Loading

“நள்ளிரவில் தண்ணீர் எடுக்க வேண்டி வெளியில் வந்த அபிராமி, ஹாலில் அகிலாண்டநாயகி உறங்காமல் அமர்ந்திருப்பதை கண்டு, “என்னக்கா இன்னுமா தூங்கல?” என்று அவரிடம் செல்ல, அங்கு நாயகியோ தன்னிடமிருந்த ஒட்டுமொத்த நகைகளையும் கடைபரப்பி அமர்ந்திருந்தார்.

“அக்கா, என்னக்கா இதெல்லாம்?”

“இதெல்லாம் என் மருமகளுக்காக நான் பார்த்து பார்த்து சேர்த்தது அபி. இதோ இது அவளுக்கு பூ வைக்கிறப்போ போடுறதுக்காக வாங்கின செயின். இது அவளோட நிச்சயத்துக்கு வாங்கின செட். இது கல்யாணத்துக்கு. இதோ இந்த வைர வளையல் அவளோட வளைகாப்புக்கு.” என்று ஒவ்வொரு விசேஷத்திற்கும் மருமகளுக்காக சேர்த்த நகைகளை தங்கையிடம் காட்டியவர், வெளியேறத் துடித்த கண்ணீரை உள்ளிழுத்தவாறே,

“நம்ம பிங்கி நிச்சயத்துக்கு என்னால சும்மா போக முடியாது. இதோ இது நான் என் மருமகளுக்கு நிச்சயத்துக்கு எடுத்த செட். இது பிங்கிக்கு கொடுக்கலாம்னு எடுத்து வச்சிருக்கேன். அவளுக்கு இது நல்லா இருக்குமா, இல்ல வேற ஏதாவது எடுத்துட்டு போகலாமா சொல்லு.” என்று கூறியவரின் கண்களிலும் குரலிலும் சொல்லிலடங்கா வலி.

“அக்கா, என்னக்கா இதெல்லாம்?” என்று கேட்ட அபிக்குமே தமக்கையின் நிலை புரிந்துதான் செய்தது. பின்னே கடந்த ஏழு வருடங்களாகவே அவரது திருமண நாளுக்கு திருவேங்கடம் நகை எடுக்க அழைத்துச் சென்றால், நாயகியோ புதிதாக, ட்ரெண்டியாக இளம்பெண்கள் அணியக்கூடிய டிசைனில் தேர்ந்தெடுப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் அல்லவா!

தமக்கையை என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் அபி பார்த்திருக்க,
“எனக்கு நம்பிக்கையில்ல அபி” என்றார் விண்டுபோன மனதோடு.

“என்னக்கா சொல்ற?”

“நிச்சயம் தம்பு பிங்கியை தவிர்த்து வேற பெண்ணை கல்யாணம் செய்துப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்ல அபி” என்று கண்ணீருடன் தங்கையின் தோள் சாய்ந்த நாயகியின் மனம் அத்தனை நைந்து போயிருந்தது.

“அக்கா..”

“ம்ப்ச் அபி, என் பையனோட பிடிவாதத்தைப் பற்றி எனக்குதான் தெரியும். ஏன், உனக்குமே தெரியுமே?” என்று கேள்வியாக தங்கையைப் பார்க்க, அபியும் “ஆமாம்” என்று தலையசைத்தார்.

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?”

“என்னக்கா?”

“உங்க மாமா, தம்பு இழையை எதேர்ச்சையா மண்டபத்துல பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்லல. கண்டிப்பா அவளை விரும்பிதான் அவளை கட்டிவைக்க சொல்லியிருக்கான்னு சொன்னார். முதல்ல நான் நம்பல. ஆனா இப்போ என் பையன் சாப்பாட்டை மறந்து இருக்கிறதைப் பார்க்கிறப்போ, அது உண்மையா இருக்குமோன்னு தோணுது.”

“க்கா..”

