Loading

“அப்போ கன்ஃபார்மா இவரைதான் கட்டப் போற. எந்த மாற்றமும் இல்லையே?”

“இல்ல,” என்று உறுதியுடன் இழை.

“ஒரு விஷயம் இடிக்குதே மச்சி.”

“என்ன?”

“கோபம் இருக்க இடத்துல குணம் இருக்கும். ஆனா குடிகாரன்கிட்ட என்ன இருக்கும்?”

“ஜீவி, என்ன பேசுற. மைண்ட் யுவர் வேர்ட்ஸ்,” என்று ஆவேசமாக நாற்காலியிலிருந்து எழுந்த இழை, “அவர் அப்படியெல்லாம் கிடையாது. இன்னொரு முறை இந்த மாதிரி சொன்னா அவ்வளோதான்,” என்று சீறினாள்.

“ஏய், அடங்கு. அன்னைக்கு பாட்டிலோடு நீயும் தானே பார்த்த. இந்த காலத்துல குடிக்காத பசங்களை விரல் விட்டு எண்ணிடலாம். ஏதோ நம்ம ஃப்ரெண்ட் குடிகாரனை கட்டிக்கிட்டு கஷ்டப்படக்கூடாதேன்னு கேட்டா ஓவரா பேசுற.”

“இல்ல ஜீவி. எனக்கு தெரியும். எங்க திருமாமா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால இதுக்கு வாய்ப்பே இல்ல. எங்கயோ தப்பு நடந்திருக்கு.”

“என்னடி ஸ்ட்ரிக்ட்? ஏய் லூசு, உன் ஸ்ட்ரிக்ட்டான மாமா கண்ணுல மண்ணை தூவிட்டு பதினொன்னாவது படிக்கிறப்பவே லவ் ப்ரொபோசல் கார்ட் கொடுத்தவர் உன் ஆளு. அதை மறந்துட்டு பேசாத,” என்று கூற, இழை மௌனமானாள்.

“என்ன, அமைதியாகிட்ட? சொல்லு. ஒருவேளை அவருக்கு குடிக்கிற பழக்கம் இருந்தா என்ன செய்வ? சோஷியல் டிரிங்கிங் னு பொண்ணுங்களே தண்ணியடிக்கிற காலமிது. அவருக்கு இருக்காதுன்னு நினைக்கிறியா?” என்று கேட்டதும், என்ன பதில் சொல்லவேண்டும் என்று தெரியாமல் இழை நின்றாள்.

“அதான் சொல்றேன். வாக்கு கொடுத்தேன் சொல்லி தப்பான முடிவு எடுத்து தப்பான ஆள்கிட்ட போய் மாட்டிக்காத. இது வாழ்க்கை. யோசிச்சு முடிவு பண்ணு,” என்றிட, இழையின் முகத்தில் சிந்தனை ரேகை படர்ந்தது.

ஆழ்ந்த யோசனையிலிருந்து சில நிமிடங்களில் மீண்டவள், “கண்டிப்பா அவரை தவிர வேற யாரையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுடி,” என்றாள் உறுதியான குரலில்.

“ஏய் லூசு, அவரை கல்யாணம் பண்ணிட்டு வசந்த மாளிகை வாணிஸ்ரீ மாதிரி, ‘கலைமகள் கைபொருளே, உன்னை கவனிக்க ஆளில்லையா’ன்னு பாடப் போறியா?”

“தெரில ஜீவி. அவர் அப்படி இருக்க மாட்டார்னு மனசு சொல்லுது. அப்படியே இருந்தாலும் என்னால மாத்த முடியும் னு நம்புறேன்.”

“ஸோ, உன் வாழ்க்கையை பணயம் வைத்து அவரை மீட்கப் போறியா? குடிகாரன்கூட வாழ்க்கை முழுக்க மல்லுக்கட்டனும் இழை. சாதாரண விஷயம் இல்லை.”

“பரவால. என்னால முடியும்.”

“ஆர் யூ சீரியஸ் இழை? நல்லா யோசிச்சுக்கோ. அவசரப்பட்டு முடிவு எடுக்காத.”

