Loading

அத்தியாயம் 32

அனு வீட்டில் காலை பானங்கள் அருந்தி முடித்து அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர். அப்போதுதான் பிரகதி அழைத்தாள். சற்றுநேரம் மகளிடம் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிரஞ்சனா சொன்னாள். “ஓ சரி சரி! பக்கத்துல கோவில் ஏதாவது இருந்தா ரெண்டு பேரும் போயிட்டு வந்துடுங்க.”

“அவ என்ன பாத யாத்திரையா போயிருக்கா? கோவிலுக்கு போகணுமாம்!” – அபிராமி.

பக்கத்தில் அமர்ந்திருந்த அர்ஜூன் பக்கென சிரித்துவிட்டான். “பாட்டி, ஸ்கோர் பண்றீங்க.”

“உங்கக்கிட்ட பேசணுமாம்.” என்ற நிரஞ்சனா அலைபேசியை மாமியார் கைக்கு மாற்ற,

“நான் இல்லாதப்போ எங்கம்மாவுக்கு செர்லாக் கரைச்சு ஊட்டிவிடுன்னு சொல்லுவா!” என்று சலித்தபடி வாங்கி பேத்தியிடம் பேசியவர் உதட்டைக் கோணிக் கொண்டார். “அவளை நான் என்ன சொல்லப் போறேன்? அப்டி சொல்லத் தான் உங்கண்ணன்காரன் விட்டுடுவானா? போடி போடி…”

அவர்களின் அன்னியோன்யத்தை மௌனமாகப் பார்த்துவிட்டு, தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர் அனு மற்றும் பாஸ்கரன்.

அவர் தன் பேத்தியிடம் பேசிவிட்டு வைத்ததும், அக்னிஸ்வரூபன், “பாட்டி…” என அழைத்து நிறுத்த,

“டிபன் ரெடியாகிடுச்சு ரஞ்சி. எல்லாரும் சாப்பிடலாமே?” என்ற அனுவின் கண்களில் ‘சாப்பிட்டவுடன் பேசலாம்.’ என்றிருந்தக் குறிப்பினைப் புரிந்துகொண்டு தலையசைத்தான் மகன்.

அந்த பெரிய டைனிங் ஹாலில் அனைவரும் அமர, பணியாளர் பெண்ணுடன் சேர்ந்து இன்முகத்துடன் உணவு பரிமாறினாள் அனு.

நிரஞ்சனா சுற்றிலும் பார்த்தபடி கேட்டாள். “சனா எங்கே அனு?” 

“சமையல் செஞ்சு முடியற வரைக்கும் கிச்சன் பக்கம் எட்டிப் பார்க்கக்கூடாதுன்னு மிரட்டி வச்சிருக்கேன் ஆன்ட்டி.” – அர்ஜூன்

“அவ்ளோ மோசமாவா சமைப்பா?” – அபிராமி.

சித்திப்பாட்டி சொன்னார். “எங்க சந்தனம் அனுவை விடவும் நல்லாவே சமைக்கும். சின்ன வயசுல இவனோட விளையாடிட்டு இங்கேயே தான் கிடப்பா! அப்போ இவ தான் அவளுக்கு சமையல் கத்துக் கொடுத்தா! ஆனாலும் இவளை விட அவ கைப்பக்குவம் தான் எனக்குப் பிடிக்கும்.”

“அனுவோட சமையலும் நல்லா இருக்குதும்மா.” -நிரஞ்சனா.

“ஆமா, முந்திரிக்கொத்து செஞ்சு தந்தாளே… ரொம்ப நல்லா இருந்தது.” -அபிராமி.

“அத்தை சொல்றது நிஜம் தான்மா! சனா என்னை விடவும் நல்லா சமைப்பா! இப்போ பெங்களூர் போய்தான் படிப்பு, வேலைன்னு சுத்திட்டு ஒழுங்கா வீட்டுல சமைச்சு சாப்பிடறதில்லை.”