“அபி, எப்பவுமே நேரத்துக்கு சாப்பிடணும், நேரத்துக்கு தூங்கணும், உடம்பை அலட்சியப்படுத்தக் கூடாது, சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும்னு எந்த சமரசமும் செய்துக்காம காலையும் மாலையும் ஜிம் போறவன், இன்னைக்கு அதை மறந்திருக்கிறதைப் பார்க்கிறப்போ எனக்கு பதறுதுடி.”

“க்கா..”

“ஆனா ஒன்னுமட்டும் எனக்கு புரிஞ்சுடுச்சு.”

“என்னக்கா?”

“உங்க மாமா சொன்னது மட்டும் உண்மையா இருந்தா, நிச்சயம் தம்பு பிங்கி தவிர வேற பெண்ணை கல்யாணம் செய்துக்கமாட்டான். அப்போ என் பையனுக்கு கடைசிவரை..” என்றவருக்கு அதற்கு மேல் தொடரும் சக்தியில்லாது போக, பெரும் கேவலுடன் தங்கையின் மடியில் சாய்ந்தார்.

“அக்கா, அழாதக்கா..”

“அபி, இந்த வீட்டுல கொலுசு சத்தம் கேட்கவே கேட்காதா?” என்று ஏக்கமாக தங்கையைப் பார்க்க,

“ப்ச் க்கா, அக்கா.. ஏன்க்கா இப்படி பேசுற? இங்க பாரு, எங்களுக்கும் தம்புவோட பிடிவாதம் தெரியும். சொல்லப் போனா அவருக்கும் தூக்கமே இல்ல. இவ்வளோ நேரம் நாங்க என்ன பண்ணலாம்னுதான் பேசிட்டு இருந்தோம். க்கா, நாம எதுக்கும் ஒருமுறை கவி அக்காகிட்ட என்ன ஏதுன்னாவது பேசி பார்க்கலாம்னு அவர் சொல்றார்கா…”

“என்ன?” என்று நாயகி கண்ணீரோடு அபியை பார்க்கவும்,

“அக்கா, ஒருவேளை பிங்கிக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருந்தா என்ன செய்யறதுன்னு நீ சொன்னல்ல, அதை அவர்கிட்ட சொன்னேன். எதையும் நாமலா முடிவு பண்ணாம என்ன நடந்ததுன்னு ஒருவார்த்தை விசாரிக்கிறது தப்பில்லைன்னு சொல்றார்கா. எனக்கும் அது சரின்னு படுது. நாம பேசி பார்க்கலாமே” என்றிட, நாயகியிடம் கனத்த மௌனம்.

“என்னக்கா, அமைதியா இருக்க? ஏதாவது பதில் சொல்லு.”

“ப்ச், இல்ல அபி. வேண்டாம்.”

“ஏன்க்கா?”

“வேண்டாம்ன்னா விடு அபி. ஏனோ தெரியலை, ஈசன் என் பிள்ளையையும் என்னையும் ரொம்பவே சோதிச்சு பார்க்கிறார். இனி எல்லாம் ஈசனோட இஷ்டப்படி நடக்கட்டும்” என்றவர் கைபேசியை எடுத்து சிவதாண்டவ ஸ்தோத்திரத்தை போட்டு, அமைதியாக பூஜையறையில் அமர்ந்துவிட்டார்.

இங்கு அறையில் இருந்த திருவேங்கடமும் உறக்கமின்றி வெறுமையாக கண்களை மூடி படுத்திருந்தார். மகனுக்கு மட்டுமல்ல, அவருக்கும் நாயகிக்குமே மகள் இல்லையென்ற ஏக்கத்தை சில காலம் தீர்த்த பிங்கி மிகவும் பிடித்தம். இரு குடும்பங்களுக்கும் இடையிலான தொடர்பு மட்டும் இடையில் விடுபடாமல் தொடர்ந்திருந்தால், நிச்சயம் மகன் கேளாமலே இந்நேரம் பிங்கி அவர் வீட்டு மருமகளாகி இருப்பாள்.

