Loading

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கருத்து தெரிவிக்கும் தோழமைகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.. 

அறையினுள் இருந்த வசீகரனின் கையில் இழையின் ஒற்றை கொலுசு வீற்றிருந்தது. அவனருகே ஆண்டர்சனின் புத்தகம்.

“செய்யறதெல்லாம் செஞ்சுட்டு அழுதா சரியா போச்சா? மரியாதையா இங்கிருந்து போயிடு, இல்ல உன்னை என்ன பண்ணுவேன்னே தெரியாது” என்று கண்களில் கனலோடு அவளை பார்த்தான். நிச்சயம் சொன்னது போல செய்யும் வெறியில் தான் இருந்தான்.

அவன் கோபம் புரிந்தாலும் அவனை விட்டுவிலக முடியாதவள்.., “ப்ளீஸ், நான்தான் ஸாரி சொல்லிட்டேனே நிஜமாவே தெரியாம தான்” என்றவளுக்குள் பயம் உருள, குறையாத கண்ணீரோடு அவனை பார்த்தவள், “இன்னும் ஏன் கோபமா இருக்கீங்க… ஸாரி பிங்கி, ஸாரி” என்றாள்.

“ஸாரியா? ஏய் அரைக்காபடி, உன் ஸாரி யாருக்கு வேணும்? உன்னை நம்பினதுக்கு உன்னால என்ன செய்ய முடிகிறதோ அதை சிறப்பா செஞ்சுட்டு பேச்சா பேசுற. இன்னொரு வார்த்தை பேசின பேச வாயே இருக்காது, அடிச்சு உடைச்சிடுவேன். போ இங்கிருந்து” என்று ஆவேசமாக அவளை நெருங்க…

அவன் ஆவேசத்தில், “ஓஓஒ…” என்று தேம்பி அழ தொடங்கிவிட்டாள் பெண்.

அதை எதிர்பாராத வசீகரன், அவளது கண்ணீர் சுமந்த முகம் ஏதோ செய்ய, என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்தான். அவளது அழுகையை கட்டுப்படுத்த சொன்ன போதும் குறையாமல் போனதை கண்டு, ஒரு கட்டத்தில்,

“ஏய் பப்ளிமாஸ், உன்னை வாயை மூடுன்னு சொன்னேன்” என்று அதட்ட தான் அவள் அழுகை மட்டுப்பட்டு, மெல்ல கண்களை துடைத்துக்கொண்டு அவனை ஏறிட்டவள்.,

“ஸாரி தம்பு, என்னால தான் இப்படி ஆச்சு… நான் தெரியாம தான்…” என்றவளிடம் “அடிங்க! யாருக்கு யாரு தம்பு? உன்னைவிட பெரியவனா பெயர் சொல்லி கூப்பிடுவியா? ஒழுங்கா அண்ணா’ன்னு கூப்பிடு” என்று சீறியவன் தன் தம்பிகளே ‘அண்ணா’ என்று அழைக்கும் நிலையில், சிறுபெண் பெயர் சொல்லி அழைத்ததை ஏற்க முடியவில்லை.

“சொல்றது புரியலை? ஒழுங்கா அண்ணன்னு கூப்பிடு” என்றபோதும், அவள் அசையாமல் இருப்பதை கண்டு “ஏய், என்ன வயசு உனக்கு?” என்றான்.

“ஐ ஆம் ட்வெல்வ் இயர்ஸ் ஓல்ட்” என்ற இழைக்கு, ஏனென்று புரியாத பயம் இப்போது தொற்றிக்கொள்ள, அச்சம் மேவிய விழிகளுடன் அவனை பார்த்தாள்.

“பன்னிரண்டு வயசுல என்ன பேச்சு பேசுற நீ? இந்த வயசுல பேசக்கூடிய பேச்சா இது?” என்று பல்லை கடித்தவன்.

“ஆமா, இப்போ நீ என்கிட்ட சொன்னது உங்க அம்மாக்கு தெரியுமா?” என்று கேட்டான். அம்மா என்ற வார்த்தையில் இழையின் முகத்தில் பதட்டம்.

“இல்ல, தெரியாது” என்று மிக மென்மையாக அவள் கூற…

“ஓஹ், அப்படியா! அப்போ வா, இப்போ நீ சொன்னதை அத்தை முன்னாடி சொல்லு. அதுக்கப்புறம் நான் உனக்கு பதில் சொல்றேன்” என்று அவள் கையை பிடிக்கவும், தூக்கி வாரி போட்டது இழைக்கு.

