
தழல் 40:
மண்டியிட்டு அமர்ந்திருந்தவனின் உடல் சத்தமில்லாது அழுகையில் குலுங்கிக் கொண்டிருந்தது. இரக்கம் வழியும் விழிகளோடு அவனை அனுதாபமாய் பார்த்திருந்தாள் அவள்.
அவளின் விழிகளில் அவனை பழிவாங்கும் குரூரமில்லை. அவனின் வேதனையை காண துடிக்கும் ஆவேசமில்லை. தனது இழப்பிற்கு தண்டிக்கும் ஆசையியுமில்லை. இரத்தமும் சதையும் உணர்வுகளுமான சக மனிதனாய் தான் அவனை அவளால் பார்க்க முடிந்தது. அதைதான் அவள் கற்ற கல்வியும் அவளை சூழ்ந்திருந்தவர்களும் கற்றுத் தந்திருந்தனர்.
அதற்காக அவனை மன்னித்து விட்டாள் என்றும் அர்த்தமில்லை. இப்பொழுதும் கூட அவன் தவறுக்கான தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைத்தாலே தவிர அந்த தண்டனையை தான் தர நினைக்கவில்லை.
அந்த அழுகை பொய்யில்லை. தன்னால் தான் என்ற குற்றவுணர்வு நித்தம் நித்தம் அவனை தின்பது பொய்யில்லை. அதனால் அவனின் உடலும் உள்ளமும் சுமக்கும் வேதனை பொய்யில்லை. உண்மையில் அவனின் இழப்பிற்காக அவளின் உள்ளம் வருந்ததான் செய்தது.
இத்தனையும் செய்வது இன்னொரென்று அடையாளம் கண்டுக் கொள்ளும் வரையில் தான் அவளின் அலைப்புறுதலும் சஞ்சலமும். ஆனால், இதை செய்வது வெற்றி என கண்டுக் கொண்டபின் அவனைப் பற்றிய விபரங்கள் சேகரிக்க முழுதாய் நான்கு மணி நேரம் கூட தேவைப்படவில்லை வள்ளியம்மைக்கு.
தமிழ்நாடு முமுவதும் பெயர் தெரியும் அளவிற்கான செல்வாக்கான செல்வந்தர் ஒருவரின் மகன் அவன். பிள்ளைப் பருவத்தில் தாயை இழந்து சிற்றன்னையுடன் ஒன்ற முடியாமல் குடும்பத்திலிருந்து ஒதுங்கி தனக்கென தனித்தொரு நண்பர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அதிலேயே வாழப் பழகிக் கொண்டவன் அவன். விலகி நின்ற பிள்ளையை விட்டுப் பிடிக்கிறேன் என்ற பெயரில் கடிவாளம் மொத்ததையும் கைநழுவ விட்டிருந்தார் அவனின் தந்தை. அளவில்லாத பணமும் கட்டுபாடில்லாத சுகந்திரமும் தான் ஒருவகையில் அவனை இன்று இங்கே நிறுத்தி இருக்கிறது.
அவனின் நண்பர் நால்வரையும் காவல்துறை கைது செய்திருக்கிறது என்ற செய்தி அவன் தந்தையை எட்டியதுமே மகனும் அதில் சம்பந்தபட்டிருப்பான் என்று சந்தேகம் வந்திருந்தது அவருக்கு. நேரடியாய் கேட்கவரிடம் மறுக்கவில்லை அவனு. அதற்கும் மேலே நண்பர்களுக்கு கிடைக்கும் தண்டனையை தானுமே ஏற்றுக்கொள்ள தயாராய் தான் இருந்தான். மகனின் எதிர்காலமே கண்முன் நிற்க, வலுக்கட்டாயமாய் அவனை யூ.எஸில் இருக்கும் தன் தம்பியிடம் அனுப்பி வைத்திருந்தார் அவர்.
முன்ஜாமின் கிடைத்துவிடும் என்று தெரிந்த நொடியிலேயே தந்தையையும் மீறிக் கொண்டு இங்கே கிளம்பி வந்திருந்தான் அவன். அவனின் வருகைக்காக தான் கொஞ்சமே கொஞ்சம் நிதானத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு தீபக் காத்திருந்தது. ஆனால், வந்தவளோ ஆரா. நடந்ததுவோ அவர்களின் கற்பனைக்கு கூட எட்டாத காட்சி.
