Loading

“கவி, நீ சாப்பிடாம இருக்கிறதால நடந்த எதுவும் மாறிடப் போறதில்லை. நம்ம செய்த புண்ணியம் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிடுச்சுன்னு நினைச்சுக்கோ..” என்ற நாயகி தங்கையிடமிருந்து தட்டை வாங்கிக்கொண்டு,

“அபி, நான் பார்த்துக்கறேன். நீ அண்ணாக்கு சாப்பாடு எடுத்து வை..”

“சரிக்கா..” என்றவர் கைலாசத்தை சாப்பிட அழைத்தார்.

“பிங்கி வந்துடட்டுமா… உங்களுக்கும் ஆர்டர் பண்ணிடுறேன், எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்..”

“நாங்க வர வழிலேயே சாப்பிட்டுட்டுதாண்ணா வந்தோம். மதிய நேரத்துல வந்து சாப்பிட இருந்த உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டோம்..”

“என்னம்மா சொல்ற? இது தொந்தரவா? எங்க பெண்ணோட வாழ்க்கையையே காப்பாத்தி கொடுத்திருக்கீங்க. அதைவிட சாப்பாடு எங்களுக்கு பெருசா இருந்திடப் போகுதா? ஏற்கனவே கல்யாணம் பண்ணி குழந்தைன்னு குடும்பமா இருக்கிறவன் பல பெண்களை ஏமாத்தி இருக்காங்கிறதையே ஜீரணிக்க முடியாம இருக்கோம்…”

“அதுல என் பெண்ணும் ஒருத்தியாகிடாம கடவுள் மாதிரி வந்து சரியான நேரத்துல காப்பாத்தின உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை..” என்று விம்மும் மனதோடு தன் முன்னே இருந்தவர்களை பார்த்த கைலாசம்,

“ஆனா எல்லாத்தையும் மறைச்சு நிச்சயம் வரைக்கும் வந்திருக்கிறவனை நான் சும்மா விடப் போறதில்லை..” என்று சீற்றத்தோடு எழுந்தார்.

“கைலாசம், உட்காருங்க. இது பெண்ணோட வாழ்க்கை. அவசரப்பட்டு எதுவும் செய்ய வேண்டாம். தம்பு ஏற்கனவே அந்த இந்திரவர்மனோட டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி, பாதிக்கப்பட்ட பெண்கள் மூலமாகவே கம்ப்ளைன்ட் கொடுக்க வச்சு, அவனோட பிரெண்ட் மூலமா அரெஸ்ட் பண்ண ஸ்டெப்ஸ் எடுத்திருக்கான். அதனால கொஞ்சம் பொறுமையா இருங்க..” என்ற திருவேங்கடத்தின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமர்ந்தாலும், இன்னும் அவர் முகத்தில் குறையாத கோபம்.

“அண்ணா, கோபப்பட்டு உங்க ஹெல்த்தை கெடுத்துக்காதீங்க. தம்பு பிங்கியை கூட்டிட்டு வந்துடுவான். நீங்க நேரத்துக்கு மாத்திரை போடுறவர்னு அக்கா சொல்லியிருக்காங்க. சாப்பிடாம இருக்கக் கூடாது..” என்று அபிராமி பரிமாறவும், அங்கே அதுநேரம் வரை கண்ணீரில் கரைந்திருந்த மனைவி சாப்பிட ஆரம்பித்ததை கண்டவர் தானும் உண்ண அமர்ந்தார்.

இங்கு குறையாத அதிர்ச்சியோடு கைகளில் முகம் பொத்தி அழுகையில் கரைந்து கொண்டிருந்தவளை “இழை…” என்று வசீ வாஞ்சையாக அழைக்க, அவள் அழுகை அதிகரித்ததே தவிர குறையவில்லை.

“நான் சொல்றது புரியுதா, இழை?” என்றதற்கும் எந்த அசைவுமில்லை.

