Loading

தழல் 34:

ஆரா இன்னுமே தீவிரத்தோடு தன் நினைவலைகளில் இருந்து தப்பிப்போன காட்சிகளை எல்லாம் முயன்று சேகரித்துக் கொண்டாள். பதினைந்து வருடத்திற்கு முன்பு கேட்ட குரலும் நேற்று கேட்ட குரலும் ஒன்றில்லை. இரண்டுக்கும் பலநூறு வித்யாசம் இருந்தது. ஆனால் பேசிய விதம், வார்த்தைகளில் இருந்த ஏற்ற இறக்கம், ‘ஹே… மை ஸ்வீட் கிட்டி…’ என ஆர்பாட்டமும் ஆரவாரமுமாய் அவன் சொன்ன விதம் எல்லாம் இரண்டையும் துல்லியமாய் பொருத்தியது. அவன் பரிசுப் பொருட்களை குறிப்பிட்டு சொல்லவும் அவனே தான் என்று உறுதிபட்டு போய்விட்டது.

அதேப் போலதான், இந்த பரிசு பொருட்களுடன் வந்திருக்கும் ஒவ்வொரு வாழ்த்து அட்டைகளில் உள்ள வார்த்தைகளும். ஒரு எழுத்துக்கூட வித்தியாசமில்லை; மாற்றமில்லை. உடன் இருந்துப் பார்த்தவனுக்கோ, வெறுமனை இதை தெரிந்துக் கொண்ட யாரோ மூன்றாம் மனிதராலோ இத்தனை துல்லியமாய் இதை செய்திருக்க முடியாது. இவ்வளவு ஏன் சேர்ந்தாற்போல் ஒரு நான்கு வாக்கியங்களை ஒருவரை நான்கு முறை எழுதச் சொன்னால், நான்கு முறையிலும் சின்ன சின்ன வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் இதில் அப்படியான வித்தியாசம் கூட இல்லை. நெடுநாள் பழகிவிட்ட ஒன்றுப்போல, அடிமன ஆழத்தில் பதிந்துப் போன எண்களின் வரிசையைப் போல சிறு மாற்றம் கூட இல்லை அதில். அப்படியானால் உண்பது, உடுத்துவதுப் போல அன்றாடம் பழகிக் கொண்ட ஒரு செயலா இது. அவளின் சிந்தனைப் போக்கில் திக்கென்று மனம் திடுக்கிட்டுப் போனது.

அவளின் சிந்தனையை களைக்கிற மாதிரி, “ஆரா…” என்றபடியே வேகமாய் கதவை திறந்துக் கொண்டு மூச்சு வாங்க நின்றிருந்தாள் நித்யா.

அவளைப் பார்த்த மாத்திரத்தில் மத்த எண்ணங்கள் எல்லாம் பின்னுக்குப் போய் முகம் தன்னால் மலர்ந்து புன்னகை விரிந்தது ஆராவுக்கு.

“யூ ராஸ்கல்… இப்படி ஒரு பிரச்சனைனு ஒரு வார்த்தை எனக்கு சொல்லணும்னு தோணலையில்ல உனக்கு… காலையில வந்தா உன்ன ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணிருக்குனு சொல்லறாங்க… எப்படி இருக்கும் எனக்கு…” என்றவள் கண்களில் கண்ணீர் குளம் கட்டி ததும்பி நின்றது.

வாஞ்சையாய் அவளைப் பார்த்தவள் இன்னும் சில மில்லிமீட்டர் புன்னகையை விரியவிட்டாள். உண்மையில் அவளுக்கு தான் ஆராவின் மீது எத்தனை பிரியம். எதிர்பார்ப்பில்லாத சுயநலமில்லாத தூய அன்பு. +2 படிக்கவென பள்ளியில் சேர்ந்த போது தான் நித்யா அவளுக்கு அறிமுகம். ஒதுங்கி ஒதுங்கிப் போனவளை இழுத்து பிடித்து, வலிய வலிய வந்து அன்பு பாராட்டி, ஏன் எதற்கு என்று தோண்டி துருவாமல் இவள் துவள்கிற நேரங்களில் எல்லாம் தோள் கொடுத்து, உறக்கம் தொலைத்த இரவுகள் தானும் விழித்திருந்து, பயந்து அழும் நாட்களிலெல்லாம் அமைதியாய் அரவணைத்துக் கொண்டு இதோ இன்று வரை அவளுக்கு ஒன்றென்றதும் துடித்துக் கொண்டு, ஒவ்வொரு நொடியும் உடனிருந்து ஊக்கிக்கொண்டு உண்மையில் இவளுக்கு கிடைத்த வரம் அவள். ஆரா தேறி மீண்டுக் கொண்டதில் அவளுக்கு தான் பெரும் பங்கிருக்கும் என்று தோன்றியது. உண்மையில் இப்படி ஒரு நட்பு கிடைத்தால், யாராய் இருந்தாலும் எப்பேர்ப்பட்ட துன்பத்திலிருந்தும் தன்னை தேற்றிக் கொள்ளலாம் என்று தோன்றியது.

