Loading

தழல் 39:

 

நொடிகள் வேகமாய் கரைந்துக் கொண்டிருந்தது. இன்னும் அவனின் மனம் சமநிலைப் படவில்லை. ‘அடுத்து என்ன..? அடுத்து என்ன..?’ என்ற வார்த்தைகளை அச்சாணியாய் பற்றி ஒரே இடத்தில் தான் சுழன்றுக் கொண்டிருந்தது அவனின் எண்ணங்கள். மேசை மீது காற்றில் படபடத்த தாளில் குவிந்தது அவன் கவனம். பரிதவித்த மனதுற்குள் விழுந்த ஒரு சொட்டு மழைத்துளிப் போல ஏதோ ஒரு ஆசுவாசம்.

இரண்டே எட்டுகளில் அந்த மேசையை அடைந்திருந்தான் அவன். வெற்றிய அனுப்பிய சாவி கொத்துக்கு கீழே இருந்தது அது.

 

“ஜெஸ்ட் கால்ம்…” (Just calm) இரண்டே வார்த்தைகளில் அவனுக்குள் ஒரு நம்பிக்கை ஊற்றை விதைத்திருந்தாள் அவளின் மனம் கவர்ந்தவள். அவசர அவசரமாய் அந்த தாளை பெயிண்டால் நிறைத்திருந்தாள் அவள். அவனுக்காவே அவள் அதை விட்டுச் சென்றிருக்க வேண்டுமென்று தோன்றியது. கண்களை மூடி, ஆழ மூச்செடுத்தவனின் நினைவுகளில் அவளின் புன்னகை முகம். கீற்றாய் அவனின் இதழ்களிலும் புன்னகை பூக்கப் பார்த்தது. மனம் தெளிந்த உணர்வு. அடுத்தடுத்து செய்ய வேண்டிய காரீயங்கள் மனதில் அணிவகுத்தது.

 

அதற்கு கீழே அதேப்போல படபடத்துக் கொண்டிருந்தது இன்னொரு தாள். அவசரமாய் இரண்டு தாள்களையும் எடுத்து மடித்து சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டவன், கைப்பேசியில் யாருக்கோ அழைக்க முயன்றபடியே அங்கிருந்து வேகமாய் வெளியேறி இருந்தான்.

 

காதில் ப்ளூ டூத்தில் யாரிடமோ பேசியபடியே, அணிந்திருந்த சட்டையை மடித்துக் கொண்டே நேரே அவன் சென்று நின்ற இடம் வார்டன் அறைதான். அவனைப் பார்த்ததும் உள்ளுக்குள் ஒரு திடுக்கிடல் அவருக்கு.

 

“வாங்க… வாங்க சார்… இங்க… எதுவும் வேணுமா சார்…” என்றவர் குரலில் மெலிதான நடுக்கம். அமைதியாய் அவரைப் பார்த்தவனின் பார்வை அவரை ஊடுறுவி கூறுப் போட முயன்றது.

 

“உங்களுக்கு இங்க என்ன வேலை…” என்றவனின் அழுத்தமான கேள்வியில் தடுமாறி அவனைப் பார்த்தார் அவர்.

 

“உங்களுக்கு இங்க என்ன வேலைனு கேட்டேன்…” இன்னும் அழுத்தமாய் ஒலித்தது அவனின் குரல்.

 

“சார்…” என்றார் தயங்கி அவர்.

 

சில நொடிகள் அவரை உறுத்தி விழித்தவன், “யுவாவும் ஆராவும் எங்க..?” என்றான் உறுமலாய்.

 

“யுவா… யுவா… ரூம்ல இருப்பான் சார்… ஆரா மேம் இப்பதான் கொஞ்சம் முன்னாடி அவன வந்து பாத்துட்டு போனாங்க…” சொல்லி முடிக்கும் முன்னே அந்த அறையின் ஓரத்தில் மூலையில் விழுந்திருந்தார் அவர். அவரின் உதடு கிழிந்து இரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது.

 

கையை உதறியபடியே, “இன்னொரு தடவ ரிப்பிட் பண்ண மாட்டேன்… யுவாவும் ஆராவும் எங்க..?” என்றான் அவரை நெருங்கி நின்று உறுத்து விழித்தபடியே.

