ரியா,மித்ரா இருவரும் அவளை கேள்வியாக பார்க்க..
அன்னைக்கு வேலு, வித்யாவை அடிக்க போனவுடனே ,”நீ அண்ணியை மட்டும் பாரு. நான் குகனை பார்த்துக்கிறேன். அண்ணியை எங்களால் முழுசா பேஸ் பண்ண முடியாது.இப்போ, முழுக்க முழுக்க அவங்களுக்கு உன்னோட அருகாமை தான் தேவை. கொஞ்ச நாள் லீவ் போடு.. குகனை பார்த்துக்க, நான் ,அம்மா, அப்பா இருக்கோம்.
நாங்க பாத்துக்கிறோம் “
“இல்லடா அ..அது “
“வேலு அண்ணி இடத்தில் இருந்து கொஞ்சம் யோசி. ஒருத்தவங்க இல்ல.. ஒன்னுக்கு மூணு உசுரை.. தனக்கென இருந்த ரத்த உறவை, ஒரே நேரத்துல அதுவும் தன் கண் முன்னாடி பறிகொடுத்து இருக்காங்க ,அதுல இருந்து அவங்க வெளியே வர எவ்ளோ கஷ்டப்படணும்னு உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. சும்மா காய்ச்சலில் படுத்துட்டாளே நமக்கெல்லாம் எவ்வளவு துடிக்கும்.. “
“எனக்கு அவளுடைய வேதனையும், வலியும் புரியாமல் இல்லையே டா. பெத்த புள்ள அழுவது கூட தெரியாம இருக்காளே இவனை பெத்து எடுக்க எவ்வளவு பாடு பட்டாள்.. அது மட்டும் இல்லாமல் ,நான் அவள் அருகில் சென்றாலே பயந்து நடுங்குகிறாள்” என்றவனுக்கு கண்கள் கலங்கியது…
தன் அண்ணனை வேகமாக கட்டி அணைத்தான். அவனது வலிகளும் புரிந்தது.. அருகில் யார் சென்றாலும், ஏன் ?குகன் சென்றால் கூட தள்ளி தானே விடுகிறார் .பால் கொடுப்பதற்கு தனம் எவ்வளவு பாடுபட்டார் என்று தெரியும் அல்லவா? குழந்தையை அருகில் எடுத்துச் சென்றாள் கூட தள்ளிவிட்டு தனியே சென்று அடைந்து கொள்கிறார்..தனிமையை எதிர்பார்க்கிறார். ஆகையால் ,தான் வேலுவையும் தள்ளி விடுகிறார்.. அதுவும் அவன் அருகில் சென்றாள் பயந்து நடுங்குகிறார் என்று எண்ணும் போது அதுவும் காதல் கணவன்.. ஒன்றை வருட திருமண வாழ்வு அனைத்தையும் நினைத்து பார்க்கும்போது ,உள்ளுக்குள் அவனுக்கு எந்த அளவிற்கு வலி இருக்கும் என்பதை உணர்ந்தவன்.
“வேலு.அதுக்காக இப்படியே விட்டு விட முடியுமா ?அண்ணி இப்படியே இருந்தா உனக்கு ஓகேவா?”
“ஆனா,நான் பக்கத்துல போனாலே பயந்து நடுங்குறாளே என்ன என்னதான் பண்ண சொல்ற ?” என்றவனுக்கு தொண்டை அடைத்தது..
அவன் தலையை வருடியவன். “உன்னால மட்டும் தான் சரி பண்ண முடியும்.அண்ணிக்கு தேவையானதை எல்லாம் நீ தான் பாக்கணும், இனி அண்ணியோட மொத்த உலகமும் நீதான், அதை மறந்துடாத!” என்றவன் அவன் தோளில் தட்டிக் கொடுத்து குகனை தூக்கிக் கொண்டு வெளியில் வந்தான்.
வேலு வித்யாவிற்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் பார்த்தான். கிடுகிடுவென்று ஒரு மாதம் சென்றது.வேலுவை பார்த்து பயப்படுவதை விட்டிருந்தாள். ஆனால் ,அதைத் தாண்டி வேறு எதுவும் முன்னேற்றம் இல்லை. முடிந்த அளவிற்கு வேலு அவளுக்கு தேவையான அனைத்தையும் செய்தான்..
