
கண்மணியே காதல் என்பது-20
KKEN-20
அவளை விட்டு இனி தன்னால் இருக்க முடியாது என்பது அவனுக்கு தெளிவானது. மீண்டும் பழைய சிரிப்புடன் வெற்றியை பார்த்த வித்யாவை பற்றிச் சொல்லவே வேண்டாம்.
காலம் அவர்கள் இருவரையும் சந்தோசமாக இருக்க விட்டு விடுமா?
அடுத்த இரு தினங்களில் அவளிடமிருந்து காலையிலேயே அழைப்பு வந்தது. அவசரமாக கிளம்பி ஓடினார்கள். அவள் தோழி காதல் தோல்வியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாள் . பார்க்க ஓடினார்கள். நிறைய போலீஸ் நின்றிருந்தார்கள். காலேஜ் ஹாஸ்டல். ஊரில் இருக்கும் அவள் பெற்றோர் இன்னும் வந்திருக்கவில்லை. இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்கள். யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. நெருங்கிய தோழிகளிடம், காலேஜ் வார்டன், செக்யூரிட்டி என்று அனைவரையும் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வகையில் வித்யாவிடமும் விசாரித்தார்கள். நிறைய பேர் சொன்ன தகவல் அவளுக்கு எந்த காதலனும் இல்லை என்றே. பெரிய கண்களும், குண்டு கன்னங்களுமாய் அழகா இருப்பாள். அவளின் வெள்ளை சருமமும், ரோஜா பூ இதழ்களும் எந்த மேக்கப் சாதனைகளுக்கும் தேவையே இல்லை என்று சொல்லும். இப்போதோ அதற்கு நேர் மாறாக நாக்கு வெளியில் தொங்கி விழி பிதுங்கி பார்ப்பதற்கே கோரமாக இருந்தாள் .
வித்யா அன்று விடுப்பு எடுத்துக் கொண்டாள் .
அந்த பெண்ணின் சொந்தங்கள் வரும் விஷயம் பெரிதாகவில்லை. அவர்கள் வந்ததன் பிறகு, நிலைமை அப்படியே தலை கீழாக மாறியது. தங்கள் பெண்ணிற்கு எந்த காதலும் இல்லை, மகளை இந்த கல்லூரியில் இருப்பவர்கள் தான் ஏதோ செய்து விட்டார்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கல்லூரியில் இருந்த பெண்களும் அமர்ந்து தர்ணா செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஏனெனில் கடந்த ஒரே மாதத்தில் இது மூன்றாவது தற்கொலை. ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒவ்வொரு காரணம் . முதல் இரு பெண்களின் தற்கொலைகளை எளிதாக மூடி மறைத்தவர்களுக்கு இந்த மூன்றாவதை மறைக்க முடியவில்லை. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படத் தானே வேண்டும். மறைக்க முடியவில்லை. லோக்கல் இன்ஸ்பெக்டரால் சமாளிக்க முடியவில்லை
கமிஷனரிடம் இருந்து அவசரமாக அழைப்பு வரவும் வேகமாகச் சென்று பார்த்தாள் .
விறைப்பாக சல்யூட் வைத்தவளுக்கு கேஸை பற்றிய விவரங்களை சொல்லி விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கட்டளை இட்டார்.
மது அங்கே வந்த போது கூட்டம் குவிய ஆரம்பித்தது. சிறிய போராட்டமாக ஆரம்பித்தது மதியத்திற்குள் மிக பெரிய விஷயமாக மாறியது. மதுவுமே அவர்களை அடக்க முடியாமல் சிரமப்பட்டாள்.
போஸ்ட் மார்ட்டம் செய்து வந்த உடலை பெற்றோர் வாங்க மறுத்து விட்டனர். மதுவுக்கு அவர்களின் நிலைமை புரிந்தது. இருந்தாலும் அவர்களுக்குசாதகமாக பேச முடியாது. இது நிச்சயம் சாதாரண விஷயம் இல்லை. இருப்பினும் கல்லூரி நிர்வாகமும் போலீசும் சேர்ந்து பேசி அவர்களை சமாதானப்படுத்தினர்.
