
இழையின் படுக்கையறையை ஒட்டியிருந்த ஒப்பனையறையில் (dressing room) குளித்துவிட்டு தலைசீவி கொண்டிருந்த வசீகரனின் பின்னே நின்று முறைத்து கொண்டிருந்தான் சாரதி..
“என்னடா..”
“இப்போ ஓகேவா வந்து பாரு..”
“சொன்ன மாதிரி செய்திருக்கியா?”
“செஞ்சுட்டேன் வா”
என்றதும் வெளியில் வந்த வசீகரன் அங்கிருந்த கூடைகளை ஆராய அதில் அவன் சொன்னது போலவே ரோஜா, மல்லியின் காம்புகளை நீக்கி இதழ்களை மட்டும் பிரித்து வைத்திருந்தான் சாரதி…
“சரி நான் சாப்ட்டுட்டு வரேன் சொன்னது நியாபகமிருக்குல..” “இருக்கு இருக்கு..” என்று கடுகடுத்தவனை கண்டு..,
“அதை சிரிச்சுட்டு சொல்லுடா.. ஏன் இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சியை வச்சிருக்க?”
“டேய் என் ஃபர்ஸ்ட் நைட்டுல கும்மியடிக்க பார்த்த உனக்கு என் கையாலேயே டெக்கரேட் பண்ற நிலைமை வரும்னு கொஞ்சமும் நெனச்சு பார்க்கலைடா.. எல்லாத்தையும் மறந்துட்டு நான் உனக்கு செய்யறதே பெருசு ஆனா நீ என்னை ரொம்ப சோதிக்கிற..”
“என்ன பண்ணிட்டேன்..”
“ஏன் பூவை அப்படியே டெக்கரேட் பண்ணினா ஆகாதா பூவையும் காம்பையும் பிரிச்சு வைக்க சொல்ற… அதுவும் ரோஜான்னா பரவால்ல ஆனா மல்லிப்பூ காம்பையும் இதழையும் பிரிச்சு முடிக்கிறதுக்குள்ள முடியலடா போதும் விட்டுட்டு மதியத்துல இருந்து இதைதான் செய்துட்டிருக்கேன் ப்ளீஸ் நானே பாவம்..”
“யார் நீயா?”
“இல்லையா பின்ன ஒரு உண்மையை என் பொண்டாட்டிக்கிட்ட இருந்து மறைக்க உன்கிட்ட சிக்கி இந்த பாடுபடுறனே..”
“உன்னை யார் மறைக்க சொன்னா? இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை போய் ஆஷ்மிகிட்ட கன்ஃபெஸ் பண்ணு..”
“பயமா இருக்குடா..”
“அப்போ சொன்னதை செய்..” என்று வசீ கட்டளையிட.,
“இத்தனை நாள் ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான்னு ரொம்ப நம்பிக்கையோட இருந்தேன் இன்னைக்கு முடிவாகிடுச்சுடா அப்படி ஒருத்தன் இல்லவே இல்ல” என்றான் கடுப்பாக.
“டேய் என்னமோ நான் கட்டாயபடுத்தின மாதிரி பேசுற… முடியாதுன்னா போயிட்டே இரு..” என்றவன் கைபேசியை எடுக்க..
“டேய்.. டேடேய் நான் எப்போடா முடியாதுன்னு சொன்னேன் இதோ இப்போவே செய்யறேன்..” என்றவன் அறையை அலங்கரிக்க தொடங்கினான்.
இரவு உணவை முடித்துகொண்டு முக்கிய அழைப்பை பேசி முடித்து வந்த வசீகரன்,
“என்னடா இது நான் என்ன சொன்னேன் நீ என்ன பண்ணிவச்சிருக்க..”
“சொன்னமாதிரி தானேடா செய்தேன்..” என்று அரைமணி நேரத்திற்கு மேலாக நிதானமாக மெத்தையை அலங்கரித்திருந்தவன்,
“இனி எதுவும் மாத்த சொல்லாத தெய்வமே என்னால முடியாது..” என்று பாவமாக நண்பனை பார்த்தான்.
“ப்ச் என்ன சாரதி ரோஜாவையும் மல்லியையும் உன் இஷ்டத்துக்கு கலந்து வச்சிருக்க?”
