
அத்தியாயம் 33 :
“இந்த நாலு வருடம் என் பேபியை விட்டு எப்படி இருந்தன்னே தெரியல.”
அவளுக்குத் தெரியாத நிகழ்வுகளையும் காரணங்களையும் சொல்லியவன், அவள் நெற்றியை தன் நெற்றியோடு முட்டி அவ்வாறு கூறினான்.
அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பேச்செழ நா மறுத்தது.
‘கடந்து சென்ற நான்கு வருடங்களும் தன்னைப்போல் அவனும் காதலில் வலியை அனுபவித்திருக்கிறான் என்றதும்… அவ்வலியை அவனுக்கு முன்பே அறிந்திட்டவள், தன்னவனுக்காக இப்போது வேதனை கொண்டாள்.’
தங்களின் பிரிவுக்கு பின்னால் இப்படியொரு காரியத்தை அவள் எதிர்பார்க்கவில்லை.
தன்மீது அவன் கொண்ட காதலே காரணமென்று அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தந்தையின் செயலுக்கு காரணம் விளங்கினாலும் மனம் அவரை வைவதை நிரலியால் தடுக்க முடியவில்லை.
‘அவரால் தான் இந்த பிரிவு.’ மனதால் தந்தையின் மீது பொய் கோபம் கொண்டாள்.
ஆதியின் காதலையும்… அவனின் வேதனையையும் கேட்டுக் கொண்டிருந்தவள் ஒருவித உணர்வில் ஆட்கொள்ளப்பட்டு அவனை இடையோடு இரு கைகள் கொண்டு கட்டியிருந்தாள்.
தான் சொல்லி முடித்த பிறகு எவ்வித எதிர் வினையும் ஆற்றாது அமைதியாக இருக்கும் மனைவியின் முகம் உயர்த்தி,
“எதாவது பேசி பேபி… எதுக்கு இந்த அமைதி?” எனக் கேட்டான்.
அவ்வளவு தான் நிரலியின் மனம் நடப்புக்கு மீண்டிருந்தது.
அவனின் மடியிலிருந்து விலகி, மெத்தையை விட்டு கீழிறங்கியவள்,
“அப்பா சொன்னதுக்காக என்னை விட்டுட்டு வந்திருக்கீங்க! அப்படித்தானே?”
அவளின் குரலில் என்ன இருந்ததென்று ஆதியால் கண்டுகொள்ள முடியவில்லை.
“பேபி…!” அவளின் குரலில் பேதம். விளங்காத் தன்மை. சற்று அதிர்வுடன் விளித்தான்.
“என்னய்யா பேபி? எனக்கு வர கோபத்துக்கு அப்படியே…” இரு கைகளையும் அவனை நெறிப்பது போல் கொண்டு சென்றவள், அடிப்பதற்கு ஏதேனும் கிடைக்கிறதா சுற்றி பார்வையால் தேடினாள்.
“பேபிம்மா… என்னடா? என்ன தேடுற?”
“உங்களை அடிக்கத்தான்” என்றவள் அவனுக்கு அருகிலிருந்த தலையணையை எடுத்து நன்கு மொத்தினாள்.
“அச்சோ பேபி… இப்படிலாம் பண்ணக் கூடாதுடா… உள்ள பேபி இருக்குல்ல…”
மனைவியின் அடிகளை சுகமாக தாங்கியவன்… அவளின் நலனில் அக்கறைக் கொண்டு பேசினான்.
“ஆமாம் ரொம்பத்தான் பொண்டாட்டி மேல் அக்கறை.?” முகத்தை வெட்டித் திருப்பினாள்.
“லவ்வுடி பேபி… லவ்வு…” நின்று கொண்டிருந்தவளை வளைத்து கன்னத்தில் முத்தம் வைத்தான்.
“இனி இந்த கிஸ் கொடுக்குற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க! லவ்வாம் லவ்வு”
“ஏன்டா…? நான் கொடுக்காமல் எப்படி?” அப்பாவியாக தன் தொடையில் கை முட்டி ஊன்றி உள்ளங்கையால் கன்னத்தை தாங்கியவாறு கேட்டான்.
“ஏன் என் லவ்வுக்கு என்ன குறை?” அவளின் இடையோடு வளைத்து தன்னருகில் இழுத்தான்.
கணவனின் பிடியிலிருந்து திமிறி விலகியவள்…
“போய்யா!” என்றவளாக நகர்ந்து செல்ல…
“மெதுவா நட பேபி” என்றான்.
“அப்படி தான்டா நடப்பேன்” என்றவள் தரை அதிர அடி வைத்து கட்டிலுக்கு எதிரில் இருந்த கோச்சில் சென்று அமர்ந்தாள்.
“என்னது டா’வா?
“ஆமாம்… டா’தான்!”
சிறு பிள்ளையென அவளின் செயலில் புன்னகைத்தவன், அவளின் பின்னாலே வந்து காலுக்கு கீழ் அமர்ந்தான்.
மனைவியின் மலர் பாதங்களை தன் மடியில் தூக்கி வைத்தவன்… மென்மையாக பாதத்தினை தன்னுடைய விரல்களால் அழுத்திக் கொடுத்தான்.
“என்ன செயறீங்க?” காலினை உருவ முயற்சித்தாள்.
“நீ இப்போ வேகமாக வைத்த நாலடிக்கு கால் வலித்திருக்குமே!”
சிறு செயலுக்கும் காதல் கொண்ட அவனின் கரிசனம் மூச்சு முட்ட வைத்தது.
“எதுக்கு என் மேல் இவ்வளவு லவ்?”
“மொத்தமா என்னை சாய்த்த பெண் நீதான்.”
அவனின் வார்த்தைகளில் இன்பம் கொள்வதற்கு பதிலாக, இன்னும் அதிகமாக கோபம் கொண்டாள்.
“இவ்வளவு காதலை வைத்துக் கொண்டுதான் என்னை விட்டுட்டு இருந்தீங்களா?” கேட்கும் போதே ஒற்றை கண்ணிலிருந்து சரேலென கண்ணீர் உருண்டது.
பட்டென்று தன் கை கொண்டு அவளின் கன்னம் தீண்டிய நீர் கீழே விழாது தடுத்து துடித்தவன், அழக்கூடாது எனும் விதமாக தலையை இருபக்கமும் அசைத்து…
“நான் தான் காரணம் சொன்னேனே பேபி” என்றான்.
