

KKEN-15
அலுவலகத்திலிருந்து உற்சாகமாக வரும் மகளிடம் இன்று இதைப் பற்றி பேசியே ஆக வேண்டும் என்ற முடிவுடன் காயத்ரி காத்துக் கொண்டு இருக்கிறாள்.
“வாம்மா ! என்ன இப்ப எல்லாம் ரொம்ப உற்சாகமா இருக்க?”
“எஸ் மாம்! புது கம்பனி. புது வேலை. புதுசு புதுசா கத்துக்கறோம்.வேற என்ன ?”
“அது சரி! வேற என்ன வேற ஒன்னும் இல்லையா ? கண்ணிடுக்கில் மகளை அளவிட்டார்.
“நீ என்னவோ கேக்கற. எனக்கு ஒன்னும் புரியல ”
“அது சரி! உனக்கு என்ன புரியும்? சரி! அதை விடு .காபி கலக்கவா ?
“இல்லம்மா! இப்ப தான் பழச்சாறு குடிச்சேன் ”
“வேலை புடிச்சிருக்கா ?”
வந்து ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்ட அன்னையின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள் .
“ம்! புடிச்சிருக்கு மாம்”
“பரீட்சைக்கு அப்புறம் என்ன? மாப்பிள்ளை பாக்கலாமா ? இல்ல எங்களுக்கு ஏதாவது சர்பரைஸ் இருக்கா ?”
“வேலைக்கு போக போறேன் மாம். சர்ப்ரைஸ் …அதுவும் இருக்கு மாம். நான் எதையும் மறைக்க விரும்பல. ஏற்கனவே வெற்றி உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான்னு தெரியும். நீங்களாவே கேக்கறதுக்குத் தான் நான் வெயிட்டிங்.”
எழுந்து அமர்ந்து அன்னையின் கண்களையே உற்று நோக்கி பேசும் மகளையே ஆர்வத்துடன் பார்த்திருந்தாள் . மகளின் கண்களில் தெரியும் சந்தோஷம், மினுமினுப்பு, அனைத்தையும் விட மேலான நேர்மை எல்லாமே காயத்ரிக்கு தன்னையே இள வயதில் பார்ப்பது போல இருந்தது.
“எனக்கு அவனை ரொம்பப் புடிச்சுருக்குன்னு சொல்ல மாட்டேன் மாம். அவன் அதுக்கும் மேல.”
“எப்படி? உன்னோட உயிர்னு சொல்ல போறியா ?”
“நோ மாம்! அவன் அதுக்கும் மேல. என்னோட நம்பிக்கை. தைரியம்.”
தலை குனிந்து பேசவில்லை அவள். தலை நிமிர்ந்து நம்பிக்கையுடன் அன்னையின் கை மீது கை வைத்து நேர் கொண்ட பார்வையுடன் பேசிய மகளை பார்த்த அன்னைக்கும், மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை.
அது வரை வெற்றி வேண்டாம் என்று இருந்த அன்னை மகளின் பதிலில் ஆடித் தான் போனார். ஆனால் அசரவில்லை.
“ஒரு வேளை நீ சொல்லற மாதிரி கல்யாணத்துக்கு அப்புறமா நம்பிக்கைக்கு உரியவனா இல்லாம போனா? இன்னிக்கு நான் ஒரு படம் பார்த்தேன். டிவில. மலையாள படம். மீரா ஜாஸ்மின், ரியாஸ் கான் அவளுக்கு கணவன். செவ்வாய் தோஷம் இருக்கற பணக்கார வீட்டுப் பொண்ணு., வீட்டு கார் ட்ரைவரை நம்பி ஓடி போய் , மூணு குழந்தைங்களுக்கு அம்மாவாகி , கஷ்டப்படற கதை. அவனோட இருக்கும்போது எனக்கு குடிசையும் அரண்மனைதான். சொல்லலாம். மழை வரும்போது ஓட்டைகள்ல பாத்திரம் வைக்கும் போதுதான் தெரியும் கஷ்டம். ரேஷன்ல கோதுமை இருக்கா? சர்க்கரை வந்துச்சா? பாமாயில் எப்ப வரும்? காத்திருக்கணும். பஸ்ஸு எப்ப வரும்? வெயில்ல நிக்கணும். நீ எல்லாத்துக்கும் சுகமாவே இருந்து பழகிட்ட. ஒனக்கு இந்த கஷ்டம் எல்லாம் தெரியக் கூடாதுன்னுதான் நாங்க கஷ்டப்பட்டோம். ஒனக்கு அது வேணா வித்யா ” மகளின் தலை கோதி அன்பாகவே அறிவுரைச் சொன்னார்.
