

KKEN-17
வீட்டிற்கு வந்திருந்த நாத்தனாரை பார்த்து,
“வாடி எப்ப வந்த?’
கேட்டுக் கொண்டே வெளியில் சென்றிருந்த மாமியார் வந்தார்.
“அவ புடவைய எதுக்குடி மேலே போட்டுட்டு நிக்கற?”
அவளும் அவள் நாத்தனாரும் நாளை வெளியில் எங்கோ செல்கிறார்களாம். அதற்கு உடுத்த வேண்டுமாம் இந்த புடவை.
“ஏண்டி! அவ கூட போகறதுன்னா ஜரிகை வச்ச ஒசத்தியான புடவை கட்டிக்க வேண்டியதுதானே ?”
“எதுக்கு எனக்கு வேணுன்னு அவ தூக்கிட்டு போகவா?”
வேறு ஏதாவது நல்லதாக புடவை இருக்கிறதா? தேடிக் கொண்டிருந்தவளுக்கு இவள் சொன்ன விஷயம் காதில் கேட்டது.
மனதில் வந்த கோபம் இளக்காரமாக உதட்டில் வந்தது. எதுவாக இருந்தாலும் மனதில் நினைத்து கொள்வதுடன் சரி, எதையும் வாய் விட்டு சொல்வதில்லை. தந்தைக்குப் பயந்து பயந்து வாயை மூடியே இருந்து பழக்கப் பட்டவளுக்கு மாமியார் வீட்டில் அதுவே வசதியாகி போனது. மாமியாருக்கும் தான். என்ன சொன்னாலும் சரி, ஏன் அடித்தாலும் கூட வாயைத் திறந்து எதிர்த்து பேசாத மருமகள் யாருக்கு கிடைப்பாள்?
முதலில் எல்லாம் அப்படி நினைத்து சந்தோஷம் கொண்டிருந்தவளுக்கு இப்போதெல்லாம் அவளுக்கு குழந்தை இல்லை என்பது பெரிய விஷயமாகத் தெரிய ஆரம்பித்தது. மகனுக்கு அடுத்த கல்யாணம் செய்யலாமா? பேசுவதற்குத்தான் மகளை அழைத்திருந்தார். இது எதுவும் அறியாத மலர் ஆட்டோ சத்தம் கேட்டதும், கையில் கிடைத்ததை அவசரமாக உடுத்திக் கொண்டு வந்தாள் .
வீட்டிற்கு வந்த மகளை தந்தை உட்பட அனைவருமே நன்றாகவே வரவேற்றார்கள்.
“வா மலர். மாமா வரல?” தங்கையிடம் இருந்து சம்பிரதாயமான வார்த்தை வந்தது.
அடுத்த நிமிடமே சமையல் அறைக்குள் அக்காவை அழைத்துச் சென்றவள்,
“என்னக்கா இது? இப்டி வந்து நிக்கற. கட்டிக்க நல்ல புடவை கூட இல்லையா?”
நெற்றியில் சிறு ஸ்டிக்கர், காதில் தெரிந்தும் தெரியாமலும் சிறு தோடு, கழுத்தில் வேறு செயின் எதுவும் இல்லாமல் ஒற்றை மஞ்சள் கயிற்றுடன் வந்து நின்றவளை பார்த்தவளுக்கு கோபம் வந்தது.
அவர்கள் உரையாடலை கேட்டுக் கொண்டு வெற்றி வந்து விட்டான்.
“ஏன் நீதான் அம்புட்டு ட்ரெஸ் வாங்கி வச்சுருக்க இல்ல? அக்காதானே குடு.”
மலருக்கு அவமானமாக இருந்தது.
“பெரியம்மா இந்தாங்க! கையில் ஒரு சமோசாவை திணித்து விட்டு ஓடினாள் குழந்தை.
தங்கை கொடுத்த ஆடையையும் அணிகலனையும்
ஆசையாகவே உடுத்தி இருப்பாள் அவள் ஆசையுடன் கொடுத்திருந்தால். அவள் வேண்டா வெறுப்பாக தரும்போது?