“கேட்ட எதுக்கும் பதில் சொல்லிடாத… நான் எப்ப நீ கண்ணு முழிப்பனு இங்கையும் அங்கையும் நடையா நடந்துட்டு இருந்தா… நீ தெம்பா இங்க வந்து உக்காந்து இருக்க…” என படபடவென தொடர்ந்து பொறிந்தவளை எழுந்துச் சென்று இறுக கட்டிக் கொண்டாள்.

“சாப்பிட்டீயா நீ…” என்றாள் சன்ன சிரிப்புடன்.

“நான் என்ன கேட்டா… நீ என்ன கேக்கற…” என்றாள் சலிப்பாய் நித்யா.

“சாப்பிட்டீயானு கேக்கறேன்…” என்றாள் மீண்டும் அழுத்தமாய் சிறுப் புன்னகையுடன் ஆரா.

“எப்படி சாப்பிடறதாம்… நீயும் இல்ல… யுவாவும் இல்லை… என்னால மட்டும் எப்படி சாப்பிட முடியுமான்…” என்றாள் கமறிவிட்ட குரலில்.

அவள் சொல்லும் வரைக்குமே யுவாவின் நினைவே எழவில்லை அவளுக்கு. எப்படி அவனை மறந்துப் போனோம் என்பதே  பெரும் தவறு செய்து விட்டதைப் போல் குற்றவுணர்வாய் இருந்தது.

“யுவா… வெளிய வந்துட்டானா..? எதுவும் சாப்பிட்டானா..?” என்றாள் ஆரா.

“எங்க… துரைக்கு இன்னும் கோபம் குறையில… மதியம் சாப்பாடு குடுத்தேன்… சாப்பிட்டானா என்னனு தெரியல…” என்றாள் நித்யா கவலையாய்.

“சரி நம்ம முதல போய் யுவாவைப் பாப்போம்…” என்றபடியே கிளம்ப எத்தனிக்கையில் தான் ஏற்கனவே இருவர் அங்கிருந்தது அவள் சிந்தைக்கு எட்டியது.

திரும்பி அவர்களைப் பார்க்க, இருவரும் ஒன்றுப் போல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, தொடையில் ஒரு கையின்றி அதில் கன்னத்தை தாங்கியபடி அவளை சிறு முறைப்பும் சுவாரஸ்யமுமாய் பார்த்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்டவள் புன்னகை இன்னும் விரிந்தது.

“வள்ளிம்மா…” என்றாள் சிறு சிணுங்களாய்.

“என்னம்மா ஆராம்மா…” என்றார் அவர் அவளைப் போலவே சிறு கேலியுடன்.

“நீங்களும் வாங்க… யுவாவ பார்த்திட்டு வரலாம்…” என்றாள் அவள்.

“இல்ல ஆரா… இப்ப அவனைப் பாக்க முடியும்னு தோணலை… ஆறு மணிக்கு டெல்லிக்கு பிளைட் எனக்கு… மூணு நாள் கான்ஃபிரன்ஸ் அங்க… நீ இப்படினு சொல்லவும் அவசர அவசரமா கிளம்பி வந்தேன்…” என்றபடியே எழுந்துக் கொண்டவர், அவளை நெருங்கி இறுக்கி அணைத்தபடியே, “ஆரா எப்பவும் தைரியமா இருக்கணும்… இது இதேட முடிஞ்சுடும்னு தோணல… என்ன நடந்தாலும் ஆரா போல்டா பேஸ் பண்ணனும்… எப்பவும் நான் ஆராக்கூட தான் இருக்கேனு நம்பணும்…” என்றார் மெல்லிய குரலில். சிறு தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டவளின் உள்ளம் நெகிழ்ந்திருந்தது.