பெற்றவள் மயக்க நிலைக்கு வந்திருந்தார். பெண்ணின் உடல் வந்ததும் , அயோ அம்மா என்று அவர்கள் அடித்துக் கொண்டு அழுதது, பரிதாபம்தான். பார்த்துக் கொண்டிருந்த காவலர்களுக்குமே கஷ்டமாகத் தான் இருந்தது. அப்போது வெடித்த கலவரத்தை இவர்களால் அடக்க முடியவில்லை. தண்ணீர் அடித்து தான் கூட்டத்தை விலக்கினார்கள்.
இறுதியில் அனைவரும் தினரிக் கொண்டிருந்த போது பெண்ணின் அன்னை எடுத்த முடிவுதான் அனைவரையும் அமைதிப் படுத்தியது.
“நீங்க எல்லாரும் எம் பெண்ணுக்காக இப்டி வந்து நிக்கறதே எங்களுக்கு போதும். யாரு என்ன பண்ணாலும் போன உசுரு வர போகறதில்ல. யாரு என் பொண்ணோட சாவுக்குக் காரணமோ அவங்கள புடிச்சு தண்டனை வாங்கி குடுங்க. மதுவிடம் கை எடுத்து கும்பிட்டுக் கொண்டே பேசியவர் அப்படியே மயக்கமடைந்தார் மீண்டும் . மனைவியை தொடர்ந்து கணவனும் ஒப்புதல் அளிக்கவே அவர்களின் சொந்த ஊருக்கு அந்த பெண்ணின் சடலம் கொண்டு செல்ல பட்டது.
வீட்டிற்கு வந்த மதுவுக்கு நிச்சயமாக அது தற்கொலை இல்லை என்பது தெரியும். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வேறு சொல்லியது. இவள் மனம் வேறு சொல்லியது. ஏதோ எங்கேயோ தப்பு. என்ன? அன்று இரவு அந்த சிறு பெண்ணின் முகமே வந்து வந்து சென்றது. இது இந்த பெண்ணின் வழக்கோடு முடிய கூடிய விஷயம் இல்லை. மற்ற பெண்களின் வாழ் க்கையும் சேர்ந்த விஷயம்.
தோழியின் இறப்புக்குச் சென்று விட்டு வந்த வித்யா ஆட்டோவில் வரும் போது வழி நெடுகிலும் அழுது கொண்டே தான் வந்து கொண்டிருந்தாள் . அவளை சமாதான படுத்த வேண்டும் என்பதையும் தாண்டி வெற்றியின் மனதில் வேறு ஒரு சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. மதுவின் மனதில் ஓடியதே தான் இவன் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது.
வித்யா மூக்கு உரியும் சத்தத்தில் சிந்தனையை மாற்றிக் கொண்டான்.
“மேடம் அழாதீங்க மேடம். வெளில யாராவது பார்த்தா என்ன தப்பா நினைச்சுப்பாங்க. எத்தனையோ கெஞ்சி பார்த்தான். ம்ம் .அவள் அழுகை நிற்கவே இல்லை. அவளுக்கு என்ன தேவை? புரிந்து கொண்டான். வண்டியை ஓரம்கட்டி விட்டு அவள் அருகே அமர்ந்து அவள் முகத்தை தோளில் சாய்த்துக் கொண்டான். கைகளை அழுத்தி பிடித்துக் கொண்டான். மனம் ஓரளவு சமாதானம் அடைந்தது.