இப்போது அவருக்குமே சொர்க்கம் கைநழுவி சென்றதை ஏற்க முடியவில்லை. அதைவிட மகனின் உறுதி அவரை மிகவும் அச்சுறுத்தியது. சிறுவயதில் இருந்தே அவன் பிடித்தத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதவன். என்னதான் திருவின் எண்ணத்திற்கு ஏற்ப வளைந்து கொடுப்பதாக இருந்தாலும், இறுதியில் தான் நினைத்ததை மட்டுமே செய்து முடிப்பவன் என்பதற்கு வேலையை விட்டு வந்ததே சாட்சி.

அதோடு பல காரணங்களை அடுக்கி இத்தனை வருடமாக வசீகரன் திருமணத்தை தள்ளிப் போட்டது இழைக்காக மட்டுமே எனும்போது, அத்தனை எளிதாக அவளை விட்டுக்கொடுப்பான் என்று அவருக்கு தோன்றவில்லை. இப்போது என்ன செய்யப்போகிறானோ என்ற கேள்வி திருவை அச்சுறுத்த, மனிதருக்கு தூக்கம் தூரப்போயிருந்தது.

மாடியில் வசீயின் அறையின் எதிரே அமர்ந்திருந்த ஜித்துவும் ப்ரணவும் உறக்கம் தொலைத்து தான் இருந்தனர்…”

“நான் இனிமேல் உன் அண்ணாகிட்ட பேசமாட்டேன், எதுவும் கொடுக்கமாட்டேன் ஜித்து” என்று இறங்கிய குரலில் இழை கூறவும்

“என்ன பிங்கி, ஏன் இப்படி சொல்ற? எப்பவும் நான்தான் அண்ணாவோட ஸ்போர்ட்ஸ் பேக், ப்ரேக்ஃபாஸ்ட் எடுத்துட்டு போவேன். இன்னைக்கு அவருக்கு ப்ராக்டிஸ் இருக்கு. எனக்கு ஃபீவர் இருக்கிறதால தான் உங்கிட்ட ஹெல்ப் கேட்கிறேன். இதுகூட செய்யமாட்டியா, ப்ளீஸ் கொடுத்துடு” என்றான் சர்வஜித்.

“முடியவே முடியாது ஜித்து”

“நான் உனக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணியிருக்கேன், எனக்கு செய்யமாட்டியா?”

“உனக்கு என்ன ஹெல்ப்னாலும் செய்வேன், ஆனா உன் அண்ணாக்கு செய்யமாட்டேன்”

ஏன்?”

“அவர் எப்பப்பார்த்தாலும் சிடுசிடுன்னு இருக்கார், எனக்கு பிடிக்கலை. நாமெல்லாம் தப்பு பண்ணிட்டா ஸாரி சொன்னதும் அக்செப்ட் பண்ணிட்டு உடனே ப்ரெண்ட்ஸாகிடுவோம் தானே. ஆனா உங்கண்ணா என்கிட்டே கோபமா கத்தறார். அதுவும் எப்படி தெரியுமா?”

“எப்படி?”

“ஹிட்லர் மாதிரி ஜித்து. ஹிட்லர் மாதிரி, அதுவும் சத்தமா. எனக்கு அவரை பார்த்தாலே ரொம்ப பயமா இருக்கு. நான் செய்யமாட்டேன்.”

“என்ன பேசுற பிங்கி, எங்கண்ணா உனக்கு ஹிட்லரா?” என்று முறைத்தவன், “இதோ பார், இனி எங்கண்ணாவை அப்படி சொல்லக்கூடாது. அவர் எவ்ளோ ஸ்மார்ட் தெரியுமா?”

“எனக்கு தெரியாது. ஆனா இனி அவருக்கு நான் எந்த ஹெல்பும் பண்ண மாட்டேன்” என்றாள் உறுதியான குரலில்.