 

“எனக்கு… எனக்கு… தெரியாது சார்…”

 

“நீங்க தானே இந்த ஹாஸ்டல் இன்சார்ச்… உங்களுக்கு தெரியாம எப்படி பையன் மிஸ் ஆவான்… அதுவும் கதவு தாழ்பாள் உடைஞ்சுருக்கு… பிள்ளைய காணும்… கேட்டா தெரியாதுனு கதையா சொல்லறீங்க…”

 

“உண்மையிலேயே தெரியாது சார்…  எப்பவுமே காலையில ஒரு தடவ ரவுண்ட்ஸ் போவேன் சார்… அப்போ எல்லாமே நார்மலா தான் சார் இருந்துச்சு… எப்பவும் பர்ஸ்ட் ப்ளோர்ல உள்ள பசங்க அவங்களே கிளம்பி சாப்பிட வந்துடுவாங்க சார்…  கீழ இருக்கற பசங்களுக்கு தான் கைடன்ஸ் தேவை… அதுக்கு மட்டும் இரண்டு பேர் வருவாங்க… யுவா கதவு சாத்தி இருக்கவும் இன்னும் அவன் டோர் ஓப்பன் பண்ணலனு இருந்துட்டேன் சார்… உள்ளதான் இருப்பானு நினைச்சேன்…” அவர் சொல்லி முடிக்கும் போது இன்னொரு அறையும் பலமாய் விழுந்திருந்தது.

 

“நான் என் கொஸ்டின ரிப்பிட் பண்ண மாட்டேனு சொன்னதா நியாபகம்…” என்றான் கையை உதறிக் கொண்டே.

 

“சார்… நிஜமாவே…”

 

“ஸ்ஸ்ஸ்… உண்மை மட்டும் தான் வரணும்… இல்லைனா சொல்லிட்டு எல்லாம் இருக்க மாட்டேன்…” என்றபடியே துப்பாக்கியை எடுத்து அவரின் நெற்றிப் பொட்டில் வைத்திருந்தான் அவன். சர்வமும் நடுங்கி அடங்கிப் போனது அவருக்கு.

 

“சார்… சார்… நிஜமாவே அவங்க எங்கனு எனக்கு தெரியாது சார்… ஒரு லட்ச ரூபா பணம் தந்து யுவாவோட நைட் சாப்பாட்டுல ஸ்லீப்பிங் பீல்ஸ் கலக்க சொன்னாங்க சார்… நான் நான்… அதை மட்டும் தான் செஞ்சேன்… பணத்துக்கு ஆசைப்பட்டு செஞ்சுட்டேன் சார்… சத்தியமா எனக்கு வேற எதுவும் தெரியாது சார்…” என்றார் கண்ணீருடன் அவனின் காலைப் பிடித்துக் கொண்டு. வேகமாய் அவரை உதறி விலகிக் கொண்டவன் முகம் அருவெறுப்பில் சிறுத்துப் போனது. இன்னும் அங்கே நின்றுக் கொண்டிருக்க அவனுக்கு நேரமில்லை. வெளிபக்கமாய் கதவை தாழிட்டுப் பூட்டிவிட்டு அதே வேகத்தில் கிளம்பிவிட்டான் அவன்.

 

❀❀❀❀❀

 

பெரிதும் இல்லாத சின்னதும் இல்லாத ஒரு வீடு. அதன் முகப்பில் கேரளா வீடுகளின் பாணியில் ஓடுகள் வேயப்பட்டிருந்தது. இடது பக்க ஓரத்தில் காரை நிறுத்து அவள் இறங்குவதற்காக கதவையும் திறந்துவிட்டான் அவன். எதுவும் சொல்லாமல் இறங்கிக் கொண்டவள், அமைதியாய் அவனைப் பின் தொடர்ந்தாள்.

 

“வெல்கம் டூ ஹெல்…” என்றபடியே அகன்ற பெரிய ஒற்றை தேக்குமர கதவை திறந்து அவள் உள்ளே நுழைய வழிவிட்டு ஒதுங்கி நின்றான் வெற்றி. சுற்றுபுறத்தை அவதானித்தபடியே அவனிலும் ஓரவிழிப் பார்வையை பதித்தபடி  உள்ளே நுழைந்தவள் முகத்தில் கீற்றாய் ஏளனப் புன்னகை.