“அம்மா! நீங்க சொன்ன கதைல அந்த கதாநாயகி படிச்சிருந்தாளா ? நான் படிச்சிருக்கேன். அந்த கார் ட்ரைவர் படிக்காதவன். பொம்பளைங்க மேல நல்ல எண்ணம் இருந்திருக்காது. பட் வெற்றி அப்டி இல்ல. அவங்க அப்பா அவனை படிக்க வேணாம். ஆட்டோ ஓட்டுன்னு புஸ்தகத்துக்கு பதிலா தொழிலை கைல கொடுத்தாரு. அப்படியும் கொஞ்ச வருசத்துக்கு அப்புறமா அவன் கரஸ்ல படிச்சுக்கிட்டு தான் இருக்கான். படிப்புல ஆர்வம் இருக்கு. உழைச்சு சம்பாதிச்சு பெரிய ஆளா வரணுன்னு வெறி இருக்கு. எண்ணம் இருக்கு. அக்கா தங்கச்சி, தங்கச்சியோட குழந்தைன்னு அவனை சுத்தி நிறையப் பெண்கள். அவனுக்கு என்னோட வால்யூவும் தெரியும். பொண்ணுங்களோட அருமையும் தெரியும்.”
சில நொடி இடைவெளி விட்டவள்,
“உங்க கிட்ட நான் மனசு விட்டு சொல்லறேன் மாம். ஒரு நாள் ஆட்டோல போகும்போது டக்குனு எனக்கு பீரியட்ஸ் வந்துருச்சி. என்னோட முகத்தை பார்த்தே கண்டுபுடிசுட்டான். தேவையானத வாங்கிக் கொடுத்து பெட்ரோல் பங்குல நிறுத்தி அப்புறமா தான் கொண்டு போய் விட்டான். இந்த மாதிரி நேரத்தில டார்க் கலர்ஸ் போடுங்கன்னு வேற சொன்னான். அப்ப எல்லாம் எனக்கும் அவனுக்கும் அத்தனை பழக்கம் கூட இல்ல. அம்மா இல்லாத பையன். அக்காவோட வளர்ப்பு எப்படி இருக்குன்னு பார்த்திங்களா? அவன நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா எதுக்காக அவனோட போய் குடிசைல வாழனும்? நான் சம்பாதிச்சு ரெண்டு பேரும் ஏதாவது ஒரு பிளாட்ல வாழுவோம்.
அந்த படத்துல வந்த கதாநாயகி மாதிரி பணத்துக்காக குழந்தையை காப்பாத்த நான் யாரு கிட்டையும் போய் என்னோட உடம்ப விக்க மாட்டேன். இன்னொரு காயத்ரியா இருந்து இன்னொரு விஜயன் போல வெற்றியை உருவாக்குவேன். என்ன நம்புங்க அம்மா.”
“எத்தனை அழகாக என்னை மூளைச் சலவை செய்து விட்டாள் ? அதனால் தானோ என்னவோ வெற்றியும் இவளிடமிருந்து மீள முடியாமல் தவிக்கிறான் போலும்.”
கண் இமைக்காமல் நின்றிருந்த அன்னையின் கன்னத்தில் லேசாக தட்டி,
“மாம்! அந்த படத்தை நீங்க இப்பதான் பாக்கறீங்க. நான் யூ டியூபில் ஏற்கனவே பார்த்துட்டேன். இப்டியே முழிச்சுகிட்டே நிக்காம போய் நீ பெத்த பொண்ணுக்கு உருளைக்கிழங்கு பொடி மாஸ் செஞ்சு வை. அவளுக்கு பசிக்குதாம்”
=========================================
மதுவின் காவல் நிலையம் எப்போதும் போலவே பரபரப்பாக இருந்தது. அவள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பாள். விடியலில் எழுந்து உடல் பயிற்சி செய்யாமல் இருந்ததே இல்லை.
