
இந்திரவர்மன் வீட்டோடு நிச்சயம் வைத்துக்கொள்ளலாம் என்றதில் கைலாசம் நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே தெரிவித்திருந்தார். ஒருநாள் முன்னதாக அக்கம் பக்கம் சொல்லிக்கொள்ளலாம் என்றிருந்தது நல்லதாகி போனது.
இப்போது சம்பந்தம் ரத்தாகியது பற்றி தம்பிகளுக்கு விவரித்தவர் தொடர்ந்து திருவேங்கடத்தின் குடும்பம் வசீகரனுடனான நிச்சயம் குறித்த நாளில் வைத்திருப்பதையும், திருமணம் அடுத்த மாதம் என்று முடிவெடுத்திருப்பதையும் கூறியிருந்தார்.
பெண்பார்த்துவிட்டு சென்றபின் வசீகரனுக்கு அவனது வேலைகள் வரிசைகட்டி இருக்கவும், நிச்சயத்திற்கு பிறகு அதையெல்லாம் பார்க்குமாறு கூறிய திருவிடம் தவிர்க்க முடியாதது புரிந்துகொள்ளுங்கள் என்று கூறி உடனே கிளம்பிவிட்டான்.
வெள்ளியன்று மாலை நடைபெறவிருக்கும் நிச்சயத்திற்கு மதியம் போலதான் அவனால் வரமுடியும், யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்பதையும் சேர்த்தே சொல்லியிருந்தான்.
இருநாட்களும் இழையிடம் பேசுவதற்கும் அவனுக்கு பெரிதாக நேரம் கிடைக்கவில்லை. அன்று முத்தமிட்டதை எதிர்பாராத இழைக்கு, அத்தனை நாட்கள் அவன் வேறொரு பெண்ணை காதலித்துக்கொண்டிருப்பானோ என்றிருந்த கலக்கம் விடைபெற, மனமெங்கும் ஏதோ இனம் புரியா தித்திப்பு விரவியது.
வசீகரனின் கோபம் அவளறிந்ததுதான். என்றாலும் வருடங்கள் பல கடந்தும் அவனை சந்தித்திருப்பவளுக்கு பெரிதாக வசீகரன் குறித்த அடிப்படை விஷயங்கள்கூட தெரியாது. என்னதான் எதிர்பார்ப்பில்லாமல் திருமண பந்தத்தில் இணைய அவள் முடிவெடுத்து இருந்தாலும், ஏனோ வசீகரன் மீதான நிபந்தனையற்ற நம்பிக்கையும் காதலும் அவளை உந்திச் சென்றதில், திட்டமிட்டு திருமணம் வரை கொண்டு வந்துவிட்டவளுக்கு அவனை தொடர்புகொண்டு பேசும் தைரியம் சுத்தமாக எழவில்லை.
ஆனால் வரவிருக்கும் நிச்சயத்தையும், அதன்பின் வசீயுடனான வாழ்வு குறித்து ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள்.
நிச்சயத்தன்று கைலாசத்தின் வீடே அலங்காரத்தில் ஜொலித்துக்கொண்டிருக்க, அதற்கு நிகராக அழகு நிலைய பெண்களின் கைவண்ணத்தில் வசீகரனின் தேர்வான பச்சை நிற மென்பட்டில் இழையாள் தேவதையாக ஜொலித்துக்கொண்டிருந்தாள்.
புடவை எடுக்க வசீயால் உடன் செல்ல முடியவில்லையே தவிர, அன்னையரிடம் “இந்த நிறத்தில் தான் எடுக்க வேண்டும்” என்று கூறிவிட்டே கிளம்பினான்.
ஜீவி அவள் அறையினுள் வரவும், “உன்னை எப்போ வர சொன்னேன், ஏன்டி லேட்?”
“இதோ பார், உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. ஆன்ட்டிகூட பழகின பழக்கத்துக்கு அவங்க பொண்ணு நிச்சயத்துக்கு வந்திருக்கேன்” என்று எங்கோ பார்த்து பதிலளித்திருந்தாள் ஜீவிகா.
“என்னடி பேசுற? அப்புறம் ஏன் ரூம்க்கு வந்த?” என்று இழையும் கோபமாகவே கேட்டாள்.
