Loading

இறுதி அத்தியாயம்:

 

தழல் 44:

 

சில வருடங்களுக்கு பிறகு:

 

“ஆரும்மா…” வீரிட்டு அழுகையோடு கத்தி  அழைத்த அமுதனின் சத்தம் அந்த வீடெங்கும் நிறைத்தது. அவள் வருவதாய் தெரியவில்லை என்றதும் தரையில் படுத்து கைகால்களை உதைத்தபடி கதறி அழ தொடங்கியிருந்தான் அவன். அப்பொழுது தான் அறக்கட்டளையில் இருந்து வீடு திரும்பி இருந்தாள் ஆரா. அவனை சமாதானப் படுத்த முயன்று முடியாமல் மூச்சு வாங்க ஓரு ஓரத்தில் அமர்ந்துவிட்டார் பர்வதம்.

 

“ஸ்ஸ்ஸ்… வாய மூடுடா… எதுக்கு இப்ப அழற…” அவனை அதட்டியபடியே

 

அதைக் கண்டு அவள் அடிக்க தின் போகிறாள் என்று தீர்மானத்திற்கே வந்துவிட்டவன், இன்னுமே சத்தமாய் அழுகையை கூட்டி இருந்தான்.

 

“இப்ப வாய மூடல… அடி தான் விழ போகுது பாரு…” கரண்டியை ஓங்கியபடியே மிரட்டியவளின் முதுகில் சுள்ளென்ற வலி உண்டாக கடுப்புடன் திரும்பி முறைத்துப் பார்த்தாள் அவள்.

 

“சின்ன புள்ளைய அடிக்க கை ஓங்கற… என்ன பழக்கம் இது…” என்றாள் ஆரா அதட்டலாய்.

 

“நீ மட்டும் உன்னவிட சின்ன புள்ளைய அடிக்கற… இது மட்டும் ரொம்ப நல்ல பழக்கமா..?” பதிலுக்கு அவளுடன் மல்லுக்கு நின்றாள் அவள்.

 

அமுதன் கூட அழுகையை நிறுத்திவிட்டு அன்னைமார்களின் சண்டையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

 

“நீயும் அவனும் ஒன்னாடி… யார யார்கூட கம்பேர் பண்ணறதுனு ஒரு விவஸ்தை வேண்டாம்… கண்டாமிருகத்த போய் கன்னுகுட்டிக்கூட கம்பேர் பண்ணற…”

 

“ஹலோ மேடம்… இந்த கண்டாமிருக்கம் பேத்து போட்டது தான் இந்த கன்னுகுட்டி… அது நியாபகம் இருக்கட்டும்…இன்னொரு முக்கியமான விசயம்… கண்டாமிருகமா இருந்தாலும் கன்னுகுட்டியா இருந்தாலும் அடிச்சா வலிக்கும்…” என்றாள் முதுகில் வலிக்கண்ட இடத்தை நீவியபடியே கடுப்பாய் கனி.

 

“ஒரு கண்டாமிருகமே தன்னை காண்டா மிருகமென ஒத்துக் கொள்கிறதே..! அடடே… ஆச்சர்யகுறி…” போலியாய் வியந்து சிலாகித்து அவள் சொல்லவும், இவள் சிணுங்க தொடங்கி இருந்தாள்.

 

“நான் கண்டாமிருகம்னா நீ காட்டெருமை… ம்மா… பாரும்மா… உன் பெரிய பொண்ணு என்ன கண்டா மிருகம்னு சொல்லறா…”

 

“ம்மே… பாரும்மே… உன் பெரிய பொண்ணு என்ன கண்டாமிருகம்னு சொல்லறா…” கனிப்போலவே சிணுங்கிக் கொண்டே ஆராவும் சொல்லிக் காட்ட, அழுதன் வாயைப் பொத்தியபடியே சிரிப்பில் குலுங்க தொடங்கியிருந்தான்.

 

“யூ… யூ… யூ… இருடி குருமாவ இறக்கி வச்சுட்டு வந்து உன்ன கவனிச்சுக்கறேன்…” என்றாள் கரண்டியை ஆராவின் முகத்தின் முன்னே ஆட்டியபடி.