“ஏய், நீ லாயர் மாதிரி கேள்வி கேட்டு என்னை கொல்லாம, இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்துறதுன்னு ஐடியா கொடு.”

“ஏன்டி, அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி, உன்னை திரும்பிக் கூட பார்க்காத மனுஷனுக்காக ரிஸ்க் எடுத்து கல்யாணத்தை நிறுத்துறியே. உனக்கே நல்லா இருக்கா?”

“யார் சொன்னா அவர் பார்க்கலன்னு?”

“ப்ச், இதோ பார். திரும்ப திரும்ப கண்ணுல வலியோட பார்த்தார், தாங்கலைன்னு உருட்டினா கொன்னுடுவேன் உன்னை.”

“இல்ல ஜீவி. அதுக்கு முன்னமே பார்த்தார்.”

“அதுக்கு முன்னாடின்னா எங்க, எப்போ?”

“அது… அது வந்து…” என்று இழை இழுக்க,

“ஆரம்பிச்சுட்டாளே, ஆண்டவா,” என்று கண்களை மூடி தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவள், பொறுமையை இழுத்துப் பிடித்து, “சொல்லுமா, எங்க வந்து உன்னை பார்த்தார்?”

“ஜீவி, அவர் கார்ல இருந்து லகேஜ் எடுத்துட்டு இருந்தாரா. அப்போ… அப்போ நான்…” என்று ஆரம்பித்து நடந்ததை கூறி முடிக்க, வாயடைத்து போனாள் ஜீவிகா.

“அப்போ அங்க நின்னுட்டு இருந்தது அவர்தான்னு உனக்கு தெரியாது. தெரியாம காப்பாத்த வேண்டி சும்மா நின்னுட்டு இருந்தவரை இழுத்து அவர்மேல விழுந்துட்ட. அப்படிதானே?”

“எப்படி ஜீவி, நேர்ல பார்த்த மாதிரி இவ்ளோ கரெக்டா சொல்ற?”

“நான் உண்மையை சொன்னா மட்டும் நீ ஒத்துக்கவா போற? சரி, மேல சொல்லு. ஐ மீன், அவர்மேல நீ விழுந்தப்பத்தான் உன்னை பார்த்தாரா?” என்று கேட்டதும், இழையின் கன்னங்கள் சட்டென சிவக்க தொடங்கின.

“ஏய், உன்னை பார்த்தாரான்னு தானே கேட்டேன். அதுக்கு ஏன் உன் கன்னம் சிவக்குது?”

“அது… அதுவந்து… ஆமா ஜீவி. அப்போதான் பார்த்தார். அதுவும் குறுகுறுன்னு பார்த்தார்,” என்று வெட்கத்தோடு சொல்ல,

“ரைட்டு, முத்தி போயிடுச்சு,” என்று மனதினுள் நினைத்துக்கொண்டு இழையை பார்த்தாள்.

“ஆனா அவரை அங்க நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லடி. ரொம்ப பயந்துட்டேன். அதான் அவர் ‘பப்ளி நில்லு’ன்னு சொன்னப்பவும் கேட்காம ரூமுக்கு ஓடிவந்துட்டேன்.”

“நீங்க பயந்துட்டீங்களா?”

“ஆமா, ரொம்பவே. எங்க திரும்ப திட்டுவாரோன்னு தான் ஓடிட்டேன்.”

“ஆமா, இந்த கல்யாணம் நின்னா அடுத்து உங்கம்மா உனக்கு வேற மாப்பிள்ளை பார்க்க மாட்டாங்களா?” என்று கேட்கவும், இல்லை என்று வேகமாக தலையாட்டினாள்.

“எப்படி சொல்ற?”

“இவரை பார்த்த பிறகு வேற மாப்பிள்ளையை பார்க்க மாட்டாங்க ஜீவி.”

“ஏன்?”

“ஏன்னா எங்கம்மாக்கு இவரை ரொம்ப பிடிக்கும்.”

