Loading

KKEN-6

 அதிபனா? அழகனா ? யார் இவன் ?

மந்திரியின் மகன். மந்திரியின் அத்தனை சொத்துக்களுக்கும் ஒரே வாரிசு. என்னதான் பாக்க நன்றாக இருந்தாலும் அவன் முகத்தில் தெரியும் வன்மம்? சிலருக்கு மட்டுமே கண்டுபிடிக்க முடியும். சிலர் பார்த்து தெரிந்து கொள்வார்கள். சிலர் பழகித்  தெரிந்து கொள்வார்கள். பழகி தெரிந்து கொண்டவர்களை விட பகைத்து தெரிந்து கொண்டவர்கள் ஏராளம்.அவன் கை  வைக்காத இடமும் இல்லை, கால் வைக்காத பிஸினஸும் இல்லை. NUS சிலும், LBS சிலும் படித்தவன் ஆயிற்றே. பணம் பதவி, அறிவு அழகு அனைத்தும் இருந்தால்? மற்றவர்களின் பாடு? திண்டாட்டம்தான். இவனால் யார் வாழ்க்கை எல்லாம் அழிய போகிறதோ?

——————————————————————

ஆர் கே குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ்

கீழ் சாதி பெண்ணை காதலித்ததால் வேண்டாதவனாகிப் போன ராஜன் சென்னையிலும் சிங்கப்பூரிலும் அன்றாட வாழ்க்கையில் அனைவருக்கும் மிகத் தேவையாகி போனார்.

“உங்களுக்கு சுவையான சாப்பாடு புடிக்குன்னா இந்த பெயரை கேட்காம இருந்திருக்க மாட்டிங்க ..”

ரேடியோவில் விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது.

  ஊறுகாய் மட்டுமில்லாமல் இட்லி மாவு, தோசை மாவு, சர்பத் வகைகள், ஜாம் வகைகள், என்று பலவிதம்.

“ஆர் கே  இட்லி மாவு வாங்கி விட்டீர்களா? இதோ இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸ். கொஞ்சமா தண்ணி விட்டு தாளிச்சு கொட்டினா போதும். எள்ளுன்னா எண்ணைய்யா நிக்கணும், எங்க பாட்டி சொல்லுவாங்க. இதோ ஆர் கே வோட எள்ளுப்பொடிய சாதத்துல போட்டு எண்ணெய்  விட்டா  எள்ளு சாதம் ரெடி. புளியோதரைன்னா அது அய்யங்கார் புளியோதரைதான். உங்களுக்கு நினச்ச நேரத்துல அய்யங்கார் புளியோதரை வேணுமா? இதோ கொஞ்சமா சூடான சாதத்துல கலந்து சாப்பிட்டா  முடிஞ்சது . கூடவே ஒரு சுட்ட அப்பளம் வேணுமா? இதோ இருக்கே? வெள்ளை சர்க்கரை வேண்டாம் வேண்டாம். வேண்டவே வேணாம். இதோ இருக்கு ஆர் கே வின் நாட்டு சர்க்கரை.

நாவில் போட்டவுடன் கரைந்து போகும் கடலை உருண்டையை வயதானவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.”

அவர்கள் உள்ளே நுழையாத உணவு பண்டங்கள் இல்லை என்னும் அளவிற்கு அவர்கள் உணவு பண்டங்களில் கால் பதித்திருந்தனர். அப்படி சொல்லலாமா? அல்லது அவர்களின் உணவு பொருள் நுழையாத சமையல் அறையே இல்லையென்று சொல்லி விடலாமா? எது இருந்தாலும் இல்லை என்றாலும் அவர்களின் பெருங்காயமாவது சமையல் அறையில் இருக்க வேண்டும். ஆர். கே குரூப்பின் ஒரே வாரிசு ரவி குமார். உண்மையில் இவன் ஒரே வாரிசு இல்லை. இவனுக்கு ஒரு அண்ணன்  இருந்தான். சூர்யா. இரு மகன்களும் இருவரும் மேல் படிப்பை வெளி நாட்டில் முடித்திருந்தனர்.

