Loading

“டேய் ஜித்து அங்க பாரு” என்றாள் இழை.

“என்ன பிங்கி, டிராயிங் வரையறப்போ டிஸ்டர்ப் பண்ணாதேன்னு உனக்கு எத்தனை முறை சொல்றது. சீக்கிரம் ஹோம்வொர்க் முடி. அப்போதான் அம்மா கேரம் கொடுப்பாங்க”

“டேய் சீக்கிரம் ஓடிவா. கேரமெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். அதைவிட முக்கியமான விஷயம்” என்றழைக்க,

“ப்ச் என்ன பிங்கி” என்று எழுந்து வந்தவன், இழையின் விழிவழியே பயணித்த மறுகணமே அவள் வீட்டு மாடியில் இருந்து அவசரமாக கீழே ஓடினான்.

அவன் செல்லவும், அவன் பின்னே ஓடியே இழைக்கு இன்னுமே அதிர்ச்சி நீங்கவில்லை. பின்னே அவள் வீட்டு மாடியில் இருந்து பார்க்க, அவர்கள் வீட்டின் பின்புறமிருந்த கிரவுண்டில் வசீகரன் தன்னுடன் படிக்கும் ஒரு மாணவனை போட்டு அடி அடியென அடித்து கொண்டிருந்தான்.

தடதடத்த மனதோடு கீழே சென்று அருகில் அவன் ஆக்ரோஷத்தை கண்ட இழை, அதிர்ச்சியில் உறைந்து போனாள் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்குமுன்னும் அவளிடம் கோபமாக பேசி இருக்கிறான் தான், ஆனால் இத்தகைய ஆக்ரோஷத்தை அவள் கண்டதில்லை.

வசீகரனிடம் அடிவாங்கிய பையனுக்கு முகமே வீங்கி போயிருக்க, உதட்டில் ரத்தம் கசிந்திருந்தது. நல்லவேளை வசீ மேலும் அடிக்கும் முன் ஜித்துவும் அங்கிருந்த சில மாணவர்களும் வசீகரனை தடுத்து பிடிக்க, அடி வாங்கியவன் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று வேகமாக ஓட்டம் எடுத்திருந்தான்.

“விடு ஜித்து” என்று தம்பியிடம் இருந்து தன்னை விடுவித்தவன் வேகமாக முன்னேற,
“அண்ணா உங்க கையில் ரத்தம்” என்றவன், அங்கே இருந்த வசீயின் விளையாட்டு பொருட்களை எடுத்து அடுக்க தொடங்கி இருந்தான்.

மட்டுபடாத கோபத்தோடு வேகமாக சென்ற வசீ, எதிரில் இழையை கண்டதும் தன் நடையை நிறுத்தி, “எல்லாம் உன்னால” என்று வெறுப்போடு பல்லைக் கடித்து கொண்டு இழையை பார்த்தவன்,
“ஏய் உன்னை என் கண் முன்னாடி வரக்கூடாதுன்னு சொன்ன பிறகும் உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா வருவ” என்று குறையாத சீற்றத்துடன் கேட்க, இழையோ என்ன பதிலளிப்பது என்று புரியாமல் அவனை பார்த்து நின்றாள்.

“இதோ பார், எங்கம்மா பொண்ணுங்களை அடிக்க கூடாதுன்னு சொல்லி இருக்கறதால உன்னை விட்டு வைக்கிறேன். இல்ல அவனைவிட அதிகமா உனக்கு விழும்” என்றவனின் பார்வையும் குரலுமே எதுவும் செய்வேன் என்பதாக இருக்க, இழைக்கு கண்களில் நீர் திரண்டுவிட்டது.

“ஸா, ஸாரி” என்றாள், கண்களை துடைக்கவும் மறந்தவளாக. ஆனால் அவள் மன்னிப்பை கணக்கில் கொள்ளாத வசீகரன், எங்கே அங்கிருந்தால் தன்னை மீறி அவளை கை நீட்டி விடுவோமோ என்று வேகமாக சென்றிருந்தான்.

