

உடன் பிறந்தவனை முதுகில் போட்டு அடி வெளுத்து வாங்கினாள் .
அவளுக்குத் தான் கை வலித்தது. அவனுக்கு எறும்பு கடித்தது போலத் தான் இருந்தது. இருந்தாலும் அக்காவிடம் கெட்ட பெயர் வாங்கியதை மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதுவும் தான் எந்த தவறும் செய்யாதபோது?ஒரு பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதும், அன்பாக பேசுவதும் அவள் மனதை பாதிக்கும் என்பதை அவன் நிச்சயம் அறிந்திருக்கவில்லை. தினமும் பார்ப்பவள். உரிமையுடன் சிரித்து பேசினான். இது ஒரு தவறா என்றே அவன் நினைத்தான். அவனுக்குப் புரியாத பல விஷயங்கள் அவன் அக்காவுக்குப் புரிந்தது. எங்கே தவறு என்பதை அவள் துல்லியமாக அறிந்து இந்த விஷயம் தந்தைக்கு தெரிந்தால் வெற்றிக்கு முதுகில் தோல் இருக்காது. பெல்டால் அடி பின்னி விடுவார். அதுவாவது பரவாயில்லை. அந்த பெண் வசதியானவள், போலீசு கேசு என்று போனால் நம்மால் சமாளிக்க முடியுமா? அல்லது அடியாள் அது இது வென்று ? பணம் படைத்தவர்கள் தான் என்ன வேண்டுமானாலும் செய்வார்களே? இவளுக்கு மனம் பதைத்தது . வெற்றி இத்தனை தூரம் எல்லாம் யோசித்திருக்கவில்லை. அடுத்த ஒரு வாரத்தில் திரும்பி வரும் வித்யாவுக்கு என்ன பதில் சொல்வது என்றே யோசித்திருந்தான்.
என்ன செய்வது? எப்படி தம்பியை இதிலிருந்து வெளியில் கொண்டு வருவது? மலரும் யோசித்தாள் .
என்ன செய்வது ? யோசித்த மலர் கேட்டாள் .
“ஒனக்கு வித்யா மேடத்தை தவிர வேற யாரையாவது அவங்க வீட்டுல தெரியுமா?“
“சில தடவை அவங்க அம்மாவும் நம்ம வண்டில தான் வருவாங்க“
“அவங்க என்ன மாதிரி?“
“நல்ல டைப் தான் “
“அப்ப அவங்க கிட்ட நீயே விஷயத்தை போட்டு உடைச்சுடு“
“அக்கா!“
“இங்க பாரு வெற்றி. அந்த அம்மாகிட்ட விஷயத்தை சொன்னோமா அந்த வீட்டுக்கு ஒரு ஒரு முழுக்க போட்டோமான்னு இருந்துக்க. அப்பாக்கு தெரிஞ்சுது தோலை பிச்சு எடுத்துருவாங்க. அதோட அவங்க எல்லாம் பெரிய பணக்காரங்க. அவங்க மேலே தப்பே இருந்தாலும் ஏழைங்களைத்தான் அவங்க வச்சு செய்வாங்க. நினைப்புல வச்சுக்கோ.“
“அவங்க பணக்காரங்க. வித்யா வேணுமின்னா உன்னை லவ் பண்ணறதா சொல்லலாம். நாளைக்கே அவங்களுக்கு ஒரு அழகானப் பணக்கார பையன கொண்டு வந்து நிறுத்தினா அவங்க மனசு மாறுமான்னு தெரியலை.“
“அக்கா அவங்க அப்படி எல்லாம் பணத்துக்கு மயங்கரவங்க இல்ல. அவங்களை பத்தி தப்பா பேசாத.“
தம்பியின் இந்த பேச்சில் மலருக்கு கவலைதான் அதிகமானது.
