“குகனை ஏன் தேவ் கூட படுக்க வச்சீங்க?” என்று மித்ரா பதற்றத்துடன் கேள்வி கேட்க .
அப்பொழுது வேலு சத்தமாகவே சிரித்திருக்க, புதியதாக ஒரு ஆண் குரல் கேட்டவுடன் மித்ரா பயத்துடன் பட்டென்று போன் வைத்து இருந்தாள்.
மித்ரா போன் வைத்துவிட்டு தலையில் கை வைத்து பெருமூச்சு விட,
“என்னடி ஆச்சு? ஏன் பேசிட்டு இருக்கும் போதே வச்சிட்டு ஏதாவது தப்பா நினைக்க போறாங்க?”என்றாள் ரியா .
“இல்லடி .அது ஏதோ ஆம்பள வாய்ஸ் கேட்டுச்சு அதான்” என்று அவள் பதட்டத்தில் உலர,
“நீ என்ன லூசா மித்து !.அவங்க ஹஸ்பண்டா இருக்கும். குகன் அப்பாவா இருக்கும்.யாருன்னு தெரியாதவங்க கிட்ட பேசும் போதோ, இல்ல, புதுசா ஒரு கால் வந்து ஆம்பள பேசினால் ஓகே. இந்த நேரத்துல அவங்க ரூம்ல தான் இருப்பாங்க ,ஹஸ்பண்டும் கூட இருப்பாங்கன்னு தெரிஞ்சுதான பண்ண அப்புறம் என்ன?”
” இல்லடி சட்டுன்னு அவர் வாய்ஸ் கேட்கவும் ஒரு மாதிரி ஆயிடுச்சு”
” லூசு! போடி .திரும்ப வேணா போன் பண்ணி பாரு”
” இல்ல வேணாம்.தேவ் ஓகேவாம். இப்ப தூங்கிட்டு இருக்கிறதா சொன்னாங்க”
“ஆனா, 105° ஃபீவர் இருக்குன்னு சொன்ன”
“ஆமா அப்படித்தான் சொன்னாங்க. மதியமே ஹாஸ்பிடல் போயிட்டு வந்ததா சொன்னாங்க, நான் திரும்ப கால் பண்ணல”
“சரி ஓகே. தேவ் ஓட அண்ணன் அதாவது குகன் அப்பா என்ன சொன்னாரு? நீ பட்டுனு போன் வச்சுட்ட”.
“அவர் எதுவும் சொல்லல”
” அப்புறம் என்னடி? ஏதோ,ஆம்பள வாய்ஸ் கேட்டுச்சுன்னு சொன்ன?”
“அ..அது அவரு சிரிச்சாரு!”
“என்னை சிரிச்சாரா?”
“ஆமாம்”.
“எதுக்கு சிரிச்சாரு”.
” எனக்கு தெரிஞ்சு நான் பேசுனதை அவர் கேட்டிருக்கலாம்”
தன் அக்காவை மேலும் கீழும் பார்த்தவள்..
” இருக்கும் .. இருக்கும்”என்றாள்..இழுவையாக..
“ஏய் !”என்று அவள் விரல் நீட்ட,
“லூசு படு டி. அதான், தேவுக்கு இப்போ ஃபீவர் இல்லன்னு சொல்றாங்களே, தூங்கு டி நேரம் ஆகுது. காலையில வேலைக்கு வேற கிளம்பனும் இல்ல” என்ற ரியா படுக்க, சிறிது நேரத்தில் தூங்கியும் இருந்தாள்.
ஆனால், மித்ரா தான் தன் உறக்கத்தை தொலைத்து இருந்தாள்.
தேவுக்கு ஏதாவது ஆகி இருக்குமோ? என்ற பயம் உள்ளுக்குள்ள இருந்தது.
105° ஃபீவர் என்றவுடன்..இன்னும் அதிலிருந்து அவள் மீளவில்லை. அவனது நினைவே அவளை வாட்டி வதைத்தது, அதுவும் தங்களால் தானோ ?என்று எண்ணினாள்.இப்படியே அவள் யோசனையில் உழன்று கொண்டிருக்க.