அன்றைய இரவு உறக்கம் தொலைத்த இழை, தன் கைபேசியை எடுத்து வசீகரனின் புகைப்படத்தை கண்டவள், அன்றைய வசிக்கும் இன்றிருப்பவனுக்குமான வித்தியாசத்தை பட்டியலிட தொடங்கியிருந்தாள்.

**************

“மச்சி ஒரு நிமிஷம் என்னை பிடி, எனக்கு மயக்கமே வருது” என்றாள் இழையாளின் மருத்துவமனையில் அவள் முன் அமர்ந்திருந்த ஜீவிகா.

“ஹே ஜீவி, இவ்ளோ நேரம் நல்லா இருந்த, திடீர்னு என்னாச்சுடி” என்றவாறே இழை அவள் அருகே வர,

“மச்சி, இப்போ கொஞ்சம் முன்ன நீ சொன்னதெல்லாம் நிஜமான்னு நம்ப முடியாம இருக்கேன். தயவுசெய்து கொஞ்சம் என்னை கிள்ளுடி” என்றாள்.

“என்னடி சொல்ற?”

“ப்ச், கிள்ளுன்னு சொல்றேன்ல” என்றதும் அவள் கரத்தில் இழை நறுக்கென கிள்ளவும்,

“ஸ்ஸாஆ” என்று கையை தேய்த்துவிட்டு, “நம்பறேன் நம்பறேன். இந்த பூனையும் பால் குடிக்கும்னு இப்போ நம்பறேன்” என்றதும், தோழியின் கேலியில் அவள் முதுகில் ஒன்று வைத்தவள்,

“விளையாடாத ஜீவி” என்றாள்.

“யார்டி விளையாடுறா, நீயா இல்ல நானா” என்றவள் முகத்தில் இன்னுமே அதிர்ச்சி மீதமிருக்க,
“அடிப்பாவி, இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்தவளுக்கு இது பேரல் பேரலா பீரே அடிக்கும்னு தெரியாம போச்சே. மச்சி இன்னும் என்னவெல்லாம் என்கிட்டே மறைச்சிருக்க” என்று ஆற்றாமையுடன் கேட்டவள்,

“அட ராமா, இது தெரியாம உன்னை நாங்கெல்லாம் என்னென்னமோ நினைச்சோமே” என்று புலம்ப,

“ஜீவி அமைதியா இல்ல கண்டிப்பா உதை விழும்” என்றாள் கோபமாக.

“ஏன்டி இப்படி முழு பூசணிக்காவையும் சாப்பாட்டுல மறைச்சுட்டு எப்படிடி உன்னால சாதாரணமா இருக்க முடியுது”

“இதோ பார், இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்துறதுன்னு ஐடியா கொடுக்குறதுன்னா இரு. இல்ல இடத்தை காலி பண்ணி கிளம்பிட்டே இரு” என்று இழை கறாராக கூறவும்,

“கல்யாணத்தை நிறுத்தனுமா. அடியே, ஒருநாளைக்கு எத்தனை ஷாக்கை தான் என் பாடி தாங்கும். இதுவரை நீ சொன்னதையே நம்ப முடியாம இருக்கேன். என்னைய இப்படி விடாம அடிச்சா எப்படி மச்சி. கொஞ்சம் தெளிய வச்சுதான் அடிக்கிறது” என்றவள், தன்னை வர சொல்லி தோழி கூறியதை நினைத்து பார்க்க, மீண்டும் மயக்கம் வரும் போலிருக்க.

“மச்சி கொஞ்சம் தண்ணி கொடு” என்று கேட்டு வாங்கி குடித்தவள்,

“ஐயோ ராமா, எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்ன்னு நம்ப முடியலையே. இதுக்கு மேல இவ சொல்றதை எல்லாம் தாங்குற சக்தியை எனக்கு கொடு ஆண்டவா” என்ற வேண்டுதலோடு குரலை செருமி,

“சரி சொல்லு, எதுக்கு கல்யாணத்தை நிறுத்தனும்” என்றாள்.