சூர்யாவும் ரவியும் இரட்டை குழந்தைகள். இருவருமே அநேக விஷயங்களில் நேர் எதிராகத் தான் இருந்தார்கள். அவர்கள் வளர்ந்தது என்னவோ சிங்கப்பூரில் தான். இருந்தாலும் அவர்கள் அன்னை இந்திய பாரம்பரியதிலேயே வளர்த்திருந்தார். ஏதோ சில சமயங்களில்  பிள்ளைகளும் இந்தியா வந்திருக்கிறார்கள் . சூர்யாவுக்கு பிடித்த அளவு ஏனோ ரவிக்கு இந்தியாவை பிடிக்கவில்லை. அதிலும் சூர்யாவுக்கு, “வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட “பருவங்களில் சூர்யாவின் மனதை கொள்ளை கொண்டது இந்திய பெண்கள்தான்.

ரவியை பொறுத்த வரையில்  பணம் வந்தது. அதனால் சொந்தமும் வந்தது என்றே நினைத்தான். அந்த பருவத்திலும் ரவியின் மனதில் யாராலும்  உள்ளே நுழைய முடியவில்லை.இந்திய பெண்கள் மட்டும் இல்லை வெளி நாட்டுப் பெண்களும்தான்.  பெண்களை பொறுத்தவரை தேவையானது பணம். மற்ற தேவையை தீர்த்துக் கொள்ள ஒரு ஆணின் உடல். பெண்களை பார்த்தாலே அவனுக்கு வெறுப்பாக வந்தது. கம்பீரமும் ஆளுமையும், பணமும், பணச் செழுமையும் இருக்கும் ஆண்  மகனை யாருக்குத் தான் பிடிக்காது அல்லது எந்த பெண்கள்தான் சுற்றி வர மாட்டார்கள்.

அவன் மனதை கொள்ளை கொண்ட ஒரே பெண் அவன் அன்னை தான். அவளின் அழகையும் கம்பீரத்தையும் ஏன் பெண்மையையும் கூட அவன் எந்த பெண்ணிடமும் கண்டதில்லை. உண்மையானக் காதல் என்பதில் எல்லாம் அவனுக்கு மற்ற பெண்களிடம் நம்பிக்கையே வரவில்லை.(டேய் ! உன்னையும் தாடி வச்சு ஏங்க  வைக்க ஒருத்தி வருவாடா. அது இந்த ஆத்தரோட சாபம்)

இதோ பெற்றவர்களுக்கு திருமணமாகி முப்பது வருடங்கள் ஆகி விட்டது. இன்னும் தந்தை இரவில் வீடு திரும்பும் வரையில் காத்திருந்து உணவு பரிமாறிவிட்டுதான் உறங்கச் செல்வார். அது இரவு மணி பதினொன்றோ, பன்னிரண்டோ அப்படிதான்.

தன் முகத்தை கண்டதும் முகத்தில் வரும் சிறு வெட்கத்தையும் முகச் சிவப்பையும் காண  எந்த ஆண்  மகனுக்குத்தான் மனம் ஏங்காது ? கணவன் மனைவிக்குள் இருக்கும்  காதலுக்கு வயது உண்டா என்ன? இளமையில் காமத்தில் இருக்கும் காதல் வயது ஆக ஆக  முதுமையின் முதிர்ச்சியை இன்னும் அதிகரிக்கத்தானே  செய்யும். அந்த இயற்கையான ரசாயத்திற்கு இவர்கள் ஒரு நல்ல உதாரணம்.

  பெற்றோரை ரசித்து ரசித்து வளர்ந்தவர்கள் தான் சூர்யாவும் ரவியும். திடீரென்று ஒரு நாள் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் சூர்யாவின் அன்னை உறங்கி கொண்டிருக்கும் போதே இறந்து போய் இருந்தார். கார்டியாக் அரெஸ்ட்டாம். அழகான பெயரில் மருத்துவர்கள் சொன்னார்கள்.

   வாரிய தலை கலையாமல் முன் உச்சியில் திலகமிட்டு, முகம் முழுக்க புன்னைகையுடன் கையில் இருந்து பையை வாங்கி “வாங்க” என்று இனிமையாய் அழைக்கும் மனைவி இனி இல்லை. சுட சுட சப்பாத்தியும் பட்டாணியும்  உருளையும் சேர்த்து சப்ஜி செய்து பரிமாறியவள் எங்கே?

“இப்பதானே டீ  சூர்யாவுக்கு சீக்கிரமா  நல்ல பொண்ணா  பாக்கணும். ஏற்கனவே ரொம்ப வயசாகிடுச்சுன்னு சொன்ன? எப்படி தனியா என் தலைலை  பொறுப்பை குடுத்துட்டு போயிட்ட ?”