“வேற என்ன பண்ணனும்?”
“நீ ஒன்னும் செய்யாத பெட்ல இருக்க எல்லாத்தையும் எடுத்துட்டு ஒரு ரோஸ் பெட்டல் அதுக்கு நடுவுல ஜாஸ்மின் அப்புறம் கொஞ்சம் கேப் விட்டுட்டு இன்னொன்னுவை அப்போதான் பார்க்க அழகா இருக்கும்..” என்று அடக்கப்பட்ட புன்னகையோடு சொன்ன வசீகரனை கொலைவெறியோடு பார்த்த சாரதி,
“நீ சொன்னதை செய்றதுக்குள்ள விடிஞ்சுடும் பரவாலயா…” என்று மூச்சுக்காற்றை வேகமாக எடுத்தான்.
“பரவால..” என்று அசராமல் சொன்னவனிடம் தன் கையில் இருந்த பூக்கூடையை திணித்து,
“போடாங்க!! இதுக்கு நான் என் பொண்டாட்டிகிட்ட உண்மையை சொல்லிடறேன் இதுக்கு மேலயும் உன்கிட்ட பட முடியாது…” என்று அறையிலிருந்து செல்ல..
“இதைதான் முன்னாடியே சொன்னேன் எங்க கேட்ட?” என்று சத்தமாக சிரித்திருந்தான்.
“என் பொழப்பு சிரிப்பா இருக்கா? வாயை மூடுடா..” என்ற சாரதியின் தோளில் கைபோட்டவன்,
“சகலை எப்பவும் புருஷன் பொண்டாட்டிக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இல்லைன்னாலே பிரச்சனைகள் பெருசாகாது…. வாழ்நாள் முழுவதுக்குமான உறவுடா செய்த தப்பை ஒத்துகிட்டு மன்னிப்பு கேளு கோபமா திட்டினா வாங்கிக்கோ, இல்ல அடியா சந்தோஷமா வாங்கிக்கோ ஆனா ஆஷ்மிக்கு பிடிக்காததை எப்பவும் செய்யாத..
அதைவிட செய்த தப்பை மறைக்க நினைக்காத அப்படி நீ செய்யும் போதுதான் மூணாவது ஆள் உங்களுக்கு இடையில ஈஸியா ப்ளே பண்ணிட்டு போயிடுவாங்க…, என்னை கேட்டா பொண்டாட்டிக்கு பிடிக்காததை செய்யாம இருக்கிறது புத்திசாலித்தனம்… போ ஆஷ்மிகிட்ட சொல்லு கண்டிப்பா புரிஞ்சுப்பா பட் அதுக்கப்புறம் சொன்ன வாக்கை காப்பாத்தணும் யார் மேலயும் சாக்கு சொல்லகூடாது.”
“டேய் இனி எவனாவது என் வாயை திறந்து ஊத்திவிட்டாலும் அவன் மூஞ்சிலையே துப்பிட்டு போயிடுவேனே தவிர கண்டிப்பா குடிக்கமாட்டேன் போதுமா இப்போவே ஆஷ்மிட்ட சொல்லி சரண்டராகிடுறேன் நீ எதுக்கும் ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் பண்ணு”
என்றவன் மனைவியை தேடி செல்ல சிரிப்போடு பார்த்திருந்த வசீகரன் கதவை சாற்றிவிட்டு அமர்ந்தான்.
சாரதி செல்லவும் மூன்றாவது முறையாக கையிலிருந்த புத்தக வடிவிலான ஸ்கராப்புக் வகை ஆல்பத்தை வருடிய வசீகரனின் கரம் இன்னுமே நம்ப முடியாமல் மீண்டுமொரு முறை அதை திறக்க அவன் விரல்கள் மனையாளை காதலோடு வருடியது..
ஆல்பம் அவன் மனைவியினது..!! ஆனால் யாருக்கும் தெரியாமல் அவள் மறைத்து வைத்திருந்தது பார்கவியால் அவன் கரம் சேர்ந்திருக்கிறது..
பின்னே இங்கு சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு இழை ஜீவியோடு மாடிக்கு செல்லவும் இழையின் அறைக்கு சென்ற வசீகரன் தன் கணினியோடு அமர்ந்துவிட்டான்.
