

KKEN-36
சட்டென அவள் தன்னுடைய முந்தானையால் அவனின் காலைத் துடைக்கவும் திகைத்தவன் காலைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.
“ஏய்! நீ என்ன பண்ணற?”
“அது இல்ல சார்! உங்க காலில் ஏதோ ஒருன்னு கருப்பா இருந்துச்சு. அதான் துடைச்சேன். “
அவளின் வெள்ளேந்தியான பதில் அவனுக்கு என்னவோப் போல இருந்தது.
” அதுக்குன்னு புடவையாலையா துடைக்கறது? சொன்னா நானே செய்துப்பேன் “
“அதுக்கு என்ன சார்? எங்க வெற்றிக்குக்குன்னா செய்ய மாட்டேனா? உங்க காலு மாதிரி தான் அவன் காலும் வெளுப்பா இருக்கும் . ஆளு கொஞ்சம் கலரு கம்மிதான். ஆனா கை காலு எல்லாம் பளிச்சுன்னு இருக்கும். அவனுக்கு தினம் படுக்க போகும்போது காலை தேச்சு கழுவி சுத்தமா வைச்சுக்கணும். நான்தான் சின்ன பிள்ளையா இருக்கும்போது அவனுக்கு பழக்கி விட்டேன். அதே மாதிரி தினமும் ராத்திரிக்கு ஒரு தடவை பள்ளு விளக்கிடனும். இல்லாட்டி அவனுக்கு கோபம் வந்துரும்.
புவியோட பாப்பாவுக்கு அதே மாதிரி எல்லாம் சொல்லிக் கொடுத்து தான் வளர்த்தான். என்னாலதான் எல்லாமே கெட்டுப் போச்சு. இன்னிக்கு அவன் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம், அப்பா புவி எல்லாரும் ஆ ளுக்கு ஒரு பக்கமாய் நிக்கறோம். எல்லாம் என்னாலதான்.”
பொதுவாக ரவி யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை. அதிலும் குறிப்பாக பெண்களிடம். அதிலும் முக்கியாக சொந்த விஷயங்கள். இருந்த போதிலும் இவள் சொல்லும் போது கேட்டுக் கொண்டான் .
எத்தனையோப் பெண்கள் அவனைச் சுற்றி வரும்போது பேசுவார்கள் தான். என் தந்தை இப்படி, என்னோட பேமிலி பேக் கிரௌண்ட் அப்படிm நான் இங்கு படித்தேன். அங்கு படித்தேன், நிறைய ஆண்கள் என் பின்னாலேயே சுற்றினாரங்கள். இன்னும் எத்தனை எத்தனையோ. “
“ப்ளீஸ்! எனக்கு இப்ப டைம் இல்ல.”மூஞ்சியில் அடித்தது போல சொல்லி விட்டு நகர்ந்து விடுவான். தொழில் செய்யும் காலம் முதல் இல்லை. கல்லூரி காலம் முதலே இவன் அப்படித் தான் .
‘ஆமா! இன்னிக்கு இப்படி மேல இடிச்சு இடிச்சுப் பேசுவாங்க. நாளைக்கே ஏதாவது பிரச்சனை வந்தா நம்மள மாட்டி விட்டுவாங்க’ என்று அவன் மனதில் வந்த எண்ணம் தான் காரணம். தொழில் செய்ய ஆரம்பித்த காலத்தில் இருக்கவே இருக்கிறது ஹனி ட்ராப். எதுக்கு வம்பு! ஓட்டம் பிடித்து விடுவான். என்ன மிஞ்சிப் போனால்,” நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா?” என்பார்கள். அதை நான் என் மனைவியிடம் நிரூபித்துக் கொள்வேன் என்பான். ஆனால் பொறுமையாக ஒரு பெண்ணின் முகம் பார்த்து அவள் சொல்வதை எல்லாம் கேட்பது இது தான் அவனுக்கு முதல் முறை.
“அசோ சார். நான் ஒரு மண்டு . பாவம் ஏதோ புக் படிச்சுக்கிட்டு இருந்தவரை தொந்தரவு பண்ணிட்டு என்னோட கதையைப் பேசிகிட்டு இருக்கேன். இந்தாங்க. நீங்க இந்த தாத்தா எழுதின புஸ்தகத்தை படிங்க. நானும் போய் பாப்பாவுக்கு பஞ்ச தந்திர கதைகள் படிச்சு காட்டறேன்.” குழந்தையை அவனிடம் இருந்து தூக்கிக் கொண்டாள்.
குழந்தை, கொடி இருவரிடத்தும் பேபி க்ரீம் வாசம் வந்தது.