இரவு 12 மணிக்கு மேல் கண் விழித்த தேவ்.தன்னையே கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் குகனைப் பார்த்தவன் ..”டேய் நீ ஏண்டா இன்னமும் தூங்காம என்னயவே பாத்துட்டு இருக்க”
“தேவ் உனக்கு சரியாயிடுச்சா ?”என்று தொட்டு பார்த்தான்.
” சரியாயிடுச்சுடா ஒன்னும் இல்லடா.தோபாரு வேர்த்துடுச்சு,ஆமா , ஏன் ஏசி கூட போடாம இருக்க”
“இல்ல உனக்கு குளிரும் இல்ல.. ஏற்கனவே ஃபீவர் வேற அதனாலதான் “என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு,
அவனை,தூக்கி மடியில் உட்கார வைத்து ,நெற்றியில் இதழ் பதித்தவன்.. ஏசியை ஆன் செய்து “சரி தூங்கு நாளைக்கு ஸ்கூல் போகணும் இல்ல .எனக்கு எதுவும் இல்ல சரியா போச்சு”என்று சிரித்தான்.
” சாரி தேவ் “என்று தொண்டையை பிடித்துக் கொண்டு குட்டி வாண்டு சொல்ல..
“எதும் இல்லடா குள்ளா வா தூங்கு. நேரம் ஆகுது தூங்கலாம்” என்று அவனை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தவன்..
தன் அணைப்பில் வைத்துக் கொள்ள யோசனையாக இருந்தது. அவனுக்கும் ஜுரம் தொற்றிக் கொண்டால் என்று பயந்தவன் .லேசாக அவனை இடைவெளி விட்டே படுக்க வைத்து விட்டு, தன் போனை எடுத்தான்.
மிஸ்டு கால்கள் நிறைய இருந்தது.. யாராக இருக்கும் ?என்று யோசனையோடு எடுக்க, ஆஃபீஸ் கால் ,ப்ரண்ட்ஸ் என்று நிறைய போன் வந்திருக்க..
தன்னுடைய ராட்சசியும் போன் செய்திருக்க, அதுவும் எட்டு மிஸ்டு கால் என்று யோசித்தான்…
‘ பயந்திருப்பா போலையே ?அண்ணி குகனை கூப்பிட போகும் பொழுது என்ன சொல்லிட்டு வந்தாங்களோ தெரியலையே? இவனும் தூங்கிட்டான். இவன் கிட்டயும் கேட்க முடியாது ‘என்று யோசித்துக் கொண்டே.. மெசேஜ் ஓப்பன் செய்தான்.
மெசேஜும் பத்திற்கு மேல் வந்திருக்க, ஒவ்வொன்றாக படித்துக் கொண்டே வந்தான் ஓபன் செய்து,
அப்போது போனை தன் கையில் வைத்துக்கொண்டு இருந்த மித்ரா .தேவ் மெசேஜ் பார்த்ததாக டபுள் ப்ளூ டிக் காண்பிக்க ,உடனடியாக அவனுக்கு மெசேஜ் செய்து இருந்தாள்.
“தேவ் இப்ப ஓகே வா ஃபீவர் போயிடுச்சா?” என்று ..
“ஓகேவா நீங்க ?”என்று அடுத்த மெசேஜ்..
நேரத்தை பார்த்தான். 12 மணிக்கு மேல் இருக்க, ‘இன்னும் இவ தூங்கலையா?’ என்று எண்ணிக் கொண்டே இவனும் மெசேஜ் டைப் பண்ண ஆரம்பித்தான்.
“ராங்கி நீ இன்னும் தூங்கலையா ?”என்று அனுப்பியிருந்தான் .
“இல்ல .இப்போ, உங்களுக்கு ஓகேவா ?”என்று திரும்பவும் அதே கேள்வியில் வந்து நிற்க.
” ஓகே இப்போ நார்மல் ஆயிட்டேன்”
“போன் பண்ணவா ?தேவ் “என்று அனுப்பி இருந்தாள்.
“இந்த நேரத்திலா.ரியா பக்கத்துல இல்லையா ?”
“தூங்கிட்டா .நான் கால் பண்ணவா ?”..
அவள் பயந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தவன்.” சரி ” என்றான்.
