
அறுவைசிகிச்சை அறையிலிருந்து சாதாரண அறைக்கு ஆராவை மாற்றி இருந்தனர். ஆராவின் கழுத்து முழுவதையும் மறைத்தபடி மறைத்தபடி இருந்தது கட்டு கட்டும் துணி. அதுவே காயத்தின் அளவை அதன் தீவிரத்தையும் கட்டியம் கூறியது.
கனி, அறிவு, வள்ளியம்மை, பர்வதம், வேந்தன் என அவளை சூழ்ந்துக் கொண்டு நின்றிருந்தனர். அனுயும் நித்யாயும் இன்னும் வந்திருக்கவில்லை. வேலைக்கு நடுவே அவர்கள் இருவரையும் தொடர்புக் கொள்ள முடியவில்லை. அங்கிருந்த யாரும் யாரையும் தேற்றும் மனநிலையில் இல்லை. பெரும் துக்கத்தை தொண்டைக் குழிக்குள் அடக்கியபடி கண்ணீரை இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தனர்.
ஆராவை நெருங்கிச் சென்று பார்க்கவே கனிக்கு பயமாக இருந்தது. அவளை படுக்கையில் நினைவில்லாமல் பார்க்க பார்க்க பழைய நினைவுகளெல்லாம் அலை அலையாய் நெஞ்சில் மோத துவங்கி இருந்தது. கால்களிரண்டும் நிற்கவே வலுவில்லதைப் போல தள்ளாட துவங்கியிருந்தது.
நிமிடத்திற்கு மேல் அந்த அறைக்குள் அவளால் நிற்கவே முடியவில்லை. அணை உடைக்க காத்திருக்கும் வெள்ளமாய் பொங்கி பெருக காத்திருந்த கண்ணீர் துளிகளை தொண்டை குழிக்குள்ளேயே அடக்கி வைக்க முடியாமல், தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள் கனி. நெஞ்சம் கணத்து பெரும் பாரமேறிக் கொண்ட உணர்வு. வாழ்நாள் முழுமைக்கும் அந்த பார்த்தை நெஞ்சைவிட்டு இறக்கியே வைக்க முடியாதோ என்ற பயம் இன்னும் அவளை அழுத்தியது.
அதற்கு மேல் அங்கே நிற்க திரணியற்றவளாய், வேகமாய் அறையைவிட்டு வெளியேற வந்து விட்டவளின் கண்களிலிருந்து கண்ணீர் கோடாய் இறங்கி பெருகி வழிய தொடங்கி இருந்தது. நிற்க முடியாமல் தடுமாறியவளை அவளின் பின்னோடே வந்த அறிவு தோளோடு அணைத்து அருகிலிருந்த இருக்கையில் அமர வைத்திருந்தான். அவன் தோள் வளைவில் முகத்தை புதைத்துக் கொண்டவளின் அழுகை தேம்பலாய் வெடிக்க தொடங்கியிருந்தது.
“ஆரா பேசிடுவா இல்லைங்க…” அழுகையோடு தழுதழுத்து ஒலித்த அந்த வார்த்தைகளை இனம் காண முடியாவிட்டாலும் அவனுக்கு அவளின் உள்ளக்கிடங்கு புரியதான் செய்தது.
“நிச்சயமா பேசிடுவாங்க கனி…” என்றான் ஆதரவாய் அவளின் தலை வருடியபடியே.
அவனின் வார்த்தைகள் அவளை அடையவே இல்லை. “நான்… நான்… பெரிய தப்பு பண்ணிட்டேன் இல்லங்க… அவ என்கிட்ட பேச வந்தப்பவே பேசி இருக்கணும்… என்னமோ பெரிய இவ மாதிரி முறுக்கிட்டு இருந்தேன் இல்ல… அதான் இனிமே உன்கூட பேசவே முடியாது போடினு வந்து படுத்துக்கிட்டா… தப்பு… தப்பு… எல்லாம் என் தப்புதான்…” என தொடர்ந்து அரற்றியவளின் கண்ணீர் அவளின் அவனின் சட்டையை நனைத்து இதயத்தை நோக்கி இறக்கிக் கொண்டிருந்தது.
நாம் நேசிப்பவர்களை மன்னிக்க காலம் கடத்தவே கூடாது என்றுதான் தோன்றியது அவனுக்கு. சில நேரங்களில் நேரம் கடத்த கடத்த மன்னிப்பும் வாய்ப்பும் கூட மறுக்கபட்டுதான் விடுகிறது. இன்னும் சில நேரங்களில் அந்த மன்னிப்பிற்கே மதிப்பில்லாமல் போய்விடுகிறது.
