Loading

மேலும் சில மாதங்கள் கழிந்த நிலையில்:

வசீகரனின் மொத்த குடும்பத்தையும் ஜீவிகாவின் வீட்டில் அமர்த்தியிருந்தாள் இழையாள்.

“அண்ணி, ஒரு வார்த்தைகூட சொல்லாம இப்படி வந்து உட்காந்திருக்கோமே… இது சரிப்படுமா?” என்று சர்வஜித் இழையின் காதில் முணுமுணுத்தான்.

“ஷ்ஷ் ஜித்து… நோ நெகடிவிட்டி. உனக்கு ஜீவியை பிடிச்சிருக்குல?”

“ஆமா…”

“அப்புறம் என்ன கவலை. அதை விடு.”

“அதுக்கில்லண்ணி… அம்மாகிட்ட நீங்க சொல்ற பெண்ணை தான் கல்யாணம் செய்துப்பேன்னு வாக்கு கொடுத்திருக்கேன். இது அவங்களுக்கு தெரிஞ்சதுன்னா அதுக்காகவே ஜீவியை ஒத்துக்கமாட்டாங்க.”

“நீ கொடுத்த வாக்கை காப்பாத்த வேண்டியது என் பொறுப்பு. அத்தையே ஜீவி தவிர யாரும் என் மருமகளாக முடியாதுன்னு சொல்லுவாங்க பாரு.”

“எப்படி அண்ணி… எவ்வளோ நாளைக்கு என் லவ் மறைக்க முடியும்?”

“ஜித்து, நீ என்ன லூசா?” என்று சப்தமாக கேட்க,

மறுபுறம் இருந்த வசீகரன், “யாரைடி கேட்கிற?” என்றான்.

“இவனை தான்.”

“என்ன பண்ணான்?” என்றதும், ‘அண்ணி வேண்டாம்’ என்பதான சைகை சர்வாவிடம்.

“ஒன்னுமில்லைங்க… கல்யாணத்தை இன்னும் இரண்டு வருஷம் கழிச்சு வச்சுக்கலாம் சொல்றான். அதான் லூசாடா நீன்னு கேட்டுட்டு இருக்கேன்.”

“ஏன்?”

“அது… அது வந்து… சித்தப்பாவா நம்ம குழந்தையை வளர்த்து ஆளாக்கிட்டு அப்புறம் செய்துக்குறானாம்.”

“அவன் என்ன லூசாடி?”

“இதைத்தான் நானும் கேட்டேன்.”

“சரி கேளு,” என்றவன் பசுபதியிடம் திரும்பினான்.

“ஜித்து, உன் லவ் எனக்கும் அப்புக்கும் மட்டும்தான் தெரியும். ஜீவிக்கே தெரியாது. So எனக்கு வேலை ரொம்ப ஈஸி. Don’t worry.”

“இதான் அண்ணி நானும் சொல்றேன். ஆனாலும் ஃப்ரோக்கு அம்மாவைவிட சின்ன அண்ணி மேலதான் அதிக பயம்,” என்ற ப்ரணவ் சிரித்தான்.

அச்சமயம் உள்ளே வந்த ஜீவிகா அனைவரையும் கண்டு திகைத்து போனாள்.

“எப்… எப்படி இருக்கீங்க ஆன்டி?”

“ஜீவி, உள்ள வா சொல்றேன்,” என்று அழைத்து சென்ற அவளின் அம்மா விஷயத்தை கூற,

“நான் தான் கல்யாணமே வேண்டாம்னு சொல்றேனே. அப்புறம் என்ன இதெல்லாம்?” என்றாள் கோபமாக.

“இப்படியே பேசிட்டு உருப்படாம இருந்தது போதும். ஒழுங்கா போய் புடவை கட்டிட்டு வா. இனியும் உன் இஷ்டத்துக்கு ஆடுறதா இல்லை.”

“என்னம்மா இது… எனக்கு எந்த தகவலும் சொல்லாம இப்படி கூப்பிட்டு உட்கார வச்சுருக்கீங்க. யாரை கேட்டு வரச் சொன்னீங்க?”

“ஏன்டி, நான்தான் கூட்டிட்டு வந்தேன். அதுக்கென்ன?” என்ற இழையை கண்டு,

“நீயா?” என்ற அதிர்வோடு ஜீவி கேட்டாள்.

“ஆமா, என் ஃப்ரெண்ட்காக நான் யோசிக்க கூடாதா?”

