Loading

அத்தியாயம் 28

அக்னிஸ்வரூபன் பொக்கிஷம் போல் பொத்தி வைத்திருந்த தன் காதலைச் சந்தனாவிடம் வெளிப்படுத்திவிட்டு உள்ளூர உண்டான பதற்றத்துடன் அவள் முகம் நோக்கியிருக்க, ஒரே ஒரு கேள்வியைக் கேட்டு அவன் பொக்கிஷக் காதலை‌ப் புஸ்வாணம் ஆக்கி வைத்தாள் அவனின் மாரியாத்தா!

“அர்ஜூன் பாவனாவை லவ் பண்றான்னு, அவனைப் பழிவாங்க தான் என்கிட்ட இப்டி கேட்கறீங்களா அக்னி?”

அவளால் வேறு எப்படியும் நினைக்க முடியவில்லை. ஏனெனில் வந்ததிலிருந்து ஒருமுறை கூட அக்னியின் கண்களில் தனக்கானக் காதலை அவள் பார்த்திருக்கவில்லை.

அத்தனைக்கு அவன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் கட்டுப்பாடுடன் இருக்கிறான் அல்லவா? அதுவே இப்போது அவனெக்கெதிராக திரும்பியுள்ளது.

அதனால்தான் அர்ஜூன் கூட எங்கே அண்ணன் கை நழுவிப் போவானோ என்ற எண்ணத்தில் உடனே அவளிடம் பேசு என்று அடமாய் நிற்கின்றான். அனுவிடம் போல் இவளிடமும் இவன் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தால், இந்த பத்து நாட்கள் தீவிர கண்காணிப்பில் அண்ணனின் காதலைக் கண்டுகொண்டிருப்பானே?

“ஓ மேன்!” என்று வெளிப்படையாகவே நெற்றியில் கை வைத்து நொந்துகொண்டான் அக்னி.

‘ஏண்டா எல்லாருமா சேர்ந்து என்னைச் சாவடிக்கறீங்க?’ என்பதாக இருந்தது அவன் உடல்மொழி!

“பின்னே? நிஜமாவே என்னை லவ் பண்றேன்னா சொல்றீங்க?”

“ஏண்டி எனக்கெல்லாம் லவ் வராதா?” அர்ஜூனின் மேலிருந்த எரிச்சலும் சேர்ந்தே வெளிப்பட்டது.

களுக்கென சிரித்துவிட்டாள் அவள். “அப்டியில்லை… நான் உங்களை சைட்டடிச்சேன்னு சொன்னீங்க… ஐ அட்மிட் தட்! பட் ஒருமுறை கூட நீங்க என்னை அப்டி பார்த்த மாதிரி நான் ஃபீல் பண்ணலையே…”

இவன் கண்கள் சிரித்தன. சற்றே முன்னால் சாய்ந்து அவளை நெருங்கியவன், இதயத்திலிருந்த மொத்த காதலையும் கண்களில் நிரப்பிக்கொண்டு, “உன்னை எப்டியெல்லாம் பார்த்தேன்னு சொல்லவா?” எனக் கேட்க,

நொடியில் மாறிப் போன அவனின் பார்வையிலும் பேச்சிலும் அவளின் சிரிப்பு தேய்ந்து, குங்குமமாய்ச் சிவந்துபோனது அந்தச் சந்தனம். காரில் வரும்போது ஒருமுறை இந்தப் பார்வையை எதிர்கொண்ட ஞாபகம்! அவன் முகம் பார்க்காமல் குனிந்துகொண்டவளின் குரல் மென்மையுற்றிருந்தது. “பட் ஐ கான்’ட் அக்செப்ட் யோர் லவ், அக்னிஸ்வரூப்!”

“ஏன்?” அவளின் சிவந்த முகமும் குரலும் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லையே!

அவனிடமிருந்து விலகி நிமிர்ந்து அமர்ந்துகொண்டாள். “நான் இதுக்கு முன்னாடி எனக்கு வந்த எந்த ப்ரோபஸலையும் நோ சொல்லி கடந்து போயிருக்கேன். யாருக்கும் எந்த விளக்கமும் சொன்னதில்லை.”

ஏதோ முக்கியக் குறிப்பைச் சொல்பவளைப் போல் மிகத் தீவிரத்துடன் காணப்பட்டது அவள் முகம். “ஆனா உங்களுக்கு சொல்லலாம்ன்னு தோணுது. பிரகதியோட அண்ணன் மட்டுமில்லாம, நானுமே பழகின வரை உங்க மேல நிறையவே மரியாதை வச்சிருக்கேன்.”

அவளை மௌனமாக பார்த்திருந்தான் அக்னி.

“சோ… ஹோப் யூ வில் அண்டர்ஸ்டாண்ட் மீ! எனக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கான்னு தெரிஞ்சும் எப்டி லவ் சொல்றீங்க அக்னி?”

“ப்ச்!” எரிச்சலுடன் பக்கவாட்டில் முகம் திருப்பிக் கொண்டவன் கேட்டான். “எவன் அவன்?”

அவனுக்குமே ‘அவன்‌’ யாரென்று தெரிய வேண்டியிருந்ததே!

“சஞ்சுத்தான்.”

பட்டென்று திரும்பிய அக்னியின் விரலிலிருந்த ஸ்பூன் நழுவி மேசையில் விழுந்தது. “ஏன்… ஏனு ஹெலிதிரி?!”

“ஹ்ம்ம்! யூ ஹியர்ட் மீ ரைட் ஸ்வரூப்!”

அர்ஜூன் இதைச் சொல்லவில்லையே! இதற்கு தான் அவளிடம் பேசு பேசு என்று நச்சரித்தானா?

கண்கள் மூடி வாயைத் திறந்து மூச்சை உள்ளிழுத்துக் கொண்டான். “ஐ டோண்ட் கெட் யூ! காணாம போனவன் எப்டி…?”

“திரும்ப வந்துடுவான். அவி அண்ணாவும் அர்ஜூனும் கண்டுபிடிச்சிடுவாங்க.”