ஒரு சில விஷயங்களை பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருக்க, தன் தாயிடம் வந்து சொல்லவும் சங்கடப்பட்டான். அவனின் முகம் மாற்றத்தை , உணர்ந்த தேவ்” என்னடா” என்று கேட்க.
தன் தம்பியிடம் சொல்லவும் முடியாமல், தன் உணர்வுகளை தன்னவளிடம் காட்டவும் முடியாமல் தவித்தான்..
“அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது,அமைதியா போடா..” என்று அவனிடம் எரிந்து விழுந்தான்.தன்னுடைய இயலாமையால் ஏற்பட்ட கோபத்தில் அவனிடம் கத்தி இருந்தான்.
அவன் அவஸ்தையை ஓரளவு யூகித்த தேவ் தனத்திடம் வந்து நின்றான் ..
“மா அண்ணிக்கு ஒரு சில விஷயங்களை புருஷனா இருந்தாலும் ,வேலு பார்க்க அவனுக்கு கஷ்டமா இருக்கும் இல்லையா? ஒரு பொண்ணா உங்களால பார்க்க முடியும் நினைக்கிறேன். அண்ணிக்கு தேவையான ஒரு சில விசியங்களை நீங்க பாருங்க!” என்றான்.
அவன் கூற்றில் உள்ளவற்றை வாழ்ந்தவராக உணர்ந்தவர்.. அவளை தன் சொந்த மகள் போல் பாவித்தார் ..இதற்கு முன்பும் அவளிடம் அன்பாக தான் இருந்தார். இருந்தாலும், இப்பொழுது தாய் ,தந்தையை இழந்து நிற்பவளுக்கு இனி தாங்கள் தான் அனைத்துமாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்கள்..எழிலும்,தனமும்.
வேலு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தான். குழந்தையின் முழு பொறுப்பும் தேவ் தன் கையில் எடுத்தான். ஆரம்பத்தில் குகன் சாப்பிட அடம் பிடிக்க, புட்டி பால் கொடுத்து தூங்க வைத்தார்கள்.. அதையும் கூட ஒரு சில நாட்கள் வேண்டாம் என்று அவன் உதடு பிதுக்கி அழ செய்தான்..அப்படி இப்படி என்று எப்படியோ புட்டி பால் கொடுத்தார்கள்..
கொஞ்ச கொஞ்சமாக புட்டி பாலுக்கு மாறியவன்..எவ்வளவு முயன்றும் திட உணவுகளை உண்ணாமல் அடம் பிடித்தான். கீழே துப்பினான்..வெறும் பால் மட்டும் குடித்து கொண்டு இருக்க, அதுவும் புதிதாக புட்டி பாலுக்கு மாறிய காரணத்தால், லூஸ் மோஷன் போக ஆரம்பித்தது.. உடல் உபாதைகளும் ஏற்பட ஆரம்பித்தது. ஆகையால் ,தனம் திட உணவுகளை கொடுக்க முயற்சி செய்தார். ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும் என்று சொல்லி,
“அம்மா அவன் தான் சாப்பிட மாட்டுகிறான் இல்லையா? பால் குடிக்கிறான் இல்ல இப்போதைக்கு அது மட்டும் கொடுக்கலாம்” என்றான் தேவ்.
“வளர புள்ளடா சோறு கொடுத்து தான் வளக்கணும்.. பால் எல்லாம் பத்தாது..இனி சாப்பாடு கொஞ்ச கொஞ்சமா சாப்பிட வைக்கணும் ” என்றார்.
எவ்வளவு முயன்று கொடுத்து பார்த்தும் சாப்பிடவில்லை.. ஒருநாள் வெளியில் இருந்த பைக்கில் உட்கார வைத்து சாப்பாடு ஊட்டி விட.. அழுதவன் பைக்கில் ஏறி உட்கார்ந்து விளையாட்டு காண்பித்தவுடன் அழுகையை நிறுத்தி இருக்க..
அன்றிலிருந்து அவனை பைக்கில் உட்கார வைத்து, சாப்பாடு ஊட்டி விட்டு பழகினார்கள். தேவ் குகனை பைக்கில் உட்கார வைத்து வீட்டிற்கு வெளியே மட்டும் ரவுண்ட் அடித்து தினமும் சாப்பிட வைத்தான்..
