Loading

தழல் 35:

அடை மழை நின்றும் சின்னஞ்சிறு தூரல்கள் தொடர்ந்தது. அகல திறந்திருந்த ஜன்னலின் வழியே குளிர் காற்று ஊடுருவி அவனின் ஆடையில்லா மார்பினில் தவழ்ந்தாடியது. மந்தகாசமாய் ஒரு புன்னகை இவன் இதழ்களில். அந்த சிறு துண்டு காகிதத்தை முகத்துக்கு நேரே உயர்த்திப் பிடித்தான். இரண்டு முறை வாசித்தபின் திருப்தி ஏற்பட்டவனாய் இன்னும் கொஞ்சம் புன்னகையை விரித்தபடி அதை அந்த சிறிய அட்டைப் பெட்டிக்குள் வைத்து மூடினான். வெளி நடப்புகள் எதிலும் களையாதவன் போல் மிக லாவகமாய் கரங்கள் அதன் மீது அடர் சிவப்பு நிற பரிசுதாளைக் கொண்டு மூடி தங்க நிற ரிப்பனையும் கட்டி வேலையை முடித்தான். ஏற்கனவே எழுதி வைத்திருந்த பெயரட்டையை அதில் ஒட்டும் போது அப்படியொரு பரவசம் அவனுள்.

‘டூ மை ஸ்வீட் கிட்டி…’ என்ற வார்த்தைகளில் மெல்ல விரல்களை ஓட்டினான். கண்களை மூடி மோன நிலையில் மீண்டும் மீண்டும் அதில் விரல்களை படர விட்டவனுக்கு, அவளின் தேகத்தை தீண்டிய லயிப்பு. அந்த வார்த்தைகள் விரலோடு ஒட்டுக் கொள்ளாதா என்பதைப் போல இன்னும் அழுத்தமாய் அதில் விரல்களை உரசிச் சென்றான்.

“என் கைக்கு எப்போ வருவ கிட்டி…” என்றவன் இதழ்கள் அந்த எழுத்துகளில் பதிந்து மீண்டது.

“வருவ… கண்டிப்பா வருவ… நாளைக்கு இதே நேரம் என் கைக்குள்ள நீ வருவ… உன்ன நான் வர வைப்பேன்…” என்றவன் புன்னகையின் இதம் மாறி ஒரு குரூரம் வழிந்தது. அதை ஒரு ஓரத்தில் பத்திரபடுத்திவிட்டு ஜன்னல் வழி விரிந்த வானில் பார்வையை படரவிட்டான் அவன்.

தூரத்தில் நின்ற மரத்தில் மழைத் துளிகள் முத்துக்களாய் கோர்த்து நின்றது. அடிவானம் கொஞ்சம் கொஞ்சமாய் இருள் படரவும் இவனிதழ்களிலும் மெல்லிய புன்னகை கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்து படர துவங்கியது. மெல்ல கை நீட்டி இன்னும் விடாமல் தூவிக் கொண்டிருந்த மழையை ஏந்திக் கொண்டான். மீண்டும் கனமழை வரும் போலிருந்தது. தனது போனை எடுத்து தேடிப் பிடித்து பாடலை ஒலிக்கவிட்டான்.
இசைக்கேற்ப சின்ன சின்ன அசைவுகளுடன் மிக மெல்லிய குரலில் அவனுமே பாடத் தொடங்கியிருந்தான்.

அடை மழை வரும்…
அதில் நனைவோமே…
குளிர் காய்ச்சலோடு சிநேகம்…
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்… குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்…
அது தெரிந்தும் கூட
அன்பே மனம் அதையே
தான் எதிர்பார்க்கும்…

பாடலில் ஒன்றிப் போயிருந்தவன் குரல் பாடலையும் மீறி உரத்து ஒலித்தது. அந்த குரலுக்கும் அதில் வழியும் பாவணைக்கும் நிச்சயமாக கேட்பவரை சுண்டி இழுக்கும் காந்த சக்தி இருக்க வேண்டும். கேட்பவர் எவாராயின் அதில் லயித்து மயங்கி கரைந்து தான் போய்விடுவார்கள்.

பூந்துவலை ஒன்றை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டான். கொட்டும் நீரின் லயத்தோடு அவனின் குரலும் இணைந்திருந்தது. வசீகராவில் தொடங்கி டங்டன் லாரன்ஸின் ஆர்கேட் பாடலில் வந்து நின்றது.