“சரி! நீ சொல்லறது சரியா கூட இருக்கலாம். அவங்க நல்லவங்க தான். ஆனா இப்ப அவங்களுக்கு உன் மேல இருக்கறது காதலான்னுக் கூட உனக்கும் சரி அவங்களுக்கும் சரி தெரியலை. அதை தப்புன்னு சொல்லிட முடியாதுடா. ரெண்டு பேருக்கும் வயசு அப்படி. நிறைய பேரு அவங்க பின்னாடி சுத்தி இருப்பாங்க. நீ நேர்மையா பழகவும் அது அவங்களுக்குப் புடிச்சிருக்கு. அதை அவங்க தப்பா காதல்னு நினைச்சுருக்கலாம். அதுவும் இல்லாம அவங்க பெரிய இடம். பண பலம் அதிகம். போலீசு கேஸுன்னு என்ன வேணுன்னாலும் பண்ணலாம். இல்ல., அடியாள் அது இதுன்னு என்ன வேணுண்னாலும் நடக்கலாம். எத்தனை ஆணவ கொலைகள் பார்த்துகிட்டு இருக்கோம். சிலர் பணம் அந்தஸ்து இருந்துட்டா ஜாதிக் கூட பாக்க மாட்டாங்க. அதுவே ஒரே ஜாதிக்காரனா இருந்தாலும் பணமிருக்கா புள்ளைய நல்லா பார்த்துக்குவானான்னு பாக்கத்தான் செய்வாங்க . நம்ம அப்பா என்னைய பண்ண மாதிரி எல்லாரும் பண்ண மாட்டாங்க வெற்றி. அவங்கவங்க வீட்டுப் பொண்ணு தான் அவங்கவங்க அப்பாவுக்கு முக்கியம்.“
“என்னக்கா சொல்லற நீ? நீ என்னமோ ரொம்ப பயப்படாரியோன்னு தோணுது . நான் இத்தனை விஷயம் யோசிக்கவே இல்லக்கா .“
“யோசிக்கணும் டா. எல்லாத்தை பத்தியும் யோசிக்கணும். ஒரு விஷயத்துக்கு ஆயிரம் முறை ஆயிரம் விஷயங்களை சேர்த்து யோசிக்கணும் வெற்றி.“
‘இந்த வயதிலேயே இவளுக்கு இத்தனை மன முதிர்ச்சியா? அவளுக்கும் தனக்கும் பெரிய வயது வேறுபாடு எல்லாம் இல்லை. ‘ அக்காவை பார்த்து அவனுக்கு பிரமிப்பாகத் தான் இருந்தது.
“
“என்ன வெற்றி? வந்து நேரம் ஆச்சோ?” அக்காவும் தம்பியும் பேசிக் கொண்டிருக்கும்போதே இடையில் புகுந்தாள் மலரின் மாமியார்.
“இல்ல அத்த இப்ப தான்.“
“ஓ ! அக்காவுக்கு என்னடா சீரு கொண்டாந்திருக்க? ” வழக்கம் போலவே குத்தல் பேச்சு வந்தது.
அப்போதுதான் தான் வெறும் கையோடு அக்காவை பார்க்க வந்திருப்பது அவனுக்கேப் புரிந்தது.
அவன் அமைதியை மலரின் மாமியார் புரிந்து கொண்டாள் .
“பரவால்ல வுடு வெற்றி. இப்ப இல்லன்னா என அடுத்த தடவை சேத்து வச்சு செய்ய போற” குத்தலாக சொன்னாலும் அடுத்த முறை பல்க்காக ஏதாவது செய்ய வேண்டும் என்றும் பிட்டு போட்டு விட்டாள் .
“மலரு! இந்த மாச சீட்டு இன்னும் கட்டலியா ? பாண்டியம்மா வழில பார்த்து கேட்டுச்சு அதை உடனே கட்டிடும்மா” அன்பொழுகப் பேசினாள் .
இரு குடும்பங்களின் சீட்டு கட்ட வேண்டும்.
அவளிடம் எங்கே அத்தனை பணம் இருக்கும்?
வேண்டுமென்றே தான் வெற்றி இருக்கும்போதே சொன்னாள் . அதன் அர்த்தம், அக்காவுக்குக்காக வெற்றி கட்ட வேண்டும் .
