Loading

 

 KKEN-13

  மற்ற பெண்களைப் போலத்தான் வித்யாவும். ஞாயிறு என்பது உறங்குவதற்குத்தானே? ஆனால்  அந்த பழக்கம் மாறுகிறதே ? எப்போதும் வித்யாவை சுற்றிப் பல தோழிகள் இருப்பார்கள். நிறைய அரட்டை அடிப்பாள். இப்போதெல்லாம் அதுவும் குறைந்து  கொண்டு வருகிறதே?அடிக்கடி கையில் மெஹந்தி போட்டுக் கொள்கிறாள்.

“ஏதேது! புதுசா அரைச்ச மருதாணி வைச்சு விட சொல்லற?”

“சும்மாதான். வச்சா நல்லா  இருக்கு.”

அன்னைக்கு பதில் கூறியவளுக்கு முகம் எதற்கு சிவக்கிறது.

மருதாணி எப்படி பற்றி இருக்கிறது. சிவக்கிறதா. அவனுக்கு என் மேல எவ்ளோ ஆசை ? பார்க்க ஆசை . வெற்றி மருதாணி நல்லா இருக்கா ? அவனிடம் கை நீட்டி முத்தம் வாங்கிக் கொள்ள ஆசை. அதிலும் இரண்டு கையிலும் சேர்த்து வைத்து அவன் மருதாணி வாசம் இழுத்து விட்டு கொடுக்கும் முத்தம் நினைக்கும் போதே இவள் உடல் சிலிர்க்கிறது. இல்லை மருதாணி அவனுக்குப் பிடிக்கும் . அதனால் இவளுக்கும் பிடிக்கிறது .

அன்னையிடம் மறைக்கவும் முடியவில்லை. பொய் சொல்லவும் முடியவில்லை. முகம் திருப்பி பதில் சொல்லுவாள். மகளை அறியாதவளா அன்னை !

  ஏதோ தோழியின் பிறந்த நாள் விழாவாம் .பர்பிள் நிற உடையில் வானத்து தேவதை இறங்கி வந்தது போலவே இருந்தாள். நோ மேக் அப் லுக் அவளுக்கு அத்தனை பாந்தமாக பொருந்தி இருந்தது. மகளை பார்த்த அன்னையே மயங்கும்போது மற்றவர்கள் மயங்க மாட்டார்களா? நான் சொல்வது வெற்றியைப் பற்றி மட்டும் அல்ல. உங்களுக்குப் புரிந்திருக்கும். நான் சொல்வது அதிபனையும் சேர்த்துதான்.

 பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்திருந்தவனே அதிபன் தானே? இவள் தோழியின் ஒன்று விட்ட அண்ணன். பெயர் தான் ஒன்று விட்ட அண்ணன். இவள் தோழி பிறந்த போது  குழந்தையை கையில் வாங்கியது முதல் இப்போது வரை அவளைக் கண்ணும் கருத்துமாக பார்த்துப் பார்த்து வளர்த்துக் கொண்டிருப்பவன் அதிபன் தான். பர்த்  டே பேபி  அணிந்திருக்கும் ஆடை கூட அவன் அழைத்து சென்று ஆடை வடிவமைப்பாளரிடம் பிரத்தேயேகமாக ஆர்டர் செய்தது தான். என்ன சில ஆயிரங்களில் முடித்திருக்கலாம். அப்படி செய்தால் அதிபன் இல்லையே. சில லட்சங்களில் மட்டும் ஆடை வாங்கிக் கொடுத்தான். ஆடை மட்டும் போதுமா? அதற்கு ஏற்ற நகைகள்? அதுவும்தான். தங்கைக்காக செலவு செய்பவன் அவன் லட்சம்,கோடி என்று எல்லாம் பார்ப்பவன் இல்லை. அப்படிப்பட்டவன் ஏற்பாடு செய்த விழா என்றால்?

 விழாவிற்கு வருபவர்கள் அனைவருமே நிச்சயம்  பெரிய பெரிய பணக்காரர்கள்தான். நமக்கு பெயர் தெரியாத பல வெளிநாட்டு மாடல் கார்களில் மற்றவர்கள் வந்திறங்க., ஒருத்தி மட்டும் ஆட்டோவில் வந்தாள் . திரும்பி நின்று பேசிக் கொண்டிருந்த அதிபன் ஆட்டோ சத்தம் கேட்டு ஆச்சர்யமாக அவளை பார்த்தான். அவனைத் தவிரவும் வேறு பலரும் கூட வியந்து பார்த்தார்கள்.