அங்கே வந்த பார்கவி வசீயை கண்டு திரும்பி செல்லவும், “என்ன விஷயம் அத்தை வந்ததும் கிளம்பறீங்க?”
“தம்பு கொஞ்சம் திங்க்ஸ் எடுக்கணும்”
“அப்புறம் ஏன் அப்படியே கிளம்புறீங்க?”
“பிங்கி மேல வச்சிருக்கிறதா சொன்னா உங்க மாமாவை கூட்டிட்டுவர மறந்துட்டேன்..” என்றவர் திரும்ப.., “அத்தை நில்லுங்க” என்று அவரருகே வந்தவன்,
“ஏன் நான் எடுத்து கொடுக்க மாட்டேனா இதுக்கெல்லாம் மாமாவை கூப்பிடனுமா?”
“அப்படியில்ல தம்பு..”
“வேற எப்படி? இங்க பாருங்க நான் எப்பவும் உங்களோட அதே தம்பு தான் அதுல எந்த மாற்றமில்லை புரியுதா? தேவையில்லாம எதையும் யோசிக்காதீங்க எங்க இருக்கு சொல்லுங்க”
என்றவன் அவர் கேட்ட பொருட்களை எடுத்து கொடுத்து அடுத்ததாக குறிப்பிட்ட பையை எடுக்க முயல அது மற்றொன்றோடு சிக்கியிருந்ததில் அதுவும் கீழே சரிய தொடங்கியது.
சட்டென இரண்டையும் சேர்த்து பிடித்தவன் பார்கவி கேட்டதை பிரித்து கொடுக்கவும், “தேங்க்ஸ் தம்பு” என்று கிளம்பினார்.
மற்றதை மேலே வைக்க முயல சரிந்திருந்த பையில் அவன் சட்டை துருத்தி கொண்டிருப்பதை கண்டவன் உடனே அதை எடுக்க அதனுள் இருந்த சில பொருட்களும் கையோடு வந்தது.
உடனே பையோடு கீழே இறங்கி பொருட்களை மெத்தையில் வைத்துவிட்டு சட்டையை பிரிக்க அதனுள் மற்றொரு சட்டை மடித்து வைக்கபட்டிருந்தது. அதை எடுத்து பார்த்தவனின் விழிகளில் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி..!!
பின்னே அது வசீகரனின் இறுதிபரீட்சை அன்று அவன் நண்பர்களால் இங்க் மற்றும் வண்ண பொடிகள் தூவப்பட்டிருந்த சட்டை…
அப்படியே வீட்டிற்கு சென்றால் திருவேங்கடம் கோபிப்பார் என்பதால் ஜித்துவிடம் வேறு சட்டை எடுத்து வர சொல்லி இதை அவனிடம் கொடுத்து அனுப்பியிருந்தான்.
ஆனால் அது எப்படி இங்கு இவளிடம் என்று புரியாமல் அமர்ந்திருந்தவன் விழிவட்டத்தில் விழுந்தது வசீயின் ஸ்போர்ட்ஸ் பேக்!!
‘இது தொலைந்து போனதாக தானே ஜித்து சொன்னான்.. இங்கு இழையிடம் எப்படி?’ என்று மேலும் அதிர்ந்து போனவன் எடுத்து பார்க்க உள்ளே அவன் பயன்படுத்திய பேனா, பேட்ச், டை, இரண்டு புத்தகங்கள், பந்து, க்ளவுஸ், டிஃபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில் இன்னும் சில பொருட்கள் இருக்க ஆச்சர்யமாக பார்த்திருந்தாலும் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தவனின் முகத்தில் மென்னகை படர்ந்தது.
இப்போது ஆர்வம் அதிகரிக்க பையை திறந்து பார்க்க அதில் வசீ பயன்படுத்திய ஸ்போர்ட்ஸ் ஷூ!!
வற்றாத புன்னகையோடு கையிலெடுத்தவனுக்கு அன்று இதை தொலைத்ததற்காக ஜித்துவை அடித்தது நியாபகம் வர சட்டென சப்தமாக சிரித்து விட்டான்.
அடுத்து அவன் கையில் ஒரு பென்ட்ரைவும், புத்தக வடிவிலான ஃபோட்டோ ஆல்பமும் கிடைக்க பென்ட்ரைவை கணினியின் மீது வைத்தவன் ஆல்பத்தை திறக்கவும் அதிர்ந்து போனான்.