“அதெல்லாம் கீழ் வீட்டுல ஆள் பிடிச்சு வச்சிருக்காம்மா. என்னடி சாப்பிடறன்னு கேட்டா டெய்லி ஒரு தமிழ்நாட்டு மெனு சொல்லுவா!” -அர்ஜூன்.

பிரபஞ்சன் புன்னகைத்தான். “ஹாஹா… உனக்கும் சனாவுக்கும் நல்ல பாண்டிங் அர்ஜூன். பாவனாவுக்கு பத்துநாள் உங்க கூட இருந்துட்டு இப்போ ஊருக்கு போகவே இஷ்டமில்லை. சில சமயம் உங்க ஃப்ரெண்ட்ஷிப் பார்த்து பொறாமையா இருக்குதுன்னு சொல்றா!”

சாப்பிட்டு முடித்து பேசியபடி மீண்டும் ஹாலில் ஆளுக்கொரு இருக்கையில் வந்தமர்ந்தனர். 

சித்திப்பாட்டி ஆரம்பித்தார். “நீங்க சொன்னதுதான் சரி தம்பி. ரெண்டு மனசும் ஒத்து இருக்கும்போது கல்யாணம் செஞ்சுக்கறதுதானே? அவ அந்தக் கடங்காரனை நினைச்சிக்கிட்டே காலத்தை ஓட்ட நினைக்கறா! ஏண்டிம்மா அந்த கழிசடையை நினைச்சு வாழ்க்கையை வீணடிக்கறன்னு கேட்டா, ‘சித்திப்பாட்டி என் புருஷனைப் பேசின… கல்லைக் கட்டி கடல்ல தள்ளிவிட்டுடுவேன் ஜாக்கிரதை!’ அப்டின்னு மிரட்டுவா! இவன், ‘அவ என் ஃப்ரெண்ட் பாட்டி! சும்மா நச்சு பண்ணாதே’ன்னு அடக்குவான். இந்த வீட்டுல இந்த முடம் சொல்லு அம்பலம் ஏறுமா?” என்று கண்ணீர் கசிய பேச,

பிரபஞ்சன் குடும்பத்தினர் புரியாது பார்த்திருந்தார்கள்.

“என் மூத்தப் பையனைச் சொல்றாங்க.” என்றாள் அனு.

“ஆனா அர்ஜூனுக்குத்தான்…” என்ற பிரபஞ்சனைக் குறுக்கிட்டான் அர்ஜூன்.

“சனா எனக்கு அம்மா, ஃப்ரெண்ட், சிஸ்டர்… ஏன் என் குழந்தையா கூட இருப்பா அங்கிள். ஆனா ஒரு செகண்ட் கூட அவளை வைஃபா நினைச்சதில்லை.” என்று தங்களுக்குள்ளான பந்தத்தை ஒரே பதிலில் புள்ளி வைத்துக் காட்டிவிட,

சித்திப்பாட்டி, “இதோ கேட்கும் போதெல்லாம் இப்டித்தான் ஏதாவது உளருறான். இதுங்களைப் போல ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் புரிஞ்சவங்க யாரும் இருக்க முடியாது. நீங்களாவது எடுத்துச் சொல்லுங்க தம்பி.” என்றார் ஆதங்கமாக!

சங்கடமான மௌனத்தில் நகர்ந்தன நொடிகள். 

“சித்திப்பாட்டி, சனா கேட்டா அவ்ளோதான்! மண்டைப் பத்திரம்!” என்று எச்சரித்த அர்ஜூன் எழுந்து அவரை அவரறையில் விட்டு வந்தான். 

சஞ்சு கிடைத்துவிட்டான் என்று தெரிந்தால் அவர் பழைய கதை எதையாவது பேசக்கூடும். இது அதற்கான நேரமல்லவே!

பாஸ்கரன், “பிரபு, நான் உங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.” என்று தயக்கமாக ஏறிட்டான்.

“சொல்லுங்க பாஸ்.”