அவர்கள் மூவரும் வெறித்துப் பார்த்தபடி கன்னத்தில் கை ஊன்றியபடி அப்படியை அமர்ந்திருந்தான் வேந்தன். நானும் இங்கே தான் இருக்கிறேன் என்று கத்தி சொல்ல வேண்டும் போல இருந்தது.

வேகமாய் எழுந்து வள்ளியம்மையும் ஆராவையும் விலக்கிக் கொண்டு இடையில் புகுந்து அந்த பக்கம் போய் நின்றவன், “எதுனாலும் கால் பண்ணு ஆரும்மா… எப்பவும் நான் உன் கூடவேதான் இருப்பேன்… இப்ப கடமை என்னை அழைக்கிறது வரட்டா…” என்றபடியே ஆளுக்கு முதலாய் அங்கிருந்து கிளம்ப பார்க்க,

“இரண்டு மாச சிக் லீவ் முடிஞ்சு ஒருவாரம் ஆகுது… இன்னும் டீயூட்டில சேராம ஆட்டமா காட்டிட்டு இருக்க… டேய் நில்லுடா… கேட்டுட்டே இருக்கேன்… போறதைப் பாரேன்…” என்றார் வள்ளியம்மை அவனை சத்தமாய் அழைத்தபடி அங்கலாய்பாய் ஆராவிடம்.

அதைக் கேட்டுக் கொண்டு இன்னும் அவன் ஏன் அங்கே நிற்கப் போகிறான். அவரின் கைப்பேசியிலிருந்து அவனின் மேலதிகரிக்கு விடுப்பை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கும் படி மின்னஞ்சல் அல்லவா அனுப்பி வைத்திருக்கிறான். அத்தோடு சேர்த்து அவன் செய்து வைத்திருக்கும் எல்லாம் தெரியும் போது என்னாவாரோ வள்ளியம்மை.

                  ❀❀❀❀❀

மனைவிக்கும் மகனுக்கும் இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகளை மட்டும் சிறிய பையொன்றில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் அறிவு. அங்கேயே நின்றபடி திலகம் அழுது புலம்புவதும் தொடர்ந்து ஆங்காரமாய் அவனை அதட்டுவதும்   கனியையும் ஆராவையும் ஒருபாடு திட்டுவதுமாய் மாற்றி மாற்றி செய்துக் கொண்டிருந்தார். எதுவுமே காதில் விழாதவன் போல் இயந்திர கதியில் தன் வேலையை செய்துக் கொண்டிருந்தான் அறிவு.

மீண்டும் ஒருமுறை பொருட்களை எல்லாம் சரிபார்த்துக் கொண்டு வெளிய கிளம்பியவனின் முன்நின்று வழியை மறைத்தபடி, “இவ்வளவு சொல்லறேன்… கேக்கறேன்… ஒரு வார்த்தை பேசணும்னு தோணுதாடா உனக்கு… அப்படியா பெத்தவ வேண்டாதவளா போய்டேன்…” என்றார் கண்ணீரை வழியவிட்டபடி மூக்கை  உறிஞ்சுக் கொண்டு.

உணர்வுகள் துடைத்த ஒரு பார்வை அவனிடம். ‘இப்படி தானே! இப்படி தானே! ஒவ்வொரு முறையும் கெஞ்சி கொஞ்சி அதட்டி அழுது ஆர்பாட்டம் செய்து என அவனை தன் பிடிக்குள்ளேயே வைத்திருந்திருக்கிறார்.’ என்றிருந்தது அவனுக்கு. அவரை மீறிக் கொண்டு அவரின் விருப்பமின்றி அவன் செய்த ஒரே காரீயம் கனியை கைப்பிடித்தது தான். நாளாக நாளாக கனியிடம் கூட பிரியம் ஊறி அன்பாக நடந்துக் கொண்டதாக தானே நினைத்தான். ஆனால் அப்படியில்லையென்று செறுப்பால் அடித்ததைப் போல எப்படி உணர்த்துவிட்டார் அவனுக்கு. அவருக்காக எத்தனையோ விருப்பங்களை விட்டுகொடுத்த அவனுக்காக, அவனின் விருப்பத்திற்காக ஒரு பெண்ணை அவளின் குடும்பத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லையாமா இவரால்?

