Loading

அன்று பார்கவி வெளியில் சென்றிருக்க, மாடிப்படி ஏற போனவளை அழைத்தான் பதினொன்றாம் வகுப்பில் இருந்த வசீகரன்.

அன்று அவளை கீழே தள்ளியதில் இருந்தே இழை அவனிடம் எந்த பேச்சும் வைத்திராத நிலையில், இன்று அவன் அழைக்கவும் உடனே செல்லாமல் அவள் தயங்கி நிற்க,

“ஹே பப்ளி, உன்னைதான். இங்க வா” என்று மீண்டும் அழைக்கவும், வேறு வழியில்லாமல் அவன் முன் சென்று நின்றாள்.

“எங்க போற”

“மாடிக்கு, ஸ்வேதா அக்காகிட்ட மேத்ஸ் டவுட் கேட்க”

“சரி, நான் இப்போ உன்கிட்ட ஒன்னு கொடுப்பேன். அதை நீ ஸ்வேதாகிட்ட கொடுத்துடுறியா”

“என்ன கொடுக்கணும், புக்கா இல்ல பென்சில் பாக்ஸா” என்றவள், உடனே தன் கையிலிருந்த புத்தகங்களை காம்பவுண்ட் மீது வைத்துவிட்டு கையை நீட்டினாள்.

பின்னே அவன் பொருட்களுக்கு ஏதேனும் சிறு சேதாரமானால் யாரையும் பிடித்து கத்தி தீர்த்துவிடுவான். ஒருவேளை ரெக்கார்ட் நோட்டாக இருந்து அது கீழே விழுந்துவைத்தால் என்ன செய்வது என்பதால் இந்த எச்சரிக்கை.

“அதெல்லாம் இல்ல. இதோ இந்த கார்ட்டை ஸ்வேதாகிட்ட கொடுத்துடு. போதும்”
கார்ட் என்றதுமே, “இன்னைக்கு ஸ்வேதா அக்கா பர்த்டே கிடையாதே. அப்புறம் எதுக்கு” என்று கையில் இருந்த கார்டை இழை முன்னும் பின்னும் திருப்பி பார்க்க,

“பப்ளிமாஸ், ஒரு வேலையை சொன்னா கேள்வி கேட்காம அமைதியா செய்ய கத்துக்கோ”

“அப்போ நீங்களே கொடுக்க வேண்டியது தானே” என்று இழை இதழ் சுழிக்க,

“அது எனக்கு தெரியாதா. தேவையில்லாத கேள்வி கேட்காம சொன்னதை செய்” என்றான் கட்டளையான தோரணையில்.

எதற்கு வம்பு என்று நினைத்த இழை, சரி கொடுத்துடுறேன் என்றவள் கார்டோடு மாடிக்கு செல்ல, அங்கே புதிதாக ஒரு நபர் அமர்ந்திருந்தார்.
அவரை கண்டு தேங்கி நின்ற இழை, “அங்கிள், ஸ்வேதா அக்கா இல்லையா” என்றாள்.

“உள்ள இருப்பா பாரும்மா” எனவும் அவள் அறைக்குள் செல்ல, அங்கே என்றும் போல வசீகரா பாடல் ஒலித்து கொண்டிருந்தது. ஆனால் ஸ்வேதாவை காணோம்.

“அக்கா, அக்கா”

“ஃபைவ் மினிட்ஸ்ல வரேன். வைட் பண்ணு பிங்கி” என்று ஸ்வேதா பாத்ரூமில் இருந்து குரல் கொடுக்கவும், ஹாலுக்கு வந்த பிங்கி காத்திருக்க, அடுத்த இரண்டு நிமிடங்களில் வீட்டிற்கு திரும்பியிருந்த பார்கவி, “பிங்கி” என்று கீழேயிருந்து குரல் கொடுத்திருந்தார்.

அன்னை அழைக்கவும் உடனே புதிதாக அமர்ந்திருந்தவரிடம், “அங்கிள், ஸ்வேதா அக்காகிட்ட இந்த கார்ட் கொடுத்துடுறீங்களா” என்றாள்.

“கார்டா? எதுக்குமா? யார் கொடுத்தா?”

“ஜித்துவோட அண்ணா..”

“ஜித்து அண்ணனா, அது யாரு” என்று அவர் கேட்டதும் தான் தாமதம்.