“ப்ச், நான்தான் சொல்றேன்ல. இனி பயப்பட ஒண்ணுமில்ல. முதல்ல அழுகையை நிறுத்து, இழை. இப்படியே வீட்டுக்கு போனா, ஏற்கனவே உடைஞ்சு போயிருக்க அத்தை உன்னை பார்த்து இன்னுமே பயந்துடுவாங்க…” என்றதில் அன்னையை எண்ணி அவளின் கேவல் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

இழையை சமாதானப்படுத்த வசீகரன் எடுத்த முயற்சிகள் எதுவும் அவளிடம் எடுபடாத நிலையில், வேறு வழி இல்லாமல் “ஷட் அப், இழை!” என்று அதட்டல் போட்டுவிட்டான்.

அதை எதிர்பாராத பெண்ணுக்கு தூக்கி வாரிப் போட, இரு கைகளாலும் வாயை பொத்திக்கொண்டு மிரட்சியுடன் அவனை பார்த்திருந்தாள். ஆனால் அப்போதும் அழுகை மட்டுப்படுவேனா என்பது போல பெருக்கெடுக்க, தலைகுனிந்து அழுகையை மென்று விழுங்க முயன்றாள்.

“ப்ச், இதோ பார்.. நீ ஃபீல் பண்ணி அழற அளவுக்கு இங்க ஒண்ணும் நடந்துடலை, புரியுதா?” என்று அழுத்தமாக கேட்டவன் நெற்றியை நீவியவாறே,

“ஒருவேளை அவனுக்காக அழறதா இருந்தா..” என்றவன் தன் பேச்சை நிறுத்தி, “லுக் அட் மீ..” என்றான்.

அவன் குரலில் இருந்த கடுமையில் அன்னிச்சையாக இழை முகம் நிமிர்த்தி கண்ணீரோடு வசீயை பார்க்க,

“இதோ பார், அவனெல்லாம் உன்னோட கண்ணீருக்கு துளிகூட தகுதியானவனில்ல. ஸோ ஜஸ்ட் ஸ்டாப் க்ரையிங்..” என்றவனுக்கு, அவளது கண்ணீர் மேலும் பேச விடாமல் செய்ய, சில விநாடிகள் மௌனமாக அவளை ஆராய்ந்தான்.

“லிசன் கேர் ஃபுல்லி..” என்று அவன் ஆரம்பிக்கவும், அந்நேரம் வரை இதழ்களை அழுந்த கடிந்தவண்ணம் அவன் பார்வையை எதிர்கொள்ள முயன்று தோற்றவள் மீண்டும் தலை குனியவும்,

“ஐ சே, லுக் அட் மீ..” என்றான் எரிச்சலோடு.

மிரட்சியுடன் இழை பார்க்கவும், “ப்ச், புரிஞ்சுக்கோ இழை. நீ ஒண்ணும் சின்ன குழந்தையில்ல. இனி அவன் உன்னோட லைஃப்ல இல்ல. அதுதான் உண்மை. காட் இட்! பொதுவாவே அக்செப்டன்ஸ் நம்மோட வலியை குறைக்கும்..”

“ஸோ ரியாலிட்டியை அக்செப்ட் பண்ணிக்கோ, ஒருவேளை நிச்சயம் கல்யாணம்னு முடிவானதுல தேவையில்லாத கற்பனை ஏதாவது வளர்த்திருந்தேனா, அதை இங்கயே புதைச்சுட்டு என்னோட கிளம்பு..” என்றவனுக்கு பதில் சொல்ல இயலாத இழையிடமிருந்து சத்தமின்றி கண்ணீர் வெளியேறியது.

அதை கண்டவனின் பொறுமை எல்லையை கடக்க, “நான் பேசுறது உனக்கு புரியுதா? இப்படியே அமைதியா உட்காந்திருந்தா என்ன அர்த்தம்? ஏதாவது பதில் சொல்லு..” என்று கேட்க, பெண்ணிடம் மெல்லிய விசும்பல் மட்டுமே.

“ஸீ, உன்கிட்ட நிறைய விஷயம் பேசணும்னு வந்தேன். ஆனா நீ கேட்கிற நிலமையில இல்ல. இன்னும் கொஞ்ச நேரம் இங்கயே இரு. நான் கூட்டிட்டு போறேன்..” என்று வெளியேறப் போனவன் திரும்பி,

“ஆனா அழாம இருக்கணும், புரிஞ்சதா?” என்று கேட்கவும், மீண்டும் வாயை பொத்திக்கொண்டு தலையை அனைத்துப் புறமும் உருட்டியவள், அவன் செல்லவும் மெல்ல மேஜையில் தலை கவிழ்ந்தாள்.