 

“சரிதான்… குருமா வைக்கறது அந்த மனுஷன்… அத இறக்கி வைக்கறது நீயாடி…”

 

“வேண்டான்டி அப்பறம் நான் கடுப்பாயிடுவேன்…”

 

“இன்னுமா நீ கடுப்பாகல இந்நேரம் ஆகிருக்கணுமே…” என்று தாடையை தட்டி யோசிப்பதைப் போல பாவனை செய்தவள், வேகமாய் மூச்சை இழுத்து விட்டு, முகத்தை வெட்டிக் கொண்டு வேகமாய் உள்ளே சென்றுவிட்டாள் அவள்.

 

“இவள கெடுக்கறதே அந்த மாம்ஸ் தான்… பச்ச மண்ணாட்டாம் இருந்த எங்க அக்காவுக்கு இல்லாதையும் பொல்லாதையும் சொல்லிக் கொடுத்து

 

“எதே… உங்கக்கா பச்சமண்ணு… நான் இல்லாதையும் பொல்லாதையும் சொல்லி குடுத்து கெடுத்துட்டேன்… இல்லையா..?” என்றான் கடுப்பாய் ஆரஞ்சு பழத்தை தன் பலம் மொத்தையும் காட்டி வேந்தன்.

 

“ஏன்… இல்லைனு வேற சொல்லுவீங்களா..? எங்க சொல்லுங்க பாப்போம்…” புடவையை தூக்கி சொறுகிக் கொண்டு அவனுடன் சண்டைக்கு பாய்ந்தாள் அவள்

 

“ஆமான்… ஆமான்… நான்தான் சொல்லிக் கொடுத்து கெடுத்து வச்சுருக்கேன்… போதுமா…” என அடுத்த நொடியே சரணடைந்திருந்தான் வேந்தன். இல்லையென்றால் அவளோடு சேர்த்து ஆராவையும் அல்லவா சமாளிக்க வேண்டும்.

 

“ஜூஸ் புழியறாங்களாம்… ஜூஸ்… குடுங்க இப்படி…” என அவனிடமிருந்து அதை வேகமாய் வாங்கியவள், ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஒரே வாயாக கவிழ்த்துக் கொண்டு அதை அவன் கைகளிலேயே திணித்துவிட்டு போயே போய்விட்டாள்.

 

‘என்ன நடந்துச்சு இப்ப…’ என நினைத்தவனாய் பேந்த பேந்த விழித்தபடி வெறும் குவளையை வைத்துக்கொண்டு நின்றிருந்தான் அவன். கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடியே நமட்டு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் அறிவு.

 

“உங்களுக்கும் ஆரஞ்சு ஜூஸ்க்கும் ராசி இல்லைனு நினைக்கறேன் சகல… நீங்க ஏன் சப்போட்டா ட்ரை பண்ண கூடாது…” என்றான் சிரிப்பை இதழ்களுக்குள் அடக்கியபடி.

 

“என்ன பொண்டாட்டியும் புருஷனும் அராஜகமா பண்ணறீங்க… ஒரு ஏ.சி.பிங்கற மரியாதை இருக்கா இந்த வீட்டுல… யோவ் ஒழுங்கு மரியாதையா வந்து ஜூஸ புழிஞ்சு குடுய்யா… இல்ல சகலனு கூட பாக்க மாட்டேன்… சம்பவம் ஆகிடும்… ஆமான்…” என்றான் மார்பை விடைத்துக் கொண்டு கோப மூச்சுகளை புசுபுசுவென இழுத்து விட்டபடியே வேந்தன்.

 

அப்பொழுதுதான் பின்னகட்டில் கைய வைத்திருந்த துணிகளை எல்லாம் அள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் கனி.

 

“என்ன மாமா… என்ன சொன்னீங்க..? சரியா கேக்கலை… திரும்ப ஒருதடவை சொல்லுங்களேன்…” என்றபடியே அலன் முன் வந்து நின்றிருந்தாள் அவள்.