அடுத்த நொடியே அவளே கால் பண்ணி இருக்க,
இவன் இங்கு போன் எடுத்த அடுத்த நொடியே, “இப்போ எப்படி இருக்கு? சாரி தேவ்”
” சாரி எதுக்கு ?.இப்போ ஓகே ஃபீவர் விட்டுருச்சு. மதியம் தான் ஒரு மாதிரி இருந்தேன். இப்போ ஓகே.”
” இ..இல்ல நேத்து ஐஸ்கிரீம் சாப்பிட்டதாலதான இப்போ உங்களுக்கு ஃபீவர் வந்துடுச்சு “என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டாள்.
” அப்படி எல்லாம் இல்ல ராங்கி “
” எனக்கு தெரியும் !”என்றாள் கவலையுடன்,
“சரி ஓகே .இது நார்மல் தான விடு!.மணி என்ன ஆகுது தூங்காமல் இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க?”
“இல்ல ஈவினிங் குகனை கூட்டிட்டு போக உங்க அண்ணி வந்தப்ப உங்களுக்கு ஃபீவர்னு சொன்னாங்களா ?அதான் ஒரு மாதிரி” என்றவளுக்கு நா எழவில்லை என்னவென்று சொல்வது என்று தடுமாறினாள்.
“அவளது தடுமாற்றத்தை உணர்ந்து சரி ஓகே .இப்போ தான் சரியாகிட்டேன் இல்ல நீ தூங்கு!”
“தே..தேவ்!”என்று தடுமாறினாள்..
“ஹம்.சொல்லு ராங்கி”
“இ..இல்ல அ…அது.. “
“சொல்லு என்ன ஆச்சு?”
“இ..இ..இல்ல அ..அது உங்களுக்கு கால் பண்ணி நீங்க எடுக்கலையா அ..அதனால..”
“அதனால…”என்றான் அவனும்..
“அ..அதனால நா..நான்..”
“ப்ச்! என்ன ராங்கி அதனால நீ..”
“இ..இல்ல நீ..நீங்க போன் எடுக்கலன்னு நான் உங்க அ..அண்ணிக்கு கால் பண்ணி இருந்தேன்”
“என்ன?” என்றான் அதிர்வாக ..
“அ..அது சாரி!உங்களுக்கு நிறைய முறை போன் பண்ணியும் நீங்க எடுக்கலையா? எனக்கு கொஞ்சம் பதட்டமாகவும், பயமாவும் ஆயிடுச்சு அதனால, ரொம்ப முடியலையோ என்னவோ ?என்னன்னு தெரியாம உங்க அண்ணிக்கு கால் பண்ணிட்டேன்”.
” சரி என்ன சொன்னாங்க ?”
வித்யா கூறியதை சொல்ல ..
“ஆக மொத்தத்துல என்ன போட்டு கொடுத்துட்டியே ராங்கி!”
என்று மனதிற்குள் நினைப்பதாக நினைத்து வாய் விட்டே சொல்லியிருந்தான்.
” என்ன சொன்னீங்க ?புரியல ?”..
“இ..இல்ல.. ஒன்னும் இ..இல்ல. நீ தூங்கு!”
“இ..இல்ல நான் போன் பண்ணதை உங்க அண்ணி தப்பா எடுத்துப்பாங்களா ?”என்றாள் அவஸ்தையாக,
“அதெல்லாம் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க.நீ ஃப்ரீயா விடு !நான் பேசிக்கிறேன் அவங்க கிட்ட சரியா? இப்போ நீ தூங்கு நேரம் ஆகுது பாரு !” என்று அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் வைத்திருந்தான் .
அர்த்த ராத்திரியில் வயது பெண் இருக்கும் போது, பேசுவது அவனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. ஆகையால் பட்டென்று வைத்திருந்தான்.
அவள் பயந்துவிட கூடாது என்பதற்காகவே போன் அட்டென்ட் பண்ணி இருந்தான்.
அவளை எண்ணி புன்னகைத்துக் கொண்டான்.. அப்படியே அவளது நினைவிலும் ,அசதியிலும் உறங்கி இருந்தான் .இங்கு , மித்ராவும் அவனிடம் பேசிய சந்தோஷத்தில் நிம்மதியாக உறங்கி இருந்தாள்.
மறுநாள், காலையில் அவன் எழுந்து வர, ஹாலில் தான் அனைவரும் உட்கார்ந்து இருந்தார்கள்.