எழில் ,தனம் இருவரும் மாற்றி மாற்றி ஊட்டி விடுவார்கள் வேலையை பொறுத்து.. தேவ் அவனை தினமும் பைக்கில் உட்கார வைத்து ஒரு ரவுண்டு சென்று வருவான்.அவ்வபோது, அழும் வேலை எல்லாம் இதுவே பழக்கப்படுத்தி இருந்தான் ..
தேவுக்கு பைக்கை பழக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. ஆனால், அவ்வபோது, தன் தாயின் அருகாமையை தேடுபவனுக்கு எதை செய்து சமாதானப்படுத்துவது என்று புரியாமல், அதை செய்ய.. அதுவே நாளடைவில் அவனுக்கு பழக்கமாகியது.
அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமா பைக்கை குறைத்துக் கொண்டு, தன் அரவணைப்பில் வைத்துக் கொண்டான். தன் உடல் சூட்டை குழந்தைக்கு பழக்கப்படுத்திக் கொண்டான்.
இரவு தூங்கும் பொழுது, தன் நெஞ்சில் படுக்க வைத்து தூங்க வைத்துக் கொண்டான். வேலு கூட நான் பாத்துக்குறேன் என்று சொல்ல..
” நான் தம்பியை பாத்துக்குறேன். ஒன்னும் பிரச்சனை இல்ல…நீ அண்ணியை மட்டும் பார் “என்று சொல்ல..
இப்படித்தான் குகனின் முழு பொறுப்பும் தேவிடம் தாவியது. அவனாகவே குகனின் முழு பொறுப்பையும் எடுத்துக் கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக குகனை சரி செய்தவர்களுக்கு, வித்யாவை எப்படி சரி செய்வது என்று புரியவில்லை.
குகன் இப்பொழுது எல்லாம் சாப்பிட ஆரம்பித்து விட்டான். ஆனால், வித்யா விடம் பெரியதாக எந்த முன்னேற்றமும் இல்லை.. நாட்களும் சென்றது..ஒரு மாதம், இரண்டு மாதங்களாக சென்றது.. வித்யாவிடம் சிறு அளவிளான மாற்றங்களை தவிர, அவள் பழைய படி இல்லை..அதிலிருந்து இன்னும் வெளிவரவில்லை. வேலுவிற்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது ..
வேலுவின் வேலையும் போவது போல் இருந்தது.. இதற்கு மேல் லீவு எடுத்தால் வேலைக்கு வர வேண்டாம்.. வேற ஆஃபீஸ் பாத்துக்கோங்க என்று சொல்ல. தேவ் தான் ஒரு முடிவு எடுத்தவனாக,” நீ ஆபீஸ் போ டா” என்றான்
” என்னடா விளையாடுறியா ?நீதான சொன்ன? இவளை பாத்துக்கணும்னு ,இப்ப இவளை இப்படியே விட்டுட்டு என்ன ஆபீஸ் போக சொல்ற? எனக்கு என் வேலையை விட ,இவ முக்கியம் டா “என்று கொதித்து எழுந்தான்.
“அண்ணி முக்கியம் தான் டா.நான் இல்லைன்னு சொல்லல..ஆனால், வேலையும் முக்கியம் இல்லையா? வீட்டு செலவுக்கு என்னென்ன பண்ணனுமோ அதை நானும், அப்பாவும் பார்த்துப்போம்.பிரச்சனை இல்ல. ஆனா ,இந்த வேலை போனா உனக்கு நிறைய வேலை கிடைக்கும் தான்.. ஆனால் ,எக்ஸ்பீரியன்ஸ் போயிடும்.. எவ்வளவு கஷ்டப்பட்டு நீ இந்த வேலையில ஜாயின் பண்ண என்று எங்க எல்லாருக்கும் தெரியும். வேற இடத்துக்கு போனா இவ்வளவு சம்பளம் இனி கிடைக்க பல வருஷம் ஆகும்..அது மட்டும் இல்லை, நீ விருப்பப்பட்டு செஞ்ச வேலை. அண்ணியை பாத்துக்க இங்க நாங்க இத்தனை பேர் இருக்கோம். நீ பகல்ல தானே வேலைக்கு போக போற ,மீதி நேரம் அண்ணி கூட தானே இருக்க போற ,அம்மா இருக்காங்க பாத்துப்பாங்க . உன் கூட எல்லா சூழ்நிலையிலும் கைகொடுக்க மொத்த குடும்பமும் உனக்கு உறுதுணையாக இருக்கு”.