 

“இல்லம்மா… ஆரஞ்சு தீந்துப் போச்சு… ஆப்பிள் ஜூஸ் போடலாமா… இல்ல சப்போட்டா ஜூஸ் போடலாமானு சகலைகூட டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தேன்… வேற ஒன்னுமில்ல… நீ போய் துணி மடி போ…”

 

“அன்பிருக்கலாம்… ஆனா கண்ணுமண்ணு தெரியாத அளவுக்கு அன்பிருக்க கூடாது… கன்சீவா இருக்கவளுக்கு ஈவினிங் டைம்ல ஜூஸா குடுப்பாங்க… பால காய்ச்சி குடுங்க போங்க…” என மாமனிடம் சொன்னவள், “நீங்க என்ன இங்க வாய் பாத்துட்டு நிக்கறீங்க… குருமா அடிபுடிக்க போகுது… நிப்பாட்டுங்க அத…” என்று கணவனுக்கும் ஒரு அதட்டல் போட்டுவிட்டே அங்கிருந்து கிளம்பினாள்.

 

“ஜூஸ் அவளுக்கு நான் எப்படா சொன்னேன்… டயர்டா இருக்கேனு இந்த வீட்டுல ஒரு ஜூஸ் போட்டு குடிக்க முடியுதா… இதுல பால காய்ச்சி குடுங்கனு நைஸ்ஸா அவ வேலைய என் தலையில கட்டிட்டு போறா… இதெல்லாம் நியாமா..? யாருக்காவது அடுக்குமா..? எங்கையாவது இப்படி நடக்குமா..?” அவன் புலம்பி தீர்க்க அவன் முன் ஆவி பறக்கும் டீயை நீட்டினான் அறிவு. ஏலக்காவின் மணமும் இஞ்சின் மணமும் அந்த சமையல்கட்டையே நிறைத்திருந்தது.

 

அந்த வாசத்தை ஆழ சுவாசித்து கண்மூடி ரசித்தவன், “சகலடா” என அறிவை தோளோடு அணைத்துக் கொண்டிருந்தான்.

 

ஒரு மிடறு அதை ரசித்து பருகியவன், “வாவ்… சூப்பர் சகல… நீங்க ஏன் மேனேஜர் வேலையை விட்டுட்டு ஒரு டீகடை திறக்க கூடாது…” என்றான் கேள்வியாய்.

 

விலகி நின்று முறைத்து பார்த்தவனிடம், “ஏதோ உங்க நல்லதுக்காக சொன்னேன்… பிடிக்கலைனா விடுங்களேன்… அதுக்கு ஏன் முறைக்கறீங்க…” என்றான் தோள்களை அலட்சியமாய் குலுக்கிக் கொண்டே.

 

பதிலெதுவும் சொல்லாமல் அவன் கைகளில் ஆராவிற்கான பாலை திணித்தவன் மற்றவர்களுக்கு கோப்பைகளில் தேனீரை ஊற்ற தொடங்கியிருந்தான். சிறுப்புன்னகையுடன் தலையசைத்தபடி அதை வாங்கிக் கொண்டவன் ஆராவை தேடி வந்திருந்தான். இன்னுமே அங்கே பஞ்சாயத்து ஓய்ந்தபாடில்லை.

 

“ஶ்ரீ… அண்ணன் கொஞ்ச நேரம் ஓட்டி தரேனு தானே கேக்கறான்… குடுடா குட்டிம்மா…” என்றாள் கெஞ்சி கொஞ்சி மகளிடம் ஆரா.

 

அதை அந்த குட்டி காதில் வாங்கிக் கொண்டதைப் போலவே தெரியவில்லை. அவள் பாட்டிற்கு வளைத்து வளைத்து அந்த குட்டி மிதிவண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

 

“ஏய்… வள்ளி… குள்ளி… கள்ளி… என் சைக்கள குடுடி…” அழுகையுடன் அழுதன். அதற்காவது வாயை திறக்க வேண்டுமே அந்த குட்டி. அத்தனை அழுத்தம். அத்தனை அடம்.

