
வசீகரன் சொன்னது போலவே குளித்து விட்டு, அவன் சட்டையோடு வெளியில் வந்தவளின் கண்கள் கட்டப்பட, “என்னங்க, என்ன பண்றீங்க?” என்றவளின் இதழ்களை மென்மையாய் சேர்ந்தவன், “சொல்றேன்..” என்று கதவைத் திறந்து வெளியில் அழைத்து சென்றான்.
குளிர் ஊசியாக உடலைத் தைக்க, நடுங்கியவள் கணவனின் மார்போடு ஒன்றிகொண்டு, “என்னங்க, இது இப்படி குளிருது… எங்க இருக்கோம்?” என்று நடுங்கவும், தன் மார்பில் படிந்திருந்த அவள் ஈரக்கூந்தலை ஒதுக்கி, “சர்ப்ரைஸ்..” என்றவனின் வெம்மை அவளை ஆக்கிரமிக்க மெல்ல அங்கிருந்த ஊஞ்சலில் இழையை அமர்த்தினான்.
“எங்கங்க இருக்கோம்?” என்றவள் இருகைகளையும் பரபரவென தேய்க்கத் தொடங்க, அவள் வெற்றுக் கால்களிலும் குளிர் ஊசியாய் துளைத்தது.
“ரொம்ப குளிருதுங்க..” என்றவள் இருகால்களையும் உயர்த்த அதற்குள் அவற்றைத் தன் வசப்படுத்தி தன் மடியோடு சேர்த்திருந்தான் வசீகரன்.
“என்ன பண்றீங்க?”
“சொல்றேன்டி..” என்றவனின் கரம் அவள் இடையைச் சுற்றி வளைக்க, ஒன்றும் புரியாமல் இருந்தவள் இப்போது அவன் மார்பு சூட்டின் கதகதப்பில் இருப்பதை உணர்ந்த நொடி, “ஹாப்பி பர்த்டே… மை ஸோல்!” என்றவாறு கண்கட்டை அவிழ்த்தான்.
கண்களைத் திறந்தவளின் முன் விரிந்தது தூரத்தே தெரிந்த அருவியும், சுற்றிலும் பச்சை போர்த்திய அடர்ந்த மரங்களும், லேசான தூறலோடு நறுமணமிக்க குளுமையும், பறவைகளின் ரீங்காரத்துடனான புலரா காலையும் தான்.
வான்மகளோடு கூடியிருந்த இருள் மெல்ல பிரிந்து விடைபெற்றுக் கொண்டிருந்த ரம்மியமான காலை வேளையைக் கண்ட இழையின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்திட, “பர்த்டே பேபிக்கு என்னோட முதல் கிஃப்ட் பிடிச்சிருக்கா?” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
அன்று குலதெய்வக் கோவிலில் இருந்து அறைக்கு திரும்பியதும் வசீகரனைப் பாய்ந்து கட்டிக்கொண்டவள், அதன்பின் அவனை விட்டு பிரியவில்லை.
அதிலேயே ஆண்ட்ரியா தள்ளி நின்றாள் என்றால் சமூகவலைதளங்களில் அவளைத் துண்டித்த வசீகரன், இறுதியாக பேசிய பேச்சில் மொத்தமாக அரண்டு போனவளாக இந்தியாவிற்கு பெரிய கும்பிடு போட்டு கிளம்பியிருந்தாள்.
உடனே தானும் மனைவியோடு மற்றொரு விமானத்தில் ஏறியவன் அடுத்த சில மணி நேரங்களில் கேரளா வந்திருந்தான்.
“என்னங்க, இது ஹனிமூன் போறோம்னு சொல்லவேயில்ல. எத்தனை நாள்?”
“டூ வீக்ஸ்..”
“அச்சோ! நான் ட்ரெஸ் எதுவும் எடுத்துட்டு வரலையே…”
“டோன்ட் வொரி. உனக்கும் சேர்த்து பேக் பண்ணிட்டேன்…”
“நீங்களா? உங்களுக்கு எப்படி… ப்ச்! நீங்க எதுக்கு பண்ணினீங்க?”
“இங்கிருந்து நாம ஸ்பாட்க்கு போக, எப்படியும் மூணு மணி நேரமாகும்…” என்று உணவை முடித்துக்கொண்டு குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்த போது இரவாகியிருந்தது.
சுற்றிலும் கண்களைச் சுழல விட்டவளுக்கு, காலை விடியல் இத்தனை ரம்மியமாக இருக்குமா?