“எனக்கு இப்பவும் புரியல. நீ சொன்னபடி பார்த்தா அவன் காணாம போகும்போது நீ நாலு வயசு குழந்தைடீ!”

“ஆனா பதினாலு வயசுல பெரியவளானப்போ சஞ்சுவுக்கு சந்தனம்ன்னு பேச்சு வந்தது.”

“யாரு? தாத்தாவா?”

அவர்தானே அவளைச் சந்தனம் என்றழைக்கிறார்!

“ம்ம்! என்னைப் பார்க்கும் போதெல்லாம், ‘அவன் சாக்கடை இல்லை; சந்தனத்துக்கு உகந்தவன்! நீ தாத்தாவை நம்பறதானே?’ன்னு கேட்டுட்டே இருப்பார். ஆரம்பத்துல யாரை அப்டி சொல்றார்ன்னு எனக்கு புரியல.”

இவள் தாத்தாவைப் பார்க்க பாஸ்கரனுடன் சென்றிருந்தால், எதற்கும் பேசாத கலியபெருமாள் இவளைக் கண்டால் மட்டும் மேற்கண்ட வசனத்தைச் சொல்லி இவள் முகம் பார்த்து நிற்பார். பாஸ்கரன் கலியபெருமாளுக்கு அதட்டல் போடுவதுடன் இவளையும் வெளியே போய் நிற்க சொல்லிவிடுவான். நிர்மலாவுடன் வந்திருக்கும் போது அவர் இப்படி சொல்லி வைக்க, அதன்பின்னர் தாத்தாவைப் பார்க்கவே வேண்டாமென இவளுக்கு தடைவிதிக்கப்பட்டது.

“அதனால என்னோட போஸ்ட் டீனேஜ் வரைக்குமே தாத்தா யாரைச் சொல்றார்ன்னு எனக்கு தெரியல. அப்புறம் ஒருமுறை அனு அத்தை சஞ்சுத்தான் பர்த்டே அன்னிக்கு வீட்டுல பூஜையை முடிச்சிட்டு, கோவில்ல அபிஷேகத்துக்கு சொல்லிருந்தாங்க. அப்போ நான் யூஜி ஃபர்ஸ்ட் இயர்!”

ஏதோ விடுமுறை என்று சென்னை வந்திருக்க, பூஜைக்கு இவளையும் அழைத்தாள் அனு. ஆனால் நிர்மலா இவளைப் போகவிடவில்லை.

இவள் போகவேணுமென அடம்பிடிக்க, “அந்தச் சாக்கடை பிறந்ததே வீட்டுக்கு தரித்திரம்! அதுக்கு பூஜை வேற ஒரு கேடு!” என்று கடுமையாக பேசிவிட, அப்போதுதான் சஞ்சுவைச் சொல்கிறார்கள் எனத் தெரிந்துகொண்டாள் இவள்.

ஆனால் இப்போது அக்னியிடம் அம்மாவை விட்டுக் கொடுக்காமல் சொன்னாள். “அன்னிக்குதான் அம்மா கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் நான் வேணும்னே தாத்தாவைப் பார்க்க தனியா போவேன்.”

“புல்ஷிட்! அவர் மெண்ட்டலி அன்ஸ்டாபிள்ன்னு தெரிஞ்சுமா அவர் வார்த்தையைப் பிடிச்சிட்டிருக்கே?”

“ம்ஹூம்! தாத்தா வார்த்தை மட்டுமில்ல; அனு அத்தை ஆசையும் அதுதான்!”

திகைப்புடன் கேட்டான். “வாட் டூ யூ மீன்? அ… உங்கத்தையுமா?”

“ம்ம்! ஆனா அத்தை என்கிட்ட நேரடியா சொன்னதில்ல.” என்று இடக்கையைக் கழுத்தினடியில் தாங்கி சிரித்தவள், அனுவுக்கும் நிர்மலாவுக்கும் நடக்கும் பனிப்போர் பற்றி சொன்னாள்.

இவனுக்கு ஐயோவென்றிருந்தது. தன் பொருட்டு அம்மா எத்தனை இன்னல்களை இழுத்துக் கொண்டிருக்கிறார்! யாரோ என்னவோ சொல்லிவிட்டு போகட்டும் என்று விடக்கூடாதா?

அவன் மனசாட்சி கேட்டது. ‘நிர்மா அத்தை அம்மாவைப் பேசும்போது உனக்கும்தான் ஏன் கோபம் வருகிறது?’

“படிச்ச பொண்ணுதானே சந்தனா நீ? பெரியவங்க ஏதோ பேசறாங்கன்னு எதிர்காலமே இல்லாத ஒரு விஷயத்தைப் போய்…” மனம் ஆறமாட்டாமல் கேட்க,

அலட்டாமல் சொன்னாள் அவள். “அர்ஜூன், அவி மாதிரியே பேசறீங்க அக்னி! பெரியவங்களுக்காக மட்டும் இல்லை. எனக்கே சஞ்சுத்தானைப் பிடிக்கும்.”

“ரப்பிஷ்! அவங்க யாரும் சொல்லலைன்னா அவனோட பிரிஸென்ஸே உனக்கு தெரிஞ்சிருக்காது!”

“ம்ம்! நிஜம்தான். நானும் அர்ஜூனும் சஞ்சுத்தானை அனு அத்தை கண் வழிதான் பார்த்திருக்கோம். அவங்க மனசு வழிதான் உணர்ந்திருக்கோம். அவங்க எங்களுக்கு சஞ்சுவோட ஞாபகங்களை மறக்கவே விடல. பதினாறு வயசுல நான் ரூம்ல இல்லைன்னு நினைச்சிட்டு அத்தையும் அம்மாவும் இதுக்காக சண்டைப் போட்டுட்டு இருந்தாங்க. முன்னாடியும் இது நடக்கும் தான்னாலும், ஏனோ அன்னிக்கு தான் மனசுல ஒரு குறுகுறுப்பு! அத்தான் இப்போ எப்டி இருப்பான்னு பார்க்க ஆசை!”