“பாப்பாவுக்கு மசாஜ் முடிச்சுட்டியா?”
“ஓ! முடிச்சுட்டேனே “
“என்ன ஆச்சு சார்?’
“இல்ல! பாப்பாகிட்ட வாசனை வந்தது அதான்.”
“”சார் எங்க வெற்றி கடை திறந்ததும் நான் பாப்பாவுக்கு வேணும்கறது எல்லாம் அவன்கிட்ட போய் தான் வாங்கிட்டு வருவேன் . இப்பவே சொல்லிட்டேன்.”
“நாம ரெண்டு பேரும் பெரிய கடைக்குப் போய் கையில வண்டி தள்ளிக்கிட்டு அதுல பாப்பாவை உக்காத்தி வச்சுக்கிட்டு டூர் போய் மாமா கடைல சாமான் வாங்குவோமா ?”
‘அவளுக்கு இது எல்லாம் பெரிய கனவு போல’
அவனுக்கு அவள் பேச்சில் புரிந்தது.
“உனக்கு எப்பவுமே வெற்றி பத்தி மட்டும்தான் நினைப்பா கொடி ?”
“இல்லையே! இதோ எங்க மீனு பாப்பா இருக்காளே. வெற்றி ஒரு பக்கம், மீனு பாப்பா ஒரு பக்கம். இவங்களைத் தவிர என்னோட வாழ்க்கைல வேற நினைக்க என்ன இருக்கு?”
“என்னை பத்தி? “
மனதிற்குள் அவளிடம் கேட்க ஆசையாக இருந்தது. ஏனோ முதல் முறையாக ஒரு பெண் என்னைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று அவன் மூளை யோசித்தது.
இந்த நினைப்பு வந்ததும் அவள் முகம் பார்க்க முடியாதவன் வாரன் பஃபே எழுதிய,
“10 கோல்டன் ப்ரின்ஸிபல்ஸ் ஆப் வாரன் பஃபே” வை படிக்கத் தொடங்கினான்.
இனி என்ன?
கொடி மலர் தான், “மின்னல் ஒரு கோடியாக” அவனின் உயிர் தேடி வந்து பாட்டு பாட ஆரம்பித்தாள். அவள் தொட்ட இடம் குறுகுறுத்தது.
இனிமையான ரசனைகளுடன்,மெல்லிய புன்னகையுடன் உறங்கிப் போனான் ரவி .
மலருக்கு ரவி பற்றி எல்லாம் எந்த எண்ணமும் இல்லை. அவளைப் பொறுத்த வரையில் இந்த உலகத்திலேயே இருக்கும் ஜீவன்கள் , மீனுக்குட்டி , வெற்றி மட்டும்தான். அப்படித்தானே ரவி நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அது அப்படி இல்லை என்று காட்டிக் கொண்டிருந்தாள்.
தோட்டத்தில் நின்று பாடிக் கொண்டிருந்தாள்.
“பூ பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா நீங்க பள பளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா ?”
கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அதன் அர்த்தமே புரியவில்லை. ப்ராபிட் அண்ட் லாஸ் ஸ்டேட்மெண்டு பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு முதலில் அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
“நீ இப்ப பாடினியே அது என்ன ரைம்ஸ்?”
“அது ரைம்ஸ் இல்ல சார். பழைய காலத்து சினிமா பாட்டு. வாலி ஐயா எழுதினது”
“அது என்ன சொன்ன? கொக்கா மொக்கா ? வாட் வாட் இஸ் தட் வர்ட்?”
அவன் சொல்வதில் லேசாக சிரித்து விட்டு அது சொக்கா சார். சொக்கானா ட்ரெஸ்”
“என்ன மீனு இது? உங்கப்பாவுக்கு சொக்கானா கூட என்னன்னு தெரியல?” மகளிடம் கிண்டலடித்துக் கொண்டே சென்று விட்டாள் .
“இது என்ன போகிற போக்கிலே நம்மையே கிண்டல் பண்ணறா ?’ இடுப்பில் கை வைத்துக் கொண்டு இருபுறமும் மண்டையை ஆட்டி விட்டு இடம் நகர்ந்தான் ரவி .
இன்னொரு நாள் காலையில் இவன் காபி குடித்து கொண்டிருக்கும்போது , குழந்தைக்கு பறவைகளை காட்டிக் கொண்டிருந்தாள்.
“அசோ மீனு பாப்பா அண்டங் காக்கா நம்மள பார்த்துடுச்சே! மூணு தடவை தலைல கொட்டிக்கோ” லேசாக குழந்தையின் தலையில் கொட்டினாள் . குழந்தை இவளுக்கும் கொட்டியது.