“உங்களுக்கு தெரியாது” என்றவள், “அதோ பாருங்க, அதுதான் ஜித்துவீடு” என்று வசீகரனின் வீட்டை ஜன்னல் வழியே சுட்டிக் காண்பித்தவள், அவள் அறிந்த வரையிலான வசீகரனின் ஜாதகத்தை அவரிடம் கொடுத்திருந்தாள்.

சரியாக சொல்ல வேண்டுமானால், ஸ்வேதாவின் தந்தையிடம் வசீகரனை மிகத் தெளிவாக போட்டு கொடுத்திருந்தாள்.

அன்று ப்ரணவின் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக திருவேங்கடத்தின் வீட்டில் நிகழ்ந்து கொண்டிருக்க, அங்கே ஆவேசமாக நுழைந்தார் ஸ்வேதாவின் தந்தை.

கார்டை சுட்டிக்காட்டி கேட்கவும், மறுக்காமல் ஒப்புக்கொண்ட வசீகரன், “எனக்கு ஸ்வேதாவை பிடிச்சிருந்தது. அதை சொன்னேன். இதுல என்ன தப்பிருக்கு” என்று நிமிர்வாக கேட்க, அங்கே வந்த ஸ்வேதா, கோபமாக நின்றிருந்த தந்தையிடம்,

“வசீயை அவளுக்கு யாரென்று தெரியவே தெரியாது. ஒரே பள்ளியாக இருக்கலாம், ஆனால் அவன் வேறு செக்ஷன், நான் வேறு. எங்களுக்குள் அறிமுகமே இல்லை” என்று அடித்து கூற, அங்கு பிரச்சனை மேலும் பெரிதாகி போனது.

அன்று தன்னை யாரென்றே தெரியாது என்று சொன்ன ஸ்வேதாவை குறையாத அதிர்ச்சியோடு வசீகரன் பார்த்திருந்தான் என்றால், இழையோ வசீகரனை குறையாத அச்சத்தோடு பார்த்து நின்றாள்.

இழை சொல்லி முடிக்கவும் திகைப்போடு பார்த்திருந்த ஜீவிகா,
“அடிப்பாவி, அநியாயத்துக்கு காதல் ஜோடிகளை பிரிச்சு விட்டிருக்கியே. உன்னை வசீகரன் சும்மாவா விட்டார். அன்னைக்கு ஃபோனை தூக்கி போட்டதுக்கு பதில் உன்னை தூக்கி போட்டிருக்கணும். தப்பு பண்ணிட்டார்”

“ஜீவி, உனக்கு தெரியாது. இப்படி நடந்ததால அவருக்கு என்மேல செம கோபம். அவர் முகத்துலயே முழிக்க கூடாதுன்னு சொல்லி எவ்ளோ திட்டினார் தெரியுமா”

“திட்டாம உன்னை தூக்கிவச்சு கொஞ்சனுமா”

“ப்ச், அதில்லடி. விட்டிருந்தா என்னை அடிச்சிருப்பார். அத்தையால நான் தப்பிச்சேன். அதைவிடு, அவர் என்னை அடிச்சிருந்தாகூட பரவால. ஆனா அன்னைக்கு நைட் அவர் மாடில ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தார். அதுதான் என்னால தாங்கமுடியலை” என்றவளின் குரலே கீழிறங்கி போயிருந்தது.

“என்னது, உன்னை திட்டிட்டு அழுதாரா”

“அச்சோ, என்னை திட்டினேன்னு அழலை. அன்னைக்கு அவர் கொடுத்த கார்டை நான் ஸ்வேதா அக்காகிட்ட கொடுத்திருந்தா இவ்ளோ பெரிய பிரச்சனை வந்திருக்காது தானே. அதுவும் அந்த அக்கா இவரை யாருன்னே தெரியாதுன்னு சொன்னப்போ அவர் ரொம்ப ஷாக் ஆகிட்டாரு…”

“எனக்கு தெரியும் ஜீவி, அந்த அக்காவும் தான் இவரை லவ் பண்ணினாங்க. ஆனா பிரச்சனை வந்ததும் இவரை தெரியாதுன்னு சொல்லி தப்பிச்சிட்டாங்க தெரியுமா. ஒருவேளை அதுக்காக அழுதிருக்கலாம். ஆனா எனக்கு சரியா தெரியல”

“ஹே, அவங்க லவ் பண்ணினது உனக்கு எப்படிடி தெரியும்”

