
KKEN-19
அன்னையிடம் தன்னுடைய ஆதங்கத்தைக் கொண்டிருந்த மகளிடம் எதுவுமே புரியாத அன்னை ,
“இரு! இரு! என்ன நீ உன் இஷ்டத்துக்கு ஏதேதோ பேசிக்கிட்டே போற ? முதல்ல என்ன நடந்தது ? உன்னோட பரீட்சைக்கு அப்புறம் நீ என்ன பண்ணப் போற? என்ன ஐடியாவுல இருக்கன்னு உங்க அப்பா கேட்டாரு. இது தான் சரியான சமயம்னு நான் உங்கப்பாகிட்ட உங்க விஷயத்தை சொன்னேன். சரி அப்படியே எதுவும் முடிவு பண்ண வேண்டாம் எல்லாரும் சேர்ந்து யோசிச்சு முடிவெடுக்கலான்னு தான் முடிவெடுத்தோம். வேற என்ன? நீ சொல்லறது எதுவுமே எனக்குப் புரியலையே ?”
“உண்மையிலேயே உங்களுக்கு ஒன்னும் தெரியாதா? இல்லை என்னை ஏமாத்தறீங்களா?”
“உன்ன ஏமாத்தி எனக்கு என்ன ரிசல்ட் வர போகுது? நம்ம வீட்டுல என்னிக்குமே இந்த மறைச்சு வச்சு பேசறது கிடையாது. மறந்து போச்சா?”
“சாரி மாம்! அதெல்லாம் முன்னாடி. இப்ப உங்க புருஷன் அப்டி இல்ல.”
ஏனோ இந்த வார்த்தையை அன்னையின் முகத்தைப் பார்த்து நேராகக் கூற முடியாதவள் கைக் கட்டிக் கொண்டு முகம் திருப்பினாள் .
“உங்க அப்பா எப்பத்துலேர்ந்து எனக்கு புருஷனா மட்டும் மாறினாரு ?”
“உங்க புருஷன சொன்னா உங்களுக்கு கோபம் வருதில்ல? அதே மாதிரிதான். என்னோட புருஷன பத்தி சொன்னா எனக்கும் கோபம் வரும்.”
“உன்னோட புருஷனா? என்ன சொல்லறியோ கொஞ்சம் தெளிவா பேசு.”
“அப்பா வெற்றியோட அப்பாவை கூப்பிட்டு புகார் வாசிச்சுருக்கார். அவங்க அப்பா அவனை பெல்டால் அடிச்சு., எழுந்துக்க முடியாம கிடக்கிறான். வாட் இஸ் திஸ் மாம்?”
“சரி வித்யா! அவங்க அப்பா அவனை அடிச்சா அதுக்கு நாம என்ன பண்ண முடியும்?
“என்ன மாம் நீங்களும் இப்படி பேசறீங்க ?”
“இல்ல வித்யா ! இந்த விஷயத்தை பத்தி எனக்குமே எதுவும் தெரியாது. எதுவா இருந்தாலும் அப்பா வரட்டும் அவருகிட்ட பேசலாம். ”
“ஒன்னுமே தெரியாத மாதிரி பேசாதீங்க மாம் ! அப்பா என்ன செஞ்சுருக்கணும்? முதல்ல என்ன கூப்பிட்டு பேசி இருக்கனும். ஏன் பண்ணல?”
“எனக்கும் பதில் தெரியல. எப்படி இருந்தாலும் அப்பாகிட்ட நாம சேர்ந்தே பேசலாம். சீக்கிரமா ப்ரெஷ் ஆகிட்டு வா. சாப்பிடலாம்.”
“இல்லம்மா! அவன பார்த்துட்டு வந்ததுலேர்ந்து மனசே சரி இல்ல. இப்ப நான் மனச தேத்திகிட்டு சாப்பிட உக்காந்தாலும் தொண்டை குழில இறங்காது. “நமக்குள்ள சரிப்பட்டு வராது. நீங்க பணக்கார வீட்டு பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு” சொன்னான். நீங்க எல்லாருமே அதைத்தான் சொல்லறீங்க. ஆனா என்னோட மனசு மட்டும் அவன் தான் என்ன நல்லா பார்த்துக்குவான்னு சொல்லுது. இது சரியா? தப்பா? தெரியல. என்னால அவனைத் தாண்டி வேறு எதுவும் யோசிக்கக்கூட முடியல.”
“நானும் இது எல்லாம் கடந்து வந்தவதான் . எனக்கும் உன்னோட நிலைமை புரியுது. அப்பா கிட்ட பேசலாம். எதுக்கும் கவலைப்படாத.”
