
“அத்தை சொன்னா கேளுங்க உங்க மேல எந்த தப்புமில்ல..”
“இல்ல தம்பு என் பொண்ணு என்னை முழுசா நம்பியிருந்தா அவசரத்துல நானே சரியா விசாரிக்காம சென்னையிலேயே இருக்கான் குடும்பமும் நல்லதா இருக்கு கண்ணுக்கு நிறைவா இருக்கான்னு சரியா விசாரிக்காம அவ வாழ்க்கையை படுகுழியில தள்ள இருந்தேனே…”
“அதான் இப்போ எதுவும் ஆகலையே அத்தை எதுக்கு அழறீங்க? இனியும் இழைக்கு இதுபோல நடக்க நான் விடமாட்டேன்?” என்று அவர் கண்ணீரை துடைத்தவன், “நீங்க தைரியமா இருந்தாதானே இழையும் இருப்பா அழுகையை நிறுத்துங்க..” என்றவனின் பேச்சில் தான் பார்கவியின் கண்ணீர் மெல்ல குறைந்திருந்தது.
வசீகரனுக்கு அழைப்பு வர, “முக்கியமான கால் பேசிட்டு வந்துடுறேன்” என்று வெளியில் சென்றான்.
அவன் செல்லவும் “சரி கவி பத்திரமா பார்த்துக்கோ நாங்க இன்னொரு நாள் வரோம்” என்று அனைவரும் கிளம்ப எத்தனிக்க.. “ம்மா என்னம்மா இது எதுவும் பேசாம கிளம்பறீங்க?” என்றான் ப்ரணவ்.
“ப்ச் ப்ரணவ் சம்பந்தம் பேசக்கூடிய நேரமா இது! முதல்ல அவங்க இந்த அதிர்ச்சியில இருந்து வெளில வரட்டும் அப்புறம் மெதுவா பேசிக்கலாம்..”
“என்னம்மா பேசுறீங்க ஒருவேளை அத்தை திரும்ப வெளியில மாப்பிள்ளை பார்த்தா என்ன செய்வீங்க? நம்ம வீட்டைவிட அண்ணிக்கு பாதுகாப்பான இடம் வேறெதுவும் இருந்திட முடியுமா சொல்லுங்க? அதைவிட அண்ணாவை யோசிச்சீங்களா நீங்க? யார் என்ன சொன்னாலும் சரி என்னால அண்ணியை விடமுடியாது” என்றவன் யாரும் எதிர்பாரா வண்ணம் பார்கவியின் முன் சென்று,
“அத்தை எதுக்கு அழறீங்க பேசாம அண்ணியை அண்ணாக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துடுங்க நீங்க பயப்படாம இருக்கலாம்..” என்று போட்டு உடைத்திருந்தான்.
“பிரணவ்!” என்று அனைவரும் அவனை அதிர்வோடு பார்க்க.. பார்கவியும் “அண்ணி” என்ற விளிப்பில் புரியாமல் தான் அவனை பார்த்தார்.
“ஆமாத்தை எங்க அண்ணாக்கு அண்ணியைவிட பொருத்தமான பொண்ணு இருப்பாங்களா இல்ல எங்கண்ணனை விட சூப்பரான மாப்பிள்ளையை நீங்களும் பார்த்திடுவீங்களா?” என்று கேட்க,
“ப்ரணவ் இதென்ன அதிகப்ரசங்கிதனம் எந்த நேரத்துல என்ன பேசுறதுன்னு தெரியாம உளறாத அமைதியா இரு..” என்று பசுபதி அதட்டல் போட்டார்.
அவனோ அதையெல்லாம் காதில் வாங்காமல், “நிச்சயம் எங்க அண்ணா நீங்க நினைக்கிறதைவிட அண்ணியை நல்லா பார்த்துப்பார்.. அவரை பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னா நீங்க விஜயசாரதி அண்ணாவைகூட விசாரிச்சுக்கோங்க… டேய் ஜித்து என்ன பார்த்துட்டு இருக்க சொல்லுடா..” என்று தமையனையும் துணைக்கு அழைக்க,
“ஆமாத்தை ப்ரணவ் சொல்றது சரி.. நீங்க பிங்கியை அண்ணாக்கு கட்டி கொடுத்துடுங்க நாங்க எல்லாரும் நல்லா பார்த்துப்போம்” என்றிட,
“நீயுமாடா…” என்பதாக மொத்த குடும்பமும் அண்ணன் தம்பியை பார்த்திருந்தது.