வெளியில் வந்த வசீ உடனே நாயகிக்கு அழைத்திருந்தான்.

“தம்பு, பேஷண்ட்ஸ் இன்னும் இருக்காங்களா? ஏன் கிளம்பாம இருக்கீங்க?”

“ம்மா, வந்து சொல்றேன். இப்போ ப்ரணவ் அங்க வருவான். அவன்கிட்ட இழையோட ஒரு செட் ட்ரெஸ் கொடுத்தனுப்புங்க..”

“ட்ரெஸ்ஸா? எதுக்குப்பா?”

“ம்மா, அது.. ப்ச். நான் வீட்டுக்கு வந்து சொல்றேன். நீங்க எடுத்துவைங்க..” என்றதும் அருகே இருந்த கவி,

“என்னாச்சு, அம்மூ?” என்றார்.

“பிங்கியோட ட்ரெஸ் வேணுமாம், கவி. எங்க இருக்குன்னு சொல்லு. நானே எடுத்துக்குறேன்..”

“எதுக்கு ட்ரெஸ்?”

“தெரில. ப்ரணவ்ட்ட கொடுத்தனுப்ப சொன்னான்…” என்றதும் இழையின் அறையை பார்கவி சுட்டிக்காட்டினார்.

“ப்ரணவ், அம்மா உன்கிட்ட ட்ரெஸ் கொடுப்பாங்க. வாங்கிட்டு வந்து உன் அண்ணிக்கிட்ட கொடு..” என்று தம்பியை அனுப்பியவன்,

“ஜித்து, இழை ரொம்ப பயந்து போயிருக்கா. அவளுக்கு குடிக்க ஏதாவது வாங்கிக் கொடுத்து பேச்சு கொடுத்துட்டிரு. விமல் வந்ததும் இவனை அனுப்பிட்டு கிளம்பலாம்..”

“சரிண்ணா..” என்று வெளியில் சென்றவன், அடுத்த சில நிமிடங்களில் திரும்பி, “பிங்கி..” என்றழைக்க, மேஜையில் தலை கவிழ்ந்திருந்தவள் மெல்ல முகம் நிமிர்த்தினாள்.

இப்போது ஓரளவு அழுகை நின்றிருந்தாலும், மெல்லிய விசும்பலுடன், “ஜித்து, நீ… நீங்களெல்லாம் எப்போ வந்தீங்க?” என்றவளின் குரல் அத்தனை நடுக்கத்தோடு வெளிப்பட்டது.

“நீ முதல்முறை கால் பண்ணினப்போவே நாங்க எல்லாரும் கிளம்பிட்டோம், பிங்கி. ரெண்டாவது முறை கால் பண்ணினப்போ நம்ம வீட்லதான் இருந்தேன்..”

“என்ன சொல்ற? யாரெல்லாம் வந்தீங்க?” என்றாள் மெல்லிய குரலில்.

“அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, அண்ணா, ப்ரணவ்..”

“எல்லோருமா?” என்று இழை ஆச்சர்யத்தில் விழி விரிக்க,

“ஆமா. முதல்ல நீ இதை குடி. அப்புறம் பேசலாம்..” என்று கொடுக்கவும், மதிய உணவை உட்கொள்ளாததாலும் இந்திரனுடனான போராட்டத்தாலும் மிகவும் சோர்ந்து போயிருந்தவள் உடனே வாங்கிக் குடிக்கத் தொடங்கினாள்.

தமையன் சொன்னதுமே ஏன் என்றுகூட விசாரிக்காமல் அடித்திருந்தவனுக்கு, இப்போது வசீயின் சட்டையை அணிந்திருக்கும் இழையும் அவள் தோற்றமும், அறையில் சிதறியிருக்கும் பொருட்களையும் பார்க்க என்ன நடந்திருக்கும் என்பது புரியப் பட,

“நீ குடி, நான் வந்துடுறேன்..” என்று வெளியேறியவன், ஆவேசமாக இந்திரவர்மனின் முகத்தில் ஓங்கி குத்திவிட, அவன் மூக்கிலிருந்து ரத்தம் சொட்டியது.