பலப் பெண்களை பார்த்திருக்கிறான். இவள்? அவள் உடையே சொன்னது அவளின் பண உயரத்தை. எதற்காக ஆட்டோவில் வந்து இறங்கினாள்? இவள் அன்று கல்லூரியில் பார்த்த பெண் அல்லவா ? அன்று புடவை கட்டி இருந்த தேவதை வித்யா நொடியில் கண் முன் வந்து போனாள் .

“நான் எப்படி இருக்கேன்?” அவள் முகம் முழுவதும் அத்தனை பூரிப்பு. தன்னவன் தன்னை எப்படி ரசிப்பான் என்ற ஆசை. எதிர்பார்ப்பு. அவள்தான் அவனிடம் காதலை சொல்லி இருக்கிறாள். அவன் இன்னும் பதில் சொல்லவில்லை என்பதெல்லாம் அவள் மனம் யோசிக்கவில்லை.

“உங்களுக்கு என்ன மேடம்? நீங்க தேவதை” வெற்றி இப்படி சொல்வான் என்று ஆசையுடன் அவன் முகம் பார்த்தாள் .

அவனோ இவளை ஏற இறங்க பார்த்துவிட்டு , அலட்சியமாக ,

“நல்லாத்தான் இருக்கு” என்றான்.

 அவனின் ஒற்றைப் பார்வைக்கும் ஒற்றை வார்த்தைக்கும் தானே இத்தனை மெனக்கெடல். முகம் முழுவதும் மகிழ்ச்சிப் புன்னகையில் மிதந்தவளை அவனின் ஒற்றைச் சொல் நிகழ் உலகிற்கு கொண்டு வந்தது.

“இது என்ன பதில்?”

சிறு குழந்தை போல உடைத்து பிதுக்கி அழுது விடுவாளோ?’

தன் உயிரின் முகம் பார்த்தவனுக்கு கஷ்டமாகத் தான் இருந்தது. அப்படியே அவளை கையில் அள்ளி  எடுத்து  முகம் எங்கும் எச்சில் முத்தம் வைக்க ஆசையாகத் தான் இருந்தது. என்ன செய்வது? தனக்கு அந்த தகுதி இல்லையே? அவனுக்கு மட்டும் தகுதி இருந்திருந்தால் அவளை முதன் முதலில் பார்த்த அன்றே  அவள் அப்பாவிடம் சென்று பெண் கேட்டிருப்பானே ? அந்த அரண்மனை போன்ற வீட்டில் இருக்கும் பெரிய சோபாவில் நடுநாயகமாக அமர்ந்து உங்கள் பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது, திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்டிருப்பானே?

அவள் தன் காதலை சொன்ன போதே இவன் சவாரிக்கு வர முடியாது என்று கூறி இருப்பான். இருந்தாலும் அன்று  அவள் வேறு ஒரு ஆட்டோவில் சென்று மாட்டிக் கொண்டதால் வர மாட்டேன் என்று சொல்ல அவனுக்கு வாய் வரவில்லை. அது மட்டுமா? அவனும் தானே அவள் மீது அத்தனை ஆசை வைத்திருந்தான். அவளைப் பார்க்காமல் அவனால்தான் இருந்து விட முடியுமா? மனம் வேண்டாம் என்று சொன்னாலும் அவள் ஊருக்கு சென்ற போது கூட வீடியோ காலில்  அவள் முகம் பார்த்தவன் தானே?

“திரும்பி போகறச்சே ஒன்னும் நீ வர வேணாம். நான் ஒன்னும் ஒனக்கு கால் பண்ண மாட்டேன்” சொல்லி விட்டு மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு செல்பவளை பார்த்தால் சிரிப்புத் தான் வந்தது.

  அவனிடம் கோபப்பட்டுக் கொண்டு தோழியின் வீட்டு வாயிலை அடைந்தாள் அப்போது அங்கே ஒரு ஜாகுவார் கார் பின்னே வரவும் இவள் ஓரமாக ஒதுங்கி கொண்டாள் . அப்போது எதிர் பாராமல் கல் தடுக்கி கீழே விழப் போனவளை பாய்ந்து வந்து பிடித்துக் கொண்டான் அதிபன். எதிர்பாராமல்தான் அவளை அவன் பிடித்தான். பிடித்தான் என்று கூட சொல்ல முடியாது கையை நீட்டினான். கீழே விழாமல் அவன் கைகளில் விழுந்தாள் நம் தேவதை. நிச்சயம் அதில் எந்த தவறான எண்ணமும் இல்லை என்றாலும் அவன் கை அவளின் இடையிலும் அதற்கு மேலும் பட்டிருந்தது.  அவளுக்கு இது என்ன உணர்வு? அவளைத் தூக்கி நிறுத்தியவன்,