” எப்படி டா பார்த்துப்பீங்க? அவளுக்கு தான் பத்து மாசம் சுமந்து பெத்த புள்ளையே தெரியலையே டா “என்றான் வேதனையாக,
“அது எல்லாம் பிரச்சனை இல்லை. முன்னைக்கு இப்போ எவ்வளவோ இம்ப்ரூவ்மெண்ட் இருக்கு அண்ணிகிட்ட.. அதனால பயப்படாத!நீ இன்னும் ரெண்டு நாள் கழிச்சு ஆபீஸ் போற” என்றவன் தன் அண்ணனை சலூன் கடைக்கு அழைத்து சென்று மூன்று மாதங்களாக அவன் வெட்டாது விட்ட முடியையும் ,தாடியையும் நேர்த்தியாக வெட்டி வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வர ,
அப்படி வேலுவை பார்த்த வித்யாவின் கண்ணில் சிறிய வெளிச்சம்..அதை குறித்துக் கொண்டான் தேவ்.
அவளது கண்ணில் தெரிந்த சிறு ஒளியை குறித்துக் கொண்டவன்.. வேகமாக குகனுடன் சென்று குகனை அவள் மடியில் உட்கார வைத்தவன்.. குகனை நன்றாக பிடித்துக் கொண்டான்..
குகனை கீழே கை தவறி விடுவது போல தேவ் செய்ய . அந்த சமயம் குகனை கீழே விழ விடாமல் வித்யா வேகமாக பிடித்திருந்தாள். ஒரு சில விஷயங்கள் அவளுக்கு புரிவதை உணர்ந்தவுடன்.. குகனை தன் தாயிடம் கொடுத்துவிட்டு, வேகமாக வித்யாவின் மடியில் வந்து படுத்தான் ..அவள் அதிர்வாக எழுந்து கொள்ள முயற்சி செய்ய..
“டேய் என்னடா பண்ற?” என்றார் அதிர்ச்சியாக தனம்.
“கொஞ்சம் இருமா!” என்றான் .
“டேய் இல்லடா அது”..
” கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?” என்று சத்தம் போட்டான்..
அந்த சத்தத்தில் வித்யா முழிக்க. அவள் கையை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டவன்..” அண்ணி இதுவரைக்கும் நீங்க எனக்கு அண்ணியா மட்டும் இருந்திருக்கீங்க.. எனக்கு அம்மாவும் ,அதே சமயம் பிரண்டாகவும் வேணும்.. உங்களுக்கு நானா அவ்வளவு இஷ்டம் தானே! நீங்க சொல்வீங்க தானே, எதா இருந்தாலும், என்கிட்ட பிரண்ட்லியா பேசுடா, நான் உனக்கு ஒரு அண்ணி மட்டும் இல்லை பிரண்ட் மாதிரியும், உனக்கு என்கிட்ட எதாவது சொல்லனும்னா, இல்ல ஏதாவது தேவைனா என்கிட்ட கேளு? என்று சொல்லி இருக்கீங்க தான! இப்போ குகனை கூட்டிட்டு நம்ப எங்கையவது வெளியில் போகலாமா? எனக்கு வெளியில் போகணும் அண்ணி..ரொம்ப நாள வீட்டுகுள்ளவே இருக்கேன்” என்று அவன் அவளையே பார்க்க..
அவள் கண்களில் நீர் வடிந்தது.. ஆனால், பயத்துடனே அவனை பார்த்துக் கொண்டு இருக்க,அவன் தலையில் இருந்த கையை எடுத்து கொண்டாள்.
மீண்டும் அவள் கையை தன் தலையில் வைத்துக் கொண்டவன்..” நீங்க பல நாள் சொல்லி இருக்கீங்க தான! உங்க தம்பி விஷ்வாவை உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் தானே! உங்களுக்கு இன்னொரு பையன் மாதிரின்னு சொல்லி இருக்கீங்க தானே, அப்ப ஏன் என்னை நீங்க உங்க தம்பி விஷ்வா மாதிரி,என்னை உங்களோட இன்னொரு பையனா பார்க்க கூடாது,உங்க பையன் உங்க மடியில் படுத்தா தப்பா ? நான் வளர்ந்த பையன் தான். ஆனா, நான் உங்க மடியில் படுத்தா தப்பா? “என்றான் அழுகையும் ,கேவலுமாக..
