Loading

தழல் 41:

“ஆரா… ஆரும்மா…” என்றபடியே உடைந்திருந்த ஜன்னல் வழியே உள்ளே நுழைந்து இரண்டே எட்டுகளில் அவளை நெருங்கியிருந்தான் வேந்தன். சரிந்து விழுந்த அவளின் தலையை தாங்கி பிடித்தபடியே ஒரு கரத்தால் பெருகி வழியும் குறுதியை தடுக்க முயன்றவன் கரமெங்கும் நொடியில் குறுதியில் நனைந்துப் போனது.

ஆராவின் கழுத்தில் கத்தியைப் பதித்திபடி வெற்றி நின்றிந்ததை பார்த்த அந்த நொடி வேறு எதையுமே சிந்திக்கவில்லை வேந்தனின் மனம். எதிராளி சிந்திக்கவோ செயல்படவோ நேரமே தரக்கூடாது என நினைத்தானே தவிர, அதன் எதிர்விளைவுகளை யோசிக்கவே இல்லை. அவனையும் மீறி பதற்றத்தில் நடந்துவிட்ட நிகழ்விது. இன்னும் சில நிமிடங்கள் காத்திருந்து ஆராவை விட்டு நகர்ந்தபின் தாக்கியிருக்க வேண்டுமோ?

அடுத்தடுத்து துரித கதியில் நடந்துக் கொண்டிருந்த எதுவுமே அவனுக்கு மனதில் பதியவில்லை. காவல்துறையினரும் மருத்துவ குழுவும் உள்ளே நுழைந்ததோ, வெற்றியின் சடலத்தை காப்பற்றியதோ, அங்கிருந்த ஆதரங்களை சேகரித்ததோ, ஆராவையும் யுவாவையும் மீட்டு முதலுதவி வண்டியில் ஏற்றியதோ, அவனும் உடன் ஏறியதோ எதுவுமே மனதில் பதியவில்லை அவனுக்கு.

சில நிமிடங்களுக்குள் அருகிலிருந்த மருத்துவமனையை அடைந்திருந்தார்கள் அவர்கள். உள்ளே ஆராவிற்கு அறுவைசிகிச்சை நடந்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் ஆழமாக குரல்வலை வரையுமே இறங்கி இருந்தது கத்தி.

தளர்ந்து அமர்ந்து விட்டவனுக்கு யாருக்கும் தகவல் சொல்ல வேண்டுமென்ற எண்ணம் கூட வரவில்லை. அவளுக்கு எதுவுமே ஆகாது என்பதில் அத்தனை நம்பிக்கை இருந்தது அவனுக்கு. ஆனாலும் எங்கோ எதிலோ பெரிதாய் தோற்றுவிட்ட உணர்வு.
எத்தனை எத்தனை முன் ஏற்பாடுகள். எல்லாம் நொடியில் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டதே!அவள் வீட்டின் காவலுக்கு இரண்டு ஆட்கள். அவள் அறியாமலேயே அவளை பின்தொடர்ந்து பாதுகாப்பு தர இரண்டு நபர்கள். ஆனால் அத்தனை பேரின் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு அல்லவா அவளை அழைத்துக் கொண்டு பறந்துவிட்டான் அவன்.

எப்படி..? எப்படி..? அவனையும் மீறி எப்படி இது நடந்தது..? உயிரை நேசிக்கும் ஒருத்திக்கே சரியாய் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால், நிச்சயம் ஏதோ ஒரு இடத்தில் அலட்சியமாக இருந்திருக்கிறான் என்றுதானே அர்த்தம். தன் திறமையின் மீது கொண்ட கர்வமா, அவளின் ஆளுமையில் கொண்ட நம்பிக்கையா எது இந்த அலட்சியத்திற்கு காரணம் என்று அவனுக்கே தெரியவில்லை.