வள்ளியம்மை ஆராவை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு விட்டுவிட்டு திரும்பி வருவதற்கு இடைப்பட்ட நேரத்தில் தான் அவன் அங்கு வந்து சேர்ந்திருந்தான். அப்படி பார்க்க நேர்ந்தது தான் அந்த காட்சி. ஆதரத்துடன் தந்தையிடம் சென்று வழக்காட மொழிந்தவனை, மீண்டும் மறுக்க மறுக்க அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக யூ.எஸ் அனுப்பி வைத்திருந்தார் அவனின் தந்தை.
அன்றையிலிருந்து இன்றைய நாள் வரை அவளைத் தேடிக் கொண்டிருக்கிறான் அவன். வள்ளியம்மையின் பாதுகாப்பில் இருந்தவளை கண்டுபிடிக்க முடியாதது ஒரு பக்கமிருக்க, பெரும் முட்டுக்கட்டையாய் இருக்கும் தந்தையை மீறிக் கொண்டு அவனின் சுண்டுவிரலை கூட அசைக்க முடியவில்லை என்பது தான் முற்றிலுமான உண்மை.
அழுகை முழுவதுமாய் நின்று மெல்ல தலை நிமிர்த்தி அவளைப் பார்த்தான் அவன். அழுத தடம் அப்படியே இருந்தது. கண்களிரண்டும் செவ்வரியோடி கருவிழிகள் கூட கருஞ்சிவப்பாய் மாறி நின்றது. எந்த அளவிற்கு அந்த விழகள் வேதனையை வெளிப்படுத்தியதோ அதைவிட பலமடங்கு அதிகமாய் பழிவாங்கிடும் குரூரத்தை வெளிப்படுத்தியது.
“நீயும் அந்த வலிய தினம் தினம் அனுபவிக்கணும் ஆரா… நம்ம உயிரா நேசிக்கறவங்க நம்ப கண்ணு முன்னாடி எரிஞ்சு சாம்பலானா அவ்வளவு வலிக்கும்னு நீயும் தெரிஞ்சுக்கணும்… நம்மளால தான் அவங்க செத்துப் போனங்கனு நினைச்சு நினைச்சு தினம் தினம் நீயும் உயிரோட சாகணும்…” என்றவன் சற்றே நிறுத்தி அவளின் கண்களை ஊடுறுவி ஆழப் பார்த்தபடியே, “யூ டோன்ட் டிஸர்வ் டூ பீ ஹாப்பி எவர்…” என்றான் அழுத்தமாய் சீற்றமாய். அந்த விழிகளிலும் மொழிகளிலும் தான் எத்தனை வன்மம் தாண்டவமாடுகிறது. அதை உள்வாங்கி உணர்ந்துக் கொண்டவளுக்கு மெல்லிய நடுக்கம் தான். கொஞ்சமும் அதை தன் உடல்மொழியில் வெளிக்காட்டி விடாமல் இருக்க பெரும்பாடு பட்டாள்.
அவன் என்ன செய்ய விழைகிறான் என்பதை ஓரளவு ஊகிக்க முடிந்தவளுக்கு இதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த திடமெல்லாம் வற்றிப் போகும் உணர்வு. வேந்தன் சீக்கிரமே வந்துவிட வேண்டும் என்பது தான் அவளின் இப்போதைய ஓரே வேண்டுதல். அவளின் குறிப்பு அவனை சேர்ந்திருக்குமோ? சேர்ந்திருக்கும் என்றுதான் தோன்றியது அவளுக்கு.
“பாதிக்கபட்ட ஒருத்தியா எனக்கு அவங்களுக்கு தண்டனை குடுக்கற உரிமை இருக்கு செல்வா… அப்படியே அந்த உரிமை இல்லைனு நீ நினைச்சா என்னை தான் தண்டிக்கணுமே தவிர யுவாவ இல்லை… ஹீ இஸ் இன்னசெண்ட்… இங்க என்ன நடக்குதுனு விளக்கி சொன்னா கூட அவன் புரிஞ்சுக்கறது கஷ்டம்… அவன் குழந்தை செல்வா… அப்படி இருக்கும் போது எனக்கான தண்டனைய அவனுக்கு குடுக்கணும்னு நீ நினைக்கறது நியாயமேயில்லை…” என்றாள் அமைதியாய் அவனின் விழிகளை நேருக்கு நேர் ஊடுறுவிப் பார்த்து எண்ணங்களை அவதானிக்க முயன்றபடியே.