“ஆர் யூ  ஆல்ரைட்?” கேட்டுக் கொண்டிருக்கும்போது தோழி வந்து விட்டாள் . இருவருக்கும் அறிமுகம் செய்து  வைத்தாள் . அவள் கைகள் இன்னும் அவன் பிடியில்தான் இருந்தது. சில்லிட ஆரம்பித்திருந்த இவள் கைகளுக்கு அவன் உள்ளங்கை சூட்டை தானமாக கொடுத்துக் கொண்டிருந்தான்.

“ம்ம் ! எஸ்! தேங்க்ஸ்! இப்ப ஓகே!” மெதுவாக கையை  உருவிக் கொண்டாள் .

அதற்குள் கேக் கட்டிங் செய்யப் போகும் அறிவிப்பு வந்ததும், மேடைக்கு தங்கையுடன்  விரைவாக விரைந்தான் அதிபன் அருணாச்சலம்.

  பிறந்தநாள் விழா நடந்து கொண்டிருந்தது. இவளுக்குத்தான் உள்ளூர ஒரு விதமான பயம். கீழே விழப்போனவளை கைப் பிடித்து தாங்கியது குற்றமா? அல்லது பயம் நீங்க இன்னும் சற்று நேரம் அவள் கைகளை தன் கைக்குள் வைத்துக் கொண்டது தப்பா ? இந்த காலத்தில் இது எல்லாம் சகஜம்தானே? ஆனால்  தனக்கு ஏன் உள்ளூர இந்த நடுக்கம். அவளுக்குப் புரியவில்லை. மற்றத் தோழிகளுடன் இணைந்து  சிரித்து  பேசிக் கொண்டிருந்தாலும் மனதில் மட்டும் முனுமுனு வென்று ஏதோ சொல்ல முடியாத கலவரம். வேறு எந்த விஷயத்திலும் அவளால் கவனம் செலுத்த முடியவில்லை .

  மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு விரைவாகவே கிளம்பி விட்டாள் .

“நான் கிளம்பறேண்டி. நாளைக்கு பாக்கலாம் . உங்க அண்ணன்  கிட்டையும் சொல்லிடு.”

“ஓ ! ஓகே! ஓகே! சொல்லிட்டா போச்சு.” தோழியின் குரல் வேறு மாதிரி ஒலித்தது.

திரும்பி அழைத்துச் செல்ல வெற்றியே வந்து விட்டான். அவளுக்காகவே அருகில் வந்த சின்ன சின்ன சவாரியை மட்டும்  எடுத்துக் கொண்டான். அவள் அழைக்கும் போது அங்கேயேதான் அருகிலேயே இருந்தான்.

 பார்ட்டிக்கு வந்த போது  இருந்த களை  இப்போது வித்யாவின் முகத்தில் இல்லை. அங்கே ஏதோ நடந்திருக்கிறது. என்னவாக இருக்கும்? இல்லை களைப்பாக கூட இருக்கலாம்.’

 “வெற்றி! வண்டிய கொஞ்சம் ஓரமா நிறுத்துங்களேன்.”

இரவானதாலோ என்னவோ அந்த சந்தில் பெரியதாக ஆள் நடமாட்டமில்லை.

ஓரமாக நிறுத்தி விட்டு அவன் கீழே இறங்கி நின்றுக் கொண்டான். தொடர்ந்து வண்டி ஓட்டியதில்  முதுகு சற்று வலிப்பது போல இருந்தது . சோம்பல் முறித்துக் கொண்டான்.

 அவன் எதிர் பாராத நேரம் பின்னோடு வந்து வித்யா கட்டிக் கொண்டாள் .

“வெற்றி ப்ளீஸ்! என்ன தள்ளி விட்டுடாத”

இப்போது அவள் கையை விலக்கி முன் புறமாக திரும்பிக் கொண்டான்.  அவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

“என்னாச்சு மேடம்?”

“மேடம் இல்ல. வித்யா சொல்லு”

“என்னாச்சு தியா?” குரலில் அத்தனை மென்மை .