“இவரும் அந்த அக்காவும் அடிக்கடி ஸ்கூல் கிரவுண்ட்ல ஒண்ணா உட்காந்து படிப்பாங்க. சில நேரம் ஸ்கூல் விட்டு நானும் ஜித்துவும் வரப்போ இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா வருவாங்க. இந்த மாதிரி”

“என்னடி உளர்ற. ரெண்டு பேரும் சேர்ந்து படிச்சா, ஒண்ணா வந்தா லவ்வா”

“அதைவச்சு மட்டும் சொல்லலைடி. எங்க வீட்டுக்கு இவர் பாட்டியை பார்க்க வரப்போ ஸ்வேதா அக்கா கீழ வந்துடுவாங்க. அதைவிட எனக்கு வசீகரா பாட்டை இன்டரடியூஸ் பண்ணினதே அவங்கதான் தெரியுமா”

“என்ன சொல்ற”

ஆம், எப்போதும் படிப்பு, விளையாட்டு, போட்டி என்று நம்பர் ஒன் மாணவனாக திகழும் வசீகரனை முதலில் “வசீகரா” பாடலை பாடி அவன் கவனத்தை தன் புறம் திருப்பியவள் ஸ்வேதாதான். அவனும் வயது கோளாறில் ஆர்வமாக அவளோடு பழகி இருந்தான்.

அவர்களின் பழக்கம் நாளடைவில் உடன் பயிலும் மாணவர்களுக்கும் தெரியவர, வசீயையும் ஸ்வேதாவையும் சேர்த்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்தனர். வசீ அதற்கு பெரிதாக ஆட்சேபனை செய்ததில்லை. ஏனோ அந்த வயதில் தன்னை ஒரு பெண் சுற்றிவருவது அவனுக்கு கர்வத்தை கொடுத்திருந்தது.

பள்ளி தவிர்த்து அவர்கள் சந்தித்துக் கொள்வது இழையின் வீடுதான்.

ஆம், அவள் பாட்டி உடல்நிலை சரியில்லாமல் போனதில் திருவேங்கடம் வசீகரனிடம் பார்கவிக்கு உதவ சொன்னபோது மறுப்பே சொல்லாமல் அவன் ஒப்புக்கொண்டதற்கு காரணமே ஸ்வேதாதான். அவன் அப்படி அங்கே வரும்போதெல்லாம் “வசீகரா” பாடலை போட்டு அவன் கவனத்தை மேலும் ஈர்த்திருந்தாள் ஸ்வேதா.

“ஆமா, அவங்க அடிக்கடி இந்த பாட்டு கேட்டுட்டு இருப்பாங்க. ஆனா அப்போ அது இவரோட பேருன்னு எனக்கு தெரியாது. ஆனா என் ரிங்க்டோன் கேட்டுட்டு இவர் கத்தினபோது தான் புரிஞ்சது. அதான் உடனே மாத்திட்டேன்”

“என்ன மாத்திட்ட”

“ரிங்டோன்”

“அடிப்பாவி, அவருக்கு பிடிக்கலைன்னா நீ ரிங்டோன் மாத்துவியா” எனவும், ஆம் என்று தலையசைத்தாள் இழை.

“ஏன்டி”

“தெரில. ஆனா அந்த பாட்டு கேட்டா அவருக்கு கோபம் வருது. ஒருவேளை ஸ்வேதா அக்கா நியாபகம் வந்துதான் கோபப்படறார்போல. அதான் அந்த பாட்டுகூட அவரை கஷ்டபடுத்த கூடாதுன்னு மாத்திட்டேன்”

“அடியேய், என்னடி இதெல்லாம். அப்போ நீ அவரை லவ் பண்றியா. எத்தனை வருஷமா. உங்க அம்மாக்கு அவரை பிடிக்கும்னு சொல்றவ, இந்த சம்பந்தம் வரும் முன்னமே சொல்லி இருக்கலாமேடி. நீதான் அவரை ஏலகிரில பார்த்தியே. அப்புறம் என்ன”

“ப்ச், நான் அவரை லவ் பண்ணலை ஜீவி” என்று இன்னுமே அவளை குழப்பி இருந்தாள் இழை.