“இருக்கட்டும் புவி. என்னை யாரு பாக்க போறாங்க?கேக் கட் பண்ணும்போது நான் இங்கையே இருந்துக்கறேன். நான் வெளில வர மாட்டேன்.”
“என்னவோ பண்ணு., போ!” தலையில் அடித்துக் கொண்டு வெளியில் சென்ற தங்கையை அதட்ட வெற்றியும் பின்னோடயே போனான். அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டாள் மலர் .
“வெற்றி! நில்லுடா! அவ முக்கியமில்லை . இன்னிக்கி பாப்பா சந்தோசமா இருக்கணும். அவ்வளவுதானே.”
அதே காரணத்துக்காக அவனும் தன்னை அடக்கிக் கொண்டான்.
தான் வாங்கி வந்த பரிசை அக்கா வாங்கியது போல மற்றவர்கள் முன் கொடுத்து விட்டான்.
வாயில் கேக்கை ஊட்டிய தங்கை மகளை மகளை ஆசையுடன் ஆசிர்வதித்தாள் மலர். அவ்வளவுதான். அடுத்த நிமிடம் அங்கு நிற்க கூட பிடிக்கவில்லை. கிளம்பி விட்டாள் . வெற்றிக்கும் புரிந்தது. போகும் வழியில் மாவும் தேங்காய் மூடியும் வாங்கி கொண்டாள். மதியம் கூட சரியாக உண்ண முடியவில்லை . பயங்கரமாக பசித்தது. சிறு சமோசாவும் அரை டம்பளர் டீயும் எப்படி போதும்? வீட்டிற்குச் சென்று முதலில் இரண்டு தோசைகளை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும்.
செருப்பை வாயிலில் அவிழ்க்கும் போதே,
“மாவு வாங்கிட்டு வந்துட்டியா. முதல்ல எனக்கு தோசை சுட்டு குடு.”
மாமியார் அதட்டினார்.
“சரி! வயதில் பெரியவர் அவருக்கு கொடுக்காமல் எப்படி?’
” அண்ணி முதல்ல எனக்கு சுட்டு குடுங்க. அவங்க வந்துருவாங்க.வீட்டுக்கு போகணும்.” இது வேண்டாத விருந்தாளி நாத்தனார் .
‘அடுத்து வந்த கணவன். தனக்கு? இருக்கிறதே கழுவி வைக்க வெறும் பாத்திரம். ‘தண்ணீரை குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்டாள் . இரவில் அருகில் வந்த கணவன் மீது கோபம் வந்தது.
‘ஏன் ஒரு நாள் கூட நீ சாப்பிட்டியா? கேட்டதே இல்லையே?’ அவள் கண்களில் வந்த கண்ணீரை கூட தெரிந்துக் கொள்ள விரும்பாதவன் தன் செயலில் மட்டுமே குறியாக இருந்தவன் வழக்கம் போலவே வேலை முடிந்ததும், உறங்க ஆரம்பித்தான்.
இவள் கண்ணீரை துடைக்க, வாய் நிறைய பேச வைக்க யாரோ ஒருவன் வருவான். இனிதான் பிறக்க போகிறானா என்ன?
அக்காவை அவள் வீட்டில் விட்டு விட்டு வந்தாலும் மனம் அமைதி அடையவில்லை. புவி,கணவன், மகள் மூவரும் ஹோட்டலில் சென்று சாப்பிட்டார்கள். அப்பாவுக்கும் தம்பிக்கும் கூட தோசை பார்சல் வாங்கி வந்திருந்தார்கள். நிச்சயம் மலர் சாப்பிட்டுருக்க மாட்டாள். அக்காவை நினைத்த தம்பிக்கும் உணவு உண்ண தோன்றவில்லை. அதையும் தந்தையிடமே கொடுத்து விட்டான். தாத்தாவும் பேத்தியும் இன்று கீழேயே உறங்கி இருந்தார்கள். வயதானவருக்கு உடல் களைப்பு என்றால் குழந்தைக்கு அங்கும் இங்கும் ஓடி ஆடியது களைப்பு போல. ஹோட்டலில் இருந்து வரும்போதே தந்தையின் தோளில் தூங்கிக் கொண்டிருந்தாள். மலரை பற்றி நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு ஏனோ தன்னை தானே மன்னிக்க முடியவில்லை. அக்கா படும் வேதனை அவனால் தாங்க முடியவில்லை.