“தாங்ஸ் மா! அன்னையின் மடியில் படுத்தவளுக்கு எப்போதும் வருவது போல இன்று உறக்கம் வரவில்லை. அதற்கு பதிலாக அடிப்பட்டிருந்த அவனின் உடலும், தந்தையிடம் என்னபேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்ற யோசனைகள் தான் வந்து கொண்டே இருந்தது. என்னதான் இருந்தாலும் தந்தை தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காதது மகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதே போலத்தான் காயத்ரிக்கு. தன் கணவன் ஏன் இப்படி செய்ய வேண்டும்? சாதாரண கம்பனியில் சாதாரண வேலைப் பார்த்து, சிறிய கடை வைத்து படிப் படியாக முன்னேறிய விஜயன் இப்போது இல்லை. உழைத்து முன்னேறி விட்ட, மாடிப்படியை தாண்டி கோபுரத்தில் நிற்கும் விஜயனை காயத்ரி எப்படி எதிர் கொள்ள போகிறார்?
நைட் டின்னர் முடிந்ததும். வந்து அமர்ந்த தந்தையிடம் பேசுவதற்காக மகள் வந்து நின்றாள். தந்தையிடம் இருந்து எந்த விளக்கமும் கேட்க அவள் தயாராக இல்லை.. மாறாக அவள் என்ன பேச வேண்டும் என்பதில் உறுதியாகவே இருந்தாள் .
“டாட்! உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும்”
“வெற்றி விஷயம்தானே?”
“எஸ் டாட். இன்னிக்கு அவன் வீட்டுக்கு போய் பார்த்துட்டு வந்தேன். அவன் அப்பா அவனை பெல்டால் அடிச்சு விளாசி இருக்காரு. உடம்பு முழுக்க காயம். எழுந்து உக்காரக் கூட முடியல. ரெண்டு நாள் பீவர். இன்னிக்குதான் கொஞ்சம் பரவால்ல.”
“அடடே! வெற்றி அப்பா மானஸ்தன் தான் இல்ல? “காயத்ரியின் முகத்தை பார்த்து கேட்டவரின் குரலில் ஒரு எள்ளலும் நக்கலும் கலந்தே இருந்தது. அவரின் பேச்சு மனைவிக்கு பிடிக்கவில்லை. மகள்? கேட்கவே வேண்டாம்.
“டாட்! நீங்க கொஞ்சமாவது நியாயமா யோசிக்கறவருங்கறதுனால தான் நான் உங்க கிட்ட பேசிகிட்டு இருக்கேன். தயவு செஞ்சு உங்க மேல எனக்கு இருக்கற மரியாதைய கெடுத்துக்காதீங்க.”
“சொல்லு” கை கட்டி அவள் பேசுவதற்காக காத்திருந்தார்.
மகளின் கண்களை நேராக பார்த்துக் கொண்டிருந்தவரை மகளும் நேராகவே பார்த்துப் பேசினாள். யாரோ வீட்டு பெண்ணாக காயத்ரி இந்த செயலை செய்த போது பெருமையாக உணர்ந்தார். அப்போது அவர் காதலன். இப்போது மகள் அதையே செய்யும்போது ஒத்துக் கொள்ள முடியவில்லை. தந்தை என்னும் பொறுப்பா? பதவியா? கடமையா?
“நீங்க நினைக்கற மாதிரி , நீங்க மிரட்டினாலோ இல்ல., அவங்க வீட்டுல மிரட்டினாலோ எல்லாமே மாறிடாது. இப்ப எல்லாம் பசங்க ஸ்கூல்ல படிக்கும்போதே கமிட் ஆகிடறாங்க. பட் நான் யாரையுமே முகம் கூட சரியா பார்த்ததில்ல. ஏன்னா எனக்கு அதுல எந்த விருப்பமும் இல்ல. இவன் மேல இருக்கறது வெறும் பிஸிக்கல் அட்ராக்ஷன்னு நீங்க நினைச்சா அது தப்பு. அவன் ரொம்ப கேரிங். அக்கா, தங்கச்சி, அவங்க குழந்தை, அப்பா எல்லாரை பத்தியும் யோசிப்பான். ஏன் என்ன பத்தி, அம்மா பத்தி, உங்களப் பத்தி கூட யோசிப்பான். ஒரு பொண்டாட்டியா எனக்கு வேற என்ன வேணும்? ”
“சோபாவில் அமர்ந்திருந்தவர் தன்னுடைய ரே பன் கண்ணாடியை கழுத்திலிருந்து மூக்குக்கு மாற்றிக் கொண்டார். தொப்பை இல்லாத சரீரத்தை தூக்குவதில் அவருக்கு சிரமம் எதுவும் இல்லை. எழுந்து அவள் அருகில் வந்து அவளை ஒரு முறை சுற்றி வந்தார்.