“எனக்காக நீ யோசிச்சியா?” என்று ஜீவி சந்தேகமாக பார்க்க,

“இழை, இந்த மாதிரி நேரத்துல டென்ஷன் ஆகக்கூடாது. இவகிட்ட பேசினா உனக்கு பீபி ஏத்தி விட்டுடுவா. நீ போய் ஜூஸ் குடி. நான் பார்த்துக்குறேன்…”

“சரி ஆன்ட்டி… ஏதாவது எடக்குமடக்கா பேசினா என்னை கூப்பிடுங்க.”

“சரிடா. நீ போய் ஃபேன்ல உட்காரு. கொஞ்ச நேரத்துக்கே எப்படி வியர்த்துருச்சு,” என்றவர் குழந்தை சுமந்திருப்பவளை சுட்டிக்காட்டி, “பாரு, பொண்ணுன்னா இப்படி இருக்கணும்,” என்றார்.

“எப்படி?” என்ற ஜீவியின் புருவங்கள் நெறிபட்டது.

“இந்த காலத்து பிள்ளைகள் எல்லாம் பெத்தவங்களை மதிக்காம தன் ஜோடியை தானே தேடிக்கிறாங்க. ஆனா அம்மாப்பா வார்த்தைக்கு மறுபேச்சு பேசாம கல்யாணம் செய்திருக்க இழையை மாதிரி ஒரு பெண்ணை பார்க்க முடியுமாடி?”

“யாரு? அவ அம்மாப்பா பேச்சை மதிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா அதை நீங்க பார்த்தீங்க?” என்றாள் எள்ளலாக.

“ஆமா! அவங்க அம்மாவே சொல்லி பூரிச்சு போனாங்க தெரியுமா? இந்த கொடுப்பனை எல்லாம் எங்களுக்கு இல்லை,” என்றவர் கண்களில் கண்ணீர் ததும்பியது.

“அது சரி! ம்மா, அவ யாருன்னு உங்களுக்கு தெரியாது.”

“எங்களுக்கு எல்லாம் தெரியும். நீ வாயை மூடு.”

“என்னம்மா தெரியும்?”

“பெத்தவங்க வார்த்தைக்கு கட்டுப்பட்டதோடு வாழ போன இடத்துல எவ்வளோ பொறுப்பா நடந்துக்குறான்னு அவ மாமியாரே சொன்னாங்கடி. நீயெல்லாம் அவளோட கால் தூசிக்கு வரமுடியுமா? உனக்கு வாய் கிழிய பேச தெரியுமே தவிர, இழையை மாதிரி புருஷன், மாமியார், மாமனாரோட அனுசரணையா இருக்க முடியுமா? அதுக்கு பயந்து தானே கல்யாணமே வேண்டாங்கிற,” என்று பேசிக்கொண்டே சென்றார்.

“ம்மா, காது வலிக்குது. கொஞ்சம் நிறுத்துமா. நீ என்ன பேசினாலும் எனக்கு கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இல்ல.”

“ஏன்?”

“ஏன்னா என்ன சொல்ல? எனக்கு பசங்க மேல பெருசா நம்பிக்கையில்ல. எவனும் கமிட்டெட்டா இருக்கிறதில்ல. ஆளை விடுங்க.”

“ஒட்டுமொத்தமா எல்லாரையும் பேசாத ஜீவி. எல்லாகாலத்துலயும் பொறுப்பை தட்டி கழிக்கிறவங்க இருக்க தான் செய்யறாங்க. மாப்பிள்ளையும் குடும்பமும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க. அதைவிட நம்ம இழை முகத்துல இருக்கிற சந்தோஷத்தை பாரு. இதே சந்தோஷத்தை உன் முகத்துலயும் பார்க்க விரும்புறோம். சும்மா எதையும் சொல்லி தட்டி கழிக்காம காஃபி கொண்டு போய் கொடு. எதுவானாலும் அப்புறம் பேசிக்கலாம்.”

அதனைத் தொடர்ந்து காஃபி கோப்பைகளோடு வெளியில் சென்றவள் அனைவருக்கும் கொடுத்தாள்.

“ஜித்துக்கு பெண் பார்க்க ஆரம்பிச்சதுமே, பிங்கிதான் ‘என் ஃபிரெண்டைவிட நல்ல பெண் கிடைக்க மாட்டாங்க’ன்னு சொல்லி கூட்டிட்டு வந்தா. உனக்கு விருப்பமா ஜீவி?” என்று நாயகி கேட்க, ஜீவியோ தோழியை முறைத்தாள்.