“ஓ… ஓஹோ…” என்று நெற்றியை பிடித்துக்கொண்டவள், “அதான் நீங்க ‘அம்மா பார்க்கிற மாப்பிள்ளையைத்தான் கட்டிப்பேன்’ன்னு சொல்லிட்டு இருந்தீங்களா மேடம்?” என்று கேட்கவும், தன்னையறியாமல் ஆம் என்று தலையசைத்தாள் இழை.

அதை கண்ட ஜீவிக்கு பற்றிக்கொண்டு வந்தது. ஆனாலும் வெகு நிதானமாக, “உன்னை மாதிரி அம்மா பேச்சு கேட்டு கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணுங்களை இந்த காலத்துல பார்க்கிறது ரொம்ப அபூர்வம் இழை. உன்னை பெத்ததுக்கு உங்கம்மா ரொம்ப பெருமைபடணும்,” என்று வார்த்தைகளை துப்ப,

“தேங்க்ஸ் ஜீவி,” என்று புன்னகைமுகமாக அசராமல் சொன்னவளை கண்ட ஜீவிக்கு எதையாவது எடுத்து அவள் தலையில் போட்டால்தான் ஆத்திரம் தீரும் என்பதான நிலை.

சுற்றியும் முற்றியும் பார்த்தவள், அங்கிருந்த பிளாஸ்டரை எடுத்து அவள் வாயில் ஒட்டிவிட்டு, “ஒரு பத்து நிமிஷம் நீ பேசாம இருக்கணும். பிளாஸ்டரை எடுக்கவும் கூடாது. அப்பத்தான் ஐடியா கொடுப்பேன்,” என்றதற்கு இழை வேகமாக தலையசைக்க, ஜீவிகாவோ எழுந்து வெளியில் வந்து நிம்மதி காற்றை சுவாசிக்க தொடங்கினாள்.

கால் மணி நேரத்திற்கு பிறகு உள்ளே வந்தவள், அவள் வாயில் ஒட்டியிருந்த பிளாஸ்டரை எடுத்துவிட்டு,

“அவருக்கு கல்யாணமாகலை சரி. உங்கம்மா அவருக்குத்தான் கட்டிக் கொடுப்பாங்க, அதுவும் சரி. ஆனா இப்போ அவர் வேற யாரையும் லவ் பண்ணிட்டு இருந்தா நீ என்ன செய்வ? இந்த லவ்வையும் பிரிச்சுவிட்டு கல்யாணம் செய்துப்பியா?” என்று கேட்டு இழையை அதிர செய்தாள் ஜீவிகா.

இது அவள் முற்றிலும் எதிர்பாராதது என்பதால், மறுபுறம் இழையிடம் கனத்த அமைதி.

“சொல்லு மச்சி.”

பொங்கிய அழுகையை உள்ளே தள்ளி, மெல்ல குரலை செருமி, “அப்படி இருக்குமா ஜீவி?” என்ற கலங்கிய விழிகளுடன் கேட்ட இழையின் வயிற்றில் பயபந்து உருள தொடங்கியது.

“எப்படி இருக்குமா?”

“அதான்… அவருக்கு வேற லவ் ஏதாவது இருக்குமா?”

“ஏன் இருக்கக்கூடாதா?” என்று கேட்க, இழையின் முகத்தில் இன்னுமே மீளா அதிர்வு.

அதைக் கண்டு நிறைவாக புன்னகைத்துக்கொண்ட ஜீவிகா, “நீயே சொல்லிட்ட. ஸ்வேதா மேல இருந்தது க்ரஷ்னு. அப்போ இத்தனை வருஷத்துல அவருக்கு வேற பொண்ணு மேல லவ் வரக்கூடாதுன்னு சட்டமா என்ன? காலேஜ்ல, வேலை செய்யற இடத்துலன்னு ஸ்வேதா மாதிரி எந்த பெண்ணும் வசீகரா பாட்டு பாடியிருக்காதுன்னு எப்படி நம்புற?” என்று கேட்டு, இழையை மொத்தமாக நிலைகுலைய செய்தாள்.