“ப்ளிஸ் கேரி மீ, கேரி மீ, கேரி மீ ஹோம்…” (Please carry me, carry me, carry me home) வரிகள் அவனின் குரலில் ஒலிக்கும் போது சோகம் வழிந்தோடியது. ஆரவற்ற குழந்தையொன்று அன்னைக்காக உருகி வழியும் ஏக்கம் தெரிந்தது. அப்படியே அவனை கட்டிக் கொண்டு தேற்றிட தோன்றும்.

அதற்கு மேல் பாட விருப்பம் இல்லாதவனைப் போல் அப்படியே நிறுத்திக் கொண்டான். லாரன்ஸ் இன்னும் சோகத்தில் மூழ்கி உருகிக் கொண்டிருந்தார்.

அறையெங்கும் இருள் படர்ந்திருக்க அணைத்து விளக்குகளையும் ஒளிரவிட்டான். பளீரென்ற வெளிச்சம் அறையில் பரவி கண்ணை கூச செய்தது. கண்களை சுருக்கிக் கொண்டே இடையில் இருந்த பூந்துவலையை இறுக்கி கட்டியபடி ஒருபக்க சுவரை பாதி நிறைத்தபடி இருந்த கண்ணாடி முன் சென்று நின்றான்.

சற்று நேரத்திற்கு முன் இலைகளில் கோர்த்து நின்ற மழை துளிகள் போல் அவனின் அங்மெல்லாம் நீர் முத்து முத்தாய் கோர்த்து நின்றது. சற்றே முகத்தை மட்டும் முன் நகர்த்தி நின்றவனின் முடி கற்றையிலிருந்து சொட்டு சொட்டாய் நீர் வழிந்து தரையை நனைத்துக் கொண்டது. கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தின் மீது அடி முதல் முடி வரை கொஞ்சம் கொஞ்சமாய் ரசனையான பார்வையை ஓட்டினான் அவன். இந்த உருவத்தின் மீது தோற்றத்தின் மீது அதீத கர்வம் இருக்க வேண்டும் அவனுக்கு. அது அவனின் புன்னகையிலும் தெரித்தது.

சற்றே தள்ளி நின்று கண்ணாடியை ஊடுருவிப் பார்த்தான். எதிர் பக்க சுவற்றை நிறைத்திருந்த புகைப்படங்களின் நிழல் அந்த கண்ணாடியை ஆக்கிரமித்திருந்தது. சின்னதும் பெரிதுமாய் அங்கிருந்த அத்தனையுமே பதின்ம பெண்களின் புகைப்படம். பெரும் கனவையும் எதிர்பார்ப்பையும் தவிப்பையும் சுமந்தபடி இருந்தது அந்த கண்கள்.

அதன் நடுநாயகமாக மிகப் பெரிய அளவில் இருந்தது ஆரல்மொழியின் புகைபடம். அடர் நீலநிற அனார்கலி சுடிதாரில் கொன்றை மரத்தினடியில் அமர்ந்திருந்தாள் அவள். பெரிய நீல மலராய் விரிந்து படர்ந்திருந்தது. அவளின் ஆடை. சற்றே தலை நிமிர்த்தி மேலிருந்து விழும் ஒரு பூவிற்காக ஏக்கத்துடன் கையேந்தியிருந்தாள். அந்த மலர் அவள் கரங்களை அடையும் சில நொடிகளுக்கு முன் எடுக்கப் பட்டிருந்தது அந்த புகைப்படம்.

கண்ணாடியில் விழுந்த அவளின் பிம்பத்தின் மீது ரசனையாய் விரல்களை ஓடவிட்டான் அவன். அந்த விழிகளில் வழிந்த ஆசையும் ஆர்வமும் அவனை கட்டியிழுத்தது. இப்பொழுதெல்லாம் அவளின் விழிகள் இம்மாதிரியான மொழிகள் பேசுவதேயில்லை என்று தோன்றியது. நிரந்தரமான ஒரு சோகம் சந்தேக பாவம் அதில் தங்கிவிட்டதாய் தோன்றியது. மிக அலட்சியமாய் சுழிந்துக் கொண்டது அதன் இதழ்கள்.