 

மிதிவண்டிக்காக தான் அந்த சண்டையே ஆரம்பித்திருந்தது. முதலில் அவன் தான் அவளிடம் ஓட்ட சொல்லி கொடுத்திருந்ததே. திரும்பி கேட்டு தராததோடு அவனை கிள்ளி அழவும் விட்டிருந்தது அந்த குட்டி.

 

“பெரிப்பா… எனக்கு சைக்கிள வாங்கி குடுங்க…” வேந்தனை கண்டதும் உதடு பிதுக்கி புகார் வாசித்தான் அழுதன்.

 

மனைவியிடம் பாலை கொடுத்தவன், ஒரு கையால் மகளை வளைத்து பிடித்து அலேக்காய் வண்டிலிருந்து தூக்கிவிட்டான். அவ்வளவு தான் உதட்டை பிதுக்கிக் கொண்டு ஊருக்கே கேட்கும்படி பெரிதாய் அழுகையை தொடங்கிவிட்டது அந்த குட்டி.

 

“குட்டிம்மா… இந்தா… இந்தா சைக்கிள்… நீயே ஓட்டு… எனக்கு வேண்டாம்…” தங்கையின் அழுகையை கண்டதும் அவசரமாய் சமாதானத்திற்கு வந்திருந்தான் அமுதன். அவனை அடிப்பதும் அழ வைப்பதும் அந்த குட்டி மட்டும்தான். மற்றபடி தங்கை சின்னதாய் கண்ணை கசக்கினால் கூட பொறுப்பதில்லை அந்த பாசக்கார அண்ணனுக்கு.

 

‘எப்படி’ என பாவனையாய் சட்டை காலரை தூக்கி விட்டபடியே ஆராவின் அருகில் அமர்ந்தவன், அவள் கேவலமாய் ஒரு பார்வை பார்க்கவும் தேனீரை அருந்துவதைப் போல தலையை கவிழ்த்துக் கொண்டான்.

 

பர்வதத்திடம் டீயை கொடுத்த அறிவு, பிள்ளைகள் இருவருக்கும் பாலை ஆற்றிக் கொடுக்க தொடங்கிருந்தான்.

 

“ஆரும்மா… நித்திக்கா போன்ல…” கத்தி சொன்னபடியே பேசிக்கொண்டு வந்தவள், ஆராவிடம் கைப்பேசியை கொடுத்த கனியும் அவர்களுடன் வந்து இணைந்துக் கொள்ள அந்த இடமே கலகலப்பாகி இருந்தது.

 

இவள் கைப்பேசியை காதுக்கு கொடுக்கும் முன்னமே அங்கே பொறிய தொடங்கிவிட்டாள் நித்யா.

 

“எத்தனை தடவ கூப்பிடறது… வீட்டுக்கு போய்டீயா நீ… தனியா போகலை தானே… போனதும் டீ குடிச்ச பிச்சுடுவேன் ராஸ்கல்… ஒரு நாளைக்கு நாலு டீ… வந்து கவனிச்சுக்கறேன் உன்ன… நானும் யுவாவும் மும்பை ரீச் ஆகிட்டோம்… வந்ததுல இருந்து உன்கிட்ட பேசணும்னு முகத்தை தூக்கி வச்சுட்டு உக்காந்து இருக்கான்… காம்படிஷன நெனைச்சு ரொம்ப நெர்வஸா வேற இருக்கான்… முதல அவன்கிட்ட பேசு நீ…” அவள் பேச இடமே அளிக்காமல் அவளே பேசி முடித்து யுவாவிடம் கொடுத்திருந்தாள்.

 

யுவா இந்திய அளவில் நடக்கும் ஓவிய போட்டியில் கலந்துக் கொள்வதற்காக அங்கே சென்றிந்தான். வழக்கமாய் அவனை அழைத்துச் செல்லும் பொறுப்பு ஆராவுடையது தான். அவள் கருவுற்றிருக்கும் நிலையில்  பயணம் செய்ய வேண்டாம் என்பதால் அந்த பொறுப்பை தனதாக்கி கொண்டிருந்தாள் நித்யா.

 

“யுவா…” என்றவள் குரலிலேயே அன்பின் சாயல் இருந்தது.