அவள் இடுப்பில் இருந்து இறங்கி வந்து அப்பாவுக்கும் கொட்டினாள் .
“இது என்ன புது பழக்கம் மீனு?”
“ம்மா ! ம்மா !”
“இது என்ன புதுசா குழந்தைக்கு அடிக்கற பழக்கம் வந்துருக்கு? “
“அதுவா அண்டங் காக்கா பார்த்தா (கு) கொட்டிக்கணுமில்ல?”
“அப்டின்னா?
“அதோ இருக்கே “
“ஓ ! ஓகே !”
வேறு ஒரு நாள், “இங்க பாரு மூக்கு கொத்தி. அதோ பாரு தேன் சிட்டு.” ஏதேதோ காட்டிக் கொண்டிருந்தாள். அவள் அப்படித்தான். எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டாள். அணில் வந்து அவள் கையில் இருந்து போட்டுக் கடலை வாங்கி தின்னும். கிளியும் இவள் கொடுப்பதை பயமில்லாமல் தின்று விட்டு செல்லும்.
“மீனுக்கு அவ்ளோ புடிக்குன்னா நாம் போர்ட்ஸ் வளக்கலாம் .”
அவன் மீனுவுக்காகச் சொல்லவில்லை.
‘அதெல்லாம் தப்புங்க சார். அதது சுதந்திரமா இருக்கணும். நம்மள புடிச்சு கூண்டுக்குள்ள வச்சா எப்படி இருக்கும்? எனக்கு அந்த கஷ்டம் தெரியும் சார். பாவம் அதுங்களாவது சந்தோசமா இருக்கட்டும்.”
வியப்பாக பார்த்தான் அவளை.
வேறு ஒருநாள் குழந்தையின் அறைக்குச் சென்று பார்த்தான். அவள் குழந்தைக்கு குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள்.
லேசாக கதவை தட்டி விட்டு லேசாக கதவை திறந்து பார்த்தான்.
தலை தூக்கிப் பார்த்தவள்,
“குழந்தையிடம் அப்பா வந்துடாங்களா?” தலை கோதிக் கேட்டாள் . இருந்த சில பற்களை காட்டி சிரித்தாள் மீனு.
“ஐயா! அங்க பிள்ளைக்கு தூவாலை வச்சுருக்கேன். அதால புடிச்சு பிள்ளையை அங்கிட்டு தூக்கிட்டு போங்களேன்,”
“அதெல்லாம் என்னால முடியாது” அவள் தண்ணீர் படாமல் இருக்க புடவையை லேசாக தூக்கி விட்டிருந்தாள். அதில் அவளின் வாழைத் தண்டு கால்கள் பளிச்சென்று தெரிந்தது. அதில் ரவி சற்று பேஜாராகிவிட்டான்.
“சரி! சரி! நானே வரேன்”
குழந்தையை மெதுவாக தோளில் போட்டுக் கொண்டு வழுக்கி விடாமல் ரொம்ப கவனமாக மெதுவாய் அடி எடுத்து வந்தாள் . அப்போதும் லேசாக வழுக்கி விட அவன் சட்டை காலரை இழுத்துப் பிடித்துக் கொண்டாள். சாரி சொல்லுவாள் என்று அவன் எதிர்பார்த்தான். அவள் எங்கே சொன்னாள்?
இப்போது அவனேக் குழந்தையை வாங்கிக் கொண்டான். அதில் அங்கே இங்கே என்று கை பட்டு விட்டது. அதைப் பற்றி எல்லாம் அவள் கவலை படவில்லை. இல்லையில்லை அதெல்லாம் அவளுக்குத் தெரியவே இல்லை. அவன் குழந்தையை வாங்கிக் கொண்டதும் மெதுவாக குழந்தையிடம் பேசிக் கொண்டே உடல் துடைத்து, பவுடர் போட்டு அழகாய் மை இட்டு திருஷ்டி கழித்தாள் .
“ஐயா! நீங்க பிள்ளையோட இருக்கீங்களா? பிள்ளைக்கு சாப்பாடு கொண்டு வரேன்.”
“இப்ப எதுக்கு சாப்பாடு?”
“பின்ன! பிள்ளை குளிச்சுருக்கில்ல . பசிக்காது?” சொல்லி விட்டு போய் விட்டாள் . இவனுக்கு குழந்தையுடன் தனியே இருந்து எல்லாம் பழக்கம் இல்லை. ‘சீக்கிரம் வா!’ மனதிற்குள் அவளை அழைத்துக் கொண்டிருந்தான்.