சில நிமிடங்கள் அப்படியே நின்றவன், பேசவே விருப்பம் இல்லாதவனாய் அவரை தாண்டிக் கொண்டு வெளியேற முயன்றான்.

“நில்லுடா… அம்மா இப்படி கடந்து துடிக்கறாளேனு கொஞ்சமும் ஈவு இறக்கம் இல்லை உனக்கு… ஒரே ஒரு புள்ளைனு உன்ன பாத்து பாத்து பொத்தி பொத்தி வளத்ததுக்கு நீ காட்டற நன்றிக்கடன் இதுதானா..?” என்றார் ஆங்காரமாய் அவர்.

நன்றிக்கடன், எப்பொழுதும் அவனைக் கட்டிப்போட கடைசியாய் அவர் பிரயோகிக்கும் வார்த்தை. உண்மைதான். அவனை அருமை பெருமையாய் சீராட்டி பாராட்டி கைகளுக்குள் பொத்தி பொத்தி தான் வளர்த்தார் அவர். அதற்கு நன்றிக்கடனாய் காலம் முழுவதும் அவனுக்கு மகனாக மட்டுமே இருந்துவிட முடியாதே! அதுவும் ஒரு பெண்ணுக்கு நம்பிக்கை கொடுத்து  கைபிடித்து கூட்டி வந்த பின்னாடி.

“நாலு வயசுல உனக்கு அம்மை கண்டுச்சு… பொழைக்க மாட்டனு ஊரே சொல்லிச்சு… நாப்பத்தெட்டு நாள் அன்னந்தண்ணீ ஆகாரமில்லாம விரதமிருந்து…” கண்ணீருடன் சொல்லிக் கொண்டே போனவரை, “ம்மா…” என்றவனின் அதட்டல் சத்தம் வாயடைக்க வைத்தது. முதன் முறை அவரின் முன்பு குரல் உயர்த்துகிறான் அவன். காலையில் அத்தனை நடந்த போதும் கூட அவரை கண்டித்த அவனின் குரல் உயரவேயில்லை.

“இன்னும் என்ன வேணும் உங்களுக்கு… இன்னும் நான் என்ன செஞ்சா உங்க நன்றிக் கடன் அடையும்… பொண்டாட்டி புள்ளையெல்லாம் வேணாம்னு விட்டுட்டு வந்து தெருவுக்கு நெரு பைத்தியகாரனாட்டாம் அலைஞ்சா உங்க நன்றி கடன் தீர்ந்திடுமா..?” என்றான் பெருங்கோபத்தோடு ஆங்காரமாய்.

“பாருங்க… இதுநாள் வரைக்கும் ஒரு வார்த்தை கூட நம்மள எதித்து பேசாத புள்ளை ஒரே நாள்ல எப்படி மாறிப் போய்டான் பாருங்க… அக்காளும் தங்கச்சியும் அப்படி எத்த காட்டி மயக்குனாளுங்களோ என் புள்ளைய…” என்றார் கணவரிடம் கண்ணீரோடு திலகம்.

“ஏன்ம்மா… ஏன்ம்மா உன் புத்தி இவ்வளவு அசிங்கமா போச்சு… எப்படிம்மா இப்படியெல்லாம் பேசற நீ..?” என்றான் ஆற்றமாட்டாமல் அறிவு.

“உள்ளத சொன்னா அசிங்கமா இருக்கா உனக்கு… அவள சொன்னா உனக்கேன் எரியுதுங்கறேன்… அப்படி அவ மேல உனக்கென்ன பாசம் பொத்துகிட்டு வழியுதுங்கறேன்…” என்றார் அப்பொழுதும் விடாமல்.

