Loading

KKEN-37

 

சாரி சொல்லுவாளா?

(ம்.. ஆசை தோசை அப்பளம் வடை.. சாரியும் இல்ல பூரியும் இல்ல போங்க அங்கிட்டு…)

 

“இல்ல சார். நீங்க சம்பளம் குடுக்கறவரா இருக்கலாம். ஆனா மீனு தான் எனக்கு உண்மையான முதலாளி. அவ நல்லா  இருக்கணும். அதுக்கு நான்தான் பொறுப்பு. நான் சொன்னது தப்புன்னா மன்னிச்சுடுங்க. ஆனா குழந்தைக்கு இனிமே கண்ணு வைக்காதீங்க.”

எத்தனை அழுத்தம் வார்த்தைகளில்! குழந்தையை சொன்னால், பெற்றவளுக்கு இப்படித்தான் கோபம் வருமோ? எங்கம்மாவும் இப்படித்தான் வளர்த்துருப்பாங்களா?

மீண்டும் அன்னையின் நினைவுகளில் அவன்.

ஒரு நாள் மாலையில் அலுவலகத்தில் இருந்து வந்தவனுக்கு பயங்கரமான தலை வலி .

“உமா கா! ஒரு காபி” சொல்லிக் கொண்டே வந்தான்.

“சார்! அக்கா அவங்க பொண்ணு வந்துருக்குன்னு பாக்க போய் இருக்காங்க. உங்க கிட்ட சொல்லி இருந்தாங்களே?”

“என்ன இந்த வீட்டுல எனக்கு ஒரு காபி கிடைக்குமா கிடைக்காதா ?” ரவி கத்தவும்

“இதோ நான் கொண்டு வரேன்”சுருதி இறங்கி போய் இருந்தது மலரிடம் .

அந்த தலை வலிக்கு அந்த சூடான காபி அத்தனை இதமாக இருந்தது.

“தேங்க்ஸ் கொடி ”

அனைவரும் இவளை மலர் என்று அழைக்க இவன் கொடி  என்று அழைத்து ஒரு மாதிரியாக இருந்தது.

அப்பா ஓடி வந்தாள்  மீனு.

“அப்பாவுக்கு உடம்புக்கு ஊ . தொந்தரவு பண்ணாதீங்க  வாங்க”. குழந்தையை தூக்கிச் சென்று விட்டாள் .

இரவுக்கும் டிபன் இவளே செய்துக் கொடுத்தாள் . அவனுக்கு நிறைய  வேலைகள் இருந்தன. இவள்தான் தான் சென்று சென்று அழைத்துக் கொண்டிருந்தாள்.

“மீனு சாப்பிட்டாச்சா?”

“சாப்பிட்டு தூங்கிட்டு  சார்”

“நீ சாப்டியா? மத்தவங்க எல்லாரும் சாப்பிட்டாங்களா?”

சாம்பார் ஊற்றிக் கொண்டிருந்த கை  நின்று மீண்டும் வேலை செய்தது.

“என்னாச்சு?” அவன் வினவவும்,

தன் வயிற்றுக்கு இல்லாமல் பாத்திரங்களை கவிழ்த்து தேய்த்து தண்ணீரை குடித்த இரவுகள் நினைவுக்கு வந்து விட்டது. அவள் முகத்தில் ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்ச்சி . அதை பார்த்தவன் வேறு எதுவும் பேசவில்லை. ஆனால்  கைக் கழுவி விட்டு வந்து காரணம் கேட்டான்.

“சாப்பிட்டச்சான்னு தானே கேட்டேன். அதுக்கு எதுக்கு அத்தனை அதிர்ச்சி?”

“இல்ல சார்! இது வரைக்கும் என்ன பார்த்து யாருமே சாப்டியான்னு கேட்டதே இல்ல .வெற்றி மட்டும்தான் என்ன பத்தி யோசிப்பான்.”

“ஏன் உங்கம்மா?”

“அவங்கதான் நான் சின்ன புள்ளையா இருக்கும்போதே செத்துட்டாங்களே ?”

‘ஓ ! இவளும் அன்னை இல்லாதவள்.’ அதற்கு மேல் எதுவும் பேச விரும்பாதவன்,

“இன்னிக்கு முழுக்க குழந்தையோட நான் இல்ல, இன்னிக்கு இவளோடவேப் படுத்துகிறேன்.

“சரிங்க சார்”

அவன் சென்று கட்டிக் கொண்டதில் கை  கணம் தாங்காமல் சிணுங்கினாள் மீனு.

ஓ !ஓ ! ஓ ! லேசாக பாடி முதுகில் தட்டிக் கொடுத்தாள் .

