
அத்தியாயம் 26
சந்தனாவுடன் தன்னைக் காண வந்த அக்னிஸ்வரூபனை கலியபெருமாள், “சஞ்சு!” என்றழைக்க, திடுக்கிட்டு போனான் அவன்.
“தாத்தா, இவர் நம்ம சஞ்சு இல்லை!” என்றாள் சந்தனா.
அவளைச் செவிமடுக்காதவர், மெதுமெதுவாக தன்னை நெருங்கி வந்தவனிடம், “வாடா வாடா சஞ்சு! தாத்தாவை விட வளர்த்தியா இருக்கியேடா… குனி!” என்றிட, அவர் முன் குனிந்து நின்றான்.
அவன் முகம் முழுவதும் சுருக்கம் விழுந்த தன் இரு கரங்களால் வருடினார். ஒரு காலத்தில் இவன் தொட்டுவிட்டால் தீட்டு என்று சட்டையைக் கழற்றி எறிந்த அதே மனிதர்!
சஞ்சய்யின் எரிந்த நினைவுகளெல்லாம் ஃபீனிக்ஸானது. உள்ளம் நடுங்க விழி மூடிக்கொண்டவனின் இமைகள் ஈரமானது.
தாத்தாவிற்கு வளர்ந்து நிற்பவனின் மேல் வன்மம் தளர்ந்துவிட்டதோ!
அவன் இரு தோள்களையும் பிடித்துக்கொண்டவர், “உனக்கு செஞ்சதைத் திருப்பி செஞ்சிடு சஞ்சு. ஆனா எனக்கு நல்ல கதியை மட்டும் கொடுத்திடுடா அப்பா.” எனக் கண்களில் நீர் வழியக் கேட்டவர் கட்டியிருந்த வேஷ்டியை அவிழ்க்க, அருகே தயாராக நின்றிருந்த இரு சிற்றூழியர்கள் ஓர் அதட்டலுடன் அவரைப் பிடித்துக்கொண்டனர்.
அவர்களிடம் தான் பார்த்துக் கொள்வதாகக் கண்ணசைத்தவன், அவரை விடுவிக்கச் செய்தான். சஞ்சுவிற்கு தாத்தாவின் இந்த அணுகுமுறை அதிர்ச்சிதான்! அவர் நல்ல மனநிலையில் இல்லை என்பதும் புரிந்தது.
“தாத்தா அவர் நம்ம சஞ்சு இல்லைன்னு சொல்றேன்ல?” என்றவளின் குரல் அவர்கள் இருவரின் உலகிற்குள்ளும் நுழையவில்லை.
“உன்னைச் சாக்கடைன்னு சொன்னதுக்காக இந்த தாத்தாவை மன்னிச்சிடுடா சஞ்சு… நீ சாக்கடை இல்லை; சந்தனத்துக்கு உகந்தவன்!” என படபடவென அவன் கைப்பிடித்துச் சொன்னவர், அவன் காலிலும் விழத் தயாராக,
“தாத்தா!” என்ற அதட்டலுடன் சந்தனா அவரை நிமிர்த்தி, அவர் கரத்தை சஞ்சய்யின் கரத்திலிருந்து பிரித்துவிட, இப்போது அவர் அவளின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்.
“நீ போனதுக்கப்புறம் பாஸு கண்ல ஜீவனே இல்லை சஞ்சு. நான் செஞ்ச பாவம்தான் என் பிள்ளையைப் பிடிச்சு ஆட்டுது. உன்னால முடிஞ்சா தாத்தாவை மன்னிச்சிடுடா… என் பிள்ளை சந்தோஷத்தை மீட்டுக் கொடுத்துடுடா…” என்றவர் பேரனின் முன் கூனி குறுகி நின்றார்.
அவரின் தோள்களைப் பிடித்து நிமிரச் செய்தவன், வருந்த வேண்டாமென பிடித்த தோள்களில் சிறு அழுத்தம் கொடுத்தான். அவனுக்குதான் பேச்சே எழவில்லையே!
“நீ… நீ… பத்திரமா இருந்தியா சஞ்சு? எங்கே இருந்த’ன்னு நான் கேட்கலாமா?” இந்தக் கேள்வி கேட்க நான் தகுதியற்றவன் என்ற உணர்வு முகம் முழுவதும் வியாபித்திருக்க, தலையைக் குனிந்தபடி கேட்டார்.
“பேங்களூர்ல இருந்தேன்.” என்றவனின் குரல் கமறியது.
“ஹ…” என்றோர் ஒலியெழுப்பியவர் மூச்சு வாங்கிக்கொண்டு, சந்தனாவின் கையை விடுவிக்காமல் அவளிடம் சொன்னார். “சந்தனம், அவன் அந்த வயசுலேயே அவனோட அம்மாவுக்காக ஆலமரத்தோட அடிவேர் மாதிரி எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தான். அதனாலதான் அவனைச் சந்தனத்துக்கு உகந்தவன்னு சொல்றேன். அப்படிப்பட்டவன் நிச்சயம் இப்போ ஒரு நல்ல மனுஷனா தான் இருப்பான். நீ தாத்தாவை நம்பற இல்ல?”
அக்னியைச்(?) சங்கடத்துடன் பார்த்தாள் அவள். “தாத்தா ப்ளீஸ்… நான் சொல்றதைக் கேளு…” என அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல,
அவர் மீண்டும் அவனிடம் திரும்பினார். “சாகறதுக்கு முன்னாடி உன்னைப் பார்த்து மன்னிப்பு கேட்கணும் நினைச்சேன். பார்த்துட்டேன் சஞ்சு. ஆனா தாத்தாவுக்கு ஒரு ஆசைடா…”
“தாத்தா!” பல்லைக் கடித்தாள் பேத்தி.