இரவு உணவை முடித்து சமையலறையை ஒதுக்கி முடித்து கூடத்தில் வந்தமர்ந்த பார்கவியின் மடியில் தலைவைத்து படுத்த இழை அவரை இடையோடு கட்டிக்கொண்டு,
“ம்மா….” என்றாள்.
“என்னடா..” என்றவரின் கரங்கள் மகளின் தலையை வருடிகொடுத்தது.
“நான் இப்படி நடக்கும்னு எதிர்பாராத அதிர்ச்சியிலதான் அழுதேன்.. மத்தபடி நீங்க பயப்படறளவு அங்க எதுவும் நடக்கலைம்மா அதுக்குள்ள அவர் வந்து காப்பாத்திட்டார்.”
“ஒருவேளை தம்பு அங்க வரலன்னா என் பெண்ணை நான் முழுசா பார்த்திருப்பேனா? உன்னோட ட்ரெஸ்சை பார்த்தேன் பிங்கி..” என்றதும் இழை சட்டென தாயை பார்த்தவள்,
“இப்பவும் நான் உங்க பெண்ணாதான் இருக்கேன் முதல்ல அழுகையை நிறுத்துங்கம்மா..” என்று எழுந்தமர்ந்து தாயின் கண்ணீரை துடைத்தவள் வசீகரன் வரும் முன்பு அங்கு நடந்ததை தாய்க்கு விவரிக்க பார்கவியின் கரங்கள் மகளை தன்னோடு சேர்த்தணைத்து கொண்டது.
“ம்மா..”
“நிஜமாவே இப்பவும் எனக்கு ஈரகுலை நடுங்குதுடா பிங்கி…” என்றவரின் கண்ணீர் உருண்டு இழையின் மீது விழுந்தது.
தானுமே தாயை கட்டிக்கொண்டவள்,
“ம்மா ப்ளீஸ் அழாதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… ஒருவேளை அவர் வரலைன்னா என்னால அங்கிருந்து தப்பிக்கமுடியாம போயிருந்தா நான் அவனை கொன்னிருப்பேனே தவிர நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் செய்திருக்கமாட்டேன். தப்பு பண்ண இருந்தவன் அவன்!!”
“அப்படி இருக்கப்போ நான் ஏன் என் வாழ்க்கையை அழிச்சிக்கணும்? எனக்கு என் அம்மா அப்பா முக்கியம்!! எனக்காக நீங்க கனவு கண்டிருக்க வாழ்க்கை முக்கியம் அப்படியிருக்கப்போ நிச்சயம் போராடியிருப்பேன்..” என்றவள் தன் பேச்சை நிறுத்தி,
“இங்க பாருங்கம்மா ஒரு பெண் தன்னோட மானத்தை காப்பத்திகிற போராட்டத்துல கொலையே செய்தாலும் அது குற்றமில்லைன்னு சட்டமே சொல்லுது.. நீங்க நினைக்கிற அளவுக்கு நான் கோழை இல்லம்மா… ப்ளீஸ் நீங்க அழுது என்னையும் அழ வைக்காதீங்க..” என்றவளுக்கு அப்போதே தன் மறுப்பை இன்னும் திடமாக உரைத்திருக்க வேண்டுமோ அல்லது குறைந்தபட்சம் வசீயை திருமணம் செய்ய விரும்புவதை சொல்லி இருக்க வேண்டுமோ என்ற எண்ணமே மேலோங்கியது.
மகளின் குரலில் இருந்த திடத்தை கண்ட பார்கவி, “காந்தி ராத்திரியில நகையோட ஒரு பெண் தனியா போறதுதான் உண்மையான சுதந்திரம்னு சொன்னார் ஆனா இப்போலாம் பட்டபகல்லகூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாம போயிடுச்சு..” என்று பெருமூச்சு விட்டவர்,
“சரிடா இனி அம்மா அழமாட்டேன் ஆனா கொஞ்சநாள் நீ கிளினிக் போகவேண்டாம்..”