“அது… என் பையன் ஃபாரின்ல இருக்கான்னு சொன்னது பொய். கேட்கற எல்லாருக்கும் நம்ம வீட்டு விஷயத்தை விலாவரியா சொல்ல வேணாமேன்னு ஃபாரின்ல இருக்கான், ரொம்ப பிஸின்னு சொல்லி முடிச்சிடுவோம்.”

“…..”

“இப்போ உங்கக்கிட்ட உண்மையைச் சொல்லணும்னு நினைக்கறேன்… சொல்லித்தான் ஆகணும்.”

“பாஸ்கர் ரிலாக்ஸ்! நிதானமா சொல்லுங்க.”

பெருமூச்சுடன் நிமிர்ந்தவன் கண்கள் கசிய சொன்னான். “ஒரு ஏழெட்டு வயசுல அவன் காணாம போய்ட்டான் பிரபு. ஆல்மோஸ்ட் இருபத்திரண்டு வருஷம் ஆகுது.” அவனின் கசிந்த கண்கள் அக்னியின் மேல் படிந்தன.

இவர்களுக்கு இதயம் வேகமாக துடித்தது. அக்னி இவர்களிடம் வந்து சேர்ந்தும் இருபத்திரண்டு வருடங்கள் ஆகிறதே! அத்துடன் பாஸ்கரனின் சொந்த ஊர் திருச்சியின் அருகே இருக்கும் ஸ்ரீரங்கம்! அக்னி இவர்களுக்கு கிடைத்த இடம் திருச்சி!

நிரஞ்சனா, பிரபஞ்சன், அபிராமி மூவரும் உள்ளுக்குள் மெல்ல மெல்ல அதிகரிக்கும் பதைப்பதைப்புடன் அடுத்து வர இருக்கும் வார்த்தைகளை எதிர்நோக்கியிருக்க, தன்னிருக்கையில் இருந்து எழுந்தான் சஞ்சய் என்ற அக்னிஸ்வரூப்!

எழுந்தவன் பிரபஞ்சனைப் பார்த்து விழிமூடித் திறக்க,

“நோ!” நிரஞ்சனா விழிகள் நிலைக்க, நடுங்கும் சிறு குரலில் சொன்னாள்.

“ம்மா!”

“அக்னி, அப்டி மட்டும் சொல்லிடாதே ப்ளீஸ்!”

அனுவிடமிருந்து அடக்க முயன்றும் முடியாமல் சிறு கேவலொன்று வெளிப்பட்டது. சட்டென்று எழுந்த பாஸ்கரன் அவளைத் தாங்கிக்கொண்டான்.

அக்னி இரு கரங்களையும் விரித்து, இடவலமாக தலையசைத்தான். “அவினாஷ் பத்தி விசாரிக்கும்போது தான் தெரிஞ்சதும்மா!”

அபிராமி மூக்கை உறிஞ்சினார். பிரபஞ்சன் தலையில் கை வைத்துக்கொண்டான். 

“இல்லை! இல்லை! நான் இதை நம்பமாட்டேன்.” அதிர்ச்சியில் நிரஞ்சனா அலற,

“என்கிட்ட எவிடென்ஸ் இருக்குது.” என்றான் அர்ஜூன்.

“அர்ஜூன் ப்ளீஸ்!” அக்னியின் பார்வையில் மன்றாடல்! 

“ம்மா!” என்று நிரஞ்சனாவை அணைக்க, அக்னியைத் தவிர வேறு சொற்களே அறியாதவள் போல், அவன் பெயரை மட்டுமே ஜெபித்தபடி அவன் மார்பில் ஒன்றினாள். “அழாதேம்மா!”

அக்னி நிரஞ்சனாவைத் தேற்றிக் கொண்டிருக்க, அவசர அவசரமாக தன்னறையிலிருந்து ஓடி வந்தாள் சந்தனா. உண்மை தெரிந்த பின்பும் இத்தனை நேரம் தன் அத்தையைக் கவனிக்காத குற்றவுணர்ச்சியில் ஓடி வந்திருந்தாள். அனு பாஸ்கரனின் மார்பிலும், நிரஞ்சனா அக்னியிடமும் தஞ்சம் புகுந்திருப்பதைப் பார்த்து, அவர்களுக்கும் உண்மைத் தெரிந்துவிட்டதை அறிந்துகொண்டாள். 