மனம் ஏனோ தன்னவளின் குரலை கேட்க வேண்டும் போல மனம் ஏங்கியது. அவன் மனதில் அழைத்து அவளுக்கும் கேட்டதோ .
“ஹை டா ” உரிமையுடன் அழைத்தாள் .
“ஹலோ மேடம்”
“இன்னிக்கு பங்க்ஷன் எப்பிடிடா நடந்துச்சு?
“பங்கஷன் என்ன பங்க்ஷன். வீட்டுல இருக்கற நாலுபேரு அவங்க தாத்தா பாட்டி பக்கத்து வெயிட்டு அக்காங்க ரெண்டு பேரு .”
“மலரக்கா வரல?”
“வந்துச்சு வந்துச்சு. அது இல்லாமலா”
“என்னடா குரலே ஒரு மாதிரி இருக்கு?”
அமைதியாக இருந்தான்.
“என்னடா செல்லம்? என் ஒரு மாதிரி இருக்க ? ஏதாவது பிரச்சனையா?”
அவளின் குரல் அன்னையின் குரலாக மாறி விட்டிருந்தது.
“மலருக்கு என்ன மேடம் . அது வராமலேயே இருந்திருக்கலாம். நான்தான் தப்பு பண்ணிட்டேன். எனக்கு அறிவே இல்ல.”
“என்னாச்சு?”
இப்போதும் அமைதியாகவே இருந்தான்.
“பட்டு!” சின்ன அதட்டல் வந்தது வித்யாவிடமிருந்து.
தன்னவளிடம் கூட சொல்ல முடியாத அளவுக்கு அவனுக்கு அவமானமாக இருந்தது தன்னுடைய வீட்டு அவலம்.
“அவளுக்கு வசதி இல்லன்னு எல்லாரும் அசிங்கப் படுத்தறாங்க மேடம். அது இல்லன்னா நாங்க ரெண்டு பேருமே இல்ல. யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க.”
அவனையும் அறியாமல் கண்ணீர் வந்தது.
இவளுக்கும் பதட்டமாக இருந்தது. அவன் அத்தனை எளிதில் கண்ணீர் சிந்துபவன் அல்லவே.
அந்த நிமிடம் அவனுக்கு தோள் கொடுக்க வேண்டும் போல இருந்தது.
“இருடா ! கவலைப்படாத. அக்காவுக்கு நாம ஏதாவது வழி பண்ணலாம்”
“என்னால முடிஞ்சா இந்த நிமிஷம் அத தூக்கிட்டு வந்துருவேன். புருஷனுக்கும் அப்பாவுக்கும் பயந்து பயந்து தினம் தினம் சாகுது. ஒரு பக்கம் அவ மாமியார், இன்னொரு பக்கம் குடிச்சுட்டு வந்து அடிக்கற புருஷன். அது வாழ்க்கையே வீணா போச்சு.”
“சரிடா கவலை படாத. சீக்கிரமே ஏதாவது வழி பண்னலாம் .”
மலராக முடிவெடுக்காத வரையில் எதுவும் நடக்க போவதில்லை. அவனுக்குத் தெரியும் இருந்தாலும் வித்யாவின் வார்த்தைகள் அவனுக்கு ஓரளவு சமாதானம் ஆனது.
‘சரி! அதெல்லாம் இருக்கட்டும். போட்டோ எடுத்தியா?”
“இதோ அனுப்பறேன்.”
“வேண்டாம் வேண்டாம். நாளைக்கு உன் கூட சேர்ந்து பார்த்துக்கறேன்.”
“சரி”
“என்னடா சரி? கொஞ்சம் சிரி டா “
“குட் நைட் மேடம்” லேசான சிரிப்புடன் கூறினான்.
“அவ்வளவுதானா?”
“வேற என்ன மேடம்”
“போடாங். உனக்கு வயர் கன்க்ஷன் கொடுத்து பல்பு எறிய வைக்கறதுக்குள்ள எனக்கு வயசாகிடும்.”