மீண்டும் உறங்கிப் போனாள்  மீனு. அவள் தந்தையும் உறங்கி விட்டான்.

அவர்கள் கட்டிலின் மேலே உறங்க, குழந்தைக்காக அவளும் அங்கேயே தன்னுடைய படுக்கைகளை எடுத்துக் கொண்டு வந்து படுத்துக் கொண்டாள் .

இரவில் சரியாக தூங்காமல் ஒரு மாதிரி அரைகுறை தூக்கத்தில் தவித்தான் ரவி.

எழுந்து பார்த்தவளுக்கு பாவமாக இருந்தது. லேசாக தலை கோதினாள். நன்றாக உறங்கினான்.

வேறு ஒரு நாள் அலுவலகம் முடிந்து வரும் போது ஹாலில் மலரையும் மீனுவையும் காணவில்லை. அவர்கள் அறையில் தான் இருந்தார்கள்.

ஏதோ தண்ணீர் கொட்டி விட்டது போலும். இவள் தான் துடைத்துக் கொண்டிருந்தாள்.

“சொர்க்கம்  என்பது நமக்கு சுத்தமுள்ள வீடுதான். சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்.”

புடவையை தூக்கி சொருகிக் கொண்டு இவளும் குதித்து குதித்து ஆடிக் கொண்டிருந்தாள் . கை ஒரு பக்கம் வேலை செய்ய தலை ஆடி ஆடி இன்னும் பயங்கரமாக வேலை செய்துக் கொண்டிருந்தது. இவனுக்குத்தான் அவளை பார்த்தால் பைத்தியம் போல இருந்தது. மீனு குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தாள். மகளின் சிரிப்பு அவனுக்கு அத்தனை இனிமையாக இருந்தது. சில்லறையை கொட்டியது போன்ற அவளின் சிரிப்பு நிச்சயம் மனதில் பூ பூக்க வைத்தது. கையைக் கழுவிக் கொண்டு மகளை தூக்கி இடுப்பில் வைத்து மகளை செல்லம் கொஞ்சினாள் கொடி.

“என்ன! என்ன ! உங்களுக்கு  அத்தனை சிரிப்பு? யாரு இப்டி சிரிக்கிறது? மீனு குட்டியா? பட்டு குட்டியா?

மீனு அவளின் தோளில் முகம் புதைத்தாள்.

“ம்மா ! ” குட்டி சிணுங்கினாள் .

“இங்க பாரு அம்மா பாரு! யாரு மீனு சொன்னா ?என் செல்லமே! ”

வெட்கத்தில் முகம் காட்டவில்லை மீனு. இவர்களைப் பார்க்க பார்க்க திகட்டவில்லை ரவிக்கு. மகளின் இந்த சிரிப்புக்குக் காரணம் இவள் தான். மனதார மனதில் பாராட்டினான். மீனு மட்டும்தான் அழகா?கள்ளம் கபடம் இல்லாத இவளும்தான் அழகு. எந்த நகையும் இல்லாமல் எப்படி இத்தனை அழகாக இருக்கிறாள்?

அதற்கு பிறகு வந்த நாட்களில் ரவி அவளை நன்றாகவே ரசிக்க ஆரம்பித்தான். இங்கு வந்த புதிதில் சற்று உடல் தேறி இருந்தது போல இருந்தது. இரண்டு வயதில் குழந்தைகளின் வாலுத் தனம்  அதிகமாகி இருக்கும் என்பதை மீனு காட்டிக் கொண்டிருந்தாள். ஒரு நாளைக்கு நூறு முறையாவது மலரை மாடி ஏறி இறங்கி ஓட விடுவாள். அவளும் ஓடுவாள். அவள் படி இறங்குவதற்குள் வேகமாக இறங்கி வந்து அவளை தூக்கி விட வேண்டும். இல்லை என்றால் விழுந்து விடுவாள். பொம்மையை தூக்கி போடுவாள் இவள் சென்று எடுக்க வேண்டும். இப்படியே தேறி இருந்த உடமும்பும் இளைத்து போய் இருந்தது. ஒரு நாள் ஏதோ குனிந்து வேலை செய்து கொண்டு இருந்தாள் . சேலை கட்டி இருந்தவள் இடுப்பு அவன் கண்ணில் பட்டுவிட்டது. உடம்பு இளைக்க ஜிம்மிற்கு போகும் பல பெண்களை அவன் அறிவான். உடல் நலத்திற்கு ஜிம்மிற்கு போவது நல்லதுதான். அது அவனுக்கும் தெரியும். அவன் தான் வீட்டிலேயே செய்பவனாயிற்றே. அதற்காக கண்டதையும் அளவில்லாமல் உண்டு விட்டு அதற்காக  உடல் பயிற்சி என்ற பெயரில் அரட்டை அடித்துக் கொண்டு நேரம் வீணடிக்கும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறான்தான். ஆனால் இவள் தன்னுடைய மகளுக்காக ஓடி ஓடி உழைக்கிறாள் .