டேய் வெற்றி தோளில் சாஞ்சுருக்கறவ தலைல கல்ல தூக்கி போடப்போறா. தயாரா இரு……
இதோ வெற்றி தன்னுடைய புது வாடகை வீட்டில் பால்கனியில் நின்று கொண்டிருக்கிறான். அவனுடன் இப்போது யாரும் இல்லை . தந்தை, தங்கையுடன் பெரிய பிரச்சனையாகி வீட்டை விட்டு வெளியே வந்திருந்தான். மலர் இப்போது ரவியின் வீட்டில் அவன் குழந்தையை பார்த்துக் கொண்டிருக்கிறாள். வித்யா? அவனின் உயிர் அவன் அவளுடன் இருக்க வேண்டாம் என்று வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டாள் . இதோ இப்போது இங்கே நின்று கொண்டிருக்கிறான். காலையில் மலரின் உதவியுடன் பால் காய்ச்சினான் . காய்ச்சிய பாலை அவர்கள் இருவர் மட்டுமே குடித்தார்கள். இவர்கள் இருக்கும் ப்ளோரில் இரு வீடுகள் தான். எதிரில் இருக்கும் வீடு பூட்டி இருந்தது. அங்கும் யாரோ லீசிற்குத் தான் வருவார்கள் போலும்.
இன்னும் யாருடைய வாழ்வும் செட்டில் ஆன மாதிரி தெரியவில்லை. வெற்றியின் காதல் விவகாரம் அவன் தந்தைக்கு தெரிந்ததற்கு பிறகு என்ன நடந்தது? பார்க்கலாம்.
அன்று தோழியின் இறப்பிற்கு சென்று வந்தவளுக்கு மனம் ஆறவே இல்லை.
“அவ எவ்ளோ அழகா இருப்பா தெரியுமா? தமிழ் பொண்ணுதான். பாக்க கேரளா பொண்ணு மாதிரி அவ்ளோ அழகா இருப்பா . எத்தனை பசங்க அவ பின்னாடியே சுத்தி இருக்காங்க தெரியுமா? எங்க ஊரிலேயே நாந்தான் முதல்ல பெரிய படிப்பு படிக்க வந்துருக்கேன். பெரிய வீடு கட்டி அம்மா அப்பாவை பெரிய சோபால உக்காத்தி வைக்கணும். கூலி வேலை செஞ்சவங்க சீக்கிரமா முதலாளி ஆகணும் இப்டி எவ்ளோ ஆசையோட இருந்தா தெரியுமா? அவங்க கீழ் ஜாதி காரங்களாம். அதனால அவங்க ஊருல, சேரில் உக்கார கூடாதாம். எப்பவும் ஓரமா கை கட்டித் தான் நிக்கணுமாம். அவ அம்மா அப்பாவை சோபால உக்காத்தி வைக்கணும். அதுதான் அவளோட பெரிய கனவே. அவ சொன்ன போது முதல்ல நாங்க எல்லாம் சிரிச்சோம். அப்புறம் அவ விவரிச்ச போது தான் எங்களுக்கே புரிஞ்சது.அந்த பொண்ண போய் இப்டி பண்ணிட்டாங்களே! கண்டிப்பா அவ தற்கொலை பண்ணி இருக்க மாட்டா . ஊருல அவ எத்தனையோ கொடுமை எல்லாம் பார்த்துதான் வளர்ந்துருக்கா. அவளுக்கு மன உறுதி அதிகம்.
“ஏன் மேடம். உங்க காலேஜு ஒனறு …”
“அவரு ரொம்ப நல்லவரு தான் வெற்றி. நம்ம தொழில் துறை மந்திரி அருணாச்சலம் சார் இருக்காருல்ல. அவரோட காலேஜுதான் இது. அவரு கூட ரொம்ப நல்லவருதான் வெற்றி. பேரு தான் அவரோட காலேஜு. ஆனா அவரு எப்பவும் வந்ததே இல்ல. அவரு பையன்தான் சில சமயம் வருவாரு”
“பையனா?”