மெதுவாக போய் அபிராமியின் தோளணைத்துக் கொண்டு அவரருகே அமர, அவர் சட்டென அவள் தோளில் சாய்ந்து கொண்டு அழுதவாறே சொன்னார். “அக்னியை நாங்க எப்பவும் எங்க வீட்டு பிள்ளையா தான் நினைச்சிருக்கோம்.”

அவரின் கண்ணீரைத் துடைத்துவிட்டு சொன்னாள் அவள். “இப்போ நீங்களும் எங்க வீட்டு ஆளுங்கதான் யங் லேடி! எங்க அவி உங்க மாப்பிள்ளைன்றதை மறந்துட்டீங்களா?”

“ஆனா அக்னி…”

“ஈஸி பாட்டி. உங்க அக்னியை எங்கத்தை உங்கக்கிட்ட இருந்து பிரிச்சு எடுத்துக்கப் போறதில்லை.” எனவும், நிரஞ்சனா அழுகையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

“இருபத்திரண்டு வருஷமா எங்கத்தை உயிர்ப்பைத் தொலைச்சிட்டு நடைப்பிணமா வாழ்ந்திருக்காங்க. நேத்து நைட் தொலைஞ்சு போன அந்த உயிர் திரும்பினதை அவங்க கண்ல பார்த்தேன் பாட்டி. எங்க பாஸ் மாமா ஒவ்வொரு ராத்திரியையும் ஒரு கர்ப்பிணியோட அவஸ்தையோட கடந்திருக்கார். அந்த அவஸ்தைக்கெல்லாம் ஃபுல் ஸ்டாப் வச்ச மாதிரி நேத்து, தான் பிரசவிச்ச குழந்தையைக் கையிலேந்தின சந்தோஷத்தை, ஹேப்பி டியர்ஸை அவர் கண்ல பார்த்தேன் பாட்டி.

தொலைச்சதுக்கு தண்டனை இருபத்திரண்டு வருஷம்ன்றது அதிகமில்லையா பாட்டி? இப்பவும் நீங்க கை விரிச்சு அவங்களுக்கு ஆயுள் தண்டனை தந்துட வேணாமே!”

“………”

“நாள் ஆக ஆக ஏதோ மிச்சசொச்ச நம்பிக்கைல, மிஞ்சியிருக்கற பிடிமானத்துல அவங்க ஜீவனைத் தாங்கிட்டு நடமாடிட்டு இருந்தாங்க. அந்த நம்பிக்கைக்கும் பிடிமானத்துக்கும் ஒரு கைக் கொடுங்களேன் பாட்டி… ப்ளீஸ்…”

முதலில் விடயத்தைக் கேட்டதும், ஏகாந்தமானக் காரிருளில், இசையோடு லயித்து கிடக்கும் வேளையில் பளீரென்ற வெளிச்சக்கீற்று விழிகளுக்கு எரிச்சலூட்டுவதைப் போல் உணர்ந்திருந்த நிரஞ்சனா, இப்போது சந்தனாவின் கூற்றில் தன் அழுகையை நிறுத்திவிட்டு, அக்னியிடமிருந்து பிரிந்து அனுவைப் பார்த்தாள்.

பொங்கிப் பெருகிய விழிநீருக்கு அணைப் போட்ட அனு, மெதுவே நெருங்கி நிரஞ்சனாவின் கரம் பற்றிக்கொண்டாள்.