நிச்சயம், அவள் பேசியது மட்டும் பார்வதிக்கு தெரிந்தால் அடி வெளுத்துவிடுவார். இங்கே வசீகரனின் வேதனையை காண சகிக்காமல், அவனை தேற்ற வந்தவளை அவன் அன்னையிடம் போட்டுக் கொடுக்கப் போகவும்  மிரண்டு போன இழை, “விடுங்க…” என்று அவன் கையில் இருந்து தன் கையை பிரித்தெடுக்க முயன்றாள்.

அவள் கையில் இருந்த ஆண்டர்சனின் fairy tales புத்தகம் நழுவி கீழே விழுந்தது…

அதையும் உணராமல், அவனிடமிருந்து தப்பிக்க முனைந்து அவன் கையிலிருந்து பிரிந்த மறுகணமே இழை திரும்பி பார்க்காமலே ஓடியிருந்தாள்.

அவள் சென்றதும், கீழே விழுந்திருந்த புத்தகத்தை கண்டவன் அதை எடுக்க, அதனருகே அவளது ஒற்றை கொலுசு!

அவள் கொலுசை கையில் வைத்தவன் அவனும் அறியாமல், அன்றைய நாளின் நினைவில் புன்னகை மலர்ந்தது.

“அன்னைக்கு சொன்ன வார்த்தையை அதுக்குள்ள மறந்துட்டியா இழை? என்னை உனக்கு சுத்தமா நியாபகமில்லையா?” என்றவன் உடனே தன் கைபேசியை எடுத்து “வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா…” என்ற பாடலை ஒலிக்கவிட்டு கண்களை மூடி அப்படியே கட்டிலில் சாய்ந்தான்.

நேற்று அவளை திருமண மண்டபத்தில் பார்த்ததில் அவளுக்கான பல வருட காத்திருப்பு தீர்ந்து அவளோடு கை சேரப்போகும் நொடிக்காக ஆவலாக காத்திருந்தவனுக்கு, அவளது நிச்சய செய்தி பேரிடியே!

இழையையன்றி வேறொருத்தியை வாழ்க்கை துணையாக ஏற்க வசீகரன் தயாராக இல்லை. அப்படி ஏற்பதாக இருந்தால் எப்போதோ திருமணம் முடித்திருப்பான். அவளுக்கான காத்திருப்பு இப்படி அர்த்தமற்றதாகி போனதிலும், அவள் தனக்கில்லை என்ற நிஜத்தையும் ஏற்க முடியாமல் காதல் மனம் தத்தளித்தது.

ஆனால் முதல்கட்ட அதிர்வில் இருந்து மீள்வதற்கு அவனுக்கு தேவைப்பட்டதெல்லாம் சில மணி நேரங்களே.

கண்மூடி படுத்திருந்த போதும் “இந்திரவர்மன்” என்ற பெயர் அவன் செவியைவிட்டு நீங்காமல் இருந்ததில் சட்டென எழுந்து தன் மடிக்கணினியை எடுத்தவன் அவசரமாக எதையோ தேடினான். சில நிமிட அலைப்பின் பின் அவன் எண்ணத்திற்கேற்ப அங்கே இந்திரவர்மன் குறித்த தகவல்கள் இருக்க, வசீகரனின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

ஆனால் அதை சரிபார்க்க அவனுக்கு இந்திரவர்மனின் புகைப்படமும் அடிப்படை தகவல்களும் வேண்டும். எவ்வாறு அதை பெறுவது என்ற யோசனையில் நடை பயின்றவன் சில நொடிகளுக்குப் பின் சற்றும் யோசிக்காமல் சாரதிக்கு அழைத்தான்.

சாரதிக்கும் ஆஷ்மிக்கும் அன்றே சாந்தி முகூர்த்தம் ஏற்பாடாகி இருந்தது. அப்போது தான் அவன் ஆஷ்மிதாவின் அறைக்கு சென்றிருந்தான். இந்நேரத்தில் அழைப்பை எதிர்பாராத சாரதி, “சொல்லு வசீ, இந்நேரத்துக்கு கால் பண்ணியிருக்க?” என்றான்.

மறுபுறமிருந்தவனோ, “என்ன பண்ற சகலை?” என்றான்.

“சகலையா?” என்று புரியாமல் நண்பனின் எண்ணை சரிபார்த்தவன், “மச்சி, என்ன சொல்ற?” என்றான்.

“என்ன பண்ணிட்டு இருக்கன்னு கேட்டேன் சகலை” என்றான் உல்லாச குரலில்.