“ம்! நம்ம அதிபன் அருணாச்சலம். அவரோட கம்பனிலதானே இப்ப நான் வேலை செய்யறேன்”
“அப்ப அன்னிக்கு நான் வராத போது அவருதான் உங்கள கொண்டு வந்து வீட்டுல விட்டதா?”
“ம்! ஆமாம் “ எப்போதும் காதணி ஆட அவள் ஆமாம் சொல்வது அவனுக்கு பிடிக்கும். இந்த ஆமாம் நிச்சயம் பிடிக்கவில்லை. எனக்கும்தான்.
“வெற்றிக்கு மனதில் எங்கோ ஏதோ ஒரு மூலையில் சுரீரென்றது. ஏதோ தவறாக இருக்குமோ?”
மனதின் எச்சரிக்கை ஒலியை நாம் அலட்சிய படுத்தலாமா ? இல்லை முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? வெற்றிக்கு அது மிகவும் முக்கியம்தான். ஆனால் வருங்காலத்தில் வித்யா செய்ய போகும் சிறு சிறு தவறுகளால் எல்லாமே தலை கீழாக மாறி விடுமே ?
விதி …… வலியது…..
அதற்கு பிறகு வந்த நாட்களில் அவர்களின் காதல் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதற்கு கூட முடியாதவனாகிப் போனார் விஜயன். எல்லாம் அதிபனின் கைவண்ணமே . விஜயன் தற்போது இருக்கும் வீட்டிற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் அதிபனின் புது கன்ஸ்ட்ரக்ஷன் ஆபிஸ் வர போகிறது. ஏற்கனவே இவர்களின் அருகில் இருந்த வீட்டை பேரம் பேசி வாங்கி விட்டார்கள். விஜயனுக்குத்தான் இந்த இடத்தை விட்டு நகர இஷ்டமில்லை. வாழ்க்கையில் வெற்றி கண்டு முதன் முதலில் வாங்கிய வீடு. காயத்ரிக்காக வாங்கிய வீடு. தன்னை மட்டுமே நம்பி வந்தவளுக்காக வாங்கிய வீடு. அப்போது கையில் இருந்த பணத்தில் சிறியதாக கட்டி பிறகு பணம் வரவ பெரியதாக்கி இருந்தார்கள். இன்னும் இந்த விஷயத்தைப் பற்றி வீட்டில் அவர் வாயே திறக்கவில்லை. இது தன் மனம் கவர்ந்தவளின் வீடு என்ற விஷயத்தை அதிபனும் அறிந்திருக்கவில்லை. ஏனெனில் இன்னும் அவனுக்கு எடுத்துச் செல்லும் அளவிற்கு விஷயம் பெரியதாக இல்லை. அவனுக்கு கீழ் இருக்கும் ஆட்களே இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் முடித்து விடுவார்கள். அதிபனுக்கு தெரிந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? தான் யார் என்பதை காட்ட வீட்டு பெண்ணை தூக்கிச் சென்று கட்டிலில் வீரத்தை காட்டி இருப்பான். அப்படி ஒன்று நடக்குமா?
அதிபனின் அலுவலகத்தில் வித்யா வேலை பார்க்கவும் அடிக்கடி சந்தித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். பல பெண்களை கட்டிலில் வீழ்த்தியவனுக்கு ஏனோ மனதின் காதலை வித்யாவிடம் சொல்ல முடியவில்லை.
அவன் வீரத்தை காட்டிய பெண்களில் நம் மதுவும் அடக்கம்.
அந்த மூன்று பெண்களின் கொலை வழக்கு சம்பந்தமாக சில சமயங்களில் அவள் அதிபனை சந்திக்க வேண்டி இருந்தது. தனக்கு எதிராக அவள் ஆதாரம் சேமித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவனும் அறிந்து கொண்டான். வழக்கம் போல அழைத்து மிரட்டினார்கள்தான். அவள் மசியவில்லை.
காதல் தொடரும்….