“நான் உனக்கு கைம்மாறு செய்யவே முடியாதளவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன் ரஞ்சி. எந்த ஜென்மத்துலயும் என் நன்றிகடனைத் தீர்த்துட முடியாது. என் பிள்ளை உயிரோடு இருக்கானா இல்லையான்னு தெரியாத கொடூரமான நேரங்களையெல்லாம் கடந்துருக்கேன். அப்டியே இருந்தாலும் அவன் கொலைக்காரனாவோ பிச்சைக்காரனாவோ இருந்துடுவானோ!, இந்த தரங்கெட்ட சமூகம் அந்தப் பிஞ்சுக் குழந்தையை எப்டியெல்லாம் மாத்தி வச்சிருக்குதோன்னு நான் மருகாத நாளில்லை. ஆனா… ஆனா இப்போ அவனை… என் உயிரை… ஒரு நல்ல மனுஷனா, பாசமுள்ளவனா, சக ஜீவன்களை நேசிக்கத் தெரிஞ்சவனா, ஒரு பெரும் பொக்கிஷமா வளர்த்துருக்கீங்க!” என்று கைக் கூப்பினாள்.

“அனு…”

“பரவாயில்லை எனக்கு விதிக்கப்பட்டது இதுதான்னு நினைச்சுக்கறேன். நீங்காத சாபமோ என்னவோ! வரங்களின் கதவுகள் என் பக்கம் இல்லை‌.” அவளின் வாடிய கண்களிலும் கரையற்ற புன்னகையிலும் நிரஞ்சனாவின் இதயம் உடைந்துதான்விட்டது.

“நான் என் லட்சியத்துக்கு குழந்தை வளர்ப்பு ஒரு குறுக்கீடா இருக்கும்ன்னு நினைச்சேனே தவிர, மழலையை வெறுக்கல ரஞ்சி. எப்போ சஞ்சுவை என் கை தாங்கினேனோ… அப்போ இருந்து அவனை என் கருவறைல சுமந்தவனா நினைச்சு அன்பைக் கொட்டித்தான் வளர்த்தேன். தாய்ப்பால் கொடுக்கலைன்னாலும் தாய்ப்பாசம் கொடுத்துதான் வளர்த்தேன். அவனுக்கு எதிரா இருந்த எல்லாரையும் எதிர்த்தேன். ஆனா… அதையெல்லாம் புரிஞ்சுக்க முடியாத அந்தப் பிஞ்சுக் குழந்தை…” என்றவள் உடைந்து அழ, அர்ஜூன், சந்தனா, பாஸ்கரனையும் முந்திக்கொண்டு அவளைத் தன் கைக்குள் இழுத்துக்கொண்டான் சஞ்சய்.

“ம்மா! நான் தாத்தாவை நினைச்சு பயந்தேனே தவிர, உன் அன்பைப் புரிஞ்சுக்காம போகலைம்மா! இன்ஃபாக்ட் நான் திரும்ப வந்தா நீ செத்துப் போய்டுவன்னு தாத்தா சொன்னதால தான்மா நான் வராமலே போயிட்டேன்.” குழந்தை பருவத்திலிருந்து நேற்றிரவு வரை யாரிடமும் சொல்ல மறுத்தவன், அவனின் தங்க அம்மாவிடம் போட்டுடைத்துவிட்டான்.

திக்கென்று அதிர்ந்துப் போய் பார்த்தாள் அனு. அனு மட்டுமல்ல மற்றவர்களும் கூட இந்த புதிய செய்தியில் அவனைத் திகைத்துதான் பார்த்தனர்.

அர்ஜூன், தன் அண்ணனுக்கு தாத்தாவிடம் ஏற்பட்ட ஏதோவொரு கசப்பான அனுபவத்தால், சிறுவனான சஞ்சய் புதிதாக கிடைத்த சொந்தங்களைக் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறான். அந்த கசப்பான அனுபவத்தால் ஏற்பட்ட வெறுப்போ அல்லது உளவியல் பிரச்சினையோ அவனைத் திரும்ப இங்கே வரவிடாமல் செய்திருக்கக் கூடுமென்று நினைத்திருந்தான். அதைக் கேட்டு அவனைச் சங்கடப்படுத்த விரும்பாததாலேயே அவனிடம் இதைப் பற்றி கேட்டிருக்கவில்லை.

“அவர் உன்கிட்ட வேற என்னலாம் சொன்னார்? என்னென்ன செஞ்சார்? சொல்லு!” என்று படபடவென கேட்ட அனுவின் உடல் நடுங்குவதைக் கண்டு சுதாரித்தான்.