“மச்சான், என்னடா திடீர்ன்னு சகலைன்னு கூப்பிடுற? முறையை ஏன்டா மாத்துற?”

“அதெல்லாம் சரியா தான் கூப்பிடுறேன். நீ முறையை மாத்தாத.”

“டேய் என்னடா ஆச்சு உனக்கு? புரியற மாதிரி பேசு” என்றவனின் விழிகளோ அறையின் கதவில் பதிந்திருந்தது.

“ஒரே குடும்பத்துல அக்கா தங்கச்சியை பொண்ணு எடுத்தா, நாம சகலை முறை தானேடா?”

“ஹான் ஆமா. ஆனா ஆஷ்மிகிட்ட தான் தங்கச்சி இல்லையே. நீ எந்த பெண்ணை எடுக்க போற?”

“தங்கச்சி இல்ல. ஆனா அக்கா இருக்கா சகலை. அவளைதான் நான் கட்ட போறேன்” என்றான்.

“அக்காவா யாரைடா சொல்ற?”

“சகலை, என்னோட பப்ளியை கண்டுபிடிச்சிட்டேன். அது ஆஷ்மியோட அக்கா இழை.”

“என்னடா சொல்ற? நிஜமாவா?” என்றவனின் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி.

“ஆமாடா.”

“கங்க்ராட்ஸ் மச்சி! எப்படியோ உன்னோட ஆளை கண்டுபிடிச்சிட்ட. அடுத்து கல்யாணம் தான்… என்னைக்கு சாப்பாடு போடபோற?”

“அது உன் கையில தான் இருக்கு.”

“என் கைலயா?” என்று புரியாமல் சாரதி விழித்தான்.

“ஆமா சகலை.. இழைக்கு…” என்று ஆரம்பித்து விடயத்தை நண்பனுக்கு தெரிவிக்க…

“ஏன்டா அந்த பொண்ணுக்கு ரெண்டு நாளுல நிச்சயம். அப்புறம் எப்படிடா நாம சகலை. எனக்கு ஒன்னும் புரியலை” என்றான்.

“மச், அதெல்லாம் உனக்கெதுக்கு? ஆஷ்மிகிட்ட கேட்டு அந்த மாப்பிள்ளை ஃபோட்டோ, அவனோட FB, Insta ID வாங்கிக்கொடு. மத்ததை நான் பார்த்துக்குறேன்.”

“டேய் எந்த நேரத்துல என்ன கேட்கிற? இப்போ நான் எங்க இருக்கேன் தெரியுமா?”

“எங்கடா இருக்க?”

“ஆஷ்மி ரூம்ல…”

“இருந்துட்டு போ, அதுக்கும் ஐடி வாங்கி கொடுக்கறதுக்கும் என்னடா சம்பந்தம்?”

“டேய் இப்போ எனக்கு ஃபர்ஸ்ட் நைட்டா…”

“இருந்துட்டு போகட்டும் அதுக்கென்னடா?”

“அதுக்கென்னவா?” என்று திகைத்து போனவன், நண்பனுக்கு புரியவில்லையோ என்றெண்ணி,

“டேய் எனக்கு ஃபர்ஸ்ட் நைட்‌ன்னு சொல்றேன், என்னன்னு கேட்கிற? வசீ, இப்போ என் வைஃப்பத்தி நான் தெரிஞ்சிகிறதுல ஒரு நியாயம் இருக்கு. அவங்க அக்காவை பத்தி விசாரிச்சா என்னை என்ன நினைப்பா? நான் வேணும்னா ஒரு ரெண்டு நாள் கழிச்சு டீடெயில்ஸ் வாங்கி கொடுக்கட்டா?” என்றான்.

“இரண்டு நாள் கழிச்சா?” என்று நெற்றியை நீவியவன், “ஏன், இழை கல்யாணம் முடிஞ்ச பிறகு வாங்கி கொடேன்” என்று சீறினான்.

அவன் கோபம் புரிந்தாலும், இருக்கும் சூழலில் எப்படி இழை பற்றி பேசுவது என்று புரியாமல்,
“டேய் கொஞ்சம் யோசிச்சு பாரு, இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட். இப்போ ஆஷ்மிகிட்ட இன்னொரு பெண்ணை பற்றி விசாரிக்கிறது நல்லாவா இருக்கும்?”

“அந்த பொண்ணு யாரோ இல்ல, ஆஷ்மியோட அக்கா!”