“தெரிலடா. ஏதோ ஏதோ ஒரு பயம் மனசுக்குள்ள. எனக்கு என்னன்னு சொல்ல தெரிலடா.”

“அங்க என்ன நடந்துச்சு? யாராவது திட்டினாங்களா ?”

இல்லை என்று மண்டை ஆட்டினாள்

“பிரண்ட்ஸ் யாராவது கிண்டல் செஞ்சாங்களா ?”

அதற்கும் இல்லை என்று தான் மண்டை ஆட்டினாள் .

“அப்ப என்னதான் ஆச்சு? போகும் போது நல்லாத் தானே போனீங்க?”

அங்கே நடந்ததை கூறினாள் .

“அசோ இதுக்காகவே பயந்து போனீங்க? அந்த சார் உங்களுக்கு நல்லது தானே செஞ்சாங்க?”

அவள் முகம் நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டு கண்களை துடைத்து விட்டான்.ஒரு கன்னம் காட்டினாள். முத்தம் வைத்தான். மறு  கன்னம் காட்டினாள். அங்கேயும் முத்தம் வைத்தான். நிச்சயம் அவள் வளர்ந்த குழந்தைதான்.

” வெற்றி !”

“ம்!”

அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

“இருவரின் இதயம் மட்டும் சத்தம் போட்டுக் கொண்டிருக்க வாகன சத்தம் கூட இல்லாமல் அங்கே ஒரு அமைதி. அதைக் கலைத்தது ஒரு நாயின் குரல்.

அவள் முகத்தை உள்ளங்கையில் ஏந்திக் கொண்டவன்,

“வீட்டுக்கு போய் சுடுதண்ணில குளிச்சுட்டு நெத்தில விபூதி இட்டுக்கிட்டு அம்மா மடியில தலையை வச்சுப் படுங்க. மனசுல இருக்கற பயமும் போய்டும். உடம்புல இருக்கற அசதியும் போய்டும்” சொல்லிக் கொண்டே வண்டியை இயக்க அமர்ந்துக் கொண்டான் .

  தனக்குத் தகுதி  இருந்திருந்தால் வித்யாவை காலமெல்லாம் உள்ளங்கையில் தாங்கி இருக்கலாம் என்ற ஏக்கம் வெற்றிக்கு உண்டுதான். அதற்கு காலம் ஒத்துழைக்கும். ஆனால்  இவனுக்கு அந்த தகுதி வரும்போது வித்யாதான் பாவம் அதிபனுக்கு சொந்தமாகி இருப்பாள்.

வீட்டுக்கு அருகில் வந்து இறங்கியதும்,

“வெற்றி !

“சொல்லுங்க மேடம் !”

“நான் ஒன்னு கேட்பேன் செய்வியா?

“என்ன சொல்லுங்க மேடம் “

“என்னை எந்த நிலைமையிலும், எனக்கு என்ன ஆனாலும் என்ன நீ விட்டுட கூடாது வெற்றி. ப்ளீஸ் !”

“தியா! எதுக்கு இந்த மாதிரி எல்லாம் யோசிக்கற ?

“தெரில வெற்றி . மனசுக்குள்ள ஏதோ சொல்ல முடியாத ஒரு பீலிங்.”

“நீங்க முன்ன பின்ன கூட்ட நெரிசல் பஸ்சுல எல்லாம் போனதே இல்ல. உங்களை எந்த ஆம்பிளையும் நெருங்கவே இல்லை. அதுனால தான் அந்த சார் சாதாரணமாத் தொட்டது கூட உங்களுக்கு இவ்ளோ பயத்தை கொடுத்திருக்கு. வேறு ஒன்னும் இல்ல. எதை நினச்சும் மனசை குழப்பிக்க கூடாது சரியா? “

இப்போதும் அவள் முகம் தெளிவடையவில்லை.

“என் ராசாத்தி!இந்த ட்ரேஸுல எவ்ளோ அழகா இருக்க தெரியுமா ?” முகம் வழித்து திருஷ்டி கழித்தான். அத்தனை விரல்களும் சத்தத்தை எழுப்பிக் காட்டியது அவளுக்கு இருக்கும் கண் திருஷ்டியை.

இப்போது அவள் முகத்தில் மலர்ந்தது புன்னகை.

“இப்படித்தான் சிரிச்சுகிட்டே இருக்கனும். போ போய் தூங்கு.” இயல்பான குரலில் அழகாக காதலைக் காட்டினான் அவள் வெற்றி.

காதல் வரும்..

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்