இழை திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்லவும்,

“ஏன்டி உனக்கு எங்களை பார்த்தா எப்படி தெரியுது. அன்னைக்கு கேட்டபோது என்னென்னமோ கதை சொன்ன. அப்போ அதெல்லாம் பொய்யா கோபால்”

“ஜீவி, உனக்கு எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலை”

“ஏன், வாயால சொன்னது புரியலைன்னா மூக்கால சொல்ல போறியா”

“அப்படியில்ல ஜீவி, நான் சொல்றதை பொறுமையா கேளு” என்று பேச தொடங்கியவள் முடிக்கவும்,

“அப்போ கம்பு, சொம்புன்னு சொல்லி நீ என்னை சோஷியல் மீடியால தேட சொல்லி உயிரை எடுத்தது இவரைதானா” என்றதும், தன் எதிரே இருந்த நோட்டை தூக்கி போட்டவள்,

“அடிவாங்க போற ஜீவி. அவர் பேர் தம்பு, ஒழுங்கா கூப்பிடு” என்றாள்.

“சரி சரி, முறைக்காத. எனக்கு தெரியாமதானே கேட்டேன்”

“தெரியலைன்னா என்னானாலும் சொல்லுவியா. என்கிட்டே கேட்க வேண்டியது தானேடி” என்றவளிடம் இன்னுமே கோபம் குறையவில்லை.

“சரிடி ஸாரி, இனி அப்படி சொல்லலை போதுமா. ஆனா அவர் பேர் தம்பு மட்டுமில்ல, வேற ஏதோ இருக்குன்னு சொல்லிட்டு இருந்தியே. கண்டுபிடிச்சிட்டியா”

“ஹ்ம்ம்”

“என்னது”

“வசீகரன்”

“என்னதூஊ” என்று விழிகளை விரித்தவள், “ஏன்டி அவர் பேரே தெரியாதுன்னு சொல்லிட்டு தான் வசீகரா ரிங்டோனோட சுத்தினியா. அதுவும் ஹாரீஸ்க்கு வெண்பா, புகழ்ப்பா எல்லாம் வேற பாடுனியேடி. அப்புறம் எப்படி இது” என்றவள் சட்டென கண்களை மூடி,

“ஆத்தா மாரியாத்தா, இவ கதை சொல்லி முடிக்கிறதுக்குள்ள எனக்கு ஹார்ட்அட்டாக் வராம பார்த்துக்கோ. உனக்கு நான் பூச்செட்டி எடுத்து தீ மிதிக்கிறேன்” என்று அவசரமாக வேண்டிக்கொண்டவள்,

“சரி சொல்லு, யார் சொன்னா”

“யாரும் சொல்லலை. நானே தெரிஞ்சுகிட்டேன்”

“எப்படிடி தெரிஞ்சது”

“அது அதுவந்து, நாம ஏலகிரி போயிருந்தப்போ அவர் வந்து என் ஃபோனை தூக்கி போட்டாரே. அப்போதான் கண்டுபிடிச்சேன்”

“ஏய் என்னடி சொல்ற. அப்படின்னா நீ சொன்ன தம்பு அந்த குடிகாரனா” என்றவளுக்கு இன்னுமே தீராத அதிர்ச்சி.

“ஜீவி” என்று இழை பல்லைக் கடிக்க,

“ஹேய் இருடி, ஏதோ வாய் தவறி வந்துடுச்சி. அந்த ஹாங்ஓவர் கேஸா நீ சொல்றது” என்றதில் மீண்டும் முறைத்தவள்,

“ஹ்ம்ம், அவரே தான்! அவர் பாட்டை நிறுத்த சொல்லி ஃபோனை தூக்கி போட்டதால் தான் கண்டுபிடிச்சேன்”

“எப்படி?”

“இல்ல, வசீகரா பாட்டை எதுக்கு அவர் கோபப்படனும்னு யோசிக்கிறப்போ தான் ஸ்வேதாக்கா எப்பவும் இந்த பாட்டைதான் கேட்டுட்டு இருப்பாங்க”

“எது ஸ்வேதாவா. இது யாருடி புது கேரக்டர்”

“அது அது அது” என்றவளுக்கு எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கம் அதிகரிக்க,

“எதுடி” என்று டென்ஷனாகி போனாள் ஜீவிகா.

