Loading

“ஜீவி உனக்கு நியாபகம் இல்லையா?”

“என்னது?”

“அன்னைக்கு எனக்கு பீவர் வந்ததால ஷால் கட்டிட்டு மாஸ்க் போட்டிருந்தேன்டி. அதனால அவருக்கு என்னை தெரியலை போல, அதான்…” என்று ஆரம்பித்தவள் பேச்சை சட்டென நிறுத்திவிட்டாள்.

“ஏன்டி நிறுத்திட்ட? சொல்லு.”

“அது… அதுவந்து… அன்னைக்கு ஏலகிரில எனக்கு பீவர் வந்ததுக்கு அவர்தான் காரணம்.”

“என்னது?” என்றவளிடம் அத்தனை அதிர்வு.

“ஆமா. அன்னைக்கு நைட் அவரை பார்த்ததாலதான் எனக்கு ஃபீவர் வந்தது.”

“என்னடி சொல்ற? ஏலகிரிமலைல அவரை பார்த்தியா?”

“மலையில இல்ல. அதுக்கு முன்னாடியே.”

“எப்போ?” என்று இடுங்கிய கண்களுடன் பார்த்த ஜீவிக்கு ‘எப்போது’ என்று சுத்தமாக புரியவில்லை.

“அது… அது… வந்து…”

“திரும்ப ‘வந்து போய்’ன்னு ஆரம்பிக்காத. கடுப்பாகுது.”

“சரி சொல்றேன். ஆனா நீ டென்ஷனாக கூடாது.”

“இல்ல, ஆகமாட்டேன். நீ சொல்லு.”

“அது… அதுவந்து… ஜீவி, உன்கிட்ட நான் இன்னொரு உண்மையும் மறைச்சிட்டேன்.”

“ஒரு உண்மையா? அடியேய், தோண்ட தோண்ட புதையலா, உண்மை மூட்டை மூட்டையா வந்துட்டு இருக்கு. நானே அதையெல்லாம் அடுக்க இடம் பத்துமான்னு பார்த்துட்டு இருக்கேன். கடுப்பேத்தாம சொல்லித்தொலை.”

“ஜீவி, நாம மலைக்கு ஏறும் முன்னாடி கீழ ஒரு இடத்துல நிறுத்தினோமே. அங்க நீ எனக்கு அவரை காட்டும் முன்னமே நான் பார்த்துட்டேன். நீ கேட்டபோது நான் சரியா பார்க்கலைன்னு சொன்னேன்.”

“அதாவது அவர் சரக்கு பாட்டிலோடு வந்தப்பவே நீ பார்த்துட்ட. கரெக்ட்டா?” என்றதில் இழையின் தலை அசையவும், மூச்சை எடுத்துவிட்டு, “அப்புறம்…” என்றாள் காற்றாகி போன குரலில்.

“அப்போதான் இந்த ஃபோட்டோ எடுத்தேன்,” என்று கைபேசியில் வசீகரனின் புகைப்படத்தை எடுத்து காட்டினாள். அதில் வசீகரன் ஒருபுறமாக திரும்பியிருந்தான்.

“உன்கூடவே தானடி சுத்திட்டு இருந்தேன். எனக்கு தெரியாம இந்த போட்டோவை எப்போ எடுத்த?”

“அது இந்த போட்டோவோட கம்பேர் பண்ணி பார்க்கிறதுக்காக எடுத்தேன்,” என்று இழை, வசீகரனின் இளம்வயது புகைப்படத்தை தன் கைபேசியில் எடுத்து காண்பிக்க, கொண்ட அதிர்ச்சியில் விழிமூட மறந்தவளாக பார்த்திருந்தாள் ஜீவிகா.

“ஏய், இது எப்போ எடுத்த ஃபோட்டோடி? அதை ஏன் நீ ஃபோன் வச்சுட்டு சுத்தற?”