“ஆமாம் காரணம்” என சத்தமாக சொல்லியவள்… “மாமனார் சொன்னாராம், இவரு கேட்டாராம்” என்று முணுமுணுத்தவளாக அங்கிருந்து எழுந்து கீழே செல்ல…
“என்ன வேணும் பேபி?” எனக் கேட்டவனின் குரலை காதில் வாங்காதவள் வரவேற்பறை நீண்ட இருக்கையில் உடலை குறுக்கி படுத்துக்கொண்டாள்.
சற்று பொறுத்து கீழே வந்தவன், நிரலி அங்கு படுத்திருப்பதைக் கண்டு வேகமாக அவளின் அருகில் வந்து,
“என்ன பேபி இது… இங்க வந்து எதுக்கு படுத்திருக்க?”எனக் கேட்டான்.
அவள் அமைதியாகவே இருந்தாள். அவள் இன்னும் உறங்கவில்லை என்பதை மூடிய விழிகளுக்குள் அலைப்பாய்ந்த அவளின் கருவிழிகள் உணர்த்தின.
“என்ன யோசனை பேபி?” கேட்டவன் குறுகியிருந்த அவளின் காலினை நேராக இழுத்து விட்டான். அவள் குறுக்கிக்கொள்ள மீண்டும் நீட்டி விட்டான்.
“இப்போ உங்களுக்கு என்ன?”
சத்தமாகக் கேட்டவள் வேகமாக எழுந்து அமர்ந்தாள்.
“உனக்கு பேபி நினைவிருக்கா இல்லையா பேபி… நீ இந்த மாதிரியெல்லாம் பிஹேவ் பண்ணக்கூடாது.”
“போய்யா” என்றவள்,
“தேவையில்லாத ஒரு சின்ன காரணத்தை மாமனும் மருமகனும் தூக்கி சுமந்திட்டு இருந்திருக்கீங்க…
இதுல எனனைப்பற்றி நீங்களும் யோசிக்கல இல்லையா? இதுல லவ்வு மட்டும் மலையளவுக்கு.”
இதற்கு என்ன பதில் அவன் சொல்வதாம். அவள் கேட்பதும் நியாயம் தானே!
“டோன்ட் கெட் எமோஷனல் பேபி.”
“நான் அழக்கூட உரிமை இல்லையா?”
“நீ அழுதால் என்னால் பார்க்க முடியாது பேபி.”
“அப்போ இன்னும் நல்லா அழறேன். கத்தி சத்தமா அழறேன். அப்போ வலிக்கும்ல உங்களுக்கு” என்றவள் அவனின் டீசர்டை பிடித்து இழுத்து வயிற்றில் முகம் புதைத்து அழுதாள்.
“ஏன் பேபி இப்படி செய்ற. எனக்கு கஷ்டமா இருக்குடா?”
“எனக்கும் தான் மாமா. நாலு வருஷமா எவ்வளவு வலி, வேதனை, கஷ்டம் இருவருக்கும். யாருக்காக இதெல்லாம். அவருக்கு நம்பிக்கையில்லைன்னா, அவரா காதலித்தார்.
அப்பாக்கு உங்க மேல் நம்பிக்கையில்லைன்னா… நான் என்ன பண்ணேன்.
போகும் போது கை பிடிச்சி கூட்டிட்டு வந்திருந்தால் வந்திருக்க மாட்டேனா?
என் புருஷன் மேல் நம்பிக்கை இல்லாதவருடைய வீட்டில் என்னை நாலு வருஷம் இருக்க வச்சிட்டிங்களே!”
அவ்வளவு ஆற்றாமை அவளிடம். ஆற்றாமை என்பதைவிட ஏமாற்றம். தான் கொண்ட காதலின் வலி அறிந்தும், தந்தையின் நம்பிக்கைக்காக தன்னை பிரித்து வைத்து விட்டானே என்கிற ஏமாற்றம்.
எந்நிலையிலும் தன்னை தன்னுடைய அனைத்தும் விட்டுக்கொடுத்திடக் கூடாது என்பதே ஒவ்வொருவரிடமும் இருக்கும் எண்ணம்.
இங்கு வேலுவின் நம்பிக்கைக்காக தங்கள் இருவரின் காதலையும் விட்டுக்கொடுத்து ஒதுக்கி வைத்துவிட்டானே என்கிற ஆற்றாமை.
கணவனின் காதல் அவனின் மனம் செயலுக்கான காரணம் யாவும் புரிந்த போதும்… உள்ளுக்குள் முனுக்கென்று தைக்கும் வலியை தவிர்க்க முடியவில்லை.
“எப்படி மாமா… உங்களுக்கு என்மீது காதல் இல்லையென்றாலும் பரவாயில்லை! தினம் தினம் நீங்க காட்டும் காதல் என்னை அப்படியே வேறு உலகத்தில் மிதக்க வைக்கிறது. நீங்க காட்டும் அன்பு பிரமிக்க வைக்குது. என் காலினை பிடிப்பதில் கூட அவ்வளவு காதல். இவ்வளவு காதல் என்மீது இருக்கும் போது எப்படி என்னை விட்டு இருக்க முடிந்தது?”
அவளுக்கான அவனின் தவிப்பு, ஏக்கம், எல்லாம் அவனின் மனம் மட்டுமேயல்லவா அறியும். அனுபவித்த வலியை வாய் வார்த்தையாக சொல்லிட முடியுமா? அவ்வெண்ணம் அவனுக்கும் இல்லை.
“ப்ளீஸ் அழாதடாம்மா… நீயில்லாம கடந்து சென்ற வருடங்களில் உனக்காக நான் கொண்ட வலியை விட, இப்போ நீ அழறது… உன்னை இப்படி பார்ப்பதுதான் எனக்கு அதிக வலியைக் கொடுக்கிறது.”
ஆதியின் குரலில் சன்னமான தழுதழுப்பு.
அவனுக்கு வலியை கொடுக்க வேண்டுமென்றே அழுதவள்… அவனின் வலியைக் கண்டு துடித்தாள்.
கணவனின் வயிற்றில் அழுந்தியிருந்த முகத்தினை பிரித்தெடுத்து நிமிர்ந்து அவன் வேதனை பிரதிபலிக்கும் அவனின் கண்களை சந்தித்தவள்,
“லவ் யூ மாமா” எனக்கூறி அவனை இறுக்கி கட்டிக்கொண்டாள்.
“லவ் யூ மோர் அண்ட் மோர் பேபி.”
நிரலியின் அழுகை விசும்பலாகக் குறைந்தது.