“ரொம்ப ஒல்லியாகிட்டியே கொடி . நல்ல சாப்பிடறியா இல்லையா?”

“சாப்பாட்டுக்கு என்ன சார் ? உமாக்காதான் பார்த்து பார்த்து கவனிக்கறாங்களே. நான் அப்படியேதான் இருக்கேன்.உங்களுக்கு தான் அப்படித் தெரியுது.’

“இல்ல கொடி, மீனு உன்னை ரொம்ப வேலை வாங்கறா . ரொம்ப ஓட விடறா. அதுக்கு ஏத்தபடி நீதான் உன்னோட உடம்பை பார்த்துக்கணும்.”

“என்னோட தங்கத்துக்காக நான் போடாம வேற யாருக்கு சார் ஓடப் போறேன். யார் யாருக்கோ எத்தனையோ ஓடியாச்சு.”

சொல்லி விட்டு சிறு புன்னகையுடன் அவனை கடந்து சென்றாள். வெளியில் சிரித்தாலும் அவள் மனம் தவிக்கிறது. அதை அவனால் புரிந்துக் கொள்ள முடிகிறது. இருவருக்குள்ளும் இன்னும் பெரியதாக எந்தப் பேச்சு பரிமாற்றமும் நிகழவில்லை. அவள்தான் அவ்வப்போது தன்னைப் பற்றிக் கூறுவாள். இவன் இன்னும் அவனை பற்றி அவளிடம் எதுவும் சொன்னதே இல்லை. இருந்தாலும் அவளுக்கு ஏதோ ஒன்று என்றால் இவன் மனம் தானே வந்து நிற்கிறது அவளுக்காக.

ஒரு நாள் இவர்களின் சொந்தமாம். தந்தையின் பெரியப்பா என்று ஒருவர் வந்து அவரின் பேரனின்  திருமணத்திற்கு அழைத்து விட்டுப் போனார்.

“கட்டாயம் கல்யாணத்திற்கு போக வேணும். மலரின் கட்டளை.”

“ஏன் உனக்கென இத்தனை ஆர்வம்?”

“ஆமா ! எனனோட மீனு குட்டிக்கு அழகா பட்டு பாவாடை போட்டு தலைல குடுமி போட்டு அதுல பூ வச்சு அலங்காரமா கூட்டிட்டு போக வேணாமா?

“ஹேய் ப்ளீஸ்! எனக்கு இந்த ரிலேட்டிவ்ஸ்  அலர்ஜி. எப்ப அவங்க எல்லாரும் எங்க அம்மாவும் அப்பாவும் வேண்டான்னு ஒதுக்கி வச்சாங்களோ அதுக்கு மேல் போய் அவங்க கிட்ட உறவு கொண்டாட எனக்கு எந்த இண்ட்ரஸ்டும் இல்ல. அதுலயும் எங்க அம்மாவோட ஜாதிய சொல்லித் தானே அசிங்கப் படுத்தினாங்க. இப்ப அவங்க பையன் மட்டும்? நானும் அதே ஜாதில பிறந்தவன் தானே. எல்லாம் பணம். பணம் இருந்தா ஒரு மாதிரி. இல்லாட்டி வேற மாதிரி ” சொன்னவன் முகத்தில் அத்தனை வெறுப்பு. அத்தனை கடுப்பு.

“அப்படின்னு எல்லாரையும் சொல்லிட முடியாது சார் .”

“எல்லாத்துக்கும் காரணம் பணம். அழகு அந்தஸ்து . அதுக்காகத் தானே அந்த பொம்பள?” வார்த்தைகளை முழுங்கி கொண்டான்.

“என்னாச்சு சார். எதுவா இருந்தாலும் மனசுல இருக்கற பாரம் குறையும்.”

“இப்படித்தான் ஏதோ சொந்தகாரங்க கல்யாணம்னு இந்த ஊருக்கு வந்து எங்கப்பா யாரையோ ஒருத்திய நல்ல பொண்ணுன்னு நம்பி எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. கடைசில அவ? அண்ணனுக்கு பதிலா என்னை …சொல்லவே அசிங்கமா இருக்கு. அந்த நேரத்துல உன்ன நினச்சு வந்த பொண்ணுதான் இவன்னு சொன்னா . ஒரு பொம்பள வயத்துல குழந்தையை வச்சுக்கிட்டு பேசற பேச்சா இது? இந்த புள்ளை என்னோடதா இல்ல அண்ணன்  புள்ளையா தெரியாம பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கு. அண்ணண் செத்த ஒடனே வேற கல்யாணம் பண்ணிக்க போறேன்னு இந்த குழந்தையை அனாதையா விட்டுட்டு போய்டா. இவங்க எல்லாம் சொந்தமா? அதுக்கு கல்யாணம் கருமாதின்னு..”