“அதுதான் ஜீவி. நான் ரொம்ப வருஷமா அத்தை ஃபேமிலியை தேடுறதா சொன்னேனே. அதனால எங்கயாவது பார்த்தா உடனே அடையாளம் கண்டுபிடிக்கிறதுக்காக, என்னோட ட்வெல்த் பர்த்டேக்கு அத்தையும் மாமாவும் செலேப்ரெட் பண்ணினாங்களா, அந்த ஆல்பத்துல இருந்து இவரை எடுத்தேன்.”

“ஓ… இவர் மட்டும்தான் அதுல இருந்தாரா? ஐ மீன், உன் ஃபிரென்ட் ஜித்து, அவன் தம்பி, அத்தை, மாமா எங்கடி?”

“அவங்க எல்லாம் ஆல்பத்துல இருக்காங்க.”

“இருக்கட்டும், இருக்கட்டும். பத்திரமா அங்கேயே இருக்கட்டும்,” என்று நொந்துபோன ஜீவிகா, அதற்குமேல் அது தொடர்பாக கேள்வி கேட்கும் தெம்பு இல்லாதவளாக இருந்தாள்.

“சரி சொல்லுமா. எதுக்காக ஆல்பத்துல இருந்து இவர் ஃபோட்டோவை எடுத்த?”

“உனக்கு நியாபகம் இருக்கடி. நான் காலேஜ் சேர்ந்த பிறகு நம்ம செட்ல இருந்த உஷாக்கு கல்யாணமாச்சு. அதுக்கு நாம போயிருந்தோமா. அப்போ யாருக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும்னு கேட்டுட்டு இருந்த…” என்று இழை தயங்கி தயங்கி ஒவ்வொரு வார்த்தையாக கோர்க்க கஷ்டப்படுவதை கண்டவள்.

“நீ கஷ்டப்படாதமா. நானே சொல்லி முடிக்கிறேன்.”

“என்னது?”

“யாருக்கு எப்படி மாப்பிள்ளை வேணும்னு கேட்டபோ எல்லாரும் ரன்பீர், ஷாஹித், ரன்வீர், துல்கர்னு சொல்லிட்டிருந்தப்போ நீ அமைதியா உட்காந்திருந்த. ஏன்னு கேட்டதுக்கு அம்மாப்பா பார்க்கிற மாப்பிள்ளைய தான் கட்டிப்பேன் சொன்ன. ஆனா அதுக்கு என்ன அர்த்தம்னு எனக்கு அப்போ புரியலை. இப்போ நல்லா புரியுது.”

“ப்ச்… சும்மா உளறாத ஜீவி. அன்னைக்கு அப்படி கேட்கவும் எனக்கு இவர் நியாபகம் வந்ததா?”

“போதும், போதும். இதுக்குமேல சொல்ற சக்தி உனக்கு இருக்கலாம். ஆனா நான் தாங்கமாட்டேன்,” என்று நொந்துபோன மனதோடு சொன்னவள் கைபேசியில் மற்றொரு புகைப்படத்தை பார்த்தாள். அதில் வசீகரன் புல்லட்டில் அமர்ந்திருந்தான். அவன் எதிரே ஒரு பெண்.

எங்கேயோ பார்த்தது போல இருக்கவும், “ஏய் இதுல வேற ஷேர்ட் இருக்கு. இது எப்போ எடுத்த?” என்றாள்.

“அவர் நக்ஷியை மீட் பண்ண வந்தப்போ.”

“பஸ்லயா? அடிப்பாவி, நாள் முழுக்க உன்கூடவே சுத்திட்டு இருந்த என்னை மீறி எப்போ எடுத்த? அவர் உன் ஃபோனை தூக்கி போட்டுட்டாரே. அப்புறம் எப்படி?” என்றவளுக்கு மீண்டும் தலை சுற்ற, “மச்சி எனக்கு திரும்ப தலை சுத்துதுடி. புரியிற மாதிரி சொல்லு.”

“ஏய், அவர் வசீகரா பாட்டை கேட்டு கோபப்பட்டு மொபைலை தூக்கி போட்டுட்டாரா. அப்புறம் அவரே எடுத்து கொடுத்துட்டாரா…” என்று இழை இழுக்க,

“இதோ பார். ஏற்கனவே சொல்லிட்டேன். தலையை சுத்தி மூக்கை தொடாத. நான் உன்கிட்ட கேட்ட கேள்வி இந்த போட்டோ எதுக்கு எடுத்த?”