அதுவும் சில நொடிகள் தான். பிள்ளையின் மழலை அவனை வேறு உலகத்திற்குள் அழைத்துச் சென்றிருந்தது.
பெரிய கிண்ணத்தில் பருப்பு சாதம் போட்டு சிறிது ரசம் போட்டுக் கொண்டு வந்திருந்தாள் . உருளைக் கிழங்கு அதோடு கலந்தே கொண்டு வந்தாள் . நெய்யின் வாசம் மூக்கைத் துளைத்தது.
அவள் வந்ததும் , அவள் மீது தாவிக் கொண்டாள் மீனு.
“என்ன? பாப்பாவுக்கு தொப்பை பசிக்குதா ? எங்கம்மாவுக்கு தொப்பை பசிக்குதா? அடி என் செல்லமே! ” கொஞ்சி கொஞ்சி அவள் ஊட்டியதில் விரைவாகவே உண்டு முடித்து விட்டாள் மீனு.
‘எங்க அம்மாவும் இப்படித் தான் ஊட்டி இருந்திருப்பாங்களோ ?’
அன்னையின் நினைவு அவனுக்கு வந்தது.
இவர்கள் சிறு வயதில் இருந்த போது அவ்வளவு எல்லாம் வசதி இருந்ததில்லை. முதலில் எல்லாம் இந்தியாவில் தான் இருந்தார்கள். பிறகு அப்பாவின் நண்பர் மூலம் தான் சிங்கப்பூருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு அறை , ஒரு சிறு கிட்சன், ஒரு குட்டி ஹால். அப்பா அங்கே படுத்துக் கொள்வார்.சூர்யாவுடன் . அம்மாவும் இவனும் உள் அறையில் படுத்துக் கொள்வார்கள் .
அம்மாவுக்கு அந்த நாட்கள் வரும்போது மட்டும் இவனும் அப்பாவுடன் இருப்பான். அம்மாவுக்கு தனிமை கொடுக்கணும். அது அம்மாவுக்கானத் தேவை. அப்பா சொல்லிக் கொடுத்தார். புரிந்தது. பிள்ளைகள் சற்று தலை எடுத்ததும் வீட்டு வேலைகளையும் சேர்ந்தே செய்தார்கள். அது அம்மாவுக்கான சுதந்திரம் . அதுவும் புரிந்தது. இவளைப் பார்த்தவுடன் என் அம்மாவின் நினைவு வருகிறது. என் அன்னை எத்தனை நல்லவள்! இத்தனை வயது ஆனாலும் என் இன்னும் அறுபது என்பது வயது ஆனாலும் எனக்கு என் அன்னையின் நினைவுகள் இனிப்புதான். ஆனால் மீனு தான் பாவம். அவளுக்கு அவளின் அன்னைப் பற்றி தெரிந்து விடவேக் கூடாது. அதற்கு இவளுக்கு கொடி போல ஒரு நல்ல அன்னை வேண்டும். கொடி போலவா? அல்லது கொடியேவா ?
தன்னுடைய யோசனைகளை ஒரு புறம் ஓரம் தள்ளியவன் ,
“குழந்தை கொஞ்சம் ஒடம்பு தேறி இருக்கா. நீ நல்லாத்தான் பார்த்துக்கற. ரொம்ப தேங்க்ஸ் கொடி “என்றான் .
“இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ்? என்னோட வேலையத் தானே நான் செய்யறேன். இப்படித் தான் அவள் சொல்லுவாள் என்று ஆத்தரும் ஹீரோவும் காத்திருக்க, சொன்னாளே வார்த்தை !
“அசோ! என்ன இப்டி சொல்லிடீங்க. குழந்தைக்கு இப்டி கண்ணு வச்சுடீங்களே சார்!”
“நாய் கண்ணு நரிக் கண்ணு ஊரு கண்ணு உலக கண்ணு உங்க அப்பா கண்ணு எல்லாம் போகட்டும்.” ஊட்டிய கப்பை இந்த பக்கமும் அந்த பக்கமும் சுற்றி திருஷ்டிக் கழித்து குழந்தைக்கு கழுத்து, வாய் எல்லாம் சுத்தம் செய்து விட்டாள் .
அவள் செய்கை அவனுக்கு கிண்டலாக இருந்தது.
“நான் அவளுக்கு அப்பா மட்டும் இல்ல. உனக்கு முதலாளி கூட. எங்கிட்ட எப்படி பேசணுன்னு தெரிஞ்சுக்க.”
அவன் சொன்னதற்கு அவள் என்ன பதில் சொல்லுவாள் ? சாரியா ?
காதல் தொடரும் ..