அதுவும் கணவனின் அருகாமையில் என்ற எண்ணமே தோன்றியது.
அவள் பல வருட கனவை நிஜமாக்கியிருக்கும் கணவனின் அன்பில் இழை நெகிழ்ந்திருந்த அதே நேரம்அவள் நாசியை நிரப்பியது காஃபியின் நறுமணம்.
“இந்த கிஃப்ட் பிடிச்சிருக்கா?” என்று கோப்பையை ஏந்தியிருந்த வசீகரனின் வசம் பேதை நெஞ்சம் முழுதாய் தஞ்சம் கொண்டது.
இதழ்களை கடித்துக்கொண்டு “ஆம்..” என்று தலையசைத்தவாறே, “உங்களுக்கு எப்படி?” என்றவளின் நெஞ்சம் ததும்ப கண்களில் நீர் துளிர்த்தது.
“காஃபி ஆறிடும். சொல்றேன்..” என்று அவள் இதழ்களில் கோப்பையைப் பொருத்த, ஒரு மிடறு விழுங்கியவளின் மனதினுள் அமிர்தமாய் இறங்கியது அந்தத் துளி.
“குளிரலையா உனக்கு?”
“ஏன்?” என்றவளின் சிந்தை அவன் வசம் சிக்கியிருக்க சுற்றுப்புறம் மறந்திருந்தது பாவைக்கு.
“இவ்ளோ தள்ளியிருக்க… சும்மா தானே இருக்கு, சாஞ்சுக்கலாமே..” என்று தன் மார்பைச் சுட்டிக்காட்ட சுகமாய் அவனோடு ஒன்றியவள் பாந்தமாய் அவன் கரங்களில் அடங்கினாள்.
மொத்தமாய் பெண்ணை தனக்குள் சுருட்டி சுற்றுப்புற குளிரை ஈர்த்து வெம்மையை கடத்தியிருந்தான் வசீகரன்.
ஒரு வரி கவிதை போல, அவர்களின் இந்நிலையே காதலின் ஆழத்தை எடுத்துக் காட்ட போதுமானதாக இருக்கஇத்தனை அழகிய பிறந்தநாள் பரிசை எதிர்பாராதவள் ரசித்து பருக,
வசீகரனோ தன்னவளை பருகிக்கொண்டிருந்தான்.
பாதி கோப்பை காலியான நிலையில் தான், “உங்களுக்கு?” என்றாள்.
“நீ ஷேர் பண்ண மாட்டியா?” என்றிட அடுத்த சில நொடிகளில் ஒரு கோப்பையில் இருவரின் அதிகாலை காஃபி என்றானது.
அதில் இழையின் நெஞ்சில் வார்த்தைகளில் அடங்காத தித்திப்பு விரவியது.
பொழுது நன்றாகப் புலர்ந்த பின்பும் இருவரின் நிலை மாறாதிருக்க மூன்றாவது கோப்பையை கணவனுடன் பகிர்ந்துகொண்டிருந்த இழைக்கு இந்நொடி இப்படியே நீளாதா? என்ற ஏக்கம் மட்டுமே.
ஆனால் ஆட்களின் நடமாட்டம் கண்டு இழையை அள்ளிக்கொண்டு உள்ளே வந்தவன், “நெக்ஸ்ட் கிஃப்ட்..” என்று பெட்டியை கொடுக்க அதைக் கண்ட இழையின் மனம் பேரானந்தத்தில் திளைத்திருந்தது.
பின்னே பெட்டி முழுக்க அவன் சட்டைகளும் டீஷர்ட்டும் அடுக்கப்பட்டிருந்தன.
இதே பட்டுப் புடவைகள் கொண்டு அலங்கரித்து வைரத்தால் இழைத்திருந்தாலும் பெண் மனம் இவ்வளவு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்குமா? என்பது சந்தேகமே.
மேலும் இரண்டு மணி நேரங்கள் கடந்த நிலையில், “என்னங்க, போதும்… இன்னும் எவ்வளோ நேரம்?” என்று சிணுங்கிய இழையின் முகத்தில் செம்மை ஏகத்திற்கும் கூடியிருந்தது.
முயன்று தன்னை இயல்பாக வைத்திருக்க முயன்றவள் கணவனின் மையல் பார்வையில் முழுதாக தோற்று இறுதியில் பாய்ந்து அவனை அணைத்துக்கொண்டு. “ப்ளீஸ்…” என்றாள்.