“மத்த எல்லாம் உனக்கு தெரிஞ்சதுதானேம்மா?”

அனு தலையிலடித்துக் கொண்டாள். “எல்லாத்துக்கும் காரணம் நான்தான். எனக்கு இந்த ஜென்மத்துல விமோசனமே கிடையாது சஞ்சு. முடிஞ்சா என்னை மன்…”

“அம்மா ப்ளீஸ்… என்னைப் பாவி ஆக்காதே!” என்று சற்று உயர்ந்துவிட்ட குரலில் சொன்னவனின் கண்கள் வெளிப்படுத்திய கோபத்தை, சோகத்தை, ஏக்கத்தைக் கண்ட நிரஞ்சனாவின் உள்ளம் சுக்குநூறாக உடைந்தது.

அக்னி ஒருபோதும் இத்துணை வெளிப்படையாக இருந்ததேயில்லையே! இப்போது அனுவைக் காணும் அவன் கண்களில்தான் எத்துணை ஆசையும் ஏக்கமும் வெளிப்படுகிறது! அவளுக்கான அவனின் அழைப்பில்தான் எத்துணை பரிவும் பாசமும் விரவிக் கிடக்கிறது!

நிரஞ்சனாவிற்கு ஆரம்ப நாட்களில் மகனின் ஏக்கங்கள் புரிந்தாலும், வளர வளர தன்னால் அவன்‌ மகிழ்ச்சியை மீட்க முடியும் என்ற கர்வத்துடன், அவனிடம் அவனின் கடந்த காலம் குறித்து இவள் எதையும் கேட்டிருக்கவில்லை. அவன் அம்மாவை நினைத்து சோர்வுறும் போதெல்லாம் அபிராமி தான் மருமகளுக்கு அபயமளிப்பார். அவனுக்கு கதைகள் சொல்லியோ, புதிய வரவான பிரகதியைக் காட்டியோ அவன் கவனத்தை மடைமாற்றிவிடுவார்.

பிற்காலத்தில் அவனுக்கு தங்கள் மீது தோன்றியிருந்த அன்பில், நேசத்தில் இவர்கள் கேட்டிருந்தால் நிச்சயம் அவன் அம்மாவைப் பற்றி சொல்லியிருக்கக்கூடும். அது புரிந்ததாலேயே மறந்தும் கூட அதைப் பற்றி கேட்காமல் இருந்திருக்கிறார்கள். 

அவனுக்கு அங்கே போக விருப்பமில்லை என்று என்றோ அவன் சொன்னதைப் பிடித்துக்கொண்டும், அவன் வீட்டாரும்தான் அவனைத் தேடி‌ வரவில்லையே என்ற அசட்டையிலும் அக்னியை முழுதாக தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டார்கள்.

பன்னிரண்டு வயதிற்கு பிறகு அவனிடம் அந்த ஏக்கத்தையும் கூட அவர்கள் பார்த்திருக்கவில்லை. ஆனால் உள்ளுக்குள் புழுங்கி இருந்திருக்கிறானென்று இப்போது தெரிகிறது.

நிரஞ்சனா மனம் வெதும்பினாள். பிள்ளைப் பாசத்தில் சுயநலமாக நடந்துகொண்டு, அவன்‌ மனதில் ஏக்கத்தை வளர்த்துவிட்டிருக்கிறேனோ? அவன் மூலம் என் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட நான், அவனின் ஆசையைப் பறித்தெடுத்து மிகுந்த சுயநலத்துடன் நடந்துக் கொண்டிருக்கிறேனோ என்ற எண்ணம் வலுத்து மனதை வதைத்தது. மாமியாரைத் திரும்பிப் பார்த்தாள். அவரின் அழுத விழிகளிலும் அதே உணர்வு! இருவரும் அர்த்தமுள்ள பார்வையைப் பரிமாறிக்கொண்டனர்.