” விஷ்வா” என்ற பெயரை கேட்டவுடன் … அவளது கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக ஊற்றியது.. தானாக அவளது கை அவனது தலையை வருடியது..
அதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டவன் ..அன்று முதல், அவளுடைய அப்பா ,அம்மா, தம்பியின் பெயரை உச்சரித்து , அவள் அவர்கள் பற்றி தன்னிடம்
கூறிய கதைகளை பேச ஆரம்பித்தான் …
வித்யாவை ,தேவுக்கு …வேலு ,வித்யா இருவரும் காதலிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே தெரியும் என்பதால் அவ்வப்பொழுது பார்க்கும் பொழுது எல்லாம் ,தன்னைவிட சிறியவன் என்பதால்,அவனை உரிமையாக தன் தம்பி போல் பாவித்து “தேவ்” என்று அழைப்பாள். மரியாதை நிமித்தமாக அதோடு நிறுத்தி கொள்வாள்..
ஆனால், ஒரு நாள் விஷ்வாவிடம் வித்யா சண்டையிட்டு கொண்டிருக்கும் போது ,போடா பண்ணி குட்டி என்று சொல்லி திட்டி இருக்க..அவர்களின் செல்ல சண்டைகளையும் ,உரிமையான பேச்சுக்களையும் ரசித்தவன்..தன்னையும் அவ்வாறு அழைக்க சொல்லிக் கேட்டான்…
“நான் உங்களை விட சின்னவன் உங்க தம்பி வயசு தானே எனக்கும்.. வாடா போடான்னு கூப்பிடுங்க !உங்க தம்பியை அப்படித்தானே கூப்பிடுறீங்க” என்று சொல்லி இருக்க..
ஆரம்பத்தில் ,நாகரீகமாக இருக்காது என்று “இல்லை” என்றாள்.ஆனால்,தேவ் ஆசைப்பட வேலுவும் உன்ன விட சின்னவன் தானே கூப்பிடு என்று சொன்னான்.ஆனாலும்,அவன் ஆசைக்காக வீட்டில் மட்டும் அப்படி அழைப்பாள் ..போது வெளியில் தேவ் என்ற வார்த்தையை தாண்டி வாராது…
அன்றிலிருந்து வாடா போடா என்று கூப்பிட பழகி இருந்தாள். திருமணத்திற்கு முன்பாகவே தேவிடம் பேசி பழகி இருந்தாலும், வாடா போடா என்ற வார்த்தையை தாண்டி பெரிதாக நெருக்கம் இருக்காது .ஆனால், தன் வீட்டு ஆட்களைப் பற்றி, தன் தம்பியை எந்த அளவிற்கு பிடிக்கும் என்பதை பற்றி எல்லாம் அவனை சந்திக்கும் வேளையில் கூறியிருக்கிறாள்.
தன் தம்பியுடன் எப்படி சண்டையிடுவேன் என்று அதையெல்லாம் சொல்லி இருக்க.. அதையெல்லாம் நினைவு கூர்ந்தான்.இப்போது..” அப்போ உங்க தம்பி கிட்ட எதுக்கு எடுத்தாலும் சண்டை போடுவீங்க தானே? சின்ன சின்ன விஷயத்திற்கும்.. அப்ப ஏன் என் கூட சண்டை போட மாட்றீங்க ?அப்போ என்னை உங்க தம்பியா ? பிரண்டா நீங்க நினைக்கலையா? அப்போ நான் உங்க கிட்ட இனி பேச மாட்டேன் “என்று முகத்தை தூக்கி வத்து கொள்வான்..