“ப்ச், என்னடி நீ?! பொண்டாட்டியை ரசிக்கக்கூட நேரமில்லாம இருந்தேன்.. இப்போ தடை போட்டா எப்படி?”
“அதுக்காக இப்படி பார்ப்பீங்களா?” என்றவளின் கோபமும் நியாயமே.
பின்னே, ஒவ்வொரு சட்டையாக மாற்றச் செய்து 360 டிகிரி கோணத்திலும் அவளை விழிகளால் படம் பிடித்துக்கொண்டிருந்தான்.
“என் பொண்டாட்டியை எப்படியும் பார்ப்பேன். நெக்ஸ்ட்!” என்றான்.
“இதோட மூணு ஷேர்ட், நாலு டீஷர்ட் மாத்திட்டேன். போங்க, முடியாது.”
“நீ மாத்தாட்டி என்ன, நானே மாத்திவிடறேன்,” என்றவன் சொன்னதுபோலவே அடுத்த சட்டையை மாற்றி விட்டு மீண்டும் அவளை ரசிக்கத் தொடங்க, பெண்ணுக்கு இருப்பு கொள்ளவில்லை.
நெளிந்துகொண்டிருந்தவள் ஒருகட்டத்தில் போர்வையை எடுக்க முற்பட, அதை பிடுங்கி வீசியவன்… “நீ மட்டும் என்னை விதவிதமா ரசிக்கலாம்.. நான் கூடாதா?” என்றதில் தான் இழைக்கு லேசாக பொறி தட்டியது.
இத்தனை நேரம் சட்டையை மாற்றிக் கொண்டிருந்த போதும் உணராதவளை, இப்போது கண்ணுக்கு புலப்படாத அச்சம் சூழ்ந்தது.
“நெக்ஸ்ட் கிஃப்ட்..” என்று சிறுபெட்டியை நீட்டவும், ஆவலோடு பிரித்தவளின் விழிகள் இம்முறையும் விரிந்தது. ஆனால் ஆச்சர்யத்திலல்ல… அதிர்ச்சியில்..!!
பின்னே, உள்ளே அவளது பென்ட்ரைவையும் ஆல்பத்தையும் அல்லவா வைத்திருந்தான். ஸ்தம்பித்து போனவளுக்கு சில நொடிகள் பேச்சே எழவில்லை.
“ஏன் என்கிட்டே சொல்லலை?” என்ற வசீயை அச்சத்தோடு பார்க்க, அவனோ அதற்கு அவசியமே இல்லை என்பதுபோல தன் அணைப்பை கூட்டி அவள் இதழ்களில் மூழ்கியிருந்தான்.
“உங்களுக்கு என்மேல கோபமில்லையா?” என்று திணறிய மூச்சுகளை இழை சமன்படுத்தும் முன், “நீ நினைக்கிற அளவு நான் மோசமில்லடி. இன்னொரு முறை இப்படி பயந்து பார்க்காத..”
என்றவன் மீண்டும் அவள் இதழ்களை வசப்படுத்தி ஆழ்ந்த முத்தமிட்டான்.
“எப்படி? எப்படி இந்தளவு என் மேல நம்பிக்கையும் காதலும்? உன்னை திட்டினதை தவிர வேற எதுவும் செய்ததில்லையே. அப்படியிருக்க சத்தியமா நான் இதை உன்கிட்ட எதிர்பார்க்கல. உன்னை தேடின எனக்கு உன்னோட முகம் கூட சரியா ஞாபகமில்ல. ஆனா நீ என்னை பத்தி எதுவுமே தெரியாம என்னை புருஷனா நினைச்சு ஒவ்வொரு நாளும் வாழ்ந்திருக்க…”
“நிஜமா, உன்னோட இந்த கிஃப்ட்க்கு முன்னாடி நான் கொடுத்ததெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு எனக்கு தெரியும். It’s overwhelming!! உன்னோட ஒவ்வொரு வார்த்தையும் என்னை பேசவிடாதளவுக்கு கட்டிப்போடுது. அதுக்கு ஈடா என்ன சொல்ல, எப்படி சொல்லன்னு எனக்கு நிஜமா தெரியல..”
வசீகரனின் இறுகிய அணைப்பில் கிடந்தவளோ மெல்ல தலை உயர்த்தி, “உங்களுக்கு என்னை பிடிக்குமா?” என்று பெரும் தவிப்போடு கேட்டாள்.
“இது என்னடி கேள்வி? பிடிக்காம தான்…” என்றவன் முடிக்கும் முன்னமே, “ஆனா நீங்க அத்தை மாமா சொன்னதால கட்டிக்கிட்டு..”