“என்னால் உன்னிடம் சாரி கேட்க முடியாதுடாம்மா… எனக்கு நான் செய்தது சரியென்று தான் படுகிறது. வேலு மாமா யாரோயில்லை பேபி. உன்னோட அப்பா அவர். அவரோட நம்பிக்கையின்மையில் நம் வாழ்வைத் தொடங்க எனக்கு விருப்பமில்லை. அப்போது குடும்பத்தாரிடம், ஏன் உன்னிடமே சொல்லியிருந்தாலும் இதற்கு யாரும் ஒப்புக்கொண்டு இருக்க மாட்டீர்கள்.
நீ சொல்வதுபோல் உன்னை நான் அழைத்து வந்திருக்கலாம். இப்போது நீ வந்ததும் உன் பின்னாலேயே அப்பத்தா வந்த மாதிரி, அப்போதும் வந்திருப்பார். சந்தியாவின் செயல் மீதிருந்த கோபத்தை அப்போது இன்னும் அதிகமாக உன்மீது காட்டியிருப்பார். என்ன தான் நான் உன்னை பாதுகாத்தாலும், உன் மனம் கஷ்டப்படுவதை என்னால் தடுக்க முடியாது அதனால் எனக்கு குற்றவுணர்வாகிப் போயிருக்கும்.
அத்தோடு மாமா நம்பிக்கையின்மையால் அதிருப்தியாக என்னை சிறு பார்வை பார்த்தாலும் நான் உன்மீது வைத்திருக்கும் காதலுக்கு அர்த்தமில்லாமல் போயிருக்கும்.
அப்படி அர்த்தமற்று போவதற்கு பிரிந்து இருப்பது சரியென்றே எனக்கு பட்டது.
ஆனால் எனக்குத் தெரியாமல் உன் நிழலை கூட நான் அசைய விட்டதில்லை. இதில் நானறியாதது அப்பத்தாவின் வசவு வார்த்தைகள் தான். அதனை மாமா என்னிடமிருந்து மறைத்து விட்டார்.
எனக்குத் தெரிந்திருந்தால் நிச்சயம் உன்னை அங்கு இருக்க விட்டிருக்க மாட்டேன் பேபி. அத்தோடு உனக்கா என்னிடம் வரத் தோன்றுகிறதா என்றும் எதிர்பார்த்தேன். உனக்கும் என்மீது காதல் என்னைவிட அதிகமாக இருந்தபோதும் நீ ஏன் வரவில்லை பேபி. எனக்கும் இதில் எவ்வளவு ஏமாற்றம் தெரியுமா?
மாமாவுக்காக நான் விட்டு வந்தாலும்… எனக்காக என்மீது நீ கொண்ட காதலுக்காக என்னிடம் வருவாய் என்று நினைத்தேன். ஆனால் இறுதிவரை என் நினைப்பு பொய்த்துதான் போனது.”
அப்போதுதான் ஆதியின் செய்கைக்கு பின்னாலிருக்கும் தெளிவான காரணமும், தன்மீதிருக்கும் தவறும் நிரலிக்கு நன்கு புரிந்தது.
“இப்பவும் என் பக்கம் தவறென்றால் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு. இப்படி அழ மட்டும் செய்யாதே!” தன் கண்களில் துளிர்த்த ஈரத்தை பெருவிரல் கொண்டு அழுத்தி துடைத்தான்.
ஆதி கண் கலங்குவது தாங்க மாட்டாது… தன்னிரு உள்ளங்கைகளில் அவனின் முகத்தை ஏந்தியவள்… அவனின் இதழோடு தன்னிதழை அழுந்த முத்தம் வைத்தாள்.
“லவ் யூ தேவா” என்றவள் தன்னிரு காதுகளையும் பிடித்துக்கொண்டு மன்னிப்பு வேண்டினாள்.
“இதுக்கு அவசயமேயில்லை பேபி” என்றவன்…
அழுது சிவந்திருந்த அவளின் முகத்தை தன் கைக்கொண்டு துடைத்து,
“நீ எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும்டா” என்றான்.
“தேவா கூட இருக்க வரை நிரலிக்கு சந்தோஷம் மட்டும் தான்” என்று பதில் வழங்கியவள் அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“இனி உன்னை கஷ்டப்படுத்தும் எதையும் நீ யோசிக்கவே கூடாது” என்றவன் நேரம் நன்கு கடந்திருப்பதை அறிந்து அவளை உறங்குவதற்கு அழைத்துச் சென்றான்.
நிரலிக்குள் இருந்த கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைத்துவிட்டது.
‘இனி தங்களுக்குள் மறைத்த விடயம் எதுவுமில்லை.’
ஆதியின் கை வளைவிற்குள் படுத்திருந்தவள் அவனை இன்னும் நெருங்கி நிம்மதியான துயில் கொண்டாள்.
இருவருமே ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள காதலை எண்ணி அகம் மகிழ்ந்திருந்தனர். இந்த காதல் அவர்களுக்கு நிச்சயம் சந்தோஷத்தை மட்டுமே அளிக்கும்.
*****
காலையிலேயே எழுந்து நிரலியை மருத்துவமனை அழைத்துச் செல்ல அவளை துரிதப்படுத்திக் கொண்டிருந்தான்.
அவள் போகும் இடமெல்லாம் கண்காணிக்கின்றேன் என்ற பெயரில் அவள் பின்னோடே திரிந்தான்.
“இப்படி என் பின்னாலே சுற்றிக்கொண்டு இருந்தால் எப்படி கோர்ட்டுக்கு போவது ஏ.டி சார்?”
அவளின் கிண்டலையெல்லாம் அவன் பொருட்படுத்தவே இல்லை.
தண்ணீர் கூட அவளாக எடுத்துக் குடிக்க அவன் அனுமதிக்கவில்லை.
“இந்த மாதிரி நேரத்தில் நீ எதுவும் செய்யக் கூடாது பேபி” என்று சொல்லியே அவளுக்கு அனைத்தும் அவனே செய்தான்.
வள்ளி அக்காவுக்கு சந்தேகம் இருந்தாலும் அவர்களாக சொல்லட்டுமென்று ஆதியின் செயல்களைக் கண்டு புன்னகைத்தவாறு இருந்தார்.
மருத்துவமனைக்கு கிளம்புவதற்கு முன் ஆடை மாற்றி வருவதாக நிரலி உடை மாற்றும் அறைக்குள் செல்ல, ஆதியும் அவளோடு நுழைந்தான்.
“மாமா நீங்க எங்க வறீங்க?”
“உனக்கு புடவை கட்டிவிடத்தான் பேபி.” சாதாரணமாக சொல்லியவன் அவளின் மறுப்புகள் எதையும் ஏற்காது தானே கட்டியும் விட்டான்.