அவள் சொல்வதும் கேட்பதும் அவனுக்கு புரியாமல் இல்லை. இருப்பினும் இருவர் வீட்டிலும் பேச வேண்டும். தான் செய்வது தவறு. மூளைக்குப் புரிந்தாலும் அவளை தள்ளி வைக்க மனதிற்குத் தான் தெரியவில்லை. மூளைக்கும் மனதிற்கும் நடுவில் அவன் படும் பாடு பரிதாபமே.
காலையில் புத்தம் புது மலர் போல அவள் கேட்டில் இருந்து வெளியில் வரும்போது அள்ளி எடுத்து முத்தம் கொடுக்க தோன்றும். குட் மார்னிங்கோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். எத்தனை பெரிய கஷ்டம்?
அடுத்த நாள் காலையில் அவளுடன் சேர்ந்துப் புகைப்படங்களை பார்த்தான். அதில் எதுவும் மலர் இல்லை.
“மலரக்கா எங்க?”
அது கிச்சனை விட்டு வர மாட்டேன்னு சொல்லிடுச்சு.
“ஓ ! வேற ஏதாவது போட்டோ இருக்கா?”
வேறு புகைப்படத்தை காட்டினான். பளிச்சென்று இருந்தாள். பழைய காலத்து ஸ்ரீ தேவி சாயல் இருந்தது. இத்தனை அழகான மனைவி இருந்தும் அவள் கணவன் எப்படி வேறு பெண்களிடம் உறவாடுகிறான்? வித்யாவுக்கு புரியவில்லை.
“உங்க அக்கா ரொம்ப அழகா இருக்காங்க. இன்னும் அவங்களுக்கு இன்னும் சின்ன சின்ன விஷயங்கள் முகத்துல செஞ்சா போதும். சினிமா நடிகை போலவே இருப்பாங்க.”
அவள் சொன்னது அவனுக்கு பிடித்திருந்தது. தனக்கு அடுத்து அக்காவை பற்றி யோசிக்கும் ஒரு பெண்.
மாலையில் வெற்றியிடம் இருந்து கால் வந்தது. மேடம் வண்டி கொஞ்சம் ரிப்பேர். இன்னிக்கு ஒரு நாள் மட்டும் பாத்துக்கறீங்களா?
“ஓகே டா ! அப்பாவை வர சொல்லறேன்.”
“வண்டி ஏறினதும் போன் பண்ணுங்க.”
“ம்! சரி”
மாலையில் வரேன் என்று சொல்லி இருந்த தந்தை இன்னும் மீட்டிங் முடிந்து வந்திருக்கவிலை. எப்படி செல்வது? பீக் ஹவர்ஸ். வேறு வண்டி எதுவும் வரவில்லை.
‘சரி! ரோட்டுல போகற வண்டி ஏதாவது பாக்கலாம். மெதுவாக நடந்து கொண்டே வரும் வண்டிகளை கேட்டுக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கே வந்த ஜாகுவார் அவளிடம் நின்றது. வேறு யார்? நம் அதிபன் தான்.
“நீங்க எங்க? மிஸ்?”
“குட் ஈவினிங் சார்! இங்க ஏ ஸ்குயர் க்ரூப்லதான் இன்டெர்ன்ஷிப் பன்னறேன்.”
“நைஸ். வெரி நைஸ். வாங்களேன் உங்கள டிராப் பண்ணறேன்.”
ஜாகுவார் வண்டியில் வந்தவன் கண்கள் அதைப் போலவே மின்னியது. அந்த ஒளியின் அர்த்தம் என்ன?
“இட்ஸ் ஓகே சார். நான் பார்த்துக்கறேன். நீங்க.. யூ கேரி ஆன்!”
“நாந்தான் டிராப் பண்ணறேன்னு சொல்லறேனே ” குரல் காசுவளாக காட்டிக் கொண்டாலும்,
“நான் சொல்வதை நீ கேட்கவேண்டும்” என்றும் காட்டிக் கொடுத்தது.
அவன் வார்த்தையை மீற முடியாமல் தயக்கத்துடன் ஏறினாள்.
“நீங்க எப்படி இங்க?” புன்னகையாக கதவை மூடிக் கொண்டே கேட்டாள் .
காதல் வரும் …..