இவன் நொந்துபோய் கண்மூடி நெற்றியில் கைவைக்க, அவளிடம் சிறு கோபம்! “கேட்கறதுக்கு இஷ்டமில்லைன்னா போகலாம் அக்னி! நானும்தான் என் பர்சனல் எல்லாத்தையும் ஏன் உங்க கிட்ட ஷேர் பண்ணனும்?”

கோபமேறிய சின்ன நாசியும் சிறிதே குவிந்திருந்த இதழ்களுடன் தாடையும், இழுத்து வைத்து கொஞ்ச தூண்ட, ‘ச்சை! மானங்கெட்டவனே!’ என்று நிந்தித்துக்கொண்டு, அவளிடம் தன் கம்பீரத்தை விடாமல் சொன்னான். “லைஃப ஸ்பாயில் பண்றியேன்னு கொஞ்சம் ஃபீல் பண்ணிட்டேன்ம்மா. சரி சொல்லு, உன் உன்னத காதல் கதையை!”

“உங்களை அக்செப்ட் பண்ணிக்கலன்னு கிண்டல் பண்றீங்க. போங்க!”

அர்ஜூன் இதற்குத் தான் தன்னை இவளிடம் பேச சொல்லியிருக்கிறான் என்று புரிந்தது. ஆக அவனுக்கு அவள் மனம் முழுதாக தெரிய வேண்டியிருந்தது. எங்கே கோபித்துக்கொண்டு சொல்லாமல் போய்விடுவாளோ என தாஜாவில் இறங்கிவிட்டான்.

“நிஜமா இல்லங்க… சொல்லுங்க…”

“……”

“உன்னை விட்டா வேற பொண்ணே எனக்கு கிடைக்கமாட்டா பாரு! அப்புறம் என்ன சொல்லு!”

அவளும் கொஞ்சமாக சமாதானமாகி தொடர்ந்தாள். “அனு அத்தைக்கிட்ட அத்தான் எப்டி இருப்பான்னு கேட்டேன். அவங்க மாமாவோட பழைய ஆல்பத்தை எடுத்துக் காட்டி இப்டிதான் இருப்பான் சொன்னாங்க. ஏன்னா ரெண்டு பேரோட சைல்ட் ஹூட் ஃபோட்டோஸ்க்கும் நிறைய சிமிலரிட்டீஸ் உண்டு.”

இவன் விழிகளைத் தாழ்த்திக்கொண்டான். “ம்ம்!”

“அப்புறம் ப்ளஸ் ட்டூ படிக்கும்போது அர்ஜூன் ஒரு லவ் லெட்டர் கொண்டு வந்தான்.”

“அர்ஜூன்?!”

“ச்சச்ச! அஜூ குட்டி என் பேபி! அந்த ஹிப்போ பேபி அவன் ஃப்ரெண்ட் கொடுக்க சொன்னான்னு என்கிட்ட கொடுத்துச்சு. அவன்கிட்ட நான் சஞ்சுத்தானை தான் லவ் பண்றேன்னு சொல்ல, அவன் தாத்தாவோட சேர்ந்து நானும் மெண்டலாகிட்டேன்னு சொல்லி, என்னை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் அத்தை, மாமா கிட்ட போட்டு விட்டுட்டான். அன்னிக்கு என்னால மாமா டென்ஷனாகி அத்தையை அடிச்சிட்டார்.”

“வாட்!!” கோபத்தில் தன்னிலை மறந்த அக்னியின் குரல் சிறிது உயர்ந்துவிட்டது.

சடுதியில் முகபாவனையை மாற்றிக்கொண்டு பின்னங்கழுத்தைத் தேய்த்து கொள்பவனை வினோதமாக பார்த்தாள் அவள். அவனுக்கு ஆறுதலளிக்கும் விதமாக மேசையின் மீதிருந்த அவனின் புறங்கையின் மீது தன் கரம் வைத்து கவலையாகக் கேட்டாள். “ஆர் யூ அஃபெக்டட் பை சம்திங் ஸ்வரூப்? நான் சொல்ற சில விஷயங்களால உங்களை நீங்க கனெக்ட் பண்ணிக்கறீங்க. இல்லையா?”

ஒரு கணம், ‘நான்தான் சஞ்சு!’ என்று சொல்லிவிடலாமா என யோசித்துவிட்டு, அர்ஜூனின் எச்சரிக்கையும் இவளுக்கு தன் அம்மாவின் மீதிருக்கும் நேசமும் நினைவு வர, உடனேயே அவ்வெண்ணத்தை அழித்துவிட்டான்.

அம்மாவைப் போல் மனிதர்களைப் படிக்க தெரியாத மக்கள் ஒருவித ஆபத்தென்றால், இவளைப் போல் கண்ணிமைகளையும் படிப்பவர்கள் வேறுவித ஆபத்தை இழுத்து விடக்கூடும்.

அதற்காக ஒன்றுமில்லை என்று சொல்லி மேலும் அவள் சந்தேகத்தை விசிறி விடவில்லை. கல்யாணம் முடிந்ததும் எப்படியும் உண்மை தெரியத்தானே போகிறது? அதனால் ஆமாம் என்றே சொன்னான். “யாஹ்! யோர் கெஸ் இஸ் ரைட்! நானும் அப்புறம் டைமிருக்கும் போது சொல்றேன். இப்போ நீ சொல்லு.”

“பரவாயில்லை. உங்களுக்கு கஷ்டம்ன்னு தெரிஞ்சப்புறம் எதுக்கு அதைக் கேட்டு…” என்றவளை இடையிட்டான்.

“நீ சொல்லு. என் லவ்’அ ரிஜெக்ட் பண்ற அளவுக்கு உன் காதல் அவ்ளோ வொர்த்தா’ன்னு நான் தெரிஞ்சுக்க வேணாமா? இல்லைன்னா இப்போவே போய் சந்தனாவைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம்ன்னு சொல்றேன். உங்க வீட்ல என்னை வேணாம்ன்னு சொல்லிடுவாங்களா என்ன?” என்றவன் அவளைப் பார்த்தானே ஒரு பார்வை!