“சொல்லுமா, உனக்கு என் பையனை பிடிச்சிருக்கா?” என்ற அபிராமி.

முதலில் ஒரே வயது என்று மறுக்க முயன்ற ஜீவியின் வார்த்தையை,
இழைதான் ஜீவி தன்னைவிட ஒரு வயது சிறியவள், “டபுள் ப்ரமோஷன்ல” வந்தவள், ஜித்துவை விட ஒன்றரை வயது குறைவு என்று சரிகட்டி விட்டாள்.

“நான் வேணும்னா கொஞ்சம் யோசிச்சு சொல்லட்டா ஆன்ட்டி,” என்றாள் சர்வஜித்தை பார்த்தவாறு.

எங்கே மறுத்துவிடுவாளோ என்றெண்ணி இருந்தவருக்கு “யோசிக்கிறேன்” என்றதே நிம்மதியளிக்க, “அதுக்கென்னம்மா, தாராளமா யோசிச்சு சொல்…” என்றார்.

அவர் முடிக்கும் முன்னமே, “இதுல யோசிக்க என்ன இருக்கு?” என்ற இழையின் குரல்.

“பரவால பிங்கி, யோசிச்சு சொல்லட்டும்.”

“அத்தை, எனக்கு இவ கூட பேச வேண்டியது இருக்கு. நீங்க அதுவரைக்கும் நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் நாள் பாருங்க. வந்துடுறோம்.”

அறையை சாத்தியதும், “ஜித்து மாதிரி நல்ல பையனை நீ ஏழுலோகத்துல தேடினாலும் கிடைக்க மாட்டாங்க. அவனுக்கு ஓகே சொல்லாம யோசிப்பியா?”

“யாரா இருந்தாலும் I am not interested. உன்னை யார் தரகர் வேலை பார்க்க சொன்னா?”

“ஜீவி, நீங்க ஒண்ணா தானே வேலை செய்தீங்க.”

“ஒண்ணா வேலை செய்தா கல்யாணம் செய்துக்கணுமா?”

“ஜீவி, ஜித்து அவரோட தம்பி. அந்த ஒரு தகுதி போதும் கல்யாணம் செய்துக்க. ஆனா உனக்காகவே இன்னொரு ஸ்பெஷல் தகுதி இருக்கு.”

“என்ன?”

“அவன் என் best friend. நீ எனக்கு எப்படியோ அதேபோல அவன்,” என்று சர்வா புகழ பாட,

ஒரு கட்டத்தில், “அடங்குடி சர்வா. எப்படின்னு நீ சொல்லி தெரிஞ்சுக்க வேண்டியதில்ல. அனாவசியமா கடலை போட மாட்டான், வேலையில focused-ஆ இருப்பான், helping mind. ஆனா கல்யாணம் செய்துக்க முடியாது.”

“நீ என் ஃபிரெண்ட்னு எவ்வளோ கர்வமா இருந்தேன். எனக்காக கூட செய்ய மாட்டியா ஜீவி?” என்று குரல் தழுதழுக்க,

“ம்ஹும்.”

“நீ என் பேச்சை மீறமாட்டன்னு சொல்லி confidence-ஆ கூட்டிட்டு வந்தேன்டி. ஆனா என் மூஞ்சுல கரியை பூசிட்ட. என் வார்த்தைக்காக உன்னை கட்டிக்கிறேன்னு சொன்ன ஜித்து உண்மையான ஃபிரெண்டா, இல்ல நீயா? நட்புன்னா என்னன்னு தெரியுமா? இழை யாருன்னு தெரியுமா?”

“ஏய், இப்போ எதுக்கு இப்படி குதிக்கிற?”

“உன்கிட்ட எத்தனை முறை ஜித்து பேர் சொல்லி தேட சொல்லியிருப்பேன். ஒருமுறையாவது நீயும் அவனும் ஒரே ஆஃபீஸ்ன்னு சொல்லியிருப்பியா?”

“ஏய், சர்வாதான் ஜித்துன்னு எனக்கு எப்படிடி தெரியும்?”

“தெரிஞ்சிருக்கணும். என்மேல அக்கறை இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும். ஆனா நீதான் ஜித்துவை பற்றி மறைச்சு என்னையும் அவரையும் சேரவிடாம சதி பண்ணிட்டியே.”