ஆரா மட்டும் அந்த குறிப்பை எழுதி வைக்காமல் சென்றிந்தால், இல்லை அதை அவன் தாமதமாய் பார்க்க நேரிட்டிருந்தால், இல்லை ஒரே ஒரு நிமிடம் அவன் அங்கே தாமதமாய் சென்றிருந்தால், நினைக்கவே உள்ளம் நடுங்கியது.

சட்டை பைக்குள் இருந்த அந்த துண்டு காகிதத்தை எடுத்துப் பார்த்தான். “கான்டாக்ட் வள்ளிம்மா…” என்று மட்டும் தான் இருந்தது அதில். தொடர்ந்து அவருக்கு முயன்று, அவரை தொடர்பில் பிடிப்பதற்குள்ளே ஒருவழியாகிப் போனான் அவன். தொழில்துட்பம் வளர வளர அதை ஒட்டியே அவளின் பாதுகாப்பையும் உறுதி செய்துக் கொள்வார் வள்ளியம்மை. என்னவோ மனதின் ஓரம் சின்னதாய் ஒரு நெருடல். ஆரா யூ.எஸ் செல்கிறாள் என தெரிந்த பொழுது, அவளின் பாதுகாப்பிற்காக ஜி.பி.எஸ் பொருந்திய சின்ன டாலர் ஒன்றை அவளிடம் கொடுத்திருந்தார். இடுப்பு செயினுடன் அதை கோர்த்து அணிந்திருந்தாள் ஆரா. இன்னுமே அவள் அதை அணிந்துக் கொண்டிருந்தது தான் இன்று அவளின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.

அவர் அளவுக்கு அவனுக்கு சாமர்த்தியம் போதவில்லையோ? இன்னும் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டுமோ?  நினைத்த மாத்திரத்தில், ‘நீயெல்லாம் போலீஸ்னு வெளிய சொல்லாதடா..?’ அதட்டலும் மிரட்டலுமாய் காதுக்கு மிக அருகில் நின்று எப்பொழுதும் போல இப்பொழுதும் அன்னை திட்டுவது போலிருந்தது அவனுக்கு. அதில் சின்னதாய் ஒரு முறுவல் கூட எழுந்தது.

பலமாய் முதுகில் சுளீரென்ற வலி தாக்கவும் தான் அது கற்பனையில்லை என்றே அவனுக்கு புரிந்தது. தலை நிமிர்த்திப் பார்க்க, அவனை பார்வையிலேயே எரித்துவிடும்  முனைப்போடு நின்றிருந்தார் வள்ளியம்மை. அவன் தகவல் சொல்லிய அடுத்த நிமிடமே அடித்துபிடித்துக் கொண்டு இங்கே ஓடி வந்திருந்தார் அவர்.

“ம்மா…” என சிறு தேம்பலுடன் அவரைக் கட்டிக் கொண்டவனுக்கு தாழவே முடியவில்லை. சரம் சரமாய் இறங்கிய கண்ணீர் முத்துக்குள் அவரின் சட்டையை நனைக்க துவங்கி இருந்தது. மனதை இறுக்கி பிடித்திருந்த அழுத்தங்களை எல்லாம் அழுகையில் கரைத்து கடந்துவிட நினைத்தான் போலும் அவன்.

முதன் முதலாய் வளர்ந்த மகனின் கண்ணீரைப் பார்க்கிறார் அவர். உருகிப் போயிற்று தாயின் உள்ளம்.  எப்பொழுதுமே ஒரு ஒட்ட வைத்த புன்னகையுடன் வலம் வருபவன் அவன். அதில் இழைந்தோடும் போலித்தனத்தை கண்டுக் கொண்டலுமே மகனிடம் கேட்டுக் கொண்டதில்லை அவர். இறந்தே பிறந்த தங்கையை கண்ட பொழுது ஏழு வயதில் அப்படியொரு அழுகை அவனிடம். யாருமே தேற்றிவிட, சமாதானப் படுத்திவிட முடியாத அழுகை. அதன்பின் தந்தையின் இறப்பில் கூட அத்தனையாய் கண்ணீர் சிந்தவில்லை அவன். ஏழு வயதிலேயே அவன் மனது வெகுவாய் பக்குவப்பட்டு போயிருக்க வேண்டும்.