இறுதியில் கீழே மண்டியிட்டு புடவை மடிப்புகளை சரி செய்தவனின் மீது காதல் ஊற்று பெருக்கெடுத்தது நிரலிக்கு. அவன் காட்டிக்கொண்டிருக்கும் அக்கறையில் அதீத சந்தோஷத்தினால் கண்கள் பனித்தன. அதனை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டாள்.
பின்னர் அவன் வருந்துவானே. சந்தோஷத்தில் நிரலி கண்கள் கலங்கினால் கூட அவ்வளவு தவித்துப்போவான்.
‘லவ் யூ டா தேவா.’ மனதிற்குள் கணவனைக் கொஞ்சிக் கொண்டாள்.
“எதாவது சொன்னியா பேபி?” மடிப்பினை ஒன்று போல் வைத்து நீவி விட்டுக்கொண்டே அவளிடம் கேட்டான்.
நிரலி மறுப்பாக தலையசைக்க, அவன் நம்பாத பார்வை பார்த்து…
“நீ ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சு பேபி” என்று செய்து கொண்டிருப்பதில் கவனமானான்.
“தி கிரேட் ஏ.டி பொண்டாட்டிக்கு புடவை மடிப்பை சரி செய்வதை யாராவது பார்த்தால் என்னாவது!” என்று கேலியாகக் கேட்டாள்.
“என்னாகும்” என்றவாறே எழுந்து நின்றவன், “மனைவிக்கு சேவகம் செய்யும் தி கிரேட் பாரிஸ்டர் ஏ.டி. கோர்ட்டில் புலி வீட்டில் மனைவிக்கு பூனை என்று ப்ரேக்கிங் நியூஸ் போகும்” எனக்கூறி சத்தமாக சிரித்தான்.
“அதில் உங்களுக்கு வருத்தமிருக்காதா?”
“இதில் வருத்தப்பட என்னயிருக்கு. இருப்பதை தானே சொன்னேன். உன்னிடம் மட்டும் நான் நானா இருக்கத்தான் பேபி ஆசைப்படுறேன்.”
சொல்லியவன் தன் வார்த்தைகளில் நெகிழ்ந்து நின்றிருப்பவளின் நெற்றியில் இதழொற்றி தன் கை வளைவினிலேயே கீழே கூட்டி வந்து காரில் அமர வைத்தான். மறுபக்கம் ஏறி காரை கிளப்பியவன் மெல்ல ஊர்ந்தான்.
எப்போதும் எதிலும் புயல் போல் இருப்பவன் நிரலி விடயத்தில் மட்டும் மென்மையாக இருந்தான்.
“இவ்வளவு ஸ்லோவா போனால் நாளைக்குக்கூட போய் சேர முடியாது மாமா.”சிரித்துக்கொண்டே நிரலி சொல்லியபோதும் அவன் வேகத்தை அதிகரிக்கவில்லை.
“எனக்கு என் பேபிஸ் ரெண்டு பேரும் ரொம்ப முக்கியம்” என்றவன் சாலையில் கவனமாக அவன் தோளில் சாய்ந்த நிரலி உறங்கியும் போனாள்.
நிமிடங்களில் வந்து சேர்ந்திருக்க வேண்டிய இடத்திற்கு, மணி கடந்து வந்தவன் நிரலியின் கன்னம் தட்டி எழுப்பினான்.
“வந்துட்டோமா மாமா… சாயங்காலம் ஆகிவிட்டதா?” என்றவளின் கிண்டல் புரிந்த போதும் அதனை புன்னகையோடு ஏற்றான்.
“ஸ்வேதா அக்காவிடம் பார்க்கலாம் சொன்னீங்க?”
ஆதி அழைத்து வந்திருக்கும் இடத்தினை பார்த்துவிட்டு கேட்டாள்.
“இது ஸ்வே கிலினிக்டா பேபி. அங்கு ஹாஸ்பிட்டல் நேரம் போக மீதி நேரம் இங்கு பார்ப்பாள்” என்றவன் அவளை மெல்ல அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்த பின்னர், வரவேற்பில் இருக்கும் பெண்ணிடம் சென்றான்.
அப்பெண்ணிற்கு ஆதியை தெரிந்திருந்தது. ஸ்வேதாவின் நண்பன் என்பதில் பரிட்சயம்.
“மேடம் பார்க்கணுமா சார்” என்று ஆதியிடம் கேட்டுக்கொண்டே அப்பெண் ஸ்வேதாவிற்கு அழைக்க…
“ஆமாம்” என்றவன், “இன்னும் எத்தனை பேஷண்ட் இருக்காங்க” எனக் கேட்டான்.
“இன்னும் மூன்று பேர் சார்.”
“ஓகே நான் வெயிட் பண்றேன்” என்ற ஆதி “நிரலி ஆதிதேவ்” என்கிற பெயரை பதிந்து விட்டு மனைவியிடம் வந்து அமர்ந்து கொண்டான்.
அப்பெண்ணிற்கு ஆதியின் செயல் ஆச்சரியமாக இருந்தது. அவன் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏன் தன்னிடம் சொல்ல வேண்டுமென்றுகூட கிடையாது. வந்ததும் நேராக ஸ்வேதாவை பார்த்திருக்கலாம்.
ஆனால் தனக்கு முன்னால் இருப்பவர்களை மேலும் காக்க வைக்காது, தான் காத்திருக்கிறேன் என்றவனின் பண்பு அங்கு உயர்ந்து நின்றது.
எல்லோரும் மனிதர்கள். இங்கு யாரும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றில்லை. எல்லாம் மனிதனின் குணத்தை பொருத்தே கணிக்கப்படும்.
“உட்கார்ந்திருக்க சிரமமா இருக்கா பேபி?”
“அய்யோ மாமா போதும். விட்டால் அழுதுடுவேன். ரொம்ப லவ் டார்ச்சர் பண்றீங்க மாமா” என்றவள் அவனின் தோளில் அடி ஒன்று வைத்தாள்.
“இது உனக்கு டார்ச்சரா?”
“பின்னே இல்லையா? எப்படி நடக்கனும் என்று சொன்னால் கூட என்ன பண்றது?”
“அப்போ இன்னும் என் டார்ச்சர் தொடரும்.”
“ம்… ம்…”
மேலும் என்ன உரையாடல் நிகழ்ந்திருக்குமோ அதற்குள் செவிலி அழைக்க, இருவருமாக ஸ்வேதாவின் மருத்துவ அறைக்குள் சென்றனர்.
அத்தியாயம் 34 :
“வாங்க ஏ.டி சார்.”
ஸ்வேதாவின் அறைக்குள் முதலாவதாக நுழைந்த ஆதியை பார்த்ததும் இவ்வளவு நேரம் நோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்த சோர்வு கொஞ்சமுமின்றி உற்சாகத்தோடு வரவேற்றாள்.
