
தழல் 36:
பெரிது பெரிதாய் மழை துளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சடசடவென்று விழ தொடங்கி இருந்து. அவை விழுந்த ஒவ்வொரு இடத்திலும் ஒற்றை ரூபாய் நாணயத்தின் அளவிற்கு ஈரமேற்பட்டிருந்தது. யாரோ சிறு கல் கொண்டு மிக வீரியத்தோடு தேகத்தை தாக்கியதைப் போல் மழைத் துளிகள் பட்ட இடமெல்லாம் சுளீரென்ற வலியை உண்டாக்கியது. மனதின் வலியைவிட அந்த வலி கொஞ்சமாய் தான் இருந்திருக்க வேண்டும். கொஞ்சமும் சலனமில்லாமல் முழங்காலுக்குள் முகத்தை புதைத்தபடி அழுகையில் கரைந்துக் கொண்டிருந்தாள் அவள். மழையின் இரைச்சலில் அவளின் அழுகைச் சத்தம் அடங்கி அமிழ்ந்தே போயிருந்தது.
“ஆரா… இங்க என்ன பண்ணற நீ..? மழைப் பெய்யுது பாரும்மா… ஏந்திரி முதல…” சின்னதான அதட்டல் குரலுடன் அவளின் கைப்பற்றி எழுப்ப முயன்றான் வேந்தன்.
தேம்பியபடியே நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் கடகடவென்று இறங்கிக் கன்னம் தொட்டு மழையோடு கரைந்துக் கொண்டிருந்தது. கண்ட நொடி பதறி துடித்து உருகிதான் போனான் அவன். அவள் அழுதுக் கொண்டிருப்பாள் என்ற அனுமானம் துளியுமில்லை அவனுக்கு. எதிர்பாரா நொடியொன்றில் போர்முனையில் நிறுத்தியதைப் போல செய்வதறியாது திகைத்துப் போனான்.
அவளின் அருகே முழந்தாழிட்டு அமர்ந்தவன், “மொழி…” என்றான் வஞ்சை வழிந்தோடும் குரலில் இதத்தை தேக்கி மென்மையாய். மென்னையாய் அவளின் கண்ணீரை விரலால் துடைத்தெடுத்தான். மாலையில் கூட அத்தனை தெளிவாய் நிமிர்வாய் இருந்தவளிடம் இப்பொழுது எதற்கு இத்தனை அழுகையென்று புரியவில்லை.
அவன் துடைக்க துடைக்கதான் அவளின் கண்ணீர் இன்னும் அதிகமாய் பெருகியது. “ப்ளீஸ் ஆரா… அழாத… என்னால உன்ன இப்படி பாக்கவே முடியல…” என்றவன் குரலில் ஏகத்திற்கும் தவிப்பிருந்தது. அள்ளி அணைத்து தேற்றிடதான் உள்ளமும் உடலும் தவிக்கிறது. ஆனாலும் ஒரு நொடி தயக்கம் தடுக்கிறது. எந்த விதத்திலும் அவளைக் காயப்படுத்தி விடவே கூடாது என்ற தீர்மானமும் இருந்தது. மின்னலென அன்றவனை அவள் உதறி தள்ளி நடுங்கிக் கொண்டிருந்தது தான் நினைவில் நிழலாடியது. அவளுக்கும் அவனுக்கும் பெரிய சுவரென்று எழுந்துவிட்டதாய் தோன்றியது.
“மொழி… மை ப்ரேவ் கேர்ள்… அவ இப்படி அழலாமா…” என்றான் பரிவாய் நில்லாமல் வழியும் கண்ணீரை துடைத்தபடியே. தவிப்புடன் அவனை விழிவிரித்துப் பார்த்தாள் அவள். அந்த கண்களில் ஏகத்துக்கும் ஒரு அலைப்புறுதல். இளைப்பாற இடம் தேடுகின்ற மாதிரியான தவிப்பு. அதற்கு மேல் தாழமாட்டாதவனாய் அப்படியே அவளின் முகத்தை அள்ளி தன் மார்போடு புதைத்துக் கொண்டான். அவனுக்குமே தொண்டை அடைத்துக் கொண்டு கண்ணீர் குளம் கட்டி நின்றது.
இன்னுமே அவனோடு ஒன்றியவள் அழுகை இப்பொழுது அதிகமாகியதே தவிர கொஞ்சம் கூட மட்டுப்படுவதாய் தெரியவில்லை. அவளின் முதுகை தட்டிக் கொடுத்தபடியே, “ப்ளீஸ் மொழி… அழாதேயேன்…” குரல் கெஞ்சியது. அவனின் கண்ணீரும் சரமாய் கன்னத்தில் இறங்கி மழையோடு கலந்திருந்தது.