“என்னை பார்த்தா அப்படி தெரியுதா? அன்னைக்கே உன்கிட்ட பேசியிருந்தா நிச்சயம் சரியா கன்வே செய்திருப்பனா தெரியல…”
“என்னைக்கு..?”
“நம்ம கல்யாணத்தன்னைக்கு தான் உன்னோட காதலை தெரிஞ்சுகிட்டேன். இப்பவும் சொல்றேன் உன்னளவுக்கு காதலிக்க முடியுமான்னு எனக்கு தெரியாது. பட் ட்ரை பண்றேன்…” என்றவனை பார்த்திருந்த இழையின் முகத்தை கைகளில் நிறைத்துக் கொண்டவனின் விழிகள் அவளோடு கலந்தது.
இனம்புரியா அவஸ்தையோடு இருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டு,
“என் காதல் நீ..!!
என் கனவு நீ..!!!
என் தேடல் நீ..!!
என் வாழ்வு நீ..!!
அதன் அர்த்தம் நீ..!!”
என்று ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் மனைவியை முத்தத்தால் அர்ச்சித்தவனின் வார்த்தைகளில் திகைத்திருந்தவளிடம் இறுதியாக, “என் பரிபூரணம் நீ!!” என்று அவள் இதழ்களில் இளைப்பாறினான்.
இழை மூர்ச்சையாகாதது தான் குறை!!
வசீகரன் தன் காதலை சொன்னதில் இழைக்கு மயக்கமே வரும் போல இருந்தது.
சத்தியமாக, அவளுமே இதை அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை!!
பின்னே, ஏதோ ஒரு வேகத்தில் பேசிவிட்டவளுக்கு அன்று வசீயிடம் மன்னிப்பை யாசித்த போது “உங்க அம்மாவுக்கு தெரியுமா?” என்று கேட்டு அவள் கை பிடிக்கவும், திரும்பி பார்க்காமல் ஓடியிருந்தவள், அதன் பின்பான ஒவ்வொரு நாளையும் அச்சத்துடனே கழித்திருந்தாள்.
அவள் துயர் துடைக்கவே கைலாசம் துபாய்க்கு அழைத்து சென்றதில் இழைக்கு ‘இனி வசீகரனை சந்திக்கப் போவதில்லை தான் மாட்டிக்கொள்ள வாய்ப்பில்லை’ என்ற மகிழ்ச்சி ஒருபுறம் என்றால் நாயகி, ஜித்து எல்லாம் பிரியும் வருத்தம் ஒருபுறம்.
துபாயிலிருந்து சில மாதங்களில் திரும்பியவளுக்கு தருமபுரி செல்ல மாட்டோம் என்பதே
அத்தனை நிம்மதியை கொடுத்திருந்தது.
சென்னை வந்த பின்பும், அவ்வப்போது பார்கவி வசீகரனின் புராணம் பாடி கொண்டிருந்தாலும், வசீயிடமிருந்து தப்பித்து விட்டோம் என்ற நிம்மதியுடன் படிப்பில் கவனம் செலுத்தியிருந்தாள்.
ஆனால் அவளே நினைக்க மறந்தாலும் வசீகரனின் கண்ணீரும், கோபமுகமும் பல நாட்கள் அவள் தூக்கத்தை கெடுத்திருந்தது என்பதுதான் நிஜம்.
முதலில் பயத்தில், பின் குற்றஉணர்ச்சியில்..!!
இழைக்கு பிடிவாதம் உண்டு என்றாலும் தன்னையே வருத்திக்கொள்வாளே தவிர, அடுத்த வரை காயப்படுத்த தெரியாது. தன்னால் ஒருவன் அனைவர் முன்னிலையில் அவமானப்பட்டதை, வலி கொண்டதை, அத்தனை எளிதாக மறக்க முடியவில்லை.
ஆனால் இழையும் சிறுபிள்ளை தானே..!
காலப்போக்கில் அச்சமும் குற்றஉணர்வும் ஓரளவு மறைந்து போக அவன் நினைவை ஒதுக்கி,
படிப்பில் கவனம் செலுத்தியிருந்தாள்.
அன்று அவளிடம், “வசீகரன் உன் மனதை ஆக்கிரமித்து உறக்கம் கெடுப்பான்” என்று சொல்லியிருந்தால் நிச்சயம் அவளே நம்பியிருக்க மாட்டாள்.