“லவ் பண்ணலை ஆனா பாட்டுகூட கஷ்டபடுத்த கூடாதுன்னு நினைப்ப” என்று பல்லை கடித்துக்கொண்டு தோழியை பார்த்தவள்,

“ஏன்டி பேசுற நீ மென்டலா இல்ல கேட்டுட்டு இருக்க நான் மென்டலா? என்ன நினைச்சுட்டு இருக்க நீ?” என்று பொறுமை இழந்துபோனாள் ஜீவிகா.

“அது அப்படியில்ல ஜீவி. எனக்கு எப்பவும் அவரோட மனசு கஷ்டபட்டா தாங்காது. அதான் அன்னைக்கு அவர்கிட்ட போய்… போய்… போ…” என்றவள் பேச்சை நிறுத்தி மெளனமாக தோழியை பார்த்தாள்.

“அப்படி எங்கடி போன, சொல்லி தொலை. சஸ்பென்ஸ் தாங்கல” என்று ஜீவிகா கத்தினாள்.

“அச்சோ, அவரை பார்க்க தான் போனேன். ஆனா நான் சொல்றதை கேட்டு நீ டென்ஷனாக மாட்டியே? ஏற்கனவே உனக்கு தலை சுத்தல்ன்னு சொல்லிட்டு இருக்க” என்று இழை தயங்கினாள்.

“ஏன்டி, இத்தனையும் கேட்டுட்டு உயிரோட இருக்கேனே. அதுலயே தெரியல. பரவால்ல, நீ சொல்லு மச்சி. எவ்வளவோ கேட்டுட்டேன், இதை கேட்க மாட்டேனா?” என்று கொலைவெறியோடு இழையை பார்த்தாள்.

“அது வந்து அன்னைக்கு அவர் பால் விளையாடிட்டு இருந்தாரா…”

“என்னைக்கு?”

“ப்ச், ப்ரணவ் பர்த்டேக்கு அடுத்த நாள்.”

“அதாவது அவரோட காதலுக்கு நீ சங்கு ஊதின அடுத்த நாள்னு சொல்லு.”

“ஏய்…”

“என்னடி ஏய், அடங்கு. இல்ல தெரியாமதான் கேட்கிறேன். உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா அவரை எல்லார் எதிர்லயும் போட்டு கொடுத்துட்டு அடுத்த நாள் பார்க்க போயிருப்ப.”

“ஆமா, எதுக்கு போன? ஒருவேளை அவர் உயிரோட இருக்காரான்னு பார்க்க போனியா, இல்லனா சங்கு ஊதி அடக்கம் பண்ணினோமே அவரோட லவ்க்கு பால் ஊத்தலாம்னு போனியா?” என்று நக்கலாக பார்க்க, இல்லை என்று தலையசைத்தாள் இழை.

“வேற எதுக்குடி போன? ஏற்கனவே அவருக்கு மூக்குமேல கோபம் வரும். நீ முன்னாடி போய் நின்னா உன் மூக்கை இல்ல மூஞ்சியையே உடைக்க வாய்ப்பு இருக்குங்கிற அறிவு வேண்டாம். எதுக்குடி போன?”

“அதைதான் சொல்ல வந்தேன். எங்க நீ சொல்ல விட்ட?”

“சரி சொல்லு.”

“அதுதான் ஜீவி…”

“எதுதான்?”

“ப்ச்… அவரோட லவ் ப்ரேக்அப் ஆகிடுச்சில. அதனால அவர் ரொம்ப சோகமா இருந்தாரா. அதனால… அத…”

“லவ் ப்ரேக்அப்பாக நீ காரணமா இருந்ததால இப்போ அவரை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றது என்ன லாஜிக்? எனக்கு ஒன்னும் புரியலை. இதோபார், தலையை சுத்தி மூக்கை தொடாம எதுக்கு போனன்னு ஒழுங்கா சொல்லி தொலை.”

“அந்த அக்கா லவ் பண்ணலைன்னா என்ன, நான் உங்களை லவ் பண்றேன். பெரியவளாகி நானே உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்டி” என்று ஜீவிகாவை பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டு கடகடவென இழை கூற, ஜீவிகாவோ கொண்ட அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துகொண்டு மேஜையில் தலை கவிழ்ந்திருந்தாள்.

“உன் முகமே ரொம்ப டையார்டா இருக்கு. ஜூஸ் குடி ஜீவி. அப்பத்தான் தெளிவாகும்” என்ற இழையை கொலைவெறியோடு பார்த்திருந்தாள் ஜீவிகா.