“சதியா? இது எப்போ?” என்று ஜீவி அதிர்ச்சியோடு பார்த்தாள்.

“உன்னால என் வாழ்க்கை எவ்வளோ சிக்கலாகிடுச்சு தெரியுமா? அதைகூட பெருசா பண்ணாம நீ நல்லா இருக்கணும்னு இவ்வளோ செய்யறேன். ஆனா இத்தனை வருஷ பழக்கத்துக்கு நீ செய்யற மரியாதை இதுதானா?

உனக்காக sports day-ல என் ஷூவை கடன் கொடுத்ததுல இருந்து, charity day-ல பிரியாணி share பண்ணினது, இவ்வளோ ஏன் அன்னைக்கு ஏலகிரில scarf வரை எதையும் எதிர்பார்க்காம ‘friend’ங்கிற ஒரே காரணத்துக்காக செய்தேன். ஆனா நீ எனக்காக கல்யாணம் செய்ய மாட்டியா?”

“என் ஃபிரெண்ட் ஜீவின்னு எவ்வளோ கர்வமா இருந்தேன். ஆனா நீ சுயநலத்தின் மறுஉருவமா இருக்க. அதுகூட பரவால்ல, மாசமா இருக்க பொண்ணுன்னு கூட பார்க்காம என் மூஞ்சியில அடிச்ச மாதிரி பேசுற. அதான் தாங்கிக்க முடியலை. என்மேல மட்டுமில்ல, என் குழந்தை மேலயும் உனக்கு அக்கறையே இல்லைடி” என்று இழை கண்ணை கசக்கி கண்ணீர் மழை பொழிந்தது.

“அதில் நனைந்த ஜீவிக்கு தான் பேசியது அதிகப்படியோ என்று தோன்ற, “மச்சி அழாதடி ப்ளீஸ்,” என்றாள்.

“உன்னை மாதிரி கல்நெஞ்சக்காரி நான் கிடையாது. என் குழந்தை கிட்ட உன் சித்தி ரொம்ப நல்லவன்னு சொல்லித்தான் வளர்த்துட்டு வரேன் தெரியுமா?”

“சித்தியா? சித்தியா அது யாரு எனக்கு தெரியாம? நீ உங்கப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு தானேடி?”

“நீதான்டி!!”

அந்த ஒரே வார்த்தையில் ஜீவிக்கு உலகமே தட்டாமாலையாக சுழல, அங்கே வந்த ப்ரணவ், “ஹாய் அண்ணி,” என்று ஜீவியிடம் அறிமுகப்படுத்திக்கொண்டவன் இழையிடம் “அண்ணி உங்களுக்கு ஃப்ரூட்ஸ்..” என்று கப்பை கொடுத்தான்.

“அப்பு மாதிரி ஒரு சித்தப்பா நம்ம பசங்களுக்கு தேடினாலும் கிடைக்கமாட்டங்கடி.”

“நம்ம பசங்களா?” என்று ஜீவி குழம்பி நிற்க,

“என்மேல மட்டுமில்ல, சின்ன அண்ணி மேலயும் அவனுக்கு எவ்வளோ பாசம் தெரியுமா?”

“சின்ன அண்ணி?” என்ற ஜீவியின் புருவங்கள் நெறிபட,

“என்னடி முழிக்கிற? நீதான்…” என்ற வார்த்தைகளில் ஜீவிக்கு மூச்சடைத்து போனது.

“இதோபார் ஜீவி, எனக்கு உன்னோட ஆதங்கம் புரியுது…”

“ஆதங்கமா? அப்படின்னா என்னங்கையா?” என்ற ரீதியில் ஜீவிகா முழிக்க,

“அண்ணின்னு சொல்லிட்டு எனக்கு மட்டும் ஃப்ரூட்ஸ் கொடுக்கறானே, இவனை நம்பி எப்படி கல்யாணம் பண்றதுன்னு யோசிக்காத. நாளைக்கு நல்ல சித்தப்பாவா உன் குழந்தைக்கும் ஃப்ரூட்ஸ் கொடுப்பான். நானும் அவரும் நல்ல பெரிப்பா, பெரிம்மாவா ஸ்கூல்க்கு கூட்டிட்டு போவோம். இதெல்லாம் வேற வீட்டுக்கு போனா உன் குழந்தைக்கு கிடைக்குமா, யோசிச்சு பாரு.”