“அப்டியே அந்த கேபிள் டீவி பணத்தையும் கட்டிடும்மா.“
“அத்தை ! அவங்க பணம் எதுவும் குடுக்கலியே?” வாய் நுனி வரை வந்த வார்த்தை பயத்தினால் மீண்டும் உள்ளேயே சென்று விட்டது. தம்பி இருக்கும் வரை மாமியார் ஒன்றும் சொல்ல மாட்டாள்தான். அவன் சென்ற பிறகு வேறு ஏதாவது காரணம் சொல்லி இவளே அடி பின்னி விடுவாள். அல்லது கணவனிடம் தாறுமாறாக ஏதாவது சொல்லி கலகமூட்டுவாள்.
நல்லவன் மிக நல்லவன். என்னவென்று விசாரிக்கக் கூட மாட்டான். அவனை பொறுத்தவரையில் மலர் மனைவி அல்ல. வீட்டு வேலை செய்ய வேண்டும். உணவு செய்து வைக்க வேண்டும். உடலுறவு வைத்து கொள்ள வேணும். தான் ஒரு மகாராஜா. அவள் ஒரு அடிமை. மலரின் கணவன் பணம் சம்பாதிப்பான். அவனாக வீட்டிற்கு எதுவும் கொடுக்க மாட்டான். மாமியார் சில வீடுகளில் வேலை செய்தாள் . மலர் தையல் வேலை செய்தாள் . அவன் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை குடிக்க வைத்துக் கொள்வான். மலரிடம் இருந்து பிடுங்கி வேறு பெண்களுக்கு கொடுப்பான். அவன் அன்னை சில பல சமயங்களில் அவனிடம் இருந்தும் பிடுங்கி கொள்வாள். அவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கழியவில்லை . தினமும் அடிதடி சண்டை, கண்ணீர் என்று ஒரே மாதிரிதான் சென்றுக் கொண்டிருந்தது. வெற்றி வரும்போது இது போல பல விஷயங்களுக்கு மாமியார் காசை கறந்து விடுவாள். மலரின் மாமியாரை பார்க்கும்போதெல்லாம் வெற்றியின் மனதில் ,
“காம்பினில் பசும்பால் கறந்தால் அதுவா சாதனை? கொம்பிலும் நான் நான் கொஞ்சம் கறப்பேன் அதுதான் சாதனை ” வசூல் ராஜா கமலஹாசன் வந்து பாடிவிட்டு போவார். இப்போதும் பாடிவிட்டுத் தான் போனார். என்ன? அவரால் பணம் கறக்க முடியாத ஒரு ஜீவன் உண்டு என்றால் அது தந்தை தான். கழுவுற மீனுல நழுவுற மீனுதான் அவர். அந்த சாமர்த்தியம் வெற்றிக்கு இல்லை.
“சரிங்க அத்தை” மனதில் வந்த சினிமா பாடலை “அடங்கு” என்று அடக்கி விட்டு அமைதியாகவேச் சொன்னான்.
“சரிக்கா! நான் கிளம்பறேன்.“
வந்தவனுக்கு ஒரு வாய் தேநீர் கூட கொடுக்கவில்லை.
“டேய் டீ யாவது குடிச்சுட்டு போடா.“
‘பரவால்ல வேணாம்.“
தம்பியின் முகம் காண சகிக்கவில்லை மலருக்கு. பாவம் பசித்திருக்கும். ஒரு வாய் சோறு கூட போட முடியாதவள். மனதில் பாரம் அழுத்தியது. பெரு மூச்சு விட்டு நகர்ந்தாள் . ஏதோ பேச வேண்டும் என்று வந்தவனுக்கு தன்னால் தண்ட செலவு.
தோழனுக்கு அழைத்து பாங்கில் காசு போட சொன்னான்.மலரின் மாமியார் கட்ட சொன்ன இடங்களுக்கு பணத்தை கட்டினான். ஏனோ அக்காவிடம் பேசி விட்டு வந்தது இருந்து மனதில் ஒரு தெளிவு வந்தது.
வித்யா கல்லூரியில் அழைத்து சென்றிருந்த சுற்றுலாவில் இருந்து இன்னும் வந்திருக்கவில்லை. அவள் அன்னை வழக்கம் போல வெள்ளி அன்று வெற்றியின் ஆட்டோவில் பிரயாணித்தார். அக்காவின் அறிவுரைப்படி காயத்ரியிடம் விஷயத்தை சொல்லி விட்டான்.