உள்ளம் திணறிவிட்டது பெண்ணுக்கு! அவன் கரத்தின் மேலிருந்த தன் கரத்தைச் சட்டென்று எடுத்துவிட்டாள்.

இவன் இதழ்கள் இனிதாய் ஓர் பிரிவைச் சந்தித்து பின் இணைந்தன. தனக்கான பெண்ணின் நடுக்கமேறிய நாணம்தான் எத்தனை போதையேற்றுகிறது! மீண்டும் பின்னங்கழுத்தைத் தேய்த்துக்கொண்டான்.

உருகிவிட்ட ஐஸ்கிரீமைப் பார்த்திருந்தவளும் தன் மிடுக்கை மீட்டுக்கொண்டாள். “நீங்க அத்தை – மாமா லவ்’அ பார்த்ததில்லயே அக்னி? சும்மா கட்டிக்கிட்டு, கிஸ் பண்ணிக்கிட்டு எல்லாம் இருக்கறதில்லை. ஆனா சின்ன சின்ன விஷயத்துலயும் காதலுக்கே இவங்கதான் உயிர் கொடுத்தவங்க மாதிரி நடந்துப்பாங்க. கவிதை மாதிரி இருக்கும். அப்போவே எனக்கு அது புரியும்.” என்றவள் மீண்டும் பழங்கதைக்குள் நுழைந்துவிட்டாள்.

“அப்டிப்பட்ட மாமா அத்தையை கைநீட்டினது என்னாலதான்னு அழுகையா வந்தது. அத்தை எல்லாம் தன் தப்புதான்னு சொல்லி மாமா கால்லயே விழுந்துட்டாங்க.”

சந்தனாவிற்கு தெரியாத ஓர் விடயம், அன்றிரவு அனு உறக்கம் கொள்ளாமல் மன உளைச்சலால் மிகுந்த சித்ரவதையை அனுபவித்தாள்.

“அனு!” எனத் தன்‌ தோள் தொட்ட கணவனின் கரத்தை மூர்க்கத்தனமாகத் தட்டிவிட்டாள்.

“நான் நிர்மலா கிட்ட சண்டை போடறது தப்புதான்! அது குழந்தை மனசுல இப்டியொரு பாதிப்பை ஏற்படுத்திருக்கும்ன்னு நான்‌ நினைக்கல. ஆனா நீங்க… நீங்க நம்ம சஞ்சு கிடைக்கவே மாட்டான்ற நம்பிக்கைல தானே இன்னிக்கு என்னை அடிச்சீங்க?” என்று கேட்க அதிர்ந்து போனான் அவன்.

“ஹேய் என்னடி‌ பேசற? நீ உடைஞ்சு போகும்போது கூட நான் நம்பிக்கையோட தான் இருந்திருக்கேன் அனு.”

இல்லையென தலையாட்டியவள், “அப்டி நம்பிக்கை இருக்கறவர் ஏன் சனாவை சஞ்சுவுக்கு கட்டித் தர்றதுக்கு கோபப்படணும்?” என்று கேட்டு குமுறி அழுதாள்.

பாஸ்கரன் செய்த சமாதானங்களெல்லாம் வியர்த்தமானது. கடைசியில் சந்தனாவிற்கு திருமண வயது வரும்போது, அப்போதும் அவளுக்கு சஞ்சுவின் மீது விருப்பமிருந்தால் இருவருக்கும் திருமணம் செய்விக்கலாம் என்ற உடன்படிக்கைக்கு வர, அது அவளுக்கும் உவகையளித்தது.

அன்றிலிருந்து அனு நிர்மலாவிடம் மல்லுக்கட்டுவது குறைந்தது. ஆனால் அனுவுக்கும் நிர்மலாவுக்கும் கண்ணுக்கு தெரியாத ஒப்பந்தம் ஒன்று இருந்தது. சஞ்சய் எங்கே இருக்கிறான் என்று உறுதியாக தெரியாதபோது, அவனுக்குதான் சந்தனாவை கொடுக்கப் போகிறோம் என்று யாரிடமும் வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை அனுவுக்கு!

அதேபோலவே நிர்மலாவுக்கும் காரணிகள் இருந்தன. அர்ஜூனுக்கும் சந்தனாவுக்கும் ஒரே வயது. அவர்களுக்குள் இருக்கும் நட்பைத் தாண்டி இருவருக்கும் வாழ்வில் இணைவதில் நாட்டமில்லை; அத்துடன் அர்ஜூன் இப்பொழுதுதான் வாழ்வில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவன் திருமணம் செய்து கொள்வதற்கு இன்னும் சில வருடங்களாகக் கூடும்.

இக்காரணங்களால் நிர்மலாவும் வெளியாட்களிடம் விரிவாக தங்கள் நிலையைச் சொல்வதில்லை. என் மகனுக்குத்தான் சந்தனா என்று அனுவும், என் அண்ணன் மகன்தான் சந்தனாவின் கணவன் என்று நிர்மலாவும் பொதுவாகக் கூறி முடித்துவிடுவார்கள்.

“மறுநாள் அத்தையும் மாமாவும் ஸ்கூலுக்கே வந்து, ‘தேவையில்லாத எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது; ஒழுங்கா படிக்கணும்; பெரியவளாகி நல்ல நிலைமைக்கு வரணும்’ன்னு ஒரே அட்வைஸ்! என்னாச்சோ ஏதாச்சோ தெரியாது அதுக்கப்புறம் அத்தையும் எங்கம்மா கிட்ட சண்டை போடறதே இல்லை. என் முன்னாடி சஞ்சுவைப் பத்தி பேசவே மாட்டாங்க.