“என்னம்மா இது? அவர்தான் இனி எந்த பிரச்சனையும் வராதுன்னு சொன்னாரே இன்னும் என்ன பயம்?”
“ப்ளீஸ் பிங்கி அம்மாவோட நிம்மதிக்காக.. இதோ பக்கத்துல தான் இருக்கிறனாலும் சேஃப்பா இருக்கியான்னு தெரியாம என்னால வீட்ல இருக்கமுடியாது பேசாம நானும் கிளினிக்கு வரட்டா..” என்றதும்,
“ம்மா…” என்று முறைத்தவள், “சரி உங்களுக்காக ஒரு நாலு நாள் வீட்லயே இருக்கேன் அடுத்தவாரம் கிளினிக் கிளம்புறேன் ஓகேவா” என்றதும் சற்று முகம் தெளிந்தார் பார்கவி.
“சரிம்மா நீ போய் தூங்கு..” என்று மகளை அனுப்பி வைத்தவர் கணவருக்காக காத்திருக்க தொடங்கினார்.
வீட்டினுள் நுழைந்த கைலாசம் உணவு மேஜையில் அமர்ந்தவாறே, “என்ன முடிவு பண்ணியிருக்க கவி..” என்றார்.
“எதை கேட்கறீங்க?”
“அந்த சின்னதம்பி போகும்போது ஒரு விஷயம் சொன்னாரே அதை பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க?”
இத்தனை நேரம் மகள் குறித்த பயத்தில் இருந்த பார்கவிக்கு பிரணவ் கூறியது முற்றிலுமாக மறந்திருந்தது.
“நான் அதை பத்தி யோசிக்கவே இல்லையேங்க…”
“ஆனா நான் அதைதான் யோசிச்சிட்டு இருந்தேன்..”
“ஆனா என்னால எதையும் சரியா யோசிக்கவே முடியலைங்க மனசு பதறுது..” என்று சூடு கண்ட பூனையாக அவர் பேச..
“இதுல யோசிக்க என்னம்மா இருக்கு.. மாப்பிள்ளையோட குடும்பத்தை உனக்கு பலவருஷமா தெரியும்..” என்றதும்
“மாப்பிள்ளைன்னே முடிவு பண்ணிட்டீங்களா?”
“ஆமா!! அந்த மூணு பிள்ளைகளோட கண்ணுலயும் கள்ளமில்ல.. அதோட வீட்டுக்குள்ள நுழையறப்போ பிங்கிக்கு பக்கபலமா இரண்டு பக்கமும் அரணா தன்வீட்டு பெண்ணா பாதுகாத்து அவங்க கூட்டிட்டு வந்ததை பார்த்த எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை… நிச்சயம் அந்த குடும்பத்துல நம்ம பொண்ணு பாதுகாப்பா இருப்பான்னு தோணுது.. பிள்ளைகளை அத்தனை அருமையா வளர்த்திருக்காங்க அதோட மிஸ்டர் திருவேங்கடமும் பசுபதியும் எதார்த்த மனுஷங்க இவ்ளோதூரம் தன் மனைவியோட ஃபிரெண்ட் பெண்ணுக்காக குடும்பமே ஓடி வரதுங்கிறது சாதாரண விஷயமில்ல…”
“உனக்கு இன்னொரு விஷயம் சொல்லட்டா?”
“என்னங்க?”
“இன்னைக்கு இல்ல எப்போ அந்த தம்பியை மண்டபத்துல பார்த்தேனோ அப்பவே எனக்கு ரொம்ப பிடிச்சது… அதுவும் நீ சொல்லுவியே மிஸ்டர் அகனெழிலன் மாதிரி இருக்கணும்னு அன்னைக்கு அவர் உன்கிட்ட உரிமையோடு பேசினப்போ சாப்பிட வச்சப்போ எனக்கு மனசுக்கு அவ்ளோ நிறைவா இருந்தது தெரியுமா?” என்றதும் பார்கவியின் முகத்தில் புன்னகைகீற்று..