“இப்போ எப்படி டா இருக்கு?” என்றான் வேலு.
” ஓகே இப்ப பரவால்ல டா” என்று சொல்லிக் கொண்டே கீழே இறங்கி வந்தான் .
எழிலை பார்த்தான். அவர் எதுவும் பேசாமல் இருக்க,
” சாரிப்பா!”என்று அவர் அருகில் உட்கார்ந்தான் .
“என் கிட்ட சாரி கேட்டு என்ன டா ஆகப் போகுது? விளையாட்டுத்தனமா எதையாவது பண்ண வேண்டியது.. எல்லாமே விளையாட்டா போச்சு உங்களுக்கு,நேத்து அவனும் ரொம்பவே பயந்துட்டான்”
” இ..இல்ல பா தலை வலி இருந்தது ..அதான் அது கூட சேர்ந்து நேத்து ஜுரம் வந்துடுச்சு!” என்றவன் தடுமாற,
“சரி விடு!. இப்பதான் சரியா போயிடுச்சு இல்ல போயிட்டு காபி குடி “என்று அவன் தோளில் தட்டி விட்டு எழுந்தவர்..” முடியலன்னா இன்னைக்கு வேலைக்கு போக வேணாம். நாளைக்கு பாத்துக்கலாம் “
“இல்ல ப்பா.இப்போ ஓகே தான் நோ ப்ராப்ளம்”
“ஓகே. உன் விருப்பம்” என்றவர் வெளியே சென்று விட்டார்.
வேலு தான் ,” என்ன டி. எப்பவும் அவனுங்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வருவ இப்ப ஏதோ சைலன்டா இருக்க. என்ன விஷயம் ?”என்று அவளை மேலும் கீழும் பார்க்க,
“எல்லா நேரமும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவேன்னு நான் உங்ககிட்ட வந்து சொன்னேனா? நேத்து அவனை அப்படி பார்க்கும் பொழுது எனக்கும் கஷ்டமா தான் இருந்துச்சு. அதனால சைலன்ட்டா இருக்கேன். தலைவலின்னு தெரிஞ்சும் ஐஸ்கிரீம் எதுக்கு சாப்பிடணும்?”
“ஓ மேடம்க்கு இப்போ அவன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதால கோபம்? அதனால அவனுக்கு சப்போர்ட் பண்ணலைன்னு சொல்லு?”
எழுந்து சென்றவள் ..அவனை திரும்பி நின்று முறைத்து விட்டு ,”நான் இப்போ அப்படி சொன்னேனா?” என்றாள் புருவத்தை உயர்த்தி ..
அவளை புன்னகையுடன் ஏறிட்ட வேலு “பின்ன இல்லையா ?”
“இப்போ நீங்க குதர்க்கமா பேசிட்டு இருக்கீங்க? வேலை இருக்கு என்கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்கீங்க?”
“உன்கிட்ட வம்பு பண்ணாம? வேற யார்கிட்ட வம்பு பண்ண? “என்றான் ஒற்றை கண்ணாடித்து,
“இதே ஒரு வேலையா வச்சுக்க வேண்டியது” என்று முனகி விட்டு வாயை கோணித்து காண்பித்து விட்டு நகர ,
“இந்த கோணிக்கிற வாய்க்கு முதல்ல தண்டனை தரணும்டி “என்றான் கண் சிமிட்டி ,
அவனை திரும்பி முறைத்தவள். விரல் நீட்டி “கொன்றுவேன்!” என்று எச்சரித்து விட்டு, அந்தப் பக்கம் திரும்பி சிரித்துக் கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டாள் .
தன்னிடம் எதுவும் பேசாமல் செல்லும் வித்யாவை பார்த்தவன். அவள் பின்னாடியே நூல் பிடித்த படி உள்ளே சென்று, “அண்ணி சாரி” என்றான்.
திரும்பி நின்று கைகளை கட்டிக்கொண்டு அவனை பார்க்க .
வேலு தான் அவள் தோளில் கை போட்டவன் ..”என்னடி பின்னாடியே துரத்திட்டு வரான் ..ஓவரா சீன் போட்டுட்டு இருக்க”
“தலைவலின்னு தெரியுது இல்ல. எதுக்காக சார் ஐஸ்கிரீம் சாப்பிட்டு இருக்காரு ?”