“அதான் ஜீவி. கீழ விழுந்த அதிர்ச்சியில கேமரா வொர்க் ஆகுதா இல்லையான்னு பார்க்க எடுத்தேன்.”

“ஓ… கேமரா வொர்க் ஆகுதான்னு பார்க்க அவரை ஃபோட்டோ எடுத்தீங்க. அப்படிதானே?”

“ஆமாடி.”

“கடவுளே…” என்று கண்களை மூடி திறந்த ஜீவிகா பொறுமையான குரலில், “சரி, பஸ்ஸுக்குள்ள அத்தனை பேர் இருந்தாங்களே. அவங்களை எடுத்திருக்கலாமே. இவ்ளோ ஏன், நான் உன் பக்கத்துலையே தானடி இருந்தேன். என்னை எடுத்திருக்கலாமே.”

“அவசரத்துல தோணலை ஜீவி.”

“என்ன அவசரம்?”

“அது ஃபோன் வொர்க் ஆகுதா இல்லையான்னு தெரிஞ்சுக்கிற அவசரம்.”

“சரி, அப்போ செல்ஃபின்னு ஒரு ஆப்ஷன் இருக்கே. அதுல உன்னையே எடுத்து பார்த்திருக்கலாமே. இதோ பார், என் பொறுமையை சோதிக்காம எதுக்கு அவரை போட்டோ எடுத்தன்னு உண்மையை சொல்றது உனக்கு நல்லது. இல்ல ஜெயிலுக்கு போனாலும் பரவாலன்னு போட்டுத் தள்ளிடுவேன்,” என்று அங்கிருந்த மருத்துவ உபகரணத்தை எடுத்து அவள் முன் நீட்டி மிரட்டினாள்.

“ப்ச்… என்ன ஜீவி. ஒரு ஃபோட்டோ எடுத்தது தப்பா? எதுக்கு குற்றவாளியை விசாரிக்கிற மாதிரி விசாரிக்கிற?”

“ஃபோட்டோ எடுத்தது தப்பில்லை. அவரை எடுத்தது தப்பு. அதுவும் நீ எடுத்தது ரொம்ப தப்பு,” என்றவளுக்கு தலைவலிக்க தொடங்கிவிட்டது.

“என்ன ஜீவி, ஒரு ஃபோட்டோக்கு இவ்ளோ டென்ஷனாகுற?”

“ஏய், மலைக்கு கீழ பார்த்தேன் சொல்ற. ஆனா நைட் பீவர் வந்ததுக்கு அவர் காரணம் சொல்ற. என்ன லாஜிக்டி இது? போதாததுக்கு அவரை வளைச்சு வளைச்சு ஃபோட்டோ எடுத்திருக்க. அவரால பீவர்னு சொன்னா நான் என்ன நினைக்க? அதுவும் அன்னைக்கு ரூம்ல நாம ரெண்டு பேர் தானடி படுத்து இருந்தோம். எனக்கு தெரியாம அவர் எப்படி வந்தார்?”

“ஆமா, அவரை கெஸ்ட் ஹவுஸ்ல பார்த்தியா இல்ல வெளிலயா?” என்று கேட்கவும்,

“கெஸ்ட் ஹவுஸ்ல.”

“நாங்க அத்தனை பேர் உன்னை சுத்தி இருந்தோம். அப்புறம் எப்படி?” என்றவளுக்கு மீண்டும் தலை சுற்ற தொடங்க, தண்ணீரை எடுத்து பருகியவள், “மச்சி, ஒரு பாரசிட்டமால் இருந்தா கொடு,” என்று வாங்கி போட்டுக்கொண்டாள்.

“இழை தயவுசெய்து புரியற மாதிரி சொல்லுடி.”

“அச்சோ, கொஞ்சம் என்னை பேச விடு ஜீவி. இதோ பார், அவர் நேர்ல வரல. சாயங்காலம் அவரை பார்த்ததுல எனக்கு திரும்பவும் அவர் கோபமா பேசினது கனவுல வரவும் ஜுரம் வந்துடுச்சு. போதுமா?”