பிரபஞ்சனுக்கும் கூட அதே எண்ணம்தான். தற்போது, தான் விளக்கமளிக்க கடமைப்பட்டவனாகச் சொன்னான். “அன்னிக்கு நாங்க எப்டி எப்டியெல்லாமோ கேட்டோம். பேரைக் கூட சொல்லல இவன். போலீஸ்ல சொல்லிடலாம்ன்னு நினைச்சப்போ எங்கக்கிட்ட இருந்தே தப்பிச்சு போக தான் நினைச்சானே தவிர, அப்பவும் உண்மையைச் சொல்லல. அதுக்காக அப்டியே விட்டுட்டு போகவும் மனசில்லாம தான்…”

அந்த வயதிலேயே அனுவின் மேல் அவன் வைத்திருந்த தீவிர அன்பை நினைத்து இப்போது பிரமித்தனர் பிரபஞ்சன் குடும்பத்தினர். எத்தனை அன்பிருந்தால் அனு செத்துவிடுவாள் என்று அஞ்சி அவ்வளவு அழுத்தமாக இருந்திருப்பான்! இருப்பினும் இத்தனை வருடங்களாக தங்களுக்காக தான் அவளைக் கண்ணால் காணவும் நினைத்திருக்கமாட்டான் என்றும் புரிந்தது. 

பாஸ்கரன், “வேணாம் பிரபு! நீங்க எங்களுக்கு விளக்கம் சொல்லணும்ன்னு எந்த அவசியமும் இல்லை. கண் முன்னாடி உங்க வளர்ப்பு பிரமிக்கக் கூடியதா இருக்குது. அனு சொன்ன மாதிரி என் குழந்தையை அப்பழுக்கில்லாம வளர்த்திருக்கீங்க! அனுவுக்காக என் அணுவைக் கொடுத்ததைத் தவிர, நான் அவன் விஷயத்துல வேற எதுவுமே செய்யல.” என்று விரக்தியாக இரு கரங்களையும் விரித்தான்.

சஞ்சய் அவசரமாக சொன்னான். “செய்றதுக்கு உங்களுக்கு சந்தர்ப்பம் அமையலைப்பா. இப்டி விரக்தியா பேச வேணாம்!”

‘என் கருவறையில் அவன் வீற்றிருக்கவில்லையே! அனுவிற்கு அல்லவா அந்த கொடுப்பினைக் கிட்டியிருக்கிறது!’ என்று மனதிற்குள் அழன்று கொண்டிருந்த நிரஞ்சனா இப்போது இவர்கள் பேசுவதைப் புரியாமல் பார்த்தாள்.

பிரபஞ்சன், அபிராமியும் விழிகளில் கேள்வியைத் தாங்கிப் பார்க்க, அனு சொன்னாள். “என்னோட சஞ்சய் பாஸ்கர்… உங்களோட அக்னிஸ்வரூப் சரகஸி சிஸ்டத்துல பிறந்தவன்.”

“!!!!”

“‘அனு, யூ ஆர் பிரில்லியண்ட்! யூ’வ் சச் இம்மன்ஸிவ் டேலண்ட்!’ இப்டிப்பட்ட வார்த்தைகளை மட்டுமே கேட்டு கேட்டு பழகின எனக்கு வேலைல மேலே மேலேன்னு புகழின் உச்சிக்கு போகணும்ன்னு பேராசை!” என்று ஆரம்பித்து தன் கடந்த காலம் முழுவதையும் சொன்னாள். தன் அறியாமையால் யாருக்கும் சொல்லாமல் வாடகைத்தாயை அணுகியதையும் சஞ்சய் காணாமல் போனதும் அவளின் கர்வமெல்லாம் எப்படி அழிந்தது என்பதையும் சொன்னாள்.