பேசவும் திராணியற்று “வேண்டாம், அடிக்காதே..” என்பதாக சைகை செய்தவனை தாளாத ஆத்திரத்தோடு பார்த்த ஜித்துவிற்கு, இழையின் கண்ணீர்கோலம் மனதிலாட, வரைமுறையின்றி அடித்து இந்திரனை மிதிமிதியென மிதிக்கத் தொடங்கிவிட்டான்.

வெளியில் நின்று கைபேசியில் பேசிக்கொண்டிருந்த வசீகரன் உடனே அவனைத் தடுத்து பிடிக்க,

“விடுங்கண்ணா. இனியும் இவனை சும்மா விடக்கூடாது. இப்போ அடிக்கிற அடியில இனி ஒரு பெண்ணை திரும்பிப் பார்க்கக் கூடாது..” என்றவன், அவன் அடிவயிற்றிலேயே ஓங்கி உதைக்க,

“ம்மா…” என்ற அலறலோடு இந்திரவர்மன் சுருண்டான்.

“டேய், போதும்டா. விடு. விமல் வந்துட்டு இருக்கான். அவன்கிட்ட முழுசா ஒப்படைக்கணும்..”

“எப்படிண்ணா, நம்ம பிங்கி மேலேயே கை வச்சவனை சும்மா விடச் சொல்றீங்க? எப்பவும் சிரிப்பும் விளையாட்டுமா இருக்கவ முகத்துல இப்போ…” என்று ஆரம்பித்தவனுக்கு, இன்னும் அச்சம் விலகாத இழையின் பார்வையும் கோலமும் விழியைவிட்டு அகலாமல் இருந்தது.

“ப்ச், சொன்னா கேளு ஜித்து. நீ போய் இழையை பாரு. பயத்துல அழுத்துட்டு என்கிட்ட சரியா பேசவே மாட்டேங்கிறா. நீன்னா கொஞ்சம் சகஜமாகுவா. அவளை இப்படியே வீட்டுக்கு கூட்டிட்டு போனா, அத்தையும் மாமாவும் இன்னும் பயந்துடுவாங்க. இவனைவிட இப்போ இழை முக்கியம். சொன்னதை செய்..” என்று கட்டளையிடவும், இந்திரனை முறைத்துக்கொண்டே திரும்பியவன், மீண்டும் சுருண்டிருந்தவன் முதுகில் ஓங்கி ஒரு மிதி மிதித்துவிட்டே சென்றான்.

இப்போது இழையின் முகம் சற்று தெளிந்திருக்க,

“ஆர் யூ ஓகே?” என்றவாறே ஜித்து அவளெதிரே அமரவும்,

“இல்லடா, முட்டியில அடிபட்டிருக்கு போல. நடக்க முடியலை. இதோ பார்…” என்று முழங்கையை நீட்டி, “ரொம்ப வலிக்குது..” என்றவள், சிறுவயது முதலே வலி தாங்காதவள்.

அன்று சைக்கிளில் இருந்து விழுந்து தையலிட்ட போதும், அவனிடம் அழுதுகொண்டே, “இனி நான் உன் அண்ணாகூட எங்கயும் போகமாட்டேன். நீ என்கூட பேசலைன்னாலும், அவர் ஹிட்லர்தான்” என்று அழுத்தமாக சொன்னவளை எதுவும் பேச முடியாமல் பார்த்தவன்,

“ஸாரி… ஸாரி பிங்கி. அண்ணாக்காக நான் ஸாரி கேட்டுக்குறேன். நீ அழாத..” என்றிருந்தான்.

“நீ ஏன் ஸாரி கேட்கிற? என்னை தள்ளிவிட்டது உன் அண்ணா. அவரை ஸாரி கேட்க சொல்லு..” என்றாள் பிடிவாதமாக.