மென்னமையாய் அவனின் தலையை வருடிக் கொடுத்தபடியே, “ஆராக்கு ஒன்னும் ஆகாதுப்பா…” என்றார் கரகரத்த வாஞ்சைக் குரலில் வள்ளியம்மை.

அவர் சொல்லவுமே தேம்பலாய் இருந்த அழுகை பொங்கி வெடித்துக் கொண்டு கிளம்பியது. இப்படி இதமாய் அன்பாய் அவனிடம் அவர் பேசிய நினைவுகளெல்லாம் எங்கே முன்ஜென்ம நினைவுகள் போல நிழலாடுகிறது. எப்பொழுதும் ஒரு அதட்டலும் மிரட்டலும் தான். அவனுமே அது அவனை பாதிக்கவில்லை என்பதைப் போல ஏட்டிக்கு போட்டியாய் தான் பேசிக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பான்.

எங்கே கணவரைப் போல தானுமே இறந்துப் போவோமோ என்ற பயம்  அவரை அரித்துக் கொண்டே இருந்திருக்க வேண்டும். மகன் யாருமே இல்லாமல் தனித்துப் போய்விடுவானோ என்ற கவலை அவரை தின்றிருக்க வேண்டும். அதுவே அவனை அவர் தங்கையிடம் அனுப்பி வைக்க முதன்மை காரணம். தன்னிடம் மகனுக்கு ஒட்டுதல் வரவேக்கூடாது என்பதில் அப்படி ஒரு தீர்மானம். அதனாலே அவனை அனுவிடம் அனுப்பி வைத்தபின் பெரிதாய் அன்பையோ அக்கறையையோ காட்டியதில்லை அவன். ஒருவேளை தான் இல்லையென்றாலும் அது அவனை பாதிக்காது என்ற எண்ணம் தான் அவருக்கு. ஆனால், மகனின் மனப்போக்கே வேறு என்பதை அவருக்கு யார் சொல்லி புரிய வைப்பது. அவனின் ஆழ்மனம் அன்னையின் அன்புக்காக, வாஞ்சையான ஒரு வார்த்தைக்காக ஆண்டாண்டு காலமாய் ஏங்கிக் கிடக்கிறதென்று யார் சொல்வது.

“நான்… நான்… ராசியில்லாதவன் ம்மா… என்னால… என்னால தானே எல்லாமே… நான்… நான் தான் பாப்பாவ நல்லா பாத்துக்கல… அதனால தானே பாப்பா செத்துப் போனா… அதனால தானே உங்களுக்கும் என்ன பிடிக்காம போயிடுச்சு… என்ன அனும்மாகிட்ட அனுப்பி வச்சுட்டீங்க…

இப்போ… இப்போ… என்னால தான் ஆராவுக்கும் இப்படி ஆகிடுச்சு… அவள நான் சரியா பாத்துக்கல… அதனால தானே இப்படி ஆகிடுச்சு… அப்போ அவளுக்கும் இனிமே என்ன பிடிக்காம போய்டும் தானே… கண்ணு முழிச்சு என்ன வேண்டானு சொல்லிடுவா தானே…” தேம்பலோடு வெளிப்பட்ட அவனின் வார்த்தைகளை கிரகித்துக் கொள்ளவே நீண்ட நேரம் பிடித்தது வள்ளியம்மைக்கு.

‘என்ன பேசுகிறான் இவன்… என்ன இருக்கிறது இவன் மனதில்…’ என்ற எண்ணம் அவரின் மனதை அரிக்க தொடங்கியிருந்தது.

“வேந்தா…” என்றவர் குரலே வெளிவரவில்லை. தொண்டைக் குழியை ஏதோ வலுவாய் அடைத்துக் கொண்டதைப் போல நெஞ்சை ஏதோ இறுக்கிப் பிடித்திருப்பதைப் போல அத்தனை வேதனை. மகனை தன்னோடு இறுக்கிக் கொண்டவருக்கு வேறு வார்த்தைகள் வரவில்லை. அதற்குள் அறுவை சிகிச்சையை முடித்துக் கொண்டு வெளியே வந்திருந்தார் மருத்துவர்.