சிறு புன்னகையில் ஸ்வேதாவின் வரவேற்பினை ஏற்ற ஆதி, நிரலி உள்ளே வர கதவினை நன்கு திறந்து பிடித்துக் கொண்டு நிற்க, அவனை கடந்து ஸ்வேதாவின் பார்வை அவனுக்கு பின்னால் சென்று, நிரலியை கண்டு வேகமாகச் சென்று அவளை அணைத்து விடுவித்தாள்.
“எப்படி இருக்க நிரு…?”
ஸ்வேதாவின் விசாரிப்பிற்கு,
“நேற்று தானே பார்த்தீங்க…” என்ற நிரலி “ஏ.டி சார் இருக்கும் போது என் நலம் எப்போதும் சூப்பர்” என்று கணவனை நோக்கி காதல் பார்வை வீசியவாறு சொல்லியவள்,
நடந்து முடிந்த நிகழ்வுகளைப் பற்றிய சில பல பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர், தெய்வாவிற்கு ஆதரவாக இருந்ததற்கு நன்றி சொல்லி ஸ்வேதாவிடம் தன்னுடைய சகோதரி உறவு முறையை வளர்த்துக் கொண்டிருக்க, இருவரையும் வேடிக்கை பார்க்கும் நிலையானது ஆதிக்கு.
‘இப்போ இங்கு எதற்கு வந்தோம், இவள் என்ன பண்ணிட்டு இருக்காள்.’
தனது பொறுமையை இழுத்து பிடித்தான்.
ஆதிக்கு இவ்வுலகில் அவனது பேபியின் நலன் தவிர்த்து வேறொன்றும் பெரியதில்லை. அவனுடைய இரண்டு பேபிகளின் நலன் பற்றி அறிய வந்த இடத்தில் குடும்ப விடயம் பேசுவது அவசியமா என்பது அவனின் எண்ணம்.
நிரலி வந்த காரணத்தையே மறந்து ஸ்வேதாவிடம் ராகவ் மற்றும் அவர்களின் காதல் பற்றி பேசிக்கொண்டிருந்தாள்.
ஆதி இரண்டு முறை அழைத்தும் பலனில்லை.
“பேபி…”
ஆதியின் அழுத்தமான விளிப்பு மற்றும் பிடியிலேயே அவன் புறம் திரும்பிய நிரலி… அவனின் பார்வையில் என்ன உணர்ந்தாளோ! அப்போது தான் வந்ததன் நோக்கம் நினைவில் வர மன்னிப்பான பார்வையை அவனை நோக்கி வீசினாள்.
அதனை ஒதுக்கியவனாக ஸ்வேதாவிடம் திரும்பி…
“பேபியை கொஞ்சம் செக் பண்ணனும் ஸ்வே” என்றவனாக சட்டை பாக்கெட்டிலிருந்து வீட்டில் பரிசோதித்த கற்பத்தினை உறுதி செய்யும் கிட்டினை எடுத்து மேசையில் ஸ்வேதாவின் முன் வைத்தான்.
“வாவ்…”
அதனை பார்த்து உற்சாகக் குரலிட்ட ஸ்வேதா…
“நான் ஒருமுறை செக் செய்துட்டு கண்ஃபார்ம் பண்ணுறேன்” என நிரலியை அங்கிருந்த சிறு அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
சில நிமிடங்களில் வெளியில் வந்த ஸ்வேதா,
“காங்கிராட்ஸ் ஆதி. அப்பாவாகிட்ட, ட்ரீட் எப்போ?” எனக் கேட்டாள்.
“தேங்க்ஸ் ஸ்வே” என்று முன்னர் அவளின் வாழ்த்திற்கு பதில் அளித்தவன், “எப்போ வேணும் சொல்லு, வச்சிடலாம் ட்ரீட்” என்று முகம் முழுக்க சந்தோஷம் போட்டிபோடக் கூறினான்.
“ஆதி நிஜமா இது நீதானா? என்ன அது உன் முகத்தில் புதிதாக?”
ஆதி அந்நொடியை கடக்க முடியாது முகத்தை வேறு பக்கம் திருப்ப… ஆடையை சரி செய்தவாறு நிரலி அச்சிறிய அறையிலிருந்து வெளியில் வந்தாள்.
வேகமாக அவளின் அருகில் சென்றவன்… அணைவாக தனக்குள் அவளை கொண்டு வந்து…
“ஆர் யூ ஓகே பேபி?” என்க,
“ஆதி அவளை செக்கப் தான் செய்தேன். அதுக்கே இதெல்லாம் ஓவர்” என்று ஸ்வேதா அவனை கேலி செய்தாள்.
நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள், என் பேபியிடத்தில் மட்டும் இந்த ஆதி முற்றிலும் மாறுபட்டவன் என்பதைப்போல் நடந்து கொண்டான்.
நிரலியை மெதுவாக அழைத்து வந்து இருக்கையில் உட்கார வைத்தவன் அவளின் சௌகரியத்தை உறுதி செய்த பின்னரே தான் அமர்ந்தான்.
“எப்படி இருந்த ஆதியை எப்படி மாற்றிவிட்டாய் நிரு!” ஸ்வேதா ஆச்சரியமாகக் கேட்க, நிரலியிடம் அளவான புன்னகை. கணவனை நோக்கி சிறு வெட்கப் பார்வை.
“இந்த ஆதி எங்களுக்கு ரொம்பவே புதுசு நிரு. இவ்வளவு சந்தோஷமான… முகம் முழுக்க பரவசத்தோட… இப்படியொரு ஆதியை இதுக்கு முன்னர் நான் பார்த்ததில்லை” என்றாள் ஸ்வேதா.
“என் மொத்த சந்தோஷமும் என் பேபி தான் ஸ்வே!”
காதலாக மொழிந்தான்.
‘தானும் ராகவும் கூட இவர்களைப் போன்று காதல் மட்டுமே கொண்ட காதலர்களாக இருக்க வேண்டும்’ என அந்நேரம் ஸ்வேதாவின் மனம் நினைத்தது.
“42 டேஸ் ஆகியிருக்கு. த்ரீ மன்ந்த்ஸ் ரொம்ப கவனமாக இருக்கணும். விட்டமின் டேப்லெட்ஸ் எழுதி கொடுக்குறேன். நிறைய பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கோ நிரு. மாதுளை, வேர்க்கடலை, பேரீச்சம் பழம், பாதாம் இதெல்லாம் தினமும் எடுத்துக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் செக்கப் வா. நானும் அப்பப்போ வீட்டில் வந்து பார்க்கிறேன்” என்ற ஸ்வேதா மேலும் சில அறிவுரைகள் வழங்க, அவளையே பல கேள்விகள் கேட்டு திணற வைத்தான் ஆதி.