ஒருவேளை வசீகரன் வேறு எந்த பெண்ணையும் காதலித்து கொண்டிருப்பானோ என்ற எண்ணமே இழையின் தூக்கத்தை களவாடியது. உறங்காமல் அமர்ந்திருந்தவள் கைபேசியையே வெறித்து கொண்டிருந்தாள்.

காலை ஐந்து என்று அதில் காட்டவும், அதற்கு மேலும் பொறுக்க முடியாதவள் உடனே நாயகிக்கு அழைத்தாள்.

நாயகி அழைப்பை ஏற்கவும், “ஹலோ அத்தை, எப்படி இருக்கீங்க?” என்ற இழையின் குரல்.

நேற்று மகன் ஆணித்தரமாக இழையாள் தான் உங்கள் மருமகள் என்றும், இந்திரவர்மன் குறித்து மேலோட்டமாக கூறி தைரியமளித்துவிட்டு சென்றிருந்தாலும், நாயகிக்கு நம்பிக்கை வரவில்லை.

பின்னே, இந்திரவர்மனுடனான திருமணம் நின்றுவிட்டால், இழை எப்படி வசீகரனை திருமணம் செய்துகொள்ள உடனே ஒப்புக்கொள்ளுவாள். மலரினும் மென்மையான மனம் கொண்ட பேதைக்கு, முறிந்த உறவிலிருந்து மீண்டு வந்து அடுத்ததை ஏற்பது எத்தனை கடினம் என்பதை ஒரு பெண்ணாக உணர்ந்திருந்ததாலேயே நம்பிக்கை வர மறுத்தது.

“ஹலோ பிங்கி, என்னடா இந்த நேரத்துல போன் பண்ணியிருக்க?”

“உங்க நியாபகமாவே இருந்தது அத்தை. உங்களை எல்லாம் பார்த்த பிறகு சந்தோஷத்துல எனக்கு தூக்கமே வரல. நம்ம வீட்டை ரொம்ப மிஸ் பண்றேன். நேத்தே கால் பண்ணனும்னு இருந்தேன். ஆனா கிளினிக்ல பிஸியாகிட்டதால பண்ண முடியலை,” எனவும் நாயகியின் விழிகளில் நீர் சேர்ந்தது.

“எல்லாரும் நல்லா இருக்காங்களா அத்தை?”

“இருக்காங்கடா. நீ எப்படியிருக்க?”

“நல்லா இருக்கேன். ஜித்து எப்படி இருக்கான்?” என்று தொடங்கி, வசீகரனை தவிர்த்து அவர்கள் வீட்டில் வளர்த்துக் கொண்டிருந்த நாய்க்குட்டி வரை இழை விசாரித்தாள்.

“அந்த பப்பி ஏழு வருஷம் முன்னே இறந்துபோயிடுச்சு பிங்கி.”

“அப்படியா? அது செம கியூட்டா இருக்குமே அத்தை. நானும் ஜித்துவும் பப்பிக்குப் ரொம்ப க்ளோஸ்,” என்றவளுக்கு, எப்படி வசீகரனின் காதல் குறித்து தெரிந்துகொள்வது என்பது புரியாமல் போனது.

“அத்தை, அடுத்த மாசம் ப்ரணவ்க்கு பர்த்டே வருதே.”

“உனக்கு நியாபகம் இருக்கா பிங்கி?”

“என்ன அத்தை, இப்படி கேட்டுட்டீங்க. எனக்கு ஷார்ப் மெமரி. உங்க பர்த்டே, மாமா, அபித்தை, ஜித்து எல்லாரோட பர்த்டேவும் நியாபகம் இருக்கு. உங்க வெட்டிங்டே கூட. எதையும் அவ்ளோ சீக்கிரம் மறக்க மாட்டேன்,” என்ற இழை வசீகரனை தவிர்த்ததில், நாயகிக்கு அழுகை பொங்கியது.

சம்பிரதாயத்திற்காக கூட மகனை பற்றி ஒரு வார்த்தை விசாரிக்காதவள், எப்படி திருமணம் செய்து கொள்வாள் என்ற நினைப்பில் நாயகியின் கண்கள் கலங்கின.

“அப்புறம் வேற என்ன விசேஷம் அத்தை?”