ஆனால் இழை பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியில் சேரவிருந்த கால இடைவெளியில்
நிகழ்ந்த ஒரு நிகழ்வு, மீண்டும் வசீகரனின் நினைவை கிளறி அவள் மனதில் அவன் இருப்பை உறுதி செய்திருந்தது.
“என்னடி யோசனை…” என்று தன்னையே பார்த்திருந்தவளின் நெற்றியில் இதழ்பதித்து, “நான்தான் சொன்னேனே, எனக்கு உன்னளவு வராதுன்னு. கவிதைன்னு நினைச்சு சொல்லிட்டேன் ஆனா உனக்கு என்ன தோணுதோ, அந்த பேர் வச்சுக்கோ..” என்றான் சிரிப்போடு.
“அப்படியில்லைங்க..”
“டைமாச்சுடி. ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு பேசலாமே..” என்றவன் சொன்னது போலவே உணவை முடித்து வெளியில் வர, பூஞ்சிதறலாய் மழைச்சாரல் விழுந்து கொண்டிருந்தது.
“குளிருதுங்க. ரூம்க்கு போகலாமா?”
“இதெல்லாம் குளிரா?” என்றவன் இழையை அணைத்துக்கொள்ள, “நிஜமாவே உங்களுக்கு என்னை பிடிக்குமா?” என்றாள்
“என்னை பற்றி எதுவுமே தெரியாம என்கிட்டே லவ் சொல்லி பெரியவளாகி, உங்களையே கல்யாணம் செய்துக்குறேன்னு வாக்கு கொடுத்து அதை நிறைவேற்றின குட்டிப் பாப்பாவை பிடிக்காம போகுமா?” என்று சீண்ட,
“ஸாரி… நான் தெரி…யாம…தான்…” என்று இழை திணறினாள்.
“ரிலாக்ஸ், இழை!! முதல்ல செய்யறதையும் செய்துட்டு பேசவா செய்யறன்னு கோபம் வந்தது நிஜம். ஆனா அது ஒரு குழந்தை யாரோட பொருளையாவது உடைச்சுட்டா, ‘அழாத… என்னோடதை கொடுக்குறேன்’ன்னு சொல்லுமே அது போல தான் உன்னோட பேச்சும். அதுக்கு மேல பெருசா எந்த அர்த்தமும் கிடையாது. ஆனா என்னோட கோபம் கண்ணை மறைக்கவும்
உன்னை திட்டிட்டேன்..”
“சொல்லப்போனா எனக்கு உன் மேல மட்டுமில்ல, என் மேல, எங்க அப்பா அம்மான்னு
என்னைச் சுத்தி இருக்கிற எல்லார் மேலயும் கோபம்..!! உனக்கு தெரியுமா தெரியல, எனக்கு கொஞ்சம் பிடிவாதம் ஜாஸ்தி. நினைச்சது கிடைக்கலன்னா, ஈஸியா எடுத்துக்குற ஆள் கிடையாது நான். உன் கையில கொடுத்த கார்ட் அவர் கைக்கு எப்படி போச்சு? அதுக்கு ஏத்த மாதிரி நீ பயத்தோட என்னை பார்க்கவும் அப்படி ஒரு கோபம்.”
“ப்ராமிஸா, நான் தெரியாம தான் செய்தேன். அதுவும் அம்மா கூப்பிட்டதால, அவசரமா அவங்க அப்பா கிட்டே கொடுத்துட்டேன். நான் வேணும்னு செய்யல. ப்ளீஸ்… இந்த பேச்சு வேண்டாம். விடுங்க..” என்று கணவனை கட்டிக்கொண்டாள்.
“ஏன்டி?”
“வேண்டாமே!! எதுக்காகவும் இனி நீங்க கஷ்டப்படக்கூடாது..”
“பேசணும், இழை..!! நிச்சயமா உன்கிட்ட இதை பேசியே ஆகணும். கல்யாணமாகி இத்தனை நாள் பிறகும், உன்னோட பயத்துக்கு காரணம் நான்..! அதை போக்க வேண்டியதும் என்னோட பொறுப்பு. அதைவிட, உன்னோட பயம் அவசியம் இல்லாததுன்னு உனக்கு தெரிய வேண்டாமா?”
“என்ன சொல்றீங்க?”
“சொல்றேன். பட் அதுக்கு முன்ன, உன்னை தள்ளி விட்டு கோபப்பட்டதை தவிர
நான் என்ன செய்தேன்னு சொல்லு.”