வாட்ரோப்பில் இருந்த ஆடைகளின் மீது மி நிதானமாய் பார்வையை செலுத்தியவன் கருப்பு நிற ஜீன்ஸையும் கருப்பு நிற சட்டை ஒன்றையும் எடுத்துக் கொண்டான். அடுத்து அதை அணிந்து அவன் தயாராக எடுத்துக் கொண்ட பத்து நிமிடங்களில் பலநூறு முறை கண்ணாடியின் வழியே அவளின் பிம்பத்தை பார்த்துக் கொண்டான்.

முழுதாய் தயாராகி கண்ணாடியில் ஒரு முறை தனது பிம்பத்தை பார்த்துக் கொண்டவனுக்கு பரம திருப்தி. ஏற்கனவே தயாராய் வைத்திருந்த பரிசுப் பொருளையும் கையில் எடுத்துக் கொண்டான்.

வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேனாக்களில் பார்வையை ஓட்டியவன், தங்க நிற பேனாக் கத்தியை தேர்வு செய்துக் கொண்டான். அதனை திறந்து கூர்மையை சோதித்தான். மெல்லிய அழுத்தம் கொடுத்துமே சட்டென்று அவனின் விரலில் ரத்தம் துளிர்த்து நின்றது. சின்ன புன்னகையுடன் அதை சட்டை பையில் சொருகியபடியே கார் சாவியை எடுத்துக் கொண்டவன், அவளின் புகைப்படத்தின் அருகே வந்து நின்றான்.

அவளின் முக வடிவில் விரல்களை அலையவிட்டு, அதை அழுத்தமாய் இதழ்களில் ஒட்டிக் கொண்டான். “கெட் ரெடி கிட்டி… ஐ அம் கம்மிங் ஃபார் யூ…” என்றது முணுமுணுப்பாய் அவன் இதழ்கள்.

செல்லும் முன் இறுதியாய் ஒருமுறை கண்ணாடியில் தனது பிம்பத்தை சரிபார்த்தான். முழு கருப்பு ஆடையில் இருந்தவனின் ஆடை மூடா பாகங்கள் பளீரென தெரிந்தது. அந்த வெளிச்சம் படர்ந்த அறையின் மையத்தில் அவன் நின்றிருந்தது, வெள்ளை தாளில் மத்தியில் விழுந்தவிட்ட கருப்பு மைப் போல அபஸ்சுரமாய் பட்டது.

சாவியை விரல்களில் சுழற்றிபடியே மெல்லமாய் ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்ணே வீட்டைப் பூட்டி கிளம்பிவிட்டான் அவன். ஆங்கேங்கே இருந்த சிறு பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது. கண்ணுக்கெட்டிய தூரம் வீடுகளோ வேறு கட்டிடமோ இல்லை.

                 ❀❀❀❀❀

அப்படியே வானை வெறித்தப்படி, வெற்று தரையில் சரிந்துப் படுத்துக் கொண்டாள் ஆரா. மாலையில் பெய்த மழையில் தரை குளிர்ந்துக் கிடந்தது. தரை ஓடுகளின் ஊடே முதுகை துளைக்கும் குளிரும் கூட அவளின் மனதிற்கு ஒருவித ஆசுவாசத்தை அழித்தது.  மென்மையாய் படந்திருந்த சிறு சிறு நீர்த் துகள்கள் அவளின் பருத்தி ஆடையின் ஊடே புகுந்து முதுகைத் தொட்டு, கொஞ்சமாய் அவள் உள்ளத்தையும் தொட்டுப் பார்க்க முயன்றது.

மல்லார்ந்து படுத்திருந்தவளின் பார்வை வானையே வெறித்தது. நிலாவும் நட்சத்திரங்களும் இல்லா கரீய வானம் பூதமாய் அவளை மிரட்டியது. எப்பொழுது வேண்டுமானலும் திடுமென அடை மழைப் பிடித்துக் கொள்ளும் என்று தோன்றியது.