“நீ இல்லாம எங்களுக்கு எந்த விசேஷமும் இல்ல பிங்கி,” என்று நாயகி மனதினுள் நினைத்துக்கொள்ள,

“நீங்க எல்லாம் திரும்ப எப்போ வருவீங்க அத்தை. பார்க்கணும் போல இருக்கு,” என்று கேட்ட இழையின் குரலுக்கு, நாயகியால் பேச முடியவில்லை.

“உங்க மாமா கூப்பிடுறார். அப்புறம் பேசுறேன்,” என்று சட்டென அழைப்பை துண்டித்துவிட்டு தேம்பி அழ தொடங்கினாள்.

காலை உணவை முடித்துக்கொண்டு கிளினிக்கில் வந்து அமர்ந்த இழையின் முகத்தில் மருந்துக்கும் மலர்ச்சி இல்லை. சிந்தை முழுக்க வசீகரனே நிறைந்திருந்தான்.

“வசீ யாரையேனும் காதலிக்கிறானா? என்று வேறு எப்படி தெரிந்துகொள்வது” என்ற யோசனையில் இருந்தவளுக்கு ஜித்துவின் நினைவு எழ, உடனே அவனுக்கு அழைத்துவிட்டாள்.

இழையின் அழைப்பு என்றதுமே அருகே இருந்த வசீகரனிடம் ஜித்து தெரிவிக்க, “பேசு” என்று சைகை செய்தான்.

“பிஸியா ஜித்து. எங்க இருக்க?” என்றதும் சர்வா வசீயை பார்க்க, “சொல்லாதே” என்பதாக சைகை செய்தான்.

“நா… நான் இப்போ ட்ராவல் பண்ணிட்டு இருக்கேன்.”

“ஓ அப்படியா. சரி ஜித்து, நீ ஃப்ரீயானதும் எனக்கு கால் பண்றியா.. பேசணும்..”

“சரி, பண்றேன்” என்று ஜித்து அழைப்பை துண்டிக்க, பேஷண்ட்ஸின் வரவில் சில மணி நேரம் வசீகரனை மறந்திருந்தாள் இழை.

அன்று காலை இரு முக்கிய சிகிச்சைகளுக்கு நேரம் ஒதுக்கி இருந்தாள் இழை. குறித்த நேரத்தில் அவர்களும் வந்துவிட, வசீகரனின் நினைவை ஒதுக்கி வைத்தவள் உதவியாளருடன் சேர்ந்து தன் பணியை தொடங்கி, molar teeth எனப்படும் கடவாய் பல்லை எடுத்த இடத்தில் தையலிட்டு முடித்தாள்.

“டாக்டர், என்ன சாப்பிட கொடுக்குறது?”

“நாளைக்கு வரை சூடா எதுவும் கொடுக்காதீங்க. இப்போ ஜூஸ், ஸ்மூதி, ஐஸ்க்ரீம்னு லிக்விடா கொடுங்க. அப்புறம் லைட்டா இட்லி போல கொடுங்க. அதிக காரம் வேண்டாம். அப்போதான் சீக்கிரம் ஹீல் ஆகும். கொடுத்திருக்க டேப்லெட்ஸ் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க. டூ டேஸ் கழிச்சு வந்து பாருங்க,” என்று பல் எடுத்த பிறகு செய்ய வேண்டியவைகளை தெளிவாக விளக்கியவள், அடுத்த நபரை கவனிக்க தொடங்கிவிட்டாள்.

மேலும் இரண்டு மணி நேரங்கள் கழிந்த நிலையில், clear aligner எனப்படும் கிளிப் பொருத்துவது, denture filling எனப்படும் பற்சொத்தை அடைப்பது என்று மேலும் நான்கு பேஷண்ட்ஸ் பார்த்தவள், இன்னும் ஒரு நபர் மட்டுமே இருப்பதை கண்டு, “நீ கிளம்பு தேவி. நான் பார்த்துக்குறேன்,” என்றாள்.

“இல்ல பரவால்ல மேம். முடிச்சிட்டு கிளம்புறேன்,” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இழைக்கு அழைப்பு வந்தது.