ஆதரவாய் அவனின் தோளை தட்டிக் கொடுத்தார் மருத்துவர். வந்த நொடி முதலாய் அவனின் தவிப்பையும் கலங்கிய முகத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறாரே. அதைக் கண்டே அவன் தான் அவளின் கணவனென்ற முடிவுக்கே வந்திருந்தார் அவர். படிவங்களிலும் அவன்தானே கையெப்பமிட்டிருக்கிறான். அதனால் தான் நேரடியாய் அவனிடமே சொல்ல விளை

“பயப்படற மாதிரி ஒன்னுமில்லை சார்… சீக்கரமே கண்ணு முழிச்சுடுவாங்க… இன்னும் அரைமணி நேத்துல நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க… அதுக்கு அப்பறம் நீங்க அவங்கள பாக்கலாம்… டோன்ட் வொர்ரி…” அவர் சொல்ல சொல்ல விளக்கு போட்டதைப் போல அத்தனை பிரகாசமாய் ஒளிர துவங்கி இருந்தது அவன் முகம். நிமிரிந்து அவனின் முகத்தின் உணர்வுகளை அவதானிக்க முயன்றபடியே சில அப்படியே நொடிகள் அப்படியே நின்னுவிட்டார் மருத்துவர். அவர் சொல்லப் போகும் விசயம் அவனின் முகத்தில் தாண்டவமாடும் மகிழ்ச்சியை துளியும் மிச்சம் வைக்காமல் மொத்தமாய் துடைத்துவிடுமோ என்ற கவலை தெரிந்தது அவரின் முகத்தில்.

“ஆனா… கத்தி கொஞ்சம் ஆழமாவே குரல்வலைய பாதிச்சுருக்கு சார்… எட்டு தையல் போட்டிருக்கு… அவங்களா பேச முடியுமா என்னனு இப்போ என்னால சரியா சொல்ல முடியாது… காயம் முழுசும் ஆறுன பின்னாடி தான் சொல்ல முடியும்…” என்றவர் குரலிலுமே அவனின் இழப்புக்கான வருத்தமிருந்தது.

“அப்படினா அவளால எப்பவுமே பேசவே முடியாதா டாக்டர்…” என்றவன் சத்தமே வெளிவரவில்லை. மொத்தமாய் அவன் உலகமே இருண்டுப் போனதைப் போல பரிதவித்து நின்றான் அவன்.

“அப்படி சொல்லிட முடியாது சார்… கடைசிவரை உறுதியா அவங்களால பேசவே முடியாதுனு சொல்லைல… ஒரே வேளை காயம் ஆறின பிறகும் பேச முடியலைனாலும் ஸ்பீச் தெரபி குடுத்து ட்ரை பண்ணி பாக்கலாம்… ஆனா அது எந்த அளவுக்கு பலன் தரும்னு தெரியலை… ஆனா இப்ப அவங்களால பேச முடியாது… அது அவங்களுக்கு பெரிய இழப்பு… அது அவங்கள எப்படி பாதிக்கும்னு தெரியல… அவங்க முன்னாடி இந்த இழப்ப காட்டற மாதிரி பேசவோ எதுவும் செஞ்சுடவோ கூடாது… நீங்க தான் தைரியம் குடுக்கணும்… அவங்கள பாத்துக்கோங்க…” மீண்டுமே அவனின் தோளில் தட்டிக் கொடுத்தபடி ஆறுதலாய் சொல்லா கிளப்பிவிட்டார் அவர்.

மீண்டுமே முன்பு அமர்ந்திருந்த இருக்கையில் அமைதியாய் அமர்ந்துவிட்டான் அவன். அவனின் முகத்தைக் கொண்டு எதையுமே அனுமானிக்க முடியவில்லை வள்ளியம்மையால். இத்தனை நாள் ஒதுக்கம் காட்டியே பழகி விட்டவருக்கு சட்டென்று அவனை நெருங்கி என்னவென்று விசாரிக்கவும் முடியவில்லை.