“கனவுலயா? ஏய், அவரை கனவுல பார்த்ததுக்கே ஜுரம்னா நேத்தெல்லாம் கூட இருந்தாரே. நேத்து கனவுல வந்தாரா?” என்றதும் ஆம் என்ற தலையசைப்பு.

சட்டென தன் நாற்காலியை பின்னே தள்ளிக்கொண்டு எழுந்த ஜீவிகா, இழையின் கழுத்தில் கைவைத்து பார்க்க, அங்கே அனல் அடித்து கொண்டிருந்தது.

“எல்லாம் சரி மச்சி. ஆனா எனக்கு ஒரு டவுட்.”

“என்ன?”

“இல்ல, உன் ஆளு சரியான கோபக்காரர். உனக்கோ கோபப்படற மாப்பிள்ளை மட்டும் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்த. அப்புறம் எப்படிடி இவரையே கல்யாணம் செய்ய முடிவெடுத்த?”

“அவர் கோபக்காரரா இருக்கலாம் ஜீவி. ஆனா அவரோட கோபத்துல எப்பவும் நியாயம் இருக்கும்.”

“அப்படியா?” என்று நக்கலாக அவள் பார்க்க,

“நிஜமா ஜீவி. அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி, அவரோட கோபம் நூறு சதவிகிதம் சரியே. என்னால தான் அதை சரியா புரிஞ்சுக்க முடியல. சொல்லப் போனா எனக்கு பக்குவமில்லை.”

“எப்படி?”

“அன்னைக்கு நான் செய்த தப்புக்காகதானே அவர் கோபப்பட்டார். அதேபோல நக்ஷத்ரா குழந்தையை விட்டுட்டு வந்தது தப்புதானே?” என்று கேள்வியாய் தோழியின் முகம் பார்த்திருந்தாள்.

“நீ சொல்லி இல்லன்னு சொல்லுவேனாடி. கண்ட்டினியூ பண்ணு,” என்று பல்லை கடித்துக்கொண்டு கூறினாள்.

“அதான் ஜீவி. அப்பவும் இப்பவும் அவர் கோபம் சரியே.”

“ஓ… அப்புறம்?”

“அதுமட்டுமில்ல ஜீவி, கோபம் இருக்க இடத்துல தான் குணமிருக்கும்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்கடி,” என்று வசீகரனுக்காக வக்காலத்து வாங்கியவளை கொலைவெறியோடு பார்த்தவள், தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு,

“ஓஹோ…”

“அதைவிட அன்னைக்கு அவர் நினைச்சிருந்தா, நான் பேசினதை எங்கம்மாகிட்ட போட்டுக் கொடுத்து எனக்கு அடி வாங்கி கொடுத்திருக்கலாம். ஆனா அப்படி செய்யல ஜீவி. அவர் ரொம்ப நல்லவர்.”

“அப்படியா? சரி, இந்த ஆராய்ச்சியெல்லாம் நீ எப்போ பண்ணின?”

“அது காலேஜ்ல, அப்புறம் இங்க கிளினிக்ல, வீட்லன்னு டைம் கிடைக்கிறப்போ எல்லாம் அடிக்கடி.”

“அடிக்கடின்னு சொல்லாதடி. நீ சொல்றதை பார்த்தா, ஃபுல் டைம் ஜாப்பாவே நீ பார்த்தது அவர் நல்லவரா கெட்டவராங்கிற ஆராய்ச்சி. அப்படிதானே?”

“அப்படி இல்லடி. ஜித்துகூட அடிக்கடி எங்கண்ணா ரொம்ப ஸ்மார்ட்னு சொல்லுவான். நானே பார்த்திருக்கேன். அவர் ஸ்போர்ட்ஸ்ல சேம்பியன், ஸ்கூல் பியுபில் லீடராக கூட இருந்திருக்கார். என்ன திருமாமா மாதிரியே கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா இருந்தாலும், எப்பவும் ஒரு ஆபத்து அவசரம்னா கூட வந்து நிற்பாராம். எங்கயும் விட்டு கொடுக்க மாட்டாராம்,” என்று பேசிக்கொண்டே சென்றவளை கன்னத்தில் கைவைத்து பார்த்திருந்தாள் ஜீவிகா.