ராஜன் மிகவும் இடிந்து போய்  விட்டார். வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை. தான் செவ்வாய்ப்பேட்டையில் இரயில் ஏறியதும், பாட்டாபிராமில் அவளை பார்த்து மயங்கியதும்  அந்த நாட்களுக்கு மனம்  ஏங்கியது.

 தினமும் குளித்து  நெற்றி உச்சியில் குங்குமம் வாங்கி கொள்ளும் மனைவி இல்லை. எனக்கு இன்னிக்கு முள் முறுக்கு செஞ்சு தாடி! யார்கிட்ட கேட்பேன்? டிபன் பாக்ஸை திறந்தாலே மணக்க மணக்க வரும் சமையல் மட்டுமா ஸ்பெஷல்? அதில் “ஐ  மிஸ் யூ” யார் எழுதி அனுப்பவார்கள்?

“இன்னிக்கு ஸ்பெஷல் கோதுமை அல்வா” அவர்களின் அந்தரங்க பாஷை. அவளின் ஒற்றை இதழ் முத்தம் இனி கிடைக்குமா? கூடலுக்கு  பின் கணவனிடம் இருந்து உரிமையாக வாங்கி கொள்ளும் அழகான முத்தம். அவளின் சிறு மிரட்டல். இனி எப்போதுமே அவளின் கழுத்து வளைவில் முகம் புதைக்க முடியாது. கழுத்தின் வளைவில் வாசம் பிடித்தால் அத்தனை கவலைகளையும் எளிதாக கடந்து விட முடியுமே. காதல், காமம், கடமை , இன்பம், மகிழ்ச்சி எல்லாம் தந்தவள் இப்போது இனி எதற்கு என்று மறைந்து  விட்டாள் . மனைவியின் முகத்தையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அன்றைய இரவில், இரவின் தனிமையில் தாள முடியாமல் போனது.

மகன்கள் தோளில்  தாங்கினார்கள்தான். இருந்தாலும் அவருக்கு மனைவியைத் தவிர வேறு உலகம் அறியாதவர். நம்பிக்கையுடன் மனைவியின் கையை பிடித்து திருமணம் செய்த போதே தன் உலகத்தை அவள் கைக்குள் அடக்கிக் கொண்டவர். குலுங்கி குலுங்கி அழுதார். மனம் சமாதானம் அடையவில்லை.

 அவள் ஒருத்தியின் இழப்பு அவர்கள் மூவருக்குமே பேரிடிதான். துக்கம் நடந்த வீட்டில் நல்லது நடக்க வேண்டும். மகனுக்கு சீக்கிரமே திருமணம் செய்து வைக்க வேண்டும். அவள் கனவை நிறைவேற்ற வேண்டும். அவளை போலவே மகனுக்கு மனைவியாக தோழியாக, இவள் இடத்தை நிரப்பும் அன்னையாக ஒரு பெண்ணை அழைத்து வர வேண்டும்.

  இந்நிலையில்தான் ராஜனின் அக்கா மகள் திருமணம் என்று அழைத்திருந்தார்கள். அக்கா, வெகு காலம் கழித்து பேசினாள். அதிலும் ராஜனின் நேரடி தொலைபேசி எண் கிடைக்காமல் அலுவலகத்துக்கு பேசி அதற்கு பிறகே  உடன் பிறந்தவனிடம் பேச முடிந்தது.  தந்தை ஒதுக்கி வைத்த பாவத்திற்கு மடியில் போட்டு  தூக்கி வளர்த்தவளுக்கும்  தொடர்பு இல்லாமல் போனது. தன் மகளின் திருமணத்திலாவது தம்பியை உடன் சேர்த்து கொள்ள வேண்டும் . தம்பி மனைவி அப்போது தான் இறந்து விட்டாள்  என்ற செய்தியை கேட்ட போது மிகவும் வருத்தப்  பட்டாள். அவளுக்கு யார் மீதும் எந்த வெறுப்பும் இல்லை.

பல வருடங்கள் கழித்து உடன் பிறந்தவள் குரல் கேட்டதில் அவருக்கு சொல்ல முடியாத  மகிழ்ச்சிதான். தான் யாரும் இல்லாதவனாக உணரக் கூடாது என்று தன் மனைவிதான் இந்த ஏற்பாட்டை  செய்திருப்பாள். மனைவியின் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.