“ஏம்மா இது என்ன கலர்? பாசி பச்சை கலரு தானே?”
“நியான் கிறீன்” தேவையில்லாத கேள்வியில் அவளுக்கு பொறுமை பறக்க ஆரம்பித்தது. பல்கலைக் கடித்துக் கொண்டாள் .
“ம்! எங்க வாங்கின? நம்ம கடையா?”
“ஆமா ! ”
“இது விலை என்ன?”
“மூவாயிரம்”
“ஆப்டரால் ஒரு நைட் டிரஸ் கூட மூவாயிரம் ரூபாவுக்கு போடற நீ எப்படி மா அவனோட சேர்ந்து அந்த ஓட்டு வீட்டுல வாழ முடியும் ?
என்ன கேட்ட? வேற என்ன வேணுமா? பணம் வேண்டும். நான் மாப்பிள்ளை உன்னை தங்க தாம்பளத்துல வச்சு தாங்குவான்.”
“என்னங்க நீங்க பேசறது ரொம்ப தப்பு. நீங்க முன்னாடி மாதிரி இல்லை.”
“வாயை மூடுடி ! வெளில வேலைக்கு போயிட்டு முழுக்க முழுக்க வீட்டுப் பொறுப்பை உன்கிட்ட கொடுத்தா பெத்த பொண்ணை பொறுக்க விட்டு உனக்கு என்ன பேச்சு?”
“தன் தந்தை தாயைக் கூறிய அதே வார்த்தைகள். ” காயத்ரிக்கு நினைவுக்கு வந்து தொலைத்தது.
காயத்ரியால் வாய் திறக்க முடியவில்லை.
ஆனால் மகள் பேசினாள்.
“இவன் என்னை உள்ளங்கையில் வச்சு தாங்குவான். நீங்க பாக்கற மாப்பிள்ளை வீட்டுல தங்க தம்பாளத்துல வேணுன்னா நான் சாப்பிடலாம். ஆனா வர்ற புருஷன் என்னோட முகம் பார்த்து பேசுவனான்னு கூட தெரியாது. இவன் என்ன கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குவான். வர்றவனுக்கு பி ஏ கூட, சினிமா நடிகைகளோட இல்லீகல் ரிலேஷன் சிப் கூட இருக்க வாய்ப்பிருக்கு. வேற ஏதாவது கெட்ட பழக்கம் கூட இருக்கலாம். நிறைய பணக்கார வீட்டுல அது ரொம்ப சாதாரணமா விஷயம் . பட் இவன் என்ன தவிர வேற யாரையும் தப்பா பாக்க கூட மாட்டான். வேற எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. நேர்மையானவன். நல்லவன். இதுனால தான் எனக்கு அவனைப் புடிச்சிருக்கு .”
“நீ விதண்டாவாதம் பண்ணற வித்யா.”
“இல்லப்பா! உங்களுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணறேன்.”
“நீ என்ன சொன்னாலும் என்னால அந்த மாதிரி ஒருத்தனை வீடு மாப்பிள்ளையா நினைச்சுக் கூட பாக்க முடியாது. என்ன மீறி ஓடிப் போவியா? ஓடிப் போ. என்னோட சொத்துலேர்ந்து ஒனக்கு ஒரு சாலிக் காசு கூட கிடைக்காது.”