“அது அந்த ஸ்வேதா அக்காவும் இவரும் லவ்வர்ஸ்”

“என்னதூஊ” என்று தலையை பிடித்து ஜீவி கிட்டத்தட்ட உறைந்த நிலையை அடைந்திருந்தாள். மெல்ல மூச்சை ஆழ்ந்து வெளியேற்றி, தண்ணீர் பருகி, எழுந்து அறையில் நடை பயின்று, என்று தன் அதிர்ச்சியை மெல்ல கட்டுக்குள்ள கொண்டுவந்து,

“சரி சொல்லு மச்சி, ஸ்வேதாவோட லவ்வரை நீ ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்ற”

“அது அவங்க ரெண்டு பேருக்கும் ப்ரேக்அப் ஆகிடுச்சு”

“என்னது, ப்ரேக்அப் ஆனதால அவரை நீ கல்யாணம் செய்ய போறியா. மச்சி போதும் விட்டுடு, இதுக்குமேல தாங்க மாட்டேன். நிச்சயம் அழுதுடுவேன்” என்று ஜீவிகா முகத்தை சுருக்க,

“ப்ச் ஜீவி, நடந்ததைதான் சொல்றேன்”

“என்னடி சொல்ற நீ. இதோபார், நீ பேசுறதுல எனக்குதான் மண்டை குழம்புது. தெளிவா சொல்லு”

“தெளிவாதானே சொல்றேன். அப்புறம் என்னடி குழப்பம்”

“என்னடி தெளிவா சொல்ற. என்னோட படிச்சிட்டு இருந்தவ, ரெண்டு வருஷம் பாட்டிவீட்டுக்கு போயிட்ட. அப்புறம் செவன்த்ல வந்து ஜாயின் பண்ணின. அங்க இருந்தப்போதான் அவரை தெரியும்னு சொல்ற. அதுக்கப்புறம் அவரை ஏலகிரில தான் பார்த்தேன் சொல்ற. ஆனா உங்க அம்மா பார்த்து வச்ச இந்த மாப்பிள்ளையோட நடவிருக்கிற கல்யாணத்தையே நிறுத்திட்டு அவரைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்ற. கேட்டா அவருக்கு ப்ரேக்அப் ஆகிடுச்சி அதனாலன்னு சொல்ற. ஏன்டி ஊருல இருக்கிறவன் யார் ப்ரேக்அப் பண்ணினாலும் அவங்களுக்கு வாழ்க்கை கொடுப்பியா” என்று ஆவேசமாக சீறியிருந்தாள்.

இங்கு இழையோ அவளுக்கு மேலான சீற்றத்தோடு, “வாயை மூடு ஜீவி. சும்மா உளறாத” என்றாள்.

“பின்ன என்னடி, வசீகரங்கிற பேரே தெரியாம வருஷக் கணக்கா அந்த ரிங்டோனோட சுத்துற. கேட்டா அது அவர் பேருன்னு ஏலகிரில தான் தெரிஞ்சுகிட்டேன்னு சொல்ற. ஏன்டி, கதையா இருந்தாலும் அதுல நியாயம் வேண்டாமா. ஒருத்தி கிடைச்சுட்டான்னு உன் இஷ்டத்துக்கு காதுல பூ சுத்துவியா. என்னை பார்த்தா மஞ்சமாக்கான் மாதிரியா தெரியுது” என்று ஆவேசமாக பேசிக்கொண்டே சென்றாள்.

“கொஞ்சம் என்னை பேசவிடு ஜீவி”

“ஏற்கனவே நீ பேசினதுக்கு ஐசியூல அடிமிட் ஆகிடுவேனோன்னு இருக்குடி. மேல கேட்க பயமா இருக்கு. ஆனாலும் தெரியலைன்னா தலை வெடிச்சிடும். சரி சொல்லு”

“நிஜமாவே அது அவரோட பேருன்னு எனக்கு தெரியாது. நான் பாட்டி வீட்டுக்கு போனப்போ என்னை என் ப்ரெண்ட்ஸ் யாரோட வீட்டுக்கும் சீக்கிரம் அனுப்பாத எங்கம்மா, அம்மூத்தை வீட்டுக்கு போறேன்னா மட்டும் எதுவும் சொல்லமாட்டாங்க. அங்கதான் அபி அத்தையோட பையன் சர்வஜித்தும் நானும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் ஆனோம்”