 

விசாலமான வரவேற்பறை. ஆகாய நீறத்தில் வர்ணம் தீட்டப்பட்டிருந்தது.  ஒரு பக்கத்தின் பாதியை நிறைத்தபடி தூய வெள்ளை நிறத்தில் சோபா. அதன் ஒருபக்க மூலையில் ஒரு கதவு இருந்தது. படுக்கை அறையாக இருக்க வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு. இன்னொரு பக்கம் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மரதடுப்புக்கு பின்னே மிகச் சிறிய சமையலறை. இன்னொரு பக்கத்தின் ஓரத்தில் சுவரை பாதி நிறைத்தபடி ஒரு பெரிய கண்ணாடி ஜன்னல். அதன் வழியே வெளியுலகம் பசுமையாய் விரிந்தது. அதை ஒட்டி சின்ன மேசையும் சில புத்தகங்களும் ஒரு மடிகடிணியும். அதற்கு சற்றே இடைவெளி விட்டு அவளின் முழு உருவமும் தெரியும் அளவிற்கான மிகப் பெரிய கண்ணாடி. அதில் தனக்கு பின்னால் தெரிந்த புகைப்படங்களில் கூர்மையாய் படிந்தது அவளின் பார்வை.

 

அந்த நொடிக்காவே காத்திருந்தவனின் போல அவளின் முகத்தில் துல்லியமாய் படிந்திருந்தது அவனின் பார்வை. ஆனால் அந்த முகத்தைக் கொண்டு உணர்வுகள் எதையுமே படித்துக் கொள்ள முடியவில்லை.

 

மிக நிதானமாய் தன் முதுகுக்கு பின்னே விரிந்திருந்த புகைப்பட தொகுப்பை கையைக் கட்டிக் கொண்டு திரும்பிப் பார்த்தாள் அவள். அதில் பிரதானமாய் அவளின் புகைப்படம். மனம் தான் எத்தனை விசித்திரமானது. மறக்க நினைப்பதை, மறந்துவிட்டதாய் நினைப்பதை, அதனுடன் சின்னதான தொடர்புடன் எதையும் பார்த்துவிட்டாலும் கூட மொத்ததையும் கண்முன்னே படம் விரித்துக் காட்டிவிடுகிறது. இமைக்காமல் அதையேப் பார்த்துக் கொண்டிருந்தவள் முகத்தில் தப்பி தவறி கூட எந்த உணர்வுகளையும் காட்டிவிடவில்லை. தன்னுடைய பலவீனத்தை அவனுக்கு காட்டிவிடக் கூடாது என்பதில் அத்தனை தீவிரம் அவளுக்கு.

 

“இவங்க எல்லாம் உன்னோட விக்டிம் இல்லையா..?” என்றாள் அமைதியான குரலில்.

 

“இல்ல… தே ஆர் மை பீயூட்டிபுல் ஏஞ்சல்ஸ்…” என்றான் அவன் சிறுப் புன்னகை தவழ ரசித்து வெற்றி. பதிலெதுவும் சொல்லவில்லை அவள்.

 

அவள் அமர்வதெற்கென்று பிரம்பு நாற்காலி ஒன்றை எடுத்து வந்துப் போட்டான். கேள்வியாய் அவனைப் பார்த்தவளிடம் அமருமாறு சைகை காட்டினான் அவன்.

 

“யுவா எங்க..?” மிக நிதானமாய் அழுத்தமாய் வந்தது அவளின் கேள்வி.

 

“முதல உக்காரு ஆரா… என்னோட

 

பதிலின்றி அதில் அமர்ந்தவளின் கைகளை தனித்தனியாக அதன் பிடிகளில் இறுக்கிக் கட்டத் தொடங்கியிருந்தான் அவன்.  மிக மெல்லியதான கீற்றாய் ஒரு புன்னகை அவளுடன்.

 

அந்த புன்னகையில் என்னவென்பதைப் போல நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தான் அவன். இன்னுமே விரிந்தது அவளின் புன்னகை. அவனின் சினத்தை தூண்டும் புன்னகை.

 

கயிறுகளின் இறுக்கத்தை கூட்டியவன், “ஏன் சிரிக்கற…” என்றான் அதட்டலாய்.