“என்னப்பா பயமுறுத்தறீங்களா? உங்க ஆசைப்படி அழகான பணக்கார மாப்பிளையை பார்த்து கல்யாணம் பண்னிக்கணுமா? கல்யாணம் பண்ணிக்கிட்டா? என்னோட ஒடம்புல உயிர் இருக்கும். கண்டிப்பா வாழ்க்கைல உயிர்ப்பு இருக்காது. சிரிப்பும் இருக்காது. இது எல்லாம் நீங்க கொடுக்கற காசுக்கு, படிப்பு இதோ இந்த பணக்கார துணி எதுக்காகவும் இல்ல. உங்களுக்காக. அம்மாவுக்காக. அம்மாவோட நம்பிக்கைக்காக. ”
“மிரட்டறியா ”
“எங்களால உங்கள மாதிரி பெத்தவங்களை விட்டுட்டு எல்லாம் போக முடியாது பா . எனக்கு நீங்க ரெண்டு பேரும் வேணும். எனக்கு கல்யாணம் ஆகும். அம்மாகிட்ட காபி கேப்பேன். குடுக்கறதுக்கு அம்மா வேணும். “தலைல எண்ணெய் தேய்க்காம இருக்கியே” அம்மா தலைல கொட்டணும். பிஸினஸ்ல புதுசா நடக்கற இந்த குழந்தைக்கு கை புடிச்சுக்க அப்பா நீங்க வேணும். எங்களுக்கு குழந்தை பிறக்கும். பிரசவம் பாக்க, குழந்தைக்கு தண்ணி விட, உர மருந்து கொடுக்க எல்லாத்துக்கும் அம்மாவும் நீங்களும் வேணும்பா. பணக்கார வீட்டுல எல்லாத்துக்கும் ஆளுங்க இருப்பாங்க. ஆனா ஆசை, அன்பு இருக்காது. எனக்கு அந்த மாதிரி வாழக்கை வேண்டாம்பா. வெற்றியை உங்களுக்கு புடிக்கலன்னா விட்டுடுங்க. நான் இப்டியே இருந்துக்கறேன்.”
எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக சொல்லி விட்டு செல்லும் மகளின் மனதை மாற்ற முடியாது என்பதை அவர் புரிந்து கொண்டார்.
மறுநாள் காலையிலேயே தன்னுடைய சம்மதத்தை சொல்லி விட்டார்.
“நீங்க அரை மனசோட ஒத்துக்க வேணாம் டாட்”
“இரு இன்னும் நான் முடிகலை ஒரு கண்டிஷன் இருக்கு.”
“எஸ் டாட் !எனக்கு தெரியும். நீங்க ஒரு பக்கா பிசினஸ் மேன். டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் இல்லாம எதையும் ஒத்துக்க மாட்டிங்க. ”
வித்யா விளையாட்டு போலவே சொன்னாலும் இவருக்கு சுருக்கென்று இருந்தது. அதை அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை.
“கல்யாணம் இப்ப இல்ல. கொஞ்ச நாள் ஆகட்டும். அதுக்கு அப்புறம்”
“கொஞ்ச நாளா மாசமா? வருசமா அப்பா? எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே . ஆனா எனக்கும் ஒரு கண்டிஷன் இருக்கு. அதுக்குள்ள யாராவது அழகா சிக்ஸ் பேக்ஸ் வச்சுருக்கற அமுல் பேபி பிசினஸ் மேன பார்த்து எனக்கு தலைல கட்ட பாக்காதீங்க.”
“ம்! வெரி ஸ்மார்ட். நீயும் பிசினஸ் பேமிலி தாம்மா. ப்ரூவ் பண்ணிட்ட.”
சிரித்துக் கொண்டே தந்தையின் தோள் சாய்ந்தாள்.
இரு தினங்கள் கழித்து வெற்றியே வர ஆரம்பித்தான். எத்தனை நாட்கள் வீட்டிலேயே இருக்க முடியும்? மலரும் அவள் வீட்டிற்குச் சென்றிருந்தாள் . வெற்றியின் தந்தைக்கு மகனை பெல்ட்டால் அடித்தாலும் மனம் கேட்கவில்லை. அதிலும் இரவெல்லாம் அக்கா,அக்கா என்று வலியில் முனங்கிக் கொண்டிருந்த மகனை பார்பதற்கே தந்தைக்கு கஷ்டமாகத் தான் இருந்தது. காலையிலேயே மாமனார் மலரை அனுப்பச் சொன்னதும் நல்லவன் அனுப்பி விட்டான். இருந்தாலும் இரு தினங்கள் அவள் இங்கே இருந்ததே பெரிய விஷயம்.. வித்யாவின் நினைவு வேறு படுத்தியது. அக்காவும் இல்லை. அந்த வீட்டில் இருக்கப் பிடிக்காதவன் சவாரிக்கு கிளம்பி விட்டான்.
அவள் முகத்தை பார்க்க சற்று வெட்கமாக இருந்தது. அன்று அவள் கட்டிப் பிடித்து கொடுத்த முத்தங்கள், மீண்டும் மீண்டும் வேண்டுமென மனம் ஏங்கியது.
ஆண்கள் வெக்கப்பட்டால் இத்தனை அழகாக இருக்குமா ?
அது எனக்குத் தெரியாது. இருப்பினும்… வெற்றியின் வெட்கம் எப்படி ? வித்யாவிடம் கேக்கலாம்..
காதல் வ(ரு)ரம்தானே …