“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?”
இல்லையெனத் தலையசைத்தான் பேரன்.
“ஆங் நல்லது! நீ சந்தனத்துக்கு உகந்தவன்னு சொன்னேனா… என் வாநாள் (வாழ்நாள்) ஆசைடா இது! உனக்காக தாத்தா என் பேத்தி சந்தனத்தைக் கொடுக்கறேன். நல்லபடியா பார்த்துக்கறியா அவளை? அவளோட இருந்தா வாசமா இருப்பே… உன் வாழ்க்கை முழுசும் வாசமா இருக்கும்… பார்த்துக்கறியா?” ஆதுரமாகக் கேட்டவர், தன்னிடமிருந்த சந்தனாவின் கரத்தை பேரனின் புறம் நீட்டினார்.
அவன் அவளைப் பார்க்க, கண்களால் வேண்டாமென்றாள் அவள்.
வேண்டாமென்ற அந்தக் கண்களைப் பார்த்தபடியே அவள் கரத்தை இறுக்கிக்கொண்டவன், “பார்த்துக்கறேன் தாத்தா!” என்றான்.
“அக்னி…” என ஆட்சேபித்தவளின் விரல்களில் அழுத்தம் தந்தான்.
“சந்தனம்!”
“சொல்லு தாத்தா!”
“சஞ்சுவை நல்லா பார்த்துக்கோ! அவன் விரலைக் கெட்டியா பிடிச்சுக்கோ! இல்லைன்னா அவனைப் பூச்சாண்டி தூக்கிட்டு போயிடுவான்.” எனவும்,
சஞ்சய்யின் கண்கள் மழுக்கென்று கண்ணீரைப் பிரசவித்தது. சந்தனா பார்க்கும் முன் விழி சிமிட்டி அதனைத் துரத்தினான்.
ஆயாசமாக, “ச்சு உளறாதே தாத்தா! இவர் நம்ம சஞ்சு…” என்றவளை இடையிட்டு சொன்னான் அவன்.
“நான் பிடிச்சுக்கறேன் தாத்தா. நீ நிம்மதியா இரு!”
“என்னை மன்னிச்சிட்டியாடா? இந்தக் கிழவனை மன்னிச்சிட்டியா? உன்னைத் துரத்திவிட்டதும் எனக்கு பைத்தியமே பிடிச்சிடுச்சுடா சஞ்சு! எங்கே பார்த்தாலும் நீதான் வந்து நிற்கற… அனு வேற அர்ஜூனைக் காட்ட மாட்டேனுட்டா… அவக்கிட்ட சொல்லி அர்ஜூனைக் காட்ட சொல்றியா?”
“இதோ இப்பவே அர்ஜூன் வருவான்.” என அலைப்பேசியை உயிர்ப்பிக்க,
“ஸ்வரூப்! தாத்தாவுக்கு அர்ஜூன் வளர்ந்துட்டான்றதே தெரியாது. அவனை இன்னும் அஞ்சு வயசு குழந்தையா நினைச்சிட்டிருக்கார்.” என்று வேதனையுடன் உரைத்தாள் சந்தனா.
நம்ப இயலாமல் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“ம்ம்!” என கண்மூடித் திறக்க, பெரியவர் தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தார்.
“உங்க பாட்டி கூட என்னை கோவிச்சுக்கிட்டு, என்னைத் தனியா தவிக்கவிட்டு போயிட்டா சஞ்சு. உங்கப்பன் என்னை அவன் வீட்டுக்கு கூப்பிட்டான்தான்… ஆனா அவன் பிள்ளையைத் தொலைச்சிட்டு அவன் வீட்டிலேயே உட்கார்ந்து எப்டிடா என்னால ஒரு வாய் சோறு சாப்பிட முடியும்? அனு நல்லப் பொண்ணுதான்… ஆனா ஒருநாள் ஒருபொழுது என் பிள்ளையைத் தொலைச்சவன்னு சொல்லிக் காட்டிட்டா என் உசுர் அங்கேயே போயிடாதா?”
தாத்தாவின் தேம்பலில் சந்தனாவிற்கும் அழுகை வந்தது. அழுதுகொண்டே சொன்னாள். “அனு அத்தை அப்டியெல்லாம் சொல்ல மாட்டாங்க தாத்தா. ரொம்ப நல்லவங்க! நம்ம அர்ஜூன் இப்போ பெரியவனா வளர்ந்துட்டான். சீக்கிரமே சஞ்சுத்தானைக் கண்டுபிடிச்சிடுவான். நீ பாஸ் மாமா வீட்டுக்கு வா தாத்தா!”
“இங்கே இருக்கறவனை எதுக்குடி கண்டுபிடிக்கணும்?”
தன் உளறலில் அவள் விழிக்க, “நான்தான் இப்போ வந்துட்டேன்ல தாத்தா? நீ வீட்டுக்கு வாயேன்…” என்றான் சஞ்சய்.
“ப்ச்! வேணாம்டா. நீ என்னை மன்னிச்சதே போதும். இந்தப் பைத்தியம் இனி செத்து சுண்ணாம்பா போனாலும் சந்தோ…ஷமா போகும்டா. உனக்கு என் மேல கோபமிருந்தா உனக்கு செஞ்ச மாதிரி திருப்பி செஞ்சிடு சஞ்சு!” என்று கைக் கூப்பியவரின் விழிகள் விடாது கண்ணீர் மழைப் பொழிந்தது.