“அவங்க நீ ரெடியான்னு பார்க்க சொன்னாங்க. அதான் வந்தேன்” என்று தோள்களை குலுக்கினாள்.
“என்ன ஜீவி, உன்னோட பெஸ்ட் ஃபிரெண்ட் நிச்சயத்துக்கு வந்து இப்படி சொல்லலாமா?” என்று ஆரம்பித்தவளை தடுத்தவள்,
“யாருக்கு யார் ஃபிரெண்ட்? இதோ பார், உனக்கும் எனக்கும் எந்த பேச்சும் இல்ல. இதோட எல்லாம் முடிஞ்சது. நான் கிளம்பறேன்” என்று ஜீவி வெளியேற, “ஹே… ஹே ஜீவி…” என்று கையைப் பிடித்தாள்.
“எதுக்கு? இன்னும் பெரிய பெரிய அணுகுண்டா போடவா? அதுக்கு நான் ஆளில்லை தாயே. என்னை விட்டுட்டு”
“ஜீவி, உன்கிட்ட மறைச்சது தப்பு தான்! இல்லைன்னு சொல்லலை. ப்ளீஸ் டி, ஸாரி வா” என்றழைத்த போதும் எதையும் காதில் வாங்காமல் ஹாலில் சென்று அமர்ந்து விட்டாள் ஜீவிகா.
இழை அவளுக்கு முயற்சி செய்தபோதும் தொடர்ந்து அவளழைப்பை துண்டித்து கொண்டிருந்தாள் ஜீவிகா.
“பிங்கி, உன்னை பெரிம்மா கூப்பிடுறாங்க” என்ற ஆஷ்மிதா அவளை அழைத்துச் செல்ல, நிச்சய பத்திரிகை வாசிக்கப்பட்டு மோதிரம் மாற்றப்பட்டது.
பின் மணமக்கள் இருவரையும் அமர்த்தி நலங்கிட தொடங்கவும், மருமகளுக்கு நகைகளை அணிவித்த நாயகி முதலில் நலங்கிட, அவரைத் தொடர்ந்து அபிராமி, பார்கவி, ஏனைய பெண்கள் என்று நலங்கிட்டு முடித்தனர்.
முடிந்தவரை இழை வசீகரனின் புறம் திரும்பாமலிருந்தாலும், மோதிரம் மாற்றும்போது அவளையுமறியாமல் விழிகள் அவன் வசம் செல்லத்தான் செய்தது. குறுநகையோடு அவள் அவஸ்தையை பார்த்திருந்த வசீகரன்,
“ஏன் நெர்வஸா இருக்க?” என்று கேட்க, பதிலின்றி நின்றிருந்தவளை வசீகரனை அழைத்துச் சென்று சாரதி காப்பாற்றியிருந்தான்.
நிச்சயம் முடிந்து மேலும் இருநாட்கள் கழிந்த நிலையில்…
புல்லட்டை நிறுத்தி இறங்கியவனை கண்டு, “வா வா தம்பு, எப்படி இருக்க? அம்மூ, அபி, அண்ணா எல்லாம் வரலையா?”
“இல்லத்தை, அவங்களுக்கு திடீர்னு ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு. நான் மட்டும்தான் வந்தேன்.”
“சரி, உள்ள வா.”
“இன்விடேஷன் டிசைன், கல்யாண மண்டப டெக்கரேஷன், அப்புறம் கேட்டரிங் பேசும் முன்ன உங்களுக்கு என்னென்ன ஐடெம்ஸ் சேர்த்தனும்னு சொன்னீங்கன்னா பைனலைஸ் பண்ண ஈசியா இருக்கும்.”
“கல்யாணத்துக்கு இன்னும் நாளிருக்கே பா.”
“ஆனா எனக்கு டைட் ஸ்கெட்யூல். அப்புறம் நேரம் கிடைக்காது. மாமா எங்கத்தைக் காணோம்?” என்று அமர்ந்தவனின் விழிகள் வீட்டை துழாவியது.
“அவர் கடைக்கு போயிருக்கார் தம்பு. பிங்கி ஏதோ வாங்கணும்னு வெளியில போயிருக்கா. இப்போ வந்துடுவா. இரு, உனக்கு குடிக்க எடுத்துட்டு வரேன்…” என்று கவி சென்ற அதே நேரம், வசீயின் புல்லட்டை பார்த்தவாறே வந்த இழை தன் மலர்ச்சியை மறைத்தவாறு,
“வாங்க… எப்போ வந்தீங்க?” என்றவள், அவன் பதிலளிக்கும் முன் சமையலறைக்கு செல்ல, கவி அவளிடம் தண்ணீர் கொடுத்து அனுப்பினார்.