“நீங்க என்ன செய்யலை?”
“அப்போ செய்தேனா… என்ன?” என்றவனுக்கு அவளுடனான நிமிடங்களில் எல்லாம், கோபத்தில் கத்தி விரட்டியது தான் ஞாபகமிருந்தது.
“என்னடி செஞ்சேன்? சத்தியமா எனக்கு தெரியலை. அதிகபட்சமா தகுதி இல்லாத ஒருத்திக்காக சின்னக் குழந்தையான உன்னை காயப்படுத்தினேன். அது தவிர வேற என்ன செஞ்சுட்டேன் சொல்லு..” என்றவன் வார்த்தைகள் அத்தனையும் உண்மையே.
பின்னே, தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவன். இழையை எப்போதாவது சர்வஜித்தோடு பார்த்திருப்பான், பெயரைக்கூட தெரிந்து வைத்திருக்கவில்லை.
ஓரிருமுறை பார்கவி சொன்னதால் அவளை அழைத்து சென்றிருப்பான். அவனறிந்த வரையில், இறுதியாக கார்ட் கொடுக்க சொன்னவனுக்கும் இழைக்கும் வேறு எந்த சம்பந்தமும் கிடையாது.
ஸ்வேதாவை பற்றிய பேச்சை வசீகரன் தொடங்கவும், “ஸாரிங்க..” என்று அவன் மார்பில் முத்தமிட்டாள்.
“எதுக்கு?”
“ஸ்வேதா அக்கா..!!” என்றதுமே வசீயின் முகத்தில் கோபத்தின் சாயலை கண்டவள், “ஸாரி… என்னால நீங்க ரொம்ப கஷ்டப்பட்டீங்க தானே..!!” என்றாள்.
ஸ்வேதாவை அவன் வாழ்விலிருந்து தூக்கி எறிந்து பல வருடங்கள் ஆன போதும்,
அவளால் ஏற்பட்ட வடு இன்னும் மறையாதிருந்தது.
“உன்னால இல்ல… என்னால..! என்னோட முட்டாள்தனத்தால..!!” என்றான்.
“என்ன பேசுறீங்க..?”
“சரியாதான் பேசுறேன், இழை..!! உனக்கு ஜித்துவை தெரிஞ்சளவு என்னை தெரியாது. பொதுவாவே அந்த வயசுல பசங்க பொண்ணுங்க பின்னாடி சுத்தினாலும், நான் அப்படி கிடையாது. அதுக்காக பொண்ணுங்க கிட்ட பேசவே மாட்டேன்னு இல்ல. என்னோட கிளாஸ்ல கூட படிக்கிறவங்க கிட்ட பேசுவேன். அது ப்ரெண்ட்லி பேச்சாதான் இருக்கும்..”
“அப்படிதான், ஸ்வேதா என்கிட்ட டவுட்னு சொல்லி, லஞ்ச் ப்ரேக், ஆஃப்டர் ஸ்கூல் ஹவர்ஸ்,
என்னோட ப்ராக்டீஸ் அப்போன்னு தேடி வந்த போது மறுக்காம நான் பேசினது… ஆனா, ‘எனக்காக வசீகரா பாட்டு பாடுறது’, ‘வசீ ப்ளீஸ் சீ’ன்னு எழுதி காட்டுறது, என் பின்னாடியே சுத்தி என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னதை உண்மைன்னு நம்பினது தான் நான் செய்த பெரிய தப்பு…”
“அவங்களுக்கு உங்க மேல லவ் இல்லையா?”
“இல்லை! ஒருமுறை பிரெண்ட்ஸ்கூட ‘ட்ரூத் ஆர் டேர்’ விளையாடினப்போ, ‘வசீயை உன் பின்னாடி சுத்த வச்சு காட்டுன்னு’ DARE கொடுத்திருக்காங்க..” என்று சொல்லவுமே, இழைக்கு நம்ப முடியவில்லை.
“அப்போ சேலஞ்சுக்காக உங்களை?” என்ற இழைக்கு, ஸ்வேதா மீதான கோபம் பொங்கியது.
“ஆமா. நான் தான் என்னோட பழகின பெண்ணை சீரியஸா எடுத்துக்கிட்டேன். அவளுக்கு அப்படி எதுவும் கிடையாது. இதுவே இன்னொருத்தன் சொல்லி தான் எனக்கு தெரிஞ்சது..” என்றவனின் குரலில் ஏமாற்றத்தின் வலி நிரம்பியிருந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
6
+1
+1