கூப்பிய கரங்களை இறக்கிவிட்டான். “உனக்கு ஒண்ணுமில்லை தாத்தா. எனக்கு உன் மேல கோபமில்லை. நீ இவ்ளோ வருத்தப்பட தேவையுமில்லை.”
அலைபாய்ந்து கிடந்த அவரின் ஆன்மா அவனின் அந்த சில வார்த்தைகளில் அமைதியுற்றது. பெருமூச்சுடன் அங்கிருந்த இருக்கையில் கண்மூடி அமர்ந்துகொண்டார்.
“தாங்க்ஸ் ஸ்வரூப்!” என்ற சந்தனா, தன் கரத்தை அவனிலிருந்து விடுவித்துக்கொண்டு தாத்தாவினருகே மண்டியிட்டு அமர்ந்தாள்.
“தாத்தா, சஞ்சுத்தான் தான் வந்துட்டானே… இப்போ நீ அவி கல்யாணத்துக்கு வரலாம்ல?” எனக் குழந்தையிடம் பேசுவதைப் போல் கேட்டாள்.
“இவன் உன் கழுத்துல தாலி போடும்போது வர்றேன் சந்தனம்.” என்று தீர்மானமாய்ச் சொன்னவர் எழுந்து உள்ளே போய்விட்டார்.
பேத்தியும் போகும் அவரைக் கவலையாக பார்த்துவிட்டு எழுந்துகொண்டாள். இருவரும் காரிடாரில் நடந்தனர்.
“தாத்தா இவ்ளோ பேசி நான் இன்னிக்கு தான் பார்க்கறேன். அவர் மனசுல என்ன இருக்குதுன்னு எங்க யாருக்குமே இதுவரை தெரியாது. டாக்டர்க்கு கூட ஒழுங்கா கோ-ஆபரேட் பண்ணமாட்டார். எப்போ வந்தாலும் சஞ்சு கிடைச்சுட்டானா? அர்ஜூனைப் பார்க்கணும் கூட்டிட்டு வான்னு தான் சொல்லுவார்.”
மௌனமாக இருந்தான் அவன்.
“நீங்க ஏன் பொய் சொன்னீங்க ஸ்வரூப்?”
“நம்மளோட ஒரு வார்த்தையால அவரோட இத்தனை வருஷத்து மனக்கலக்கம் தீரும்ன்னா அதைச் சொல்றதுல தப்பில்லை. வா!” என்றுவிட்டு மகிழுந்தை எடுக்கப் போய்விட்டான்.
ஓட்டுநர் இருக்கையில் வந்தமர்ந்தவன் தலையை இரு கரங்களாலும் அழுத்தமாகப் பிடித்துக்கொண்டான். தாத்தா எப்படி தன்னைக் கண்டுகொண்டார்? அவர் இவனை சஞ்சு என்றழைக்கையில் சந்தனா அதிரவேயில்லையே! ஏன்?
தான் எப்போதோ அந்த இருண்ட, கசப்பான அனுபவங்களில் இருந்து வெளிவந்து விட்டதாக நினைத்திருக்க, அப்படியில்லை என்று இந்த சிறிது நாட்களில் புரிந்திருந்தது. அதுவும் தாத்தாவும் அவரின் இப்போதைய மாற்றமும் இவனுள் பெரும் பிரளயத்தை தான் ஏற்படுத்திவிட்டது.
அதற்கு எதிர்வினையாற்ற முடியாமல் அத்தனை உணர்வுகளையும் அடக்கிக்கொண்டு சந்தனாவின் முன் வேற்று மனிதனைப் போல் நின்றதுதான் கொடுமையாக இருந்தது. ஏசியை அதிகமாக வைத்து, காரிலிருந்த ஈர காகிதத்தால் (face wipes) முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டவனுக்கு, தாத்தா அவள் கரத்தைத் தன்னிடம் கொடுத்தபோது அவள் முகம் போனப் போக்கை நினைத்து குபீரென சிரிப்பு கிளம்பி இத்தனை நேர அழுத்தத்தையும் துரத்திவிட்டது.
உண்மையிலேயே இவன்தான் சஞ்சு என்று தெரிய வரும்போது எப்படி உணர்வாளோ!
மகிழுந்தை எடுத்தவன் வாசலில் நின்ற அவளை ஏற்றிக்கொண்டான். எதையோ நினைத்து வருந்துபவளைப் போல் வெளியே இருந்த கூட்டத்தைப் பார்த்திருந்தாள் அவள்.
“எப்போ இருந்து இப்டி இருக்கார்?” எனக் கேட்டு அவள் கவனம் கலைத்தான்.
“எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்தே இப்டித்தான் இருக்கார்.”
“ஏன்?”
சிறிது யோசித்தாள் சந்தனா. எப்படியும் நாளை தங்கள் குடும்பத்தில் இணையும் போது பிரகதிக்கு இதெல்லாம் தெரிய வரத்தான் செய்யும். அதனை அவள் அவளின் பிறந்த வீட்டில் சொல்லலாம். அத்துடன் தாத்தா வேறு இவனிடம் இவ்விதம் நடந்துகொண்டிருக்கிறார். இவனும் அனுசரணையான மனிதனாகவே தெரிகிறான். ஆக, தான் அக்னியிடம் தங்கள் சஞ்சுவைப் பற்றி சொல்வதில் பாதகமொன்றுமில்லை என்று நினைத்தாள்.