“அன்னைக்கு நக்ஷியை தேடி வந்ததுகூட அவர் ப்ரெண்டுக்காகதானே. நீயே பார்த்தல்ல, பாவம் அந்த சின்ன குழந்தையை அம்மாகூட சேர்க்க எவ்ளோ ரிஸ்க் எடுத்தார்னு. நக்ஷி மாமியார் வீட்ல சொன்னாங்க தானே. இதுபோதாதா?”

“எனக்கு போதும். உனக்கு போதுமான்னு நீயே முடிவு பண்ணு தாயே.”

“என்ன முடிவு ஜீவி?”

“சொல்றேன். அதுக்குமுன்ன ஒருவிஷயம் மட்டும் எனக்கு தெளிவுபடுத்து.”

“என்னது?”

“நீ எதனால அவரை கல்யாணம் செய்துக்க நினைக்கிற?”

“ப்ச்… அதான் சொன்னேனே ஜீவி. என்னால அவர் வலியை பார்க்க முடியாது.”

“ஏய் நிறுத்து, நிறுத்து. இந்த உருட்டெல்லாம் என்கிட்ட வேண்டாம். கண்டிப்பா ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அதை சொல்லு,” என்று அவள் வாயாலேயே வசீகரன் மீதான காதலை வெளிக்கொணர ஜீவிகா முயல, இழையோ அவளை தலையால் தண்ணீர் குடிக்க வைத்திருந்தாள்.

“வேற காரணமா? அப்படி பெருசா எதுவும் இல்லடி,” என்று பேசிக்கொண்டே சென்றவள், “ஹே, சொல்ல மறந்துட்டேனே,” என்றிட,

“ஹான், சொல்லு சொல்லு,” என்று ஜீவி ஆர்வமாக கேட்டாள்.

“அதான்டி, அன்னைக்கு அவரை கல்யாணம் செய்துக்குறேன்னு வாக்கு கொடுத்துட்டேன். யாரா இருந்தாலும் கொடுத்த வாக்கை காப்பாத்தணும் இல்லையா?”

“ஓஹோ…”

“ஆமா ஜீவி. அன்னைக்கு தசரதர் கொடுத்த வாக்குக்காக ராமர் காட்டுக்கு போகலையா. அந்த மாதிரிதான். ஒருத்தங்களுக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாத்துறது தப்பு. இப்படி செய்ய உன்னால முடியுமா சொல்லு.”

“முடியாது. இதுக்குமேல சத்தியமா முடியாது. நீ கொடுத்த வாக்குக்காக நான் உயிரைவிட முடியாது. போதும், கிளம்பறேன்,” என்று அவள் எழவும்…

“ஹே, எங்க போற? இருடி. நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கலை.”

“நீ முடிக்கறதுக்குள்ள என் கதை முடிஞ்சுடும். தயவுசெய்து என்னை விட்டுடு. நான் வீடு போய் சேருறேன்.”

“விளையாடாத ஜீவி. உன்கிட்ட பேச வேண்டியது நிறைய இருக்கு,” என்றதும் நாற்காலியில் அமர்ந்த ஜீவிகா,

“சரி சொல்லு. ஒருவேளை அவருக்கு கல்யாணமாகி இருந்தா என்ன செய்திருப்ப?”

“இல்லன்னு தெரிஞ்ச பிறகுதான் இந்த முடிவுல உறுதியா இருக்கேன்.”

“எப்படி தெரியும்? உங்கத்தை சொன்னாங்களா?”

“இல்ல. நானே தெரிஞ்சுக்கிட்டேன்.”

“நீயேவா? அவர்கூட சரியா பேச கூட இல்லைன்னு சொன்ன. அப்புறம் எப்படிடி?”