“இப்படி அடிபட்டிருக்கு. ஏன் இன்னும் இங்கயே இருக்க. வா பிங்கி. முதல்ல ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்துடலாம்..” என்று ஜித்து அழைக்கவும், அங்கே வந்த ப்ரணவ்,

“அண்ணி, இந்தாங்க. அண்ணா கொடுக்க சொன்னாங்க..” என்றதும், “ப்ரணவ்…” என்று ஜித்து பல்லைக் கடித்தான்.

“என்னடா?” என்றான் சைகையில்.

“என்ன அப்பு இது?” என்றவள் பிரித்து பார்க்க, அதில் அவளுக்கான மாற்றுடை இருந்தது.

அதை கண்ட ஜித்து, “ஒண்ணுமில்ல. நீ சேஞ்ச் பண்ணு பிங்கி. நாம் ஹாஸ்பிட்டல் போயிட்டு ஒரு எக்ஸ்ரே பார்த்துட்டு, டிரெஸ்ஸிங் பண்ணிட்டு வந்துடலாம்..” என்றவாறே தம்பியை அழைத்துக்கொண்டு கதவைச் சாத்திவிட்டு வெளியேறியவன்,

“எதுக்குடா அண்ணின்னு சொன்ன?” என்று கடிந்தான்.

“வேற எப்படி சொல்ல? நீ வேணும்னா கல்யாணத்துக்கு அப்புறம் கூப்பிடு. என்னை சொல்லாத..”

“அப்படியில்ல ப்ரணவ். பிங்கி ஷாக்ல இருக்கா. அதான்..” என்றபோதே அங்கே போலீஸ் ஜீப் வந்துவிட, விமலிடம் இந்திரவர்மனை ஒப்படைத்தான் வசீகரன்.

“மச்சான், என்னடா இது? இப்படி அடிச்சு வச்சிருக்க?” உன் வைஃப் பேரும் வெளில வரக்கூடாதுன்னு சொல்ற நான் என்ன பதில் சொல்ல?”

“டேய், அதுதான் முன்னமே சொன்னேனே. அரெஸ்ட் பண்ண போன இடத்துல தப்பிக்க பார்த்தான்னு சொல்லு. உன்னை அட்டாக் பண்ணினான்னு சொல்லு. அதுக்கும் மேல…” என்று வசீ பேசிக்கொண்டே போக,

“நல்லா வருவடா நீ!” என்று வசீகரனை அணைத்துவிட்டவன், “ஆனா நல்லவேளை நீ டிபார்ட்மென்ட்ல சேராம போயிட்ட..” என்றான்.

“ஏன் மச்சி?”

“நீ சேர்ந்திருந்தா, வக்கீல், ஜட்ஜஸ்க்கு வேலையே இல்லாம பண்ணியிருப்ப..” என்றான் புன்னகையோடு.

“பின்ன என்னடா, பொண்ணுங்களை யூஸ் பண்ண நினைக்கிற இவனை மாதிரி ஆளுங்களை பெட்ரோல் செலவு பண்ணி தேடி கண்டுபிடிச்சு, கோர்ட்டுல ப்ரோடியூஸ் பண்ணி, கேஸ் நடத்தி, சோறு போட்டுன்னு கவர்ன்மென்ட் காசு எவ்ளோ செலவாகுது..”

“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா. நான் கிளம்பறேன்டா..” என்று வாகனத்தை எடுக்க, அதே நேரம் பின்னே அமர்ந்திருந்த இந்திரவர்மனின் பார்வை, வெளியில் வந்த இழையின் மீது கொலைவெறியோடு பதிந்தது.

இதுவரை அவன் அழகிலும் ஆளுமையிலும் உருகி, அவன் இழுப்பிற்கு வளைந்து கொடுக்கும் பெண்களையே கடந்து வந்தவனுக்கு, முதல்முறை அவனை பொருட்டாகவே மதிக்காத இழையின் மீது கட்டுக்கடங்காத ஆத்திரம். அதோடு, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் பெண்களை ஏமாற்றி வந்தவனுக்கு, இப்போது இவள் மூலமாக மாட்டிக்கொண்டதில் எல்லை கடந்த கோபம்.”

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்