“மச்சி, இன்னுமே என்னால நம்பமுடியல. தயவுசெய்து சொல்லு, சிக்ஸ்த்ல இருந்த நீ நிஜமாவே அவர்கிட்ட இப்படிதான் சொன்னியா?”

“ஆமா” என்றவளால் தோழியை ஏறிட்டு பார்க்கமுடியவில்லை. பின்னே, அப்போது அவன் துயர்துடைக்க சொல்லிவிட்டவளுக்கு நாளடைவில் அது எத்தனை அறிவீனம் என்பது புரியாமல் இல்லை. இப்போது அவளிடம் பகிரும்போது கூட அவளால் இயல்பாக சொல்லமுடியவில்லை.

“அவர் என்ன சொன்னார்? ஐ மீன், உன் ப்ரொபோஸல அக்செப்ட் பண்ணிக்கிட்டாரா?”

“என்ன அறிவுகெட்டதனமான கேள்வி ஜீவி இது?” என்ற முறைப்பு இழையிடம்.

“அதுசரி, மேடம் ரொம்ப அறிவுபூர்வமா பேசிட்டு வந்தீங்க. நான்தான் அறிவு கெட்டுபோய் பேசுறேன். அன்னைக்கு அவர் என்ன சொன்னார் சொல்லு.”

“ப்ச், நான்தான் முட்டாள்தனமா பேசிவச்சேன்னா, அதை எப்படி அவர் அக்செப்ட் பண்ணுவாரு. அவருக்கு இருந்த கோபத்துக்கு என்னை திட்டினதோட விட்டதே பெருசு. நான் திரும்ப ஸாரி கேட்க போகவும், நான் சொன்னது எங்கம்மாக்கு தெரியுமான்னு கேட்டு அதுக்கும் தனியா திட்டினார். அப்புறம் என் முகத்துலேயே முழிக்க கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொன்னார்.”

“ஏய், அவர் அவ்ளோ சொன்ன பிறகும் எந்த தைரியத்துல அவரை கல்யாணம் பண்ணிப்பேன் சொல்ற? ஒருவேளை அவர் மனசுல இன்னமும் அந்த ஸ்வேதா இருந்தா என்ன செய்வ?” என்றதுமே “இல்லை” என்று பலமாக தலையாட்டினாள் இழை.

“அது எப்படி உனக்கு தெரியும்? யாராவது சொன்னாங்களா, இல்ல அவர் மனசுக்குள்ள போய் பார்த்தியா?”

“இல்ல ஜீவி, நானே தெரிஞ்சுகிட்டேன்.”

“ஓ, அந்த வயசுலேயே உனக்கு தெரிஞ்சதா?”

“ப்ச், இல்லடி. அப்போ இல்ல. காலேஜ் படிக்கிறப்போ ஒருமுறை யோசிச்சபோது நானே தெரிஞ்சுகிட்டது.”

“காலேஜ் படிக்கறப்போ ஏன்டி அவரை பத்தி யோசிச்ச?” என்று கேட்பதற்கு வாய்வரை வந்த வார்த்தையை தனக்குள் விழுங்கியவளாக ஜீவிகா, “என்ன தெரிஞ்சுகிட்ட?” என்றாள்.

“அவருக்கு ஸ்வேதா அக்கா மேல இருந்ததுக்கு பேர் லவ் இல்லடி. இப்போ யோசிக்கும்போது தான் புரியுது. அது ஜஸ்ட் க்ரஷ்.”

“ஓஹோ, அது எப்படி தெரிஞ்சது?”

“நான் அதுக்கு அப்புறம் அவரை ஃபாலோ பண்ணி தெரிஞ்சுகிட்டேன்.”

“என்னது, ஃபாலோ பண்ணியா? இது எப்போடி?”

“அவர் என்னை திட்டினதுக்கு அடுத்த நாள் ஸ்கூல்ல ஸ்வேதா அக்கா இவர்கிட்ட பேச வந்தப்போ, அந்த அக்காவை கோபமா திட்டினார். அதுக்கு அப்புறம் அந்த அக்காவை திரும்பிக்கூட பார்க்கல, தெரியுமா.”

“ஏய், லவ்வை பிரிச்சுவிட்டதும் இல்லாம, அது முழுசா அறுந்ததான்னு தெரிஞ்சுக்க அவங்களை ஃபாலோ வேற செய்தியா நீ?”