“சர்வஜித்னா நீ தேட சொன்ன ஜித்து ரைட்”

“ஆமா. அவனோட அண்ணாதான் வசீகரன். அவர் அப்போ டென்த் ஸ்டாண்டர்ட்ல இருந்ததால ஸ்பெஷல் கிளாஸ், ப்ராக்டிஸ் அது இதுன்னு அதிகமா வீட்ல இருக்கமாட்டாங்க. நான், ஜித்து, அப்பு எல்லாரும்தான் சேர்ந்து விளையாடுவோம். நானும் டென்த் படிக்கிறவங்கன்னு அவரை பெருசா கன்சிடர் பண்ணினதில்ல. ஆனா ஜித்து எப்பவும் அவரை பத்தி சொல்லி என்னோட எக்ஸ்பெக்டேஷனை அதிகமாக்குவான். அத்தைகளும் தம்புக்காக செய்தேன், அவனுக்கு இது பிடிக்கும், அது பிடிக்கும்னு எப்பவும் அவரோட ஃபேவரெட் டிஷ், ஸ்நாக்ஸ்தான் செய்வாங்க. நான் கேட்டா எனக்கு பிடிச்சதை செய்து கொடுப்பாங்க”

“ஓ அவரை பத்தி சொன்னதுல இம்ப்ரெஸாகி மேடம் அப்பவே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா”

“என்ன பேசுற, பல்லை உடைச்சிடுவேன் ஜீவி”

“ஏதே” என்று அதிர்ந்து போனவள், “அய்யய்யோ, தெரியாம இந்த பல் டாக்டர்கிட்ட மாட்டிகிட்டேனே. பேஷண்ட்ஸ் கிடைக்காம என் பல்லை உடைப்பேங்கிறா. கடவுளே என்னை நல்லபடியா வீடு போய் சேர்த்துடுப்பா” என்று ஜீவி வேண்டிட,

அதை கண்ட இழை சட்டென சிரித்துவிட, “உன்கிட்ட தனியா சிக்கியிருக்க என்னை பார்த்து உனக்கு சிரிப்பா இருக்கா” என்று ஜீவி முறைத்தாள்.

“பின்ன என்னடி. நானே ஒருமுறை தெரியாம அவர் ரூம்க்கு போய் திட்டு வாங்கினதுல, அவர் பக்கம்கூட திரும்பலை. அதோட ஒருமுறை ஹிந்தி டியூஷன் போறப்போ என்னை வேகமா கொண்டு போய் கீழ தள்ளிட்டாங்க தெரியுமா”

“என்ன சொல்ற”

“ஆமா. அதனாலதான் இந்த ஸ்கார்” என்று தன் தாடையை சுட்டிக் காட்டியவள், “நான் விழுந்ததுக்கு அப்புறம் டியூஷனும் போக முடியலை. எப்பவும் நான் உண்டு என் வேலை உண்டுன்னு ஜித்து, ப்ரணவ் கூட விளையாடிட்டு, அத்தைங்க கூட பேசிட்டு எங்க வீட்டுக்கு போயிடுவேன்”

“ஹே ஸ்டாப் ஸ்டாப். இது யாரு ப்ரணவ், புதுசா”

“ஏய், நான் ஏற்கனவே சொன்னேனே. ஜித்துக்கு ஒரு தம்பி இருந்தான் அப்புன்னு. அவனோட பேர்தான் ப்ரணவ். நேத்து அத்தை சொல்லித்தான் தெரிஞ்சுகிட்டேன்”

“ஓகே ஓகே, கண்டினியூ”

“அப்போ எங்க பாட்டிக்கு உடம்பு சரியில்லாம போனதால இவரை அடிக்கடி எங்க வீட்ல பார்ப்பேன். ஆனா எதுவும் பேசினதில்ல. ஜித்தோட படிக்க அத்தைவீட்டுக்கு போயிடுவேன். ஆனா ஒருமுறை அவரே என்னை கூப்பிட்டார்”

“உன்னை கூப்பிட்டாரா, எதுக்குடி”

“க்ரீடிங் கார்ட் கொடுக்க”

“உனக்கு பர்த்டே விஷ் பண்ணவா”