அண்ணனுக்கு செய்ய மாட்டேன் என்றதில் கோபம் கொண்ட ஜித்து, “இப்போ நீ மட்டும் கொடுக்கலைன்னா இனி நான் உன்னோட பேசவே மாட்டேன். இனி நீ பிரெண்டே இல்ல. உன்னோட டூ!” என்றதும் பதறிய இழை,

“சரி சரி, இதுதான் லாஸ்ட். இனி சொல்லமாட்டேன்னு பிங்கி ப்ராமிஸ் பண்ணு” என்று அவன் முன் கையை நீட்ட,

“எங்கண்ணாவ ஹிட்லர்னு சொல்லமாட்டேன்னு நீயும் சத்தியம் பண்ணு” என்றவாறே தானும் செய்திருந்தான்.

இழை குறித்த நினைவில் இருந்தவனை ப்ரணவின் குரல் மீட்கவும், “என்ன ப்ரணவ்?” என்றான்.
“டேய் ப்ரோ, அண்ணா சாப்பிடறதுக்குகூட வரலையேடா. ஒரு ஃபோன் பண்ணி பாரேன்” என்று ப்ரணவ் கவலையாக கேட்க,

“வேண்டாம் ப்ரணவ், பெரிப்பா சொன்ன மாதிரி அண்ணாவை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கிறது தான் நல்லது” என்றான்.

“அதுசரி, நீ எவ்ளோ நேரம் ஃபோனை முறைச்சு பார்க்க போற?”

“ஏன்டா?”

“டேய், ஒன்னு அண்ணிக்கு மெசேஜ் பண்ணு, இல்ல அத தூக்கி போட்டுட்டு அண்ணாக்கு ஜூஸாவது போட்டுட்டு வா”

“ஜூஸா, இந்நேரத்துக்கா? டேய் டைம் என்ன தெரியுமா?”

“தெரியும்டா, ஆனா அண்ணா எப்பவும் சாப்பாட்டை ஸ்கிப் பண்ணமாட்டார் இப்போ…” என்றவனுக்குமே தமையனின் நிலை அத்தனை வருத்தத்தை அளித்திருந்தது.

ஆனால் வசீகரனை நெருங்கும் தைரியம் தான் இருவருக்குமே கிடையாது.
இப்போதென்று இல்லை, சிறுவயது முதலே தம்பிகள் இருவருக்கும் வசீகரனின் மீது அத்தனை மரியாதை. அவன் பேச்சுக்கு மறுபேச்சு என்பதே அவர்களிடம் கிடையாது. அதற்கு காரணம் அவர்களின் தாத்தா ஷண்முகபாண்டியன்.

ஆம், முதல் பேரன் என்பதால் வசீகரன் மீது அவருக்கு பிரியம் அதிகமே. அதோடு திருவேங்கடத்தின் வேலையின் காரணமாக சில வருடங்கள் பேரனை பிரிந்திருந்தவர், அவன் வீடு வந்து சேர்ந்தபிறகு அவனுக்கு ராஜஉபசாரம் செய்ய தொடங்கியிருந்தார்.

அவன் விருப்பத்திற்கு தான் சமைக்க வேண்டும் என்று மகள்களுக்கு கட்டளையிட்டவர், அவன் பத்தாம் வகுப்பிற்கு வந்தபோது அவன் படிப்பதற்காக மாடியில் தனியாக அறையே கட்டி கொடுத்து அவன் தேவைகளை நிறைவேற்றி இருந்தார்.

அதனால் சிறுவயதில் ஜித்து, ப்ரணவுக்கு வசீகரன் எப்போதுமே சிம்மசொப்பனம் தான். படிப்பு, விளையாட்டு, போட்டி என்று அனைத்திலும் சிறந்து விளங்கும் வசீகரன் மீது ஒருவித பிரமிப்பும் ஈர்ப்பும் அவர்களுக்கு உண்டு.

இங்கே அண்ணனின் நிலையை எண்ணி இருவருமே உறங்காமல் விழித்திருக்க, அறையில் இருந்த வசீகரனோ இழை தன்கரம் சேரும் நாளை குறித்த நிம்மதியில் உணவை மறந்து குப்புறபடுத்து ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.