“இனிமே அவ என்கிட்ட பேசவே போறதில்லை… அவ குரலை திரும்ப நான் கேட்கவே போறதில்லை… என்ன கனிம்மானு கூப்பட போறதேயில்லை… அமுதனை தூக்கிக் கொஞ்ச போறதேயில்லை…” தேம்பலோடு குரல் உடைய அறைகுறையாய் ஒலித்த வார்த்தைகள் அவனுக்கும் புரிந்து இதயத்தை கணக்க தான் செய்தது. அமைதியாய் அவளின் தலைகோதியபடி அமர்ந்திருந்தான் அவன்.
“ஏங்க… அவளுக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது… தொடர்ந்து ஒன்னு மாத்தி ஒன்னு ஏன் வரணும்..? இன்னைக்கு தான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா..? அது அந்த கடவுளுக்கே பொறுக்கலையா..? அவ சந்தோஷமாவே இருக்க கூடாதுனு எழுதி வச்சுட்டாரா..?” அழுகையோடு கோபமாய் வினவியவளை
அவளின் முகத்தை நிமிர்த்தி தன்னைப் பார்க்கும்படி அமர வைத்தான் அறிவு. “அவங்களுக்கு ஒன்னுமில்லனு முதல நாம நம்பணும் கனி… நீ நம்பணும்… அவங்க பேசிடுவாங்கனு நம்பணும்… நம்ம நம்பிக்கை தான் அவங்க பலமே… உன்கிட்ட பேசாம அவங்களால எப்படி இருக்க முடியும் சொல்லு…” என்றான் வாஞ்சையாய் அவளின் கண்ணீரை துடைத்தபடி.
“கண்டிப்பா பேசிடுவா தானே…” மூக்கை உறிஞ்சியபடியே சந்தோகமாய் கேட்டவளிடம் சிறுபிள்ளையின் உறுதி செய்துக்கொள்ளும் பாவனையிருந்து.
அவளின் நுனி மூக்கை கிள்ளி மெல்லமாய் பிடித்து ஆட்டியவன், “கண்டிப்பா பேசிடுவாங்க… பேசாம நீதான் விட்டுடுவீயா என்ன..?” என சிறு புன்னகையோடு வினவியவனின் புன்னகை அவளுக்கும் கடத்தப்பட்டிருந்தது.
இன்னுமே அவன் வாய்மொழி அதனை உறுதி செய்துக் கொள்கிறவள் போல, அதே கேள்வியை வேறு வேறு வார்த்தைகளாய் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தாள் கனி. அவளை தோளோடு அணைத்துக் கொண்டவன், அத்தனை முறைக்கும் புன்னகை மாறாமல் நம்பிக்கையோடு அதே பதிலை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.
அவன் மனம் முமுமைக்கும், ‘ஆரா பேசிவிட வேண்டுமே…’ என்ற ஒற்றை வேண்டுதல் மட்டும்தான். நூற்றில் ஒருபங்காக அவள் பேசாமல் போயிவிட்டால், என்றென்றைக்கும் மனைவியின் மனதில் அது காயமாய் தாங்கிவிட கூடும் என்பதையும் அவன் அறிவான். அதுவே அவளை மொத்தமாய் முடக்கியும் விடும் என்பதும் அவனுக்கு புரியதான் செய்தது.
ஆராவை பார்த்த நொடி அவனையும் கண்களில் இருந்து அவனையும் மீறிக்கொண்டு கண்ணீர் துளிகள் இரண்டு இறங்கி வழிந்தோடியது. நீரில் அலசியப்பின்னும் அவன் சட்டையோடு ஒட்டுக் கொண்டு கிடக்கும் அவளின் குறுதி வாடை அந்த நொடி பல்கி பெருகி அவனை சூழ்ந்துக் கொண்டதைப் போல ஒரு பிரம்மை. சுற்றி நின்ற யாரும் அவனின் நினைவில் விழவில்லை போலும்.
வேகமாய் அவளை நெருங்கியவன் வலதுக்கையை தனது இருக்கரங்களுக்குள் அடக்கியபடியே முகத்தை அதில் புதைத்துக் கொண்டு மண்டியிட்டு தரையில் அமர்ந்துவிட்டான். வேகமாய் பெருக்கெடுத்த அவனின் கண்ணீர் அவள் கரத்தை நனைக்க தொடங்கி இருந்தது. நேற்றைய தினம் வள்ளியம்மை எப்படி ஆராவின் கைகளை பற்றியபடி அமர்ந்திருந்தாரோ அப்படிதான் இருந்தது இன்று அவனைப் பார்க்கவும். முகத்தில் அதே சஞ்சலத்தையும் கண்களில் அதைவிட அதிக வேதனையையும் பிரதிபலித்தபடி அமர்ந்திருந்தான் அவன்.