இது  என்ன விதமான காதல்? தனக்கும் தன்  மனைவிக்கும் இப்படியான ஒரு ஆத்மார்த்தமான காதல் இருக்குமா? சூர்யாவின் மனம் ஏங்கியது. அப்படிப்பட்ட ஒரு பெண்ணிற்க்காக மனம் ஏங்கியது.

அவள் வருவாளா……

   சொன்ன படியே தந்தையும் மூத்த மகனும் அக்காவின் மகள் திருமணத்திற்கு வந்து இறங்கினார்கள்.பெரியவருக்கு பாச மலரை கண்ட  சந்தோஷம். மகனுக்கு? வழக்கம் போலவே தாவணி போட்ட பெண்கள், லெஹெங்கா போட்ட பெண்கள், தவிரவும் பலாஸோவிலும் பெண்கள் மயக்கினார்கள். பலர் லூஸ் ஹேர் என்ற பெயரில் தலையை கட்டாமல் விட்டிருந்தார்கள். பலர் தலைக்கு இத்தனை அலங்காரம் செய்ய முடியுமா? என்னும் அளவில் வந்திருந்தார்கள். மணப்  பெண் நாட்டியம் கற்றுக் கொண்டவள் என்பதால் சொல்லவே வேண்டாம் அவள் உடன் நாட்டியம் பயின்றவர்கள் அத்தனை அழகாய்  இருந்தார்கள். அல்லது அழகை அழகாய் காட்டிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி தான்  ரஞ்சனி. அழகி. பேரழகி. 

  “தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு”

வந்திருந்த அனைத்து  வாலிபர்களுமே அவள் தாவணி நுனியை பிடித்துக் கொண்டு சுற்ற  தயாரானார்கள்.  நிச்சயம் அதில் சூர்யாவும் இருந்தான். சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கும் பெரிய பணக்கார குடும்பம் ஆயிற்றே. விஷயம் தெரிந்ததும் விட்டு விடுவார்களா? பெண்கள் விட்டாலும் அவர்களின் பெற்றோர்கள் விட்டு விட்டுவிடுவார்களா? பெயர் முதல் பட்ட படிப்பு வரை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்கள்.

  அதில் இவனுக்கு பிடித்த ரஞ்சனியும் அடக்கம். பெண்ணும் பையனும் பார்த்தாயிற்று. படிப்பு வசதி ஒத்து வந்தது. பெற்றோர் பார்த்து பேசி விட்டார்கள். வேறு என்ன வேண்டும்? “உங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓக்கேப்பா. அண்ணனுக்கு புடிச்சுருக்கா விடுங்க. நான் பாக்கனுன்னு அவசியமே இல்ல” . ரவி தெளிவாக்கி விட்டான்.அப்போதே சிம்பிளாக நிச்சயம் செய்து விட்டார்கள். ரவி நிச்சயத்திற்கு  வரவில்லை. நேரடியாக திருமணத்திற்கே வந்துச் சேர்ந்தான். சூர்யாவுக்கும் ரவிக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு சூர்யாவுக்கு உடல் பயிற்சி செய்வது,  ஜிம்மிற்கு போவது இதிலெல்லாம் அத்தனை ஆர்வம் இருந்ததில்லை. வாழ்க்கை வாழ்வதற்கே என்று இருப்பவன். அதற்காக அதிகமாகவும் சாப்பிட மாட்டான்.  கட்டுடல் என்று கூற முடியாவிட்டாலும் தொப்பை கிடையாது. ஊளை சதையும் கிடையாது. அதுவே தனக்கு போதும் என்று இருந்தான். அதுவே ரவி அப்படி இல்லை. உடல் மனது இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவன். அதே போலத் தான் பெண்கள் விஷயத்திலும்.

“விட்டுடு விட்டுடு  ஆள  விட்டுடு பொழச்சு போறான் ஆம்பிளை”

அப்படி எல்லாம் இல்லை. செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் தான் அவனை சுற்றி வருவார்களே தவிர அவன் அன்னையைத் தவிர யாரையும் அவன்  மனதிற்குள், வீட்டிற்குள் நுழைய விட்டதே இல்லை. மற்ற பெண்களிடம் இருக்கும் அதே ஒதுக்கம்  அவன் அன்னியிடமும் இருந்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

இந்த இடத்துல இதை போடக் கூடாது இருந்தும் போடுவோம்.

காதல் வரும்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்