எழுந்து நின்றவன், கால்களை உதறியபடியே மெல்ல எட்டுகள் எடுத்துவைத்து அவளின் அருகில் நெருங்கி வந்தான். “உன்னை தண்டிக்கற வாய்ப்பை நீ தான் எனக்கு தரலை ஆரா… ஒரு வருஷத்துக்கு முன்னாடி யூ.எஸ்ல உன்ன மறுபடியும் பார்த்தப்ப உடனே கொன்னு போடணும்னு வெறியே வந்துச்சு… ஆனா அப்படி ஒரு நாள்ல ஒரு நொடியில எந்த கஷ்டத்தையும் அனுபவிக்காம நீ செத்துட கூடாது…
அதன் உன்னை தேடி கண்டுபிடிச்சு உன் கிட்ட வந்தேன்… காதலிச்சு கல்யாணம் பண்ணி யூ.எஸ் கூட்டிட்டு போய் நான் அனுபவிக்கற நரகத்தை தினம் தினம் உனக்கும் காட்டணும்னு நினைச்சேன்… திரும்ப ஏமாந்திட்டோம்னு தெரிஞ்சு நீ துடிக்கறத பாக்கணும்னு நினைச்சேன்… ஆனா நீ தான் அதுக்கான வாய்ப்பை எனக்கு தரலையே…
அந்த கார் மோத வந்தப்ப யுவாவுக்காக நீ துடிச்சீயே அப்போ தான் தெரிஞ்சுது… உன்ன அடிக்கறத விட அவனை அடிச்சா உனக்கு ஆயிரம் மடங்கு அதிகமா வலிக்கும்னு…” அவளின் காதருகே குனிந்து மிக ஏளனமாய் சொன்னான் அவன்.
அவன் சொல்ல ஒவ்வொரு நிதழ்வுகளாய் அவளின் மூளைக்குள் சிலந்தி வலை தொடராய் பின்ன தொடங்கியது. ஒரு வருடத்திற்கு முன்பு ஆட்டிசம் குழந்தைகளைப் பற்றிய மருத்துவ கருத்தரங்களில் கலந்துக் கொள்வதற்காக தான் இவளும் நித்யாவும் அனுராதாவுடன் யு.எஸ் சென்றிருந்தவர். அங்கே தான் அவளைக் கண்டு அவன் அடையாளம் தெரிந்துக் கொண்டிருக்க வேண்டும். அதன் பின் தேடிக் கண்டுபிடித்து இத்தனை தூரம் வந்திருக்க வேண்டும்.
அன்றைய தினம் ஆரா உறுதியாய் அவனின் காதலுக்கு மறுப்பு சொல்லிவிட்டு வந்திருந்தாள். அவனின் அந்த திட்டம் இனி கைக்கூடாது என்று தெரிந்த பின்தான் முதல் பரிசை புயூனிடம் சொல்லி அவளிடத்தில் வைக்க சொல்லி இருப்பான் அவன். அதற்கான அவளின் எதிர்வினையே அவனை பார்த்து தெரிந்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் தான் அங்கே அவளைத் தொடர்ந்து அவனிம் சென்றிருப்பான். அப்பொழுது எதிர்பாரா விதத்தில் அவன் தெரிந்துக் கொள்ள நேர்ந்தது தான் யுவாவிற்கான அவளின் தவிப்பும், பாசமும். அந்த நொடியே அவனின் மூளை வேறு கணக்கை வகுத்துவிட்டது.
கண்களில் விழுந்த காட்சியில் சட்டென்று அவளின் மூளை மேலே சிந்திப்பதை நிறுத்திக் கொண்டது. யுவா இருந்த அறையில் தீ விபத்தின் போது நீரை இறைக்கும் தெளிப்பான் (fire sprinkler) இப்பொழுது நீரை தெளித்துக் கொண்டிருந்தது.
“அது தண்ணீ இல்ல ஆரா பெட்ரோல்… சின்னதா ஒரு தீப்பொறி பட்டா போதும்… மொத்தமும் முடிஞ்சுடும்…” என்றான் முறுவலித்தபடி.
“யார் அதை பத்த வைக்க போறா தெரியுமா..? நீதான்… நீயேதான்… சொன்னீயே… இதே மாதிரி ஒரு லைட்டர வச்சு தான் என் ப்ரண்ட்ஸ் நாலுப் பேர கொன்னேனு… அதே மாதிரி இப்போ இந்த லைட்டர வச்சுதான் யுவாவையும் நீயே இந்த கையால கொல்லப் போற..?” என்றான் குரூரமாய் இதழ்களை இழுத்து பிடித்து முறுவலித்தபடி.
“இதெல்லாம் பண்ணிட்டு நீ தப்பிச்சுட முடியும்னு நினைக்கறீயா..?” அவளையும் மீறி நடுக்கமும் பயமும் அந்த குரலில் தெரிந்தது.