 

“இந்த கயிறால என்ன கட்டி வச்சிட முடியும்… நீ ஈஸியா தப்பிச்சுட முடியும்னு நினைக்கறீயே… சிரிக்காம என்ன பண்ண…” அவளின் பதிலில் அவனின் புன்னகை ஏளனமாய் விரிந்தது. இம்முறை அவன் எதுவும் சொல்லிடவில்லை.

 

“கைய திருப்தியா கட்டியாச்சு இல்ல… இப்ப யுவாவ பாக்கலாமா..?”

 

“ஓ… யெஸ்…” என்றபடியே சுவரிலிருந்த ஒரு ஸ்வீட்சை தட்டினான் அவன். காலுக்கடியில் இருந்த தரை நிறம் மங்கி கண்ணாடியாய் உருப்பெற்றிருந்தது. அதன் உள்ளே ஒரு கட்டிலில் அசைவின்றி ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் யுவா.

 

“என்ன பண்ணுன அவனை…” என்றவளிடம் சிறு சீற்றம். அதைத்தான் இத்தனை நேரம் எதிர் பார்த்திருந்தானோ அவன்.

 

“ஜெஸ்ட் அஞ்சே அஞ்சு ஸ்லீப்பிங் பில்ஸ்… நிச்சயம் நாளைக்கு கண்ணு முழிச்சுப்பான்… உயிரோட இருந்தா…” என்றான் எள்ளலாய். கண்களை சுருக்கி கூர்மையாய் அவனைப் பார்த்தாள் அவள். அவனின் ஒற்றை விரல் அவளின் முக வடிவில் அலைந்தது.

 

அவளின் விழிகளை நிமிர்ந்து ஊடுறுவிப் பார்த்தவன், “முன்னவிட ரொம்பவே அழகாகிட்ட இப்போ… ஆனாலும் எதுவோ மிஸ்ஸிங்… அந்த குழந்தை தனமான முகம் மாறிடுச்சு… இந்த கண்ணு இப்போயெல்லாம் சிரிக்கறதே இல்ல ஆரா…” என்றவனின் குரலில் ஏக்கம் வழிந்ததோ? அப்படிதான் இருந்தது அவன் சொல்லிய விதம். அவளுக்கு மிக நெருக்கமாக தெரிந்தவனின் விழிகளை சலனமில்லாது பார்த்தாள் அவள்.

 

“நான் காதல சொல்லி வேண்டானு சொன்ன ஒரே பொண்ணு நீதான்… இத்தனை நெருக்கத்துலையும் என்ன சலனமில்லாம பாக்கற இந்த கண்ணு என்ன ஏதோ பண்ணுது ஆரா…” என்றான் நெஞ்சை அழுந்த பிடித்தபடி மயக்கும் புன்னகையோடு.

 

சின்னதாய் தலைசாய்த்து அவனைப் பார்த்து முறுவலித்தவளின் புன்னகையில் சிறு வலி தொக்கி நின்றது. “வாழ்க்கை முழுசுக்கும் யாரையும் நம்ப முடியாத அளவுக்கு வலிக்க வலிக்க நீங்க தான் எனக்கு விளக்கமா பாடம் கத்துக்கு குடுத்துருக்கீங்களே…” என்றாள் அவள் மிதமிஞ்சிய வெறுப்புடன்.

 

“நானா..?”என்றான் சிறு ஆச்சரியத்துடன் அவன்.

 

“எதுக்குமே நான் காரணமில்லை… எல்லாம் அந்த இடியட்ஸ் பண்ணது… நான் கிளம்பும் போதே உன்னையும் வீட்டுக்கு அனுப்பவிட சொல்லி படிச்சு படிச்சு அத்தனை தரம் சொன்னேன்… அப்ப எல்லாம் சரிசரினுட்டு போதைய போட்டுட்டு மட்டையாகிட்டானுங்க ராஸ்கல்ஸ்… நான் சொன்ன மாதிரி அன்னைக்கு நைட்டே உன்ன மட்டும் வீட்டுக்கு அனுப்பி வச்சிருந்தா நீயும் இன்னைக்கு இங்க இருந்திருக்க மாட்ட நானும் திரும்பவும் இப்படி உன் முன்னாடி வந்து நின்னுட்டு மாட்டேன்…” என்றான் பெருமூச்சுடன்.