“இ..இல்ல அ..அது வேணும்னே சாப்பிடல “
“வேணாம்னு சாப்பிட்டியா?”என்றவள் தன் வேலையில் கவனத்தை செலுத்த,
தன் காதல் மனைவியை இழுத்து பிடித்து நிற்க வைத்தான்..
“ஏன் டி?”என்று,
“பின்ன? இப்பதான் அஞ்சு வயசு புள்ளன்னு நினைப்போ, அவங்க அவங்களே அவங்க உடல்நிலைக்கு ஏத்த மாதிரி பார்த்து நடந்துக்கணும் .அவ்வளவு தான் சொல்ல முடியும். இதுக்கு மேல சொல்றதுக்கு ஒன்னும் இல்ல” என்று அமைதியாகி விட,
தன்னிடம் இப்பொழுது வரை ஒரு வார்த்தை கூட முகத்துக்கு நேராக பார்த்து பேசாத தன் அண்ணியை பாவமாக பார்க்க ,
அவளோ இவனை சிறிதும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய வேலைகளை பார்க்கச் செய்தாள்.
அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன்.இப்போது, வேலுவை பாவமாக பார்க்க,
” எத்தனை முறை பார்த்தாலும் அவகிட்ட இருந்து வரப்போற பதில் அந்த அமைதி தான் .வேற என்ன பண்ண போற ?நாங்க பேசினா மட்டும் அவ கேட்க போறாளா ?நேரம் ஆகுது போய் ரெடியாகு போடா”
அவனும் நேரம் ஆகுவதை உணர்ந்து மாலை வந்து பேசிக் கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு, குகனை தூக்கிக்கொண்டு செல்ல ..
வேலு, குகனை வாங்கிக் கொண்டான்.” நான் அவனை பாத்துக்குறேன் நீ போய்ட்டு கிளம்பு!” என்று,
அவனும் ” சரி” என்று குளித்து முடித்து கிளம்பி கீழே வந்தான்.
அனைவரும் கிளம்பி ரெடியாகி வர, சாப்பாடு காலில் வைக்கப்பட்டிருந்தது.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, வேலு தான், “ஆமா டா தேவ்.நேத்து உன்னோட உடல்நிலை எப்படி இருக்குன்னு கேட்டு ஒருத்தவங்க போன் பண்ணாங்களே ?பேசிட்டியா ?”என்று கன்னத்தில் கை வைத்தபடி தன் தம்பியை குறுகுறுவென பார்த்தபடி நக்கலாக கேட்க..
‘ போச்சு! இவன் என்ன இன்னைக்கு கோர்த்து விட்டுட்டு தான் மறு வேலை பார்க்க போறான்’ தலையில் கை வைத்து உட்கார,
வேலு அருகில் இருந்த வித்யா தான் அவன் காலை மிதித்து ,”என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?”என்றாள் பல் இடுக்கில் வார்த்தைகளைத் துப்பி ,வேலு புன்னகைக்க ..
“யாருடா போன் பண்ணாங்க ?”என்றார் எழில்.
“இப்போ எப்படி இருக்கான்.என்ன ஏதுன்னு அவ்வளவு அக்கறையா ?பாசமா? விசாரிக்க வேற செஞ்சாங்க ப்பா”என்று இன்னும் நாலைந்து பிட்டு சேர்த்து போட்டுக் கொடுக்க வாய் வரை வந்த வார்த்தையை.. தன் மனைவியின் முறைப்பிலும், தன் தம்பியின் பாவமான முகத்தினையும் பார்த்து ,
” இல்ல ப்பா .அவன் ஆபீஸ்ல இருந்து ஒரு பொண்ணு கால் பண்ணுச்சு”என்று மழுப்பினான்.
” கூட்டு களவாணிகளா ?எல்லோரும் சேர்ந்து என்னவோ பண்றீங்கடா?”என்றார்.
“அப்படி எல்லாம் எதும் இல்லப்பா” என்று அவன் சமாளிக்க.
“நல்லா சமாளி! அவன் கூட சேர்ந்து இப்ப நீயும் அதை தான் பண்ணிட்டு இருக்க .என்னமோ போங்க” என்று தலையில் தட்டிக் கொண்டார் ..