எதையாவது செய்து அவளின் அழுகையை இந்த நொடியே நிறுத்திவிட மாட்டோமா என்று தவிப்பாய் இருந்தது அவனுக்கு. ஆனால் என்ன செய்வது என்று தான் விளங்கவில்லை. தூரல்கள் நின்று பெருமழை பிடித்துக் கொண்டது. இன்னுமே அவனிலிருந்து தலைநிமிர்த்தி பார்க்கவில்லை அவள்.
“மொழி… என்னைப் பாரு…” என்றவனின் குரல் அதட்டலாய் ஒலிக்க முயன்றாலும் தவிப்பும் கலக்கமும் தான் அதில் அதிகமிருந்தது. அப்பொழுதும் நிமிர்வேனா என அடமாய் அவன் மார்பில் அழுத்தமாய் முகத்தை புதைத்துக் கொண்டு ஒன்றியவளை வலுக்கட்டாயமாக தன்னை நிமிர்ந்துப் பார்க்க செய்திருந்தான் அவன்.
“சாரிம்மா…” என்றவன் வார்த்தைகள் மெல்ல முனகலாய் அவளின் இதழ்களுக்குள் அடங்கியிருந்தது. சட்டென்று அவளின் கண்ணீர் நின்று கண்களிரண்டும் சாசராய் விரிந்துக் கொண்டது.
தொடங்கிய பின் தடுமாறி அவளின் முகம் பார்த்து நின்றவனை தானே வழிநடத்தி மோகனத்தின் பாதைக்குள் கூட்டிப் போனாள் அவள். இப்பொழுது அவனின் விழிகள் இரண்டும் சாசராய் விரிந்துக் கொண்டது. மெல்ல மெல்ல விழிகள் நான்கும் இமை கதவிகளை அடைத்துக் கொள்ள இதழ்களின் வழி மனக்கதவுகள் திறந்துக் கொண்டது.
மிக வன்மையாய் தொடர்ந்தளின் முத்தத்தில் அவனுக்கான தவிப்பும் தேடலும் ஆயிரம் மடங்கு கொட்டிக் கிடந்தது. அவனை அவள் காதலிக்கிறாள் என உணர்ந்து தெளிந்துக் கொண்ட நொடி அது. காணாத நொடிகளில் எல்லாம் தவிப்பாய் அவனை தேடி ஏங்கியதற்கு பெயர் காதலென்று உணர்ந்துக் கொண்ட நொடி.
சுவைத்துக் கொண்டிருந்த மிட்டாயைப் பிடிங்கிக் கொண்ட சிறுபிள்ளையாய் உதடு பிதுக்கி அவனைப் பார்த்தான் அவன். அவளின் முகமே மலர்ந்து சிரித்தது.
“இப்படியே மழையில நனைஞ்சா பீவர் தான் வரும்… உள்ள போகலாம்…” என்றபடியே அவனிடமிருந்து விலகி எழுந்துக் கொண்டாள் அவள்.
கரங்கள் இரண்டையும் விரித்து பிடித்தபடி, “வந்தா வரட்டுமே… டாக்டரம்மா ஊசிப் போட்டு சரி பண்ணிட மாட்டீங்களா…” என்றான் சிறுப் புன்னகையோடு.
“உதை…” என்றபடியே விரிந்திருந்த அவனின் கைப்பற்றி இழுத்துக் கொண்டு உள்ளேப் போனாள் அவள். அவளின் இழுப்பு இசைந்தபடி பின்னோடு சிணுங்கியப்படி வந்தான் அவன்.
“அப்படினா ஆராவுக்கும் என்மேல காதல் இல்லையா..?” என்றவன் குரலிலேயே சந்தோஷம் வலிந்தது.
“இல்லை…” என்றாள் பட்டென்று அவள் சிரிப்பை அடக்கியபடி.
“இல்லையா..?” என்றான் அடமாய் அதே இடத்தில் நின்றுக் கொண்டு.
“என்ன பண்ணறீங்க..? உள்ள வாங்க…” என்றாள் அவள் அவனை இழுக்க முடியாமல் திரும்பி பார்த்து.
“இப்பவே இங்கேயே எனக்கு ப்ரோப்போஸ் பண்ணு… அப்ப தான் வருவேன்…” என்றான் கைகளை கட்டிக் கொண்டு அடமாய் தரையில் சம்மனமிட்டு அமர்ந்து.
“நீங்க ஏ.சி.பினு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க…”
“இதென்னடா இது வம்பா போச்சு… ஏ.சி.பி எல்லாம் லவ் பண்ணக் கூடாதுனு சட்டமா இருக்கு…”
“இப்போ வரப் போறீங்களா இல்லையா..?”