பின்னே முதல் பக்கத்திலேயே இழையின் பிறந்தநாள் விழாவின்போது குழந்தைகள் மட்டும் எடுத்திருந்த புகைப்படத்தில் அவர்கள் இருவரை மட்டும் தனியாக எடுத்து ஒட்டி வைத்திருந்தாள்.
அதன் மறுபக்கத்தில் தேதியிட்டு அன்று தோழியின் திருமணத்தில் நடந்ததை எழுதி “இது நடந்து ஒருவாரமாகிடுச்சு இன்னும் என் மனசுல உங்க முகம் மட்டும்தான் தோணுது எனக்கு இது சரியா தப்பான்னு தெரியலை” என்று எழுதியிருந்தாள்.
வசீ உடனே தேதியை பார்க்க அது அவள் கல்லூரி சேர்ந்த பிறகு என்பதை அறிந்து ஆசுவாசம் கொண்டான்.
அடுத்த பக்கத்தை எடுக்க அதில் வசீயின் மற்றொரு சிறுவயது புகைப்படம் அதிலும் அவனைப்பற்றி எழுதியிருந்தாள். ஆச்சர்யத்தில் வசீகரன் மேலும் பக்கங்களை புரட்ட அனைத்திலும் வசீயின் புகைப்படமே!
அதுவும் ஆஷ்மியின் வீட்டில் தொடங்கி ஏலகிரியில், சாரதியின் திருமணத்தில் என்று பலகோணங்களில் விதவிதமாக படமெடுத்திருந்தவள் அடுத்த பக்கத்தில் அவன் இந்திரவர்மனை அடிப்பதையும் எடுத்து வைத்திருப்பதை கண்டு அதிர்ந்து போனான்.
அடுத்த பக்கத்தை திருப்ப அதில் வசீ காவல்துறை அதிகாரியிடம் பேசியபோது மருத்துவமனையில், அன்று வீட்டில் உணவருந்தியது, பைக்கில் செல்லும்போது, புத்தக கண்காட்சியில் என்று அவனுடனான ஒவ்வொரு நொடியையும் புகைப்படம் எடுத்து ஒட்டி ஒவ்வொன்றின் கீழும் அவனை பற்றிய குறிப்பையும் எழுதியிருந்தாள்.
இறுதியாக அவர்களின் நிச்சயத்தில் இருவரும் சேர்ந்திருந்த புகைப்படத்தோடு ஆல்பத்தை நிறைவு செய்திருக்க வசீகரனுக்கு சொல்லில் வடிக்கவியலா உணர்வுகளின் ஆர்பரிப்பு!
என்னதான் இத்தனை வருடங்கள் அவன் தேடிய காதல், அவன் காத்திருந்த காதல் அவளான போதும் நிச்சயம் அவனிதை எதிர்பார்க்கவில்லை.
பெற்றோருக்காக திருமணம் என்று சொல்லி இழை மறைத்த போதும் பெண்ணின் காதலை உணர்ந்துகொள்ள வசீகரனுக்கு பெரிதாக நேரம் தேவைப்படவில்லை.
அதிலும் இழையின் கையை பிடித்த இந்திரவர்மனின் கையை வெட்டியவள் பெண் பார்க்க வந்த போது அவன் முத்தத்தை ஏற்றதன் மூலம் அவள் பிடித்தத்தை அறிய செய்திருந்தாள்.
ஆனால் இப்படி அவளின் மொத்தமும் அவனாக இருப்பான் என்பதை சுத்தமாக வசீ எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியில் திளைத்திருந்தவனுக்கு எப்படி இது சாத்தியம் என்று அறிந்துகொள்ளும் ஆவல் பெருக உடனே மனைவியை அழைத்தான்.
ஆனால் அதற்குள் கைலாசம் குறுக்கிடவும் அவர்முன் எதையும் காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக மனைவியை தன்னோடு அழைக்க அதற்குள் அவள் சித்தி அழைத்து சென்றுவிடவும் அறைக்கு திரும்பியிருந்தான்.