இப்படி தினமும்,ஏதோதோ, சொல்லி அவளை சிறிது சிறிதாக அதிலிருந்து வெளியில் கொண்டுவர முயற்சி செய்தான். அதில் பாதி வெற்றியும் அடைந்திருந்தான்.. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் எடுத்தது…
அதன் பிறகு தான் , வேலுவிடம் முகம் கொடுத்து பேச ஆரம்பித்தாள். மேலும் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள் ..தன் தாய் ,தந்தை,தம்பியின் இறப்பை எண்ணி,இப்படியே நாட்கள் செல்ல…
மாற்றம் உண்டாகி ,தன் தம்பியுடன் எப்படி பேசி பழகுவாளோ ,அதேபோல் தேவிடம் பேசி பழக ஆரம்பித்தாள்.தன் தம்பியை அவனிடம் கண்டாள்…தன் தம்பியே திரும்பி கிடைத்தது போல் உணர்ந்தாள்..உணர வைத்தான் தேவ்…
ஒரு நாள் அவள் கைகளை பிடித்து கொண்டு , “இனி, உங்களுக்காக உங்க இரத்த உறவு என்று யாரும் இல்லை என்று நினைக்காதீங்க ? வேலு இருக்கான்,உங்களுக்கு எல்லாமுமாக.. நான் இருக்கேன்…உங்க பிரண்டா ,உங்க பையனா ,உங்க தம்பியா எப்போவும் இருப்பேன் .. அப்பா ,அம்மாவா ..அப்பாவும் அம்மாவும் இருக்காங்க ” என்று அவள் கையில் அழுத்தம் கொடுத்தான்.
அன்றிலிருந்து ஒரு சின்ன சின்ன விஷயத்திற்கு என்றாலும் ,அவள் மடியில் படுத்துக்கொள்வான். திருமணத்திற்கு முன்பு வரை அவ்வப்போது விஷ்வாவை தன் மடியில் படுக்க வைத்து, அவள் கதைகள் சொல்வதை பற்றி சொல்லி இருக்க, எந்த இடத்திலும் தன் ரத்த சொந்தம் இல்லை என்று உணர்ந்து விட கூடாது. என்பதற்காகவே ,அவன் செய்ய ஆரம்பித்த செயல் அப்படியே நீடித்தது, காலப்போக்கில் அது அப்படியே வளர்ந்தது ..
இப்படித்தான் தேவ் வித்யாவுக்கான நெருக்கம் ஏற்பட ஆரம்பித்தது. தன் அண்ணியின் மனநிலையை மாற்ற அவன் மெனக்கெட்ட செயல் .இருவரையும் ரொம்பவே இணைத்தது .. குகனுக்கும் ,அவனுக்குமான நெருக்கமும் ,பாசப்பிணைப்பும் வித்யாவின் மனநிலையில் ஆரம்பித்தது தான் ..அதே மனநிலையில் தான் தேவுக்கும் வித்யாவிற்குமான நெருக்கமும் , பாசப்பிணைப்பும் ஆரம்பித்தது.. அண்ணி ,கொழுந்தன் என்ற உறவு முறையைத் தாண்டி ,தன்னுடைய நண்பனாகவும், தம்பியாகவும் ,மகனாகவும் பாவித்து அவனிடம் அவ்வப்போது ஒரு சில உரிமைகளை அவளாக எடுக்க ஆரம்பித்தாள் ..
ஆனாலும்,ஒரு சில நேரம்…உறவு முறை தடுக்க…அவள் தடுமாறினாள் யாராவது ஏதாவது சொல்வார்கள்.. தன்னால் அவன் வாழ்வு பாதிக்குமோ ? என்று எண்ணி, அப்போது, “அண்ணி யார் வேன என்ன வேன சொல்லட்டுமே நமக்கு தெரியும்.. வேலுக்கு தெரியும் நம்ப உறவு எப்படி என்று ,பிறகு என்ன? “என்றவன் ..உங்களுக்கு என் லைஃப்ல எல்லா உரிமையும் இருக்கு ,அப்பா, அம்மா, வேலு எல்லாருக்கும் என்ன உரிமை இருக்கோ? அதே முழு உரிமையும் உங்களுக்கும் இருக்கு” என்றான்.
அவள் கண்கள் பளிச்சிட அவனைப் பார்க்க..
” நான் விளையாட்டுக்கோ,இல்லை உங்களை சமாதானப்படுத்தவோ சொல்லலை. உண்மையா சொல்லுறேன். எனக்கு, இந்த குடும்பத்துக்கு ,வேலுக்கு எல்லோருக்கும் நீங்க தேடாமல் கிடைச்ச பொக்கிஷம் அண்ணி..உங்களை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்போம்” என்றவுடன் அவள் கண்கள் கலங்கி அவனை தன் தோளோடு சாய்த்துக்கொள்ள.. அன்றிலிருந்து அவர்களது நெருக்கம் , பாசப்பிணைப்பு இன்னும் வலுப்பட்டது..