 

“ஆராம்மா… பாப்பா எப்படி இருக்கு…” என்றான் முதல் கேள்வியாய் அவன்.

 

சின்னதொரு புன்னகையுடன் தொடர்ந்த அவர்களின் உரையாடல் மணி நேரத்தை கடந்திருந்தது. அதிகம் அவள்தான் பேசினாள். அவன் தலையசைத்து கேட்டுக் கொண்டான். அனு, ஆரா, நித்யா மூவரும் தங்களின் ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிந்தனர்.

 

முன்பு ஆராவும் பர்வதமும் இருந்த வீட்டை விஸ்தாரபடுத்தி பெரிதாக்கி கட்டியிருந்தார்கள். ஆராவுக்கு அடுத்த இரண்டு மாதங்களிலேயே பழையபடி மீண்டும் குரல் வந்திருந்தது. மேலே புதிதாய் இன்னொரு அறை எடுத்திருந்தனர். இவர்களின் ஜாகை அங்கேதான். ஆறு மாதங்களுக்கு முன்புதான் வேந்தனுக்கு கேரளாவிற்கு இடமாற்றம் கிடைத்திருந்தது. அவர்களுக்கு திருமணம் முடிந்த அடுத்த வருடமே ஶ்ரீவள்ளி பிறந்திருந்தாள். இப்பொழுது இது அவளுக்கு இரண்டாம் மகவு. முழுதாய் ஏழு மாதங்கள் நிறைந்திருந்தது. மனையாளையும் மகளையும் பார்க்காது இருக்க முடியாமல் இப்படிதான் அடிக்கடி கிளம்பி வந்துவிடுகிறான் அவன். இப்பொழுதும் நான்கு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு தான் இங்கே வந்திருந்தான்.

 

அறிவும் கனியும் நிரந்தரமாய் இங்கேயே வந்துவிட்டிருந்தனர். வாரத்தில் ஒருநாள் மட்டும் அமுதனை அழைத்துச் சென்று பெற்றோருக்கு காட்டிவிட்டு, சில மணி நேரங்கள் உடனிருந்து தானே கையோடு அழைத்தும் வந்துவிடுகிறான் அறிவு. இன்று வரை அவர்கள் தேவை அத்தனையும் அவன் தான் கவனித்துக் கொள்கிறான். இனியும் செய்வான். ஆனால், எக்காலத்திலும் அந்த பொறுப்பில் கனியை பங்கெடுத்துக் கொள்ள சொல்லமாட்டான். அவளே முன்வந்தாலும் அவன் அனுமதிக்கவே போவதில்லை.

 

வள்ளியம்மையும் பணி ஓய்வு பெற்று நிரந்தராய் இங்கேயே வந்துவிட்டிருந்தார். முன்பு ஆராவின் அறையாய் இருந்தது இப்பொழுது அவரின் அறையாகிவிட்டது. ஓய்வு காலத்திலும் ஓய்ந்துப் போக விரும்பாதவர் அவர். கடைசி மூச்சி வரை யாருக்காவது உதவியாய் உபயோகமாய் இருங்க வேண்டும் அவருக்கு. அறக்கட்டளையின் முழு நிர்வாக பொறுப்பும் இப்போது அவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. அதில் அனுவுக்கு தான் அத்தனை சந்தோஷம். சமூகத்தில் பாதிக்கபட்ட பெண்களின் முன்னேற்றதுக்கு, சுயதொழிலுக்கு உதவுதோடு சட்ட ரீதியாகவும் தன்னால் முடிந்த உதவிகளை செய்துக் கொண்டிருக்கிறார் வள்ளியம்மை.

 

முழு நிலவும் நட்சத்திர கூட்டங்களும் வானில் ஊர்கோலம் போய்க் கொண்டிந்தது. எத்தனை நாட்கள் எத்தனை மணி நேரம் இந்த காட்சியை பார்த்தாலும் சலிப்பதில்லை ஆராவுக்கு. இப்பொழுதும் வானை ரசித்தபடி பால்கனியின் கம்பிகளை பிடித்தபடி அப்படியே சாய்ந்து நின்றுவிட்டாள் அவள்.