இமைக்காமல் அவனைத்தான் பார்த்திருந்தார் பர்வதம். மகளுக்கு இப்படி ஆகிவிட்டதே என்பதையும் தாண்டி மனதின் ஓரத்தில் நெடுநாளாய் அரித்துக் கொண்டிருந்த பெரும் வேதனை ஒன்று அர்த்தமே இல்லாமல் போனதைப் போலிருந்தது.
மகளின் வாழ்வு மீதான பயம் கவலை அவரை நீண்ட காலமாக அரித்துக் கொண்டே இருந்தது உண்மை. எல்லாவற்றையும் மீறி மகளின் கடந்த காலம் எந்த வகையிலும் வருங்கால வாழ்க்கையில் உறுத்தலை ஏற்படுத்திவிட கூடாதே என்று அவர் நினைக்காத நாளில்லை. அவரின் மனதை அரித்துக் கொண்டே இருந்தது உண்மை. ஏதோ ஒரு தருணத்தில் ஏதோ ஒரு வார்த்தையாடலில் கடந்த கால நிகழ்வுகளை பேச்சுக்கு கோடிட்டு காட்டினால் கூட மகள் தாங்க மாட்டாள் என்பது அவருக்கு நிச்சயம். அப்படியான ஒருவன், எந்த நிலையிலும் அவளின் கடந்த காலத்தை, பலகீனத்தை குத்திகாட்டாத ஒருவன், தனக்கு தானே தியாகி பட்டம் சூட்டிக் கொள்ளாத ஒருவன் மகளுக்காய் வரவேண்டும் என்ற வேண்டுதல் மட்டும் தான். அதற்காக தான் இத்தனை நாளும் இத்தனை நாட்கள் அவள் காலம் கடத்திய போதும் அமைதியாகவே இருந்தார்.
அந்த ஒருவன் வேந்தனாய் இருப்பதில் அத்தனை திருப்திதான். ஆனாலும் சின்னதொரு நெருடல் இருந்தது உண்மை. அவனை வேந்தனாய் அவர் பார்த்ததைவிட வள்ளியம்மையின் மகனாய் பார்த்த கணங்கள் தான் அதிகம். அதுதான் அவனின் மீது அன்பை பெருக்கி இருந்தது. அதுதான் அவனின் மீதான நம்பிக்கையை உருவாக்கியது.
ஆனால், இன்று மகளுக்காக கண்ணீர் சிந்தும் அவனைப் பார்க்கும் போது, இந்நிலையிலும் அவளை விலகிட நினைக்காத அவனின் அன்பை உணரும் போது, தனிப்பட்ட மனிதனாய் வேந்தனின் மீதான நம்பிக்கை மலையளவு உயரவே செய்தது. மகளின் எதிர்காலத்தின் மீதிருந்த அத்தனை அச்சங்களுக்கும் அர்த்தமில்லாமல் போயிருந்தது.
கண் கலங்க நின்றிருந்தவரின் மனம் நிறைந்திருந்நது. அவரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டவரைப் போல் மெல்ல ஆதரவாய் அவரின் முதுகில் தட்டிக் கொடுத்தபடியே வெளியே அழைத்துச் சென்றிருந்தார் வள்ளியம்மை.
எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ அவன், அவளிடம் மெல்லிய அசைவுகள் தெரியவும் கையைப் பற்றியபடியே எழுந்து அவள் முகம் பார்த்தான். கண்ணீர் காய்ந்துப் போன தடம் அவன் முகத்தில் அப்படியே இருந்தது. கண்கள் இரண்டும் வீங்கி சிவப்பேறி கிடந்தது.
விழித் திறக்கும் முன்னவே வலியின் வேதனையை அவள் முகத்தில் பிரதிபலித்தபடியே முகத்தை சுழிக்க, உருகிப் போயிற்று இவனுக்கு. அவளைவிட ஆயிரம் மடங்கு வலியை அனுபவிப்பவன் போல கசங்கிப் போனது அவன் முகம்.