“வேகமா நடக்கலாமா…? எவ்வளவு சாப்பிடணும், என்ன சாப்பிடணும், எவ்வளவு நேரம் தூங்கணும்… இந்த மாதிரி நேரத்தில் நிற்கலாமா?, மாடி ஏறலாமா? வேலைகளெல்லாம் செய்யலாமா? என்று கேட்டு திணறடித்தான்.
அதிலெல்லாம் நிரலி மீதான ஆதியின் அக்கறையே வெளிப்பட ஸ்வேதா பெருமையாகவே பதில் கொடுத்தாள்.
மேலும் கேட்க வந்தவனை நிரலி போதுமென தடுக்க…
“நீ சும்மா இரு பேபி… உனக்கு எதுவும் தெரியாது?” என்று அடக்கிவிட்டு தன் கேள்விகளைத் தொடர்ந்தான்.
“இப்போ பேபிக்கு ஹார்ட்பீட் தெரியுமா? நாம் பேசினால் கேட்குமா? உருவம் எப்போ வரும்? இப்போ ரொம்ப குட்டியா இருக்குமா? முகம் கை, காலெல்லாம் வந்திருக்குமா?”
ஆதி அடுக்கிக்கொண்டே போக,
“ஆதி காம் டவுன் மேன்…” என்று அவனை அமைதி படுத்திய ஸ்வேதா…
“நிருவைவிட நீதான் ரொம்ப பதட்டமா இருக்க ஆதி.”
“தெரியல…” என்றவன், “பேபி என் உயிர்ன்னா… உள்ளிருக்கும் பேபி எங்க ரெண்டு பேரோட உயிராச்சே! அதான் கொஞ்சம் நேர்வஸ்ஸா ஃபீல் பன்றேன்.
பேபி இந்த உலகுக்கு வரும் வரை என் ரெண்டு பேபிஸ்க்கும் எதுவும் ஆகக்கூடாதுங்கிற பயம் என்னவோ அதிகமா இருக்கு ஸ்வே!”
ஆதியிடத்தில் அவ்வளவு கலக்கம்.
கிளம்பி வரும் வரையில் கூட அவ்வளவு அலைப்பறைகள் செய்து கொண்டிருந்த ஆதியின் இந்த பதட்டமும் பயமும் நிரலிக்கே வியப்பாக இருந்தது.
அந்நொடி நிரலிக்கு புரிந்த ஒன்று,
‘யாருக்கும் அஞ்சாது வேங்கையென வலம் வரும் ஆதியின் ஒட்டு மொத்த பலவீனமும் தான் தானென்று.’
இத்தகைய பலவீனம் நல்லதல்ல என்றே நிரலிக்குத் தோன்றியது.
‘ஆதியின் மனம் நிரலியின் பேறுகாலத்தை நினைத்து அச்சம் கொள்கிறது’ என்று யூகித்த ஸ்வேதா அவன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தாள்.
“தேர்ட் மந்த்ஸ் ஸ்கேனில் பேபியோட ஹார்ட்பீட் கேட்கும். பிப்த் மந்த்ஸ் நீ கேட்ட கேள்வி அத்தனைக்கும் பதில் கிடைக்கும் ஆதி” என்ற ஸ்வேதா, “நிரலி மேல் உனக்கிருக்கும் அன்பு புரியுது ஆதி… அது அதிகம் தான். ஆனால் இதில் நீ பயப்பட ஒன்றுமே இல்லை.
உன் ரெண்டு பேபிஸ்க்கும் நான் பொறுப்பு” என்றாள்.
இருப்பினும் ஏதோவொன்று ஆதியின் மனம் அமைதி படுவதை தடுத்தது.
மனைவியை பார்த்தவன், தன் செயலால் நிரலியின் முகமும் கலக்கத்தைக் கொண்டுள்ளது என்று அறிந்து தன்னை நொடியில் மீட்டுக்கொண்டான்.
“பர்ஸ் டைம் இல்லையா பேபி அதான்” என்றவன் முயன்று தன்னுடைய கலக்கத்தை மறைத்தான்.
“பேசாமல் நிரலியை கிராமத்தில் உங்கள் வீட்டில் விட்டுடு ஆதி. இந்த மாதிரி நேரத்தில் மூத்த பெண்கள் சுற்றி இருப்பது நல்லதுதானே! அவங்க பார்த்துப்பாங்க.” ஸ்வேதா சாதாரணமாக சொல்லிவிட்டாள். ஆனால் ஆதிக்கு மீண்டும் பிரிவை நினைத்து பயம் எழுந்தது.
“நோ… நோ ஸ்வே, என் பேபிக்கு எல்லாம் நானே செய்யணும். நான் பார்த்துக்கொள்கிறேன்.” உறுதியாக சொல்லி அப்பேச்சினை முடித்துவிட்டான்.
“மெடிசன்ஸ் மெடிக்கலில் வாங்கிட்டு வா ஆதி” என்ற ஸ்வேதா மருந்துச்சீட்டு அளித்து ஆதியை வெளியனுப்பினாள்.
ஸ்வேதா நிரலியிடம் தனியாக பேச எண்ணினாள் போலும்.
“நிரு… ஹீ இஸ் லவ்ஸ் யூ மேட்லி.”
“எஸ்.” ஆதியின் காதலில் இதயம் எம்பி குதித்தது.
“ஆதியோட பலவீனம் நீதான். உங்களுக்குள் இருக்கும் காதல் தான்.
இப்போவே உன்னை நினைத்து வருத்தப்படுகிற ஆதி, பிரசவ நேரத்தில் எப்படி நடந்துப்பாரென்று எனக்கு பயம் வருது.
ஆதியிடம் பக்குவமாக பேசு” என்றாள்.
“நானும் அதேதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.”
நிரலி சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆதி வந்திட, ஸ்வேதா பேச்சினை மாற்றினாள்.
“வீட்டில் எல்லாருக்கும் சொல்லியாச்சா?”
“இன்னும் இல்லை. உங்களை பார்த்துட்டு சொல்லிக்கலாம் மாமா சொன்னாங்க.”
பின்னர் எந்தெந்த நேரம் எப்படி மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டுமென்று ஸ்வேதாவிடம் தெரிந்த கொண்ட ஆதி மனைவியை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.