கட்டுடல் ஏறிய புஜங்கள் ஆண்களுக்கு மட்டும்தான் அழகா? பெண்களுக்கும் அழகுதான். அதிலும் அவளது உயரத்திற்கும் அணிந்திருக்கும் உடைக்கும் ஏற்ற உடல் வாகை கொண்டவள் அல்லது அதை சரியாக பராமரித்து கொண்டிருப்பவள். சீருடையில் இருக்கும்போது மதிப்பான தோற்றத்தையும், மற்ற உடைகளில், “என்ன அழகு எத்தனை
அழகு” என்று மயக்கும் தோற்றத்தையும் கொண்டவள். பெண்களே அதில் விதிவிலக்கு அல்ல என்னும்போது ஆண்கள்? அப்படி என்றால் நான்? தேன் நிற உடல் வர்ணத்தையும், பச்சை நிற கண்களையும் கண்டு நானும்தான் மயங்கி போகிறேன். அதிலும் உன்னிப்பாக பார்க்கும்போது லேசாக சிறுத்துக் கொள்ளும் அந்த கண்கள்! அப்பா! பேரழகுதான். ஆனால் எனக்கு ஒரு பெரிய வருத்தம் இருக்கிறது. ஏனோ அவளுக்கு சிரிக்கத் தெரியவில்லையே?
பெண்ணுக்கு அழகே புன்னைகை தானே? அப்படி எல்லாம் இல்லை. அவளுக்கு பொன் நகையும் பிடிக்காது. புன்னகையும் தான்.
பத்து சவரன் நகை திருடியவனை பிடித்து அடித்து கொண்டிருந்தார்கள்.
“என்ன கேஸ்?”
“பொண்ணு கல்யாணத்துக்கு வச்சிருந்த பத்து சவரன் நகையை திருடி இருக்கான் மேடம். இதுல கொடுமை என்னனா அவங்களே கூலி வேலை செய்யறவங்க. காரை பேந்த வீட்டுல இருக்கறாங்க”
“ஏன்யா எதுக்குடா ஏழை வீட்டுல திருடின? உனக்கு எந்த பணக்கார வீடும் கிடைக்கலையா?” நக்கலாக கேட்டாள் .
“பணக்கார வீட்டுல நிறையா நாய்ங்க வச்சுருக்காங்க மேடம். நிம்மதியா போனோமா எடுத்தோமா தொழில் செய்ய முடியல. இந்த மாதிரி வீடுன்னா பூட்டு தான் போட்டுருப்பாங்க, இல்ல பீரோல வச்சிருப்பாங்க. போனா பத்தே நிமிஷம். எடுக்க வேண்டியதை சத்தமில்லாம எடுத்தோமோ, சரக்கடிச்சோமா நிம்மதியா இருக்கலாம்.”
“ஆமா இவரு அப்படியே பெரிய அம்பானி தொழில் செய்யறாரு.”
மதுவின் கண்களை பார்த்து அர்த்தம் புரிந்து கொண்ட கான்ஸ்டபிள் கோபத்தில் இன்னும் அடி பிளந்தார். அப்போது வெளியில் இருந்து இன்னொரு காவலர் ஓடி வந்தார்,
“மேடம் மேடம் ! ஒரு பொண்ணு கையில தலையோட வந்துருக்கு”
உள் வந்தவளை பார்த்த ஒரு பெண் கான்ஸ்டபிள் வாயை மூடிக்கொண்டு வாந்தி எடுக்க ஓடினாள். இன்னொரு ஏதோ கேஸ் விஷயமாக வந்திருந்த பெண் மயக்கம் போட்டு விழுந்திருந்தாள் .
வந்திருந்த பெண்ணோ எதைப் பற்றியும் கவலை இல்லாமல், நேராக பார்த்துக் கொண்டிருந்தாள். சிறு பெண்ணாகத் தான் இருந்தாள் . மேலே ஒரு ஷர்ட்டும் கீழே ஒரு பாவாடையும் அணிந்திருந்தாள் . முகம் எங்கும் வியர்வையும் ரத்தமும் வழிந்து கொண்டிருந்தது. கை முழுவதுமே ரத்தம். மற்றவர்களுக்கு இருந்த பயம் அருவருப்பு எதுவும் அவளுக்கு இல்லை. தைரியமாகவே நின்றிருந்தாள் .