சிலநொடிகளில் சாரதி உணவருந்த அழைக்கவும் “நான் குளிச்சுட்டு வரேன்டா நீங்க சாப்பிடுங்க” என்று அனுப்பியவன் பொருட்களை எல்லாம் பெட்டியில் எடுத்து பத்திரபடுத்திவிட்டு குளிக்க சென்றுவிட்டான்.
இப்போது சாரதி ஆஷ்மியை தேடி செல்லவும் மீண்டும் ஆல்பத்தோடு அமர்ந்து நிதானமாக அவள் குறிப்புகளை படித்தவனின் இதழ்களில் புன்னகை நெளிந்தது. பின் கணினியில் பென்ட்ரைவை பொருத்தி ஹெட்செட் போட்டுக்கொண்டு வீடியோக்களை ஒளிபரப்பினான்.
“எத்தனை வருஷமா பார்ப்பேனான்னு இருந்த உங்களை முதல்முறை இந்த ஃபோட்டோல தான் பார்த்தேன்” என்று ஆல்பத்தில் ஆஷ்மியின் வீட்டில் அமர்ந்திருந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டிய இழை,
“என்னுடைய ஒவ்வொரு நாள் வேண்டுதலுமே உங்களை கடவுள் எனக்கு சீக்கிரம் காட்டனுங்கிறது தான். பார்த்ததுமே எனக்கு அவ்ளோ சந்தோஷம் உடனே அம்மாகிட்ட சொல்லலாம்னா நீங்க சின்ன வயசுக்கும் இப்போ இருக்கிறதுக்கும் தாடி மீசைன்னு உங்ககிட்ட நிறைய மாற்றம் எப்படி கண்டுபிடிச்சன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்ல? அதான் அவங்க கிட்ட சொல்லலை..”
“அதேநேரம் ஆஷ்மிகிட்ட உங்களை பத்தி விசாரிக்கலாம்னாலும் பயமா இருந்தது… எப்பவும் எங்க சித்தப்பா, சித்தி, தாத்தா எல்லாரும் எங்க அம்மாவை டார்கெட் பண்ணுவாங்க. நான் விசாரிச்சது ஏதாவது ஒருவகையில அவங்களுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்! அதான் அவளோட கல்யாணம் வரைக்கும் காத்திருந்தேன்” என்று இருபது நிமிடத்துக்கும் மேலாக பேசியிருந்தாள்.
அடுத்த வீடியோவை ஒளிபரப்ப, “உங்களை நான் ஏலகிரிமலைக்கு போற வழியில பார்த்தேன்” என்று புகைப்படத்தை காட்டியவள் “appearances can be deceptive இல்லையா? எப்பவும் நாம பார்க்கிற எல்லாமே சரியானதா இருக்கனும்னு அவசியமில்ல. என் மனசு சொல்லுது நீங்க இப்படியில்லன்னு. நிச்சயம் இதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். நான் அதை நம்பறேன்” என்றதும் கேட்டுக்கொண்டிருந்த வசீகரன் அதரங்கள் இன்னுமே அழகாய் விரிந்தது.
பின்னே அது அவன் சாரதி சொன்னதன் பேரில் மதுபானத்தோடு இருக்கும் புகைப்படம்.
“நிச்சயமா நான் ஸ்வேதா அக்கா பத்தி எதுவும் பேசமாட்டேன். உங்களுக்கு பிடிக்காதுன்னு நான் பாட்டு மாத்திட்டேன்” என்று ஒவ்வொரு வீடியோவாக பார்த்து கொண்டிருந்தவனின் முகத்தில் நொடிக்கு நொடி புன்னகை அதிகரிக்க ஒருகட்டத்தில் மூச்சடைத்து போனது ஆணவனுக்கு.
மனையாளின் காதலின் ஆழம் கண்டவனின் முகம் உணர்வுகுவியலாக மாறியிருந்தது!
பின்னே கணினியில் பேசிக்கொண்டிருந்த இழை, “நான் நக்ஷத்திரா மாதிரி கிடையாது. கண்டிப்பா உங்களை கோபபடுத்தும் விதமா நடந்துக்க மாட்டேன்! உங்களை பற்றி அதிகமா தெரியலைன்னாலும் நிச்சயம் விட்டு கொடுப்பேன், பொறுத்து போவேன். உங்களை கஷ்டபடுத்த மாட்டேன். எனக்கு நீங்களும் நம்மோட குழந்தைகளும் தான் முதல்ல. அதுக்கு அப்புறம் தான் வேலை!”