அதே நேரம் சென்னையில் இருந்த இழையாளின் உறக்கத்தை வசீகரன் களவாடியதில், அவன் குடும்பத்தோடு சேர்த்து அன்றிரவு அவளுமே உறக்கமின்றி தவித்திருந்தாள்.

அடுத்த நாள் காலை ஆஷ்மி மூலமாக இந்திரவர்மனின் புகைப்படத்தையும் சோஷியல் மீடியா ஐடிகளையும் வாங்கி கொடுத்திருந்தான் விஜயசாரதி. தன்னிடம் இருந்த தகவல்களையும் இந்திரவர்மனினதையும் பொருத்தி பார்த்த வசீகரனின் முகத்தில் மென்னகை படர, அடுத்த ஒரு நொடியையும் தாமதிக்காதவன் சர்வாவை அழைத்து தகவல்களை கொடுத்து அடுத்து செய்ய வேண்டியதை கட்டளையிட்டிருந்தான்.

“அண்ணா, என்னண்ணா இது?” என்று அதிர்வோடு தமையனை பார்த்தவனுக்கு, ஒருபுறம் அதிர்ச்சி என்றால் மறுபுறம் மகிழ்ச்சி.
“போடா, போய் சொன்னதை செய். நாளைக்கு என் முன்னாடி இருக்கணும்”
“கண்டிப்பாண்ணா” என்று மகிழ்வோடு கிளம்பியிருந்தான்.

சர்வா செல்லவும், உல்லாசமாக சீட்டி அடித்தவாறு வெளியில் வந்த வசீகரன், அங்கே சோகமே உருவாக அமர்ந்திருந்த நாயகியின் அருகே அமர்ந்து, “ம்மா” என்றழைத்தான்.

“தம்பு” என்று ஒருநாள் கழித்து மகனை பார்த்தவருக்கு ஆற்றாமையில் கண்ணீர் பெருகியது.

“என்னம்மா இது? சின்ன குழந்தை மாதிரி எதுக்கு இந்த அழுகை. முதல்ல கண்ணை துடைங்க” என்று அவர் கண்ணீரை துடைக்கவும்,

“ஒரு நிமிஷம் இருப்பா, வந்துடுறேன்” என்று சமையலறைக்கு ஓடியவர் மகனுக்கான உணவை கொண்டு வந்து வைத்து பரிமாற தொடங்கினார்.

அவர் கையை பிடித்த வசீகரன், “ம்மா, முதல்ல உட்காருங்க” என்று அவரை அமர்த்தினான்.

“நீ நைட்கூட சாப்பிடலை. பசி தாங்கமாட்ட. முதல்ல சாப்பிடு” என்றிட, அவனோ நிதானமாக தட்டை எடுத்தவன் உணவை நாயகிக்கு ஊட்ட, “நீ சாப்பிடு தம்பு” என்றார் குறையாத கண்ணீரோடு.

“நீங்க சாப்பிடுங்கம்மா. அப்பதானே உங்க மருமகளுக்கு முகூர்த்த புடவை எடுக்க உங்களுக்கு தெம்பு இருக்கும்” என்ற மகனை அதிர்வோடு பார்த்தார் நாயகி.

திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த பார்கவி, அன்று முழுக்க நாயகியின் குடும்பத்தை பற்றி பேசி கொண்டேயிருக்க, இழைக்கு தான் வசீகரனின் வலியுடன் கூடிய பார்வை நிலைகொள்ள விடாமல் தவிக்க செய்திருந்தது.

சரியாக சொல்லவேண்டுமானால், பதினைந்து வருடத்திற்கு முன் அவன் தன்னை பார்த்த பார்வை அவளை இப்போதும் கொன்று கூறுபோட, இதற்கு மேல் முடியாது என்பது போல அறைக்குள் சென்று கதவை அடைத்து படுக்கையில் வீழ்ந்து கண்களை மூடினவளின் இமைகளை ஊடுருவியிருந்தான் வசீகரன்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்