“அர்ஜூனுக்கு அண்ணன் ஒருத்தன் இருக்கான்.”
“ம்ம்! ஃபாரின்ல இருக்கறதா சொன்னாங்களே…”
“உங்கக்கிட்ட சொல்றதுல ஒண்ணுமில்லைன்னு நினைக்கறேன். அவன் ஃபாரின்ல இல்லை. சின்ன வயசுல காணாம போயிட்டான்.”
“ஓ! எப்டி?”
“சரியா தெரியல. தாத்தா ஒருமுறை மனசு சரியில்லாதப்போ, சஞ்சுவைக் கோவில்ல தொலைச்சிட்டதா பாஸ் மாமாகிட்ட சொன்னாராம். ஆனா அனு அத்தை அதை நம்பல. அவன் காணாம போனதுல ஷீ சஃபர்ட் ஃப்ரம் டிமென்ஷியா! வளர வளர எங்களுக்கு அத்தையைப் புரிஞ்சது. அவங்களும் அர்ஜூனையாவது சரியா கவனிச்சுக்கணும், நல்லபடியா வளர்க்கணும்னு தன்னோட மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செஞ்சாங்க. ஆனா சஞ்சுவை மறக்கலை! இப்போ வரை அத்தை மெடிசின் எடுத்துக்கறாங்க. மெடிடேஷன் செய்றாங்க. இல்லைன்னா மறுபடியும் அவங்க மனசு குழம்ப ஆரம்பிச்சிடும். சஞ்சுவை நினைச்சு ஏங்க ஆரம்பிச்சிடுவாங்க!”
நேற்று அர்ஜூன் அம்மாவை, ‘மாத்திரை போட்டாயா? தியானம் செய்தாயா?’ என்றெல்லாம் கேட்டதற்கு பின்னால் தான் தான் இருக்கிறோம் என இக்கணம் புரிந்தது. தாத்தாவைக் கூட இலகுவாக எதிர்கொண்டவனுக்கு அம்மா என்றால் மட்டும் படபடவென வந்துவிடுகிறது. சந்தனாவின் பக்கம் திரும்பவே இல்லை. மெதுவே காரை செலுத்தியவன் வாழ்க்கையில் முதன்முதலாக சாலையில் நீண்டு கிடக்கும் கூட்டத்திற்கும் சிக்னல் காத்திருப்பிற்கும் நன்றி சொன்னான்.
“அவன் மேல அவ்ளோ பாசமா?”
“என்ன அக்னி… எந்த அம்மாவுக்கு தன் குழந்தை மேல பாசமில்லாம போகும்?”
“ம்ம்! தாத்தா?”
“தாத்தாவுக்கு சஞ்சுவைப் பிடிக்காது. நிறையக் கொடுமைப்படுத்தினதா சொல்லுவாங்க. ஆனா அவருக்கு அர்ஜூன்னா உயிர்! சஞ்சுத்தான் காணாம போன சமயம் சஃபர் ஆனது அனு அத்தை மட்டுமில்லை; தாத்தாவும்தான்! ஏன்னா அவரால தான் என் பிள்ளை காணாம போச்சுன்னு சொல்லி அத்தை அர்ஜூனைத் தாத்தாகிட்ட காட்டமாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். அதுல அவர் ரொம்ப மனசொடிஞ்சு போயிட்டார்.”
“அவருக்கு ஏன் சஞ்சுவைப் பிடிக்கலை?”
சிறிது தயங்கிவிட்டு சொன்னாள்.
“உங்களுக்கு ஃபர்ஸ்ட்ல இருந்து சொன்னாதான் புரியும். சஞ்சுத்தான் சரகஸில பிறந்தவன். தாத்தா பழைய ஆள் இல்லையா? அவரால அதை ஏத்துக்க முடியலை. அத்தை அப்போவே ஐடி ஃபீல்ட்ல ஆன்ஸைட், ஃபாரின் ஃப்ரெண்ட்ஸ்ன்னு இருந்தவங்க.” என்றவள், “நான் சொல்ற சூழல் உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கறேன் அக்னி.” என அவன் முகம் பார்த்தாள்.
“ம்ம்!” என்று ஆமோதிக்க,
மீண்டும் சாலையைப் பார்த்தபடி அவள் தொடர்ந்தாள். “அதனாலதான் தாத்தாவுக்கு சஞ்சுவைப் பிடிக்கலை. அவனை ஸ்குவாலிட் கிட்’ன்னு நினைச்சவர் சின்னக் குழந்தைன்னு கூட பார்க்காம அவன்கிட்ட கடுமையா நடந்துக்கிட்டதா சொல்லுவாங்க. இதோ இப்போ தாத்தாவும் அப்டி தான் ஏதோ சொல்றார்.” என்றவள், தாத்தா சஞ்சுவிற்கு குழந்தை என்றும் பாராமல் ஏதோ பெரிதாக செய்துள்ளார் என்று நினைத்து வருந்தினாள். அதை அக்னியிடம் சொல்லவில்லை. அது தன் தாத்தாவை அவனிடம் விட்டுக்கொடுப்பதாக ஆகுமே!
