Loading

 

KKEN-38

 

என் தம்பி பொண்டாட்டி பெரிய பணக்காரி. ஆனா அவன் ஆட்டோ ஓட்டினபோது தான் அவனை காதலிச்சா. ரெண்டு பேருக்கும் ஏணி வச்சா கூட எட்டாது . ஆனா, வெற்றி தான் தன்னோட தைரியம், நம்பிக்கைன்னு அவங்க அம்மாகிட்ட சொன்னவ சார் அவ. சில பொண்ணுங்க மட்டும் இல்ல., நிறைய ஆம்பிளைங்க கூட தப்பானவங்களா இருக்கலாம். அதுக்காக உலகத்துல இருக்கற எல்லாருமே தப்பானவங்க இல்ல சார். கடவுள் மேல பாரத்தைப் போடுங்க. உங்களை  புரிஞ்சுக்கற ஒருத்தங்களை மீனு பாப்பாவுக்கு அம்மாவா கடவுள் காட்டுவார். மனச போட்டு குழப்பிக்காதீங்க. யோசிச்சு முடிவெடுங்க.”

 

தன்னை விட சின்னப் பெண் இப்போது ரொம்ப பெரியவளாகத் தெரிந்தாள் . இவன் தன்னைப் பற்றிய எந்த விவரத்தையும் இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டே இல்லை. எத்தனை பெரிய விஷயத்தை எத்தனை  சாதாரணமாகச் சொல்லி விட்டாள் ? பெரியவர்கள் செய்த தப்புக்கு எப்படி குழந்தையை  தண்டிக்க முடியும்? தன் தந்தையும் என்ன வேண்டுமென்றே சூர்யாவுக்கு அந்த பெண்ணை பார்த்தாரா? அவனும் அவள் அழகில் மயங்கித்தானே திருமணம் செய்துக் கொண்டான்? இதோ இவள்! இத்தனை நாளாக அருகிலேயே இருக்கிறேன். என்னை திரும்பிக் கூட பார்த்தத்தில்லையே?

இவள் சொல்வதும் சரிதான். நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவருமே தப்பானவர்கள் என்று நினைக்கக் கூடாது. அதற்காக அந்தத் திருமணத்திற்கு செல்வதற்கு எல்லாம் இஷ்டமில்லை. ஆனால்  வீட்டிலேயே பெரியவர். அவர் வந்து அழைத்திருக்கிறார் என்றால் தன்  தந்தை மீது எத்தனை பாசம் இருந்திருக்கும். சரி அவருக்காக அவர் வயதிற்கு மதிப்பளித்து செல்லலாம் என்று நினைத்தான்.

 

அதுவும் கூட உமாவும் கொடியும் சொன்னதால் தான்.

“அப்படி யாரையும் வேண்டாம் என்று ஒதுக்கி விடக் கூடாதுப்பா. நாளைக்கு நம்ம பாப்பாவுக்கு சொல்லிக்க கூட யாரும் இல்லாத மாதிரி ஆகிடும். மனுஷங்க எல்லாம் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. நம்ம கை விரல்கள் மாதிரிதான் . நீங்க நிறைய படிச்சவங்க. எல்லாம் நாங்க சொல்லித் தான் தெரியணும்னு இல்ல. ”

உமாக்கா சொல்வதும் இவனுக்கு சரி என்றேத் தோன்றியது . பல பிரச்சனைகள் இருந்தது தான். யாரும் அம்மாவை ஏற்றுக் கொள்ளவில்லை. நாமும் யாரிடமும் போய் பெரியதாக எல்லாம் சொந்தமோ நட்போ கொண்டாட வேண்டாம். திருமணத்திற்கு அழைத்திருக்கிறார்கள். சென்று வரலாம்.’

திருமணத்திற்கு செல்வது என்று முடிவெடுத்துவிட்டான் .

திருமணத்திற்குச் செல்ல குழந்தைக்கு சில நகைகளும் பட்டு பாவாடையும் வாங்க  கடைகளுக்குச் செல்ல வேண்டி இருந்தது.

“திருமணத்திற்கு போலாம்” என்று சொன்னது தான் தாமதம். மலர் குழந்தைக்கு என்னன்ன வாங்க வேண்டும். எப்படி அலங்கரிக்க வேண்டும் எல்லாம் முடிவு செய்து விட்டாள் .

“நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாகும். நீ கடைக்கு நேரா போய்டு. நான் வந்து சேர்ந்துக்கறேன்.”

“சாரிங்க சார்!”

சொன்னவள் சற்று தயங்கி நிற்கவும், என்ன ? என்றிருந்தது அவனின் பார்வை.

“அது ஒண்ணுமில்லை. என்னோட டெய்லரிங் மெஷின் வெற்றி வீட்டுல இருக்கு. அதை கொண்டாந்து தர சொல்லவா? பாப்புவுக்கு நானே பாவாடை சட்டை தெச்சுடுவேன் .”

“அதெல்லாம் வேணாம் கொடி. இப்போதைக்கு ஏதாவது புதுசா ரெடி மேட் வாங்கிக்கலாம்.”

இப்போதும் அவள் நகரவில்லை. இப்போது என்ன சலிப்பாக பார்த்தான் அவன்.

“இல்ல சார் நம்ம பாப்பாவுக்கு தைச்சு போடணுன்னு எனக்கு ஆசையா இருக்கு. எத்தனையோ பேருக்கு தைச்சு கொடுத்திருக்கேன். புவி பொண்ணுக்கும் தைச்சதில்ல, வெற்றி புள்ளைக்கும் தைக்கல. நம்ம பாப்பாவுக்காவது தைச்சு போட ரொம்ப ஆசையா இருக்கு . நான் என்னோட இடத்துலேயே வைச்சுப்பேன். சத்தம் வராம உங்களை தொந்தரவு பண்ணாம பார்த்துக்கறேன். இல்லாட்டி நான் அங்கேயே போய் தைச்சுட்டு கொண்டு வரவா?”

அவள் விடப் போவதில்லை. அவன் அறிந்து கொண்டான். இடுப்பில் கை வைத்து பெரு மூச்சு விட்டவன் சரி என்றான்.

“பட்! நிறைய டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் இருக்கு.”

‘ஆமா ! பிசினெஸ் மேன் இல்லையா. டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் இல்லாம எப்படி ?”

“நீங்க வெளில கேக்கற மாதிரிதான் பேசிகிட்டு இருக்கீங்க மேடம்.” அவன் தான் அவளை முறைத்துக் கொண்டு நின்றான் .

சற்று அதட்டலாக அவன் குரல் வந்தாலும் அவள் கண்டுக் கொள்ளவில்லை.

‘நாங்கல்லாம் யாரு? நல்லவனையும் அவங்க அம்மாவையுமே டீல் பண்ணவங்க நாங்க.’

மனதில் நினைத்தாலும், வெளியில் அப்பாவி போல நின்றிருந்தாள்.

“ஒரு வேலை ட்ரெஸ் சரியா தைக்கலனா பணம் நீதான் தரணும்.”

“நல்ல இருந்தா?”

“கொஞ்சம் என்னை பேச விடறியா?”

வாயில் விரல் வைத்துக் கொண்டாள் .

நல்லா இருந்தா வெளில என்ன ஸ்டிச்சிங் சார்சோ அது உனக்கு கிடைக்கும். அதே மாதிரி வீட்டுல எந்நேரமும் துணி தைக்கறேன்னு சொல்லிட்டு பிள்ளையை பாக்காம இருக்கக் கூடாது. அப்டி நடந்தா, நீயும் மெஷினும் வெளில நடைய கட்ட வேண்டியது தான். எனக்கு மீனு தான் பர்ஸ்ட். அதே மாதிரி நான் வீட்டுல இருக்கும் போது மெஷின் சத்தம் கேக்கக் கூடாது.

அவன் சொன்ன எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டி ஒத்துக் கொண்டாள்.

முதலாளியிடம் சொல்லி விட்டு உடனே வெற்றிக்கு அழைத்துப் போக சொன்னாள்

” என்னக்கா! என்ன திடீர்னு வரேன்னு சொல்லற அங்க எதுவும் பிரச்சனை இல்லையே ?”

“அதெல்லாம் இல்லடா” என்று விஷயத்தை சொல்லி விட்டாள் .

“சரிக்கா! அவரு வேலைய முடிச்சுட்டு வரட்டும். நீ நம்ம வீட்டுல இரு. மீனுவும் வருவாதானே ?”

அக்காவை அழைத்து வந்தான். அப்போதே அவளின் மெஷினையும் கொடுத்து விட்டு வந்தான். எண்ணெய் போட்டு நல்ல கண்டிஷனில் தான் இருந்தது.