“இல்ல, லவ் ப்ரொபோஸ் பண்ண”

“என்னடி சொல்ற”

“ஆமா”

“அய்யய்யோ, பிஃப்த் படிக்கிற பொண்ணுக்கு ப்ரோபோஸலா” என்று ஜீவி அலற,

“அப்போ நான் பிஃப்த் இல்ல, ஸிக்த்ல இருந்தேன்”

“ஆமா, இப்போ இது ரொம்ப முக்கியம். ஏய், சின்னபிள்ளையான உனக்கு எதுக்குடி ப்ரொபோஸ் பண்ணாரு. இது உங்க அம்மாக்கு தெரியுமா. என்ன சொன்னாங்க. இரண்டு ஃபேமிலிக்கும் பெரிய சண்டையாகிடுச்சா. அதான் உன்னை அங்கவிடாம ஆன்டி சென்னைக்கே கூட்டிட்டு வந்துட்டாங்களா”

“ஹே நிறுத்து நிறுத்து. உன் கற்பனைக்கு அளவில்லையா. ஏன்டி, நான் சொல்றதை ஒழுங்கா காது கொடுத்து கேட்கிறியா இல்ல சும்மா தலையாட்டிட்டு இருக்கியா”

“மச்சி, நானே நீ கொடுத்த ஷாக்ல இருந்து மீளாம தலை சுத்தி போயிருக்கேன்டி. என் தலைதானா ஆடுதுன்னு மட்டும் புரியுது. ஆனா லெப்ட்டா ரைட்டான்னு கூட தெரியாம உட்காந்திருக்கேன். சரி நீ மேல சொல்லு” என்றவள் தண்ணீரை பருகி தன்னை ஆசுவாசப்படுத்த முயல,

“எனக்கு இல்ல, ஸ்வேதா அக்காக்கு ப்ரொபோஸ் பண்ண என்னை கூப்பிட்டார்” என்றதும், ஜீவிகாவிற்கு குடித்து கொண்டிருந்த தண்ணீர் மூக்கின் வழியாக வழிய, கலங்கிய கண்களோடு சத்தமாக இருமிக்கொண்டிருந்தாள்.

“ஏய், பொறுமையா குடிக்க மாட்டியாடி” என்று அவள் தலையை இழை தட்டவும்,

“அப்போ மேடம் தூது புறாவா இருந்திருக்கீங்க. சரி, அதுக்குமுன்ன அந்த ஸ்வேதாக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்னு சொல்லு”

“அவங்க என் பாட்டியோட ஹவுஸ்ஓனர் கீதா ஆன்டியோட சொந்தகாரங்க பொண்ணு. அவங்க வீட்ல தங்கி, நாங்க படிச்ச ஸ்கூல்லதான் படிச்சிட்டு இருந்தாங்க. என் பாட்டி இருபது வருஷத்துக்கும் மேல அவங்க வீட்லதான் குடியிருந்தாங்க. எங்க வீட்டு மாடில தான் அவங்க வீடு. எனக்கு சப்ஜக்ட்ல ஏதாவது டவுட் வந்தா அவங்களை தான் கேட்பேன்”

“சரி, இதுக்கும் நீ அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றதுக்கும் என்னடி சம்பந்தம்”

“நீ ரொம்ப குழம்பி போயிருக்க ஜீவி. உனக்கு நடந்ததை முழுசா சொல்றேன். அப்போதான் புரியும்” என்றவள் அன்றைய நாளை நினைவு கூர்ந்தாள்.

Click on a star to rate it!

Rating 4.1 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அய்யோ இழை நானும் குழம்பி போயிட்டேன் … அந்த ஃப்ரெண்ட் சொல்ற எல்லா டயலாக் எனக்கும் பொருந்தும் … அந்த மாதிரி தான் இருக்கு … ப்ளாஷ்பேக் ஒழுங்கா சொல்லுங்க பா … நீ ஸ்வேதாவை லவ் பண்ணிட்டு எதுக்கு இழை வேணும்னு சொல்லுற வசீகரா …

  2. சகி அத்தியாயம் 19 அப்லோட் பண்ணலையா … இல்ல சீரிஸ் ல இல்லையா செக் பண்ணுங்க …