 

தவறு செய்துவிட்டோம் என்னும் விதமாய் சின்னதான குற்றவுணர்வு கூட அவனிடம் இல்லை. ஏதோ சுற்றுலாவுக்கு சென்று திரும்பிச் செல்ல தாமதமானதைப் போல் அல்லவா இலகுவாய் சொல்கிறான். ஆனால் அதிலிருந்த உண்மையும் அவளைச் சுடதான் செய்தது. அன்றிரவே அவள் திரும்பிச் சென்றிருந்தாள் ராஜனோ பர்வதமோ காவல்துறை வரை சென்றிருக்கவே மாட்டார்கள். அவர்களோடே அந்த விசயம் அழுந்தி அடங்கிப் போயிருக்கும். ராஜனும் இன்று உயிரோடு இருந்திருப்பார். ஆனால் என்றைக்குமே அவளால் அந்த நிகழ்விலிருந்து அந்த ஒருநாளில் இருந்து மீண்டு நிமிர்ந்தே நின்றிருக்க முடியாது என்று தான் தோன்றியது.

 

சில நொடிகள் மௌனமாய் அவனை ஆழ்ந்துப் பார்த்தவள், “நீங்க பண்ணது தப்புனு மனசோட ஓரத்துல இப்ப வரைக்கும் சின்னதா ஒரு உறுத்தல் கூடவா இல்லை..?” என்றாள்

 

“விளக்கோட பிரகாத்துல ஈர்க்கப்பட்டு அதை நோக்கி விட்டில் பூச்சி வந்து விழுந்து இறந்தா அது விளக்கோட தப்பில்லையே… அப்படியே தப்புனாலும் தண்டனை தர அதிகாரம் உனகில்லையே…” என்றவன் சின்னதாய் தோள்களை குலுக்கிக் கொண்டான்.

 

கசந்த முறுவல் ஒன்று அவளிடம். “இப்ப இத்தனை ட்ராமா எதுக்காக..? என்னை பழிவாங்கவா..?” என்றாள் சிறு புன்னகையோடு. உண்மையில் பழி வாங்குவது ஒன்று தான் அவனின் நோக்கமென்றால் அவளைக் கொன்றுபோட ஒரு நொடி போதாதா? இல்லை கடத்தி அமுதனையோ யுவாவையோ கொன்றுப் போட ஒருநொடி போதாதா? இத்தனை நாள் காத்திருப்பான் இப்படி அழைத்து வந்து கட்டி வைத்து கதையேன் சொல்ல வேண்டும்.

 

அவளின் கேள்விக்கு சன்னமான சிரிப்பொன்றை உதிர்த்தான் அவன். லைட்டர் ஒன்றை உயிர்பித்து அவளின் முகத்தின் முன்னே அலையவிட்டான். தீச்சுடரின் வெப்பம் அவளைச் சுட்டது.  சலனமே இல்லாமல் அமைதியாய் அவனைப் பார்த்திருந்தான் அவள். அவளிடம் எவ்வித எதிர்வினையும் இல்லாமல் போகவும் தரையில் மண்டியிட்டு அமர்ந்தவன், அவளின் வலதுக்கரம் பற்றி விரலின் மீது நெருப்பை அலையவிட்டான்.

 

“இந்த… இந்த முகத்துல வலியைப் பாக்கணும் ஆரா நான்… நீ துடிக்கறத பாக்கணும்… சாகவும் முடியாம வாழவும் முடியாம தினம் தினம் துடிக்கறத பாக்கணும் நான்…” என்றவனின் குரலிலும் முகத்திலும் குரோதம் வலிந்தது. அலைந்த நெருப்பு ஒரே இடத்தில் நிலைப்பெற்று அவளின் சுண்டு விரலை சுட்டுப் பொசுக்கியது.

 

“இது வரைக்கும் எத்தனை கொலைப் பண்ணி இருக்கீங்க செல்வா..?” தீடிரென சம்பந்தமின்றி கேட்டவளை சின்ன ஆச்சர்யத்தோடு நிமிர்ந்து பார்த்தவன் சன்னமாய் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.