குடித்துக்கொண்டிருந்தவன் எதுவும் கேட்கும் முன்னமே மீண்டும் சமையலறைக்குள் நுழைந்திருந்தாள் இழையாள்.
“பிங்கி, தம்புக்கு டிஃபன் எடுத்து வை.”
“ம்மா, நீங்களே வைங்களேன்.”
“ஏன், நீ என்ன செய்யப் போற?”
“கிளினிக் போகணும்மா.”
“தம்புவை விட உனக்கு கிளினிக் முக்கியமா? சொன்னதை செய்…” என்றதும் வெளியில் வந்தவள், “சாப்பிட வாங்க” என்று அவனுக்கு தட்டு எடுத்து வைக்க, வசீயின் பார்வை மொத்தமும் பெண்ணிடத்தில் குவிந்து கிடந்தது.
இதைக் கண்ட இழையோ சட்டிக்குள் தலையை புதைத்துக்கொண்டவளாக, உள்ளேயிருந்த நாலு இட்லியை தேடோ தேடு என்று தேடி, முடிந்தவரை அவனைப் பார்ப்பதை தவிர்த்து நேரத்தை கடத்தியவள், ஒருவழியாக பரிமாறி அவன் சாப்பிடத் தொடங்கியவுடன் தன் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
அப்போது மட்டுமல்ல, அடுத்த பதினைந்து நிமிடங்களுமே இழையிடம் பேச வேண்டி வந்திருந்தவனுக்கு பிடிகொடுக்காமல் இழை ஒவ்வொரு அறையாக மாறிமாறி பயணிக்க, ஒருகட்டத்தில் வசீயின் பொறுமை ஆட்டம் காண, அவளை அழைக்கும் எண்ணத்தை கைவிட்டு,
“ஒரு கால் பேசிட்டு வந்துடுறேன்தே” என்று வெளியில் வந்துவிட்டான்.
அவன் சென்ற சில நிமிடங்களில், “ஒரு முக்கியமான கேஸ் இருக்கு. ப்ளீஸ், நான் போயிட்டு சீக்கிரம் வந்துடட்டுமா?” என்று அவனனுமதிக்கு காத்து நின்றாள் இழையாள்.
வசீ “சரி” என்றதுமே, பார்கவியிடம் தெரிவித்தவள் உடனே கிளினிக் நோக்கி ஓடியிருந்தாள்.
அவள் கிளம்பவும் சாரதிக்கு அழைத்த வசீகரன், “சகலை எங்க இருக்க?” என்றான்.
“மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருக்கேன்டா.”
“நானும் மாமியார் வீட்டுக்குத்தான் வந்திருக்கேன். உடனே இங்க வா.”
“எதுக்குடா?”
“இழைகிட்ட பேச வந்தேன்டா… ஆனா… ப்ச்… இதென்ன கேள்வி கேட்டுட்டு. சொல்றேன்ல, உடனே வா.”
“டேய், பொண்டாட்டியோட விருந்துக்கு வந்திருக்கேன்டா. எப்படி விட்டுட்டு வர?”
“சகலை, அவளை பார்க்க வந்தா ஒரு இடத்துல இல்லாம ரூம்ரூமா சுத்தினவ கிளினிக்குப் போயிட்டா. அதான் வா.”
“அதுக்கு நான் எதுக்குடா? நீ தனியா போய் பேசு.”
“அது எனக்கு தெரியாதா? சொன்னதை செய்.”
“வசீ, சாதாரணமா இருந்தா பரவல்ல. விருந்துடா… ஆஷ்மி…” என்று தயங்க,
“டேய், உனக்கு விருந்து முக்கியமா வாழ்க்கை முக்கியமா?”
“என்னடா பேசுற?”
“இன்னும் பத்து நிமிஷத்துல இங்க வரலனா, ஆஷ்மிக்கு வீடியோவை அனுப்பிடுவேன். வசதி எப்படி?” என்று இரக்கமே இல்லாமல் கேட்க,
“வந்து தொலைக்கிறேன், வை” என்றவன் சொன்னதுபோலவே வந்தான். அவனோடு இழையை தேடி சென்றான்.