அவளின் எண்ணங்கள் எங்கேங்கோ அலைமோதிக் கொண்டிருந்தது. இவள் எத்தனையோ முறை அழைத்தும் யுவா இறங்கி வரவில்லை. உண்டானா? உறங்கினானா ஒன்றும் தெரியவில்லை. அவனையும் பார்க்க முடியாமல், கனியையும் எதிர்கொள்ளும் திரணியின்றி வீட்டுக்கு வந்திருந்தாள் அவள். அவளுடன் வந்த பர்வதம் சமைத்து இவளை சாப்பிட வைத்துவிட்டு, கனிக்கு உணவை எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனை சென்றிருக்கிறார். இன்று இரவு கனிக்கு துணையாய் அங்கேயே அவரை இருந்துக் கொள்ள சொல்லி அனுப்பி இருந்தாள் அவள். அவர் மருத்துவமனை கிளம்பிச் சென்ற போது இங்கே வந்தவள் நல்லிரவை தாண்டியும் இன்னும் வீட்டிற்குள் செல்லும் எண்ணம் வரவில்லை. கலவையான ஏதோ ஒரு உணர்வு நெஞ்சை இறுக்கி பிடித்திருப்பது போலிருந்தது.

‘அவளுக்கு மட்டும் நிம்மதி என்பதே இல்லையா?’ என பெரும் ஓலமிட்டு கதறியது இதயம். இல்லை தான் போல என்று அவளுக்கே தோன்றிவிட்டது. சுயபச்சாதாபத்தில் அமிழ்ந்துப் போனது அவளின் மனம். கவலைகளற்ற நிம்மதியான சுகந்திர காற்றை சுவாசிக்க மாட்டோமா என்றிருந்தது. ஐந்து வயது பிள்ளையாய் கனியுடன் போட்டிப் போட்டுக் கொண்டு அப்பாவின் தோளில் தெற்றிக் கொள்ள மாட்டோமா என்றிருந்தது. அப்பா… அப்பாவின் சூடான கரங்களின் அரவணைப்பு வேண்டும் போலிருந்தது இந்த நொடி.

இதோ இந்த வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்களில் ஒன்றாய் தான் அப்பா மிளிர்ந்துக் கொண்டிருப்பார் என்று தோன்றியது. அவளின் கண்ணீரை பார்த்துக் கொண்டிருப்பார் என்று தோன்றியது. அதனால் தான் இன்று கண்ணுக்கு கிட்டாமல் மேக கூட்டத்தில் தலைமறைவாகி விட்டாரோ என்றுக் கூட தோன்றியது.

அவரின் சட்டையை பிடித்து உலுக்கி, ‘ஒளிந்துக் கொள்வதால் பயந்து ஒடிப் போவதால் எதுவும் மாறிவிடாது…’ என்று கத்த வேண்டும் போலிருந்தது. கன்னம் கன்னமாய் அறைந்து, ‘எப்படி என்னை விட்டுப் போகலாம்..?’ என்று கேட்க தோன்றியது. உள்ளுக்குள் இறுக்கி வைத்திருக்கும் அத்தனை பலகீனங்களையும் அவரின் கால்களை கட்டிக் கொண்டு உடைத்து கதறி அழ வேண்டும் போல் இருந்தது.

அப்பா என்றாலே அந்தரத்தில் ஆடிய இரண்டு நீண்ட கால்கள் தான் நினைவிற்கு வருகிறது அவளுக்கு. அதற்கு மேல் நிமிர்ந்து பார்க்க அன்று அவளுக்கு திரணியில்லை. பர்வதமும் விடவில்லை.

அந்த நினைவுகளுடனே சேர்ந்து, ‘கெட் ரெடி ஃபார் டேவிள் ரிவெஞ்…’ என்றவனின் குரூர குரலும் நாராசமாய் அவளின் காதுகளில் ஒலிக்கிறது. நிச்சயமாய் இதை அவன் இதோடு நிறுத்திக் கொள்ள மாட்டான் என்று தோன்றியது. அமுதன், அவளைப் பயமுறுத்த வேண்டுமென்று அவன் கொண்ட மீச்சிறு இலக்கு தான். இதற்கே அவள் என்னமாய் உடைந்துப் போனாள். அப்படி இருக்க அடுத்தது யாரை என்ன செய்வானோ என்று திக்குதிக்கென்று இருந்தது.  இன்னொரு இழப்பை தன்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது என்று நினைத்த நொடி, பெரும் கேவலாய் அழுகை வெடித்துக் கொண்டு கிளம்பியது.

                        பற்றி எரியும்…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்