“சம்பாதிக்க, சாதிக்க வயசு எப்பவும் தடையா இருக்காதுன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க. ஒருத்தரோட திறமையை யாரும் தட்டி பறிக்க முடியாது. ஆனா வாழ்க்கை அப்படியில்ல. குடும்பம், குழந்தைகளை விட்டுட்டு சம்பாதிக்கறதுக்காக நாம எடுக்குற ஓட்டம் வாழ்க்கையை விலையா எடுத்துக்கும். அதுக்கு உங்கப்பாவும் நானும் எடுத்துக்காட்டுன்னு சொல்லுவாங்க. அதனால உங்களுக்கு எத்தனை குழந்தைங்க…” என்று பேசிக்கொண்டே சென்றவளின் முகத்தில் அதிகரித்த செம்மையை கண்டு இங்கே வசீகரனின் முகத்தில் வெட்க புன்னகை!
அங்கே வந்த சாரதி வசீகரனை கண்டு அதிர்ச்சியோடு “டேய் வசீ வெட்கபடறியாடா?” என்றான்.
அவனை எதிர்பாராதவன் உடனே கணினியை மூடிவிட்டு, “கதவை சாத்தி இருந்தேனே நீ எப்படிடா வந்த?”
“வசீ நீயாடா?” என்ற ஆச்சர்யத்தோடு சாரதி. “ச்சிய் போடா” என்ற வசீ முகத்தை திருப்பிக்கொண்டான்.
“டேய் என்னடா இது புதுசா?” என்று விடாமல் அவன் முன்னே சாரதி நிற்க…
“ப்ளீஸ் கொஞ்சம் தனியா விடுடா நான் சொல்றேன்” என்றவன் சாரதியை வெளியே தள்ளி கதவை சாற்றிவிட்டு மீண்டும் கேட்க தொடங்கினான்.
“உங்களுக்கு ஒன்னு தெரியுமா இன்னைக்கு ஜீவி உங்களுக்கு டிரிங்கிங் ஹாபிட் இருந்தா என்ன செய்வனு கேட்டா எனக்கு சரியான கோபம். எப்படி இந்த முகத்தை பார்த்த பிறகும் அவளுக்கு அப்படி கேட்க தோனுச்சு?” என்று சாரதியின் திருமணத்தில் இருந்தவனை சுட்டிகாட்டி கேட்டவளின் கோபம் ஆடவன் மனதை சத்தமின்றி கொள்ளைகொள்ள வசீகரன் இமைக்கவும் மறந்திருந்தான்.
“அன்னைக்கு நீங்க வந்தப்போதான் என்னோட உயிரே மீண்டது தெரியுமா? இல்லன்னா அந்த பொறுக்கியை…” என்றவள் மேலும் பேசியதை கேட்ட வசீயின் இமை மீறியது ஒற்றை துளி!!
அடுத்த வீடியோவில் வசீயின் சட்டையை போட்டு கொண்டிருந்தாள்.
“இனி நம்மோட கல்யாணம் வரை இதுதான் என்னோட நைட் ட்ரெஸ்!! எப்படியிருக்கு நல்லாயிருக்கேனா?” என்று எழுந்து ஒருசுற்று சுற்றி காட்டிட இங்கே கணவனோ (breathtaking moment) மூச்செடுக்கவும் மறந்திருந்தான்.
“கல்யாணத்துக்கு அப்புறம் கொடுப்பேன்னு நினைக்காதீங்க அப்பவும் கொடுக்க மாட்டேன். வேணும்னா வேற சட்டை வாங்கி கொடுக்கறேன் கஞ்சூஸ்” என்று விழிகளை சுருக்கி இதழ்களை சுழித்திருந்தவள் தன் சிறுசிறு அசைவிலும் ஆடவனை பித்தனாக்கி கொண்டிருந்தாள்.
“பிடிச்சிருக்கான்னு கேட்டீங்களே” என்று வெட்கத்தோடு தொடங்கிய இழை அடுத்தடுத்து இருந்த காணொளிகளில் அவன் சட்டையை மட்டுமே அணிந்திருந்தாள்.