“அவன் கூட ஆபீஸ்ல வேலை செய்ற பொண்ணு உனக்கு ஏன்டா போன் பண்ணுது ?அவனுக்கு தானே போன் பண்ணனும் ?”என்றார் தனம் கேள்வியாக இப்போது,
” இல்லம்மா அவனுக்கு போன் பண்ணி ,அவன் எடுக்கலைன்றதால முக்கியமான விஷயம் என்றதால, எனக்கு போன் வந்துச்சு “
“ரொம்ப முக்கியமான விஷயமோ?” என்றார் தனம்.
இப்பொழுது தனது அண்ணனை முறைப்புடன் பார்த்த தேவ்.. “இந்த நாய்க்கு ஒழுங்கா சமாளிக்க கூட தெரியல! இதெல்லாம் வச்சுக்கிட்டு “என்று தலையில் தட்டியவன்..
“இல்ல தனம் நான் தான் இவன் நம்பர் கொடுத்து இருந்தேன் அவங்க கிட்ட, ஏதாவது இம்பார்டன்ட்னா..”
” ஓ! நான் போன் எடுக்கலைன்னா என்னோட அண்ணன் நம்பருக்கு கூப்பிடு என்று சொல்லி இருந்தியோ?”என்றார் ஏற்ற இறக்கமாக,
அவரது வார்த்தையில் வேலுவிற்கு கூட லேசாக சிரிப்பு வர தன் சிரிப்பை அடக்க முயற்சி செய்தான்.வித்யாவும் புடவை தலைப்பால் வாய் பொத்தி சிரிக்க, குகனும் சத்தமாகவே வாயை பொத்தி கொண்டு சிரித்தான்..
மூவரையும் முறைத்து பார்த்தான் தேவ்.. தன் அண்ணனை மேலும் கண்களை உருட்டி உருட்டி முறைத்தான்..’ உன்ன வாடி தனியா சிக்குவ இல்ல அப்போ இருக்கு உனக்கு ‘ என்று முனகி கொண்டே எழிலை பாவமாக பார்த்தான்.
அவரோ ,இவனை ஏற இறங்க பார்க்க,
தலையை சொரிந்தவன் .எதுவும் பேசாமல் சாப்பிட ,
“கடைசி வரை அந்த பொண்ணு யாருன்னு சொல்ல மாட்டீங்க அண்ணனும் தம்பியும்
அப்படித்தானே?” என்றார் தனம்.
இப்பொழுது சத்தமாகவே சிரித்து விட்டாள் வித்யா.
தேவ் எதுவும் பேசாமல் சாப்பிட,
” உன்கிட்ட தான்டா கேட்டுட்டு இருக்கேன் “என்றார்.
“தனம் விடு சாப்பிடும் போது இது என்ன பேச்சு!”என்றார் எழில்.
“என்னமோ போங்க? இன்னும் எத்தனை நாளைக்கோ?” என்று புலம்பிக்கொண்டே அமைதியாகி விட்டார் தனம்.
தேவ் எதுவும் பேசாமல் சாப்பிட்டு கை கழுவி விட்டு கிளம்பி விட்டான்.. குகனையும் அழைத்துக் கொண்டு ஸ்கூலுக்கு செல்ல.
இவர்களுக்கு முன்பாகவே ஸ்கூலுக்கு வந்த மித்ரா இருவரையும் காண்பதற்காக ஸ்கூல் வாசலில் நின்று கொண்டிருந்தாள்.
“தேவ் மிஸ் வெளிய தான் இருக்காங்க பாரேன்”என்று குகன் கை காண்பிக்க,
“தெரியுது வாடா .கையை கீழே போடு யாராவது பார்க்க போறாங்க,பயந்துட்டா போல” என்று சொல்லிக்கொண்டே அவள் அருகில் வந்து வண்டியை நிறுத்த,
அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு, முதலில் குகனை கீழே இறக்கி விட,
“தேவ் உங்களுக்கு இப்ப பரவா இல்லையா ?”என்று கேட்டுக்கொண்டே அவன் நெற்றியில் கைவைத்து தொட்டு பார்க்க சென்றவள் ..
ஒரு சில நொடிக்கு பிறகு, சுற்றம் அறிந்து தான் செய்ய இருந்த செயலை எண்ணி சட்டென்று விலகி இருந்தாள்.