 

இரவு உணவை முடித்துக் கொண்டு, அன்னையிடம் சற்று நேரம் அளவளாவிவிட்டு அப்பொழுது தான் அறைக்குள் நுழைந்தான் வேந்தன். நின்றிருந்தழள் எழில் தோற்றம் நிழல் ஓவியமாய் அவன் நெஞ்சை நிறைத்தது.

 

அவளின் பின்னோடு அணைத்தபடி வந்து நின்றான் வேந்தன். சின்னதான ஒரு புன்னகை அவளின் இதழோரம் எட்டிப் பார்த்தது. அவளின் கழுத்து வளைவில் முகத்தை புதைத்து ஆழமாய் காற்றை உள்ளிழுத்தவன், மென்மையாய் அங்கே இதழ்களை ஒற்றி எடுத்தான்.

 

“என்ன ரொம்ப தவிக்க விடறடி நீ…” என்றவன் குரலும் தவித்து தான் ஒலித்தது.

 

“என்னோட வந்துடேன் ஆரா… நீ இல்லாம முடியல…” வரமாட்டாள் என்று தெரிந்தும் லட்சத்தி ஓராவது முறையாக அதைதான் கேட்டான் அவன். சின்ன முறுவல் ஒன்றுதான் அவளிடம் பதிலாய் வந்தது.

 

கொஞ்ச நேரம் அமைதியாய் அவனின் அணைப்பிற்குள் நின்றிருந்தவள், தலை நிமிர்த்தி அவன் முகம் பார்த்து, “பாடுங்களேன் வேந்தன்…” என்றாள். அந்த குரலில் ஆசையும் ஏக்கமும் வழிந்தது.

 

அவளை இன்னுமே பின்னிருந்து இருக்கமாய் அணைத்துக் கொண்டவன், கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்து அப்படியே இதழ்களை காதோரம் நகர்த்திக் கொண்டு வந்திருந்தான். மிக மெல்லிய குரலில் அவளின் காதோரம் பாட தொடங்கி இருந்தான் அவன்.

 

“உயிரே உன் உயிரென 

நான் இருப்பேன்…

அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…

 

இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன்… கனவே கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே…

 

மழையாய் என் மனதினில் 

நீ விழுந்தாய்… 

விழுந்தால் ஒரு விதையென நான் எழுந்தேன்…”

 

ஒவ்வொரு வரிக்கும் அவளின் காது மடல்களில் அழுத்தமாய் தனது முத்திரையை பதித்துக் கொண்டிருத்தான் அவன்.

 

“விரலுக்கும் இதழுக்கும் பிறந்திடும் இசையென இருவரும் இருப்போம்…

இடம் பொருள் மறப்போம்…

 

உனக்கென எனக்கென

முதல் எது..? முடிவெது..?

எதுவரை இருப்போம்…

அதுவரை பிறப்போம்..

 

யார் நீ..?

யார் நான்..?

நான் நீ…

நீ நான்…”

 

அவன் பாடலில் ரிதமில்லை; இதமில்லை; ஸ்வரமில்லை. ஆனால் உயிர்ப்பிருந்தது. அவளுக்கான காதல் அதில் கொட்டிக் கிடந்தது.

 

இப்பொழுது அவனை தன் பக்கம் திருப்பி இருந்தவன், அழுத்தமாய் நெற்றியில் இதழ்களை பதித்து கண்மூடி அப்படியே நிலைத்துப் போனான். அவனை தானும் இறுக்கிக் கொண்டபடியை அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டவளின் முகத்தில் பரிபூரண சந்தோஷ புன்னகை மொட்டவிழிந்து நிலைத்துப் போனது.

 

அன்பினால் அரவணைத்துக் கொள்ளும் அம்பிகையும் அவள்தான். தீயவற்றை சுட்டெரிக்கும் காளிமாதாவும் அவள் தான். உள்ளத்தில் ஒயாது சுடர்விடும் எரிதழல் அணங்கிவள்! 

 

~ சுபம். ~

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்