காரில் செல்லும்போது இருவரிடமும் மௌனம் மட்டுமே! அதனை நிரலியே முடிவுக்கு கொண்டு வந்தாள்.
“மாமா!”
“ஸ்வேதா என்ன பேசினாள்?”
“என் மேல் எதுக்கு இத்தனை அன்பு மாமா?”
அவன் ஒன்று கேட்க, அவளொன்று கேட்டாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன.
சாலையில் பதித்திருந்த பார்வையை, அவளின் கேள்வியில் அவள் புறம் திருப்பியவன்… கண்களில் துளிர்த்திருந்த விழிநீரைக் கண்டதும், பட்டென்று வண்டியை நிறுத்தியிருந்தான்.
“பேபி என்னடா என்னாச்சுடாம்மா?” அதீத பதட்டத்துடன் அவன் வினவ,
“பயமா இருக்கு மாமா!” என்றாள். அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“அதான் ஸ்வேதா பார்த்துக்கிறேன் சொல்லிட்டாளே! அப்புறம் எதுக்குடா?”
நிரலி பிரசவத்தை நினைத்து பயப்படுவதாக ஆதி நினைத்தான்.
“அதில்லை மாமா” என்ற நிரலி… அவனின் முகம் காண எண்ணி, தோளில் சாய்ந்திருந்தவள் எழ… அவள் அமர்ந்திருந்த இருக்கையின் தலைப்பகுதியில் தன் நெற்றியை இடித்துக் கொண்டாள்.
உடனே பதட்டம் கொண்ட ஆதி,
“பேபி வலிக்குதாடா” எனக் கேட்டு அவளின் நெற்றியை தேய்த்து விட, ‘அவளுக்கு வலித்திருக்குமே’ என ஆதியின் கண்கள் கலங்கிவிட்டன.
மிக அருகில் ஆதியின் முகத்தை பார்த்திருந்த நிரலிக்கு அவனின் பதட்டமும், தவிப்பும், தனக்கான வலியை அவன் உணர்கிறான் என்பதும் நன்கு தெரிந்தது.
“மாமா எனக்கு ஒன்னுமில்லை. நீங்க முதலில் பதட்டப்படாமல் இருங்க!”
“எப்படி பதட்டப்படாமல் இருக்க முடியும் பேபி. நெற்றி வலிக்குமே! பார்த்து கவனமாக திரும்பியிருக்கலாமே!” என்றவனின் பார்வை முழுக்க நிரலியின் நெற்றி மீதுதான் இருந்தது.
“மாமா இங்க பாருங்க. என் கண்ணை பார்த்து பேசுங்க,
என்னாச்சு மாமா?”
“என்னடாம்மா… எனக்கென்ன… ஒன்றுமில்லையே!” அப்போதும் அவன் கண்கள் இடித்த அவளின் நெற்றியில் பதிந்து மீண்டது.
“சரி” என்றவள் எதுவும் பேசாது கண்களை மூடிக்கொள்ள ஆதி வண்டியை கிளப்பினான்.
“வேறு யாருக்காவது அடிபட்டால் கூட இப்படி தான் ரியாக்ட் பண்ணுவீங்களா மாமா?” அவள் கண்களை திறக்கவில்லை.
“எல்லோரும் நீயும் ஒன்னு இல்லை பேபி.” அவ்வளவு அழுத்தத்தில் ஆதியிடம் வார்த்தைகள் தெறித்தது.
“ஒன்றில்லை தான் மாமா. ஆனால் என்ன நடந்துச்சுன்னு அமைதியா ஆராய்ந்து செயல்பட்டிருப்பீங்க இல்லையா? அந்த நிதானமும் தெளிவும் என் விடயத்திலும் இருக்கணும் சொல்லுறேன் மாமா!” என்றவள்,
“என் அன்பும் சரி… நானும் சரி… உங்களுக்கு பலமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர பலவீனமாக இருந்திடக் கூடாது.
நாளைக்கே உங்களை கேஸில் ஜெயிக்க எவனாவது என்னை கடத்தி வைத்து மிரட்டுறான்னா, இப்போ எனக்கு என்னாச்சுன்னு கண்ணு கலங்கினீங்களே அந்த மாதிரி பலவீனமா கலங்கி போய் உட்கார்ந்திடக் கூடாது.”
ஆதி முடிந்த மட்டும் தன்னுடைய பேபியை முறைத்தான்.
அவள் ஒரு உதாரணத்திற்கு சொல்லியது உண்மையில் நடக்கவிருப்பதை இருவரும் அறியவில்லை.
“முறைக்காதீங்க மாமா என் விடயத்திலும் நீங்க ஸ்ட்ராங்கா இருக்கணும் புரியுதா?” என்று மிரட்டும் தொனியில் கேட்டாள்.
“கண் மூடியிருக்கும் போது கூட நான் முறைக்கிறது தெரியுதா?”
“என்னால் உங்களை உணர முடியும்.”
“உங்களை கம்பீரமாக பார்த்துத்தான் பழக்கம் மாமா. அந்த நேரத்தில் கூட என் தேவாவிடம் தனியானதொரு மிடுக்குத் தென்படும். அதை என்னால் உணர முடியும்.
ஆனால் இப்படி… எனக்காகவாகவே இருந்தாலும், என்னால் உங்கள் பலவீனத்தை பார்க்க முடியல மாமா!
இந்த ஆதியை பிடிக்கவுமில்லை” என்றவள் மெல்ல கண் திறந்து அவனின் வலது கன்னத்தை தன் இடக்கையால் தாங்கியவாறு “இந்த நேரத்தில் என் உடல் மற்றும் மன ரீதியாக என்னுள் பல மாற்றம் நிகழும். எனக்கு அப்பப்போ சில உடல் உபாதைகள் வரும். ஒவ்வொன்றிற்கும் இப்படி பதட்டமாகி வருத்தப்பட்டுட்டே இருந்தால்… நம்ம பேபியோட ஒவ்வொரு தருணத்தையும் நாம் எப்படி அனுபவிப்பது?” என்று மெல்ல கேட்க,
ஒருமுறை கண்களை அழுந்த மூடித் திறந்தவன், “உன் விடயத்தில் நான் என்னை ஸ்ட்ராங்க் பண்ணிக்கிறேன் பேபி” என்றான்.
‘ஆதி சொல்லிவிட்டாலும் அடுத்து தனக்கு எதுவும் நடந்தால் தான் அவனின் மனநிலை எப்படி என்று தெரியும்’ என நினைத்துக் கொண்டாள்.
ஆதி நிரலியை நேராக ஆர்.கே’வின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.