ஆர்பரிக்கும் உணர்வுகளின் அழுத்தம் தாளாது மீசையை கடித்திழுத்து, தலையை அழுத்தமாக கோதி, வலக்கரத்தை குவித்து உதட்டின் மீது வைப்பது, பின்னங்கழுத்தை வருடி கொடுத்து, இருகரங்களையும் பின்னே கோர்த்து, மூச்சை ஆழ்ந்து வெளியிட்டு என்று தன்னை கட்டுபடுத்த முயன்றவன் இழையாளின் வீடியோக்கள் அத்தனையையும் பார்த்து முடிக்கையில் முற்றிலுமாக தன்னை தொலைத்திருந்தான்.
அந்தளவு தன்மீதான மனையாளின் நிபந்தனையற்ற காதலும் நம்பிக்கையும் ஆடவனை வேரோடு சாய்த்திருந்தது. வசீகரனின் ஒவ்வொரு அணுவும் அவள் காதலில் திளைத்திருந்தது.
இத்தனை நாட்கள் அவளுக்கான காத்திருப்பை எத்தனை அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறாள் அவன் மனையாள்!!
கணினியை அணைத்துவிட்டு கண்களை மூடி சாய்ந்தவனின் முகத்தில் உணர்வுகள் ஊர்கோலம் நடத்தியபோதும் புன்னகை நிறைந்தரமாக குடிகொண்டிருந்தது. ஆனால் சிலநொடிகளிலேயே அதீத மகிழ்வு மூச்சடைக்க செய்திட உடனே அறையை விட்டு வெளியேறியவன் தோட்டத்தில் சென்று நின்றுவிட்டான்.
அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ரீங்காரமாக அவன் செவியில் சுழன்றிருக்க விழிகளிலோ அவள் பின்பமே நிறைந்திருந்தது. பார்வையை திருப்புமிடமெல்லாம் பாவையின் பேச்சும் விழி அசைவும் அவனை முழுதாக கொள்ளையிட தன்னை முற்றிலுமாக தொலைத்து கொண்டிருந்தான்.
இப்போதே ஓடி சென்று இழையை அள்ளி கொண்டாடும் வேகம் பிறக்கவும் “தாங்குவாளா?” என்ற கேள்வியும் சேர்ந்தே பிறந்தது.
தனியாக நின்று புன்னகைத்து கொண்டிருப்பவனை கண்ட சாரதி, “என்னடா ஆச்சு ஏன் ரூம்ல இருந்து வந்து சிரிச்சிட்டிருக்க?” என்று கேட்கவும் சாரதியை இறுக கட்டிக்கொண்டான்.
“வசீ ஏன்டா?”
“ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சாரதி!! ஐ ஆம் தி ஹாப்பியஸ்ட் அண்ட் லக்கியஸ்ட் மேன் இன் தி வேர்ல்ட்டா” என்றவனின் அணைப்பு இறுகிகொண்டே போனது.
“என்னடா..” என்றவனுக்குமே நண்பனின் இந்நிலை புதிது!!
அவனுக்கு ஸ்வேதா குறித்தும் தெரியும் இழை பேசியதும் தெரியும். அப்போதெல்லாம் இழையை கண்டுபிடிக்க வேண்டும், பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் என்று பேசுவானே அன்றி இந்தளவு தன்னை வெளிபடுத்துபவன் கிடையாது.
“வசீ விடுடா எனக்கு மூச்சுவிட முடியலை”
“எனக்கு பேச முடியலைடா”
“டேய் எலும்பு நொறுங்குற சத்தம் கேட்குது தயவுசெய்து விடு!!” என்று வசீயை பிடித்து தள்ளியவன் “என்னன்னு சொல்லி தொலைடா” என்று மூச்சை வேகமாக எடுத்துவிட்டு கழுத்தை பிடித்து கொண்டான்.
“எனக்கு சொல்ல தெரியலை… அப்படியே இங்க பிசையுது” என்று நெஞ்சை சுட்டிகாட்டியவன்,
“தாங்க முடியல” என்று மீண்டும் நண்பனை அணைக்கபோக சாரதியோ சிக்குவேனா என்பதுபோல வீட்டிற்குள் ஓட்டம் எடுத்திருந்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
+1