“மேடம்! உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்“
வண்டியை ஓரம் கட்டிவிட்டு எப்படி சொல்வது? எப்படி ஆரம்பிக்கத் தயங்கினான். யோசிக்கவில்லை. ஏற்கனவே பலமுறை யோசித்ததுதானே. இருப்பினும் தான் சொல்வதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? வார்த்தைகளை கோர்வையாக, பாந்தமாய் சொல்ல வேண்டும். வித்யாவை குற்றம் சாட்டுவதாக இருந்துவிடக் கூடாது.
“சொல்லுங்க வெற்றி“
“மேடம், அது வித்யா மேடம் என்ன விரும்பறாங்க மேடம். இது சரிப்பட்டு வராதுன்னு சொன்னாலும் அவங்க புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. அவங்க ரொம்ப நல்லவங்க மேடம். அவங்க நல்லா இருக்கணும். நான்.. அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க. நீங்களும் அய்யாவும்தான் சொல்லி புரிய வைக்கணும்.“
‘தன் மகள் தன்னை விரும்புவதை பெற்றவளிடமே வந்து சொல்பவன் எத்தனை நல்லவனாக இருக்க வேண்டும்?’ வெற்றியை பார்த்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பணக்கார வீட்டுப் பெண். நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் இது சரிப்பட்டு வராது என்று ஒதுங்கிக் கொள்கிறான்.
அவளுக்கு மனதின் ஓரத்தில் சிறு ஆசையும் வந்து. இது சரியா? யோசிக்க ஆரம்பித்தாள். வெற்றி சொல்லுவதை மட்டும் வைத்துக் கொண்டு மகள் மீது சந்தேகப்பட முடியுமா? ஒரு வேளை அவனே நல்லவன் போல நடித்து ஏமாற்றுவதாக இருந்தால்?
மகள் ஊரில் இருந்து வந்தவுடன் வழக்கம்போல கல்லூரிக்கு சென்று விட்டு திரும்பி வந்தாள். ‘எதையும் ஒடனே முடிவு செய்ய கூடாது.’ மகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக பார்க்க தொடங்கினாள்.
வித்யாவுக்கு எப்போதுமே உடை, நகை அலங்காரத்தில் எல்லாம் அக்கறை இல்லை. பார்லருக்கு சென்றாலும் புருவத்தை சரி படுத்திக் கொள்வாள். அதற்கு மேல் வேறு ஒன்றும் இல்லை. ஆனால் இப்போது பார்லருக்கு சென்றிருக்கிறாள். ஊருக்கு செல்வதற்கு முன்னால் ஏன் செல்லவில்லை?
வந்தவள் பேசியல் செய்துக் கொண்டு வந்திருக்கிறாள்.
“என்ன திடீர்னு பார்லர் போய்ட்டு வந்துருக்க? அதுவும் பேசியல் பண்ணி இருக்க?“
“ப்ச்! ம்மா! இது ஒரு குத்தமா?“
“நீ மத்த பொண்ணுங்கள மாதிரி எப்பவும் போகறதா இருந்தா தப்பு இல்ல. பட் புது பழக்கமா இருக்கே. அதான். சாதாரணமாத்தான் கேட்டேன். இதை ஏன் குத்தமா யோசிக்கற?“
“இல்லம்மா. கொஞ்சம் பிளாக்கெட்ஸ் இருந்தது. அதான்.“
“அப்டியா சரி“
எப்போதும் ஏதோ ஒரு குர்தி ஏதோ ஒரு கம்மல் என்று வருபவள் , இப்போதெல்லாம் அடர்ந்த நிறங்களில் உடுக்க ஆரம்பித்தாள். அதற்கு மேட்சாக கையில் காதில் போட்டுக் கொண்டாள். மகளுக்கு உதட்டுச் சாயம் கூட பூசத் தெரியுமா? இப்போதெல்லாம் அடிக்கடி ஷாப்பிங் செல்கிறாள். அதுவும் ஞாயிறுகளில்.
காதல் வரும்