இருளில் ஆளில்லா சாலையில் திருநங்கைகள் துரத்தி வர, தன்னந்தனியாக ஓடிய ஓட்டத்தை எண்ணி இவனுக்கு சிறு வயதில் பலமுறை பயத்தில் உடல் தூக்கிப் போட்டிருக்கிறது. பதின்பருவத்தில் அந்த பயங்கள் படிப்படியாக குறைந்து, கல்லூரியை எட்டும்போது ஒன்றுமில்லாமல் போனாலும் வடுவாய், கசடாய் படிந்துவிட்டதே!
அவள் சொல்வதைக் கேட்டவன் மீண்டும் முகத்தை வெளியில் தெரிந்த கூட்டத்திடம் திருப்பி, ஆழ்ந்த மூச்சுடன் மனதின் அழுத்தத்தை வெளியேற்ற முயன்றான்.
“அர்ஜூனைக் கூட சஞ்சுவோட சேர விடமாட்டாராம். இன்ஃபாக்ட் என்னையும் அந்த மாதிரி செஞ்சதா எனக்கே கூட லைட்டா ஞாபகம் இருக்குது.”
‘நீ என்னைக் கிஸ் பண்ணதெல்லாம் எனக்கும் ஞாபகம் இருந்து தொலையுதேடீ.’
தொண்டையைச் செருமிக்கொண்டான். “உங்கத்தை செஞ்சது தப்பில்லையா? அப்போவே சரகஸிக்கு போகவேண்டிய அவசியம் என்ன வந்தது?”
அவள் குரல் ஸ்திரத்துடன் சிறிது உயர்ந்தது. “இதுல என்ன தப்பிருக்குதுன்னு சொல்றீங்க அக்னி? கேளுங்க, அத்தை ஐடி ஃபீல்ட்ன்னு சொன்னேன் இல்லையா? அவங்களுக்கு அதுல எக்கச்சக்க டேலண்ட்ஸ்! 2000ல ஐடி’யே எவ்ளோ பெரிய விஷயம்? அதுல பொண்ணுங்க அச்சீவ் பண்றதெல்லாம் சாதாரண விஷயமில்லையே… ஸோ, கெரியர்தான் ஃபர்ஸ்ட்ன்னு மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிட்டு கல்யாணம் வேணாம்னு இருந்தாங்களாம்.” என்றவள், பாஸ்கரன் அனுவை எப்படி திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தானென்றும், அதன்பின் வீட்டிலுள்ளவர்கள் குழந்தைக்காக அவளையும் அவனையும் எப்படி நெருக்கி தள்ளினார்களென்றும் சொன்னாள்.
“இதெல்லாம் எனக்கெப்டி தெரியும்னு நினைக்கறீங்க? ஒரு வாட்டி அர்ஜூன் சொல்லாம கொள்ளாம ஃப்ரெண்ட்ஸோட அவுட்டிங் போயிட்டான். அன்னிக்கு நைட்டெல்லாம் மாமா அவனைத் தேடி, எங்கே இந்தப் பையனையும் தொலைச்சிடுவோமோன்னு ரொம்ப டிப்ரெஷனாகி, லீவுக்கு போயிருந்த என்கிட்ட பழைய கதையெல்லாம் சொன்னார். எனக்கே அத்தையோட பக்கம் அப்போதான் முழுசா புரிஞ்சது.”
“உங்கத்தை அப்டியென்ன அச்சீவ் பண்ணாங்க?” எதனாலோ தூண்டப்பட்டவன் போல் கேட்டான்.
சந்தனா தன் அத்தையின் பெருமைகளைப் பேசும் மும்முரத்தில் இவன் முகத்தைப் பார்க்கவில்லை. “அப்போவே… அதுவும் வெறும் நாலஞ்சு வருஷத்துலயே மேனேஜர் போஸ்ட் அச்சீவ் பண்ணிட்டாங்களாம். என்னோட எத்தனையோ ஐடி ஃப்ரெண்ட்ஸைப் பார்த்திருக்கேன் அக்னி. அவங்க வாழ்க்கைல பாதிநாள் ஸ்ட்ரெஸ்ல தான் போகும். ஃபேமிலி, ஐடி ஜாப்ன்னு ரெண்டையும் ஹேண்டில் பண்றதுலாம் எவ்ளோ பெரிய விஷயம்! அப்டியும் இங்கே அத்தையை அவ்ளோ டார்ச்சர் பண்ணிருக்காங்க. எப்பவும் பொண்ணுங்களுக்குதான் கஷ்டமெல்லாம்! ஐடி பொண்ணுங்க கல்யாணமே பண்றதில்லயான்னு கேட்கலாம். ஆனா அத்தையை மாதிரி அந்த வேலையை நேசிக்கறவங்க, திறமையுள்ளவங்க கெரியரைத் தான் ஃபர்ஸ்ட் சூஸ் பண்ணுவாங்க அக்னி!”
“அதுக்காக குழந்தை வேணாம்ன்னு சொல்லுவாங்களா?”
பாஸ்கரன் சொன்னது மட்டுமல்லாமல், தன் அம்மாவும் சித்திப்பாட்டியும் அத்தையைப் பேசுவதைப் பார்த்து வளர்ந்திருக்கும் சந்தனா, ‘இவர்களெல்லாம் அக்காலத்தில் வேலையில் கவனம் செலுத்தவிடாமல் தன் அத்தைக்கு எத்தனை அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பார்கள்’ என்று அவள் வயதிற்கேற்ப, அவள் பார்வையில் அனுவிற்காகப் பேசினாள்.