ஒரே ஒருநொடி இவன் நிதானத்தை கடைப் பிடித்திருந்தால், இந்த வலியை அவள் தாங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லையோ என்று தோன்றியதை தடுக்க முடியவில்லை. அந்த நொடி அப்படி செய்வதை தவிர வேறெதையும் அவனால் சிந்தித்திருக்க முடியாது என்பது தான் உண்மை.
அவளின் நெற்றியோடு நெற்றி முட்டியபடி சரிந்து அமர்ந்தவனின் கண்ணில் இருந்து துளி துளியாய் நீர் பெருகி அவளின் கன்னத்தில் நெரித்து வழிந்தோடியது. ஆயிரம் வார்த்தைகள் கடத்திவிட முடியாத காதலை, தவிப்பான ஒரு ஓரவிழி பார்வையும், ஒருதுளி நேசக் கண்ணீரும் கடத்தி விடுகறது.
கண்களை சுருக்கியபடியே திறக்க முயன்றவள் கரு விழிக்களுக்குள் விழிந்தது மிக நெருக்கமான அவனின் முகம் தான். அவள் மயங்கும் முன் கடைசி நொடி அவளின் கண்பாவைக்குள் விழிந்ததும் இவனின் தவிப்பான முகம் தான்.
விரிந்த விழிகளுக்குள் விழுந்த அவனின் கண்ணீர் துளி அவளின் இதயத்தை சரணடைந்திருந்தது. அவனை ஆற்றுபடுத்தும் விதமாய் மென்மையாய் விரிய முயன்றது அவளின் இதழ்கள். அதைக் கண்டவன் கண்ணீர் நின்று அவளை விழிவிரித்து பார்க்க, ஒரு கரத்தால் அவனை வளைத்து அணைத்துக் கொண்டவள், மென்னையாய் அவனின் முதுகை வருடிக் கொடுக்க தொடங்கி இருந்தாள்.
அவனின் வற்றாத புன்னகையை ஆயிரம் முறை கண்டிருக்கிறாள். அதில் தலைக்குப்புற வழுக்கியும் விழுந்திருக்கிறாள். முதல் முறை அவனின் அழுகையைப் பார்க்கிறாள். அவளுக்கான கண்ணீரைப் பார்க்கிறாள். உள்ளம் நெகிழ்ந்து உருகிதான் போனது. ஏன் என்னை நேசிக்கும் ஒருவன், எனக்காக ஒருவன் என அவளுள்ளும் எக்களமிடவும் செய்தது.
அவன் கொஞ்சம் அமைதியாகும் வரை காத்திருந்து, அவனை விலக்கியபடியே எழுந்து கொள்ள முயன்றவளை உணர்ந்துக் கொண்டு உதவினான் அவன். அவளை எழுப்பி, தலையணையை முதுகுக்கு கொடுத்து சாய்ந்து அமர வைத்தான்.
அவசரமாய் அந்த அறையை சுற்றியும் தேடி அலைபாய்ந்தது அவளின் விழிகள். காயம் பட்ட நொடியே அது தனக்கு எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என அனுமானித்திருந்தவள், பேச முயலவில்லை.
அவளின் தேடலை உணர்ந்தவனாய், “யுவா நல்லா இருக்கான்… ஸ்லீப்பிங் பில்ஸ் மட்டும் தான் கொடுத்திருக்கான் அவனுக்கு… அதனால பயப்பட ஒன்னுமில்ல… ஈவினிங் கண்ணு முழுச்சுடுவானு டாக்டர் சொன்னாங்க…” என்றவனின் குரலே மாறிப் போயிருந்தது. அழுது அழுது தொண்டை கட்டிக் கொண்டலில் பாதி வார்த்தைக்கு பதில் காற்று தான் வந்தது. இமையோரம் தேக்கி வைத்த கண்ணீர் விழவா வேண்டாமா என அவளின் அனுமதி கேட்டு நின்றது.
இதழோரம் தொக்கி நின்ற சிறு முறுவளோடு, கைகள் இரண்டையும் அகல விரித்து, வாவென்பதைப் போல சின்ன தலையசைப்புடன் கண்களை மூடி திறந்து அவள் அழைக்க, மறுநொடி வேகமாய் குழந்தையென அவளின் விரிந்த கரங்களுள் சரண் புகுந்திருந்தான் அவன்.
நேசம் தான் மனிதனின் ஆகபெரும் பலகீனம். அவனின் ஆகபெரும் பலகீனம் அவள். அந்த பலகீனமெல்லாம் உடைந்து கட்டவிழும் இடமும் அவள் தான்.
– பற்றி எரியும்…