அவங்க அப்டி என்கிட்ட மறைக்க மறைக்க எனக்கு இன்னும் தான் சஞ்சுத்தான் மேல கிரேஸ் அதிகமாச்சு. அப்புறம் ஃபர்ஸ்ட் இயர் அப்போ தாத்தாவும் சஞ்சுத்தானை தான் சொல்றார்ன்னு தெரியவும் என் லவ் ஸ்ட்ராங் ஆகிடுச்சு அக்னி. அர்ஜூனும் அவியும்… ஏன் பாஸ் மாமா கூட இதுக்காக என்கிட்ட நிறைய சண்டைப் போட்டிருக்காங்க.

ஆனா என்னால அப்டி மாற முடியலை. சஞ்சுத்தான் இடத்துல வேற யாரையும் வச்சு பார்க்க முடியலை. என் மனசுலயே பதிஞ்சிடுச்சு, நான் சஞ்சுவோட வைஃப்ன்னு! பசங்க லவ் பண்றதா என்னை நெருங்கும் போதெல்லாம் சஞ்சுவோட பொண்டாட்டியா எனக்கு குற்றவுணர்வு வந்ததே தவிர, யார் மேலேயும் லவ் வரல!”

அக்னி பிரமித்துப் போய் அமர்ந்திருந்தான். அவள் சஞ்சுவின் மனைவி என்ற போது மகிழ முடியவில்லை. எனக்காக இத்தனை வருடங்கள் இவள் காத்திருக்கிறாள் என்று புளங்காகிதமடைய முடியவில்லை. மாறாக கலியபெருமாள், அனு, அர்ஜூன், நிர்மலா என அனைவரின் மீதும் பொல்லாத கோபம் வந்தது. கலியபெருமாள் இவன் மேல் நடத்திய துன்புறுத்தல் ஒருவிதம் என்றால், சின்னப் பெண்ணான சந்தனாவிடம் சஞ்சுவின் எண்ணங்களை விதைத்ததும் ஒருவித கொடுமை என்றே நினைத்தான். இதில் அனுவும் தன்னை அறியாமலேயே சம்பந்தப்பட்டிருப்பதில் இவனுக்கு ஆற்றாமை பொங்கியது.

அர்ஜூன், ‘வேறு மாப்பிள்ளை, டிராமா’ என்றதன் அர்த்தமும் இப்போது புரிந்தது.

“இதனால தான் அர்ஜூன் உன்னை அண்ணின்னு கூப்பிடறானா?”

“ஹாஹா… அவனுக்கு ஏதாவது வேலை ஆகணும்னா என்கிட்ட தான் வருவான். அப்போ நான்தான் சொல்லுவேன், அண்ணின்னு கூப்பிட்டா ஹெல்ப் பண்றேன்னு!”

சந்தனா அர்ஜூனை விட நான்கு மாதங்கள் சிறியவள்! இருப்பினும் அவளின் ஆணையின் பேரில் தனக்கு காரியம் ஆகவேண்டும் என்ற சமயங்களில், அவள் கோபமாக இருக்கும்போது என சிற்சில நேரங்களில் அவன் அவ்வாறே அழைக்கின்றான்.

“இன்னும் ரெண்டு, மூணு வாரத்துல சஞ்சுவைக் கண்டுபிடிச்சிடுவேன்னு அவி அண்ணா சொல்லிருக்கான். வெய்ட்டிங் ஃபார் தட் த்ரில்லிங் மொமண்ட்!” என்றவளை அக்னி அமைதியாகப் பார்க்க,

“என்னாச்சு? என் லவ் வொர்த்தா இல்லையா?” எனக் கேட்டாள்.

“இதுக்கு பேரு லவ்வா’டீ?” என்று பல்லைக் கடிக்க,

உருகியிருந்த ஐஸ்கிரீமை அவன் தலையில் கவிழ்த்துவிடும் ஆத்திரத்தில் முறைத்தாள் அவள்.

“பக்கா கிறுக்குத்தனம்! வீட்டுப் பெரியவங்க எல்லாருமா சேர்ந்து அவங்களோட ஆசை, வீண் பிடிவாதம், கௌரவத்துக்காக பசங்க வாழ்க்கையை நல்லா கெடுத்து வச்சிருக்காங்க!” அவன் கோபம் குறைவதாக இல்லை.

இன்றில்லை என்றாலும் என்றாவது ஒருநாள் பிரகதி மூலமாக அக்னிக்கு தங்கள் குடும்பத்தை, குடும்ப நபர்களைப் பற்றி தெரிய தான் போகிறது. எனவே உறவினன் என்ற முறையிலும் அவளுக்கு அவன்‌மேல் இருக்கும் மதிப்பிலும் தங்கள் குடும்ப சங்கதிகளைப் பகிர்ந்தாள் சந்தனா. ஆனால் அவன் தங்கள் வீட்டுப் பெரியவர்களை விமர்சிப்பதை அவள் விரும்பவில்லை.

“நாங்க நல்லாதான் இருக்கோம் அக்னி. அவங்களோட பிள்ளைங்க நாங்க. சோ அவங்க ஆசையை எங்க கிட்ட நிறைவேத்திக்க நினைக்கறதுல என்ன தப்பிருக்குது?”

காலம் அனைத்தையும் மாற்றுமாமே? இவள் மனதில் பாசிபோல் தளும்பி நிற்கும் இவன் ஞாபகங்கள் இத்தனை வருடங்கள் கடந்தும் மாறாமல் கிடக்கிறதே! இதற்கு பெரியவர்களையும் இவளின் முட்டாள்தனத்தையும் நோவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

எத்துணைப் பெரிய புத்திமானும் ஏதோவொரு விடயத்தில் ஏதோ ஒரு கணத்தில் அடிமுட்டாளாக இருந்து விடுவதுண்டு. அப்படித்தான் அதிமேதாவியான சந்தனாவும் தன் விடயத்தில் அடி முட்டாளாக இருப்பதாகத் தோன்றியது இவனுக்கு.

“மை ஃபூட்! அந்த சஞ்சு இப்போ உயிரோட இருக்கானா இல்லையான்னு கூட உங்க யாருக்கும் தெரியாது. அவனைப் போய்…”

“அக்னி!!” கடுமை முகம் காட்டினாள்.