 

“செல்வா… அப்படிதானே உங்களை உங்க ப்ரண்ட்ஸ் அன்னைக்கு கூப்பிட்டாங்க… நான் நாலு கொலைப் பண்ணி இருக்கேன்… எப்படி தெரியுமா..? இதே இதேப்போல ஒரு லைட்டர வச்சு…” மேலே தொடர முடியாத படிக்கு அழுத்தமாய் அவனின் கரம் அவளின் கன்னத்தில் படிந்து மீண்டிருந்தது. அவள் சொன்ன விசயத்தின் வீரியம் தாளாமல் அவனின் உடலெல்லாம் இன்னுமே நடுங்கிக் கொண்டிருந்தது.

 

“சொல்லாத… சொல்லாதா… இன்னும் ஒரு வார்த்தை கூட சொல்லக்கூடாது நீ… மீறி சொன்ன…” என்றபடியே அவளின் கழுத்தை நெரிக்க தொடங்கியிருந்தவன் கைகளை வேகமாய் பின்னிழுத்துக் கொண்டான். அப்படியே தலையைப் பிடித்தபடி மண்டியிட்டு தரையில் அமர்ந்திருப்தவனின் விழிகளில் கண்ணீர் கோர்த்து நின்று விழ நேரம் பார்த்திருந்தது.

 

“ரிலாக்ஸ் செல்வா… நான் எதுவும் சொல்லைல…” என்றாள் அமைதியாய் ஆரா. நிமிர்ந்து அவளைப் பார்த்தவன், கண்ணில் இருந்து நீர் இறங்கி கன்னம் தாண்டி வழிந்தது.

 

“எத்தனை ஈஸீயா சொல்லற நாலுப் பேர கொன்னுட்டேனு… செஞ்சது தப்புனு மனசோட மூலையில சின்னதா கூடவா உனக்கு உறுத்தலில்லை…” அவளின் பாடத்தை அவளுக்கே திருப்பி படித்தான் அவன்.

 

“ஆமான்… நாங்க செஞ்சது தப்புதான்… ஆனா அதுக்கு தண்டனை குடுக்க நீ யாரு..?” என்றவனின் ஆங்கார குரல் அந்த அறையை நிறைத்தது.

 

“இதெல்லாத்துக்கும் நான் தான் காரணம்… நான் மட்டும் தான் காரணம்… உன்னை பாத்து ஆசைபட்டது நான்… உன்னை என்கிட்ட கொண்டு வர பிளான் பண்ணது நான்… உன்னை முதல தொட்டது நான்… எல்லாத்துக்கும் தொடக்கமா நானிருக்கும் போது தண்டனை மட்டும் அவங்களுக்கு எதுக்கு தரணும் நீ..?” அவளின் சுடிதாரின் கழுத்தைப் பற்றி உலுக்கியபடி வினவியவனை

 

“எனக்கு எல்லாமே அவனுங்க தான்… அம்மா… அப்பா… அண்ணன்… தம்பி… ப்ரண்டு… எல்லாமே அவனுங்க தான்… என்ன மட்டும் எங்க அப்பா வலுகட்டயாம யூ.எஸ் அனுப்பி வைக்கலனா நீ அவனுங்க மேல கம்பிளைண்ட் குடுத்த அன்னைக்கே கொன்னு போட்டிருப்பேன் உன்ன… அத்தனை அடிச்சு விசாரிச்சும் என்னைப் பத்தி மூச்சுக்கூட விடல அவங்க… அவங்களுக்கு ஜாமீன் கிடைச்சுட்டுனு தெரிஞ்சு எத்தனை சந்தோஷமா கிளம்பி வந்தேன் தெரியுமா..? ஆனா நான் பார்த்தது அவனுங்க சாம்பலை… எப்படி இருக்கும்..? எப்படி இருக்கும்..? நீயே சொல்லு… உனக்கு வேண்டியவங்க கண்ணு முன்னாடி எரிஞ்சு சாம்பலானா எப்படி இருக்கும்..? சொல்லுடி எப்படி இருக்கும்..?” என்றவன் குரல் மட்டும் தான் அந்த அறையை நிறைத்திருந்தது. மடிந்து அமர்ந்து கதறி அழுதவனைதான் வழியும் கருணையுடன் அனுதாபமாய் பார்த்திருந்தாள் ஆரா.

 

                           – பற்றி எரியும்…

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்