அவளை பார்த்த மதுவுக்குமே பயம் வரவில்லை. மாறாக அவளை பார்த்தவளுக்கு காளி இப்படித்தான் போர் களத்தில் நின்றிருப்பாள் என்று தோன்றியது. அந்த தலைக்கு சொந்தக்காரனோ சற்று முதுமை அடைந்தவன் போல இருந்தான். நாற்பதுகளில் இருக்கலாம். சிறு பெண் மீது கை வைத்திருப்பான். கோபத்தில் வெட்டி விட்டாள் . என்று ஊகித்தாள் மது. ஆம்! அவள் கையில் நீண்ட அறிவாளும்தான் இருந்தது. அவள் வந்தபோது ரோட்டில் இருந்தவர்கள் கூட அலறியடித்து ஓடி இருந்தார்கள். காலில் அணிந்திருந்த பெரிய கொலுசின் சத்தம் அவள் நடந்து வந்த போது பயத்தையே தந்திருந்தது. அவளைத் தொடர்ந்து கொண்டு யாரோ பத்திரிக்கை காரனும் வந்திருந்தான். காவல் நிலையத்தில் அவன் அனுமதிக்கப் படவில்லை. வெளியிலேயே நிறுத்தி வைக்கப் பட்டான் . மிகவும் பரபரப்பான விஷயம். மிகவும் முக்கியமானதும் தான்.
மது அவளிடம் எதுவும் பேசவில்லை. கைக் கட்டி அவளையே உன்னிப்பாக பார்த்திருந்தாள் .
வந்த பெண்ணே ஆரம்பித்தாள்.
“என்னோட பேரு செல்வி. நாங்க விழுப்புரத்துல இருக்கற அரசலாபுரம் கிராமத்தை சேர்ந்தவங்க. அம்மா இல்ல. அப்பாவும் அக்காவும்தான் . இங்க பஞ்சம் பிழைக்க வந்தோம். இதோ இவன் வீட்டுலதான் எங்க அப்பா தோட்டத்து வேலை செஞ்சாங்க. அக்கா சமையல் அறைல மேல் வேலை செஞ்சுகிட்டு இருந்தது. இவன் அக்காவை கெடுத்துட்டான். அக்கா விஷம் குடிச்சு செத்து போச்சு. அப்பா போலீசுல சொன்னாங்க. ஏழைங்க. எங்களை யாருமே திரும்பி பாக்கல . வீட்டுக்கு ரெண்டு பேர் வந்தாங்க. அய்யா கூப்புடறதா சொல்லி கூப்பிட்டாங்க. காலைல வரேன்னு அப்பா எவ்வளவோ சொன்னாரு. கேக்காம தூக்கிட்டு வண்டில ஏத்திட்டு போன்னாங்க . அப்பா வரவே இல்ல. இவன்தான் எங்க வீட்டுக்கு வந்தான். அக்காவும் அப்பாவும் செத்து போய்ட்டாங்க. நீ என் கூட இருன்னு சொன்னான். இன்னும் அக்காவை பத்தியும் தப்பா பேசினான்.”
“என்ன சொன்னான்?”
“இல்ல அவன் சொன்னதை என்னால சொல்ல முடியாது”
“இல்லமா நீ சொல்லித் தான் ஆகணும்”
“நான் சொன்னா இங்க இருக்கற எந்த ஆம்பிளையும் காதால கேக்க முடியாது. பொண்ணுங்க தூங்க மாட்டாங்க. பரவால்லையா?”
“சரி விடு. அப்புறமா தனியா எங்கிட்ட சொல்லு. உன்கிட்டையும் தப்பா நடந்துக்கிட்டதால அவனை வெட்டிட்ட . சரியா?”
“ஆம்!” தலை ஆடியது.
“எத்தனை நாள் ஆச்சு சாப்பிட்டு?”
“ரெண்டு நாள்”
“மதுவின் கண்ணசைவில் அடுத்த சில நிமிடங்களில் அவளுக்கு ப்ரியனி பொட்டலம் வந்தது. ஒன்று அல்ல. மூன்று”
அவள் வயதிற்கு பாதி உண்டாலே அதிசயம்தான்.
இது பசியினால் அல்ல. மனதின் பிரச்சனை என்பதை மதுவினால் புரிந்துக் கொள்ள முடிந்தது. திருப்தியாக உண்டு முடித்தவள் கைகளை கழுவிக் கொண்டாள் . ரத்தம் தெளித்திருந்த முகத்தையும் கழுவினாள் .
“கை கழுவிட்டேன். முகம் கழுவிட்டேன். கொலைகாரின்னு இருக்கற இந்த பட்டத்தை?”
ஓவென கதறினாள்.
அனைவருமே வாயடைத்துபி பொய் பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கு தோள் கொடுத்து நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள் மது.
இது கொஞ்சம் ஹார்ஷான பகுதி தான். காதல் வருன்னு போட முடியாது.
தொடரும்…..கண்மணியே காதல் என்பது-15