அசரவில்லை அவன். “அவன் கொலைக்காரனா இருந்துட்டா என்னடி பண்ணுவ?”

“ஐ’ல் லைக் ஹிம் நோ மேட்டர் வாட்…” என்றவளின் குரல் உள்ளே போயிருந்தது.

லைக்! ‘லவ்’ இல்லை என்பதைக் குறித்துக்கொண்ட அக்னியின் மூளை சந்தோஷித்தது.

“ஒருவேளை அவன் வராமலே போயிட்டா?”

“என் ஆன்மா அஸ்தமிக்கற வரை என் அன்பும் மாறாது.”

“ஹைட் ஆஃப் ஸ்டுப்பிடிட்டி சந்தனா.”

“ஐ க்நோ!”

“அவனுக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகியிருந்தா?”

“அதை அப்புறம் பார்க்கலாம்.”

“இடைல உனக்கு வேற யார் மேலயாவது லவ் வந்தா?”

ஒரு துளி கண்ணீரை உருண்டோடவிட்டாள். “வராது!”

“வந்துட்டா?”

“நானே என்னை மன்னிக்கமாட்டேன்.”

“யூ ஆர் கோயிங் இன்ஸேன், இடியட்!”

“தட்’ஸ் ஓகே! இப்பவும் இந்த இடியட்டை லவ் பண்றீங்களா?”

“டாம்ன் எஸ்ஸ்! வாட்எவர் யூ ஆர்… ஐ டூ!” அழுத்தம் திருத்தமாக அவள் மண்டைக்குள், மனதிற்குள் ஏறும் வண்ணம் சொன்னான்.

“ஸ்வரூப்…”

இத்தனை நாட்கள் அனு, நிரஞ்சனாவை நினைத்து தவித்திருந்தவன், இப்போது சந்தனாவிற்கும் சேர்த்து, எங்கும் எதற்கும் யாருக்கும் கைம்மாறு செய்ய முடியாத பாவியாக நிற்கின்றோம் என்று தன்னிலை எண்ணி கிடந்து தவித்தான்.

“இதுக்கு முன்னாடி உனக்கு ப்ரப்போஸ் பண்ண யாரையும் உனக்கு பிடிக்கலையா?”

“பிடிக்குது, பிடிக்கலைன்ற வரையறைக்குள்ள யாரையும் நான் வைக்கலன்றது தான் உண்மை.”

‘நானும் அந்த கோட்பாட்டிற்கு உட்பட்டுதான் இருக்கிறேனா?’ என கேட்க வேண்டுமென்ற ஆவல் மேலோங்கியது. முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். முதலில் இந்த அர்ஜூனுக்கு நான்கு அறைகள் விட வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது.

அவள் அவன் சுவைத்துவிட்டு வைத்த ஸ்பூனைத் தயக்கத்துடன் பார்க்க, சட்டென எழுந்துபோய் புதிய ஐஸ்கிரீம் வாங்கி வந்து தந்தான். அதையும் தயக்கமாகவே பெற்றுக்கொண்டாள்.

அக்னியின் எண்ணங்கள் இங்கே இல்லை. அனு, அர்ஜூன், தாத்தா, நிர்மலா என அனைவரிடமும் பொங்கிய ஆத்திரத்தில் முகம் இறுகி போய் அமர்ந்திருந்தான்.

தன்னால் தான் அவன் வதனம் இறுகி கிடக்கிறது என்று நினைத்து மன்னிப்பை வேண்டினாள் சந்தனா. “ஸாரி ஸ்வரூப்…”

“ஹே, டோண்ட் கெட் பேனிக்! சாப்பிடு.” என்றதும் ஐஸ்கிரீமைச் சுவைத்தாள்.

ஒருவனைத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டோம் என்ற எண்ணத்தில், வாழ்வில் முதல்முறையாக அவள் விரும்பும் ஐஸ்கிரீம் தொண்டையில் நின்று கசந்தது.

               ********

முன்மாலையில் மண்டபத்திற்கு திரும்பியதும், காரிலிருந்து இறங்கியவள், “லவ் ஃபெயிலியர்ல மறுபடியும் தம்மடிக்க போயிடாதீங்க பாஸ்!” என்று கேலியாகச் சொல்ல,

“எங்க பாட்டி எனக்கு ஏஞ்சல் மாதிரி ப்யூட்டியைப் பார்ப்பாங்க, போடி!” என இவனும் சிரித்தபடி திருப்பிக் கொடுத்தான்.

இத்தனை நேர பழக்கத்தில் அக்னிக்கு அவள் மேல் உண்டாகியிருக்கும் உரிமையுணர்வு கூட, அவளுக்கு அவன்‌ மேல் உண்டாகவில்லை. இன்னும் பிரகதியின் அண்ணன் என்ற நிலையிலும், ஓர் புதிய நண்பன் என்ற நிலையிலும்தான் தன்னை வைத்திருக்கிறாள் என்று புரிந்தது. அதில் மனம் சற்று சுணங்கியது.

‘அவள்தான் மனதில் சஞ்சுவை ஏற்றிருக்கிறாளே!’

ஆற்றாமை அடங்கவில்லை இவனுக்கு. அவள் உள்ளே சென்றதைப் பார்த்துவிட்டு, அர்ஜூனை அழைத்து தன்னறைக்கு வரச் சொன்னவன் விடுதியறை நோக்கிச் செல்ல,

காரிடாரில் எதிர்ப்பட்ட பிரபஞ்சன், “உங்கம்மா இன்னும் என்னவோ பாத்திரம் வாங்கணும்ன்னு உயிரை எடுக்கறாடா அக்னி. வந்து என்னன்னு கேளு!” என சலித்துக்கொள்ள,

“என்ன வாங்கணுமோ வாங்கிடலாமேப்பா?” என்றான் இவன்.