அந்த பேச்சில் ஜீவிகாவுக்கே, ‘தனக்கு பிறந்த குழந்தை ஆணா பெண்ணா?’ என்ற குழப்பம் வந்து விட்டது.

“எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு மச்சி,” என்ற ஜீவியை பார்த்தவாறே, பழங்களை சாப்பிட தொடங்கி விட்டாள் இழை.

“குழந்தை பேர் என்ன?” என்று ஜீவி மெல்லிய குரலில் கேட்க,

“எந்த குழந்தையை கேட்கிற? உன்னோடதா, என்னோடதா?” என்று சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு இழை கேட்க, “என் குழந்தை…” என்றாள்.

“இனி தான்டி தொட்டில்ல போட்டு பேர் வைக்கணும்.”

“அப்போ பிறந்துடுச்சா?” என்றவள் தன் வயிற்றை தடவி பார்க்க,

“அதுக்கு நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்லணும். அப்புறம் தான் பிறக்கும்.”

“இழை, எனக்கு ஒரு டவுட்.”

“என்ன?”

“கண்டிப்பா அப்பு நல்ல சித்தப்பாவா இருப்பானா?”

“டவுட்டே வேண்டாம் ஜீவி.”

“இன்னொரு டவுட்..”

“சொல்லு.”

“இல்ல, நீ அவரை லவ் பண்ணின தானே. ப்ளீஸ் உண்மையை சொல்லுடி.”

“லவ்வா? என்ன பேசுற ஜீவி. கல்யாணத்துக்கு பின்னாடி வரது தான் உண்மையான லவ்.
நானே குழந்தை பெத்துக்குற அவசரத்துல லவ் பண்ண மறந்துட்டேன். இனி தான் ஸ்டார்ட் பண்ணணும்.”

“அப்படியா? அப்போ அவர் உன்னை லவ் பண்றாரா?”

“ஏன் கேட்கிற?”

“இல்ல, நீங்க இவ்வளோ சந்தோஷமா இருக்கீங்களே, எப்படிடி?”

“சிம்பிள் ஜீவி. நாங்க இரண்டு பேரும் அப்பா அம்மா பேச்சு கேட்டு கல்யாணம் செய்து கிட்டோம். சந்தோஷமா இருக்கோம்.”

“நிஜமாவா?”

“ஆமாடி. நீயும் எங்க பேச்சு கேட்டு ஜித்துவ கட்டிக்கோ.”

“சர்வாக்கு என்னை பிடிக்குமா?”

“தெரில. ஆனா சந்தோஷமா இருப்ப.” அந்த வார்த்தைகளில் ஏதோ மாயவலையில் சிக்குண்டவள் போல, தலையசைத்து சம்மதம் தெரிவித்த ஜீவியோடு இழை வெளியில் வந்தாள்.

இரு குடும்பமும் மகிழ்ச்சியோடு தாம்பூலம் மாற்றி நாள் குறிக்க, ஜீவியின் அன்னை கண்ணீரோடு இழையை கட்டிக்கொண்டார்.

சர்வஜித் – ஜீவிகாவின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

மணமக்களை ஜீவியின் வீட்டிற்கு அனுப்பி விட்டு, வசீகரனின் மொத்த குடும்பமும் பார்கவியின் வீட்டில் குழுமியிருந்தது.

என்ன தான் மனதளவில் இழை குழந்தைக்கு தயாராகி இருந்தாலும், மசக்கை அவளை ரொம்பவே படுத்தியிருந்தது. உண்ட உணவு செரிமானமாகும் முன்னமே வெளியேறிவிடும்.
சமையல் அறைக்குள் நுழைய முடியாத அளவுக்கு தாளிப்பு நெடியிலிருந்து, பருப்பு வாசம் வரை குமட்டிக் கொண்டு வருவதால், பெரும்பாலும் நாயகி அவளை அறையிலேயே இருக்க சொல்லிவிடுவார்.

சமையல் முடிந்த பின்பே வருபவளுக்கு ஊட்டிவிட, இரு மாமியார்களுக்கு இடையில் சில நேரம் கடும் போட்டி ஏற்படும். இழையின் விருப்பத்தை நிறைவேற்றவே நேர்ந்தவர்கள் போல, ஜித்துவும் அப்புவும் செயல்பட்டிருந்தனர்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்