“அநியாயமா பேசிட்டு இருக்கம்மா நீ… கொஞ்சம் கூடவா மனசாட்சி இல்லாம போய்ட்டு…”

“என்னத்தடா இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிட்டேன் நான்… அவளுங்க சொந்த ஊர்ல போய் விசாரிச்சு பாரு… அவளுங்க மனம் சந்தி சிரிக்கறத… விசாரிச்சு வந்து அன்னைக்கே சொன்னேன் இவளுங்க சங்கத்தமே வேண்டானு… கேட்டீயா… புடிச்ச புடியில நின்னு என்னமோ இவ ஒருத்தி தான் உலக அழகிங்கற மாதிரி கட்டிக்கிட்ட… இன்னைக்கு இவளுங்களோட சேர்ந்து நம்ம மானமும் சந்தி சிரிக்குது…” என்றவரை அருவெறுத்துப் போய் பார்த்தான் அவன்.

தன்னிடமே இப்படி பேசுபவர் ஆராவிடம் என்ன சொல்லியிருப்பார் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. விசயம் தெரிந்த போது அந்த குடும்பத்திற்கு தலைமகனாய் துணையாய் நிற்க வேண்டுமென்று எத்தனை உறுதியாய் நினைத்துக் கொண்டான். ஆனால், அவன் குடும்பமல்லவா அவர்களுக்கு பெரும் பாரமாய் இத்தனை நாட்களும் இருந்திருக்கிறார்கள்.

“புள்ளைங்களால தான் நிறைய பெத்தவங்களுக்கு அவமானம்… தலைகுனிவு… ஆனா இன்னைக்கு உங்களால நான் அவமானப்பட்டு தலைகுனிஞ்சு நிக்கறேன் ம்மா…” என்றான் குரலுடைய அறிவு.

“அப்படி என்னடா அவமானம் ஏற்பட்டு போச்சு என்னால உனக்கு…” என்றவர் மேலும் பேசிக்கொண்டே போக, அவரிடம் பேசுவதில் பயனில்லை என்பதை உணர்ந்தவனாய் கிளம்பிவிட்டான் அவன்.

“டேய்… போறவன் ஒரேயடியா அவளுங்க கூட போறீயா..? இல்லை திரும்பி வருவீயானு சொல்லிட்டு போ…” என்றார் அவனை இழுத்து பிடித்து நிறுத்தி விடாமல் திலகம்.

“நிச்சயமா திரும்பி வருவேன்… எனக்கான நன்றிக்கடன் இருக்கே… அத செய்யறதுக்காக நான் மட்டும் வருவேன்…” என்றான் உறுதியான குரலில்.

“இப்படி தாயையும் புள்ளையும் பிரிச்சுட்டாளுவளே… பாவிங்க… நல்லா இருப்பாளுங்களா..?” அவர் பெருங்குரலெடுத்து அழ தொடங்க, “நீங்களும் தாம்மா ஒரு தாயையும் புள்ளையும் இத்தனை வருஷமா பிரிச்சு வச்சுருந்துருக்கீங்க… முதல அந்த பாவத்த எங்க போய் கழுவறதுனு பாருங்க… அப்பறமா மத்தவங்களுக்கு சாபம் கொடுக்கலாம்…” என்றவன் இன்னும் அங்கே நிற்க பிடிக்காதவனாய் விறுவிறுவென வெளியேறிவிட்டான்.

“பாருங்க… என்ன சொல்லிட்டு போறான் பாருங்க…” என இன்னும் சத்தமிட்டு அழுதவரை ஆதரவாய் அணைத்துக் கொண்டார் அறிவின் அப்பா. “எல்லாம் நீயா தேடிக்கிட்டது திலகம்…” என்றவர் குரலிலுமே அழுகை தான். கடைசி வரை மகனை எத்தனையாய் காயப்படுத்தி விட்டோம் என்பதை புரிந்தே கொள்ளாதவரிடம் பெரும் ஆற்றாமைகூட உண்டாகியிருந்தது. அதே நேரம் மகனின் மீது அவர் கொண்ட நேசத்தின் அளவை அறிந்தவரால் கடிந்துக் கொள்ள முடியவில்லை. மனங்கள் கண்ணாடி பாத்திரங்கள் என்பதை உணராமல் இப்படி இறுக்கி பிடித்துக்கொள்ள நினைக்கும் சிலரால் தான் குடும்பங்கள் சில்லு சில்லாய் உடைந்துப் போகிறது.

                         பற்றி எரியும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்