இருவரையும் ஒரு சேர பார்த்த இழை, “வாங்க… வாங்க மாமா. என்ன விஷயம்?” என்றாள்
“இவனுக்கு ரொம்ப நாளாவே பல்வலி இருந்தது. இன்னைக்கு விருந்துக்கு போன இடத்துல சாப்பிடவே முடியாத அளவுக்கு அதிகமாயிடுச்சு. அதான் பல் எடுத்துட்டு போக வந்தான்” என்றதுமே அதிர்ந்துபோன சாரதி,
“இதெல்லாம் எப்போடா நடந்தது?” என்று நண்பனை பார்த்தான்.
“எந்த பல் மாமா? இங்க வந்து உட்காருங்க, பார்க்கிறேன்.”
“டேய், என்னடா இது…” என்றவனின் தோள்களைப் பிடித்து, “உட்காருடா” என்று அமர்த்தினாள்.
“எங்க வலி இருக்கு, சொல்லுங்க” என்று அவனை ஆராய்ந்த இழை, “ஒரு மூணு பல்லுக்கு ஃபில்லிங் பண்ண வேண்டியதிருக்கு மாமா. இல்லன்னா ரூட் வரை போயிடும். இன்ஃபாக்ட் அதுல ஒன்னு கொஞ்சம் அதிகமாவே டேமேஜ் ஆகியிருக்கு. உங்களுக்கு ஓகேன்னா இப்பவே பண்ணிடலாம்.”
சாரதியை முந்திக்கொண்டு, “இல்ல இல்ல, ஃபில்லிங்கெல்லாம் வேண்டாம். நீ பல் எடுத்துடு” என்றான்.
“ஏதே!” என்று சாரதி அதிர்வோடு வசீகரனை பார்க்க, “இல்லைங்க, அந்த அளவுக்கு சீரியஸில்லை. கிளீன் பண்ணிட்டு ஃபில் பண்ணினா…” என்று இழை பதிலளிக்கும் போதே, “ஒரு நிமிஷம் வந்துடுறேன்” என்று வசீயை தள்ளிக்கொண்டு அவள் அறையிலிருந்து வெளியே வந்த சாரதி,
“ஏன்டா, இழை கிட்ட பேசணும்னு கூட்டிட்டு வந்துட்டு என்னடா நடக்குது இங்க?” என்று சீறினான்.
“சொன்னா புரிஞ்சுக்கடா. அவ ஆல்ரெடி பயந்த சுபாவம். தொட்டதுக்கெல்லாம் அழுவா. பேசலைன்னாலும் பரவாயில்லை. அஞ்சு நிமிஷம் சேர்ந்த மாதிரி ஒரு இடத்துல நிற்கமாட்டேங்கிறா. எனக்கு கேரளா ட்ரிப் இருக்கு. தொடர்ந்து ஸ்கெட்யூல் பண்ணிட்டேன். இன்னைக்கு விட்டா கல்யாணத்தப்போ தான் பார்க்க முடியும்.”
“பல் எடுக்க எப்படியும் ஒரு மணி நேரம் வரை ஆகும். எனக்கும் அவளை பார்க்க டைம் கிடைக்கும்ல. எனக்காக அட்ஜஸ்ட் பண்ணுடா. வலிக்காம எடுக்க சொல்றேன்.” என்று சொல்ல, மஞ்சள் தெளித்து மாலையிட்டு வரப்பட்ட ஆடாக தன்னை உணர்ந்த சாரதி,
“நீ சைட் அடிக்க நான் பல் எடுக்கணுமா? மனசாட்சி இருக்காடா உனக்கு?” என்றான்.
“இருக்கிறதாலதான் ஒரு பல்லோட விட்டேன். இப்படியே பேசினா நாலு பல் எடுக்க சொல்லிடுவேன். பார்த்துக்கோ.”
“இதெல்லாம் அநியாயம். உனக்கு ஃபிரெண்ட்டா வாச்சது குத்தமாடா?”
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
5
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இதை முன்னாடியே பண்ணியிருக்கலாமே.. எதுக்கு சாரதி பல்லை புடுங்குனிங்க🤣🤣🤣