“அப்படி இல்ல ஜீவி. அவர் கோபமா இருந்ததால அடுத்து என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்கற ஆர்வத்துல பார்த்தேன். அப்போதான் இதெல்லாம் எனக்கு தெரிஞ்சது.”

என்று பேசிக்கொண்டிருக்கும் போதே இழைக்கு பார்கவியிடம் இருந்து அழைப்பு வர, பேசிமுடித்து வந்தவளிடம்,

“அவருக்கு ஸ்வேதா மேல லவ் இல்ல சரி. நீ ஏலகிரி விஷயத்துக்கு வா. அவரை பார்த்த பிறகும் ஏன் கல்யாணத்துக்கு சம்மதிச்ச? அப்பவே வேண்டாம்னு சொல்லலாமே..” என்றாள்.

“ப்ச் ஜீவி அது ஒரு பெரிய கதைடி. எங்க சின்ன தாத்தா மட்டும் ஆஷ்மி கல்யாணத்தை வச்சு என் அம்மாவை என் சம்பாத்தியத்துக்காக கட்டிகொடுக்காம இருக்கியா அது இதுன்னு அன்னைக்கு அந்த பேச்சு பேசலைன்னா, இந்நேரம் எங்கம்மா அவசரவசரமா இந்தர்க்கு ஒத்துட்டு இருந்திருக்க மாட்டாங்க…”

“நானுமே… ப்ச் எனக்கு எப்படி சொல்லன்னு தெரியலை. ஆனா தாத்தா எங்கம்மாவை பேசவும் ஒரு வேகத்துல ஒத்துக்கிட்டேன். ஆனா அப்போ எனக்கு இவரை கல்யாணம் செய்துக்குற எண்ணமே இல்லடி.”

“கள்ளி, இத்தனை வருஷமா அவரை லவ் பண்ணிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம்தான் லவ்வு. அதுவும் அம்மா பார்க்கிற பையன்னு சொல்லி எங்க காதுல பூ சுத்திட்டு, இப்போ அவரை கல்யாணம் பண்ற எண்ணமே இல்லன்னு சொல்லி தெளிவா குழப்புற இழை நீ.”

“என்ன குழப்பம் உனக்கு? இதோபார், சும்மா அவரை லவ் பண்றேன்னு சொல்லாத. எனக்கு லவ் எல்லாம் எதுவும் இல்ல. நான் தான் முன்னாடியே சொன்னேனே, நேத்து அவர் என்னை பார்த்த பார்வை, அதுல இருந்த வலி. நிச்சயம் என்னால அவர் கண்ணுல இருந்த வலியை இன்னொரு முறை பார்க்க முடியாதுடி, புரிஞ்சுக்கோ. அதனால இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்றேன்..”

“அதுக்கு ஏலகிரில இருந்து வந்தப்பவே உங்கம்மாகிட்ட பேசி இருக்கலாமே. ஏன் இப்போ கல்யாணத்தை நிறுத்தி ஒரு பையனோட கல்யாண கனவை உடைக்கணும்?”

“ப்ச் ஜீவி, சொன்னா புரிஞ்சுக்கோ. எங்கம்மாகிட்ட என்னால பேச முடியாது. அப்படி பேசினா நிறைய கேள்வி கேட்பாங்க. நான் என்ன பதில் சொல்ல? அச்சோ, அதைவிட ஏலகிரில நான் தான் அவரை பார்த்தேன் அவர் என்னை பார்க்கலைடி…”

“ஏய், குத்துக்கல்லாட்டம் அவர் முன்னாடி நின்ன உன்னை அவர் பார்க்கலை. இதை நான் நம்பணும் அப்படிதானே” என்றவளுக்கு ‘இன்னும் என்னவெல்லாம் கேட்க வேண்டி இருக்கிறதோ..’ என்ற அச்சம் கவ்விப்பிடித்தது.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. சூப்பர் இழை … நீ விளையாட்டுத் தனமா சொல்லிட்ட … ஆனா வசீகரன் உன்னை காதலிக்க ஆரம்பிச்சுட்டான் … ஆமா எனக்கும் அந்த டவுட் இருக்கு … ஏலகிரி போகும் போது அந்த போனை உடைக்கும் போது இழையை வசீகரன் பார்த்தான் … ஆனா ஏன் கோபப்பட்டான் … இன்னும் நிறைய கதை இருக்கும் போலயே