அவன் சொல்லும்போதே சட்டென உரிமையுடன் அவன் வாய் மூடினாள் மலர் .

“தப்பு சார் . நல்ல விஷயம்னு வந்து பத்திரிக்கை கொடுத்துருக்காங்க. நாம எதுக்கு தப்பான வார்த்தை சொல்லணும்?”

அவள் சொல்வது அவனுக்கும் சரியாகவே பட்டது.

“சாரி சார்! உங்களுக்குள்ள இத்தனை சங்கடம் இருக்குன்னு நான் நினச்சு பாக்கல. ஆனா ஒன்னு சார். இந்த புள்ளைக்கு நீங்கதான் அப்பா. பெத்தவங்க எப்படி இருந்தா என்னசார்? அந்த புள்ள என்ன பண்ணிச்சு? அதுக்குன்னு அம்மா அப்பா யாரும் இல்லைன்னா சரி. அதான்  சித்தப்பா நீங்க இருக்கீங்களே? இனிமே நீங்கதான் அதுக்கு அம்மா, அப்பா எல்லாம். நீங்க  அதை  நினைச்சுத்தான் இன்னும் கல்யாணம் கட்டிக்காம இருக்கீங்கன்னா உங்க அண்ணி சொன்ன மாதிரி நீங்களும் தப்பானவரு ஆகிடுவீங்க. ஒரு நல்ல பொண்ணா  இந்த புள்ளைக்கு அம்மாவா  இருக்கற மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்குங்க.”

“அது…வர்றவ எப்படி இருப்பாளோ? எனக்கு இந்த ஊரு, இந்த பொண்ணுங்க கண்டாலே புடிக்கல. வெறுப்பா இருக்கு. எல்லாருக்கும் பணம் தான் தேவை. ஆம்பிள அழகா இருந்தா பின்னாடியே போறாங்க. அதுவே ஒன்னும் இல்லாதவனா இருந்தா யாரும் மதிக்க கூட மாட்டங்க.”

“சார்! நம்மள சுத்தி இருக்கற எல்லாருமே தப்பானவங்க இல்ல. எங்க அப்பா  ரொம்ப மோசமானவர். நாங்க மூணு குழந்தைங்க . என்னை குடி போதைல வித்துட்டாரு. யோசிச்சு பார்த்தா எங்க கல்யாணம் செல்லுமான்னு கூட தெரியல . அதுக்கு அப்புறம் அவரு கூட எத்தனையோ கஷ்டபட்டுட்டேன் .எங்க வீட்டுக்காறரு இறந்த ஒடனே எங்க மாமியார் வேற ஒருத்தனுக்கு என்ன வித்துடனுன்னு பார்த்தாங்க. அப்ப தப்பிச்சு வந்தபோதுதான் உங்கள் பார்த்தேன்.

என்னோட புருஷன், அவங்க அம்மா, தங்கச்சி எல்லாருமே ஒரு மாதிரி கெட்டவங்கதான். என்ன பார்த்து யாரும் சாப்பிட்டியான்னு கேட்டதும் இல்ல. எனக்கு பசிக்குன்னு யோசிச்சதும் இல்ல. ஆனா கடவுளா பார்த்து  மது மேடமையும் உங்களையும் எனக்கு காட்டினாங்க. நானும் உங்கள மாதிரிதான் இந்த உலகமே தப்புன்னு நினச்சுகிட்டு இருந்தேன். உங்கள மாதிரி ஆளுங்கள பார்த்ததுக்கு அப்புறம்தான் நான் நெனச்சது தப்புன்னு புரிஞ்சுது. நீங்க சொல்லற மாதிரி எல்லா பொண்ணுங்களும் மோசம் இல்ல  சார்.

நான் எங்கப்பா வார்த்தைக்கு அந்த குடிகாரனை கட்டிக்கிட்டு கஷ்டப்பட்ட மாதிரி நிறைய பொண்ணுங்க புருசனுக்கு உண்மையா இருந்துகிட்டு, குடிகாரனோட சகிச்சுக்கிட்டு வாழ்ந்துகிட்டுதான் சார் இருக்காங்க.”

தன்னுடைய உலகத்தில் மட்டுமே வாழ்ந்துக் கொண்டிருந்தவனுக்கு இவளின் பேச்சில் உலகம் விரிந்தது .

 

காதல் தொடரும் ..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்