“டேய் அவ ஊர் சுத்த ப்ளான் பண்றாடா! நான் இந்த ஆட்டத்துக்கு வரலை. கடைக்குப் போகணும்னு சொன்னதும் பாட்டியும் பர்ஸைத் தூக்கிட்டு கிளம்பறாங்க பாரு!”

இவன் சிரித்தபடி அவர்கள் தங்கியிருந்த அறைக்குப் போக, “அக்னி சிணுக்கோலி வாங்க மறந்தாச்சுடா. ஒரு எட்டு போய் வாங்கிட்டு வந்துடலாம். காரை எடு!” என ஆரம்பித்தார் பாட்டி.

“ஒரு எட்டாம்!” என இவனிடம் நக்கலடித்த பிரபஞ்சன், “ம்மா! அவனே பில்டரைப் பார்த்துட்டு இப்போதான் வர்றான்.” எனக் கடிய,

“இப்பவே ஃபங்ஷனுக்கு எல்லாரும் ரெடி ஆகிட்டாங்க. அப்புறம் போக முடியாதுடா.” என அலுத்துக்கொண்டார் அபிராமி.

“இந்த காலத்துல சிணுக்கோலி எல்லாம் யாரும்மா யூஸ் பண்றா? உங்கப் பேத்திக்கு அப்டீன்னா என்னன்னு கூட தெரியாது.”

“தெரியுதோ இல்லையோ! செய்முறைக்கு நாம செய்ய வேண்டியதைச் செஞ்சிடணும்!”

“யங் லேடி, சின்னப் பொருள்தானே? ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிக்கலாம்.”

“என்ன இருந்தாலும் நாம நேர்ல தடவிப் பார்த்து வாங்கற மாதிரி இருக்குமாடா?”

“ஓ யங் கேர்ள்… இப்போ போக முடியாது. வேணும்னா காலைல சீக்கிரம் ரெடியா இருங்க. நாம போயிட்டு வரலாம்.”

“அவங்கப்பா சொல்லி கொடுத்ததை அப்டியே பேசறான்.” என மகனிடம் போல் கணவனிடம் ஊடல் கொண்டாள் நிரஞ்சனா.

“அம்ம்மா…” அடுத்து அம்மாவைச் சமாதானம் செய்ய கட்டிலில் அமர்ந்து அவள் மடியில் தலை வைத்துக்கொண்டு, “அப்பா சொல்லலைம்மா! நான்தான் சொல்றேன். சின்னப் பொருள்தானே? காலைலப் போனதும் வாங்கிடலாம். பட், டென் மினிட்ஸ்தான் டைம் தருவேன்.” என அவளின் சேலைத் தலைப்பைப் பிடித்து விளையாட,

கடந்த ஐந்து நிமிடங்களாக அனைத்தையும் பார்த்தவாறு மௌனமாக வாசலில் நின்றிருந்தான் அர்ஜூன். அவர்கள் தங்கள் சஞ்சய்யின் மேல் வைத்திருக்கும் அன்பும் நேசமும் உரிமையும் ஏனோ இவனுக்கு ஒருவித அழுத்தத்தைத் தந்தது.

குரலைச் செருமினான். “ஹாய் அங்கிள்!”

“ஹே அர்ஜூன்! வா வா…” பிரபஞ்சனின் வரவேற்பிற்கு கண்கள் ஒத்துழைக்காத சிரிப்பொன்றைத் தந்தான்.

“அண்ணா வர சொல்லிருந்தார்.” என்றவனின் குரல் நலமின்றி வெளிவந்தது.

அனைவரும் அக்னியைப் பார்க்க, அவன் சொன்னான். “பில்டர் அர்ஜூன் ஃப்ரெண்ட்ன்னு சொன்னேனேப்பா. அதான் வீட்டைப் பத்தி பேச வர சொன்னேன்.”

“ஓ ஆமா! எனக்கு கூட டீடெயில்ஸ் அனுப்பியிருந்தியே… இங்கே உங்கம்மா கூட போராடி நான் அதைப் பார்க்கவே இல்லடா!”

“பாருங்கத்தை! எல்லாத்துக்கும் என்னையே சொல்றார்!”

“ம்மா… ம்மா… சீக்கிரம் சமாதானம் ஆகிட்டு ஹாலுக்கு கிளம்பு! வந்துடறேன்.” என்றவன், பிரபஞ்சனிடம், “நம்ம ரெக்கொயர்மென்ட்ஸ் எல்லாம் சொல்லி கேட்டிருந்தேன். சிமிலரா உள்ள சில வில்லாஸ் காட்டினார். ஃப்ரீ டைம்ல பார்த்து வைங்கப்பா!” எனச் சொல்லிவிட்டு அர்ஜூனுடன் தன்னறைக்கு வந்தான்.

கதவைப் பூட்டியவன் அர்ஜூனின் சுணங்கிய முகத்தைக் கணக்கில் கொள்ளாமல், அவன் பின்னங்கழுத்தைப் பிடித்துக் கட்டிலில் தள்ளினான்.

அதில் அவன் அதிர்ந்து பார்க்க, சீற்றத்துடன் இரைந்தான். “எல்லாருமா சேர்ந்து என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?”

“சொல்லிட்டாளா?”

“சொன்னா! அவ ஒரு கிறுக்கச்சின்னு சொன்னா! சஞ்சுவைப் புருஷனா நினைக்கறதா சொன்னா! நீ என்னைத் தேடினப்போ ரிசல்ட்ல நான் உயிரோட இல்லைன்னு வந்திருந்தா அவக்கிட்ட, ‘நௌ யூ ஆர் அ விடோ!’ன்னு சொல்லிருப்பியாடா?” அண்ணனிடம் அத்துணை ஆக்ரோஷத்தை இவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

அர்ஜூன் மௌனமாக இருந்தான். மனதில் ஒருவித அமைதி பரவியது.

“சத்தியமா என்னால முடியல அர்ஜூன்! ஹௌ டூ ஐ ஃபிக்ஸ் திஸ்’டா?” ஓரிடத்தில் நில்லாமல் இத்தனை நேரம் மறைத்து வைத்திருந்தப் பதற்றத்தைக் கொட்டிக் கொண்டிருந்தான்.