“தம்பு எப்பவுமே அப்படிதாங்க!! தங்கமான பிள்ளை..”
“இன்னொரு விஷயமும் சொல்லணும் கவி..”
“என்னதுங்க?”
“அன்னைக்கு என் சித்தப்பா பேசினதுல நீ ரொம்ப எமோஷனலா இருந்த பிங்கி போலவே எனக்கும் அந்த சம்பந்தத்துல பெருசா விருப்பமில்ல ஆனா உனக்காகத்தான் ஒத்துக்கிட்டேன்…” என்றதும் பதறிப்போனார் பார்கவி…
“ஏங்க … என்னங்க சொல்றீங்க நீங்களாவது என்னை தடுத்திருக்கலாமே?”
“இல்லம்மா மனசளவுல காயபட்டிருக்க உன்னை மேலும் காயபடுத்த என்னால முடியல..”
“ஆனா பிங்கி வேண்டாம்னு சொன்னாளேங்க அதை நான்தான் மதிக்காம போயிட்டேன் நீங்களாவது எனக்கு சொல்லி புரிய வச்சிருக்கலாமே..”
“நம்ம பொண்ணு மனசுல யாரும்மில்ல ஒருவேளை நீ என் சித்தப்பாகாக சொல்றதால அவசரபட்டு கேட்டதுக்கு மறுக்கிறா பின்னாடி சரியாகிடும்னு நினைச்சேன்…”
“என்னமோ போங்க.. ஏதோ கஷ்டகாலம் நாம அனுபவிக்கனும்னு ஆண்டவன் எழுதி வச்சுட்டான் போல..” என்று கலங்கிய விழிகளுடன் கணவரின் தோள்சாய்ந்தார்.
“விடும்மா நல்லவங்களுக்கு கடவுள் கஷ்டம் கொடுத்தாலும் கைவிட மாட்டார்னு சொல்லுவாங்க அதான் மாப்பிள்ளையை அனுப்பி நம்ம பெண்ணை மீட்டு கொடுத்துட்டாரே…”
“ஆமாங்க நல்லவேளை தம்பு நிச்சயத்துக்குள்ள இதை எல்லாம் கண்டுபிடிச்..” என்றவரை இடையிட்ட கைலாசம்
“மாப்பிள்ளையும் அவர் குடும்பமும் மனசுக்கு பிடித்தமா இருந்தாலும் நான் இந்த சம்பந்தத்துக்கு ஒத்துக்க முக்கிய காரணம் நீ கவி..”
“நானா?”
“ஆமா உன் ஃபிரெண்ட் குடும்பத்தை பார்த்ததுல இருந்து நான் புது பார்கவியை பார்க்கிறேன் அது நிரந்தரமா வேணும்… அதனால் இப்போ நீ சம்மதிச்சா போதும் நான் சம்பந்திக்கு கால் பண்ணி நாளைக்கு வர சொல்லிடுவேன்”
“நான் ஒரு மடச்சிங்க… கையில வெண்ணை இருக்க எங்கெங்கோ நெய்யை தேடியிருக்கேன் ஆனா இப்போ என்னோட சம்மதத்தைவிட நீங்க பிங்கிக்கு இதுல விருப்பமான்னு முதல்ல கேளுங்க” என்றார்.
கைலாசத்திற்கும் அதுவே சரியாகபட மகள் அறைக்கு சென்றவர் ஏதோ வேலையாக இருந்தவளிடம் விஷயத்தை தெரிவித்து,
“உடனே இப்படி உன்னை கட்டாயப்படுத்துறதா நினைக்க வேண்டாம் பிங்கி… இன்னைக்கு நடந்ததை கெட்ட கனவா நினைச்சு எவ்ளோ சீக்கிரம் மறக்கறமோ அது நமக்கு நல்லது..” என்றவர்,
“சொல்லுமா உனக்கு இதுல சம்மதமா?” என்று கேட்க இழையின் மகிழ்ச்சியை வார்த்தைகளில் வடிக்க முடியாதளவு சிறகின்றி வானில் பறந்துகொண்டிருந்தாள்.