“அதுக்காக எங்கத்தையைத் திமிர்பிடிச்சவ ரேஞ்சுக்கு பேசினதெல்லாம் என்ன நியாயம்? அதுவும் அத்தை குழந்தை வேணாம்ன்னு சொல்லல! கொஞ்சம் டைம் கொடுங்கன்னு தான் கேட்ருக்காங்க. நீங்க சொல்லுங்க, கல்யாணத்தை விட, குழந்தையை விட கெரியர்தான் முக்கியம்ன்னு சொல்ற பொண்ணுங்களை அரகண்ட்ன்னு சொல்லுவீங்களா மிஸ்டர் அக்னி?
“ஹோல்ட் ஆன்! ஹோல்ட் ஆன்! டாபிக் மாறி ஃபெமினிஸம் பேசிட்டிருக்க நீ!”
“ஹ! நீங்களும் ஆம்பிளைதானே? அதான் அடிப்படையான ஒரு விஷயம் கூட ஃபெமினிஸம் மாதிரி தெரியுது உங்களுக்கு!” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அவள் இவனிடம் இத்தனை தூரம் இலகுவாக பேசுவதிலும், அழகாக கோபித்துக் கொள்வதிலும் இவனுள் ஓர் மெல்லிய வீணைநாதம் பரவியது. ஒவ்வொரு முறையும் தன் கடினமான மனநிலையைச் சுலபமாக மாற்றிவிடுகிறாள் மோசக் காதல்காரி!
“சரிடி… அப்புறம் என்னாச்சு சொல்லு!” என்றவனுக்கு, அர்ஜூன் ஏன் இவளுக்கு தன் அம்மாவைப் பிடிக்கும் என்றான் என இப்போது புரிந்தது.
“அப்புறமென்ன சஞ்சுவை வீட்ல சேர்த்துக்க மாட்டேன்னு ஒரு சண்டை! சேர்த்துக்கலைன்னா பாஸ் மாமாவைப் போலீஸ் பிடிச்சிட்டு போயிடுவாங்கன்னு சொல்லி தாத்தாவை சைலண்ட் பீஸாக்கிட்டாங்க போல!” என்றவள் மேலும் அவனுக்கு தெரியாத, அந்த வயதில் புரியாதிருந்த பல பழங்கதைகளைச் சொன்னாள்.
“அப்புறம் சஞ்சுத்தானுக்கு முழுசா எட்டு வயசு கூட முடியாதப்போ அத்தையோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு அத்தையும் மாமாவும் திண்டுக்கல் போயிருந்த சமயம் அவன் காணாம போயிட்டான். தாத்தா தான் காரணம்ன்னு திரும்ப ஒரு சண்டை! போலீஸ்! கேஸ்! ஆனா அப்போவும் எல்லாரோட விரல்களும் அத்தையை நோக்கியே தான் இருந்திருக்குது.” என்றவளின் குரலில் வருத்தம் மிகுந்து, ஸ்ருதி குறைந்திருந்தது.
வெளிப்புறம் பார்த்தபடி முகம் துடைப்பதைப் போல் கைக்குட்டையால் கண்களையும் துடைத்துவிட்டு குரலைச் செருமிக் கொண்டு கேட்டான். “ஏன்?”
“குழந்தை வளர்க்கவே லாயக்கில்லாதவ! வேலைக்காக குழந்தை வேணாம்ன்னு சொன்ன… இப்போ அதுவும் உன்னை வேணாம்ன்னு சொல்லிட்டு போயிடுச்சு; அவன் இருந்திருந்தாலும் உன்னால ஒரு நல்ல அம்மாவா இருந்திருக்க முடியாது; ப்ளா ப்ளா… பேசி ரொம்ப நோகடிச்சு அவங்களை டிப்ரெஷன்ல தள்ளி, லாஸ்ட்ல குற்றவுணர்ச்சி தாங்காம அத்தை எந்த வேலைக்காக ப்ரக்னென்ஸியைத் தள்ளி வச்சாங்களோ அந்த வேலையே வேணாம்ன்னு விட்டுட்டாங்களாம்.”
இவனுக்கு அம்மாவின் அல்லல்களைக் கேட்டு கலங்கிக் கொண்டேயிருந்த கண்களும், அடைத்துக் கொண்டேயிருந்த தொண்டையும் ஒரு கட்டத்தில் வலியெடுக்க ஆரம்பித்துவிட்டது.
“அத்தைக்கு அவங்க ஃபீல்ட் மேல வெறியே உண்டுன்னு மாமா சொன்னார். ஆனா அதுக்கப்புறம் அவங்க அதைப் பத்தி இன்னிக்கு வரை ஒரு வார்த்தை கூட பேசலையாம்!”
கார் சிக்னலை முறைத்திருந்த நேரத்தில் நீரருந்தி தொண்டையைச் சற்று ஆறுதல்படுத்தியவன், மனதில் கனம் ஏற்றிக்கொண்டான். ‘என்னை இந்த உலகத்துக்கு கொண்டு வந்து நீ தப்பு செஞ்ச! உன்னை விட்டுட்டு போய் நான் அதை விட பெரிய தப்பு செஞ்சுட்டேன்ம்மா!’