இப்பொழுது வாய்விட்டே கலகலவென நகைத்தான் அவன். “என்ன ஆரா நீ ரொம்ப புத்திசாலினு நினைச்சேன்… இவ்வளவு சில்லியா கொஸ்டீன் கேக்கறீயே..? இதெல்லாம் பண்ணிட்டு இங்கேயே உன் பக்கத்துல போலீஸ் வந்து அரஸ்ட் பண்ணற வரைக்கும் உக்காந்து இருப்பேனா..? இன்னும் ஒரு மணி நேர்த்துல ஐய்யாவுக்கு ப்லைட்… நான் எந்த நாட்டுல இருக்கேனு கண்ணுபிடிக்கவே இங்க உள்ளவங்களுக்கு எத்தனை வருஷம் ஆகுமோ..?” என்றபடியே லைட்டரை அவளின் கைக்குள் திணித்து தானும் அவளின் கையை இறுக்கி பிடித்தபடியே நெருப்பை எரிய விட்டிருந்தான் வெற்றி.
மூச்சை இழுத்து பிடித்தவள், “ரிலாக்ஸ் செல்வா… ஐ வில் ட்ரீட் யூ… அந்த நிகழ்வால நீங்க மனசளவுல அதிகமா பாதிக்க பட்டிருக்கீங்க… அவங்க சாவுக்கு நீங்கதான் காரணம்னு நம்பறீங்க… அந்த குற்றவுணர்ச்சி தான் உங்களை தினம் தினம் காயப்படுத்துது… நிச்சயமா சரி பண்ணிடலாம்… நான் சரி பண்ணறேன்… என்னை நம்புங்க…” என்றாள் அனுதாபக் குரலில் மென்மையாய்.
“ஏய்… என்ன பாத்தா உனக்கு பைத்தியகாரன் மாதிரி இருக்காடி…” என ஆங்காரமாய் கத்தியவன் அவளின் கையிலிருந்து தன்னுடைய கையை விலக்கிக் கொண்டிருந்தான். அதில் நழுவி விழுந்த லைட்டரிலிருந்து நெருப்பு அணைந்துப் போயிருந்தது. அவளுள் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியும் ஆசுவாசமும் பரவியது. ஆனால் எத்தனை இப்படியே பிடித்து வைத்திருக்க முடியுமென்ற எண்ணம் அவளுள் எழுந்திருந்த கொஞ்ச நிம்மதியையும் துடைத்துப் போட்டிருந்ததது.
அடுத்த நொடி வேகமாய் சட்டைபையிலிருந்த பேனா கத்தியை எடுத்து அவளின் கழுத்தில் அழுத்தி பதித்திருந்தான் அவன். அவன் பதித்திருந்த இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் ரத்தம் துளிர்க்க துவங்கியிருந்தது.
“என்ன நினைக்கற ஆரா… இப்படியே பேசி பேசி நேரத்தை வளத்திட்டா அந்த வேந்தன் வந்து உன்ன காப்பாத்திடுவானா..? நேவர்…” என்றான் படு எள்ளலாய் அவன்.
பட்டென்று ஒரு பெரும் சத்தம். என்னவென்று சுதாரித்து அவன் திரும்பி பார்ப்பதற்குள்ளகவே எதிர் பக்க சுவரிலிருந்த பெரிய கண்ணாடி ஜன்னல் சில்லு சில்லாய் உடைந்து நொறுங்கி இருந்தது. அடுத்த நொடி தொடர்ந்து பாய்ந்த தொட்டாக்கள் அவனின் உடலை துழைத்து தஞ்சம் புகுந்திருந்தது. சரிந்து கீழே விழுந்தவனின் கையிலிருந்த பேனா கத்தி அவனின் கட்டுபாட்டையும் மீறி ஆராவின் கழுத்தில் நீண்ட கோடு ஒன்றினை இழுத்திருந்தது. அதனை தொடர்ந்து கதவை உடைத்துக் கொண்டு சரசரவென ஆட்கள் உள்ளே வரும் அரவம்.
வெள்றியை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். சரிந்து கீழே விழுந்தவனின் கண்களில் நிரந்தர நிம்மதியின் சாயல். மனதை இறுக்கி பிடித்திருந்த பெரும் வேதனையிலிருந்து விடுதலையான உணர்வு. இறப்பை தவிர எதுவுமே அவனுக்கு நிம்மதியை தந்துவிடாது என்று தெள்ளத்தெளிவாக அந்த நொடி புரிந்துப் போனது ஆராவிற்கு. சில நொடிகள் அவனைப் பார்த்தபடியே தன் நினைவை மொத்தமாய் இழந்துப் போயிருந்தாள் அவள்.
– பற்றி எரியும்…