“பை மேரி ஹர்…”

“தூக்கிப் போட்டு மிதிச்சிடுவேன் இடியட்! அவ மனசைப் பத்தி கொஞ்சமும் யோசிக்கல நீ!”

சிறு புன்னகை சிந்தினான் அர்ஜூன். “தாங்க்ஸ்! எங்கே நீ செல்ஃபிஷ்ஷா இருப்பியோன்னு நினைச்சேன். இப்போதான் சனாவுக்கு உன்னைக் கட்டி வைக்கணும்ன்ற தாட் ஸ்ட்ராங் ஆகுது!”

“அடிங்! டெஸ்ட் வைக்கறியாடா நாயே? அதுக்குத்தானே என்னைப் பேச அனுப்பிருக்க? எல்லாருமா சேர்ந்து பாசம்ன்ற பேர்ல ஒரு பொண்ணோட மனசையும் வாழ்க்கையையும் நாசம் பண்ணி வச்சிருக்கீங்க அர்ஜூன்!” என்றவன் இன்னும் சில பல கன்னட கெட்ட வார்த்தைகளை எடுத்துவிட,

தம்பிக்காரனுக்கு பாவனாவின் நினைவு! ‘இவனுக்கு பானுவே தேவலாம் போலருக்குது… அர்ஜூன் அர்ஜூன்னு சொல்லி… ஹய்யோ அந்த க்யூட் லிப்ஸால…’

பின்னந்தலையில் படீரென விழுந்த அறையில், அர்ஜூனின் கற்பனையிலிருந்த ‘க்யூட் லிப்ஸ்’ ‘ம்யூட் லிப்ஸாகிப்’ போக, தலையைத் தடவிக்கொண்டு கேட்டான்.

“இப்போ என்னடா அவளுக்கு உன்னைத் தானே பிடிச்சிருக்குது?”

“என்னை இல்லை! சஞ்சுவை!”

‘ஆத்தாடி பைத்தியமா இவன்?’ எனும் நிலைக்கு போய்விட்டான் அர்ஜூன்.

“ரெண்டு பேருமே நீதானேடாவ்..?”

இசைக்கும்💝🎉…

 

ரொம்ப பெரிய எபிசோட்’ங்க! படிச்சிட்டு உங்க கருத்துக்களைச் சொல்லுங்க🫶✨

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. ஆமா என்னடா எபிசோட் போயிட்டே இருக்கேன்னு பார்த்தேன் .. எதுக்கு அக்னி டென்ஷன் ஆகுறான் .. அக்னி மட்டும் சந்தனாவை பார்த்ததும் காதல் பண்ணி .. அவ வேற யாரையோ காதலிக்கிறான்னு ஃபீல் பண்ணி .. மறக்க முடியாம கஷ்டப்பட்டான்ல .. சனா காதல் அவளுக்கு பெருசு தான் .. அந்த காதல் தான் அக்னியை இவங்க கூட சேர்த்து வச்சிருக்குன்னு கூட சொல்லலாம் .. அர்ஜுன் சேட்டை தான 🤣🤣🤣🤣🤣 .. எப்போ பார்த்தாலும் லவ் மோட் .. அண்ணிக்கு லவ் லெட்டர் கொடுத்து .. இப்போ பாவி யை கரெக்ட் பண்ணி 😜😜😜😜

    இதுல நிர்மா தான் அக்னியை பத்தி தெரிஞ்சா என்ன சொல்லுவாங்க தெரியல ..

    1. Author

      ஊக்கமளிக்கும் கருத்திற்கு மிக்க நன்றி சிஸ் 💝🎈 அதானே நிர்மலா சஞ்சுவை அண்ணன் மகனாகவே ஏத்துக்காதவங்க. எப்டி மருமகனா ஏத்துக்குவாங்க? 😅😅

  2. யாரும் சொல்லியிருக்கவில்லை என்றால் காலப்போக்கில் மறந்துபோயிருக்க கூடியது.

    நிர்மலாவின் வெறுப்பு வழி, தாத்தாவின் ஏக்கம் வழி, அனுவின் அன்பு வழி என சஞ்சுவை அனுவின் விழிவழி பார்த்து மனதில் பதிந்துகொண்டுள்ளனர்.

    அக்னி கடினப்பட்டு உணர்வுகளை கட்டுப்படுத்திய காரணம் விழிவழி காதல் கடத்தப்படாமல் போய்விட்டதே.

    “சந்தனம் குங்குமமாய் சிவந்தது”

    “நடுக்கமேறிய நாணம்” 😍

    “இதழ்கள் இனிய பிரிவை சந்தித்து மீண்டும் இணைந்தன”👏🏼

    மனிதர்களை படிக்க தெரியாதவர்கள் ஒரு வகை ஆபத்து, கண்ணிமைகளை கூட படிப்பவர்கள் வேறு வகை ஆபத்து. உண்மை தான். ❤️

    “சஞ்சுவின் மனைவி” என்று கண்பார்த்து கூறிய அவனது சந்தனமாரியின் வார்த்தை மனதை குளிர்விக்காமல், சிறுபிள்ளை மனதில் இப்படி உருப்போட வைத்துள்ளனரே என்று தகிக்க செய்துவிட்டது.

    பாவம் சனா crush um கசந்ததம்மா ஆகிட்டது. 🤭

    கனவில் மிதந்தவனை தலையில் தட்டி தரை இறக்கிட்டான் அக்னி.

    Cute lips bcm Mute lips ✨

    குட்டி குட்டி sparks எழுத்துக்கள்ள அழகா இருக்கு. ❤️

    1. Author

      //நிர்மலாவின் வெறுப்பு வழி, தாத்தாவின் ஏக்கம் வழி, அனுவின் அன்பு வழி// மிகவும் புரிதலான கருத்து🌿🪻 வழக்கம்போல் மனதை நிறைக்கிறது. நன்றி சிஸ்💝🎈