“வாக்கா ! இந்தா இங்க பாரு. இதுல இருக்கறது முழுக்க உனக்குத்தான். வேற துணி மாத்திக்கோ. எல்லாமே ரிச்சா தான் இருக்கு . எது புடிச்சுருக்கோ போட்டுக்கோ.”

“என்னடா வெற்றி இது? இவ்ளோ புடவை?”

“உனக்குத்தான் ரொம்ப புடிக்குமே அதான் வாங்கி வச்சுருக்கேன்.”

” அது சரி! ரவிக்கை இல்லாம எப்படி டா போட ?”

“பாரு! ”

ஸ்டைலாக அலமாரியில் கை  கட்டி நின்று கொண்டான்.

‘இது லதாக்கா தைச்சது தானே?”

“எப்படி கா கண்டு புடிச்ச?”

“தையலை பார்த்தா கண்டுபுடிக்க மாட்டோமா?அக்கா எப்படி டா இருக்காங்க ?”

“பாக்கணுமா ?”

“பாக்க ஆசையா தான் இருக்கு. ஆனா அது தான் முடியாதே.”

“எல்லாம் முடியும்.”

பச்சை வர்ண சாப்ட் சில்க் காட்டன் அவளை கம்பீரமாக காட்டியது.

“இந்தாக்கா ! குட்டி ஜிமிக்கியும் மெல்லிய சங்கிலியும் கொடுத்தான்.

“இது என்னடா?

“உனக்குத்தான் வாங்கினேன்.”

“தங்கமாடா ?”

“இல்லக்கா. எனக்கு இன்னும் அவ்ளோ வசதி வரல. கொஞ்ச நாள் பொறுத்துக்கோக்கா . ”

“வித்யா எப்படி டா இருக்கா ? உங்களுக்குள்ள எப்படி போகுது?”

“ஏதோ போகுதுக்கா. இந்த புடவை கூட பாதி அவ வாங்கினது தான். உன்ன நினைச்சுத்தான் வாங்குவா. மனசு முழுக்க என்னை வச்சுக்கிட்டு அந்தக் குழந்தையை மடில வச்சுக்கிட்டு அவனை முழுக்க முழுக்க மூளைல வச்சுக்கிட்டு என்கிட்ட ஒட்டவும் முடியாம தள்ளிப் போகவும் முடியாம தவிக்கறா . அன்னிக்கு நான் பூரணி கிட்ட பேசும்போது பார்த்தேன். அவ கண்ணுல அத்தனை ஏக்கம். அவனை பத்தின எல்ல நினைப்பையும் தூர எறிஞ்சுட்டு அவதான் வரணும். நான் என்னக்கா பண்ண முடியும்?”

“ஏதோ நாம ஈசியா சொல்லிடறோம் வெற்றி.  ஆனா அந்த நிலமைல இருந்து பாக்கறவங்களுக்குத்தான் அதோட கஷ்டம் தெரியும்.”

இருவரும் பேசிக் கொண்டே வித்யாவின் பொட்டிக் பார்க்க வந்தார்கள். அங்கே லதா தான் ஏதோ தைத்துக் கொண்டிருந்தாள் . லதாவை பற்றி என்ன சொல்ல ? இன்னொரு கொடி மலர்தான் அவளும். குடிகார புருஷனிடமிருந்தது இப்போது சற்று விடுதலை இங்கே வந்து விடுவதால்.

“வெற்றிக்கு தான் ரொம்ப நன்றி சொல்லணும் மலர்”

இருவரும் ஒருவருக்கொருவர் கட்டிக் கொண்டார்கள் .

“அப்புறம் பேசறேன்.” இருவரும் கைப் பேசி எண்ணை மாற்றிக் கொண்டார்கள்.

“ரொம்ப தேங்க்ஸ் வித்யா.”

“இதுக்கு எதுக்கு தாங்ஸ். எனக்கு ஆள் தேவைப் பட்டாங்க . வெற்றி தான் கூட்டிகிட்டு வந்தாரு.”

“இருந்தாலும்..”

“அதெல்லாம் பரவால்ல இருக்கட்டும் அக்கா .

‘எத்தனை நல்ல பொண்ணா இருக்கா. எங்க வெற்றிக்குத் தான் குடுத்து வைக்கல. ரெண்டு பேரையும் சீக்கிரமா சேர்த்து வைப்பா முருகா.’ மனதில் வேண்டிக் கொண்டே வித்யாவிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு வெளியில் வந்து இருவரும் ரவிக்காக காத்திருந்தார்கள்.