ஆர்.கே’விற்கும் தெய்வாவிற்கும் விடயம் கேள்விப்பட்டு அத்தனை ஆனந்தம். மகளை கொண்டாடித் தீர்த்து விட்டனர்.
மதியம் சாப்பிட்டுவிட்டு தான் செல்ல வேண்டுமென்று ஆர்.கே சொல்ல அவர்களால் மறுக்க முடியவில்லை.
அதன் பின்னர் ஊரில் தங்கள் குடும்பத்தாருக்கு அழைத்து ஆதி விடயத்தை பகிர்ந்துகொள்ள… நான் நீயென்று போட்டி போட்டுக்கொண்டு நிரலியிடமும் ஆதியிடமும் தங்களின் மகிழ்வினை வெளிப்படுத்தி பேசினார்கள்.
“நேற்றே தெரிந்திருந்தால் நிரலியையும் கையோடு அழைத்து வந்து பிரசவம் முடியும்வரை பக்குவம் பார்த்திருப்பேன்.” காமாட்சி குறையாக சொல்ல,
‘அப்படி நீங்கள் அழைத்துச்செல்லக் கூடாதென்று தானே உங்களிடம் சொல்லவில்லை.’ ஆதியின் மனம் சிரித்துக்கொண்டது.
இறுதியில் ராகவிடம் பேசிய ஆதி,
“குடும்பத்தோடு ஒரு ரெண்டு நாள் சீராடிட்டு சீக்கிரம் வந்து சேருடா… பேபி வரவரை என் பேபியை நான் பார்த்துக்கணும். அதனால் நீதான் கேசெல்லம் பார்க்கணும்” என்று கூற ராகவும் சந்தோஷமாகவே வர சம்மதித்தான்.
அனைவரும் பேசி முடிக்க, நிரலி தெய்வாவைத் தேடி கிச்சனிற்குள் சென்றுவிட, ஆதியும் ஆர்.கே’வும் தனித்திருந்தனர்.
“அப்புறம் ஏ.டி” என்ற ஆர்.கே, தன் தலையில் தட்டிக்கொண்டு… “ஏ.டி இல்லை, மாப்பிள்ளை” என்க இருவருமே சிரித்துவிட்டனர்.
“நீ என்னுடைய மருமகன்.” சொல்லும்போதே அவரிடத்தில் அத்தனை மகிழ்வு.
அதன் பின்னர், நிரலியையும் ஆதியையும் ஒன்றாக உட்கார வைத்து தெய்வா உணவு பரிமாற… இலையில் அத்தனை வகைகள் இடம் பெற்றிருந்தனர்.
‘கொஞ்ச நேரத்திலேயே இவ்வளவா?’ ஆதிக்கு மலைப்பாக இருந்தது.
“சாப்பிடுங்க மாப்பிள்ளை.” தெய்வா சொல்லியதும், உணவு உண்ணத் தொடங்கிய நிரலியைத் தடுத்தவன்…
“நீ இப்போ சிக்கன் சாப்பிடக்கூடாது பேபி… ஓவர் ஹீட், ஸ்வே சொன்னாளே!” என்று அதனை அவளின் இலையிலிருந்து எடுக்கச் சொன்னான்.
அடுத்தும் தன்னுடைய இலைகளில் இருக்கும் பதார்த்தங்களை ஒவ்வொன்றாக ருசி பார்த்து… எண்ணெய் மற்றும் காரம் அளவாக இருக்கும் உணவுகளை மட்டுமே அவளை சாப்பிட அனுமதித்தான்.
“இதுக்கு நான் தயிர் சாதம் மட்டுமே செய்திருப்பேன்.” மகளின் மீது ஆதி கொண்ட அக்கறையை எண்ணி சந்தோஷமாகவே கூறினார். அதில் சிறிதும் தெய்வாவிற்கு வருத்தமில்லை.
“த்ரீ மந்த்ஸ் கவனமாக இருக்க சொல்லியிருக்காங்க அத்தை” என்றவன் மேற்கொண்டு விளக்கம் கொடுக்கவில்லை.
நிரலி சாப்பிடாத உணவுகளை ஆதியும் சாப்பிடவில்லை.
அதனை கவனித்த ஆர்.கே, தெய்வா இருவரின் உள்ளமும் மகளின் அழகான வாழ்க்கையை கண்டு பூரித்தது.
உணவுக்கு பின்னர் சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் கிளம்பினர்.
நிரலி உம்மென்று வர ஆதி கண்டும் காணாமல் இருந்தான்.
சிறிது நேரத்தில் நிரலி அவனின் தோளில் பட்பட்டென்று அடி வைத்தாள்.
“ஒரே ஒரு குட்டி பீஸ் சிக்கனாவது சாப்பிட விட்டீங்களா?”
சிரித்தபடியே அடிகளை வாங்கியவன்… அவளின் கைகளை ஒரு கையால் பிடித்து அவள் அடிப்பதை தடுத்து…
“உனக்கு கை வலிக்கும் பேபி” என்க,
“அய்யோ மாமா” என்றாள்.
“ஓகே… ஓகே… இப்போ விடு பேபி. இனி நான் உன் விடயத்தில் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்க முயற்சி செய்றேன்” என்றவன் தன்னை அடித்ததால் சிவந்திருக்கும் அவள் கைகளை வருத்தத்தோடு பார்த்தவாறே விட்டான்.
நிரலிக்கு உள்ளுக்குள் அவன் தன் விடயத்தில் மாறமாட்டான் என்றே தோன்றியது. அது சற்று கவலையாகவும் அவளுக்கு இருந்தது.
வீட்டிற்கு செல்லாது வண்டியை மால் ஒன்றில் நிறுத்தியவன்,
“ஐஸ்கிரீம் சாப்பிடலாம் பேபி” என்று அழைத்துச்சென்று அவளின் கவலை மற்றும் வருத்தத்தை குறைக்க நினைத்தான்.
ஐஸ்கிரீம் என்றதும் நிரலியும் மற்றதை ஒதுக்கிவிட்டு அவனுடன் சந்தோஷமாகவே மாலிற்குள் சென்று ஐஸ்கிரீம் பார்லரில் சென்று அமர்ந்தாள்.
அடுத்த இருபது நிமிடத்தில் தன்னுடைய பேபியை காணாது திடம் தொலைத்து அடுத்து என்ன செய்வதென்று சிந்திக்காது பித்து பிடித்து தவித்து நின்றிருந்தான் ஆதிதேவ்.
Epi 35 and 36
https://thoorigaitamilnovels.com/%e0%ae%8f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-35-%e0%ae%ae-36-final-epis/
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
49
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

ஆதி அழகுடா
Thank you kaa ☺️