“இதோ இப்படி,” என்று கைபேசியை எடுத்தவள், அன்று வசீகரன் சாரதி கூறிய வேலையை முடித்து திருமண மண்டபத்தில் நுழைந்ததிலிருந்து, அவன் மேடையேறியது, சாரதியிடம் பேசியது என்று அனைத்தையும் ஒன்றுவிடாமல் விதவிதமாக அவனை புகைப்படம் எடுத்திருந்தாள்.

“ஏன்டி, நீ டென்டிஸ்ட்டா இல்ல ஃபோட்டோகிராபரா?”

“ஏன் கேட்கிற?”

“இப்படி அவரை ரசனையா ஃபோட்டோ எடுத்திருக்கியே. ப்ரொஃபெஷனல் ஃபோட்டோகிராபரே தோத்துப் போவான்டி.”

“ப்ச் ஜீவி, அந்த போட்டோவை நல்லா உத்து பாரு.”

“எதுக்கு?”

“அவருக்கு கண்டிப்பா கல்யாணமாகலை.”

“எப்படி சொல்ற?”

“ரொம்ப சந்தோஷமா இருக்கார் பாருடி.”

“அப்போ கல்யாணம் பண்ணி அவர் சந்தோஷத்தை நீ கெடுக்க போறேன்னு சொல்லு.”

“உதை வாங்க போற நீ. ப்ச், இங்க பாரு. அவர் தனியா இருக்கார். கூட எந்த பெண்ணும் வரல. கிட்டத்தட்ட இருபது நிமிஷம் இருந்தவரை தேடி எந்த பெண்ணும் வரல. இப்படிதான் தெரிஞ்சுக்கிட்டேன்.”

“ஏன்டி, உன் ஃபிரென்ட் ஜித்துகிட்ட ஒரு வார்த்தை ‘உங்கண்ணாக்கு கல்யாணம் ஆகிடுச்சான்னு’ கேட்டிருந்தா அவனே சொல்லியிருப்பானே. அதுக்கு எதுக்கு இத்தனை போட்டோஸ்?”

“அட ஆமால்ல. ஆனா அவசரத்துல தோணலை ஜீவி.”

“உனக்கெல்லாம் தோணிட்டாலும்,” என்று இதழ் சுழித்தவள், “சரி, என்ன அவசரம்?”

“அவருக்கு கல்யாணமாகிடுச்சா இல்லையான்னு தெரிஞ்சுக்கிற அவசரம்.”

“எதுக்கு தெரிஞ்சுக்க நினைக்கிறன்னு கேட்டா ‘லவ் இல்லை’ன்னு சொல்லி உருட்டோ உருட்டுன்னு உருட்டி, மிச்சமிருக்கிற உயிரை எடுத்துடுவா. எதுக்கு வம்பு,” என்று நினைத்த ஜீவிகா அமைதியாக அமர்ந்திருக்க,

“ஜீவி, சின்ன வயசுல அவர் என்னை மாதிரியே ரொம்ப பப்ளியா, சப்பியா இருப்பார்டி. ஆனா இப்போ கொஞ்சம் மெலிஞ்சுட்டார். ஒருவேளை ஸ்வேதா அக்காவால இருக்குமோ. ஆனா அப்போவிட இப்பதான் இன்னும் ஹான்ட்ஸமா இருக்கார் ஜீவி,” என்றவளை பார்த்து பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது ஜீவியால்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. யம்மா இழை முடியல … இதுக்கு நீ லவ் பண்றேன்னு ஒரே வார்த்தை ல சொல்லியிருக்கலாம் … ஆனா உங்க ரெண்டு பேர் காதலும் அழகா இருக்கு … அந்த வசீகரன் எனக்கு அந்த பொண்ணு வேணும் இந்த பொண்ணு வேணும்னு பக்கம் பக்கமா பேசினான் … இப்போ நீ காதல் இல்லை ஆனா அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு பக்கம் பக்கமா பேசுற .. அதெல்லாம் விடு உன் கல்யாணத்தை எப்படி நிறுத்த போறீங்க …

  2. Intha epi vachikum pothu sirichikite read pannen sis… Very nice epi sis… இழை very super 🙂🙂🙂