தன்னுடைய பீ எம் டபி ள் யூ கார திருப்பிக் கொண்டு வந்து நின்றான். தூரத்தில் இருந்து இவர்களைப் பார்த்தவன் அசந்து விட்டான்.

ஒரு அழகிய ஆண் மகனுடன் இவள் நிற்பதில் அது என்ன பொறாமையா? யார் அவன்? வரும்போதே கூர்மையாக பார்த்தான் ரவி .

“இவளோ மாங்காய்  டிசைன் சிகப்பு பார்டர் புடவை கட்டி இருந்தாள் அட்டகாசமாய் நின்றிருந்தாள் .

“அப்பா!” மீனு குதித்தாள் . காரை ஓரமாக நிறுத்தி விட்டு வந்தான்.

“வணக்கம் சார்! நான்தான் வெற்றி. இவங்களோட தம்பி.”

“ஓ! ஹாய் ! புதுசா இங்க சூப்பர் மார்க்கெட் ஓபன் பண்ணது நீங்க  தானே?” ரவியின் மனதிற்குள் வெற்றி வெற்றி என்ற முழக்கம் .இது வேற எதுக்கோ வெற்றி.புரிஞ்சது தானே ரீடர்ஸ்!

‘யா! பேட் சூப்பர் மார்க்கெட் இல்ல. ஹைப்பர் மார்க்கெட்”

“வாவ் ! காங்கிராட்ஸ்”

“தாங்க் யூ ! இருவரும் கை  குலுக்கி கொண்டார்கள்.

“வெற்றி இங்க ஜிவெல்ஸ் எங்க வாங்கலாம்?”

“இதோ மேடம் தான் இருக்காங்களே. அவங்களுக்கு இந்த இடம் நல்ல அத்துப்படி. உங்களுக்கு என்ன வேணுமோ அக்காவே கூட்டிட்டு  போவா.”

“ஓ ! சூப்பர். அப்ப  வேற ஒரு சமயம் பாக்கலாம் வெற்றி”

“சியூர்”

அவளைப் பார்த்தவனுக்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“நீ ரொம்ப அழகா இருக்க கொடி .”

பதில் எதுவும் சொல்லவில்லை அவள். அமைதியாக புன்னகைத்தாள்.

“உனக்கும் ஏதாவது பாக்கணுன்னா பாரு கொடி. நான் பணம் கொடுக்கறேன். அப்புறம் சம்பளத்தில் பார்த்துக்கறேன்.”

“பரவால்ல! இருக்கட்டும் சார். எனக்கு எதுக்கு ?” குழந்தைக்கு மட்டுமே நகைப் பார்த்தாள் .

‘தனக்கு என்று யோசிக்கக் கூட  தெரியாத பெண் இவ்வுலகில் இருக்க முடியுமா?’

அன்றைய இரவிலும் குழந்தையுடனே  அவன் இருந்தான். இரவில் பாயை போட்டு அவள் கீழே படுக்கும்போது தன்னை மீறி சொல்லி விட்டான். “நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க கொடி.”

“இதை அவனிடமிருந்து அவள் எதிர்பார்க்கவில்லை. அதிலும் கொடி என்ற அவனின் தனி அழைப்பு, சமீப காலமாக அவன் அப்படி அழைக்கும்போது குரலில் வரும் குழைவு, இன்று கடையில் நகை எடுக்க சொன்னது எல்லாமே இவளுக்கு ஏதோ ஒரு வித பயத்தை தான் கொடுத்தது. ரவி சார் மீது அவளுக்கு நம்பிக்கை இருந்தது தான். இருப்பினும், அதிபன் போன்றவர்களை பார்த்தவளுக்கு அத்தனை எளிதாக யாரையும் நம்ப முடிவதில்லை. நல்லவன் கொடுத்த பயிற்சி கூட காரணமாக இருக்கலாம். அல்லது இயற்கையாகவே பெண்களுக்கு வரும் முன்னெச்சரிக்கை உணர்வாகவும் இருக்கலாம்.

அவளோ அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல் உடல் திருப்பிக் கொண்டு படுத்துக் கொண்டாள். அவனுக்குத் தான் சங்கடமாகி விட்டது.

 

காதல் தொடரும் ..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்