அமைதியாய் அவனுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்துக் கொண்டவர், அவனின் கரத்தின் மேல் தன் கரத்தை அழுந்த பதித்து, “ஆராவுக்கு ஒன்னும் ஆகாதுப்பா… கண்டிப்பா அவ பேசுவ… நீ வேணா பாரேன்…” என்றார் அவர். அவரை திரும்பி நிதானமாய் பார்த்தவனின் புன்னகை கொஞ்சமே கொஞ்சம் விரிந்தது. பெயருக்கு கூட அதில் நம்பிக்கையோ சந்தோஷமோ இல்லை. வார்த்தைகளில் வரையறுக்க முடியாத வேதனை தான் நிரம்பி வழிந்தது.

எத்தனையோ பிரச்சனைகளை கஷ்டங்களை சங்கடங்களை கடந்து வந்தவருக்கு மகனின் இந்த ஒற்றைப் புன்னகையை கடந்துவரவே முடியவில்லை. கவலை அவரைத் தின்ன துவங்கியிருந்தது.

ஆரா எப்படியாவது பழையபடி பேசிவிட வேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமே. ஆராவுக்காக இந்த அக்கறை எப்போதும் அவருக்கு உண்டுதான் என்றாலும் மகனின் வேதனையில் அந்த வேண்டுதல் இரண்டு மடங்கானது. ஒருவேளை வாழ்நாள் முழுவதுக்கும் ஆராவால் பேச முடியாமலே போய்விட்டால் மகனை மொத்தமாய் உடைந்துப் போக கூடுமோ என்ற எண்ணம் தான் அவரை அதிகமாய் அரிக்க துவங்கியிருந்தது. ஏற்கனவே அவன் சொல்லாமல் பாதியில் விட்ட விசயம் வேறு மனதை குடைந்தது. அவரின் ஒவ்வொரு செயலும் மகனை அவனின் நலனை மட்டுமே சார்ந்து இருந்ததிருக்கிறது. அப்படியிருக்க எங்கே அவனின் உணர்வுகளை படிக்க தவறினோம் என்ற எண்ணமே அவரை நிலைகுலைத்து விட்டது.

தலைசாய்த்து கண்மூடி அமர்ந்திருந்தவனைக் காண காண இன்னுமே பாரம் ஏறிப் போனது மனதில். அமைதியாய் மகனின் தலையை தோளில் சாய்த்துக் கொண்டார் அவர். இன்னுமே நன்றாய் முகத்தை திருப்பி அவரின் தோளில் புதைத்துக் கொண்டவன் கண்ணீர் அவரின் சட்டையை நனைக்க துவங்கி இருந்தது. மகனின் தலைமீது தலை சாய்த்துக் கொண்டவரின் கண்ணீருமே அவனின் மீது துளி துளியாய் விழத் தொடங்கி இருந்தது.

லாட்சாதி லட்சம் பேர் சூழ்ந்து நின்று அன்பு காட்டினாலும் அன்னை ஒருவரின் அன்புக்கு ஈடே ஆகாது. தாயின் முகமே நினைவில் இல்லாத பிள்ளைகள் கூட இன்னொருவரை தாயாய் ஏற்றுக் கொள்ள தடுமாறும் போது, ஏழு வயது வரை முழுக்க முழுக்க அவரின் அன்பின் பிடிக்குள்ளே வளர்ந்தவன் எப்படி இன்னொருவரிடம் ஒன்ற முடியும் என்று அவர் யோசிக்கவேயில்லை.

விசயம் தெரிந்து ஒருவரின் பின் ஒருவராய் வர, தாயும் மகனும் தங்கள் கவலையை ஒதுக்கி, அவர்களுக்கு ஆறுதல் சொல்ல தொடங்கியிருந்தனர்.

                              பற்றி எரியும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்