“சொல்லுங்கம்மா.”

“பிங்கி, இன்னும் லேட் ஆகுமாடா. அம்மா அங்கேயே சாப்பாடு கொண்டு வந்தடட்டா.”

“வேண்டாம்மா. இன்னும் ஒரு குழந்தைக்கு filling மட்டும் இருக்கு. சீக்கிரம் முடிஞ்சுடும். நானே வந்துடுறேன். நீங்க சாப்பிடுங்க,” என்றவள் கைபேசியை அணைக்க, தேவி இன்னும் அவள்முன் நின்றிருந்தாள்.

“நான் வேணும்னா உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரட்டுமா மேம்?”

“ப்ச், சொன்னா கேளு தேவி. இப்பவே இரண்டு மணியாகிடுச்சு. கிளம்பு. பார்த்துக்குறேன். ஈவினிங் வா..” என்றதும் “ஓகே மேம்” என்று கிளம்ப, இழை சிகிச்சையை தொடங்கினாள்.

ஆனால் அடுத்த சில விநாடிகளில் குழந்தை வாயை மூடிக்கொண்டது.

“டேய், சொன்னப்போ கேட்காம சாப்பாட்டுக்கு பதிலா சாக்லேட் சாப்பிட்டுட்டு இப்போ வலின்னு எங்களை படுத்தி எடுக்குறது போதாதா. ஒழுங்கா வாயை திற” என்று அதட்டல் அவன் அன்னையிடமிருந்து.

“ஏன்மா, குழந்தையை அதட்டறீங்க. ட்ரீட்மென்ட்டப்போ கூசும். அதான் குழந்தை பயப்படறான்,” என்றவள் உடனே குழந்தைக்கு புரியும் வகையில் எடுத்துக்கூறி, மெல்ல அவன் பயத்தை போக்கி சிகிச்சையை தொடங்கினாள்.

ஆனால் அவன் அன்னை சொன்னது போலவே பற்சொத்தையை அடைப்பதற்குள் இழையை படுத்தி எடுத்திருந்தான் அச்சிறுவன்.

அரை மணி நேரம் கழித்து ஒருவழியாக அவள் சிகிச்சை முடிந்து, குழந்தைக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்து அமர்ந்தவள் உடனே சர்வஜித்துக்கு அழைத்துவிட்டாள்.

“சொல்லு பிங்கி.”

“ஃப்ரீயா ஜித்து” என்றதும் வசீயை பார்த்தவன், “இல்ல பிங்கி” என்றான்.

“டேய், என்னடா எப்பபாரு பிஸி பிஸின்னு பிலிம் காட்டற. உன்கிட்ட முக்கியமா பேசணும்னு சொல்றேன் புரியல. திரும்ப திரும்ப பிஸிங்கிற. என்னைவிட உனக்கு பிஸி முக்கியமாடா” என்றவளுக்கு அத்தனை எரிச்சல்.

பின்னே வேலையை முடித்த மறுகணமே வசீயின் நினைவு. தன் பணியை மிகச் சிறப்பாக செய்ததில் பேதை மனதில் தவிப்பு நொடிக்கு நொடி கூடிக்கொண்டே போனது.

“ஏன் பிங்கி, டென்ஷனாகற” என்றவனுக்கு அவள் கோபம் எதனால் என்று புரியவில்லை.

“வேற என்னடா பண்ண சொல்ற. நான் உன்கிட்ட அர்ஜென்ட்டா பேசணும். எப்போன்னு சொல்லு.”

“சரி சரி. இரு. இன்னும் கொஞ்ச நேரத்துல நானே கூப்பிடுறேன்,” என்று வைத்துவிட்டவன் பார்கவியை பார்க்க, அவரோ கொண்ட அதிர்விலிருந்து இன்னுமே மீளாமல் நாயகியின் தோள் சாய்ந்திருந்தார்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஏன் கவி அதிர்ச்சி ஆகிட்டாங்க .. வசீகரா பொண்ணு கிட்ட போய் முதல்ல காதலை சொல்லாம கல்யாணத்தை நிறுத்த பிளானா ..