“போதும்மா ப்ளீஸ்! இனி நீ அழ வேணாம். தாத்தா சொன்னதைக் கேட்டு நான் அப்டி போயிருக்கக் கூடாதுதான்! ஆனா அது எனக்கு அப்போ புரியல. புரிஞ்சுக்கற ஸ்டேஜ் வந்தப்போ உன்கிட்ட வர்றது அம்மா, அப்பா, பாட்டிக்கு நான் செய்ற துரோகமா தெரிஞ்சது. எங்கேயோ அர்ஜூனோட நீ சந்தோஷமா இருப்பன்னு நினைச்சேன். ஆனா உன் கருவறைல சுமக்காத என்னை இத்தனை வருஷமும் நெஞ்சுல சுமந்து பைத்தியக்காரி மாதிரி சுத்திட்டு… சத்தியமா முடியலைம்மா!” எனத் தேம்ப,

அவன் முதுகைத் தடவி, “ஈஸி ஈஸி…” என்றான் அர்ஜூன்.

அனுவின் நிலை அவர்கள் மூவருக்குள்ளும் கூட இரக்கத்தைச் சுரக்கச் செய்தது. அதிலும் நிரஞ்சனாவிற்கு குழந்தையைத் தொலைத்தவர்களின் வலி புரியாமல் போகுமா? அத்துடன் தன்னுடனே வைத்து வளர்த்திருந்தும் கூட, மகனின் மனதினை அறியாமல் இருந்துவிட்ட தன் மடமையை நிந்தித்துக்கொண்டவள், அம்மாவையும் பிள்ளையையும் பிரித்து பெரும் பாவம் செய்துவிட்டதாகத் தோன்றிய மாயபிம்பத்தில் மனம் நைந்தாள்.

சிறிது நேர நிசப்தத்திற்கு பிறகு மனைவியின் மனதினை அப்படியே பிரதிபலித்தான் பிரபஞ்சன். “எங்க மேலேயும் தப்பிருக்குது பாஸ்கர். குழந்தை மேல இருந்த ஆசைல அவனைக் கூட்டிட்டு போனப்புறம் ரொம்ப நாள் தமிழ் மீடியாவை விட்டு தள்ளியிருந்தோம். அதுக்கப்புறமும் திருச்சிக்கு விசேஷத்துக்கு வரவேண்டிய சமயங்கள்ல அவனை அழைச்சிட்டு வரலை. அவனுக்கு விவரம் புரிய ஆரம்பிக்கும் போதாவது நாங்க அவனோட கடந்த காலத்தைக் கேட்டிருக்கணும். ஏழு வருஷமா குழந்தை இல்லாம தவிச்ச நாங்க, பொக்கிஷம் மாதிரி கிடைச்ச அக்னியை எங்களுக்கு பிறந்தவனாவே வளர்க்கணும்ன்னு சுயநலமா தான் நடந்துக்கிட்டோம். ஸாரி பாஸ்…”

“அப்பா ப்ளீஸ்… இப்டி எல்லாரும் ஃபீல் பண்ணா நான் என்ன பண்றது?” என்றவன், அர்ஜூனிடம் சொன்னான். “இதுக்குதாண்டா நான் பயந்தேன். இந்த சிச்சுவேஷன் என்னைக் கோழையாக்குது அர்ஜூன்.”

பிரபஞ்சன் மகனின் தோளணைத்துக் கொண்டான். “எப்பவும் எல்லாத்தையும் உள்ளேயே அடக்கி வச்சு நீயே சுமக்கணும்ன்னு அவசியமில்லை அக்னி. எப்போவாவது அப்பா கிட்ட மனசைத் திறக்கலாம்.”

“சொல்லக்கூடாதுன்னு இல்ல டாட். சந்தோஷமா கல்யாண விஷயம் பேசும்போது இதைச் சொல்லி எல்லாரையும் குழப்ப வேணாம்ன்னு நினைச்சேன்.”

“ஆல்ரைட்! எல்லாரும் அவங்கவங்க ஃபீலிங்ஸ் பத்தியே பேசிட்டிருக்கீங்க. இனி அவன் மனசைப் பத்தி கொஞ்சம் யோசிக்கலாம்ல?” என்றான் அர்ஜூன்.

அனைவரும் அவனுக்கு நேரம் தந்து அமைதி காத்தனர்.

இசைக்கும்🪶🪻…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்