“வசீ…”

“இதோ பார், இப்படியே பேசிட்டு இருந்த கல்யாணமான கையோட டிவோர்ஸ் வாங்கி கொடுத்துடுவேன். நான் ஒபினியன் கொடுத்தால தான் நீ இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் ரூம்குள்ள இருக்க. உன்னை அங்க அனுப்ப தெரிஞ்ச எனக்கு அங்கிருந்து துரத்தவும் தெரியும், எப்படி வசதி?”

“டேய், இழையை பத்தி விசாரிக்கிறதால நாளைக்கு என் குடும்பத்துல எந்த பிரச்னையும் வந்துடாதே…” என்றான் சந்தேகத்தோடு,

“அப்படி வந்தா நான் தீர்த்து வைக்கிறேன். நீ எனக்கு டீடெயில்ஸ் கேட்டு சொல்லு” என்று அழைப்பை துண்டித்தான்.

அதே நேரம் அஷ்மிதா அறைக்குள் நுழைந்தாள்.

“சரி சரி, ஆஷ்மி வந்தாச்சு இரு, மெதுவா கேட்டு சொல்றேன்.”

“உனக்கு பதினஞ்சு நிமிஷம் தான் டைம்!” என்று கைபேசியை துண்டித்தான்.

அதே நேரம் கணவனை பார்த்திருந்த ஆஷ்மி, “நீங்க நர்வஸ்-ஆ இருக்கீங்களா?” என்றாள் அவன் வியர்வையை கவனித்து.

“இல்லையே, அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல” என்றவாறே அவளருகே அமர்ந்தவன், “உன்கிட்ட ஒரு விஷயம் கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?” என்றான்.

“இல்லையே… நீங்க கேளுங்க” என்றாள் புன்னகையுடன்.

“உங்கப்பா உன் பெரிப்பா குடும்பத்தை ரிசெப்ஷன்ல அறிமுகப்படுத்தி இருந்தார். உன் பெரிப்பாக்கு ஒரு பொண்ணு இருக்காங்கல்ல?”

“ஹான் ஆமாம், பிங்கி! ஏன், அவளுக்கென்ன?”

“இல்லல்ல, அவங்களுக்கு ஒண்ணுமில்ல… அதுவந்து, அக்கா. அவங்க இருக்க உனக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிட்டாங்களே. அதான் கேள்வி அவங்களுக்கு ஏன் கல்யாணம் தள்ளிப் போச்சுன்னு கேட்டேன்.”

“உங்களுக்கு பிங்கியை முன்னமே தெரியுமா?”

“ச்சஹ்… இல்லல்ல…” என்று அவன் திருமண வாழ்க்கை இன்றே முடிந்துவிடுமோ என்ற பயத்துடன் சாரதி இருக்க மீண்டும் வசீயிடமிருந்து அழைப்பு…

“ஏதோ ராங் கால்… ஒருவேளை அவங்களுக்கு வரன் பார்க்கிறதா இருந்தா எங்க சொந்தத்துல பையன் இருக்காங்க. அதான் கேட்டேன்!”

“இல்ல, அவளுக்கு கல்யாணம் முடிவாகிடுச்சு” என்று ஆஷ்மி சொல்லிக்கொண்டிருக்க, மீண்டும் அழைப்பு…

அதை துண்டிக்க போக, “ஏன் கட் பண்றீங்க? ஏதாவது முக்கியமான காலா இருக்கலாம். பேசிட்டு வாங்க” என்றாள்.

“ஷூர்…”

“ஆமா, பேசிட்டு வாங்க” என்றதில் கைபேசியோடு பால்கனிக்கு சென்றான்.

“எவ்ளோ நேரம்டா போன் எடுக்க?” என்று வசீ சீறினான்.

“மச்சான் ப்ளீஸ்டா நாளைக்கு கேட்டு சொல்லட்டா.”

“டேய் நான் சொன்னது மட்டும் நீ செய்யல. இனி குடிக்க மாட்டேன் சொல்லி நீ தண்ணியடிச்ச வீடியோவை ஆஷ்மிக்கு அனுப்பினா இதுதான் உனக்கு லாஸ்ட் நைட்டா இருக்கும், எப்படி வசதி?” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.

“அடப்பாவி டேய், நீ என் நண்பனா இல்ல எதிரியா?”

“நான் என்னவா இருக்கனுங்கிறதை நீ தான் முடிவு பண்ண போற…”

“என்னடா சொல்ற?”

“இழையை நிச்சயம் பண்ண போறவன் டீடெய்ல்ஸ் எனக்கு அனுப்பினா நண்பனா தொடரலாம், இல்ல…” என்று வசீ நிறுத்தவும்.