அவள் டேஷ் போர்டில் விழிகள் நிலைத்திருக்க, பால்யங்களில் லயித்திருந்ததால் இவன் தண்ணீர் குடிப்பதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. “எங்க அனு அத்தையோட ஸ்மைல் ரொம்ப அழகா இருக்கும் அக்னி. ஆனா அவங்க சிரிப்பைத் தொலைச்சிட்டு ஒரு யோகி மாதிரி இருந்த நாட்கள் அது! எனக்கு விவரம் புரிஞ்சப்போ அவங்களைச் சிரிக்க வச்சு பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கும். அதுக்காகவே நானும் அஜூவும் ஏதாவது சேட்டைப் பண்ணுவோம். சமயத்துல அவி அண்ணாவும் சேர்ந்துக்குவான்.” என்று வருத்த முறுவல் பூத்தாள்.
கார் மீண்டும் கூட்டத்துடன் கலந்தது. இவன் முகத்தைச் சீராக்கிக் கொண்டு அவளைப் பார்த்தான். இவளையே கல்லூரியில் கதாநாயகியாகப் பார்ப்பார்கள் என்று பிரகதி சொல்ல, இவள் தன் அம்மாவிற்கு கதாநாயகி அந்தஸ்து தந்திருக்கிறாள் என்று சிறு மகிழ்வூற்று இவனிடம்!
“ஸோ? உங்கத்தை மேல தப்பில்லன்னு சொல்ற?”
“அத்தையை மட்டும் ப்ளேம் பண்றது நியாயமில்லைன்னு சொல்றேன். அத்தை சரகஸிக்கு போனது தப்பில்லை அக்னி; கான்சீக்வன்ஸெஸை யோசிக்காம போனதுதான் தப்பு! இப்போ வரைக்கும் அத்தைக்கு யார் யார் எப்டின்னு புரிஞ்சிக்கற பக்குவமே கிடையாது. மெய்ட் கூட உன் தலைல சம்பல் அரைக்கறாங்கன்னு அஜூ திட்டிட்டே இருப்பான். அண்ட் பிடிவாதம்! சஞ்சுன்னு வந்துட்டா அத்தைக்கு அப்டியொரு அசாத்திய பிடிவாதம் வரும். இன்னஸென்ஸ் அண்ட் ஸ்டபர்ன்! இந்த ரெண்டும்தான் அவங்களோட மைனஸ்!”
‘மைனஸா இருந்தாலும் என் தங்க அம்மா’டீ!’
“ம்ம். அப்புறம்?”
“அனு அத்தைக்கு பாஸ் மாமா, நான், அவி, அர்ஜூன்னு எல்லாரும் உறுதுணையா இருந்தோம். ஆனா தாத்தா… அவர் எங்க யாரையுமே பக்கத்துல சேர்த்துக்கலை. மனசு விட்டு பேசலை! சஞ்சுத்தான் காணாம போய் கொஞ்ச நாள் நல்லாதான் இருந்ததா சொல்லுவாங்க. அப்புறம் பாட்டி டெத்!”
அக்னி புருவ சுளிப்புடன் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தான்.
“பார்த்திருப்பீங்களே எங்க சித்திப்பாட்டி? அவங்க எங்க பாட்டி இறந்ததும் பாஸ் மாமா கிட்ட வந்துட்டாங்க. தாத்தாவையும் கூப்பிட்டதுக்கு ஸ்ரீரங்கத்தை விட்டு வர மாட்டேனுட்டார். அனு அத்தை கூட மனசு மாறி கூப்பிட்டாங்க. இவர் வைராக்கியமா முடியாதுன்னு சொல்லிட்டார். ஆனா அவரைப் பார்க்க போகும்போது, ‘சஞ்சு இங்கே நிற்கறான்; அங்கே நிற்கறான். காப்பாத்துடா பாஸு’ன்னு அழுவார். சோ அங்கே தனியா இருந்து கஷ்டப்படறதையும் பார்க்க முடியலை. இங்கே மெண்டல் ஹெல்த்க்கும் ட்ரீட்மெண்ட் உண்டு. அதனாலதான் பாஸ் மாமா இந்த ஹோம்ல சேர்த்தாங்க. அதுவும் தாத்தாவுக்கு ஸ்லீப்பிங் பில்ஸ் கொடுத்து தூங்க வச்சுதான் இங்கே கொண்டு வந்தாங்க. அப்புறமும் டாக்டர்ஸ்க்கு ஒழுங்கா கோ-ஆபரேட் பண்ண மாட்டார். பேசாமலே அழுத்தமா நிற்பார்.”
“அவ்ளோ வருஷமும் இங்கேதான் இருக்காரா?” எனக் கேட்டவனுக்கு அடங்காத வியப்பு! இந்த மனிதருக்கு ஏன் இத்தனை வீம்பு!
“ஆமா! அனு அத்தை ஒவ்வொரு முறை இங்கே தாத்தாவைப் பார்க்க வரும்போதும் கூப்பிட தான் செய்வாங்க. வரமாட்டார்! இதென்ன வீம்பு? பிடிவாதம்ன்னு நானே கூட சில நேரம் சலிச்சு போயிருக்கேன். ஆனா அதுக்கான காரணம் இப்போ உங்கக்கிட்ட சொல்லும் போதுதான் எனக்கே தெரியுது ஸ்வரூப்!”
“ஒன் மேன் ஆர்மி உங்க தாத்தா.”
“அதென்னவோ உண்மைதான்! யூ க்நோ அக்னி, ஒவ்வொரு வருஷமும் சஞ்சுத்தான் இப்போ எப்டி இருப்பான்னு துல்லியமா சொல்லுவார். அது எப்டின்னு தான் தெரியலை. ஆனா அர்ஜூன் அர்ஜூன்னு உயிரை விட்டவருக்கு ஒரு ஸ்டேஜ்ல அவனையே அடையாளம் தெரியாம போனதுதான் ஆச்சரியம்!”
