன் கையில் அழுத்தம் கொடுத்து பிடித்தவள். “என் தேவ் மேல நான் வச்சிருக்க நம்பிக்கை அண்ட் லவ் மேல எனக்கு 100% நம்பிக்கை இருக்கு… இப்ப இல்ல எப்பவும் இந்த நம்பிக்கை குறையாது. குறையிற அளவுக்கு நடந்துக்க மாட்டீங்கன்னு தெரியும்” என்று சிரித்தாள்.
அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு, ஒரு சில நொடி அமைதியாக இருந்தவன். அவள் நெற்றியில் இதழ் பதிக்க..
லேசாக விலகினாள்.
“சரிடி வா!” என்று அவள் தலையை சரி செய்து விட்டான். அவள் சிரிக்க,அவனும் சிரித்தான்.
இருவரும் சிரித்துக்கொண்டே வெளியில் வந்தார்கள். இருவரையும் முறைத்து கொண்டு இருந்தாள் ரியா.
“இவ வேற முறைக்கிறா ?ரொம்ப நேரம் ஆயிடுச்சு போல “என்று நாக்கை கடித்தாள் மித்ரா..
“ரொம்ப நேரம் இல்ல.. மா மி…மித்துரா …ரொம்ப ரொம்ப ரொம்ப நேரம் ஆயிடுச்சு! “என்று பல்லை கடித்தாள் ரியா.
“ரெண்டு பேரும் சாப்டீங்களா ? வேற ஏதாவது வேணுமா ?” என்றான் அசடு வழிய பேச்சை மாற்றி தேவ்.
“வீட்டுக்கு போலாமா? தேவ் “என்றான் குகன்.
அவனை பார்த்து சிரித்து விட்டு, அவன் தலையை கலைத்த மித்ரா. “ஏதாவது வேணுமாடா?” என்றாள் புன்னகையுடன்..
“இல்ல மிஸ்! எதுவும் வேண்டாம்”
மித்ராவும் சரி, ரியாவும் சரி, அவனை அமைதியாக பார்த்தார்கள் ..
“இன்னும் ஏன்டா அவளை மிஸ்னு கூப்பிடுற ? என்ன ரியான்னு தான கூப்பிடுற? அப்புறம் என்ன ?”
“உங்களை நான் ஆரம்பத்திலிருந்து ரியானு தானே கூப்பிடுறேன் “என்றான் தோரணையாக.
“அம்மா சித்தினு கூப்பிட சொன்னதுக்கு,இல்ல நான் மிதுன்னு கூப்பிடுறேன் சொன்ன தானே! இப்போ என்ன?”
“சாரி..அப்போ சொன்னேன்..ஆன இப்போ கூப்பிட தோணல?” என்றான் வாண்டு..
“தேவ் நேரம் ஆகுது வீட்டுக்கு போலாமா?” என்றான் .
“சரி “என்று அவன் மனநிலை புரியாமல் ,அனைவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
தேவை பொறுத்த அளவில்,’ அவன் மனதில் ஏதோ இருக்கிறது ‘என்று மட்டும் தெரிந்து கொண்டான் .ஆனால், என்னவென்று தான் புரியவில்லை.
மாலை வீட்டுக்கு சென்றவுடன் வேலு தான் ” தாயா தக்கா “என்று குதித்தான்.
” என்ன டா நினைச்சிட்டு இருக்கீங்க? ஆவுன்னா வாரத்துல மூணு, நாலு நாள் வெளியே சுத்திட்டு வரீங்க? அவன் படிக்கிற புள்ள, சின்ன பையனை வச்சுட்டு உன் இஷ்டத்துக்கு எங்க வேணாலும் போவியா? உன் கூட சேர்ந்து என் பையனையும் கெடுத்துருவ போல.இனி என் பையன உன்கிட்ட விடக்கூடாது. நல்ல பழக்கத்தை கற்று தரவில்லை என்றாலும் ,பரவாயில்லை. கெட்ட பழக்கம் தான் கற்று தருவ போல! இது எங்க போய் முடிய போகுதோ? இனி அவன் கூட போன என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது ?என்று இறுதியில் குகனையும் மிரட்டி விட்டு, தேவிடமும் கத்திவிட்டு ரூமுக்குள் சென்று விட்டான் வேலு..
வீட்டில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சி.
தேவ் ஒரு சில நொடி கண்ணை மூடி திறந்தான். அவனுக்கு கண்கள் கலங்கி விட்டது. இதுவரை வேலு எத்தனையோ முறை இதுபோல் பேசியிருக்கிறான். வெளியே சென்று வரும் போது திட்டி இருக்கிறான். ஆனால், அதுக்கும் இதுக்கும் இருக்க வித்தியாசத்தை தேவ் உணர்ந்தான்.
தன்னால் குகன் கெட்டு விடுவானா ? இவனை வைத்துக்கொண்டு நான் அலைக்கிறேனா ?என்று யோசித்தான். அவனுக்கு மின்னல் வெட்டியது போல் ஒன்றே ஒன்று தான் தோன்றியது .
ஒரே ஒரு விஷயம் தான். குகனை வைத்துக்கொண்டு நான் மித்ராவை சென்று பார்த்தது தவறு. இன்னொன்று ,அதுவும் இவ்வளவு நேரம் குகனுமே கூட வீட்டிற்கு எப்பொழுது செல்லலாம் என்று தானே யோசித்தான்.
யாரிடமும், எதுவும் பேசாமல் குகனையும் அழைத்துக் கொள்ளாமல் ரூமுக்கு செல்ல படியேற,
” தேவ்!” என்றாள் வித்யா.
“ஒன்னும் இல்லை அண்ணி ” என்று தலையை உலுக்கியவன். எதுவும் பேசாமல் சென்று விட்டான்.
” என்னடா நினச்சிட்டு இருக்க? இப்போ என்னடா அவன் குகனை கூட்டிட்டு போய் தப்பான விஷயத்தை கற்றுக் கொடுக்கிறான். அப்படி என்ன ?உன் பையன் தப்பான விஷயத்தை என் பையன் கிட்ட இருந்து கத்துக்க போறான் “என்று எதிரி கொண்டு வந்தார் எழில் .
அவருக்கும் கஷ்டமாகி விட்டது. தன் மூத்த மகனின் வார்த்தையில்..
வேலு கண்கள் கலங்க அவரை பார்க்க..
“டேய்! அவனை திட்டிட்டு இங்க எதுக்குடா வந்து கண் கலங்கி உட்கார்ந்து இருக்க ?”
வேலுவின் வார்த்தையில் குகன் பயந்தவன் தனத்தின் மடியில் படுத்து இருந்தான்
அவனை ஆதரவாக தன் மடியில் சாய்த்துக் கொண்டார் தனம்.தன் அப்பாவின் பேச்சில் மருண்டு விழித்தவனை தன் அருகில் இழுத்து அணைத்துக் கொண்டார்.