“அனுப்புறேன், அனுப்புறேன், கண்டிப்பா அனுப்பி தொலைக்கிறேன், ஆனா கொஞ்சம் டைம் கொடு” என்றவன் அழைப்பை துண்டித்து, மீண்டும் மனைவியிடம் பேச தொடங்கினான்.

ஆனால் வார்த்தை கோர்க்க முடியாமல் ஏதேதோ பேசியவனுக்கு நல்ல நேரம் சென்று கொண்டிருப்பதில் இன்னுமே பதற்றம் தொற்றிக்கொண்டது.

“என் பிரெண்ட்க்கு ஒரு எமெர்ஜென்சி கால் பேசிட்டு வந்துடுறேன்” என்று ஆஷ்மியிடம் சொல்லியவன் பால்கனிக்கு சென்று வசீக்கு அழைத்து,

“வசீ, உனக்கு கோடி கும்பிடு, ப்ளீஸ்டா என்னை விட்டுட்டு. ஏற்கனவே என் பொண்டாட்டி என்னை ஒருமாதிரி பார்க்கிறா. எனக்கு பேசவே முடியலை. நான் உனக்கு தேவையான டீடெய்ல்ஸ் நாளைக்கு கண்டிப்பா கேட்டு வாங்கி கொடுக்குறேனே. இன்னைக்கு மட்டும் விட்டுடுடா…” என்று கெஞ்சினான்.

“டேய், என் அவசரம் புரியாம பேசாத…”

“மச்சி, ஐயர் குறிச்சு கொடுத்த நல்லநேரம் போயிட்டு இருக்கு” என்று அவன் தவிக்க.

“சரி, போய்தொலை. ஆனா காலையில பத்து மணிக்கெல்லாம் எனக்கு நான் கேட்ட டீடெய்ல்ஸ் வேணும்” என்று வைத்துவிட, பெருமூச்சு எறிந்து உள்ளே வந்த சாரதி, அங்கே அஷ்மிதா உறங்கி கொண்டிருப்பதை கண்டு நொந்துபோனவன் அவளருகே அமர அவனரவத்தில்,

“லைட் ஆஃப் பண்ணிடுங்க, எனக்கு வெளிச்சத்துல தூக்கம் வராது” – என்று போர்வையை போர்த்திகொண்டாள்.

“என்ன அதுக்குள்ள படுத்துட்ட தூக்கம் வருதா?”

“ஏன் கேட்கறீங்க?”

“இல்ல, தூக்கம் வரலைன்னா சும்மா பேசிட்டு இருக்கலாமேன்னு…”

“அதான், உங்களுக்கு உங்க ஃபிரென்ட் இருக்காரே, அவர்கூட விடிய விடிய பேசுங்க. ஆனா ப்ளீஸ் லைட் ஆப் பண்ணிடுங்க, எனக்கு தூக்கம் வராது.”

“ஹே ஆஷ்மி, கோபமா? நிஜமாவே தூக்கம் வருதா? உன்கிட்ட நிறைய பேசனும்னு நினைச்சிருந்தேன். ஆனா ஏதோ ஒரு டென்ஷன், அன்வான்டட் கால்… ப்ளீஸ் இதோ ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன். இனி நோ மோர் கால்ஸ்…” என்று சமாதானக்கொடி பறக்க விட்டவன் அவளருகே அமர்ந்து அவள் கரம் பற்றி,

“அப்பவே சொல்லனும்னு இருந்தேன்…” என்றான்.

“என்ன?”

“உனக்கு முகூர்த்த புடவைவிட இந்த புடவை ரொம்ப அழகா இருக்கு.”

“ஹப்பா, எவ்ளோ டக்கு நீங்க…” என்று அவள் இனிதாக அவனை முறைக்க,

“ஏன்?”

“இல்ல, பொண்டாட்டி புடவை அழகா இருக்குன்னு முக்கால் மணிநேரம் கழிச்சு சொல்லி இருக்கீங்களே…” என்ற போதே விளக்கை அணைக்கப்பட, உடன் ஆஷ்மியையும் சேர்த்தே அணைத்திருந்தான்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. எப்பா வசீகரா உனக்கு மனசாட்சி இல்லையா … நேரங்கெட்ட நேரத்துல சாரதியை டிஸ்டர்ப் பண்ற … அவளோ லவ் இழை மேல …

    இதுக்குத்தான் அந்த பொண்ணு வேணாம் இந்த பொண்ணு வேணாம்னு நிறைய பேசுனியா …