“புரியலை.” இவனுள் சிறு திகைப்பு.
“இப்போ கூட உங்களைப் பார்த்து வாடா சஞ்சுன்னு சொல்லல? இதே மாதிரி ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பையனைப் பார்த்து சஞ்சுன்னு கூப்பிடுவார். அதனாலதான் உங்களையும் அப்டி சொன்னப்போ நான் ஷாக் ஆகல.
அதுவும் எக்ஸாக்ட்டா சஞ்சுத்தான் வயசுப் பையனை மட்டும்தான் அப்டி கூப்பிடுவார். வேஷ்டியை ரிமூவ் பண்ணுவார். அதனாலதான் எப்பவும் ரெண்டு பேர் கூடவே இருப்பாங்க. இன்னிக்கு நீங்க சஞ்சுத்தான் மாதிரி பேசவும் மனசுல இருக்கறதெல்லாம் இவ்ளோ தூரம் வெளில வந்திருக்குது.”
“அர்ஜூனைத் தெரியாதா?” மனதைப் பிசைந்தது.
அவனுக்காக அல்லவா இவனைத் தூக்கியெறிந்தார்! இப்போது இவனின் படிப்படியான வளர்ச்சி தெரிகிறதாம்! ஆனால் அர்ஜூன் என்றால் கண்மூடிக் கொண்டு விஷத்தையும் அருந்துபவருக்கு அவனைத் தெரியவில்லையாம்!
கர்மா சகலத்தையும் கணக்கு வைத்துக்கொண்டு கழித்துக் கொள்ளுமோ!
“ம்ம், மத்த எல்லா விஷயத்துலேயும் ஓரளவு தெளிவா தான் இருப்பார். ஆனா அர்ஜூன்னு வந்துட்டா மட்டும் அவர் தோள்ல தூக்கி வச்சிட்டு நடக்கற குழந்தைதான்! அவனே நேர்ல வந்து நான்தான் அர்ஜூன்னு சொன்னா கூட அடையாளம் தெரியாது. ஆனா இப்பவும் அவன் பேரையே சொல்லிட்டிருப்பார். புத்தி பேதலிச்சு நிற்கும்போதும் தன் பேரையே சொல்றார்ன்னா, தன் மேல இந்த மனுஷனுக்கு எத்தனை பிரியம்ன்னு அர்ஜூனே கூட நிறைய நேரம் கலங்கிருக்கான்.”
“பாதெடிக்!”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. தாத்தாவுக்கு எத்தனை சொல்லியும் புரியலைன்னதும் அந்த ஹிப்போ, தான் அர்ஜூனோட தம்பி அஜய்ன்னு சொல்லி தினமும் வந்து அவரோட அரட்டையடிச்சிட்டு போவான். இப்போ தாத்தா பாஸ் மாமாவுக்கு மூணு பசங்கன்னு நம்பிட்டு இருக்கார்.”
“ஹ்ஹாஹாஹா….”
“பட் ஐ வொண்டர் ஸ்வரூப்! உங்களுக்கு எதுவும் தெரியலைன்னா கூட எப்டி அப்டியே எங்க சஞ்சுவாவே அடாப்ட் ஆகிட்டீங்க?” எனவும் இவனுக்கு பக்கென்றானது!
இவன் ரோபோவுக்கு ரோல்மாடலாக இருந்து, எங்கும் உணர்வுகளை வெளிக்காட்டவே இல்லையே… பின் எப்படி?
இவள் ஏன் இத்துணை பெரிய அறிவுவாளியாக இருக்கிறாள்!
இசைக்கும்🫶💫…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
7
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Sprrr waiting for next ud
Thank u 🍁🍂
சந்தனம் பெயர் பொருத்தம் அருமை .. எப்போ தான் அக்னி உண்மையை சொல்ல போறான் ..
நானே எதிர்பாராம அமைஞ்ச பெயர்கள் 😅😅 உண்மையை சொல்றதுக்கு முன்னாடி இன்னும் அவன் தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்குதே? மிக்க நன்றி சிஸ் 🍂🍁
உடல் தளர்ந்தவரது வன்மமும் தளர்ந்துவிட்டதோ!
“சாக்கடையிலிருந்து வந்தவன்” “சந்தனத்திற்கு உகந்தவன்” 👏🏼👏🏼
அறிந்தே செய்த வினைகளுக்கு இத்தனை வருடங்களாக அலைப்புறுதலுடன் ஒரு வாழ்க்கை.
கலைந்துவிட்டதாக எண்ணிய கடினமான காலங்களின் சுமைகள் கசடாய் கசிகின்றது.
“தன் தங்கையின் கதாநாயகிக்கு தனது தங்க அம்மா தான் கதாநாயகி” ✨✨
ஹிப்போ அர்ஜுன் அஜய் என்ற மூன்றாவது புத்திரனை வடிவமைத்துவிட்டானே. 🤣🤣
அக்னி என்னதான் ரோபோவுக்கு ரோல் மாடலாக இருந்தாலும் அறிவுவாளி சனா அனைத்தையும் catch பண்ணிடறா.
அழுத்தமான எழுத்துகளுக்கு இடையே இதமாக இவர்களது காதலையும், அர்ஜுனின் சேட்டைகளையும் திறமையாக கலந்துள்ளீர்கள். ✨❤️🌻
விரிவான, ரசனையான கருத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சிஸ் 🍃🪻