“ப்ரப்போஸ் பண்ணா வரேன்…”
“வர வேண்டாம்… இங்கேயே இருங்க… மழையில கரைஞ்சு போக நீங்க ஒன்னும் மண்ணு புள்ளையார் இல்ல…” என்றவள் விறுவிறுவென உள்ளே சென்றுவிட,
“ஆரா… நில்லு நானும் வரேன்… பச்… நில்லும்மா…” என்றபடியே எழுந்து ஓட்டமும் நடையுமாய் அவளின் பின்னால் சென்றான் அவன்.
அவன் இறங்கி வரும் முன்னமே அவளின் அறைக்குள் நுழைந்து கதவடைத்திருந்தாள் அவள். வேகமாய் அவளின் பின்னோடே வந்தவன் கதவருகே திகைத்து நின்றுவிட, அடுத்த நொடி கதவு திறந்து பூந்துவலை மட்டும் பறந்து வந்து அவன் மீது விழுந்தது. “ராங்கி…” என்றபடியே அதை சரியாக பிடித்துக் கொண்டவன், இதழ்களில் உல்லாச புன்னகை.
அடுத்த சில நிமிடங்களிலியே அவளும் வெளியே வந்திருந்தாள். வேறு உடைக்கு மாறி இருந்தவள் கூந்தலில் இன்னும் ஈரம் மிச்சமிருந்தது. அவனைக் கண்டுக் கொள்ளாமல் சமயலறைக்குள் நுழைந்தவள், பாலை பிரித்து சூட செய்ய துவங்கியிருந்தாள்.
அவள் கொடுத்த பூந்துவலையால் தலை துவட்டியபடியே வழிந்தோடும் சிறுப்புன்னகையோடு அவளை குறும்பாய் குறுகுறுவென பார்த்திருந்தான் அவன். திரும்பி அவளைப் பார்த்தவள் அவனின் பார்வையின் வீச்சு தாழாமல் சட்டென்று மீண்டும் தன் பார்வையை பாலின் மீது திருப்பி விட்டாள்.
“நீங்க எப்படி..?” எப்பொழுது, ஏன் வந்தாய் என்று கேட்க நினைத்தவளின் வார்த்தை முற்றுப் பெற முடியாமல் அந்தரத்திலேயே நின்றது.
“அழுதனுக்கு போட்டிருக்க செக்யூரிட்டி எல்லாம் ஓ.கேவானு பாக்கா ஹாப்பிட்டல் போனா… அங்க இருந்துட்டு அத்தை ஒரே அடம்… உன்னோடதான் இருப்பேனு… இந்நேரத்துல தனியா அனுப்ப முடியாதே… அதான் நானே விடலானு வந்தேன்…” என்றவன் அவளை நெருங்கி நின்று, “முக்கிய காரணம் உன்ன பாக்கலாமே… என்கிட்ட சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்துட்ட நீ…” என்றான் குற்றம் சாற்றும் குரலில்.
சட்டென்று மிக அருகில் கேட்ட குரலில் பதறி தடுமாறி விலக முயன்று பால் பாத்திரத்தின் மேலே விழப் போனவளை பிடித்து தன் கரங்களுக்குள் நிறுத்தி இருந்தான் அவன்.
அவளின் முகத்திற்கு சில மில்லிமீட்டர் இடைவெளியில் குனிந்து நின்றவன், “கட்டிக்கட்டும்மா ஆரா…” என்றான் ஆழ்ந்த குரலில் கிசுகிசுப்பாய். அதிர்ந்து அவனைப் பார்த்தவளின் வேகமாய் அவளின் கரங்களில் இருந்து விலகிக் கொள்ளப் பார்த்தாள். விலக முடியாத படிக்கு தன் கரங்களுக்குள் இறுக்கிக் கொண்டவன், “இந்த கட்டிக்கட்டுமா இல்ல… கல்யாணம் கட்டிக்கலாமானு கேக்கறேன்…” என்றான் குறும்பு புன்னகையோடு.
“பச்… தள்ளுங்க… பால் பொங்க போகுது…” என்றபடியே அவனை விலக்கி தள்ளிவிட்டுவ அடுப்பின் பக்கமாய் திரும்பிக் கொண்டவளின் முகத்தில் வெட்கப் புன்னகை துளிர்த்து நின்றது.
“என் கேள்விக்கு இது பதிலில்லையே தேவி…” என்றான் கைகளை கட்டிக் கொண்டு ஏற்ற இறக்கமாய் கேலியாய்.
திரும்பி அவனை முறைத்துப் பார்த்தாள் அவள். முறைத்துப் பார்ப்பதாய் பாவணைப் பண்ணிக் கொண்டாள். சின்னதாய் தலைசாய்த்து அவனைப் பார்த்தவள், “யோசிச்சு சொல்லறேன்…” என்றாள் இதழ்களுக்குள் புன்னகையை அடக்கியபடி.