ஆரம்பத்தில், அவன் மடியில் படுக்கும் பொழுது தனத்திற்கு ஒரு மாதிரியாக இருந்தது. அண்ணி, கொழுந்தனார் உறவு இப்படி இருந்தால், ஊரார் என்ன சொல்வார்கள்? வேலு என்ன நினைப்பான்? என்று அஞ்சினார். ஆனால் ,வேலுவே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கவும்..
வேலுவிடமும் பேசினார். “மா இதுல நான் என்னமா தப்பா நினைக்க இருக்கு. என் பொண்டாட்டி பத்தி ,என் தம்பி பத்தி எனக்கு தெரியாதா? ஊர்ல இருக்குறவங்க ஆயிரம் பேசட்டும். இப்போ என் வித்யா எனக்கு பழையபடி கிடைக்க முழு காரணமும் நம்ம தேவ் தான்ம்மா, என்னதான் நான் பாசத்தை அள்ளி அள்ளி கொட்டினாலும் , என்ன தான் நான் அவளுக்கு எல்லா உறவுமாய் ,அனைத்துமாய் நான் இருந்தாலும், அவளால்,அவங்க அப்பா ,அம்மா ,தம்பி இறப்பிலிருந்து வெளிவர முடியல.. அவளோட ஆழ் மனசுல தனக்கான ரத்த உறவு இனி இல்லன்னு நினைச்சுட்டு இருக்கா? முழுசா குகன் தேவ் பொறுப்பில் இருக்கிறதை கூட இன்னும் உணராமல், இருக்கா.. தேவ் கிட்ட பேசுற ,பழுகுற சின்ன சின்ன விஷயமும் , அவ தம்பி அவ கூடவே இருக்குற மாதிரி நினைக்கிறா போதுமா இதுவே..எனக்கு அவ பழையபடி கிடைச்சா..இதுக்கு மேல என்ன வேணும்.. எனக்கு தெரியும் அவங்களோட உறவு என்னன்னு..என் கண்ணு முன்னாடி நான் பாத்துக்கிட்டு இருக்கேன். அடுத்தவங்களுக்காக யோசிக்க மாட்டேன்.. ஊரார் வாய என்னைக்கும் மூட முடியாது. பேசுற வாய் பேச தான் செய்யும்..தூத்துற வாய் தூத்த தான் செய்யும்.. அத நம்ப மாற்ற முடியாதே!”என்று அழுதான் ..
எழிலிடம் பேசினார் தனம்..”சுற்றி இருப்பவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம். நமக்கு நம்ம மருமகள் கிடைச்சா போதும்! நம்ம குடும்பத்துக்கு விளக்கேற்ற வந்த புள்ளை,அப்பா,ஆத்தாளை கண்ணு முன்னாடியே பறி கொடுத்து இருக்கு.. இனி அந்த பிள்ளைக்கு நம்ம தான் அப்பனும், ஆத்தாளுமா இருந்து அன்பையும் ,பாசத்தையும் ,அதே நேரம் தேவையான நேரத்தில் கண்டிப்பையும் கொடுத்து வழி நடத்தணும்.. நல்லது கெட்டது சொல்லணும்.. எடுத்து செய்யணும்..” என்று விட்டார்.
அதன் பிறகு ,தனமும் அவர்களை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. முற்று முழுவதாக அவர்களின் உறவு அப்படியே சென்று … இன்னும் இணைந்த, நெருங்கிய ,பாசப்பிணைப்பு பாலமாக செல்ல ஆரம்பித்தது.. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவள் அதிலிருந்து முழுதாக வெளியில் வர நேரம் பிடித்தது..
அப்பொழுது, ஒரு நாள் அவள் கையை பிடித்துக் கொண்டு,”அண்ணி இப்படியே வீட்ல இருக்க போறீங்களா ? இல்லை வேலைக்கு போறீங்களா?உங்களுக்கு என்ன விருப்பமோ அதை சொல்லுங்க?” என்று கேட்டேன் .
அவளும் கண்கள் பளிச்சிட “வேலைக்கு போறேன் “என்றாள் .
வேலு தான் சண்டைக்கு வந்தான். “என்னடா நினைச்சுட்டு இருக்க, இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிட்டு இருக்கா, இப்ப போய் வேலைக்கு அனுப்பனும்னு சொல்ற? ஏன்? இப்ப அவ வேலைக்கு போனா தான் நம்ம குடும்பம் நடத்த முடியுமா?”என்று எகிறி கொண்டு வந்தான்