தந்தை தன் பதிலுக்கு காத்திருப்பதை கண்டு மெல்ல தரையிறங்கியவள், “நான் எப்பவும் சொல்றது தான்பா உங்களுக்கும் அம்மாக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதமே..” என்று அவள் வழக்கமான பல்லவியை பாட,
“மாப்பிள்ளையோட ஃபிரெண்ட் விஜய் மாப்பிள்ளை அவரோட குடும்பத்துக்கிட்டயும் விசாரிச்சுட்டு தான் பேசுறேன் பிங்கி எங்களுக்கு இதுல பரிபூரண சம்மதம்!! உன்னோட பதில் தெரிஞ்சா அடுத்து செய்ய வேண்டியதை பார்ப்பேன்…”
“அப்பா எதுக்கு என்னை கேட்கறீங்க இப்பவும் சொல்றேன் எனக்கு எது நல்லதுன்னு உங்களைவிட எனக்கு தெரிஞ்சுடுமா என்ன?”
“பிங்கி உனக்கு சம்மதமா?” என்றார் பார்கவி.
“உங்களுக்கு இதுல சந்தோஷமாம்மா?”
“ரொம்பவே!!!” என்றார் என்றுமில்லாத மகிழ்வோடு.
“அப்புறம் எதுக்கு என்னை கேட்கறீங்க?”
“இல்ல போன முறை உன்னோட விருப்பத்துக்கு மாறா நடக்க போய் தானே நீ ஆபத்துல சிக்க இருந்த?”
“ம்மா அன்னைக்கு அந்த சம்பந்தத்தை நீங்க முழுமனசா ஏற்பாடு பண்ணீங்களா?”
“இல்லை..”
“அப்புறமென்னம்மா இப்போ உங்களோட சந்தோஷம்தான் என்னோடதும்..” என்று மறைமுகமாக தன் சம்மதத்தை தெரிவிக்க நிறைவாக கிளம்பினர் பெற்றோர்.
இங்கு திருவும் பசுபதியும் ப்ரணவை வறுத்தெடுத்து கொண்டிருந்தனர்…
“ப்பா போதும் அவனை எதுக்கு பேசுறீங்க? கால் முடிச்சுட்டு வந்து நானே அத்தை கிட்ட பேசுறதாதான் இருந்தேன்..” என்றவாறு அங்கே வந்தான் வசீகரன்.
“என்ன பேச இருந்த?”
“உங்க பெண்ணை எனக்கு கட்டி கொடுங்கன்னு தான்..” என்றான் அசராமல்.
“என்ன தம்பு அவன் தான் சின்ன பையன் யோசிக்காம பேசிட்டான்., நீயுமா?”
“ம்மா அத்தை எப்படி குற்ற உணர்ச்சியில தவிச்சாங்கன்னு பார்த்தீங்க தானே அதோட இழைக்கும் பெருசா இஷ்டமில்ல.. அப்படியே விட்டிருந்தா எத்தனை நாளானாலும் அதையே யோசிச்சு தன்னை வருத்திப்பாங்களே தவிர மீள மாட்டாங்க…”
“இப்போ அப்பு அவங்களை டைவேர்ட் பண்ணினது நல்லதுதான்” என்று வசீகரன் பேசிக்கொண்டிருக்கும் போதே கைலாசத்திடமிருந்து திருவேங்கடத்திற்கு அழைப்பு வந்தது.
“ஹலோ சொல்லுங்க கைலாசம் கவி பிங்கி எல்லாம் சமாதானம் ஆகிட்டாங்களா?” என்றதற்கு மறுபுறமிருந்தவர் கூறிய பதிலில் திகைத்து போனார் திருவேங்கடம்.
பின்னே முதல் வேலையாக வசீகரனின் ஜாதகத்தை அனுப்ப சொன்னவர் நாளை பெண் பார்க்க அழைத்தால் மனிதர் திகைக்காமல் வேறென்ன செய்ய?
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
6
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சூப்பர் எல்லாம் நல்ல படியா போகுது .. அடுத்து அந்த வில்லனால எதுவும் பிரச்சனை வருமோ