“கொஞ்சம் சீக்கரம் யோசிச்சு சொல்லும்மா… நான் ரிட்டரையர் ஆகறதுக்குள்ள…” என்றான் அவன் எள்ளலாய்.
“ஏன் ரிட்டயர் ஆன பின்னாடி ஓ.கே சொன்னா என்ன வேண்டானு சொல்லிடுவீங்களா..?” என்றாள் அவனை முறைத்துப் பார்த்து கோபம் போல.
“என்னைக்குமே உன்னை வேண்டானு என்னால சொல்லவே முடியாது…” என்றான் ஆழ்ந்த குரலில் ஆத்மார்த்தமாய்.
“போதும் போதும் டைலாக் பேசுனது…” என்றபடியே திரும்பிக் கொண்டவள், இஞ்சியும் தேனும் கலந்த பாலை அவனுக்கு கொடுத்து தானும் எடுத்துக் கொண்டாள்.
அமைதியாய் அவளைப் பார்த்தபடியே வேகமாய் அதைப் பருகி முடித்திருந்தான் அவன். இருவரிடமும் மௌனம் மட்டுமே சுகபோக ஆட்சி செய்தது.
“அப்போ நான் கிளம்பறேன் ஆரா…” என்றான் அவன் அவளின் முகத்திலிருந்து பார்வையை விலக்காமல்.
ஜன்னல் வழி அவசரமாய் வெளியேப் பார்த்தவள், “இன்னும் மழை நிக்கலையே..?” என்றாள் தவிப்பாய். அவன் கிளம்புகிறேன் என்று சொன்ன பின்னாடிதான் இன்னுமே அவன் ஈர உடையுடன் இருப்பது உரைத்தது.
“நான் மேனேஜ் பண்ணிக்கறேன்ம்மா… கார்ல தானே வந்திருக்கேன்…” என்றான் அவன் சிறுப்புன்னகையோடு.
“இங்க ஜென்ஸ் ட்ரஸ் இல்ல…” என்றாள் தவிப்பாய் அவள் மன்னிப்புக் கேட்கின்ற பாவனையில்.
அவளின் கன்னம் தட்டி புன்னகைத்தவன், “ம்ம்ம்னு சொல்லு ஆரா… மொத்த ட்ரஸையும் பேக் பண்ணிட்டு நைட்டோட நைட்டா இங்கேயே குடி வந்திடறேன்…” என்றான் உல்லாச புன்னகையோடு கேலியாய் அவன். பதிலெதுவும் சொல்லவில்லை அவள். அந்த புன்னகையில் கரைந்துப் போகிறவள் போல அவனையேப் பார்த்திருந்தாள்.
அவளின் விழிகளில் ஆழ நோக்கியபடியே, “என்னால மட்டுமால்லே ஆரா உன்னாலையும் என்ன வேண்டானு சொல்லிடவே முடியாது… இதுவரைக்கும் சொன்னதும் இல்லை…” என்றான் ஆழ்ந்த குரலில்.
“ரொம்ப தவிப்பா இருக்கு ஆரா… உன்ன கைக்குள்ளேயே பாதுகாப்பா பொத்தி வச்சுக்கணும் தோணுது… இந்த சிரிப்ப வாடவே விடக்கூடாதுனு தோணுது… உன் கையப் புடிச்சுட்டு சாகற கடைசி நிமிஷம் வரைக்கும் காதலிக்கணும்னு தோணுது… என்னோட குடும்பம், குழந்தைங்கனு உன்னோட வாழணும் ரொம்ப ஆசையா இருக்கு ஆரா… எங்க இதெல்லாம் எனக்கு கிடைக்காதோனு ரொம்ப பயமாவும் இருக்கு…” என்றான் பரிதவிப்போடு வேந்தன். அந்த குரலும் தவிப்பும் என்னவோ செய்தது அவளை.
“உன் பக்கத்துலையே இருந்துட்டு தள்ளி நிக்க முடியலம்மா என்னால… எங்க என்னையும் மீறி உன்ன காயப் படுத்திடுவேனோனு வேற பயமா இருக்கு… ப்ளீஸ் க்வ் மீ எ சான்ஸ்… உன்ன காதலிக்க எனக்கொரு வாய்ப்பு கொடு ஆரா…” என்றவன் அழுத்தமாய் அவளின் நுதலில் அதரங்கள் பதித்து வேகமாய் விலகியும் சென்றிருந்தான். செல்லும் அவனையே இமைக்காது பார்த்திருந்தவளுக்கு இதழ்களில் புன்னகை அரும்பி உரைந்து நின்றது.
– பற்றி எரியும்…

